Advertisement

                             7
     “யாரு போன்ல?!” என்றபடியே அறைக்குள் நுழைந்தவன் கையில் தங்கமலர் சமைத்திருந்த சம்பாகோதுமை ரவை உப்புமாவையும் தேங்காய்ச் சட்டினியையும் சுடச்சுடச் தட்டில் வைத்து எடுத்து வருவதைப் பார்த்து,
     “வாவ் சம்பா ரவை உப்புமாவா?! என்ன வாசம்!” என்றவள், 
     “மையுதான்டா! நேத்து நைட் உன்னை அனுப்ப வேண்டாம்னு மெசேஜ் பண்ணி இருப்பா போல. நான் இப்போதான் பார்த்தேன். அதான் கால் பண்ணி கேட்டேன்” என்றாள் ப்ரியா.
     அவள் சொன்ன பதிலில், “ஏன் நான் அவளை என்ன பண்றேனாம்?!” என்று அவன் சட்டென கோபம் கொள்ள,
     “ஏய்! என்னடா அவ இவன்னு மரியாதை இல்லாம?!” என்றாள் ப்ரியா ஆச்சர்யமாய்.
     “சாரி!” என்றவன்,
     “சரி நீ சாப்பிடு” என்று அக்காவிற்கு உப்புமாவைச் சட்டினியில் தொட்டு ஊட்ட,
     “ஏன்டா! அவ ஏதாவது சொன்னாளா?! அவ கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளைதான்! வாய் அதிகம் தான் ஆனா நல்ல பொண்ணுடா!” என ப்ரியா அடுக்கிக் கொண்டே போக,
     “நான் இப்ப ஏதாவது சொன்னேனா? பேசாம சாப்பிடு!” என்றான்.
     “ம்!” என்றவள், ‘எதுக்கு இவன் இவ்ளோ கோபப்படுறான்?! நல்ல வேலை பயிற்சி கொடுக்க போக மாட்டேன்னு சொல்லலையே! அதுவரைக்கும் சந்தோஷம்!’ என்று மனதை தேற்றிக் கொண்டாள்.
                             *******
     மறுநாள் அவன் வரும் முன்பே அவள் முகம் கழுவி தயாராகி அமர்ந்திருக்க,
     “அவங்களுக்கு இந்த டிரெஸ்ஸை போட்டு விடுங்க. அப்போதான் நான் எல்லா பயிற்சியும் ஒழுங்கா கொடுக்க முடியும்.” என்றான் சாந்தியிடம்.
     அவன் கொடுத்த அந்தப் புத்தம் புதிய கவரில் இரு ட்ராக் மற்றும்  டீசர்ட் இருக்க, சாந்தி அவனை வித்தியாசமாக பார்க்க,
     “ப்ரியா அக்கா தான் கொடுத்து அனுப்பினாங்க! ஏற்கனவே ரெண்டு நாளாக கைகளுக்கும் கால்களுக்கும் மட்டும்தான் பயிற்சி சொல்லி கொடுக்கறேன். லேடீஸ் சொல்லிக் கொடுத்தா பரவாயில்லை. ஆனா” என்றவன் நிறுத்திவிட,
     “புரியுது தம்பி! அந்த பிரியா கண்ணுக்குத்தான் என் பொண்ணு மேல எவ்ளோ அக்கறை?!” என்றபடியே அவர்,
     “ஏய் டிரெஸ்ஸை மாத்திக்கோடி வா?!” என,
     “அய்யோ அம்மா!” என்று அவள் தலையில் அடித்துக் கொள்ள, அவன் சட்டென வெளியேறிவிட்டான்.
     ‘என்ன இவங்க இவ்ளோ பெரியவங்களா இருக்காங்க கொஞ்சம் கூட இங்கிதம் தெரியலை!’ என்று எண்ணியபடியே.
