Advertisement

                                                          8
          ‘ம்ஹும்! இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை! இனி இவன் போன் பண்ணா கூட எடுக்கக் கூடாது!’ என்று முடிவெடுத்தவள், வீட்டில் அனைவரும் வந்துவிட்டதன் குரலொலி கேட்க, கையில் இருந்த கைப்பேசியைச் சட்டெனக் கீழே வைத்தாள்.
     “அம்மா ப்ரியா.. என்ன யோசிச்சிட்டு இருக்க? வா. எழுந்து வெளில வரியா? வாங்கிட்டு வந்த நகை துணியெல்லாம் பார்த்துடுவ” என்று தங்கமலர் அவளை அழைக்க,
     “ம் ம்மா!” என்று கைத்தாங்கலாக தாயைப் பிடித்துக் கொண்டு நடந்து கூடத்திற்குச் சென்றாள்.
     அங்கு அவர்கள் வாங்கிக் குவித்திருந்த நகைகளையும் உடைகளையும் பார்க்கும் போது, அவள் நெஞ்சம் பாரமாகிப் போனது.
     “ம்மா! நான்தான் அவங்க கேட்ட அளவுக்கு நகையெல்லாம் செய்ய வேணாம். கொஞ்சமா வாங்கினாப் போதும்னு சொன்னேன்ல! அப்புறம் எதுக்கு இவ்ளோ வாங்கிட்டு வந்தீங்க?!” என்று  கோபம் கொள்ள,
     “என்ன ப்ரியாக்கா நீங்க?! எல்லாப் பொண்ணும் இன்னும் கொஞ்சம் வேணும்னு தான் ஆசைப்படுவாங்க! உங்களுக்கு ஏன் இவ்ளோ கோபம் வருது?! வேணாம்னா சொல்லுங்க. நான் பாதி எடுத்துக்கறேன்.” என்று சின்னவள் கீர்த்தி வாங்கி வந்திருந்த நகையில் ஒன்றை எடுத்து தன் கழுத்தில் போடுவது போல் வைத்து அழகு பார்க்க,
     “ஹேய்! அவளோட நகையை எடுத்த, அடி விழும். இதெல்லாமே என் நடுப்பொண்ணுக்குதான். நான் அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கி வச்சா இவ பங்குக்கு வர்றா. போ, வேணும்னா போய் உன் அப்பாகிட்ட கேட்டு உனக்கு வேற வாங்கிக்கோ” என்று தங்கமலர் சின்னவளை வெறுப்பேற்ற,
     “திஸ் இஸ் நாட் ஃபேர் கோல்ட்பிளவர்! நாட் ஃபேர்!” என்று தாயைப் பார்த்து முறைத்துக் கொண்டு சொன்னவள்,
      “கொடுக்காட்டி போங்க! நான் என் அப்பாகிட்ட கேட்டு இதைவிட் நிறைய வாங்கிக்குவேனே!” என்று ஒழுங்கு காண்பித்துவிட்டு, தந்தையிடம் சென்று,
     “அப்பா! வாங்கிக் கொடுப்பீங்க தானே?!” என,
     “ம் டா வாங்கிட்டா போச்சு” என்றார் ராஜசேகரும்.
     “ம்! அப்பான்னா அப்பாதான்!” என்று தந்தையைக் கொஞ்சியவள்,
     “உனக்கு இனி கோல்ட் பிளவர் பட்டமெல்லாம் கட் ம்மா! யூ ஆர் ஒன்லி ஓல்ட் பிளவர்!” என,
     “சர்தான் போடி! இவ பட்டம் கொடுத்துதான் எனக்கு ஆகப் போகுது!” என்றவர்,
     “நீ உட்கார்ந்து பாருடா ப்ரியாம்மா!” என,
     “ம்! பாருங்க பாருங்க! நல்லா பாருங்க! இந்த வீட்ல தான் இப்படிப் பட்ட அதிசயமெல்லாம் நடக்கும்” என்று நக்கலாய்ச் சொன்ன சாருவின் கணவன் சரத்,
     “சாரு பசங்களைக் கூட்டிட்டு வீட்டுக்குக் கிளம்புறியா இல்லை இன்னும் நேரமாகுமா?!” என்றான் கடுப்பாக.
