Advertisement

     நாட்கள் வெகு வேகமாய் நகர்ந்தது. மைத்ரேயியின் தம்பி ஜீவாவிற்கும் அவளது மாமன் மகளான மங்கைக்கும் தான் நினைத்தது போல் ஒரே மாதத்தில் நிச்சயம் அல்ல, திருமணமே நடத்தி முடித்திருந்தார் சாந்தி. ஆனால் திருமணமான சில நாட்களிலேயே தெரிந்து விட்டது! சாந்தி நினைத்தது போல் மருமகள் தங்கமாய் இல்லை என்று. மாமன் மகள்தானே படுக்கையில் இருக்கும் மகள் மைத்ரேயிக்கும் நல்ல நட்புதானே அவளையும் பார்த்துக் கொள்வாள், குடும்பத்தையும் கட்டி ஆள்வாள் என்று அவர் நினைத்திருக்க, அவருக்கும் மருமகளுக்கு ஏழாம் பொருத்தம் ஆகிப் போனது. இவரது வாய்க்கும் மருமகளுக்கும் திருமணத்திற்குப் பின் கொஞ்சமும் ஒத்துவரவில்லை!
     அன்று, சாந்தியிடம் சண்டைபோட்டுக் கொண்டு கோபித்துக் கொண்டு இருந்த மங்கை வேண்டுமென்றே மைத்ரேயி முன்பே சாந்தியைப் பற்றித் தன் தாயிடம் குறையாகக் கொட்டித் தீர்க்க, அதைப் பொறுக்க முடியாத மைத்ரேயி,
     “டி! மங்கை நீ பேசுறது கொஞ்சம் கூட சரியில்லை! நீயும்தானே அம்மாவை எதிர்த்து எதிர்த்துப் பேசுற?! என்னமோ அம்மாவே தப்பா பேசின மாதிரி அத்தைகிட்ட சொல்லுற?!” என்றாள் ஆதங்கம் தாளாமல்.
     “என்ன உங்க அம்மாவைச் சொன்னதும் உனக்கு ரோஷம் பொத்துக்குச்சோ?!” என்று மங்கை அவளிடமும் எடுத்தெறிந்து பேச,
     “ஆமாம்! ஆயிரம் இருந்தாலும் அவங்க என் அம்மா! என் முன்னாடியே அவங்களைத் தப்பா பேசினா கோவம் வராதா!”
     “ஆமாம்! உனக்கு எல்லாம் இன்னும் உங்க அம்மா அக்கறையா பார்த்துகிட்டா கையிலேயே புடிக்க முடியாது!” என்று மங்கை அவளை மட்டம்தட்ட,
     “அக்கறையா பார்த்துக்கறாங்களோ இல்லையோ, அவங்கதானே பார்த்துக்கறாங்க! நீயா செய்யுற?!” என்று மைத்துவும் கோபத்தில் பேச,
     “ஒ! இதுவேறயா?! நான் ஏன் உன்னைப் பார்த்துக்கணும்?! நீ என்ன என் கூடப் பிறந்தவளா? நீ என் புருஷனுக்கு அக்கா அவ்ளோதான்! அந்த அளவுல நீ இருந்துக்கோ சொல்லிட்டேன்” என்று சிறுவயது முதல் பழகிய மைத்ரேயியை ஒரேநாளில் நட்பு, சொந்தம் என்று எதையும் பார்க்காமல் மங்கை எடுத்தெறிந்து பேசிவிட்டுத் தங்கள் அறைக்குச் சென்று கதவைச் சாற்றிக் கொள்ள, மைத்துவிற்கு முகத்தில் அடித்தார் போல் ஆனது. திருமணமாகி இரண்டு மாதம் கூட ஆகவில்லை! அதற்குள் இத்தனை வருடமாய் பழகிய அத்தையும், அத்தை மகள் உறவும் கசந்துப் போய்விட்டன மங்கைக்கு. ஜீவாவின் திருமணத்திற்குப் பின் மங்கை தனக்குத் துணையாய் வீட்டில் இருப்பாள் என்று எண்ணிய மைத்ரேயிக்கு அப்போதும் தனிமை மட்டுமே துணையாகிப் போனது.