     நீண்ட வருடங்களுக்குப் பின் புதுத்துணியின் நறுமணம் அவள் நாசியைத் துளைக்க,
     “ம்! எவ்ளோ நாள் ஆச்சு புதுத்துணி உடுத்தி என்று அவள் ஆசையுடன் அவன் வாங்கி வந்திருந்த துணியை முகர,
     “மணியாகுது இல்லை! நான் வீட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டு கடைக்குப் போக வேணாம் இப்போதான் மோர்ந்து பார்த்துட்டு இருக்க!” என்று அவளை வைய, அவள் தாயின் உதவியுடன் உடையை மாற்றிக் கொண்டாள்.
     காலை ஏழரை மணிக்குள்ளாகவே வீட்டில் இருக்கும் அனைவரும் அவரவர் வேலைக்குக் கிளம்பிவிட, சாந்தி மட்டும் மற்ற வீட்டு வேலைகளை முடித்துவிட்டு கடைக்குச் செல்வார். அன்று கடைக்கு ஆர்டர் அதிகமாக வந்திருந்தபடியினால் துணியைக் கூட துவைக்காமல் தம்பி நீங்களே அவளுக்குப் பயிற்சி கொடுத்துடுவீங்க இல்ல? கடையில் நிறைய துணி இருக்கு. தைக்கப் போகணும்!” என,
     ‘என்னமோ நேத்து மட்டும் இவங்க கூட இருந்து பார்த்துக்கிட்ட மாதிரி பேசுறாங்க?!’ என்று நினைத்தவன்,
     “ம்” என்றான்.
     பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தவன், சாந்தி கிளம்பிய சிறிது நேரத்திற்குப் பின், “இப்போ கம்ஃபார்டபிலா இருக்கா?” என்றான்.
     “ம்!” என்று அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
     “ம்!” என்று தலையசைத்து,
     “நி நீங்கதானே இந்த டிரெஸ்ஸை வாங்கிட்டு வந்தீங்க?!” என்றாள் மெல்லிய தயக்கத்துடன்.
     “இல்லை ப்ரியாக்கா தான் வாங்கிக் கொடுத்தாங்க.” என்றான் அவன் பொய்யைச் சரியாகச் சொல்லத் தெரியாமல்.
     “ப்ரியாக்கா அடிபட்டு வீட்ல இருக்காங்க! அப்புறம் அவங்க எப்படி வாங்கிக் கொடுத்திருப்பாங்க?!” என்று அவள் சரியாக பாயிண்டைப் பிடிக்க,
     “அ அது வந்து அமேசான்ல ஆர்டர் பண்ணி வாங்கிக் கொடுத்தாங்க” என்றான் லேசாய்த் தடுமாறி.
     “அதெப்படி உங்களுக்கு மட்டும் அமேசான்ல ஆர்டர் பண்ண அடுத்த நாளே டெலிவரி பண்ணிடுவாங்களா?!” என்று அவள் கேட்க,
     “இப்போ யார் வாங்கிக் கொடுத்தா என்ன?! ரெண்டு நாளா எவ்ளோ கஷ்டப்பட்டீங்க பயிற்சி பண்ணும்போது! வாங்கிக் கொடுத்தா போட வேண்டியதுதானே! அதை விட்டுட்டு நைநைன்னு கேள்வி கேட்குறீங்க?!” என்று அவன் சிடுசிடுவென பொரிய,
     “தேங்க்ஸ்!” என்றாள் அவள்.
     “எதுக்கு?!”
     “இல்ல நான் புது துணி போட்டு ரொம்ப வருஷம் ஆகுது! வீட்ல கிடக்குறவளுக்கு எதுக்கு புது துணின்னு எடுக்குறதே இல்லை! தீபாவளி பொங்கலுக்குக் கூட, ஒரு நைட்டி கூட புதுசா போட்டு நாளாகுது! இன்னிக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு! தேங்க்ஸ்” என்றாள் மறுபடியும்.
