Advertisement

                                                                40

     அவன் கண்ணீர் அவள் கையில் பட்டுத் தெறித்ததில், பதறிப் போனவள்,

     “எ என்னங்க ஆச்சு?! எதுக்கு உங்க கண் கலங்குது?!” என்றாள் மையு பதட்டமாய்..

      “ச்சே ச்சே! என்னடா மானும்மா நீ? நான் எதுக்குக் கண்கலங்கப் போறேன்?! நீ வச்ச திருநீர் கண்ணுல பட்டுடுச்சு போல!” என்று அவன் கண்களை துடைத்தபடி சமாளிக்க,

     ‘அதெப்படி நான் இப்போதானே வச்சு விட்டேன்! அதுக்குள்ள எப்படி என் கைல பட்டுத் தெறிக்கிற அளவுக்கு கண்ணீர் வரும்?!’ என்று எண்ணியபடி அவனை ஆராயும் நோக்குடன் பார்த்தவள்,

     “நீ, நீங்க என்கிட்டே பொய் எதுவும் சொல்லலையே?!” என்று முகம் முழுக்க பயத்துடன் கேட்டவளை அப்படியே அணைத்துக் கொண்டு ஆறுதல் தேட வேண்டும் போல் இருந்தது அவனுக்கு! ஆனால் அந்த உண்மை அவளுக்குத் தெரிந்தால், அவள் அவனை விடவும் உடைந்து போய்விடுவாள் என்று உணர்ந்தவன், தன் மனதின் வேதனையைத் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு,

     “நான் ஏன்டா உன்கிட்ட பொய் சொல்லப் போறேன்?! ஒருபக்கம் என் மானும்மாவோட சந்தோஷத்தைப் பார்த்த மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் என்னோட இன்னொரு செல்ல மானும்மா வரப் போற உற்சாகம். அந்த சந்தோஷத்துல ஏற்கனவே உன் சிவன்கிட்ட வேண்டிட்டு இருந்தேனா, அதுல கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு வந்த கண்ணீரும், என் மானும்மா திருநீரை கண்ணுல போட்டதுல துளிர்த்த கண்ணீரும் சேர்ந்ததுல என் மானும்மா கைல பட்டுத் தெறிக்கிற அளவுக்கு ஆகிப்போச்சு! மொத்தத்துல அம்மாவும் பொண்ணும் சேர்ந்து என்னை இப்போவே இந்த பாடு படுத்தறீங்க அளவு கடந்த சந்தோஷத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து!” என்றான் முகம் முழுக்க புன்னகையுடன்.

    “ம்! போங்க!” என்று அவன் சொன்னதை முழுதாய் நம்பிவிட்டவள்,

     “இன்னொரு முறை என் தீரன் கண்கள்ல இருந்து சந்தோஷத்துல கூட கண்ணீர் வரக் கூடாது! வந்துது அவ்ளோதான். அவ மானும்மாவும், அவ பாப்பாவும் அவன்கிட்ட பேசவே மாட்டாங்க” என்றபடி அவன் கையோடு கை கோர்த்துக் கொண்டு நடக்க, அவள் உறுதியாய் நம்பும் ஈசனை மறுபடியும் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, மனைவியுடன் நடந்தான் மனம் முழுக்க பாரத்துடன்…

     மையு பிள்ளையைப் பற்றிய கனவுகளில் ஆனந்தமாய் நொடிகளைக் கடக்க, அவன் இதயம் ஒவ்வொரு நொடியும் பாறாங்கல்லாய் கனத்துக் கொண்டிருந்தது தன் பிள்ளையைப் பற்றிய கவலையில்.

                           ******

     “மித்து, நான் சொல்றது உனக்குப் புரியுதா இல்லையா?! நைன்ட்டி டேஸ் மேல ஆகிடுச்சுன்னா அபார்ட் பண்றது இல்லீகல். அதோடு மையு ஹெல்த்துக்கும் ப்ராப்ளம் ஆகிடும் மேன்! சொல்றதைப் புரிஞ்சிக்கோ, அவகிட்ட நீயா எடுத்து சொல்லிப் புரிய வைக்கிறியா இல்லை நானே வீட்டுக்கு வந்துப் பேசவா?” என்றாள் மீண்டும் மறுநாளே அவனுக்கு போனில் அழைத்த ரோசி.

