Advertisement

                                                                          37

     மையு சொன்ன நல்ல செய்தியால் வீட்டில் இனிப்பு பலகாரம் என்று தங்கமலர் வீட்டையே விசேஷ நாள் போல் மாற்றிக் கொண்டிருக்க, தங்கள் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்ற மையுவிற்கு அப்போதுதான், இந்த நல்ல விஷயத்தைத் தன் வீட்டினரிடமும் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது.

     ‘அம்மா என்ன நினைக்குமோ தெரியலை! ஆனா காயு ரொம்ப சந்தோஷப் படுவா!’ என்று எண்ணிய மையு,

     ‘அவர் வெளிய ஹால்ல தானே இருக்கார் அவர் வரதுக்குள்ள போன் பண்ணிப் பேசிடுவோம்!’ என்று தங்கைக்கு அழைக்க,

     “அக்கா வீட்டுக்குப் போயிட்டீங்களா? சாரிக்கா, நானே போன் பண்ணனும்னு இருந்தேன். இந்த அம்மா பண்ண டென்ஷன்ல அப்படியே உட்கார்ந்துட்டேன்.” என,

      “சரி சரி அதெல்லாம் விடு! இப்போ அக்கா உனக்கு எதுக்கு கால் பண்ணேன்னு கண்டுப் புடி பார்க்கலாம்!” என்று மையு பீடிகை போட,

     ‘என்ன?! அக்கா ரொம்ப சோகமா அழுதுட்டே போனாளே? இப்போ இவ்ளோ சந்தோஷமா இருக்கான்னா?!’ என்று யோசித்தவளுக்கு மையு வாந்தி எடுத்தது நினைவுக்கு வர,

     “அ அக்கா ஏதும் விசேஷமா?!” என்று மகிழ்ச்சியில் துள்ளலாய் வினவ,

    “ம் ம்!” என்றாள் மையு சிரிப்பினூடே.

    “ஐ! அக்கா நிஜமாவா! ஐயோ நீ இப்போ என் பக்கத்துல இல்லையே! உம்மா உம்மா!” என்று காயு போனிலேயே தன் அன்பு முத்தங்களைப் பரிசளிக்க,

    “என்னடி இது கருமம்?! போன்ல முத்தம் கொடுத்துக்கிட்டு இருக்க?!” என்று சாந்தி காயத்ரியைத் திட்ட,

    “ம்!” என்று முறைத்துவிட்டு,

    “லவ் யூ லவ் யூ மையுக்கா!” என்றவள்,

    “அப்பாகிட்ட பேசுறியா அக்கா?!” என,

    “ம் குடுடி!” என்ற மையு,

    “ப்பா! மையுக்கா மாசமா இருக்கலாம்!” என்று சந்தோஷித்த படியே போனை கொடுக்க,

     “அம்மாடி!” என்ற முருகேசனிடம்,

     “ப்பா!” என்று மையுவும் வேறு எதுவும் பேச முடியாமல் பாசத்தோடு நெஞ்சம் விம்ம அழைக்க,

     “ரொம்ப, ரொம்ப சந்தோஷமா இருக்குடா! உனக்கும் அந்த தெய்வம் மனசிரங்கி நல்ல வாழ்கையை அமைச்சுக் கொடுத்துடுச்சு ம்மா! இது போதும் இது போதும்மா எனக்கு!” என்று உணர்ச்சிவயப்பட, இதேல்லாம் கேட்டும் பார்த்தும் கொண்டிருந்த சாந்திக்கோ,

     “பார்த்தியா இந்த பொண்ணு?! ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லுறாளா?! இவ மாசமா இருக்கான்னு தெரிஞ்சா நானும் சந்தோஷம் தானே படுவேன்” என்று முணுமுணுக்க,

    மையு சிறிது நேரம் தந்தையிடம் பேசிவிட்டு, “ப்பா அம்மா பக்கத்துல இருக்கா?” என,

     “ம் இருக்கா இருக்கா” என்று முருகேசன் சலிப்பாய்க் கூற,

     “போனை அம்மாகிட்ட குடுப்பா”

     “எதுக்கும்மா இப்போ அவகிட்ட?!”

