Advertisement

                                                             

     மூணாறு பயணம் வெகு ஜோராக ஆரம்பித்தது அவர்கள் வாழ்வில் புது விடியல் தரப்போகும்  நன்னாளாய். 

     சிறு சிறு மலையின் சின்ன ஓடைகளுக்கு இடையே மர வீடுகள் அமைக்கப்பட்டு, அதில் ஒரு குடும்பம் தங்கும் அளவிற்கு தேவையான எல்லா வசதிகளும் செய்யப் பட்டிருக்க, மையுவிற்கு அந்த இடத்தைப் பார்த்ததும் அத்தனை ஆனந்தம்.

     “ஆனா எப்படிங்க இந்த வீட்டுக்குள்ள போக முடியும்? சின்னப் பாதையா இருக்கே?!” என்று பயத்துடன் சொன்னவளைப் பார்த்துச் சிரித்த மித்ரன்

     “இதோ இப்படிதான்!என்று மையுவைத் தூக்கிக் கொண்டவன், கீர்த்தியிடம் பிள்ளையையும் தூக்கித் தோளில் அமர வைக்கச் சொன்னான்.    

     வந்திருந்த அனைவருக்கும் குடும்பம் குடும்பமாக தங்க ஒவ்வொரு வீட்டை ஏற்கனவே புக் செய்திருந்த மித்ரன், அனைவரும் அதில் சென்றதும் அவரவர்களுக்குத் தேவையான உணவை போன் மூலம் ஆர்டர் செய்து கொள்ளச் சொன்னான். மற்றவர்கள் அவரவர் குடிலுக்குச் செல்ல, இவர்கள் மூவரும் தங்களுக்கான குடிலுக்குள் சென்றனர்.

     “செம்ம அழகா இருக்குங்க இந்த இடம் வாழ்க்கை பூரா இந்த இடத்துலேயே இருந்துடணும் போல இருக்கு!என்று மையு சந்தோஷிக்க,

     “பிள்ளைங்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி செட்டில் பண்ணிட்டு நாம ரெண்டு பேரும் மட்டும் இங்க வந்து வாழ்க்கை பூரா தேன்நிலவு கொண்டாடலாம்!என்று கண்ணடித்தவனின் கன்னத்தைக் கிள்ளியவள்

    “ரொம்பத்தான்!என்றாள் வெட்கத்தோடு.

    இரண்டு நாட்கள் சுற்றுலா முடிவடைந்த நிலையில், கரடு முரடான மலைப்பாதையில் கூட மனைவியை நடக்கவிடாமல் கையிலேந்தியே உலா வரும் தன் அன்புக் கணவனுக்கு இன்னனும் அவன் ஆசைப்படி ஒரு குட்டி மானும்மாவைக் கொடுக்க முடியவில்லையே என்ற அவளின் வருத்தம் நீங்க அன்று அவர்கள், தங்கள் ஊருக்குக் கிளம்ப பஸ்ஸில் ஏறி அமர்ந்த சமயம், அவளுக்கு லேசாய்த் தலைச்சுற்றியது. 

     “எ என்னங்க லேசா தலை சுற்றுற மாதிரி இருக்குங்க!என்ற மையு,

     “கொஞ்சம் சுடு தண்ணி கொடுக்கறீங்களா?!” என, பிளாஸ்கில் இருந்த சுடுநீரை ஊற்றிப் புகட்டியவன்

     “என்னடாம்மா பண்ணுது?! ஹாஸ்ப்பிட்டல் போலாமாஎன்று அவள் தலையை வருடிக் கொடுக்க,

     “என்ன ஆச்சு மித்ரா?!” என்றபடி அருகே வந்தான் கிருஷ்ணன்.

     “தலை சுத்துற மாதிரி இருக்குங்கறா!என்று மித்ரன் சொல்ல, அவளது கண்களைப் பரிசோதித்துப் பார்த்தவன், நாடித் துடிப்பையும் சரி பார்க்க, அது இரட்டை நாடியாய்த் துடித்தது.