     “இல்ல ரோசி, எதுவா இருந்தாலும் பரவாயில்லை! என் குழந்தை எப்படி இருந்தாலும் நான் பார்த்துப்பேன்! அவளுக்கு அந்தப் பிரச்சனை வர வரைக்கும் மையுவுக்கு இதைப் பத்தி நான் எதுவுமே சொல்லப் போறதில்லை! அதோடு தசைச் சிதைவு நோய் ஒண்ணும், அவ பிறக்கும் போதே வரப் போறது இல்லைல்ல?! அவளோட எத்தனை வயசுல வேணாலும் வரலாம்தானே?! ஏன் ஒருசிலருக்கு அவங்களோட அறுபது வயசுக்கும் மேல கூட அதோடு தாக்கம் வெளிப்படலாம்ல! அது மாதிரி இருந்தா என் குழந்தை அறுபது வயசு வரைக்கும் நல்லா இருக்கும்ல!” என்றான் மருத்துவம் படித்திருந்தும் தந்தைப் பாசத்தில் எல்லாம் மறந்தவனாய்.

     “ஸ்டுபிடா மேன் நீ?! அறுபது வயசுக்கு மேலயும் அந்த நோயோட தாக்கம் வெளிப்படலாம்னு தெரிஞ்ச உனக்கு இருபது வயசுலயும் வெளிப்படலாம்னு தெரியாதா?! உன் மையுவுக்கு உன்னை மாதிரி ஒருத்தன் கிடைச்சதுனால அவ வாழ்க்கை இப்படி இருக்கு?! ஆனா உன்னை மாதிரியே இன்னொருத்தன் இந்த உலகத்துல இருப்பானா?! இவ்வளவு தியாகியா?!” என்று ரோசி ஒரு வேகத்தில் கேட்டுவிட, சங்கமித்ரனுக்கு அதுவரை இருந்த பொறுமைக் காற்றில் பறந்தது.

     “எனாஃப்! எனாஃப் ரோசி! திஸ் இஸ் யுவர் லிமிட்! ஐ நோ ஹவ் டு டேக் கேர் ஆஃப் மை சைல்ட்! டோன்ட் கால் மீ எவர்!” என்று அவன் பட்டென அழைப்பைத் துண்டித்ததும் தான் ரோசிக்கு அவனின் காதலைத் தான் தியாகம் என்று பேசியது அவன் மனதை எவ்வளவு தூரம் காயப்படுத்தி இருக்கும் என்று புரிந்தது. அதோடு அவன் காதலும் புரிந்தது.

     ஆனால், இந்தப் பிரச்சனையை இப்படியே விட்டால், அவன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல மையுவிற்கும் அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்குமே அது பெரும் வேதனையைக் கொடுக்கும் என்று உணர்ந்தவள், அவன் வீட்டுத் தொலைப்பேசி எண்ணிற்கு அழைத்து மலரிடம் அனைத்தையும் சொல்லிவிட்டாள். இதனால் அவன் தன்னிடம் எப்போதுமே கூட பேசாமல் போகலாம் என்று தெரிந்தும் அவர்களுக்காகவும் அவர்கள் குழந்தைக்காகவும்.

     மகனின் மாற்றத்திலிருந்து, ஏதோ சரியில்லை என்று மலர் ஏற்கனவே யூகித்திருந்தாலும், பிள்ளையைக் கலைக்கும் அளவிற்கு இருக்கும் என்று அவர் நினைத்திருக்கவில்லை! விஷயம் அறிந்ததும் அவருமே மனதளவில் பெரிதும் உடைந்து போனார் யாரிடமும் சொல்லவும் முடியாது கேட்கவும் முடியாது!

     ஆனால் அன்றைய இரவே இந்தப் பிரச்சினைக்கான பூகம்பம் பெரிதாய் வெடிக்கப் போகிறது என்று அவர்கள் யாருமே அறிந்திருக்கவில்லை!

     இரவு, தங்கள் அறையில் இருந்த படுக்கையைத் தட்டிவிட்டு இருவரும் உறங்குவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த மித்ரனின் அருகே சென்று அவன் கண்களைப் பொத்தினாள் மையு.

     “ஏய், மானும்மா! என்ன விளையாட்டு இது?!” என்றவனை,

     “ஷ்! எதுவும் கேக்கக் கூடாது! அப்படியே மெல்லத் திரும்பி நடங்க” என,

     “ம்?! என்ன சர்ப்ரைஸ் வச்சிருக்கா என் மானும்மா?!” என்று கேட்டபடியே அவள் சொன்னபடி நடந்தவன், அவள் நிறுத்தி இடத்தில் நிற்க, தன் கைகளை அவன் கண்களிலிருந்து விலக்கியவள்,

    “ம், இப்ப பாருங்க!” என்றாள்.