     “ப்ச் குடுப்பா” என்றதும் முருகேசன் சாந்தியிடம் போனை நீட்ட, முறைத்துக் கொண்டே வாங்கியவர்,

     “ஏன்டி எல்லா பொண்ணும் முதல்ல அம்மாகிட்ட தான் இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்லனும்னு ஆசைப்படுவாங்க! நீ என்னமோ உன் தங்கச்சிக்கு போன் போட்டு சொல்லுற?!” என்று அப்போதும் சாந்தி குறை கூற,

     “ம்! எல்லா அம்மாவும் பொண்ணு மாசமா இருக்குன்னா, ஆசை ஆசையா போனை வாங்கி எப்படிடா இருக்கன்னு கேட்பாங்க! ஆனா நீ இப்போ கூட குறைதான் கண்டுபிடிக்கிற” என்ற மையு,

     “நீ இத்தனை நாள் சொல்லுவ இல்லைம்மா அதுபோல நான் தெண்டம் இல்லைம்மா. நானும் ஒரு குழந்தைக்குத் தாயாகிட்டேன்!” என்று சொல்ல, சாந்திக்கு பளீரென்று மகள் தன் கன்னத்தில் அறைந்தது போல் ஆனது.

     மறுவார்த்தை பேச முடியாமல் அவர் போனைக் கணவரின் கையில் கொடுத்துவிட்டுச் சென்றுவிட, மித்ரன் ஹாலில் இருந்தபடி,

     “மானும்மா!” என்று குரல் கொடுக்க,

     “ப்பா! சரிப்பா! அவர் சாப்பிடக் கூப்பிடுறார். நான் அப்புறமா பேசுறேன்” என்று போனை வைத்துவிட்டு மெல்ல எழுந்து நடந்து கூடத்திற்குச் சென்றாள்.

     அங்கு அவள் கொஞ்சமும் எதிர்பாராத வண்ணம் அவ்வளவு சீக்கிரத்தில் பூஜை அறையில் அத்தனைப் பலகாரங்களும், ஐவகை சாதங்களும் இறைவன் முன்னிலையில் இலையில் பரிமாறப்பட்டு, விளக்கேற்றி வைக்கபட்டிருக்க,

     “வாம்மா! வந்து உன் கையால சுவாமிக்கு தீப ஆராதனைக் காட்டு” என்று அவளை அருகே அழைத்து மலர் தீப கொலுசை நீட்ட,

     “எப்படி எப்படி அத்தை இதெல்லாம் இவ்வளவு சீக்கிரத்துல?!” என்று வியந்தபடியே மையு இறைவனுக்கு தீபாராதனைக் காட்டிவிட்டு, தங்கமலரிடம் கொடுக்க, மற்றவர்களும் இறைவனை வழிபட்டுவிட்டு வெளியே டைனிங் ஹாலுக்குச் சென்று உணவருந்த அமர்ந்தனர். விருந்து உற்சாகமாய் நடைபெற, விவரம் கேள்விப்பட்டு, சாரு, ப்ரியா என்று அனைவரும் மையுவிற்கும், மித்ரனுக்கும் கைப்பேசி மூலம் அழைத்து வாழ்த்துக் கூற அவர்கள் இல்லம் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தது.  

     ஒருமாதம் கழித்து, ‘என்ன இவர் இவ்ளோ நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவே இல்லை?! மாமாவே வீட்டுக்கு வந்துட்டார். இவரை இன்னும் காணோமே. போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறார்! மெசேஜ் பண்ணாலும் ரிப்ளை இல்லை!’ என்று மித்ரன் மேல் கடும் கோபத்தில் இருந்தாள் அவனின் அன்பு மனைவி.

     அன்றைய இரவு உணவிற்கு கூட யாரும் அவளை சாப்பிட அழைக்காது போக,

     “என்னாச்சு?! அத்தை இத்தனை நாளா எவ்ளோ ஆசையா எனக்கு ஏதேதோ பலகாரமெல்லாம் செய்து கொடுத்து அசத்துநாங்க! இன்னைக்கு என்னன்னா என்னைக் கண்டுக்கவே இல்லை!’ என்று சோகமாய் ஏதேதோ யோசித்தபடி அமர்ந்திருந்தாள் மையு.

     அப்போது ராதா, தங்கமலரிடம், “அத்தை என்ன மித்ரன் இன்னும் வரவே இல்லை?! மையுவையாவது சாப்பிடக் கூப்பிடவா?!” என்று கேட்க,

     ஏதோ சொல்ல வந்தவர், மையு அவள் அறையில் இருந்து வெளியே வருவதைப் பார்த்துவிட, சட்டென தான் சொல்ல வந்ததை மறைத்து, கண்ணை மட்டும் மையுவின் புறம் ராதாவிற்குச் சுட்டிக் காட்டிவிட்டு,

     “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ராதா! அவ புருஷனுக்கு அவளைப் பார்த்துக்கத் தெரியும். அவன் வந்து அவளுக்கு சாப்பாடு போடுவான்” என்று தங்கமலர் சொல்ல, அது மையுவிற்கும் கேட்டுவிட, அவள் அப்படியே தங்கள் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள் சோகமாய்.