     “ஏங்க! கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போலாமே.” என,
     “உங்க அம்மா வீட்டுக்கு வந்தா கிளம்பவே மனசு வராதே உனக்கு! சரி நான் கிளம்பறேன். நீ வேணா அப்புறம் வா!” என்று அவன் கிளம்ப,
     “ப்ச்! இவரோட! சரி, இருங்க நாங்களும் வந்துடறோம்!” என்றவள்,
     “ம்மா! கிளம்பறோம்!” என்று எழ,
     “என்ன மாப்ளை நீங்க? வந்ததும் கிளம்பச் சொல்றீங்க! நாளைக்கு சனிக்கிழமைதானே! ஸ்கூலும் லீவ்தான். எல்லோரும் ரெட்னு நாள் இருந்துட்டுதான் போங்களேன்!” என்றார் தங்கமலர்.
     “இல்லம்மா ஹாஃப் டே ஸ்கூல் இருக்கு!” என்ற சாரு,
     “கிளம்புங்க பசங்களா” என,
     “அட ஹாஃப் டே தானே! லீவ் போட்டுக்க வேண்டியதுதான்.” என்றவர்,
     “என்னங்க சொல்லுங்களேன்” என்று கணவரை துணைக்கு அழைக்க,
     “இருக்கட்டுமே மாப்ளை! நீங்களும்தான் இங்கயே இருங்களேன்” என்று ராஜசேகரும் சொல்ல,
     அதற்கு மேல் மறுத்துப் பேச முடியாது, “ம் சரிங்க மாமா” என்றவன், மனைவியின் அறைக்குச் சென்றுவிட,
     “ஐ ஜாலி!” என்று கத்தியபடி பசங்களும் தாத்தாவிடம்,
     “தேங்க் யூ தாத்தா!” என்று செல்லம் கொஞ்சினர்.
     வீடே கலகலப்பாய் இருக்க அவள் மனதில் மட்டும் பெரும் பாரம் குடிகொண்டிருந்தது. யாருக்காய் அனைவரும் சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டிருந்தனரோ, அவள் மட்டும் மனதில் சந்தோஷம் இன்றி தவித்துக் கொண்டிருந்தாள்.
     இரவு எல்லோரும் சாப்பிட்டு முடித்து உறங்கச் சென்றிருக்க, ப்ரியா மட்டும், ‘ச்சே! என்ன மனசு இது! ஒரு பக்கம் பெத்த அப்பா செய்யலையேன்னு ஏங்குது! இன்னொரு பக்கம் வளர்த்தவங்க செய்யுறதைப் பார்த்து சந்தோஷப் பட்டாலும், அதை ஏத்துக்க முடியாம திணறுது! நான் இப்போ என்னதான் செய்ய?!’ என்று குழப்பத்துடன் ஏதேதோ யோசித்த வண்ணம் பால்கனியில் அமர்ந்திருக்க,
     “நல்லா நடிக்குற ப்ரியா! உன்கிட்ட நாங்கல்லாம் நிறையக் கத்துக்கணும்!” என்று கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்தவளிடம் சென்று தேவையில்லாமல் வம்பிழுத்தான் சரத்.
     இதுநாள் வரை பொறுமை காத்தவள், “இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்சனை?! உங்க வீட்டு பணத்தையா தூக்கிக் கொடுக்கறீங்க! என் அம்மா அப்பாதானே எனக்கு செய்யுறாங்க! உங்களுக்கு என்ன கஷ்டமா இருக்கு அதுல?!” என்று அவள் எரிந்து விழ,
     “சின்ன திருத்தம்! அவங்க உன் அம்மா அப்பா இல்லை! பெரியம்மா பெரியப்பா!” என்றான் நக்கலாய்.