    கண்களைத் திறந்தவன் பார்த்தது, ஆண், பெண் இரு குழந்தைகளுக்குமான விதவிதமான உடைகளும், குட்டி உல்லன் ஸ்வேட்டர்களும், அதற்கு ஏற்றார்போல உல்லன் சாக்ஸ், க்ளவுஸ், கேப் என்று குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் அழகாய் நிரம்பி இருந்ததை.

     அதைப் பார்த்தவன் நெஞ்சில் மகிழ்வைக் காட்டிலும் அதீதமான வலியே எழ, எதுவும் பேச இயலாமல் அப்படியே நின்றுவிட்டான் அமைதியாய்.

     “ம்?! என்னங்க நீங்க? எந்த ரியாக்ஷனுமே கொடுக்க மாட்றீங்க? நான் எவ்ளோ ஆசை ஆசையா ஆன்லைன்ல நானே செலெக்ட் பண்ணி வாங்கினேன் தெரியுமா நம்ம பாப்பாவுக்காக!” என்றாள் மையு கண்ணில் ஆர்வம் மின்ன.

     அவன் அப்போதும் மனதின் கலக்கத்தைக் கட்டுப் படுத்திக் கண்ணில் நீர் வராமல் இருக்கப் பெரும் பாடு பட்டுக் கொண்டிருந்ததில், அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் போக,

     “ப்ச் போங்க நீங்க! உங்களுக்கு நம்ம பாப்பா வர்றதுல என் அளவுக்கு ஆசையே இல்லை!” என்று கோபித்துக் கொண்டு அவள் செல்லப் போக,

     “மானு… மானும்மா! என்னடா பேச்சு இது?!” என்றபடி அவளை பிடித்து நிறுத்தியவன்,

     “நீ இவ்ளோ அழகழகா நம்ம பாப்பாவுக்கு பார்த்து பார்த்து வாங்கி வச்சிருந்ததைப் பார்த்ததும் எனக்கு சர்ப்ரைஸ் தாங்கலடா! எல்லாமே அவ்ளோ, அவ்ளோ அழகா இருக்கு! என் பட்டுக் குட்டிக்கு ஏற்ற மாதிரியே!” என்றான் அன்பும் ஆசையும் சேர.

     “ம்! நிஜம்மா?!” என்று அவள் கண்களில் சந்தோஷம் மின்னக் கேட்க,

     “நிஜம்மா! என்னால் கூட என் செல்லத்துக்கு இப்படி எல்லாம் செலெக்ட் பண்ண முடியாது!” என்றான் கொஞ்சம் பொறாமையாய்.

    “ம்! என்ன இருந்தாலும் அம்மா அம்மாதான்! அம்மா செலெக்ட் பண்ற மாதிரி அப்பாவால செலக்ட் பண்ணிட முடியுமா என்ன?!” என்று அவள் பெருமிதத்துடன் சொல்ல,

     “ம்! இருந்தாலும் பார்த்துக்கோம்மா! பிள்ளைப் பாசத்துல இந்த அப்பாவி புருஷனை மறந்துடப் போறீங்க?!” என்று அவன் விளையாட்டாய்ச் சொல்ல, அவன் வாயில் பட்டென ஒரு அடி வைத்தவள், அவன் சட்டையைப் பிடித்து இழுத்து, அவன் மார்போடு தன் தலையை முட்டி,

     “இன்னொரு முறை அப்படிப் பேசினீங்க கடிச்சிடுவேன்” என்று மிரட்டி, அன்பாய் அவன் மார்பில் சின்னதாய் ஒரு கடி வைத்து,

     “அப்பா இல்லாம என் பிள்ளை எப்படி வந்திருக்குமாம்? ம்? யார் வந்தாலும் என் மித்து பையன்தான் என் மொதோ செல்லம்!” என்றாள் அவனை இறுக அணைத்து. ஆனால் அவள் இப்படிப் பிள்ளையை எண்ணியும் தன்னை எண்ணியும் உருகும் நொடியெல்லாம் அவன்தான் தவியாய் தவித்துக் கொண்டிருந்தான் அவளிடம் உண்மையைச் சொல்லவும் முடியாமல், சொல்லாமல் ஒரேயடியாய் மறைத்துவிடவும் முடியாமல்.

