Advertisement

    43

     “ஆனா அடாப்ட் பண்றதுக்கு நிறைய பார்மாலிடிஸ் இருக்குமே டா!என்றான் கிருஷ்ணன்.

     “ஆமாண்ணா அதெல்லாம் முடிச்சுதான் பண்ணனும்.என, இதை எல்லாம் கேட்டபடியே உணவருந்திக் கொண்டிருந்த ப்ரியாவிற்கு பிரசவ வலி ஆரம்பமானது.

     அவள் முகம் வலியில் சுருங்குவதைப் பார்த்த மையு

     “அக்கா என்னக்கா பண்ணுது?!” என, மலர் மகளின் அருகே எழுந்து வந்து

     “என்னடாம்மா வலிக்குதா?!” என்றார்.

     “அ ஆமாம் ம்மா! ஆனா டெலிவரி டேட்கு இன்னும் நாள் இருக்கேம்மா?!” என்றாள் ப்ரியா வலியைப் பொறுத்துக் கொண்டு.

     “அதெல்லாம் நம்ம கையிலையாம்மா இருக்கு?! டேய் மித்ரா சீக்கிரம் கார் எடுத்து ரெடியா வை!

     “ராதா நீ போய் கொஞ்சம் சுடு தண்ணி வச்சு ப்ளாஸ்க்ல ஊத்திக் கொண்டு வா” 

      “கீர்த்தி.. அக்காக்கு வேண்டிய துணி எல்லாம் அவ ரூம்ல ஏற்கனவே தயாரா எடுத்து வச்சிருக்கேன் ஒரு பேக்ல போட்டு. அதை போய் கொண்டு வாஎன்று மளமளவென கட்டளைகளைப் பிறப்பித்த மலர்,

     “என்னங்க? உங்க ஹாஸ்பிட்டல்ல இருப்பாங்களே மகப்பேறு டாக்டர் அவங்களுக்கு போன் பண்ணிட்டீங்களா?!” என

     “ஹான்ம்மா பேசிட்டேன். நாம அங்க போறதுக்குள்ள அவங்க வந்துடுவாங்கஎன்ற ராஜசேகர்

     “கிருஷ்ணா நீயும் கூட வரியா?!” என அழைத்தார். 

     “ஹான் பாஎன அவன் எழ,

     “வேணாம்பா. அதான் நானும், அப்பாவும், தம்பியும் போறோமே! வீட்ல பெண்பிள்ளைகளை மட்டும் தனியா இந்நேரத்துல விட்டுட்டு வர வேண்டாம்.என்றுவிட்டு,

     “ஹான் அப்படியே மாப்பிள்ளைக்கும் விவரம் சொல்லிடுஎன்றுவிட்டு மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார் மலர்.

     நால்வரும் மருத்துவமனைக்குச் சென்றுவிட, ராதா பிள்ளைகளை உறங்க வைத்துவிட்டு வருகிறேன் என்று அழைத்துச் சென்றாள்.

     “அண்ணி நீங்களும் கொஞ்ச நேரம் உங்க ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க.என்று கீர்த்தி சொல்ல,

     “இல்லை பரவாயில்லை கீர்த்தி.என்ற மையு பதட்டமாய் அமர்ந்திருக்க,

     “அண்ணி! அக்காக்கு நல்ல படியா பிரசவம் ஆகும். பயப்படாதீங்க!என்று அவள் தோள் பற்றி ஆறுதல் சொன்னாள்.

     “ம்!என்று மையு தலையசைக்க

     “ஒன்னும் பயம் வேண்டாம்மா! நம்ம ஹாஸ்ப்பிட்டல் தானே. முடிஞ்சவரைக்கும் அங்க எல்லோருக்கும் நார்மல் டெலிவரிதான் இருக்கும்.என்று கிருஷ்ணனும் தைரியம் சொன்னான் மையுவிற்கு.

     மருத்துவமனைக்குச் சென்ற சில மணி நேரத்திற்குள், ப்ரியா சுகப்பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை ஒன்றை ஈன்றெடுக்க, அனைவருக்கும் அளவில்லா சந்தோஷம்.

    முதலில், மித்ரன் தன் மனைவிக்கு போன் செய்து விவரம் சொல்ல,

     “என்னங்க எனக்கு இப்போவே பாப்பாவைப் பார்க்கணும்!என்று அடம் பிடித்தாள் மையு.

