Advertisement

                                                                     9
     “நேற்று இல்லாத மாற்றம் என்னது?! காற்று என் காதில் ஏதோ சொன்னது…” என்ற பாடல் வரிகள் அலாரமாய் ஒலிக்க, அதில் உறக்கம் கலைந்தவளுக்கு அந்தக் காலைப்பொழுது  பல வருடங்களுக்குப் பின் புதிதாய் ஒரு நம்பிக்கையான விடியலாய் விடிந்தது.
     இத்தனை நாள் தன் வாழ்க்கை இப்படியே முடிந்துவிடும் என்று நினைத்திருந்தவளுக்கு அவனது பேச்சு சின்னதாய் நம்பிக்கை விதையை விதைத்திருந்தது. அந்த நம்பிக்கையோடு அதிகாலையே அலாரம் வைத்து எழுந்து அவன் சொல்லிக் கொடுத்திருந்தபடியே உடற்பயிற்சிகளை செய்யத் துவங்கினாள்.
     எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டது அவள் இவ்வளவு காலைப்பொழுதில் உறக்கம் தொலைத்து எழுந்து!
     ஐந்தரை மணி அளவில் கண் விழித்த சாந்தி மகள் கட்டிலில் இருந்தபடியே, எழுந்து அமர்ந்த வண்ணம் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பது தெரிய அதிசயமாய் அவளைச் சில நொடிகள் பார்த்திருந்தார்.
     ‘என்னமோ அதிசயமா இவ்வளவு வருஷங்களுக்கு அப்புறம் பயிற்சி செய்ய ஆரம்பிச்சிருக்கா! ஏதோ ஓரளவு அவ வேலைய அவளே செய்துக்குற அளவாச்சும் அவ உடம்பு தேறினா சரி!’ என்று நினைத்தபடியே சாந்தி எழுந்து தன் கடமைகளை கவனிக்க சென்றார்.
     ‘என்ன இந்த அம்மா ஒரு வார்த்தை கூட கேட்காம போகுது?! ஒரு பிள்ளை இத்தனை வருஷம் கழிச்சு எக்சர்சைஸ் பண்ணுறேன். கொஞ்சமாச்சும் அக்கறை எடுத்து ஒரு வார்த்தையாச்சும் கேட்டுச்சா பாத்தியா?! ம்! அவ்வளவுதான் என் மேல இருக்க அக்கறை’ என்று எண்ணிக் கொண்டவள்,
     ‘அந்த டாக்டர் சொன்ன மாதிரி நான் தினமும் பயிற்சி பண்ணா சீக்கிரமே ஓரளவு குணமாகி என் வேலைய நானே செய்துக்குவேன் அம்மா. அப்போ உனக்கும் அப்பாவுக்கும் இருக்க பாரம் ஓரளவு குறைஞ்சிடும்.’ என்று மானசீகமாக சொல்லிக் கொண்டாள் தன் தாய் தந்தை அவளருகே இருந்தும் அவர்களிடம் நேரே சொல்ல முடியாமல். ஏனெனில் இதுவரை அவளது உடல்நலத்தில் அவர்கள் அனைவருக்கும் கிட்டியது ஏமாற்றம் மட்டுமே! அதனாலேயே இனி தான் குணமாகும் வரை பொய்யான நம்பிகையை அவர்களுக்கு கொடுத்து ஏமாற்றக் கூடாது என்று முடிவெடுத்திருந்தாள் அவள்.
                          *****
     “அக்கா! நான் அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போயிட்டு அப்படியே ஹாஸ்பிட்டல் கிளம்பறேன். வரட்டுமா. நீ அங்கயும் இங்கயும் அலையாம ஒழுங்கா ரெஸ்ட் எடு” என்று சொல்லிக்கொண்டு மித்ரன் கிளம்ப, 
     “டேய் மித்து, மைத்து எப்படிடா இருக்கா?!” என்றாள் ப்ரியா.
     “மைத்துவா?! அது யாரு?!” என்று அவன் குழப்பமாய் பார்க்க,
     “மைத்ரேயிடா. அவள அப்படிதான் கூப்பிடுவேன் நான்” என,
     “ஓ!”
     “எப்படிடா இருக்கா அவ? ஒழுங்கா சொன்ன பேச்சைக் கேட்டு எக்ஸர்சைஸ் பண்றாளா இல்லையா?!” என,
     “இத்தனை நாள் ஏமாத்திட்டுதான் இருந்தா. ஆனா இனி ஒழுங்கா பண்ணுவா” என்றவன்,
     “சரி நான் கிளம்பறேன்.” என்று சொல்லிக் கிளம்பிவிட, அவன் கிளம்பிய சிறிது நேரத்திற்குப் பின் மெல்ல எழுந்து வந்து தன் அறைக் கதவைச் சாற்றியவள், அவன் கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்.