     மனதில் இனிமை இருந்தால் தனிமையும் கூட சுகமாகும்! ஆனால் அவளுக்கோ பல வருடங்களாய் வேதனையைத் தவிர வேறேதும் துணையாய் இருந்ததில்லை! இனியாவது அவள் மனதின் தனிமையை இனிமையாக்கும் மாயவன் அவளுக்காய் அவளை ஏற்பானா?!
                                                            *****
     அங்கு மித்ரனுக்கும், ப்ரியாவிற்கும் அவர்கள் வீட்டினர் ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருந்த தங்கள் பிள்ளைகளின் திருமண வைபவ நாள் நெருங்கி இருந்தது.
     ஒருவழியாய் மகள் திருமணத்திற்காய் அவளது திருமண பந்தக்கால் வைபவத்திற்கு முன்தினம் காலை வந்து சேர்ந்தார் மனோகர். அப்போதுகூட அவரது இரண்டாம் மனைவியும் பிள்ளையும் வரவில்லை!
     “வாடா வா! எவ்ளோ வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து?!” என்று ராஜசேகர் தம்பியை ஆரத் தழுவிக் கொள்ள,
     “அண்ணா எப்படி இருக்கீங்க?!” என்று அவரும் அண்ணனைக் அணைத்துக் கொண்டார் பாசத்தோடு.
     அப்பா எப்போது வருவார்?! ஓடிப் போய் ஆரத் தழுவி அன்பைப் பொழிய வேண்டும் என்று பலவருடமாய் ஆவலாகக் காத்திருந்தவள், இப்போது சற்று தொலைவாகவே நின்று,
     “வாங்கப்பா!” என்றாள் புன்னகையுடன் மட்டுமே.
     “ப்ரியாம்மா! எப்படிடா இருக்க? நேர்ல பார்க்கும் போதுதான்மா தெரியுது! நல்லா வளர்ந்துட்ட டா! அப்படியே உன் அம்மா மாதிரி இருக்க!” என்று அவர் மகளின் அருகே சென்று அவள் தலையை வருடிக் கொடுக்க,
     “ம்!” என்றாள் மெலிதான் புன்னகையுடன்.
     “வாங்க சித்தப்பா! இப்போவாச்சும் எங்க நியாபகம் வந்ததே!” என்று மித்ரன் வரவேற்க,
     “ஏய்! சும்மா இரு! வந்ததும் வராம அவர் மனசைக் கஷ்டப் படுத்தாத!” என்றார் தங்கமலர் மெதுவாய் மகனிடம்.
     “ஆமாம்! அவர் மட்டும் நம்ம எல்லார் மனசையும் கஷ்டப்படுத்திட்டு அங்க போய் உட்கார்ந்துட்டு இருப்பார்!” என்றவன், அதன் பின் வேறேதும் பேசாமல் அமைதியாய் உள்ளே சென்றுவிட,                   மனோகருக்கு வருத்தமாகிப் போனது. எப்போதும் தான் வந்ததும் ஆசை ஆசையாய் ஓடி வரும் மகளும் கூட, இன்று தொலைவேயே நிற்பது போல் தோன்ற, மித்ரனும் அப்படிக் கேட்டுச் சென்றது தவறு செய்த மனதைச் சுட்டது.
     ‘தப்பு என்மேல தானே! பிள்ளைங்களை குறை சொல்லக் கூடாது!’ என்று எண்ணிக் கொண்டவர்,
     “அண்ணி சாருவும், சின்னவளும் எங்க?” என்றார் மற்ற இரு மகள்கள் வெளியே வந்து வரவேற்காததைக் கண்டு.
     “கீர்த்தி காலேஜுக்கு போயிருக்கா. சாரு வந்திருக்க சொந்தகராங்களுக்கு சாப்பாடு பரிமாறிட்டு இருக்கா தம்பி. நீங்க உள்ள வாங்க! ஆமாம் இப்போகூட உங்க பொண்” என்று ஏதோ கேட்க வந்தவரை கைபிடித்து தடுத்த ராஜசேகர்,