     “இந்நேரத்துலயா? காலையில வந்து கூட்டிட்டுப் போறேன்ம்மாஎன்று அவன் சொல்லியும்,

     “மாமா.. ப்ளீஸ் எங்க எல்லோரையும் இப்போவே பாப்பாவைப் பார்க்க கூட்டிட்டுப் போறீங்களா?!” என்று கிருஷ்ணனிடம் சென்று கேட்க

     “இப்போவேவா?!” என்று கிருஷ்ணன் தயங்க,

     “அண்ணா அண்ணா ப்ளீஸ்என்று கீர்த்தி கெஞ்ச, அவர்களின் பேச்சுக் குரலில் பிள்ளைகளும் எழுந்து விட்டனர்.

     “அப்பா எல்லோரும் எங்க போகணும்னு சொல்றீங்க?!” என்று பிள்ளைகளும் ஆரம்பிக்க, ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு மருத்துமனைக்குக் கிளம்பினான் கிருஷ்ணன்.

     பிள்ளை அதன் அம்மா போலவே செக்கச் செவேல் என்று ரோஜா பூப்போல் அத்தனை அழகாய் இருக்க, அதன் அழகைப் பார்த்த மையு, சொக்கிப் போய் நின்றுவிட்டாள்.

     மையு சற்றுத் தூரத்திலேயே நின்று பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட ப்ரியா,

     “என்ன மையும்மா என் பிள்ளையைக் கிட்ட வந்து தூக்கிக் கொஞ்ச மாட்டியோ?!” என்று மையுவின் தயக்கத்தை உடைக்க எண்ணி அழைக்க, பிரேம் அவளை முறைக்க

    “என்ன அப்படிப் பார்க்குறீங்க? போங்க போய் எல்லோருக்கும் காபி வாங்கிட்டு வாங்க! நடு ராத்திரின்னு பார்க்காம உங்க பொண்ணைப் பார்க்க ஓடி வந்திருக்காங்கல்ல?!” என்று ப்ரியா அவனை விரட்டினாள்.

     ‘எல்லாம் என் நேரம்டி!என்று மனதுள் புலம்பிக் கொண்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை இப்போதெல்லாம் பிரேமிற்கு. மனைவியின் பாசத்திற்குக் கட்டுபடாதவன், பிள்ளையின் பாசதிர்க்குக் கட்டுப்பட ஆரம்பித்திருந்தான் சில நாட்களாய்.

     “என்ன மையும்மா நீ?! இன்னும் அங்கேயே நின்னுகிட்டு இருக்க? என் பிள்ளையைத் தூக்குறதுக்கு உன்னைவிட வேற யாருக்கு அதிகம் உரிமை யாருக்கு?! வா வா!என்று மீண்டும் ப்ரியா அழைக்க, தயக்கத்துடன் அத்தையைப் பார்த்தவளை,

     “போடாம்மாஎன்று மலரும் சொல்ல, மெல்ல சென்று பிள்ளையைக் கையில் ஏந்தினாள் மையு.

     பூக்குவியலாய் தன் கையில் சிரித்த பிள்ளையைக் கண்டு மையுவின் நெஞ்சமும், உடலும் சிலிர்க்க

     “என்னங்க பாப்பா!!என்று தன் கணவனிடம் காண்பித்தாள். 

     “ம் அப்படியே அக்கா மாதிரியே வருவா போல இல்ல?!” என்று மித்ரன் கேட்க,

     “ம் ம் ஆமாம்! அக்கா மாதிரிதான் வரணும்!என்று ஆசை ஆசையாய் அதன் உச்சி முகர்ந்து மையு முத்தமிட, தங்கள் குழந்தையையும் இப்படி அள்ளிக் கொஞ்சும் பாக்கியம் தங்கள் வாழ்வில் கிடைத்துவிடாதா என்று ஒரு நொடி மனதுள் தோன்றாமலில்லை இருவருக்கும்.

                        ******

     மறுநாள் காலையே, அவனுக்கு நன்கு தெரிந்த அந்த குழந்தைகள் இல்லத்திற்குச் சென்றவன், குழந்தையைத் தத்தெடுப்பதற்கு என்னென்ன செயல் முறைகள் இருக்கின்றனவோ அதையெல்லாம் விசாரித்து அறிந்து அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய, ஐந்து நாட்களில் மையுவும், அவனும், ராஜசேகரையும், மலரையும் உடன் அழைத்துச் சென்று அவர்களின் வாழ்வை இனிமையாக்கப் போகும் அந்த இனிய உயிரைத் தத்தெடுத்துக் கொண்டு வீடு திரும்பினர்.