     “ஹலோ நகுலனா? நான் ப்ரியா பேசுறேன்!” என்று இவள் சொல்ல,
     “ஹேய் ப்ரியா என்ன காலையிலேயே போன் பண்ணி இருக்க?! எப்படி இருக்க? கால் வலி இப்போ பரவாயில்லையா? நானே உனக்கு கால் பண்ணனும்னு இருந்தேன். ஆனா எங்க? டியுடிக்கு போனா எதைப் பத்தியும் யோசிக்கவே நேரம் இல்லாம போயிடுது! ராத்திரி நேரம் கழிச்சு வரேன் உனக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ண மனசு வரலை!” என்று நகுலன் உண்மையான வருத்ததோடு சொல்ல,
     “ம் பரவாயில்லை நகுலன் எனக்குப் புரியுது” என்றவள்,
     “நான் உங்ககிட்ட,” என்று அவள் தயங்க,
     “என்ன ப்ரியா? சொல்லு?”
     “அது வந்து அன்னிக்கு நம்ம நிச்சயதார்த்தம் அன்னிக்கு சொல்லி இருந்தேனே? அதான் நகை விஷயமா?!” என்று தயங்கித் தயங்கிச் சொல்ல,
     “ம்! நான் அன்னிக்கு நைட்டே அம்மாகிட்ட பேசிட்டேன் ப்ரியா. ஆனா அம்மா, இதெல்லாம் பெரியவங்க விஷயம் நீங்க இதுல தலையிட வேண்டாம்னு கோபப்படுறாங்க! அதுமட்டும் இல்லாம அவங்க ஒன்னும் வசதி வாய்ப்பில்லாம இல்லையேன்னு என்னையே திரும்பக் கேட்குறாங்க! அன்னிக்கு உங்க பெரியம்மா மட்டும் எவ்ளோ வேணா கேளுங்கன்னு சொல்லாம இருந்திருந்தா இந்தப் பிரச்சனையே இல்லை!” என்று நகுலன் முடிக்க, அவளுக்கு ஏதோ போல் ஆனது.
     அவள் ஏதும் பேசாது இருக்க, “ப்ரியா லைன்ல தானே இருக்க ஹெலோ?” என்று நகுலன் குரல் கொடுக்க,
     “ம் இருக்கேன் நகுலன். சரி அப்போ வச்சிடட்டுமா” என்றாள்.
     “என்மேல கோபமா ப்ரியா?” என்று நகுலன் கேட்க,
     “ம் அதெல்லாம் இல்லை” என்றவள்,
     “சரி வச்சிடறேன். அம்மா வராங்க” என்று சொல்லி போனைத் துண்டித்தாள்.
     நகுலனுக்கும் அவள் குரலின் வாட்டம் ஏதோ செய்ய, ‘இந்தப் பொண்ணு ஏன் இவ்ளோ கவலை படுறா? எல்லோரும் செய்யலைன்னு தான் கவலைப் படுவாங்க! ஆனா இவ செய்யிறாங்களேன்னு இவ்ளோ கவலைப்படுறா?! இந்த அம்மாவும் சொன்ன கேட்க மாட்றாங்க! என்ன பண்றது? பேசாம அப்பாகிட்ட இதைப் பத்தி பேசிட வேண்டியதுதான். அவர் சொன்னதான் அம்மா கேட்பாங்க!’ என்று முடிவெடுத்தான் நகுலன். அவன் முடிவெடுத்தது நல்லதுதான். ஆனால் என்ன அது கொஞ்சம் தாமதமாகி விட்டது.
     இவனிடம் போன் பேசிவிட்டு வைத்தவளுக்கு மீண்டும் அவனது கால்! காலையில் இருந்து அவன் அழைத்த அழைப்புகள் பத்து முறைக்கும் மேல் இருக்கும். அவன் நம்பரை ரிஜெக்ட் லிஸ்டில் போட்டிருந்தாலும் அவளுக்கு அவனது அழைப்புகளின் எண்ணிக்கையும், இன்ஸ்டாக்ராமில் அவன் அனுப்பிக் கொண்டிருந்த குறுஞ்செய்திகளும் வந்து கொண்டேதான் இருந்தது.
     ரிஜெக்ட் லிஸ்டில் போட்டவளுக்கு ஏனோ அவனது நம்பரை ப்ளாக் செய்ய மனம் வரவில்லை! அதனாலேயே அவனுக்கு அவள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அவள் நிச்சயம் தன்னை ஏற்பாள் என்று.