     “என்னைப் பொறுத்தவரை அவங்க என் அம்மா, அப்பாதான்” என்று பதிலடி கொடுத்தவள், சட்டென எழுந்து கொள்ள,
     “இப்படிச் சொல்லி சொல்லியே அவங்க சொத்தையெல்லாம் மொத்தமா நீயே எழுதி வாங்கினாலும் வாங்கிடுவ நீ!” என்று அவன் வாய்கூசாமல் அவளை வஞ்சிக்க,
     “ச்சே! ஏன் மாமா உங்க புத்தி இப்படிப் போகுது! நானா அவங்களை அவ்ளோ நகை செய்யச் சொல்லிக் கேட்டேன்! நானா இவ்ளோ கிராண்டா கல்யாணம் செய்யச் சொல்லிக் கேட்டேன்! அவங்களா ஆசைப்பட்டுதானே செய்யுறாங்க. அதுக்கு நான் என்ன செய்ய?!” என்றாள் பாவமாய்.
     “அட! அட! என்னமா நடிக்கிற?! இப்படி நடிச்சு நடிச்சுதானே, என் பொண்டாட்டி முதற்கொண்டு இந்த வீட்ல இருக்க எல்லோரையும் மயக்கி வச்சிருக்க! அவங்களும் பெத்த பொண்ணுக்கு செய்ததை விட உனக்கு அதிகமா செய்துட்டு இருக்காங்க உன் பாசமெல்லாம் வெறும் பணத்துக்காகதான்னு புரியாம!” என்று சரத் மேலும் மேலும் அவளைக் காயப்படுத்தும் வார்த்தைகளை வீச, ஒரு கட்டத்தில் அவள் பேச்சிழந்து கண்ணீரை மட்டுமே பதிலாக்கி நிற்க வேண்டியதாகிற்று!
     சிறிது நேரத்தில் யாரோ வரும் அரவம் கேட்க, சரத் அவள் மீது குற்றம் சுமத்தும் பார்வையை வீசிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட,
     “ப்ரியாம்மா இன்னும் எவ்ளோ நேரம் இங்கயே உட்கார்ந்துட்டு இருப்ப?! வா ரூமுக்கு அழைச்சிட்டு போறேன். வந்து தூங்கு” என்றபடி தங்கமலர் வர,
     “மித்து இன்னும் வரலியே ம்மா!” என்றாள் அவள் முகத்தை திருப்பாமல் சட்டென கண்களைத் துடைத்துக் கொண்டு.
     “அவன்தான் அவன் பிரெண்ட்ஸ்கு பேச்சிலர் பார்ட்டி கொடுக்கப் போயிருக்கானே வர நேரமாகுமே! நீ வந்து தூங்குடா” என்று தங்கமலர் அருகே வந்து அவளை எழுப்பக் கைகொடுக்க, அவள் முகம் பார்த்து பதைத்துப் போனார்.
     “என்ன என்ன ஆச்சும்மா?! ஏன் அழுத? ஏன் இப்படி கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு?!” என்று தங்கமலர் பதட்டம் கொள்ள,
     “இல்லம்மா இன்னும்கொஞ்ச நாள்ல உங்க எல்லோரையும் விட்டுப் போயிடுவேன்ல! அதான்!” என்றவள் அமர்ந்தபடியே தங்கமலரின் வயிற்றைக் கட்டிக் கொண்டு அழ,
      “சோ! என்ன பொண்ணுடா! இதுக்கா இபப்டி அழுதிருக்க! என்ன இங்கிருந்து பத்து கிலோமீட்டர் கூட இல்லை! நினைச்சா ஓடி வந்துடப் போறோம்! அதுக்காகவா இப்படி அழுவ?!” என்று தங்கமலர் அவளை அணைத்து தட்டிக் கொடுத்தபடி ஆறுதல் சொல்ல, அவளுக்கு மேலும் மேலும் அழுகைப் பொங்கியது.
     அவள் தேம்புவது புரிந்து, “என்னடா கண்ணா இது?! இப்படியா அழுவ?! இங்க பாரு பாரு அம்மாவ!” என்று அவள் முகத்தை நிமிர்த்தி,
     “யாராச்சும் எதாச்சும் சொன்னாங்களா?!” என்றார் சரத் அங்கு தங்கி இருப்பதால் அவன் ஏதேனும் சொல்லி இருப்பானோ என யூகித்து.