     அதே சமயம் ப்ரியாவையும், அவளின் செல்வத்தையும் ராதாவும் கிருஷ்ணனும் சேர்ந்து வீட்டிற்கு அழைத்து வர, இருவரையும், வாயிலில் நிற்க வைத்துவிட்டு உள்ளே ஓடிய தங்கமலர், நொடிகளில் ஆரத்தி கரைத்து எடுத்து வந்து அன்னைகளுக்கும் பிள்ளைகளுக்கும் ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்துச் சென்றார்.

     ஒரு வயது பூர்த்தியடைந்திருந்த மையு மித்ரனின், அன்புப் புதல்வன் மலர்வேந்தனின் பிறந்தநாளும், ப்ரியாவின் மகளின் பெயர் சூட்டும் விழாவும் ஒரே நாளில் அமைய, வெகு சிறப்பாக அவர்கள் வீட்டின் புது வரவைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர் ராஜசேகர் மலர் தம்பதியர்.

     பிரியா, பிரேமின் வாயையும், சாரு, சரத்தின் வாயையும் இப்போதெல்லாம் பதிலுக்கு பதிலடி கொடுத்துக் கொடுத்தே கட்டுபாட்டில் வைத்திருந்ததில் அமைதியாக எந்த வம்பையும் வளர்க்காமல் அவர்களும் விழாவில் கலந்து கொண்டனர் மனைவிக்குக் கட்டுப்பட்டக் கணவன்மார்களாய்.

     மையு வீட்டினர் அனைவரையும் மலரின் கட்டாயத்தால் மட்டுமே மித்ரன் அழைத்திருந்தானே  தவிர அவனுக்கு சாந்தி அங்கு வருவதில் துளி கூட விருப்பம் இல்லை! மலரோடு அவர்கள் வீட்டிற்கு விழாவிற்காய் அழைக்கச் சென்றவன்,

     “எங்க அம்மாவுக்காக உங்களை அழைக்கிறேன். ஆனா அங்க வந்து என் பொண்டாட்டி மனசு கஷ்டபடுற மாதிரி ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை நீங்க பேசினீங்கன்னு தெரிஞ்சா கூட அதோட உங்க உறவே முறிஞ்சிடும் நியாபகம் வச்சுக்கோங்கஎன்றுவிட்டு மித்ரன் கோபமாய் வெளியேறிவிட, மலருக்குத்தான் சங்கடமாய்ப் போய்விட்டது.

     ஆனால் மையுவின் தந்தை அவனின் கோபத்தைப் புரிந்து கொண்டதோடு அல்லாமல்,

     “என் பொண்ணுக்கு இப்படி ஒருத்தர் வாழ்க்கைத் துணையா கிடைக்க அவ கொடுத்து வச்சிருக்கணும்! ம் எங்க வீட்லதான் அவ சந்தோஷமா வாழலை! அங்கயாச்சும் சந்தோஷமா இருக்கிறதை நினைச்சா என் மனசுக்கு நிறைவா இருக்குங்க சம்மந்தி!என சாந்தியின் முகம் சிறுத்து விட்டது.  

     மித்ரனின் பேச்சால், சாந்தியுமே வாயைத் திறக்காமல் விழாவில் கலந்து கொள்ள, விழா வெகு சிறப்பாகவும் சந்தோஷமாகவும் நடந்தேறியது.

     விழா முடிவடைந்த நாளின் நள்ளிரவு. தங்கள் இருவருக்கும் நடுவில் மெலிதாய் மலர்ந்த இதழ்களுடன் கண்ணுறங்கும் தங்கள் மகனைத் தட்டிக் கொடுத்தபடியே. அம்மாவும், அப்பாவும் பிள்ளையை ரசித்திருக்க

     “ஆமாம்! நானும் கேட்கணும் கேட்கணும்னு நினைக்கிறேன். ஆனா அந்தப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் நீங்க நழுவிட்டே இருக்கீங்க?! இப்போ நீங்க எனக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்!என்ற மையு,

     “எதுக்கு ஆம்பிளைப் பிள்ளைதான் வேணும்னு ஆசிரமத்துல சொல்லி இருந்தீங்க?!” என்றாள் மையு கணவனைச் சந்தேகக் கண்களோடு.

