Advertisement

                                                                 41

     ‘செங்காந்தளே உனை அல்லவா

     செல்லத் தென்றலே உன்னை ஏந்தவா

     அழைத்தேன் உன்னை என்னோடு 

     இருப்பேன் என்றும் உன்னோடு   

     அன்பே உன் கைகள் என்னைத் தீண்டுமா

     மிதந்தேன் காற்றில் காற்றாக

     நடந்தேன் இரவில் நிழலாக  

     கண்ணே உன் கண்கள் என்னைக் காணுமா

     ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரிரோ…    

     “என் குழந்தையைக் கொன்னுடுங்க!” என்று அவள் சொன்ன வார்த்தைகளில் அவன் இதயம் சில்லு சில்லாய் சிதறியதைப் போல் ஆனது! எந்த நொடியைச் சந்திக்கக் கூடாது என்று இத்தனை நாள் தவித்திருந்தானோ, அந்த நொடி இப்போது அவர்கள் வாழ்வில் சுனாமிப் பேரலையாய் அவர்களைச் சுழற்றிப் போடக் காத்திருந்தது!

     பதட்டத்துடன் எழுந்து போய் அவளை பற்றித் தன்னோடு அணைத்துக் கொண்டவன்,

     “மானும்மா! என்ன, என்ன பேச்சு இதெல்லாம்?! நம்ம பாப்பாக்கு நம்ம பாப்பாக்கு ஒண்ணும் இல்லைமா! அவ நல்லா இருக்காடா! நல்லா இருக்கா!” என்று சொன்னவன் நெஞ்சிலும் சொல்லொணா வலிதான் அந்நொடியில்.

      ஆனால் அவளிடமிருந்து, மீண்டும் அதே வார்த்தைகள்!

     “என் குழந்தையைக் கொன்னுடுங்க!” என்றாள் இமைகள் கூட அசையாது.

     “மானும்மா!!” என்று கலங்கித் தவித்தவன்,

     “நீ வா முதல்ல வந்து உட்காரு” என்று அவளை அழைக்க,

      “என் குழந்தையைக் கொன்னுடுங்கன்னு சொல்றேன்ல!” என்று கத்தினாள் ஆங்காரமாய்.

     “மையு மையும்மா!” என்று மலரும் பதறிப் போய் அவளைப் பற்றித் தேற்ற முயல, ஆவேசமாய் இருவரிடமும் இருந்து உதறிக் கொண்டு விலகியவள்,

     தன் வயிற்றில் ஓங்கி ஓங்கி தன் கைக்கொண்டே குத்திக் கொள்ள ஆரம்பித்தாள் ஆவேசம் கொண்டவளாய்…

     “மானும்மா??!!”

     “மையு?!” என்று மலரும், மித்ரனும் தடுக்கத் தடுக்க அவள் நிற்காமல்,

     “போ! நீ வேணாம்! நீ இந்த உலகத்துக்கு வர வேணாம்! போய்டு! போய்டு! போய்டு…” என்று ஹிஸ்டீரியா வந்தவள் போல் மீண்டும் மீண்டும் கத்தியபடி தன்னையே தாக்கிக் கொள்ள, மித்ரன் அவளை அடக்கும் வழி தெரியாது அவளை இறுக அணைத்துக் கொள்ள,

     “விடு! என்னை விடு! என் கிட்ட வராத! என் கிட்ட வராத!” என்று தன் பலம் முழுதும் ஒன்று திரட்டி அவனைப் பிடித்துத் தள்ளினாள் ஆக்ரோஷமாய்.

     அவள் போட்ட கூச்சலில், ராஜசேகர், கிருஷ்ணன், ராதா, கீர்த்தி என்று பலரும் தத்தம் அறையில் இருந்து பதறிப் போய் என்னவோ ஏதோவென்று ஓடி வர,

     “மானு மானும்மா! ப்ளீஸ்! சொன்னா கேளுடா! நம்ம பாப்பாக்கு ஒண்ணும் இல்லை! ஒண்ணும் இல்லடா!” என்று மீண்டும் மீண்டும் அவளைத் தேற்ற முயன்று அவன் சொன்ன சமாதானங்களும் மலர் சொன்ன சமாதானங்களும் அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை! 

     “என்ன என்ன ஆச்சு? என்று பதறியபடியே ஓடி வந்த ராஜசேகருக்கும் கூட அவளின் இந்த ஆவேசம் பயத்தைக் கொடுத்தது.