     “இல்ல இல்லம்மா! நிஜமாவே உங்களை விட்டுப் போக விருப்பமே இல்லை! எனக்கு கல்யாணமே வேண்டாம் ம்மா! நான் எப்போவும் இப்படியே உங்ககூடவே இருந்துடறேன்” என்று அவள் மீண்டும் தாய் மீதே சாய்ந்து கொள்ள,
     “அப்படி எல்லாம் பேசக் கூடாதும்மா! இங்க பாரு, ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் போக போக புகுந்த வீடும் பழகிடும்டா! நகுலன் தம்பியோட அம்மா கொஞ்சம் முசுடா இருந்தாலும் மோசமானவங்க எல்லாம் இல்லை! அதோட நகுலன் தம்பியும் ரொம்ப நல்ல மாதிரி உன்னைப் பார்த்துக்குவார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்று கொஞ்சம் கொஞ்சமாய் மகளைத் தேற்றி அமைதிப் படுத்தி அவள் அறைக்கு அழைத்துச் சென்று அவளைப் படுக்க வைத்துவிட்டு தானும் அவள் அறையிலேயே அவளுக்குத் துணையாய் படுத்துக் கொண்டார்.
     இதையெல்லாம் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த நகுலனுக்கு, ‘எப்படி நடிக்கிறா பாரு!’ என்று உள்ளுக்குள் புகைந்தாலும், ‘நல்லவேளை நம்மலக் காட்டிக்கொடுக்கலை!’ என்று நிம்மதியும் எழுந்தது.
     உறங்கச் சென்ற ப்ரியாவோ, ‘நாளைக்கு எப்படியாச்சும் நகுலனுக்கு கால் பண்ணி இந்த நகை விஷயத்தைப் பத்திப் பேசியே ஆகணும்! இந்த மாமா எப்படியெல்லாம் பேசுறாரு!’ என்று கவலையோடு கண்மூடினாள்.
     மறுநாள், ப்ரியா நகுலனிடம் பேச நேரம் பார்த்துக் காத்திருக்க, பிரேம், ப்ரியாவை நினைத்தபடியே ஒவ்வொரு நொடியும் வலம் வர, மித்ரன்,
     ‘இன்னிக்காச்சும் அந்தப் பொண்ணு ஒழுங்கா எக்ஸ்சர்சைஸ் பண்ணியிருக்குமா?!’ என்ற யோசனையில் அவள் வீட்டிற்கு வெளியே காரை நிறுத்திவிட்டு இறங்க, அவள் ஜம்மென்று தயாராகி மட்டும் அமர்ந்திருந்தாள் அதிகாலை எழுந்து பயிற்சி ஏதும் செய்யாமல்.
     அவன் வந்ததும் அவனைப் பார்த்து, “ஈ!” என இளித்து வைத்தவள்,
     ‘டேய் குலோப்ஜாமூன் நான் எக்சர்சைஸ் பண்ணலைன்னு சொன்னாதானே நீ பனிஷ்மென்ட் கொடுப்ப! நான் பண்ணிட்டேன்னு சொன்னா!’ என்று மைன்ட் வாய்சில் சொன்னவள்,
     “நீங்க சொன்னமாதிரியே கரெக்டா பயிற்சி பண்ணிட்டேனே!” என்றாள் கேட்கும் முன்னே முந்திக் கொண்டு.
     “ஒ! அப்படியா?! அப்போ அக்காக்கு ஏன் வீடியோ அனுப்பலை!” என்று கேட்டபடியே அவன் அருகே வர,
     “அது நான் எக்சர்சைஸ் பண்ணும் போது போன்ல சார்ஜ் தீர்ந்து போய் ஆப் ஆகிடுச்சு! அதனால எடுக்க முடியலை!” என்று வாய்கூசாமல் பொய் சொன்னாள்.