    அவனுக்கு என்ன மாதிரி ரியாக்ட் செய்வதென்றே புரியவில்லை! ‘வீட்டுக்குள்ள இருந்தா புதுத் துணி போடக் கூடாதா?’ மனம் பாரமாகி போக, எதுவும் பதில் சொல்ல முடியாது,
     “சரி ஒழுங்கா பயிற்சி பண்ணுங்க” என்றான்.
     “ம்” என்றவள், இரண்டு நாட்களாக வெறும் கைகால்களுக்கு மட்டும் கொடுத்த பயிற்சியோடு, இன்று இடுப்பு கழுத்து என்று எல்லா பயிற்சியையும் அவன் பொறுமையாக சொல்லிக் கொடுக்க, அவளும் அவன் சொன்னபடி செய்தாள்.
     சட்டென ஏதோ நினைவு வந்தவனாய், “நேத்து சாயந்திரமும், இன்னிக்கு அதிகாலையும் பயிற்சி செய்தீங்களா?!” என,
     “ம்!” என்று அவள் சிரித்தபடி விழிக்க,
     “அறிவில்லை உனக்கு? இப்படியே உட்கார்ந்து இருக்கப் போறியா காலத்துக்கும்?! சொன்ன மாதிரி செய்ததானே உன் வேலையையாச்சும் நீயே செய்துக்குற அளவுக்கு முன்னேற முடியும்?! நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா, நான் தினமும் எல்லா வேலை வெட்டியையும் விட்டுட்டு வந்து உனக்கு சொல்லிக் கொடுத்துட்டு இருக்க முடியுமா வருஷக் கணக்கா” என்றான் கோபத்துடன்.
     அவன் கோபத்தில் ஒருமைக்கு தாவி இருந்ததை அவனும் உணரவில்லை! அவளும் கவனிக்கவில்லை! ஆனால் உண்மையில் அவனது கோபத்தில் மிரண்டுதான் போயிருந்தாள்.
     “ம் அது அது வந்து.” என்று அவள் திணற,
     “இன்னிக்கு முதல் ஒழுங்கா சொன்னபடி பயிற்சி செய்யலை?!” என்று மிரட்டலாய் நிறுத்த,
     ‘ன்னா ன்னா பண்ணுவ?!’ என்றாள் மனதுக்குள், அவள் பயிற்சி செய்யாததற்கு தண்டனையை அவன் நாளை அல்ல இன்றே கொடுக்க முடிவு செய்துவிட்டதை அறியாமல்.
     “ஒவ்வொரு பயிற்சியையும் இருபது முறை பண்ணு!” என்று சர்வ சாதரணமாய்ச் சொன்னவன் அருகே இருந்த நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு அமர்ந்து கொள்ள,
     ‘என்ன ஒரேயடியா பத்துல இருந்து இருபது முறையா?!’ என்று முனகியவளுக்கு வாயைத் திறந்து கேட்கத்தான் தைரியம் வரவில்லை!
      அவள் ஒழுங்காக பயிற்சி செய்கிறாளா என்று அவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க,
     ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானேடா உன்னை நல்லவன்னு நினைச்சேன்! இல்ல இல்ல நீ ஹீரோலாம் இல்லை! வில்லன்! வில்லாதி வில்லன்!’ என்று அவனை அர்ச்சித்தபடியே அவள் வலியைப் பொறுத்துக் கொண்டு பயிற்சி செய்ய,
     அவள் செய்து முடிக்கும் வரை பொறுமையாய் பார்த்திருந்தவன், கிளம்பும் முன், “சாயந்திரமும் அதிகாலையும் ஒழுங்கா பயிற்சி பண்ணனும். நீ பயிற்சி பண்ணலைன்னு நீயா சொன்னாதானே எனக்கு தெரியும்னு தப்புக் கணக்குப் போட்டுடாத, உன் தசையோட தன்மையை வச்சே கண்டு பிடிச்சிடுவேன். அதோடு நீ பயிற்சி பண்றதை வீடியோ எடுத்தும் அனுப்பனும் அக்காக்கு” என்றுவிட்டு அவன் வெளியேற, கொலைவெறியுடன் அவனைப் பார்த்திருந்தாள்.