     சட்டென அவனின் மலர்ந்த முகம் மையுவிற்கு எதையோ உணர்த்த,

     “அட பாப்பாவா இருக்குமா?! ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்ச் தள்ளித் தள்ளிப் போய் ஏமாந்து போனதுனால இந்த முறையும் அப்படி நினைச்சே கேர்லேசா இருந்துட்டேனே?!”

     “அச்சோ இப்போ இவ்ளோ தூரம் ட்ராவல் வேற பண்ணி வந்திருக்கேனே?!” என்று மையு நொடிகளுக்குள் ஏதேதோ நினைத்து சந்தோஷமும் கவலையும் கொள்ள,

     “கங்க்ராட்ஸ்டா மித்து?!” என்று கிருஷ்ணன் அவன் தோள் தட்டிவிட்டுச் செல்ல,

     “ஏய் மானும்மா?!!” என்று உற்சாகத்தில் கத்தியே விட்டான் மித்ரன்.

     அவனின் உற்சாகக் குரல் கேட்டு மற்றவர்களும் அவர்கள் புறம் திரும்ப, மலர் மருமகளை தன்னோடு அணைத்துக் கொண்டு,

     “என் தங்கப் பொண்ணுக்கு இனி எல்லாம் நல்லதே நடக்கும்என்று மனதார வாழ்த்தி முத்தமிட்டார்.

     சில நிமிடங்கள் அங்கு அனைவரின் உள்ளங்களிலும் சந்தோஷம் பெருக்கெடுக்க அதை அனுபவித்தவர்கள், இந்த நிலையில் மையு அவ்வளவு தூரம் பேருந்தில் பயணம் செய்யலாமா என்று கேள்வி எழுப்ப,

     “நீங்க கவலையே படாதீங்க சார், எப்படி அலுங்காம குலுங்காம பத்திரமா உங்களை இங்கக் கூட்டிட்டு வந்தேனோ அதே போல  பத்திரமா கொண்டு போய் உங்க வீட்ல சேர்த்துடறேன்.என்று டிரைவர் வாக்கு கொடுக்க,

    “ஆமாம்! என் மருமக மலை போல நம்புற அந்த ஈசன் அவளுக்கு பாதுக்காப்பு அரணா இருந்து அவளை வழி நடத்துவான்.என்று மலரும் நம்பிக்கையோடு சொல்ல, சென்னைத் திரும்பும் பயணம் இனிதாய் துவங்கியது…

                         *****

     “ஹ! ஆஆஆஆ!!! என்னங்க….!!!!என்ற கதறலுடன் அவனின் கையை இறுகப் பற்றியபடி தங்களின் அழகிய பொற்தாமரையை ஈன்றெடுத்த மனைவியை ஆறுதலாய் வருடி, அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்ட மித்ரன்,

     தனது மானும்மாவைப் போலவே அச்சு அசலாய் உதட்டின் மேல் குட்டி மச்சத்துடன், கருத்த கருங்குழலியாய் அவதரித்திருந்த தனது  குட்டி மானும்மாவை மெய் சிலிர்க்க தானே முதன்முதலில் கையில் தன் ஏந்தி வந்து அவளிடம் காண்பிக்க

     “ஹ உ உங்க குட்டி மானும்மா!என்று கண்கள் கலங்க புன்னகைத்த மையு, அளவில்லாப் பரவசத்துடன் தனது தேவதையை முகத்தோடு முகம் உரசிக் கொஞ்சி மகிழ்ந்து முத்தம் பதித்து மீண்டு,

     “வே வேந்தன் எங்கங்க?!” என்றாள்.

     “இதோ வெளிலதான்டா அம்மாவோட இருக்கான். கூட்டிட்டு வரேன்என்று அவன் நகரப் போக,

     “மித்ரன் வார்டுக்கு ஷிப்ட் பண்ணதும் கூட்டிட்டு போய்க் காண்பிங்கஎன்றார் அந்தப் பெண் மருத்துவர்.

     “ம் சரிங்க டாக்டர். குழந்தையை மட்டும் காண்பிச்சிட்டு வந்துடறேன்.என்று அவன் பிள்ளையை எடுத்துக் கொண்டு செல்ல மையுவின் பார்வை சிரித்தபடியே அவனைத் தொடர்ந்தது.  