     அவன் தடுக்கத் தடுக்க அவள் இன்னும் இன்னும் ஆவேசமாய் தன்னையே அறைந்து கொள்ள,

      “மானு மானும்மா! இங்க பாரு உனக்கு கோவம் இருந்தா, என்னை அடி, என்னை அடிம்மா!” என்று மித்ரன் அவள் கைகளைப் பற்றித் தன்னை அடித்துக் கொள்ளத் துவங்க, அவனிடமிருந்து, தன் கைகளை உருவிக் கொண்டவள், வெகுவாய் சோர்ந்து போய் அப்படியே சோபாவில் சரிந்து அமர,

     “மானு மானும்மா!” என்று கதறியவன்,

     “ம்மா! தண்ணி தண்ணிக் கொண்டு வாங்க” என்றுவிட்டு, வியர்த்து விறுவிறுத்து சில்லிட்டுப் போய் அமர்ந்திருந்த மனைவியின் முகத்தை துடைத்து விட்டு, அவள் கண்களில் விழுந்திருந்த அவளின் முடிகற்றைகளை ஒதுக்கினான்.

     அதுவரை எங்கோ நிலைத்திருந்த அவளின் கறுவிழிகள் மெல்ல அவனை நோக்கி உருள, அவளுக்கு மீண்டும் உடல் பதறியது.

     “ஹ! ஹஹ??!!!” என்று வாய்விட்டுக் கதறி ஓவென அழுதவள்,

     “பாப்பா பாப்பா!!” என்று விம்மினாள் உடைந்து போய்.

     “ஒண்ணும் ஒண்ணும் இல்லடா. பாப்பா நல்லா இருக்காங்க!” என்று அவன் மீண்டும் மீண்டும் அவளை எவ்வளவு தேற்றியும்,

     “இல்ல! இல்ல! என் குழந்தை இன்னொரு மானும்மாவா இந்த உலகத்துல பிறக்க வேணாம்! பிறக்கவே வேணாம்!” என்று உறுதியாய்ச் சொன்னவள்,

      “பாப்பா, அம்மா. அம்மாவ மன்னிச்சிடுடா! நீ நீ இந்த உலகத்துல என்னை மாதிரி கஷ்டப் படக் கூடாதுடா! நீ நீ இந்த உலகத்துக்கு வர வேணாம்டா! நீ அம்மா வயித்திலயே அம்மா வயத்திலயே” என்று சொன்னவளுக்கு அதற்கு மேல் சொல்ல நா எழ வில்லை!

     எந்தத் தாய்க்குத்தான் தன் பிள்ளைச் செல்வத்தை சாகச் சொல்ல மனம் வரும்?! அதுவும் இதோ இன்று அரைமணி நேரத்திற்கு முன்பு வரை அதன் முகத்தைக் காணத் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு!

      அவளது தவிப்பையும் துடிப்பையும் பார்த்துக் கொண்டிருந்த வீட்டினர் அனைவருக்குமே கண்கள் கலங்கிப் போயிருக்க அவளின் உயிருக்கு உயிரானவன் மொத்தமாய் நொறுங்கிப் போயிருந்தான் பலமற்று.

     மலர் தண்ணீர் கொண்டு வந்து மருமகளுக்குப் புகட்டப் போக, ஒரே தள்ளில் தண்ணீரைக் கொட்டி விட்டவள்,

     “போங்க எல்லோரும் போங்க! எல்லோரும் போங்க இங்க இருந்து!” என்று மீண்டும் ஆவேசமாய்க் கத்த ஆரம்பிக்க, ராஜசேகர் அனைவரையும் தலையசைப்பின் மூலம் அங்கிருந்துப் போகச் சொல்ல, மலர் உட்பட அனைவருமே வேறு வழியின்றி அங்கிருந்து சென்றனர்.

     “பார்த்துக்கோ மித்ரா” என்று மகனிடம் சொல்லிவிட்டுச் செல்ல, மித்ரன் மனைவியை தேற்றும் வழி தெரியாது, அமைதியாய் எழுந்து சென்று மீண்டும் தண்ணீர் எடுத்து வந்து அவளுக்குப் புகட்டப் போக அவனைப் பார்வையாலேயே விலகச் சொன்னவள், மெல்ல எழ,

     “மானும்மா!” என்று அவன் ஆதரவாய் அவள் கைப்பற்ற, பட்டென அவன் கையைத் தட்டிவிட்டு, தளர்வுடன் எழுந்து தங்கள் அறைக்குச் சென்று அங்கிருந்த கட்டிலில் விழுந்து தேம்பினாள் செய்வதறியாமல்…

    

     மனைவியைத் தேற்றும் வழி தெரியாமல், அவள் அழுகையைக் காணும் சக்தியும் இல்லாமல், தளர்ந்து போய் அவளருகே அமர்ந்தபடி அவள் தலையை மட்டும் வருடிக் கொடுத்துக் கொண்டே இருந்தான் நெடுநேரமாய்.