     அவனுக்கு ஏன்தான் டெஸ்ட் எடுத்தோம் என்றே தோன்றியது பலசமயம். ஆனாலும் நாளை அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் பெண் குழந்தையாய் இருந்துவிட்டால், அது தன் வாழ்வில் சந்திக்கக் கூடிய சவால்கள் எத்தனை வேதனை மிக்கதாய், எத்தனை ஏமாற்றம் மிக்கதாய் இருக்கும்?! என் காலம் இருக்கும்வரை அதனை என்னால் நன்றாய்ப் பார்த்துக் கொள்ள முடியும் என்றாலும், எனக்குப் பின் அதன் எதிர்காலம்?! ரோசி சொன்னது போல் அவளுக்கும் என்னைப் போல் நல்ல துணை கிடைத்துவிட்டால் பரவாயில்லை. இல்லை என்றால்?! என் பிள்ளையின் நிலை?! என்று ஏதேதோ எண்ணங்கள் அவனை அலைகழித்தன கடந்த இரண்டு நாட்களாய் அவனை ஒரு நொடி கூட உறங்க விடாமல்.

    மையு சந்தோஷ மிகுதியில் ஏதேதோ பேசிக் கொண்டே இருக்க, ஒருபுறம் அதைக் கேட்டுக் கொண்டே இருந்தாலும், ஒருபுறம் அவன் மனதின் குழப்பங்கள் அவனைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தன.

     ரோசியிடம் கோபத்தில் கத்தி விட்டான்தான். ஆனால் அவள் சொன்னது போல் வருங்காலத்தில் மையுவிற்குமே இது மிகப்பெரிய வேதனையாகத்தானே இருக்கும்! தன்னைப்போலவே தன் குழந்தையும் துன்பப் படுவதை எந்தத் தாயால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்! அப்போது மையு தன்னிடம் இத்தனைப் பெரிய உண்மையை மறைத்து விட்டாயே என்று கேள்வி கேட்க மாட்டாளா?! இன்று குழந்தைக்காக இவ்வளவு பார்த்துப் பார்த்துச் செய்பவள், நாளை அந்த குழந்தை படும் சித்ரவதையை எண்ணி பெரிதும் உடைந்து போக மாட்டாளா?! என்று அவனின் எண்ணவோட்டங்கள் எங்கெங்கோ அவனை இட்டுச் செல்ல,

     ‘பேசாம மானுகிட்ட உண்மையைச் சொல்லிவிடலாமா?’ என்றே தோன்றிவிட்டது அவனுக்கு,

     “ம மானும்மா..” என்று அவன் அழைக்க, அவன் மார்பில் படுத்திருந்தவள்,

     “ம்! என்னங்க உங்களுக்கும் பாப்பாவை சீக்கிரமே பார்க்கணும்னு ஆசையா இருக்கா?!” என்றாள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து.

     இதற்குப் பிறகு அவன் சொல்லுவான்?! அவன் சொல்ல நினைத்த அத்தனை வார்த்தைகளும் அப்படியே தொண்டைக் குழியில் சிக்கிக் கொள்ள,

     “ம் டா!” என்றவன்,

     “சரி ரொம்ப நேரமாகுது. கண்ணை மூடித் தூங்குங்க. இப்படியே முழிச்சிட்டு இருந்தா டையர்ட் ஆகிடும்.” என்று அவன் சொல்ல,

     “ஆமா ஆமா! அப்புறம் பாப்பாவுக்கும் டையர்ட் ஆகிடும்!” என்றுவிட்டு அவள் கண்களை மூடிக் கொள்ள, அவனுக்கு ஐயோ என்றானது.

     நேரம் பண்ணிரண்டைக் கடந்திருக்க மையு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவள் தலையைக் கோதிய படியே படுத்திருந்தவனுக்கு திடீரென விக்கல் வந்தது.

     மெல்ல அவளை தன் மீதிருந்து நகர்த்தி மெத்தையில் படுக்க வைத்துவிட்டு தண்ணீர் ஜாடியை எடுத்து அதில் இருந்த கொஞ்ச நீரைக் குடித்தான். ஆனாலும் விக்கல் நிற்காது போக, தண்ணீர் ஜாடியை எடுத்துக் கொண்டு எழுந்து சமயலறைக்குச் செல்ல தங்கள் அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

     அப்போது பூஜை அறையில் தெரிந்த வெளிச்சத்தில் யாரோ அமர்ந்திருப்பது போல் தெரிய, அவனுக்கு திக்கென்றது.

     ‘இந்நேரத்துக்கு யார் அங்க இருக்காங்க?!” என்று எண்ணியபடி விரைந்தவன் மலர் அங்கே அழுதபடியே தரையில் படுத்திருப்பதைக் கண்டு, பதறிப் போய்,

     “ம்மா! என்ன என்னம்மா ஆச்சு?! ஏன்மா அழறீங்க!” என்று அவர் அருகே சென்று அவரைத் தூக்கிவிட,

     பிள்ளையைப் பார்த்ததும், அவனின் வேதனையை எண்ணி பெற்றவளுக்கு மேலும் பெரும் வேதனை எழ, விசும்பலோடு, அவன் கையைப் பற்றியவர்,

      “ஏன்டா ஏன்டா அந்த ஆண்டவன் இப்படி ஒரு கொடுமையை உனக்கும் அந்தப் பெண்ணுக்கும் கொடுக்கணும்?!” என்று கேவ,

     “அ அம்மா?!” என்று அதிர்வுடன் நோக்கினான் தாயை.