     “இப்ப வேணாம்” என்பது போல் கண்ணசைவில் மறுப்பு தெரிவிக்க,
     “ப்ச்! நீங்க இருக்கீங்களே?” என்று அமைதியானார் தங்கமலர்.
     சிறிது நேரத்தில் வந்திருந்த உறவினர்கள் அனைவரும் மனோகரை மாறி மாறி நலம் விசாரித்த கையோடு,
     “என்னப்பா மனோகர் மகளோட நிச்சயத்துக்கு கூட வராம இருந்துட்டியே! இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லைப்பா” என்று ஆரம்பிக்க,
     “இப்போ அவன் ஊர்ல இல்லைன்னா என்ன? நான்தான் அவன் ஸ்தானத்துல இருந்து எல்லாத்தையும் செய்யறேனா? என் மகளுக்கு என்ன குறை இருக்கு?!” என்று ராஜசேகர் தம்பியை அவர்கள் பேச்சிலிருந்து காப்பாற்றி,
     “நீ உள்ள போய் குளிச்சிட்டு ஓய்வெடுப்பா. நான் ரூமுக்கே சாப்பாடு அனுப்பி வைக்க சொல்றேன். பயணக்களைப்பு இருக்கும்!” என்று அனுப்பி வைக்க, தன் தகப்பனை முறைப்புடன் பார்த்திருந்தான் மித்ரன்.
     மகன் முறைப்பதைப் பார்த்து, “விடு மித்ரா!” என்று அவர் சமாதானப் படுத்த,
     “நீங்க கொடுக்குற இடம்தான் ப்பா இன்னிக்கு சித்தப்பா நம்ம குடும்பத்தோடவே இல்லாம போனதுக்கு காரணம்! அன்னிக்கே நீங்க அவரை வெளிநாடு போக விடாம தடுத்திருந்தீங்கன்னா இன்னிக்கு அவர் இப்படி ஆகி இருக்க மாட்டார். இதனால நாம படுற கஷ்டத்தைவிட ப்ரியக்கா படுற கஷ்டம்தான் அதிகம்.” என்று மித்ரன் தந்தையிடம் குறைபட, எல்லாவற்றிற்கும் கம்பீரமாய் பதில் கொடுக்கும் ராஜசேகர் இப்போது தன் தவறை உணர்ந்து பதில் பேசாது நின்றார்.
     மதிய நேரத்திற்குப் பின் வந்திருந்த உறவினர்கள் அனைவரும் அவர்கள் வீட்டின் பெரிய கூடத்தில் ஒன்றாய் கூடி அமர்ந்தும், ஓய்வெடுத்துக் கொண்டும் கதை பேசிக் கொண்டே டிவியில் படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்க, மனோகர் கையில் ஒரு பையுடன் மகளின் அறை நோக்கிச் செல்வதைப் பார்த்து தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
     “ப்ரியாம்மா!” என்று குரல் கொடுத்தபடியே மகளின் அறைக்குள் நுழைந்தவர்,
     “வாங்கப்பா!” என்று அவள் சுரத்தே இல்லாமல் வரவேற்றதைக் கண்டு,
     “அப்பா மேல கோபமா டா?!” என்றார் குற்ற உணர்ச்சி தாளாமல்.
     அவள் அமைதியாகவே இருக்க, “என்னை மன்னிச்சிடுடா! உன் சின்னம்மா” என்று அவர் விளக்கம் கொடுக்க முன்வந்த போதே,
     “பரவாயில்லைப்பா” என்றாள் எதுவும் கேட்க மனதில்லாமல்.
     “எனக்குத் தெரியும். நீ அப்பா மேல கோபமா இருக்கேன்னு! அப்பா உனக்காக ஒண்ணு கொண்டு வந்திருக்கேன்” என்றவர், தான் எடுத்து வந்த பைக்குள் இருந்த நகைப் பெட்டி ஒன்றை எடுத்து அவள் கையில் வைத்தார். அது அவள் அம்மா பயன்படுத்தியதாய் அவள் நினைவுக்கு வர, அவள் ஆசையாய் அதைத் திறந்து பார்க்க, அதில் அவரது தாலிக் கொடியும் மாங்கல்யமும், அதனோடு சேர்ந்த உருக்களும் இருந்தன.