     வெளியே ராஜசேகர் உட்பட, குடும்பத்தினர் அனைவருமே மையு, மித்ரனின் செல்வப் புதல்வியைக் காணக் காத்திருக்க, தன் தங்கையைப் பார்த்ததும், வேந்தன் மகிழ்வில்,

     “ஐ அம்மா சொன்ன தங்கச்சி பாப்பா வந்துட்டாஎன்று ஆசையோடு அவளைக் கையில் வாங்க எத்தனித்துத்  துள்ளித் துள்ளிக் குதித்தபடி ஓடி வந்து பிள்ளையைக் கையில் வாங்கப் போக,

     “ஓ! என் தங்கமே பாப்பா குட்டியா இருக்கால்ல! இன்னும் கொஞ்சம் பெரியவளான பிறகு நீங்க தூக்கிக்கலாம்என்று மலர் எடுத்துச் சொல்ல சமத்தாய்க் கேட்டுக் கொண்ட வேந்தன், தாயைச் ஸ்ட்ரெச்சரில் வெளியே அழைத்து வருவதைப் பார்த்து அவளிடம் ஓடிவிட,

     மித்ரனும் மகளைத் தாயிடம் கொடுத்துவிட்டு மனைவியிடம் ஓடினான்.

     “பார்த்தியாடி குட்டிம்மா உன் அப்பாவும் அண்ணனும், உன் அம்மாவைப் பார்த்ததும் அங்க ஓடிட்டாங்கஎன்று மலர் செல்லமாய் பேத்தியிடம் போட்டுக் கொடுக்க,

     “எ என்னங்க பாப்பாவையும் இங்கத் தூக்கிட்டு வாங்களேன்என்ற மையுவிடம், மலர் பிள்ளையைக் கொண்டு வந்து கொடுக்க, ஒருபுறம் மகளையும் ஒருபுறம் மகனையும் மையு முத்தமிட்டு

     “எ என்னங்க ஒரு செல்பி ப்ளீஸ்என,

     “இவ இருக்காளே?” என்று சிரித்தபடியே மனைவி பிள்ளைகள், தாய், தந்தை, தன் குடும்பம் அனைவருடனும் சேர்ந்து மித்ரன் செல்பி எடுக்க அந்த அழகானத் தருணமும் சிறந்த புகைப்படமாய் அவளது கைபேசியில் இடம்பெற்றது.

                         *****

     “டேய் மலரண்ணா. பர்த்டே எனக்குதான நீ ஏன்டா இவ்ளோ நேரமா ரெடி ஆகுற?!” என்று கருங்குழலி அண்ணனை நச்சரித்துக் கொண்டிருக்க,

     “ஏய் குழலி! என்னை மலர்னு கூப்பிடாதன்னு எவ்ளோ வாட்டி உனக்கு சொல்லி இருக்கேன்என்று ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் வேந்தன் முறைக்க,

     “போ! நீ லேட் பண்ணா அப்படிதான் கூப்பிடுவேன் மலரண்ணா, மலரண்ணாஎன்று அவள் மறுபடியும் வம்பிழுக்க

     “ம்மா!!!!பெருங்குரலெடுத்துக் கத்திய வேந்தன்,

     “ம்மா!! இவ பாரும்மா இன்னிக்கு என் கிளாஸ் மெட்ஸ்லாம் வருவாங்க! அவங்க முன்னாடி இவ மலர்ன்னு கூப்பிட்டா அவளை அடிச்சிடுவேன் ஆமாஎன்று தாயிடமே மிரட்டலாய் முறையிட,

     “ப்பா?!!! அண்ணா என்னை அடிப்பேன்னு சொல்றான்என்று மூன்றாம் வகுப்புப் பயிலும் குழலியும் தந்தையிடம் முறையிட,

     “தம்பிப்பா பாப்பாவை அடிப்பேன்னு சொல்லலாமா? தப்புல்லஎன்று அன்னையும்,

     “அம்மும்மா! அண்ணாதான் பிடிக்கலைன்னு சொல்றான்ல. அப்புறம் ஏன் நீங்க வேந்தன் அண்ணான்னு கூப்பிடாம மலர்ன்னு  கூப்பிட்டு கோபப்படுத்தறீங்க?” என்று தகப்பனும் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லி ஒருவழியாய் சமாதானம் செய்து பிறந்தநாள் கொண்டாட்டத்தை வெகு சிறப்பாய் ஆரம்பித்து வைக்க, பிள்ளைகள் வெகு ஆர்பாட்டமாய் ஆடிப் பாடி விழாவை உற்சாகமாய் சிறப்பித்துக் கொண்டிருந்தனர். 