     “மேம் ப்ளீஸ் மேம்! என் நம்பரை நீங்க ரிஜெக்ட் லிஸ்ட்ல போட்டிருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்! ப்ளீஸ் மேம் எடுத்து விடுங்க மேம்! உங்க குரல் கேட்காம எப்படியோ இருக்கு மேம்! கடைசியா ஒருமுறை ஒரே முறை பேசிட்டு வச்சிடறேன் மேம்! ப்ளீஸ்!” என்று அவன் அனுப்பியிருந்த செய்தியைப் பார்த்து,
     ‘என்ன இந்த பிரேம் கடைசியா அது இதுன்னு பேசுறான்?!’ என்று அவள் கலக்கத்துடன் அவனது நம்பரை ரிஜெக்ட் லிஸ்டில் இருந்து எடுத்துவிட, அடுத்த நொடியே அவனது கால் வந்தது.
     “ஏன் மேம் இப்படி பண்ணீங்க?! நான் அந்த அளவுக்குத் தகுதி இல்லாதவனா போயிட்டேனா?! நான் என்ன அவ்ளோ மோசமானவனா என் நம்பரை ரிஜெக்ட் லிஸ்ட்ல போடுற அளவுக்குப் போயிட்டீங்க!” என்று அவன் குரல் கம்மக் கேட்க,
     “அய்யோ! நான் அப்படி எல்லாம் நினைக்கலை பிரேம்! ஆனா உங்களுக்கு ஏன் இது புரிய மாட்டேங்குது! நான் ஏற்கனவே ஒருத்தருக்கு நிச்சயிக்கப் பட்டவ! அப்புறமும் நீங்க என்கிட்ட இப்படி எல்லாம் பேசுறது! எந்த விதத்தில் நியாயம்?! எனக்கு நிச்சயம் ஆகுறதுக்கு முன்னாடி நீங்க சொல்லி இருந்தா கூட பரவாயில்லை!” என்று ஒரு வேகத்தில் சொல்லியவள், நொடிகளில் தான் என்ன பேசுகிறோம் என்று தன் தவறை உணர்ந்து, நாக்கைக் கடித்துக் கொண்டு தன்னையே நொந்து கொள்ள,
      “அப்போ முன்னாடியே சொல்லி இருந்தா, என்னை ஏத்துகிட்டு இருப்பீங்க தானே மேம்!” என்றான் பிரேம்.
     “பிரேம்! ப்ளீஸ் ஸ்டாப் டாக்கிங் லைக் திஸ்!” என்று கோபக் குரலில் சொன்னவள்,
     “தயவு செய்து இனி எனக்குக் கால் பண்ணாதீங்க! நான் இன்னொருத்தருக்கு மனைவியாகப் போறவ! இனியும் தேவையில்லாம என்னைப் பத்தி நினைச்சு உங்க நேரத்தை வீணடிக்காதீங்க. அதோட நீங்க வேற எந்த முட்டாள்தனமான முடிவுக்கும் போக மாட்டீங்கன்னு நம்பறேன்” என்றுவிட்டு அவள் கைபேசி இணைப்பைத் துண்டிக்கப் போக,
     “மேம்! ப்ளீஸ் வச்சிடாதீங்க! ஒரு நிமிஷம் நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க!” என்று அவன் பதட்டத்துடன் கத்த,
     “ப்ச்! சொன்ன புரிஞ்சிக்க மாட்டீங்களா ப்ரேம்” என்று இவள் மேலும் கோபத்தில் கத்த,
     “நீங்க என்னை என்ன வேணா திட்டிக்கோங்க மேம்! ஆனா நீங்க நிச்சயம் ஆகிடிச்சுங்கிற ஒரே காரணத்துக்காகதான் என்னை மறுக்கிறீங்கன்னா, அது உங்க வாழ்க்கையே நீங்களே அழிச்சுக்கறதுக்கு சமம் மேம்! நான் உங்களை உங்களுக்காக மட்டுமே நேசிக்கிறேன்! உங்க பணத்துக்காகவோ, நீ போட்டுட்டு வரப் போற உங்க நூத்திஐம்பது பவுன் நகைகளுக்காகவோ இல்லை!” என்று அவன் நிறுத்த, அவள் ஸ்தம்பித்துப் போனாள்.