     அழுது அழுது ஓய்ந்து போனவள், ஒரு கட்டத்திற்கு மேல் சோர்வு மிகுதியில் உறக்கதைத் தழுவ, மனைவியையும், பிள்ளையையும் மனதில் சுமந்து கொண்டிருந்தவனுக்கு உறக்கம் துளி கூட எட்டிப் பார்க்கவில்லை!

     விடியல் வேலையில் லேசாய்க் கண்ணயர்ந்தவன், ஒருசில மணித்துளிகளிலேயே ஏதோ சில்லென்ற உணர்வு தீண்ட, திடுக்கிட்டுக் கண்விழிக்க, அவள், அவனின், உயிர், அவர்களின் கனவு அங்கே சிதைந்து போய் ரத்தமாய் வெளியேறி படுக்கை முழுதையும் நனைத்திருக்க, அவளோ உறக்கத்தில் அல்ல, மயக்கத்தில் தன்னைத் தொலைத்திருந்தாள்…

                         *****

     நாட்கள் காற்றைப் போல் வேகமாய் நகர்ந்தது…

     ஆனால் மையுவின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை! கொஞ்சம் கொஞ்சமாய் தன் கூட்டுக்குள் இருந்து வெளியேறி சிறகடிக்க ஆரம்பித்திருந்தவள் இன்று மொத்தமாய் தன் அறை எனும் கூட்டுக்குள்ளேயே முடங்கிப் போனாள் யாரிடமும் பேசக் கூட பிடிக்காமல்.

     மித்ரனைக் கூட அருகே நெருங்க முடியாத அளவிற்கு ஒரு நேரம் கோபமும் ஆவேசமுமாய், ஒரு நேரம் அடம் பிடிக்கும் குழந்தையாய், ஒரு நேரம் தான் பட்ட வேதனையை எல்லாம் எண்ணி எண்ணி மருகும் பேதையாய், ஒரு நேரம் பிள்ளை பறிபோய் விட்டதே என்று எங்கும் தாயாய், ஒருநேரம் தன்னைப் போல் பிள்ளை பிறக்காது போனதே மேல் என்று எண்ணி தேற்றிக் கொள்ளும் நிதர்சனவாதியாய், மறுநேரம் தன்னால் ஒரு வாரிசைக் கூட இந்த குடும்பத்திற்குக் பெற்றுக் கொடுக்க முடியாது போய்விட்டதே என்று கலங்கும் மருமகளாய், தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள். அவளிலும் அதிகமாய் அவள் வேதனையைக் காண முடியாது மித்ரன்தான் வெகுவாய்த் தளர்ந்து போயிருந்தான் தன் இயல்புக்கு மாறாய்.

     எத்தனையோ மருத்துவர்களை வரவழைத்துப் பார்த்தும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை! அவளே மனதளவில் நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டு தேறி வந்தாலொழிய இதற்கு வழியில்லை என்று மருத்துவர்களும் கைவிரித்துவிட்டனர்.

     மித்ரன் அவளை அன்பாய்ப் பார்த்துக் கொள்ள, கொள்ள, அவளின் குற்ற உணர்ச்சியும், இயலாமை மனப்பாண்மையும் அதிகமே ஆக, அது கோபமும் விலகலுமாய் உருவெடுத்ததே தவிர, அவளிடம் நல்ல மாற்றம் தெரியவில்லை.

     ஒருகட்டத்தில் அதைப் புரிந்து கொண்ட மித்ரன் அவளிடமிருந்து சற்று விலகியே இருக்கத் துவங்கினான். அது அவளிடம் பெரிதாய் மாற்றத்தைக் கொடுக்க வில்லை என்றாலும் ஒரு அமைதியைத் தோற்றுவித்திருந்தது.  

     அத்தனை உற்சாகம் பொங்கி வழிந்த அந்த வீட்டில் எல்லோரும் சிரித்துப் பேசக் கூட மனமின்றி அவரவர் அறையில் முடங்கிப் போயினர்.

