Advertisement

                                                                39

     விடிந்தது முதல், எப்போங்க ரிசல்ட் வரும் என்று மையு நூறு முறைக்கும் மேல் கேட்டுவிட்டாள்.

     ஆனால் அங்கு ரோசியோ, என்ன சொல்லுவது என்று புரியாமல், மித்ரனுக்கு அழைப்பு விடுக்கக் கூட மனமில்லாமல் தன் அறையில் அமர்ந்திருந்தாள்.

     “என்னங்க, நீங்களாவது போன் செய்யுங்க!” என்று மையு சொல்ல,

     “அவ பிசியா இருப்பா போலம்மா. இல்லைன்னா அவளே கூப்பிட்டிருப்பா” என்று சிறிது நேரம் சொல்லிச் சமாளித்த மித்ரனால், மதியத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை!

    இருவரின் பொறுமையும் காற்றில் பறக்க, மதியம் ஒரு மணி போல் அவனே ரோசிக்கு அழைக்க, அப்போதும் அவள் போன் எடுக்கவில்லை என்றால், மித்ரன் வருந்துவான் என்று உணர்ந்த ரோசி,

     “ஹ ஹலோ” என்றாள் அழைப்பை ஏற்று.

     “ரோ ரோசி எ என்னாச்சு?! ரிசல்ட் இன்னும் வ வரலையா?!” என்றான் அவன் திணறலாய்.

      அவள் என்ன பதில் உரைப்பதென்று புரியாமல் அமைதி காக்க,

     “ரோ ரோசி ஆர் யூ தேர்?!”

     “ம்” என்றவள்,

     “சாரி மித்து! குழந்தைக்கு மச்குளார் டிஸ்ட்ராபி வரதுக்கு ஹண்ட்ரட் பர்சென்ட் சான்ஸ் இருக்கு! சோ ஐயம் சாரி டு சே திஸ்! பட், பட் தேர் இஸ் னோ வே!” என்று நிறுத்தியவள்,

    “சோ மை சஜஸ்ஷன் இஸ் டு அபார்ட் தி பேபி” என அவன் மனம் துடிதுடித்துப் போனது. ஆனால் மையு தன்னையே பார்த்திருப்பதைக் கண்டு, இதயத்தில் வலியோடு, உதட்டில் வலுக்கட்டாயமாய் புன்னகையைத் தருவித்தவன்,

     “ஓ! தேங்க் காட் ரோசி! தேங்க் காட்!” என்று சொல்ல, அந்தப் பக்கம் இருந்த ரோசிக்கு சட்டென எதுவும் விளங்கவில்லை! ஆனால் சில நொடிகளில் மையு அருகில் இருக்கிறாள் போல் என்று புரிந்து கொண்டவள்,

     “மித்து ஐ கேன் அண்டர்ஸ்டான்ட் யுவர் பீலிங்க்ஸ் மேன்! பட் தேர் இஸ் நோ வே டு ஃபைன்ட் எ சொலுஷன்!” என்றவள்,

     “மி மித்து, எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் குழந்தையை அபார்ட் பண்ணனும்! அல்ரெடி பேபி ஹேஸ் கம்ப்லீடட் எய்ட்டி சிக்ஸ் டேஸ்.” என,

      “ம் ஓகே ரோசி. நான் பார்த்துக்கறேன். தேங்க் யூ” என்று பட்டென போனை வைத்துவிட,

     “மித்து மித்து!” என்று கத்திய ரோசியின் குரல் அவனுக்குக் கேட்கவில்லை!

     “எ என்னங்க பாப்பா பாப்பா நல்லா இருக்காளா? நான்தான் சொன்னேன்ல! என் சிவன் என்னை இதுக்கு மேலயும் சோதிக்க மாட்டான்னு எனக்கு முழுநம்பிக்கை இருந்துச்சு! என் பாப்பா நல்ல ஹெல்தியாதான் இருப்பா எப்போவும்னு எனக்குத் தெரியும். நீங்கதான் சும்மா டெஸ்ட் அது இதுன்னு பயமுறுத்திட்டீங்க என்னை!” என்று மையு சந்தோஷத்தில் பேசிக் கொண்டே போக,

     “அ ஆமாம்மா! ந நம்ம பாப்பா ரொம்ப ரொம்ப ஹெசல்தியாதான் இருப்பா!” என்றவனின் மனதுள் சொல்லொணா வலி.