     சென்றவன், மீண்டும் தலையை மட்டும் பின்னே நீட்டி அவளைப் பார்த்து, “நாளைக்கு இருபது நாற்பதாகனும்னு ஆசைபட்டா செய்யாத” என்று அலுங்காமல் குலுங்காமல் குண்டைத்தூக்கிப் போட்டுவிட்டுச் செல்ல, ‘ஹேன்!’ என்று உதடுபிதுக்கி வாய்விட்டு அழத் தயாராகும் சின்ன பிள்ளையாய் அவள் நிலை மாறிப்போனது.
     ‘எங்கிருந்து வந்தயா டாக்டரு?
     உன்னோடு பெரிய பேஜாரு!
     தினமும் நீ கொடுக்கும் அக்கபோரு!
     அது இல்லனா நானும் செம ஜோரு!’
     என்று ஒரு டாக்டர் பொம்மையை எடுத்து மீம்ஸ் உருவாக்கி அவள் முகநூலில் பதிவிட, அவள் நட்பூக்களும், மற்றவர்களும், வந்து டாக்டரையும் அவளையும் கேலி செய்ய அவள் நேரம் எப்போதும் போல் முகநூல் அரட்டையில் கழிந்தது.
     “டாக்டர், நீங்க செமையா ஹீரோ மாதிரி இருக்கீங்க?!”
     “ஓ! எந்த ஹீரோவை ரொம்பப் பிடிக்கும்?!”
     “சத்தியமா உங்களை இல்லை!” என்றும் சில பல மீம்ஸ்களை உருவாக்கி அவள் தனது முகநூல் பக்கத்தில் அவனைப் பற்றிப் பதிவிட்டுக் கொண்டே செல்ல அவளது நேரம் ஜோராய்ப் பறந்தது அன்றும் அவளது பயிற்சியை மறக்கடித்து!
                                   *******
     “ப்ரியா! எப்படிம்மா இருக்க?!” என்று மனோகர் அன்பும் குற்றஉணர்ச்சியும் சேர்ந்த தொனியில் கேட்க,
     “எனக்கென்ன ப்பா?! பெரியம்மாவும் பெரியப்பாவும் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கறாங்க?! நீங்க என்ன திடீர்னு என் ஞாபகம் வந்து போனெல்லாம் பண்ணி இருக்கீங்க?!” என்றாள் ப்ரியா. அதில் இப்போதெல்லாம் முன்பிருக்கும் ஏக்கம் இல்லை!
     “இல்லடாம்மா! இப்போ உடம்பு பரவாயில்லையா?! வலி எல்லாம் எதுவும் இல்லையே?!” என்றார் மீண்டும்.
     “உடம்பு வலி பரவாயில்லை பா” என்றவள்,
     ‘ஆனா நீங்க என்னை இப்போ கூட பார்க்க வரலை இல்லை?!’ என்று எண்ணிக் கொண்டவள்,
     “என்ன விஷயமா போன் பண்ணீங்கன்னு சொல்லுங்க?!” என்றாள்.
     “அது வந்தும்மா, உனக்கு உன் கல்யாணத்துக்கு அப்பாவுக்கு நிறைய செய்யணும்னு ஆசை. ஆனா, ஆனா.”
     “சித்திக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும் இல்லப்பா?!” என்று நக்கலாய்க் கேட்டவள்,
     “பரவால்ல ப்பா! நீங்க எதுவும் செய்ய வேணாம்!” என்றாள்.
     “அப்படி இல்லடாம்மா” என்று அவர் ஏதோ சொல்ல வர,
     “இருக்கட்டும்ப்பா. நீங்க உங்க உடம்பைப் பத்திரமா பார்த்துக்கோங்க! என்னை நினைச்சு எந்தக் கவலையும் படவேண்டாம். போனை வச்சுடட்டுமா?” என்று அவள் போனை வைத்துவிட, மனோகருக்கு ஏதோ போல் ஆனது.