     திருமணமாகி போயிருந்த மித்ரனின் தங்கை கீர்த்தியும், மையுவின் தங்கை காயத்ரியும் தத்தம்  தனது கணவன்மார்களுடனும், மகன், மகளுடனும்  விழாவிற்கு வந்திருக்க, இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததில் மனம்விட்டு தங்கள் மாமியார் வீட்டுக் கதைகளை பேசிக் கொண்டிருந்தனர்.

     இத்தனை வருடத்தில் ப்ரியாவும் நிறைய மாறி இருந்தாள். அப்பா, கணவன் பற்றியெல்லாம் யோசித்து யோசித்துக் கவலைப் பட்டுக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, தனது மகள் ப்ரியநிலாவும், மற்றவர்களும் கொடுக்கும் அன்பிலேயே சந்தோஷமாய் வாழப் பழகியிருந்தாள் எதற்கும் ஏங்காமல். 

    சாரு, சரத்தைக் கொஞ்ச நாள் தனியாக விட்டுட்டு அம்மா வீட்டில் இருந்து கற்றுக் கொடுத்த பாடமே சரத்தையும் ஓரளவு மாற்றியிருந்தது. இப்போதெல்லாம் அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருப்பதோடு சரி.

     மையுவின் அம்மா சாந்தி எப்போதும் போல் பெற்ற பெண்களைப் பிடிக்கும் என்றாலும் மகனையும் மருமகளையும் தூக்கிக் வைத்துக் கொண்டாடும் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை! அனால் மகள்களுடன் வெடுக்கென்று பேசும் குணத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டிருந்தார் மருமகன்களின் மேல் இருந்த பயத்தில்.

    இப்படி எல்லோருடைய வாழ்வும் ஒவ்வொரு விதத்தில் நல்லதாய் மாறி இருக்க, அங்கு நம் நாயகன் நாயகியும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்போமா?!

     கேக் வெட்டிக் கொண்டாடி முடித்த பின் பிள்ளைகள் அனைவரும் கேக்கை ஒரு கை பார்த்துக் கொண்டிருக்க, சற்று நேரத்திற்கு முன் முட்டிக் கொண்டிருந்த அண்ணன் தங்கையோ, அங்கே சோபாவில் அமர்ந்தபடி தங்கைக்கு அண்ணனும், அண்ணனுக்குத் தங்கையும் மாறி மாறி கேக்கை ஊட்டிவிட்டுக் கொண்டிருக்க,

     “நல்லா இருக்கு அண்ணா நீ சாப்பிடுஎன்று குழலி ஊட்டிவிட

     “உனக்குத்தானே பர்த்டே நீயும் சாப்பிடு!என்று வேந்தன் ஊட்ட

     இவர்கள் இருவரையும் கண்கொட்டாமல் ரசித்திருந்த மனைவியின் மையிட்ட மான்விழிகளில் சொக்கிப் போய் விழுந்தபடி அவளையே ரசித்திருந்தான் அவளின் அன்புள்ள மன்னவன். 

     “என்னங்க இவங்க ரெண்டு பேர் பஞ்சாயத்துக்கு மட்டும் நாம போகவே கூடாதுங்க! பாருங்களேன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி முட்டிக்கிட்டது என்ன இப்போ கொஞ்சிக்கிறது என்னன்னு?!” என்றபடியே மையு கணவனின் புறம் திரும்ப, அவன் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது கண்டு, சட்டென சுற்றும் முற்றும் பார்த்தவள்,

    “ய்யோ! என்னங்க பண்றீங்க இவ்ளோ பேர் கூடி இருக்க இடத்துல இப்படி வச்ச கண்ணு வாங்காம என்னையே பார்த்துகிட்டு?!” என்று மையு மெல்லமாய் மிரட்டல் விடுக்க,

     “நான் ஒன்னும் உன்னைப் பார்க்கலைடி!என்றான் அவள் கண்களைப் பார்த்தவாறே.