     அவனுக்கு அத்தனை வேதனையைத் தாங்கிக் கொண்டு அவள் முன் நிற்பது வெகு சிரமமாய் இருக்க,

     “ஹான் சரி சரி மானும்மா! அதான் ரிசல்ட் ஹேப்பியா வந்துடுச்சே! நான் கொஞ்சம் வெளில போயிட்டு வந்துடவா! ஒ ஒரு வேலை இருக்கு!” என்று அவன் சொல்ல,

     “ம்! அதான் லீவ் சொல்லிட்டீங்கல்ல மாமாகிட்ட! அப்புறம் என்னங்க? நீங்க வீட்ல இருந்தா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்குப் போயிட்டு வரலாம்னு நினைச்சேன்” என்றாள் அவனை வெளியே அனுப்ப மனம் இல்லாதவளாய்.   

     “கோ கோவிலுக்குத்தானே ம்மா, ஈவினிங் கண்டிப்பா போகலாம்!” என்றவன், மனைவியின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு,

     “சரிடா நீ பத்திரமா இருந்துக்கோ. நான் வந்துடறேன்” என்று சட்டென அங்கிருந்து வெளியேறிவிட, மையுவிற்கு சின்னதாய் சந்தேகம் எட்டிப் பார்த்தது மனதுள்.

     ‘என்ன இவரு?! இவ்ளோ ஹேப்பி நியுஸ் சொல்லியும் இப்படி சட்டுன்னு வெளியே கிளம்பிப் போறாரு?! ஒருவேளை நிஜமாவே வேற வேலை எதுவும் இருக்குமோ?!’ என்று யோசித்தவள், அவன் தன் காரை எடுத்துக் கொண்டு வெளியேறுவதை தங்கள் அறையின் ஜன்னல் கதவைத் திறந்து பார்க்க, அவனின் கார் எப்போதும் செல்லும் வேகத்தை விட, அதி வேகமாய் செல்வது போல் இருந்தது அவளுக்கு.

     மனதுள் ஏதோ நெருட, ‘ஒ, ஒருவேளை, பாப்பாக்கு பாப்பாக்கு?!’ என்று யோசித்தவளுக்கு,

     ‘இ இல்லை! பாப்பாக்குல்லாம் எதுவும் இருக்காது! அவ நல்லா இருப்பா! நல்லா இருப்பா!’ என்று மீண்டும் மீண்டும் மனதுள் உருப்போட்டுக் கொண்டு,

     ‘அ ஆனா இவர் இவர் ஏன் இப்படி!’ என்று குழம்பிப் போனாள்.

     ‘ச்சே அந்த ரோசி நம்பரை நாம வாங்கி வச்சிருக்கணும்!’ என்று சொல்லிக் கொண்டு ஜன்னலையே கலக்கத்துடன் வெறித்திருக்க,

     “என்ன மையும்மா! உன் வீட்டுக்காரன் வெளியே கிளம்பிப் போன பிறகும் கூட ரூமை விட்டு வெளியே வரவே இல்லை! இன்னும் உடம்பு சரியாகலையாடா?!” என்று மலர் அவள் அருகே வந்துக் கேட்க,

     “அ அதெல்லாம் இல்லை ம்மா! நல்லாதான் இருக்கேன்” என்றவள்,

     “ம்மா அ அவர் உங்ககிட்ட ஏதாவது சொன்னாரா?!” என்றாள் மலரைப் பார்த்து.

     “ம்! எங்கம்மா?! அவன் இந்த ஒரு வாரமாவே சரியில்லை! இதோ இன்னிக்குக் கூட நான் கூப்பிடக் கூப்பிட காதுல வாங்காம போறான் ஏதோ யோசனையில!” என்று சொல்ல,

     “ஓ!” என்றாள் மையு.

     “என்னம்மா ஏதாவது பிரச்சனையா?” என்று மலர் கேட்க,

     “அ அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா!” என்றவளுள் பிள்ளையைப் பற்றிய பயம் அதிகம் ஆக,

     “அம்மா நான் கொஞ்ச நேரம் உங்க மடியில தலைவச்சுப் படுத்துக்கட்டுமா?!” என்றாள் தயக்கமான குரலில்.