     “ரோ ரோசி எல்லாத்தையும் சொல்லிட்டாடா!” என,

     “ஐயோ!” என்று நொந்து போனவன்,

     “ம்மா! அவ ஏதோ ஒரு பயத்துல அப்படிச் சொல்றாம்மா! அதுக்கெல்லாம் ட்ரீட்மென்ட் இருக்கும்மா! குழந்தை வயத்துல இருக்கும் போதே ட்ரீட் பண்ணிட்டா, அவ்வளவு பாதிப்பு ஏற்படாதும்மா” என்று சமாளித்தான் அப்போதும் தாயின் தவிப்பைக் காணச் சகியாதவனாய்.

     “போதும் ப்பா! நீ பொய் சொல்லி இப்போ வேணா என்னைச் சமாதானப் படுத்திடலாம். ஆனா மையுவை? வருங்காலத்துல அந்தக் குழந்தையோடு சேர்த்து நாம எல்லோரும் படப் போற வேதனையை உன்னால மாற்ற முடியுமா?!” என்றார் மலர் கண்களில் கண்ணீர் வழிய.

     “ம்மா?!” என்று பேச முடியாமல் தடுமாறியவன்,

     “அ அப்போ நீங்களும் குழந்தையைக் கலைக்க சொல்றீங்களாம்மா?!” என்றான் மனம்முறிய.

     “இல்ல இல்லடா கண்ணா!” என்று பதறிப் போய் மறுத்தவர்,

     “அ ஆனா மையுவுக்கு இந்த உண்மைய?!” என்று அவர் சொல்ல வர,

     “எப்படிம்மா எப்படிம்மா அவகிட்ட சொல்றது?!” என்றவன் அவள் சதாகாலமும் குழந்தையைப் பற்றியே சிந்திப்பதையும், பேசுவதையும், பிள்ளைக்காய் இன்று அவள் என்னென்ன வாங்கி வைத்திருக்கிறாள் என்பதையும் சொல்லச் சொல்ல மலருக்குமே கண்ணீர் ஆறாய் பெருகியது.

     “எ எனக்கு அவகிட்ட சொல்லணும்னு தோணும் போதெல்லாம் அவ பிள்ளையைப் பத்தி பேச ஆரம்பிச்சுடுறா! அதோடு, அவகிட்ட சொன்னாலும் குழந்தையைக் கலைக்கிறதுல எனக்குக் கொஞ்சமும் உடன்பாடு இல்லை! அப்படி இருக்கும் போது அந்தக் குழந்தை நல்லா வாழுற வரைக்கும் அவளுக்கு அது தெரியாமயே போகட்டுமேன்னு தோணுதும்மா! அ ஆனா அதே சமயம் என் குழந்தை இன்னொரு மானும்மாவா இந்த உலகத்துல பல கஷ்டங்களை அனுபவிக்கணுமேன்னும் நினைச்சா மனசெல்லாம் கலங்குதும்மா!” என்று மித்ரன் சொல்ல, பெரிதும் உடைந்து போனவர்,

     “இ இதுக்கு எந்த சிகிச்சையுமே இல்லையாப்பா? சின்ன வயசுலேயே இதுக்கு சிகிச்சைக் கொடுத்தா கூட சரியாகாதா?!” என்றார் மலர் சிறு நம்பிக்கையுடன்.

     “ம்ஹும்!” என்று அவன் மறுப்பாய்த் தலையசைக்க, மலர் திடீரென அதிர்ந்து போய் பூஜை அறைக்கு வெளியே பார்க்க, அவன் என்னவோ ஏதோவென்று சட்டெனத் திரும்ப, அங்கு மையு நின்றிருந்தாள் அசையாத கற்சிலையாய்!

     “ம மானும்மா?!” என்று மித்ரன் விருட்டென எழுந்துப் போய் அவளைப் பற்ற, பட்டென அவன் கையை உதறியவள்,

     “என் குழந்தையைக் கொன்னுடுங்க!” என்றாள் உணர்வுகள் அற்று…

                              -மான்விழி மருகுவாள்…   


      

    

    

    

    

    

               

         

Advertisement