     “அப்புறம்?!” என்று அவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் அவனை முறைக்க

     “அப்போ யாரைப் பார்க்குறீங்க?” என்றாள் பல்லைக் கடித்து.

     “அதுவா?!” என்றவன்,

     “சொல்றேன் கேட்டுக்கோ! அவ கண்ணு இருக்கே கண்ணு அதுலதான் நான் முதன்முதல்ல விழுந்தது! அந்த அழகான மான்போன்ற கண்கள்தான் இந்த சிடுமூஞ்சி பிஷியோதேரபிஸ்டை அப்படியே மெஸ்மரைஸ் பண்ணிடுச்சு! அவளோட அந்த மருண்ட விழிகள்தான் அவனை அப்படியே அவ பக்கம் சுண்டி இழுத்தது. ஆரம்பத்துல என்னைப் பார்த்து மிரண்ட அந்த  மான்விழிகள் ஒருநாள் என்னைக் கொஞ்சலோடு பார்க்கக் ஆரம்பிச்சப்போ அப்படியே அவ கண்ணுக்குள்ள மொத்தமா கவிழ்ந்துட்டேன். அதுல இருந்து மீண்டு எழவே முடியாம அவ மறுபடியும் மறுபடியும் அந்தப் பார்வையாலேயே என்னைக் கொஞ்சிக் கொஞ்சிக் கட்டிப் போட்டு இன்னும் என்னை விடுவிக்கவே விடுவிக்காம அடிமையா வச்சிருக்க!என்று அவன் சொல்லச் சொல்ல, அவன் வர்ணிப்பில், தனது கருமை நிறத்தையும் மீறி சிவந்தது அவள் முகம்.

     சிறிது நேரம் பொறுமையாய் அவன் வர்ணிப்பை ரசித்திருந்தவள், ஒருகட்டத்தில் காண்டாகி,

     “டேய் தீரா… உன் பொண்டாட்டிகிட்ட வர்ணிக்கிறதுக்கு அவ கண்ணைத் தவிர வேற எதுவுமே இல்லையாடா?!” என்று பல்லைக் கடிக்க,

     “ஏன் இல்லை?!” என்றவன் அவள் காதருகே வந்து ஏதோ சொல்லச் சொல்ல அவளின் முகம் செந்தாமரையாய்ச் சிவந்தது.

     “மச்சான்!! இதெல்லாம் அநியாயம்!! என் பையனுக்கு ஒரு வயசு ஆனதுமே என் பொண்டாட்டி ரொமான்ஸ்னா என்னன்னு கேட்குறா?! நீங்க என்னன்னா?! ம்! ம்! நடத்துங்க! நடத்துங்க!என்று சொல்லிக் கொண்டே கீர்த்தியின் கணவன் அர்ஜுன் அவர்களைக் கடந்து செல்ல,

     “அச்சோ… ஈஸ்வரா!!!என்று மையு நாணத்துடன் விடுவிடுவென எழுந்து உள்ளே செல்ல,

     “மானு மானும்மா…என்றபடியே தனது அன்புள்ள மான்விழியைப் பின்தொடர்ந்து போகலானான்  அவளின் அன்புள்ள மன்னவன்…

     உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்,

     எனக்கொரு பாடம் கேட்டுக் கொண்டேன்.

     பருவமென்பதே பாடமல்லவா,

     பார்வையென்பதே பள்ளியல்லவா,

     ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும் 

     இரவும் வந்தது நிலவும் வந்தது…

     அன்புள்ள மான்விழியே 

     ஆசையில் ஓர் கடிதம் 

     அதைக் கைகளில் எழுதவில்லை 

     இருகண்களில் எழுதி வந்தேன்…

                         சுபம்.

                                   –கீதாஞ்சலி.  

          

 

      

    

     

     

     

     

 

      

      

     

    

     

 

   

  

     

Advertisement