     “ஐயோ என்னடாம்மா?! உடம்புக்கு எதுவும் பண்ணுதா ஹாஸ்பிட்டல் போலாமா?!” என்று மலர் பதற,

     “அ அதெல்லாம் இல்லைம்மா! ப்ளீஸ், நான் உங்க மடியில கொஞ்ச நேரம் படுத்துக்கறேனே!” என்றாள் கண்கள் கலங்க.

     கலங்கிய கண்களுடன் மையுவைப் பார்த்தவரின் நெஞ்சில் ஏதோ இனம் புரியாத பயம் எழ,

     “வா வாடாம்மா!” என்று அவளை மெல்ல அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தவர், தானும் கட்டிலில் அமர்ந்து,

     “வாடா” என்று தாய்மையின் அன்போடு அழைக்க,

     “ம்மா!” என்று உடைந்து போய் அவர் மடியில் படுத்துக் கொண்டவள், தன்னை மீறிக் கேவ,

     “மையு மையும்மா! என்னடா ஆச்சு?! உடம்புக்கு எதுவும் பண்ணுதா?! சொல்லும்மா?!” என்று மலர் கலக்கமாய் அவள் முகம் நிமிர்த்த,

     “ம்மா! ந நான் எ என் குழந்தையும் என்னை மாதிரியே என்னை மாதிரியே” என்றவளுக்கு அதற்கு மேல் சொல்ல நா எழவில்லை!

     “என்னடாம்மா! எதுவா இருந்தாலும் சொல்லுடா!” என்று மலர் பெரும் கவலையுடன் மருமகளின் கண்ணீரைத் துடைத்துவிட்ட படி கேட்க,

     “எ எனக்கு பயமா இருக்கும்மா” என்று ஆரம்பித்தவள், திருமணத்திற்குப் பின் மருத்துவர் சொன்னது, இப்போது டெஸ்ட் எடுக்கச் சென்றது என்று எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் அழுகையோடும் பயத்தோடும்.

     மலருக்கு மருமகளைத் தேற்றுவதா தன்னையே தேற்றிக் கொள்வதா என்று கூடத் தெரியவில்லை!

     ‘இ இந்தப் பையன் எதையுமே எங்கிட்டச் சொல்லலையே?! கடவுளே இது என்ன சோதனை?! என் பிள்ளைகளுக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டத்துக்கு மேல கஷ்டத்தைக் கொடுக்குற? இத்தனை வருஷமா கஷ்டப் பட்ட என் மருமக இப்போ, இங்க வந்த பிறகுதான் நிம்மதியா இருந்தா, அந்த நிம்மதியையும் அவளுக்கு நிலைக்கவிடலயே நீ!’ என்று இறைவனைச் சாடியவர்,

      மருமகள், அழுவதைக் காணச் சகியாமல், “ம்மா! இங்க பார், இங்க பாருடா! அவங்க சொல்ற மாதிரி எல்லாம் எதுவும் ஆகாது. என் பேரக் குழந்தை ரொம்ப, ரொம்ப ஆரோக்கியமா தான் பிறப்பா! நீ கண்டதையும் நினைச்சு மனசப் போட்டுக் குழப்பிக்காதடா!” என்று அவளை ஏதேதோ சொல்லி அழுகையை நிறுத்த வைத்தவர்,

     “வரட்டும் அந்தப் பையன் இன்னிக்கு! எதுக்கு இவன் கண்ட டெஸ்டையும் எடுக்க வைச்சு என் பொண்ணை இப்படி அழ வைக்கிறான்!” என்று பொரிந்த மலர், அருகே இருந்த மையுவின் கைபேசியை எடுத்து மகனது எண்ணிற்கு அழைக்க, அவன் மையுவின் அழைப்பு என்றதும், சட்டென போனை எடுத்து,

     “சொல்லுடா மானும்மா” என்றான் குரலில் சந்தோஷத்தை பொய்யாய் வரவழைத்துக் கொண்டு.