     மனைவி மீது கோபம் எழுந்தாலும், அவர் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக, அவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஆடிக் கொண்டிருந்தார் மனோகர்.
     “உங்க அண்ணன் அண்ணிகிட்ட என்ன பணமா இல்லை! அதான் அவங்களே சொல்லிட்டாங்களே, எங்க பொண்ணுக்கு நாங்க என்ன செய்யணுமே அதை நாங்களே செய்துக்குவோம்னு, அப்புறம் எதுக்கு கிடந்து அடிச்சுக்கறீங்க?!” என்ற வத்சலா,
    “போதும் வேலையைப் பாருங்க!” என்று மகளுக்காய் அவர் கவலைப்படுவதற்குக் கூட நேரம் கொடுக்காது அவரை வேலைக்கு விரட்டினார்.
     மனோகரின் போனைத் துண்டித்தவளுக்கு அழுகை பார்வையை மறைக்க, அவளது கைபேசியின் அழைப்பில் வந்த எண்ணைக் கூட யாருடையதென்று பார்க்காமல் அதை அட்டென்ட் செய்து,
     “ஹலோ!” என அவளது குரலில் தெரிந்த மாற்றத்தை அவன் சட்டென கண்டுகொண்டான்.
     “மேம்! என்ன ஆச்சு?! ஏன் அழறீங்க?!” என்று அவன் கேட்ட பிறகே, அவளுக்கு அது பிரேம் என்பது புரிய,
     ‘பெத்த தகப்பனுக்கு மக அழுறது புரியலை, ஆனா இவன் எடுத்த எடுப்பிலேயே நான் அழறேன்னு கண்டுபிடிச்சிட்டானே?!’ என்று அவள் எண்ண,
     “மேம்! என்னாச்சு மேம்?! மறுபடியும் வலிக்குதா மேம்?! அதுக்குதான் இன்னும் கொஞ்ச நாள் ஹாஸ்பிட்டல்லயே இருந்து போங்கன்னு சொன்னேன்! நீங்கதான் கேட்கலை!” என்று உரிமையோடு கோபம் கொள்ள,
     “இல்லை வலியெல்லாம் இல்லை!” என்றவள்,
     “என்ன விஷயமா கால் பண்ணீங்க பிரேம்? ஏதவாது பேஷன்ட் பத்தி விசாரிக்கணுமா?!” என,
     “ஏன் மேம் நான் பேஷன்ட் பத்தி விசாரிக்கனும்னா மட்டும்தான் உங்களுக்கு கால் பண்ணனுமா? உங்களைப் பத்தி விசாரிக்கக் கூப்பிடக் கூடாதா?!” என்று வருத்தமாய்க் கேட்க,
     “அப்படி எல்லாம் இல்லை! நீங்களாச்சும் என்னைப் பத்தி அன்பா விசாரிக்க கால் பண்ணீங்களே?!” என்று அவள் தன் தந்தையிடம் பேசிய விரக்தியில் சொல்லிவிட,
     “மேம்! ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?! நான் இருக்கேன் மேம் உங்களுக்கு. ஐ மீன் நாங்க எல்லோரும் இருக்கோம் மேம்! இனி இப்படி எல்லாம் பேசவே கூடாது நீங்க?” என்று உரிமையோடு கடிந்து கொள்ள,
     “ம்!” என்று மெலிதாய் சிரித்தாள் அவள்.
     “நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும் மேம். அப்போதான் மித்ரன் சாருக்கும் சரி எனக்கும் சரி ரொம்ப சந்தோஷமா இருக்கும்” என்று அவன் சொல்ல,
     “மித்ரன் என் தம்பி அவனுக்கு என் சந்தோஷம் முக்கியம். உங்களுக்கு என்ன?!” என்று அவள் தேவையில்லாமல் வாயைக் கொடுக்க,
     “அவ உங்க தம்பிதான் மேம். ஆனா நீங்க என்னோட உயிர் மேம்” என்று அவன் பட்டென தன் காதலை உடைத்துவிட,
     “வாட்?!” என்றாள் ப்ரியா தன் அதிர்வை வெளிப்படையாய் காட்டி.