     ‘இ இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?!’ என்று அவள் யோசிக்க,
     “என்னடா இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு பார்க்கறீங்களா?! எனக்குத் தெரியும் மேம்! உங்களோட ஒவ்வொரு மாற்றமும் எனக்குத் தெரியும்! ஏன்னா நான் உங்களை அவ்ளோ நேசிக்கிறேன். அதிலும் நிச்சயம் ஆனதுல இருந்தே உங்க முகம் சுத்தமா சரியில்லை மேம்! எப்பவும் எதையோ நினைச்சு குழம்பிப் போயிருந்தீங்க! அப்புறம் தான் நான் உங்க வரதட்சணை விஷயம் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்!” என,
     “ப்ரேம்!” என்று அவள் குரல் கலக்கத்துடன் ஒலிக்க,
     “போதும் மேம் இனியும் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்! நீங்க என்னை ஏத்துக்கறீங்களோ இல்லையோ, ஆனா நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன் மேம்! அதுக்கப்புறம் நீங்க என்ன முடிவெடுத்தாலும் சரி!” என்றவன்,
     “எப்பவும் எந்த சந்தர்ப்பத்துலயும் உங்களை உங்களுக்காக மட்டுமே நேசிக்கவும் ஏத்துக்கவும் நான் இருக்கேங்கிறதை மறந்துடாதீங்க! நீங்க எப்போ எந்த சூழ்நிலையில என்னோட வரணும்னு ஆசைப்பட்டாலும் வாங்க! நான் உங்களுக்காக காத்துகிட்டு இருப்பேன் உங்களை மட்டுமே நினைச்சுக்கிட்டு!” என்றுவிட்டு அவன் லைனைத் தானாகவே துண்டித்துவிட, அவளுக்கு ஏதோ போல் ஆனது.
    முதன்முறையாக, ‘நாம் தவறு செய்கிறோமோ, நம்மை இவ்வளவு நேசிக்கும் ஒருவனை விட்டுவிட்டு, அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு வரதட்சணை கேட்கும் ஒருவரோடு, வாழ்க்கை முழுக்க நிம்மதியாய் வாழ்ந்துவிட முடியுமா என்ற எண்ணம் எழுந்தது அவள் மனதில்!
                                 *****
     மித்ரன் வாசலில் வரும்போதே, “வாங்க சார்!” என்று அவள் புன்னகையுடன் வரவேற்க, அவன் புரிந்து கொண்டான்.
     “மேடம் இன்னிக்கு ஒழுங்கா எக்செர்சைஸ் பண்ணிட்டீங்க போல?!” என்றபடியே அவன் உள்ளே வர, கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சாந்தி,
     “ஆமா சார்! அதிசயமா பல வருஷத்துக்கு அப்புறம், அதிகாலையில எழுந்து பயிற்சி பண்ணி இருக்கா! அதான் இன்னிக்கு இவ்ளோ நேரமாகியும் வானம் இருட்டியே கிடக்கு! கண்டிப்பா மழைக் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் பாருங்க!” என்றார் கேலியாய்.
     “யம்மா!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவள் முறைக்க, அவன் மெலிதாய் சிரித்துக் கொண்டே, அவளுக்குக் கைகொடுக்க, அதைப் பற்றியவளுக்குள் இத்தனை நாள் இல்லாத ஏதோ ஒரு வித்தியாசம்!
     அவன் புன்னகையில் அவள் மனம் முழுதாய் கரைய, அவனையே பார்த்துக் கொண்டு அவள் பயிற்சிகளை மேற்கொள்ள, சாந்தி, சிறிது நேரத்தில் கடைக்குக் கிளம்பிவிட்டார் மகளுக்குள் புதியதாய் வேறொரு மாற்றமும் உண்டாகியிருப்பது தெரியாமல்.
     சிறிது நேரம் அமைதியாய்ப் பயிற்சிகளைச் செய்தவன், ஏதோ குறுகுறுவென்ற உணர்வில், அவள் முகம் பார்க்க, அவள் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
     “என்ன?!” என்று அவன் புருவம் உயர்த்திக் கேட்க,
     “ஒண்ணுமில்லை!” என்பது போல் தலையசைத்தவள்,
     “நீங்க ரொம்ப ஸ்வீட் சார்!” என்றாள் ரசனையாய்.
     “எப்படி குலோப்ஜாமூன் மாதிரியா?!” என்று அவனும் இலகுவாய் கேட்க,
     “ம்ஹும் அதைவிட ஸ்வீட்!” என்றவள்,
     “தேங்க்ஸ்!” என்றாள்.
     “எதுக்கு?”
     “உங்களால ரொம்ப வருஷம் கழிச்சு வாழ்க்கையில சின்னதா ஒரு நம்பிக்கை வந்திருக்கு!” என்றவளுக்கு மீண்டும் ஒரு புன்னகையைப் பரிசளித்துவிட்டு, தன் வேலையில் கவனமானான் அவள் நெஞ்சப் பெட்டகத்தில் தன்னைப் பதித்துக் கொண்டே…
                              *****

Advertisement