     “நான் அம்மா பேசறேன்டா! எங்க போன நீ அவசரமா?! கிளம்பி உடனே வீட்டுக்கு வா!” என்று மலர் கட்டளையிட,

     “ம்மா! நான் ஒரு முக்கியமான விஷயமா போய்கிட்டு இருக்கேன்ம்மா!” என்று மழுப்ப,

     “எல்லாம் எனக்குத் தெரியும். வீட்டுக்கு வாடா!” என்றுவிட்டு போனை வைக்க, காரை ரோட்டின் ஓரத்தில் நிறுத்திவிட்டு சில நொடிகள் அங்கேயே நின்றிருந்தவன்,

     ‘மானு என்ன சொல்லி வச்சிருக்கான்னு தெரியலையே! இப்போ அம்மாவை வேற சமாளிக்கணுமா?!’ என்று எண்ணி வருந்தியவன், வேறு வழியின்றிக் காரைத் திரும்பவும் வீட்டிற்கே செலுத்தினான்.

                       *******

     அங்கு ப்ரியாவிற்கு ஒன்பதாம் மாதம் ஆரம்பிக்க இருந்ததால், அவளது வளைகாப்பிற்கு நாள் பார்த்துக் கொண்டிருந்தார் அவளின் மாமியார் ராஜம்.

     “எதுக்கு அத்தை இதெல்லாம்?!” என்று ப்ரியா மறுக்க,

      “என்னம்மா இது?! இப்படிச் சொல்ற?! அஞ்சாம் மாசம் பூமுடிப்புத் தாய் வீட்டுச் சம்பிரதாயம்ன்னா, ஒன்பதாம் மாசம் நம்ம வீட்டுலதான் இந்த விழாவை எடுத்துச் செய்யணும். தலைப்பிரசவம் வேற, புருஷன் வீட்டுலன்னு இதைக் கூடச் செய்யலைன்னா எப்படி?!” என்றார் அவர்.

     “ம் ஆனா அதுக்கெல்லாம் நிறைய செலவாகுமே அத்தை!” என்று ப்ரியா கேட்க,

     “ம் அதைக் கூட செய்ய முடியலைன்னா இவன் எதுக்கு அப்பான்னு இருக்கான்?!” என்றார் மகன் பிரேமைப் பார்த்து.

     ‘ம் இவர் இந்தச் செலவை செய்யிறதா இருந்தா அழுதுக்கிட்டேதான் செய்வாரு! அதுக்கு இந்த வளைகாப்பு நடக்காமயே இருக்கலாம்!’ என்று மனதுள் அவள் எண்ணிக் கொண்டிருக்க,

      “என் பிள்ளைக்கு எது எப்படிச் செய்யணும்னு எனக்குத் தெரியும். நீங்க நாள் மட்டும் குறிச்சு சொல்லுங்க!” என்றான் பிரேம் அதிசயமாய்.

    ஆம்! கடந்த சில மாதங்களாக ப்ரியா அவனிடம் முகம் கொடுத்துக் கூடப் பேசாததும், அன்று இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டு பிரேமின் தங்கை, தங்கள் தாய், தந்தை இருவரிடமும் அனைத்தையும் ஒப்பித்து விட, அதன்பின் அவர்களும் அவனுக்கு ஏகபோகமாய் பாடங்கள் எடுக்க, அவன் கொஞ்சமே தன் தவறை உணர்ந்திருந்தான். ஆனாலும் முழுதாய் திருந்திவிட்டானா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னமும் அவனின் பணத்தாசை அவனுள் ஒரு ஓரமாய் இருக்கத்தான் செய்தது. ஆனாலும், ப்ரியாவிடம் தான் அன்று ஓவராகத்தான் பேசிவிட்டோம் என்று மனம் உறுத்த, அவனும் பல முறை அவளிடம் மன்னிப்பு வேண்டி நிற்க, அவள் இன்றளவும் அவனை மன்னிப்பதாயில்லை!

     மனைவிமேல் வருத்தம் இருந்தாலும், வரப் போகும் பிள்ளை மேல் பாசம் இல்லாமல் போய்விடுமா! தன் ரத்தமல்லவா! அவள் பணம் தராவிட்டால் என்ன என்று, மருத்துவமனையில் வேலை செய்வதோடு அல்லாமல், சில வெளி நோயாளிகளுக்கும் அதிகாலையே எழுந்து சென்று பயிற்சி கொடுத்து, மற்ற செலவுகளை அந்த வருமானத்தின் மூலம் சமாளிக்கக் கற்று இருந்தான் பிரேம்.