    ‘அத்தை என்கிட்டே நேரடியா பேசாம இருக்கும் போது கூட என்னை சாப்பிடக் கூப்பிடாம இருக்க மாட்டாங்களே?! இப்போ திடீர்னு என்மேல என்ன கோவம்?!’ என்று எண்ணியவளுக்கு, கோபமும், கழிவிரக்கமும் சேர்ந்தே வர,

     “டேய்! புருஷா! இவ்ளோ நேரமா எங்கடா போன?! ஒழுங்கா சீக்கிரம் வந்துடு! செம கடுப்புல இருக்கேன்!” என்று மையு மெசேஜ் அனுப்ப, அதைப் பார்த்திருந்தவனுக்கு அத்தனை சிரிப்பு,

     “இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோம்மா என் செல்லப் பொண்டாட்டி!” என்று அவன் பதில் அனுப்ப,

    “மெசேஜ் அனுப்ப மட்டும் நேரம் இருக்கு. இங்க வர நேரமில்லையாய்யா உனக்கு?!” என்று அவள் மீண்டும் பதில் அனுப்ப, அவன் பதிலுக்கு ஹார்டின் ஸ்மைலி அனுப்ப, அவள் கோப ஸ்மைலி அனுப்ப,

     “இப்படியே நீ மெசேஜ் பண்ணிட்டு இருந்தா இன்னும் லேட் ஆகும் ஓகேவா?!” என்று அவன் கேட்க, கல் கொண்டு அடிப்பது போல் ஒரு பொம்மையை அனுப்பிவிட்டு செம காண்டில் அவர்களது திருமண புகைப்படத்தைப் பார்த்து,

     “நேர்ல வாடா மொத்து மொத்துன்னு மொத்துறேன்!” என்றவள், எல்லோரும் வெளியே சாப்பிட்டும் விட்டு எழுந்து செல்லும் அரவம் கேட்க,

     ‘உலகத்துலேயே மாசமா இருக்க மருமகளைப் பட்டினி போட்டுட்டு குடும்பமே மொக்கிட்டு எழுந்து போறது இந்த வீட்லதான் நடக்கும்!’ என்று முணுமுணுத்துக் கொண்டவள்,

     “மானும்மா கொஞ்சம் மெதுவா நடந்து மொட்டை மாடிக்குப் போய் அங்க என்னோட முக்கியமான சர்ட் ஒன்னு காயப் போட்டிருக்காங்க அம்மா. அதை எடுத்து வந்து கொஞ்சம் அயன் பண்ணி வைக்கிறியா?! நைட் ஒரு முக்கியமான பிரெண்ட்ஸ் பார்ட்டிட்க்கு கிளம்பணும்!” என்று அவன் மீண்டும் மெசேஜ் அனுப்ப,

    “அடேய் புருஷா! என்னை பார்த்தா எப்படித் தெரியுது உனக்கு?! என்னதான் நீ கொஞ்சம் நடக்கக் கத்துக் குடுத்துட்டன்னாலும், இப்படியா நீ பக்கத்துல இல்லாத நேரத்துல தனியா மொட்டை மாடிக்கு நடந்து போய், அதுவும் துணியை எடுக்க என்ன மேல போகச் சொல்லுவ?!” என்று கடுப்பானவளுக்கு, அப்போதே ஏதோ உறுத்த,

    “இல்லையே! துணி எடுக்கணும்னா அத்தைக்கு தானே போன் பண்ணி இருப்பாரு?! ஏதோ விளையாடுறாரு!” என்று வாய்விட்டு முனகியவள்,

     “ம் போய்தான் பார்ப்போம் என்னன்னு?!” என்று எண்ணியபடி மெல்ல எழுந்து மொட்டை மாடிக்குச் செல்ல, தங்கமலர் அவள் தனியாய்ச் செல்வதை எண்ணி பயந்து,

     “இந்தப் பையனை என்னதான் சொல்றதோ?! சர்ப்ரைஸ் கொடுக்கறதை, அவனே வந்துக் கூட்டிட்டுப் போய் குடுக்கக் கூடாதா?!” என்று முனகியபடி, மருமகள் பத்திரமாய்ப் படி ஏறிச் செல்கிறாளா என்று பின்னே இருந்துப் பார்த்துவிட்டு, அவள் படி ஏறி மாடிக்குச் சென்றதும் தங்கள் அறைக்குச் சென்றார்.

    

Advertisement