     “இதுக்குமேலயும் நான் இதை சொல்லாம இருந்தா எங்க நீங்க என்னை விட்டு ஒரேயடியாக போயிடுவீங்களோன்னு பயமா இருக்கு மேம்! ஐ லவ் யூ மேம்! ஐ லவ் யூ சோ மச்!” என்றவனை இடைமறித்த ப்ரியா,
     “நீங்க யார்கிட்ட பேசுறீங்கன்னு தெரிஞ்சுதான் பேசுறீங்களா பிரேம்?! நான் உங்களுக்கு சம்பளம் கொடுக்குற முதலாளியோட பொண்ணு! என்கிட்ட நீங்க இப்படிப் பேசுறது எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா உங்க நிலைமை என்னவாகும்னு யோசிச்சு பார்த்தீங்களா?!” என்றாள் ப்ரியா சற்று காட்டமாகவே!
     அவன் தன்னை விரும்புகிறான் என்று அவனது செயல்கள் மூலம் அவள் அறிந்து கொண்டிருந்தாலும், தனக்குத்தான் திருமணம் ஆகப் போகிறதே, அதன் பின் தன்னால் அவன் தன்னை மறந்துவிட்டு தன் வாழ்வைப் பார்த்துக் கொள்வான் என்றும், அதனை பெரிது படுத்தி அவன் வேலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்திவிடக் கூடாது என்றும் அவள் அமைதி காத்தாள். காரணம், அவனது குடும்பச் சூழ்நிலை அவளுக்கு ஓரளவு தெரிந்திருந்ததனால். ‘ஆனால், ஆனால் இன்று இவன் இப்படி இவ்வளவு தைரியமாய் தன்னிடம் நேரடியாகவே சொல்கிறான் என்றால், எவ்வளவு தைரியம் இருக்கும்?!’ என்று அவளுக்கு கோபம் எழுந்தது.
     “நீங்க சொன்னதானே மேம் அவங்களுக்குத் தெரியும். நீங்க சொல்ல மாட்டீங்க மேம்! ஏன்னா உங்களுக்கும் என்னைப் பிடிக்கும்” என,
     “வாட் நான்சென்ஸ்?!” என்றாள் குரல் உயர்த்தி.
     “எஸ் மேம்! நீங்களும் என்னை விரும்பறீங்க?! உங்க மனசைத் தொட்டு சொல்லுங்க?! நீங்க அந்த நகுலனை நினைச்சுப் பார்த்ததை விட என்னைத்தானே அதிகமா நினைச்சிருக்கீங்க?!” என்று அவன் அவள் மனதைப் படம் பிடித்தாற்போல் சொல்ல,
     “டோன்ட் டாக் ரப்பிஷ் ப்ரேம்!” என்று பட்டென போனைத் துண்டித்தவளுக்கு, ஏதோ யாரிடமோ மாட்டிக் கொண்டது போல் ஓர் உணர்வு.
     ‘நான் நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்?! எனக்கு நிச்சயதார்த்தம் ஆகிடுச்சு?! ஆனா இவன் இவன் சொல்றது மாதிரி நகுலனை விட, இவன்தானே அடிக்கடி என் ஞாபகத்துல வரான்?! அது ஏன்?! நான் நான் ஒருவளை இவனை லவ் பண்றேனோ?!’ என்று ப்ரியா திசை மாறி சிந்திக்க, அங்கு அவளது வீட்டில் உள்ள சொந்தங்கள் அவளுக்காய் பார்த்துப் பார்த்து ஆர்டர் செய்திருந்த நகைகளையும் உடைகளையும் அவளுக்காய் வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தனர் அவள் திருமணத்திற்காய்…
                                                 -தொடரும்…  
    
    
 
    
         
    
    
     
    
          

Advertisement