     “ஓ!” என்று என்று நம்பியதைப் போல் சொன்னவன், அவள் எழுந்து அமரத் தன் கைகளைக் கொடுக்க, அவளும் கைகளைப் பற்ற, மெல்ல அவள் கைகளை பற்றி அழுத்தியவன்,
    அவள் கையை மெல்ல மேலே மடக்கி நீட்டி என பத்துமுறைக்கும் மேலாக செய்து கொண்டே செல்ல,
     “டென் டைம்ஸ் முடிஞ்சிருச்சு! அடுத்த கை பண்ணனும்” என்று அவள் நிறுத்த முயல,
     “பதினஞ்சு பதினாறு பதினேழு” என்று அவன் எண்ணிக் கொண்டே செல்ல,
     “சார்! டென் டைம்ஸ்” என்று அவள் முடிப்பதற்குள்,
     “நேத்தே சொல்லியிருந்தேனே நியாபகம் இல்லையா உனக்கு?! நாற்பது முறை பண்ணனும்!” என்றவன் மேலும் எண்ணிக் கொண்டே அவள் கைகளை மடக்கி நீட்ட,
     “நான்தான் ஒழுங்கா பயிற்சி பண்ணேனே!” என்று அவள் முனகலாய் சொல்ல,
     “இருபது இருபத்தி ஒன்னு” என்று அவன் தொடர,
     “ம்! ம்!” என்று கடுப்பில் அவள் முனகலுடன் பயிற்சியை மேற்கொள்ள, நான்கைந்து பயிற்சிகளுக்கு மேல் அவளால் சுத்தமாகச் செய்ய முடியவில்லை! வலி தாங்காமல், அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, அப்போதும் அவன் மனம் இறங்காமல் செய்து கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் மிகுந்த கோபம் கொண்டவள், ஒரே தள்ளாய் அவனைப் பிடித்து தள்ளிவிட்டாள் தன் பலவீனத்தையும் பொருட்படுத்தாமல்.
     ஆனால் அவள் தள்ளிய வேகத்தில் அவன் விழுவதற்கு பதிலாக  தசைச் சிதைவு நோய்க்கு ஆளாகி இருந்த அவளே பலமிழந்து கீழ விழப் போக, சட்டென சுதாரித்து அவளைத் தாங்கிப் பிடித்தான் பாதுகாப்பாய்.
     “விடு என்னை விடு! எதுக்கு என்னைப் இப்படி சித்ரவதை செய்யுற?! இந்தப் பயிற்சி செய்தா மட்டும் நான் என்ன உயிர் வாழ்ந்துடவா போறேன்! எதுக்கு எல்லோரும் சேர்ந்து செத்துக்கிட்டு இருக்கிறவளுக்கு உயிர் கொடுக்க நினைக்குறீங்க! எப்படி இருந்தாலும் நான் சாகத்தானே போறேன்!” என்று அவள் கத்தக் கத்த, அவளை பாதுகாப்பாய் அமர வைத்தவன்,
     மீண்டும் அடுத்த பயிற்சியைத் துவங்க, “ச்சே! என்னை விடுன்னு சொல்றேன்ல! எதுக்கு நான் பயிற்சி பண்ணனும்? யாருக்காக நான் பண்ணனும்? போ ஜென்சிமாவும் வேணாம். ப்ரியாக்காவும் வேணாம். போ. யாருக்காகவும் நான் பண்ண மாட்டேன். நான் ஏன் பண்ணனும்? அப்படியே பண்ணா மட்டும் என்னோட இந்த நரக வாழ்க்கை முடிஞ்சிப் போயிடுமா என்ன?! அவள் கோபத்தில் மேலும் மேலும் கத்த, அவன் பொறுமையாய் நின்றான். ஆனால் அவள் நிறுத்தவில்லை. மேலும் பேசினாள். தொடர்ந்து பேசினாள். இத்தனை நாள் யாரிடம் கொட்டாமல் தனக்குள் அடக்கி வைத்திருந்த கோபத்தை சோகத்தை எல்லாவற்றையும் ஏனென்று தெரியாமலே அவனிடம் கொட்டி தீர்த்தாள்.
      “ஏன் எல்லோரும் இப்படி பண்றீங்க? நான் கேட்டனா? நான் திரும்ப எந்திரிச்சி நடக்கணும்னு நான் கேட்டேனா? எனக்கு வேண்டாம். என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு. என்னால முடியல. வாழப்போற கொஞ்ச காலம் வரைக்குமாவது நான் நிம்மதியா இருந்துட்டு போறேன். எனக்கு தேவை இல்லை. இந்த அக்கறை, இந்த பயிற்சி இதெல்லாம் எனக்கு தேவை இல்லை. என் அம்மா, அப்பாக் கூட இப்பல்லாம் முன்ன மாதிரி என் மேல அக்கறை காட்டுறதில்லை தெரியுமா? ஏன்னா அவங்களுக்கு தெரியும். இனிமே எப்பவும் நான் அவங்களுக்கு பாரமாதான் இருப்பேன்னு. என் வாழ்க்கை பழைய மாதிரி மாறும்ங்கிற நம்பிக்கை எனக்கு துளிகூட இல்லை!” என்று அவள் ஆதங்கத்தில் கொட்டித் தீர்க்க,
     “மாறிட்டா!” என்றான் அவளைத் தீர்க்கமாய் பார்த்தவாரே.