                           *****

     மித்ரன் வீட்டிற்கு வந்த போது, மையு தங்கமலரின் மடியில் படுத்திருக்க, அவர் அவள் தலையை மெல்ல வருடிக் கொடுத்துக் கொண்டு இருக்கும் அந்தக் காட்சி அவன் கண்ணில் பட,

     ‘குழந்தை விஷயம் மட்டும் தெரிஞ்சதுன்னா, அம்மாவுக்கு மானு மேல இதே அன்பு இருக்குமா?! மானுதான் சந்தோஷமா இருப்பாளா?!’ என்று மேலும் கலங்கிப் போனான்.

     அறையின் வெளியே நின்று மனதை திடப்படுத்திக் கொண்டு முகத்தில் புன்னகையைக் கட்டயமாய்த் தருவித்தவன்,

     “என்ன மாமியாரும் மருமகளும் ஒரே கொஞ்சல்ஸ்?!” என்று கேட்டபடியே அறையினுள் நுழைய,

     “வாடா! என் பொண்ணை அழ வச்சிட்டு அப்படி என்ன அவசரமான வேலைன்னு நீ என்கிட்டக் கூட சொல்லாம கிளம்பிப் போன?!” என்று மலர் மகனைக் கடிய,

     “ஒரு முக்கியமான வேலைம்மா! அதான் கிளம்பிப் போனேன்!” என்று அவன் மழுப்ப,

     “அப்படி என்ன முக்கியமான வேலைன்னு கேளுங்க ம்மா! அதான் ரிசல்ட் நல்லபடியா வந்துடுச்சுல்ல! அப்புறம் எதுக்கு கோவிலுக்குக் கூட என்னைக் கூட்டிட்டுப் போகாம அவ்ளோ வேகமா காரை எடுத்துட்டு எங்கயோ போனார்னு கேளங்க” என்று மையு மாமியாரிடம் முறையிட,

      “ஓ! மானும்மா!” என்று அவள் அருகே வந்து அம்ர்ந்தவனைப் பார்த்த மலருக்கு மட்டும் அவனின் பேச்சில், சிரிப்பில் ஏனோ உண்மை இல்லாதது போலவே தோன்றியது அக்கணம். எனினும் ஏற்கனவே மருமகள் ஏதேதோ யோசித்து பயந்து கொண்டிருக்கும் போது, தானும் அவளைக் கலக்கமுறச் செய்யுமாறு எதுவும் மித்ரனிடம் கேட்கப் போய் அதில் அவள் மேலும் பயந்துவிட்டாள் என்றால்? என்று யோசித்தவர்,

     “என்ன வேலையா வேணா இருக்கட்டும். என் மருமக கோவிலுக்குதானே அழைச்சிட்டுப் போகச் சொன்னா, அழைச்சிட்டுப் போய்ட்டு வந்துட்டுக் கிளம்ப வேண்டியதுதானே!” என்றவர், மித்ரன் அப்படியே நிற்பது கண்டு,

    “இன்னும் என்னடா மசமசன்னு நிக்குற?! அதான் ரிசல்ட் நல்லபடியா வந்துடுச்சுல்ல?! என் மருமகளை கோவிலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு அப்படியே எங்கயாச்சும் வெளில போயிட்டு வாங்க!” என்றவர்,

     “மையும்மா! எழுந்திரு! பாரு முகமெல்லாம் எப்படி இருக்கு?! போ போய் முகம் கழுவிட்டு வா!” என்று அவளை எழுப்பி அனுப்பினார்.

     அவள் குளியலறைக்குள் சென்றதும் மித்ரனின் அருகே வந்தவர்,

     “அவ சந்தோஷம்தான் நமக்கு முக்கியம் மித்ரா! எதையும் அவகிட்டக் காட்டிக்காத! நான் அப்புறமா உன்கிட்டப் பேசுறேன்” என்ற மலர்,

     “மையும்மா… சீக்கிரம் முகம் கழுவிட்டு வாம்மா. நேரமாச்சுன்னா கோவில் நடை சாத்திடுவாங்கல்ல>?!” என்று குரல் கொடுக்க,

     “ஹான் இதோ வந்துட்டேன்ம்மா” என்றபடி கொஞ்சமே தெளிவான முகத்துடன் வெளியே வந்தாள் மையு.