    “ம் அது அது சும்மாதான். வளர்ந்து உனக்குப் பாதுகாப்பா இருப்பான்ல அதுக்குதான்!என்று மித்ரன் ஏதோ சொல்லி சமாளிக்க,

     “ஏய் மித்து பையா பொய் பொய்! மனசுல ஏதோ வச்சுக்கிட்டுதானே இந்த ப்ளான்!என்று மையு சரியாய் கணிக்க,

     “அதான் உனக்கே தெரியுதே அப்புறம் என்னடி கேள்வி வேற கேட்டுக்கிட்டு?!” என்றான் அவனும் சளைக்காமல்.

     “அப்ப, ஏதோ ப்ளான் இருக்கு!என்று மையு மீண்டும் சீண்ட

     “ஆமாம்! பக்கா ப்ளான்!என்றவன் உறங்கிக் கொண்டிருந்த பிள்ளையைத் தூக்கித் தங்கள் கட்டிலுக்கு அருகே போடப்பட்டிருந்த சிறிய தொட்டில் போன்ற கட்டிலில் படுக்க வைக்க,

     “இ இப்போ எதுக்கு பாப்பாவைத் தனியா படுக்க வைக்கிறீங்க?!” என்று மையு பொய்யாய்க் கோபம் கொள்ள

     “ம்! நிஜமா உனக்குத் தெரியாதா?!” என்றவன், மெல்ல மனைவியை நெருங்க,

     “டேய் மித்து பையா, வேணாம் இப்போதான் பாப்பாக்கு ஒரு வயசு ஆகுது!என்று மையு தனது மான்விழிகளால் அவனை மிரட்ட

     “ஆமாம்! அதான் இப்போவே ட்ரையிங் கொடுக்கப் போறேன் என் மானும்மாவுக்கு! அப்போதானே இன்னும் ரெண்டு வருஷத்துல என் மானும்மா அவளை மாதிரியே ஒரு குட்டி மானும்மாவை என் கையில கொடுப்பாஎன்று மித்ரன் ஆசையாய் அவளை நெருங்க அவள் முகம் ஏதோ போல் ஆனது!

      “இ இல்லை! எ எனக்கு பயமாயிருக்குங்க! வேணாம் இன்னொரு பாப்பாவோட உயிர் என்னால,” என்று பயந்த விழிகளோடும் குற்ற உணர்வோடும் தன் மனக் கலக்கத்தை சொல்ல வந்தவளின் இதழ்களை தன் விரல் கொண்டு மூடியவன்,

      “நோ நோ! மானும்மா! அழமாட்டேன்னு சொல்லி இருக்க!என்று கலங்கத் துடித்த அவள் கண்களுக்கு தன் மிரட்டலால் அணையிட்டவன்

     “ஒருமுறை நம்ம வாழ்கையில தவறு நடந்துடுச்சுன்னா மறுபடியும் மறுபடியும் அதுவே நடக்குமா என்ன?! அதுவும் என் மானும்மா மாதிரி ஒரு அன்பான அம்மாவைப் பார்க்க அவளோட பொண்ணு சீக்கிரமே இந்த உலகத்துக்கு ஓடோடி வந்துட மாட்டா!என்று அவன் அவளுள் நம்பிக்கையை விதைக்க,

     “நிஜமா?! நமக்கு நல்லபடியா பாப்பா பிறக்குமா?! அதுக்கு வாய்ப்பிருக்கா?!” என்று அவள் கொஞ்சமே நம்பிக்கையும் உடன் சந்தேகமும் கலந்து கேட்க, அவன் தனது மொபைலை எடுத்து, யூடியூப்பை ஓபன் செய்து அதில் தசைச் சிதைவு நோய்க்கு உள்ளான பலருடைய வாழ்க்கை வரலாறை எடுத்துக் காண்பிக்க, அதில் சுத்தமாய் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் மட்டுமே மற்றவர்களின் உதவியுடன் இயங்கக் கூடிய ஒரு பெண்ணுக்கு ஆரோக்கியமாக ஒரு பெண்பிள்ளை பிறந்து அது பள்ளிக்கும் சென்று வருவதைப் பார்க்க மையுவின் கண்களில் ஆச்சர்யமும் நம்பிக்கையும் மீண்டும் ஒருசேர எழுந்தது.

Advertisement