     “அம்மா!” என்று அவள் அதை ஆசையாய் வருடிக் கொடுக்க,
     “ஆமாம்டா அம்மாவோடதுதான். அம்மாவோட நகைன்னு என்னால காப்பாத்த முடிஞ்சுது இதை மட்டும்தான்! உனக்கு என்னால கொடுக்க முடிஞ்சதும் இதை மட்டும்தான்” என்ற மனோகரின் குரல் உடைய,
     “அப்பா?!” என்று அவள் புரியாமல் பார்க்க,
     “மத்த நகையை எல்லாம் உன் சித்தி எப்போவோ அழிச்சு வேற வாங்கிக்கிட்டா! இதை மட்டும் போராடி காப்பாத்தினேன். பேருக்குதான் ம்மா உன் அப்பா சம்பாதிக்கிறேன்! ஆனா என் வருமானத்துல எனக்குன்னு சல்லிக்காசு கூட எடுத்துக்க எனக்கு முடியலை!” என்று தலைகுனிந்து சொன்னவரை பார்த்துக் கோபப்படுவதா வருத்தப்படுவதா என்றே அவளுக்குத் தெரியவில்லை!
     “சபாஷ் மாமா! வந்ததும் வந்தீங்க, கடைசி நேரத்துலயாவது, பொண்ணோட கல்யாணத்துக்கு அவ மாமியார் வீட்ல போடா சொன்ன நூத்திஐம்பது பவுன் நகையில பாதி நகையையாவது வாங்கிட்டு வருவீங்கன்னு பார்த்தா, வெறும் பத்து பவுன் கூட தேறாத இந்தத் தாலிக்கொடியோட உஷாரா எஸ்கேப் ஆகிட்டீங்களே?” என்றான் அவர்கள் அனுமதியின்றி அவள் அறைக்குள் வந்த சரத்.
    “எ என்ன மாப்ளை இப்படியெல்லாம் பேசுறீங்க?” என்று மனோகர் அதிர்ச்சியாய் அவனைப் பார்க்க,
     “போதும் மாமா! என்னடா இந்தப் பொண்ணு இப்படி நடிப்புல வெளுத்து வாங்குறாளேன்னு பல நேரத்துல ஆச்சர்யப்பட்டு இருக்கேன்! இப்போதானே தெரியுது அந்த நடிப்பு எங்கயிருந்து வந்ததுன்னு!” என்று மேலும் வார்த்தைகளை தேளாய்க் கொட்ட,
      “போதும் மாப்ளை! என் பொண்ணு ஏன் எதுக்காக நடிக்கணும்?!” என்றார் மனோகர் எதுவும் புரியாமல்.
     “அட என்ன மாமா? உங்களுக்கு கோபமெல்லாம் வருது! இந்த கோபத்தை எல்லாம் நீங்க காதலிச்சு ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டீங்களே உங்க அருமை ரெண்டாவது பொண்டாட்டி அவங்கக்கிட்ட காண்பிச்சிருந்தா நான் இப்படி பேச வேண்டிய அவசியமே இருந்திருக்காது.” என்று அவன் மேலும் வார்த்தைகளை விட, மனோகரின் முகம் சுருங்கிப் போனது.
     “நல்லாவே வேஷம் போடுறீங்க அப்பா, பொண்ணு ரெண்டு பேரும் சேர்ந்து! எப்படி எப்படி? நீங்க சம்பாதிப்பீங்களாம்! ஆனா உங்களுக்கு எடுதுக்க உரிமை இல்லையா?! எனக்கு ஏற்கனவே காத்து குத்தி இருக்காங்க மாமா! உங்க பணத்தையெல்லாம் வெளிநாட்டுல இருக்க பேங்க்ல பதுக்கிட்டு, பெத்த பொண்ணை பத்து பைசா செலவில்லாம அண்ணனோட செலவிலேயே கரையேத்த அருமையா ப்ளான் பண்ணி இருக்கீங்க குடும்பா சேர்ந்து. நீங்க எல்லோரும் அங்க இருந்து நடிச்சா உங்க பொண்ணு இங்க இருந்து எல்லோர் மனசுலயும் இடம் பிடிச்சு நல்லாவே ஏமாத்தி வச்சிருக்கா!” என்று பொறாமைத் தீயில் அவன் அவர்களை வாய்க்கு வந்ததைப் பேச,