     விவரம் கேள்விப் பட்டு அவளைப் பார்க்க வந்த தனது குடும்பத்தினரைக் கூட பார்க்கப் பிடிக்கவில்லை என்று ஒரேயடியாய் மறுத்தவளை எப்படித் தேற்றுவது என்று புரியாமல் பரிதவித்துப் போனான் மித்ரன்.

     இங்கு இவர்கள் வீட்டில் இருந்த சந்தோஷம் மொத்தமாய் பறிபோய் இருக்க, அன்று மாலை எல்லோரும் வீட்டில் இருக்கும் நேரமாய் பார்த்து, ப்ரியா எவ்வளவோ தடுத்தும் தனது மனைவியின் வளைகாப்பிற்காய் அவர்கள் வீட்டினரை அழைக்க பிரேம் நேரிலேயே அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான்.

     அவனுக்கு மித்ரனின் திமிருக்குக் கிடைத்த தண்டனையாகவே அவர்கள் குழந்தையின் இழப்புத்  தோன்ற, வேண்டுமென்றே,

     “நடந்தது நடந்து போச்சு! அதுக்காக நடக்க வேண்டியதை விட்டுட முடியுங்களா அத்தை?! ப்ரியா உங்க பொண்ணுதானே அவளுக்கு செய்ய வேண்டிய சடங்கை எல்லாம் எல்லாருமா சேர்ந்து நல்ல படியா நடத்தினாதானே எங்க குழந்தையாச்சும் நல்ல படியா பிறக்கும்” என, அதைக் கேட்ட அனைவருக்கும் சுருக்கென்றது.

     உள்ளே இருந்து கேட்டிருந்த மித்ரன், மையுவிற்குமே அவன் சொன்னது நன்றாய் கேட்க, மித்ரன் கோபத்துடன் எழ,

     “நில்லுங்க!” என்றாள் மையு இருபது நாட்களுக்குப் பின் அவனிடம் பேசி.

     அவள் தன்னிடம் பேசிவிட்டாள் என்று அந்நொடி சந்தோஷப் படுவதா, அந்தப் பிரேம் இப்படி பேசுவதால் வருத்தப்படுவதா என்று புரியாமல் அமைதியாய் அவன், அவள் புறம் திரும்ப,

     “அவர் சொல்றது சரிதானே, ப்ரியாக்கா, ப்ரியாக்கா பாப்பாவாச்சும் ந நல்லா பிறக்கணும்!” என்ற மனைவியை அப்படியே கட்டிக் கொண்டு ஆறுதல் தேடி ஆறுதல் கொடுக்க வேண்டும் போல் இருந்தது மித்ரனுக்கு.

     பிரேம் பேசப் பேச மலரும், ராஜசேகரும், எதுவுமே பேசாமல் அமைதி காக்க,

     “என்ன அத்தை, என்ன மாமா உங்க பொண்ணோட சீமந்தத்தை எடுத்து நடந்தப் போறது நான்தான். அதுக்கு வந்து வாழ்த்தக் கூட உங்களுக்கு மனசில்லையா?!” என்றான் மீண்டும்.

     “ஐயோ என்ன மாப்ளை?! இப்படி பேசறீங்க?!” என்று மலர் மையுவின் நிலை எண்ணி எதுவும் பேச முடியாமல் தவித்துத் தயங்கி நிற்க, மையு தங்கள் அறையில் இருந்து எழுந்து கூடத்திற்கு வந்தாள்.

     நீண்ட நாட்களுக்குப் பின் அவள் வெளியே வந்ததைப் பார்த்து சந்தோஷப் படுவதா இல்லை இந்நேரத்தில் அவள் வந்ததை எண்ணி வேதனைப் படுவதா என்று புரியாமல் மலர் கலங்கி நிற்க,

     “என்னிக்கு அண்ணா பங்ஷன்?! எல்லோரும் வந்து நல்ல படியா நடத்திக் கொடுக்கறோம் அண்ணா!” என்று மையு சொல்ல,

     “என்ன நீயுமா?!” என்று பிரேம் கேட்க, மித்ரன் கோபம் எல்லை மீற சில அடிகள் முன்னே நடக்க பிரேமின் கண்கள் பயத்தில் மையுவை நோக்க,

     “நில்லுங்க!” என்றாள் மீண்டும். வேறு வழியின்றி அவள் வார்த்தைக்கு அவன் கட்டுப் பட,

     “ச சரி ந நான் வரமாட்டேன்! மத்த எல்லோரும் வந்து நல்ல படியா நடத்திக் கொடுப்பாங்க!” என்றதும்,

      “ஹான் சரி! சரி!” என்று பத்திரிக்கையைக் கொடுத்தவன், மித்ரன் அவனை முறைத்த முறைப்பில் கிடுகிடுவென வெளியேறினான்.