     “மாறிட்டா?!” என, சற்றே தடுமாறியவள்,
     “அ அது எப்படி முடியும்?! என் நோயைப் பத்திதான் உங்களுக்குத் தெரியுமே?! நான் எப்படியும் செத்துத்தானே போகப் போறேன். கொஞ்சம் கொஞ்சமா என்னோட தசைகள் வலுவிழந்து அதோடு செயல்பாடுகளை ஒருநாள் மொத்தமா நிறுத்திக்கும் தானே?” என்று அவள் மனமுடைந்து கேட்க,
     “அப்படின்னு யார் சொன்ன?!” என்றான்.
     “யார் சொல்லணும்? எனக்குத் தெரியும்” என்றாள்.
     “இந்த நோயால் பாதிக்கப்பட்ட எல்லோருமே அந்த நிலைக்குப் போவாங்கன்னு நிச்சயம் இல்லை! அதே சமயம், நல்ல ஆரோக்கியமா இருக்கிறவங்களுக்கும் கூட அடுத்த நொடி இந்த உலகத்துல நிச்சயம் இல்லை. பிறந்த எல்லோருமே ஒருநாள் சாகத்தான் போறோம்! அதுக்காக எல்லோரும் நாம சாகத்தானே போறோம்னு அவங்களோட வேலைகளை, கடமைகளை செய்யாமயா இருக்காங்க?!” என, அவள் இப்போது அமைதியாய் அவனைப் பார்த்தாள்.
     “உன்னால முடிஞ்ச முயற்சியை நீ செய். பலன் கண்டிப்பா கிடைக்கும். நாம வாழுற காலம் வரைக்கும் மத்தவங்களைக் கஷ்டபடுத்தாம, எதிர்பார்க்காம வாழப் பழகிக்கணும். புரியுதா?” என்று அவன் அவள் கண்களைப் பார்க்க, என்ன புரிந்ததோ அவளுக்கு, ஆனால் இத்தனை நேரம் இருந்த பிடிவாதம் காணமல் போயிருக்க,
     “ம்!” என்று தலையாட்டினாள் சாவி கொடுத்த பொம்மையாய்..
     “சரி இப்போ பயிற்சி செய்வோமா?” என,
     ‘மறுபடியும் முதலயிருந்தா!’ என்று எண்ணியபடி அவனைப் பாவமாய்ப் பார்த்தவள்,
     “ஆனா ரெம்ப வலிக்குதே!” என்று சிறுபிள்ளை போல் உதடுகள் துடிக்க, கண்கள் கலங்க மொழிய, அவனுக்கு ஏதோ போல் ஆகிவிட்டது.
     சக மனிதனாய் அவள் வலியின் கொடுமையை அவனால் தன் உடலால் உணரமுடியாவிட்டாலும், மனதார உணரத்தான் முடிந்தது. ஆனாலும், இப்போது விட்டுக் கொடுத்தால் அவள் மறுபடியும் சோம்பல் கொண்டு ஏமாற்றுவாள் என்று புரிந்தது. அதனால்,
     “சரி ஒரு அஞ்சு முறையாச்சும் எல்லா பயிற்சியையும் செய்துடு! நாளைக்கு அதிகாலையில் இருந்து ஒவ்வொரு பயிற்சியையும் பத்து, பத்து முறை பண்ணனும் சரியா” எனக் கேட்க,
     “ம்!” என்று தலையாட்டினாள் அவன் கண்களைப் பார்த்தபடியே சின்னதாய் வேர்விட்ட நம்பிக்கையோடு!
                                              -மான்விழியாள் வருவாள்…     
       
    
    

Advertisement