     “ச்சே! நீங்க இவ்வளவு கேவலமாவா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க எங்களைப் பத்தி?!” என்று மனோகர் மனம் உடைந்துக் கேட்க,
     “அடடா மறுபடியும் ஏன் மாமா என்கிட்டயே இப்படி ஒரு நடிப்பு! இப்படி எல்லோர்கிட்டயும் நடிச்சு ஏமாத்தி பிழைப்பை ஓட்டுறதுக்கு பிச்சை எடுத்து வாழலாம்!” என்றான் மேலும் மோசமாய்.
     அவன் வார்த்தைகள் ப்ரியாவை வெகுவாய்க் கோபப்படுத்த, “போதும்! இதுக்கு மேல ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை நீங்க பேசினாலும் உங்க மரியாதை கெட்டுடும்!” என்று அவனைக் கை நீட்டி எச்சரித்தவள்,
     “என் சாரு அக்காவுக்காக பார்க்கறேன்! இல்லைன்னா,” என்று நிறுத்தியவள்,
     “நீங்க பேசினதையெல்லாம் நான் வீட்ல இருக்க யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்கிற தைரியம்! பெரியப்பா, பெரியம்மான்னு இல்லை சாரு அக்காகிட்ட சொன்னாலே போதும் உங்க நிலைமை என்னவாகும்னு உங்களுக்கே தெரியும்! போயிடுங்க இங்க இருந்து!” என்று தன் கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு பொறுமையான அதே சமயம் மிரட்டும் குரலில் பேசினாள் வெளியே இருக்கும் மற்றவர்களுக்கு கேட்டுவிடாத வண்ணம்.
     அவள் அவ்வளவு கோபப்படுவாள் என்று எதிர்பார்த்திராத சரத், ‘இதுக்கு மேல பேசி நாம இந்த வீட்டாளுங்க கிட்ட மாட்டிகிட்டு முழிக்கக் கூடாது!’ என்ற பயத்தில் சட்டென வெளியேறியவன், வெளியே இருந்தவர்கள் கூடத்தில் இருந்த டிவியில் சத்தமாக வைத்துப் படம் பார்த்துக் கொண்டிருந்ததால் அவர்கள் பேசியதைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று நிம்மதியாய் தன் மனைவியின் அறைக்குக் கிளம்பினான். ஆனால் மனோகரோ, இடிந்து போய் அங்கிருந்த கட்டிலில் அமர,
     “அப்பா, அப்பா! என்னாச்சு ப்பா” என்று பதறிய ப்ரியா,
     அருகே இருந்த தண்ணீர் ஜாடியில் இருந்த நீரை டம்ப்ளரில் ஊற்றி அவரிடம் கொடுக்க, அதை வாங்க மறுத்தவர், மகளை இப்படிப் பட்ட பேச்சுக்கெல்லாம் ஆளாக்கிவிட்டேனே என்ற குற்ற உணர்வில் எதுவும் பேச முடியாமல் மனதிற்குள் ஊமையாய் அழுதார் தன் தவறுகளை உணர்ந்தவாறே…
                                            -வருவாள்…
    
        
    
    
    
 
            
    
 
              
 
 
              
 

Advertisement