     மையு, மித்ரன் தவிர்த்து மற்ற அனைவரும் சென்று ப்ரியாவின் வளைகாப்பை நல்லபடியாய் நடத்தி முடித்து அவளைத் தங்கள் வீட்டிற்கு அழைத்து வர, அவள் வந்ததும் வராததுமாக முதலில் தேடிச் சென்றது மையுவையும் மித்ரனையும் தான்.

     “மையும்மா!” என்று அவள் ஆசை ஆசையாய் வளைகாப்புக் கோலத்தில் அவள் அருகே வந்து, அவளைக் கட்டிக் கொள்ள, அவளை ஆசையாய் பார்த்த மையு,

     “அக்கா” என்று ஆரத் தழுவிக் கொண்டாள்.

     இருபது நாட்களுக்குள்ளேயே மையு சற்றே உடல் மெலிந்து, முகம் ஓட்டி, கண்கள் உள்ளே போய் எப்படியோ மாறியிருக்க, ப்ரியாவால் தாங்கவே முடியவில்லை!

     “என்ன என்ன மையு இது?! இப்படி உடம்பைக் கெடுத்து வச்சிருக்க?!”

     “டேய் இதுதான் நீ அவளைப் பார்த்துக்கற லட்சணமா?!” என்று தம்பியிடமும் கோபம் கொள்ள, அவன் எதுவும் பேச இயலாமல் அமைதியாய் நின்றிருந்தான்.

     “ஒ ஒண்ணுமில்லை க்கா. சரியாகிடும்!” என்ற மையு,

     “ப பாப்பா எப்படி இருக்காங்க?!” என்று ஆசையும் ஆர்வமும் பொங்கக் கேட்டவள், அவளது மேடிட்ட வயிற்றை ஆசையாய் பார்க்க,

     “அவங்களுக்கென்ன நல்லா இருக்காங்க!” என்ற ப்ரியா,

     “பாரு நீயே கை வச்சுப் பாரேன். எப்படி உதைக்கிறாங்க்ன்னு” என்று மையுவின் கையை எடுத்துத் தன் வயிற்றில் வைக்க,

     அதன் அசைவு மையுவினுள், சொல்லொணா  உணர்வைக் கொடுக்க,

     “காலையில இருந்து ஒரே குஷி போல அம்மாவை உதைச்சு உதைச்சு விளையாடுறாங்க! சீக்கிரம் வெளில வந்து உன்னையும் உதைச்சு விளையாடுவாங்க பாரு” என்று சிரித்தாள் ப்ரியா.

     “ம் ம் அக்கா!” என்ற மையு,

     “சரிக்கா நீங்க போய் உங்க ரூம்ல ஓய்வெடுங்க! எவ்ளோ நேரம் நிப்பீங்க” என,

     “ம் சரிடா நீயும் ரெஸ்ட் எடு.” என்று விட்டு ப்ரியா சென்றுவிட, மையு மெல்ல நடந்து சென்று தன் குழந்தைக்காய் வாங்கி வைத்திருந்த உடமைகள் நிறைந்த அந்த அலமாரியைத் திறந்தாள்…

     “மானும்மா இப்போ எதுக்குடா இதையெல்லாம்?!” என்று சொல்ல வந்தவனைத் திரும்பிப் பார்த்தவள்,

     “இதையெல்லாம் கொண்டு போய் எங்கயாவது கொடுத்துடுங்க!” என,

     “ஏன்டா இப்படி எல்லாம் பேசுற?!” என்று அவளை நெருங்கியவன் அவள் தோளை ஆதரவாய்ப் பற்றி,

     “நாம வேணா ஒரு பாப்பாவை தத்தெடுத்துக்கலாமா?!” என்றான் அவளுக்காய்.

     ஆனால் அதையுமே இப்போதைய அவள் மனம் தவறாகவே புரிந்து கொள்ள,

     “ம்! நீங்களும் என் அம்மாவை மாதிரியே நான் எதுக்கும் உதவாதவன்னு முடிவே பண்ணிட்டீங்களா?!” என்றாள் தான் ஆசை ஆசையாய் வாங்கி வைத்திருந்த தன் பிள்ளையின் உடைகளைத் வருடிக் கொடுத்தபடியே…

                       -மான்விழி மருகுவாள்…

    

    

    

                 

           

 

 

         

Advertisement