     மனைவியின் நம்பிக்கையையும், தாயின் அன்பையும் பார்த்தவன் மனதுள் சொல்லொணாத் துயரமே எழ, அதை வெளிக்காட்டவும் முடியாமல்,  போலியாய்ச் சிரிக்கவும் முடியாமல் பரிதவித்துப் போய் நின்றிருந்தான் சிலையாய்.

     “டேய் டேய் மித்ரா! மையுவே தயாராகிட்டா இன்னும் என்ன நின்னுகிட்டு. ம் சட்டுன்னு கிளம்பிப் போட்டு வாங்க” என்று மகனுக்குக் கட்டளையிட்டவர், அவனைப் பார்த்து இமைகளை மூடித் திறந்து கவலைப் படாதே என்று கண்ணசைவில் உணர்த்திவிட்டு அவன் கையைத் தட்டிக் கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிட,

     “போங்க! அப்படி என்னதான் உங்களுக்கு திடீர் திடீர்னு வேலை வந்துடுமோ! பிசியோதெரபிஸ்ட் தானே நீங்க! மார்னிங்கே பேஷண்ட்ஸ் பார்க்கிற வேலை முடிஞ்சிடப் போகுது! அதுவும் இன்னிக்கு லீவும் போட்டாச்சு! அப்புறமும் எதுக்கு அப்படி அவசரமா கார் எடுத்துக்கிட்டுப் போனீங்க?! நீங்க போன வேகத்தைப் பார்த்துட்டு நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன் தெரியுமா?! நல்ல வேலையா அப்போ பார்த்து அத்தை வந்தாங்க! இல்லாட்டி ஏதேதோ நினைச்சு பயந்திருப்பேன்” என்று மனதில் தோன்றிய பயத்தை மையு மறையாது சொல்ல,

     “என்ன பயம் என் மானும்மாக்கு?! ம்? அதான் எல்லாம் நல்லப்படியா நடக்குதே” என்றவனுக்குத் தொண்டை அடைத்தது.

    சிறிது நேரத்தில் இருவரும் கோவிலில் இருக்க, அவள் இறைவனிடம்,

     “ஈஸ்வரா, ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா நேத்துல இருந்து! இப்போதான் நிம்மதியா இருக்கு! எனக்குத் தெரியும். நீ என்னை இதுக்கு மேலயும் சோதிக்க மாட்டேன்னு! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ப்பா! என் பாப்பாவ என்னை மாதிரி இல்லாம என் மித்து மாதிரி நல்ல ஆரோக்கியமா உருவாக்கினதுக்கு! என் பாப்பா எப்போவும் ஆரோக்கியமா இருக்கணும். சரியா?” என்று மையு கண்மூடி இறைவனிடம் நன்றி சொல்லிக் கொண்டிருக்க,

     “ஏன் எங்களுக்கு இப்படி ஒரு வலியைக் குடுக்குற கடவுளே! என் மானுவைதான் இப்படி வாழ்நாள் பூரா கஷ்டப் படுற மாதிரி வச்சிட்ட! இப்போ இப்போ எங்க குழந்தைக்கும் அதே கொடுமையை செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது?! இந்த, இந்த உண்மை தெரிஞ்சா என், என் மானும்மா எவ்வளவு உடைஞ்சு போயிடுவா?! பாரு, அவ எவ்ளோ சந்தோஷமா உன்கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கா!” என்று அவன் மனம் துவள இறைவனிடம் முறையிட்டுக் கொண்டிருக்க,

     “என்னங்க? என்ன என்னிக்கும் இல்லாம இவ்ளோ நேரம் வேண்டிக்கிட்டு இருக்கீங்க?!” என்று மையு அவனை அழைக்க,

     “ஹா ஹான், சந்தோசமா இருக்கு மானும்மா! ரொம்ப சந்தோஷமா இருக்கு!” என்றவன், நெற்றியில் அவள் திருநீற்றை இட, அவன் கண்களில் துளிர்த்த கண்ணீர் அவள் கையில் பட்டுத் தெரித்தது…

                            -மான்விழி மருகுவாள்…  

    

    

      

      

        

    

 

 

 

      

 

Advertisement