Advertisement

                                                             

 “அச்சச்சோ! என்னங்க இது?! இன்னும் சாரு அக்கா,  ராதா அண்ணி குட்டீஸ் எல்லோருக்கும் எடுக்கணுமே?!” என்று அவள் கணக்குப் போட்டுவிட்டு விழிக்க,

     “எல்லோருக்கும் எடுத்துக்கோ மானும்மா!” என்றான் மித்ரன்.

     “ம்! என் சம்பளத்துலதானே எடுக்கணும்னு ஆசைப் பட்டேன்!” என்று தயங்கியவள்,

     “அப்போ அடுத்த மாசம் பணம் வந்ததும் உங்ககிட்ட திருப்பிக் கொடுத்துவேன். சரியா?!” என,

     “அப்போ நான் சம்பாதிக்கிறது உன் பணமில்லையா?!” என்றான் சட்டென முகம் மாற.

     “ஐயோ! நான் அப்படி சொல்ல வரலைங்க!” என்று அவள் தான் சொன்னதை எண்ணி வருத்தம் கொள்ள,

     “நானே உனக்கு உரியவன்கிற போது எனக்குரிய எல்லாமே உனக்கும் உரியதுதானே மானும்மா! இனிமே நீ இப்படி எல்லாம் யோசிக்கக் கூடக் கூடாது!” என்றதும்,

     “ஷப்பா! தெரியாம சொல்லிட்டேன். நோ பிலாசபி சாமி!” என்று அவள் முற்றுப் புள்ளி வைக்க, எல்லாம் எடுத்து முடித்த பின் அவள் எங்கு போக வேண்டும் என்று சொல்வாள் என்று புரிந்து,

     “நேரா நம்ம வீட்டுக்குத்தான் போவேன். உங்க அம்மா, அப்பாவை நம்ம வீட்டுக்கு வரச் சொல்லு! அங்கல்லாம் அழைச்சிட்டுப் போக மாட்டேன்” என்று அவள் ஆரம்பிக்கும் முன்பே தடை போட, அவள் முகம் சுணங்கிப் போனது.

     “ப்ச்! இதெல்லாம் ரொம்ப மோசம்ங்க! கல்யாணம் ஆனா நாள்ல இருந்து இன்னும் ஒரு முறை கூட நீங்க என்னை அங்க அழைச்சிட்டே போகலை!” என்றாள் மையு கோபம் கொண்டு. அவள் பேச்சக்கு கொஞ்சமும் ரியாக்ட் செய்யாமல் அவன் அமைதியாகவே காரைச் செலுத்த,

     “என்னங்க ப்ளீஸ்?! ரொம்ப ஆசையா இருக்குங்க! இந்த ஒருவாட்டி! ஒரேஒருவாட்டி!” என்று கோபம் துறந்து அவள் கெஞ்சத் துவங்க, அப்போதும் அவன் இறங்கவில்லை.

     நெடுநேரம் அவள் கெஞ்சியும் அவன் மனமிறங்காமல் போக, இறுதியாய்,

     “நீங்க மட்டும் இன்னிக்கு என்னை அங்க அழைச்சிட்டுப் போகலைன்னா நான் ஒருவாரத்துக்கு உங்ககிட்ட பேசமாட்டேன்!” என்று அவள் இப்போது மிரட்டலுக்குத் தாவ, அவள் புறம் திரும்பி முறைத்தவன்,

     “கூட்டிட்டுப் போறேன். ஆனா யாராவது ஏதாவது ஏடாகுடமா பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன்” என்ற எச்சரிக்கையுடன் அவன் அழைத்துச் செல்ல,

     “ஈஸ்ரவா இந்த அம்மா கண்டதையும் பேசாம இருக்கணும் இன்னிக்காச்சும்!” என்று வேண்டிக் கொண்டாள் மையு.

     அவர்கள் வீட்டை அடைந்ததும் காயு, ஆசையாய் ஓடி வந்து அக்காவையும், மாமவையும் வரவேற்க,

     “என்னடி அம்மாவையும், அப்பாவையும் காணோம்?!” என்றாள் மையு.

     “பக்கத்துல இருக்க கோயிலுக்குத்தான் போயிருக்காங்க. இப்ப வந்துடுவாங்க அக்கா” என்றவள்,

     “இருங்க மாமா. நான் போய் ஏதாவது ஜீஸ் வாங்கிட்டு வந்துடறேன்” என்று காயு ஓட,

     “அதெல்லாம் வேணாம்டி பால் இருந்தா காபி மட்டும் போடு போதும்!” என்று மையு சொல்ல,

     “பால் கொஞ்சம்தான் க்கா இருக்கு! இதோ ஒரு நிமிஷத்துல வாங்கிட்டு வந்துடறேன்” என்று ஓட்டமாய் ஓடினாள் காயு.

     அவள் சென்றதும், மையு, ஹாலில் தான் எப்போதும் படுத்திருக்கும் கட்டில் இல்லாததைக் கண்டு, கடந்த காலத்தில் அவள் அம்மா,

     “கட்டிலை பெட் ரூம்ல போட முடியாம, இவளால ஹால்லேயே போட்டுக் கெடக்கு வேண்டி இருக்கு!” என்று கட்டில் ஹாலில் இருப்பது பிடிக்காமல் எப்போதும் திட்டிக் கொண்டே இருந்தது நினைவிற்கு வர, அவளுக்குத் தொண்டை அடைத்தது.

     ‘எத்தனை நாள் இந்தக் கூட்டுக்குள்ள பாசத்துக்கும் அன்புக்கும் அக்கறைக்கும் ஏங்கித் தவிச்சிருக்கேன், பேசக் கூட ஆள் இல்லாம!’ என்று கசப்பான நினைவுகளே மேலெழும்ப, அவளுக்கு சட்டென கண்களும் கலங்கிவிட, எங்கு மித்ரன் கவனித்தால் கோபம் கொள்வானோ என்று சடுதியில் தலை குனிந்து அவளின் கண்ணீர்த் துளிகளை அவள் துடைத்துக் கொண்டாள்.

     ஆனாலும் அவளையும், அவள் நினைவுகளையும் சேர்ந்தே கண்டு கொண்ட அவளது கணவன் அறிய மாட்டான என்ன அவளின் செயலை.

     ‘எல்லாப் பெண்ணுக்கும் அவங்க அம்மாவீட்டுக்கு வந்தா சந்தோஷத்துல கண்கலங்கும். ஆனா என் மானும்மாவுக்கு?! இதுக்குத்தான், இதுக்குத்தான் நான் அவளை இங்க கூட்டிட்டே வரக் கூடாதுன்னு இருந்தேன். எங்க கேட்குறா?!’ என்று மனதோடு அவன் வருந்திக் கொண்டிருக்க, அவன் வருத்தத்தையும் கோபத்தையும் அதிகரிக்கும் வண்ணம், அப்போதே வீடு திரும்பி உள்ளே வந்த சாந்தி,

     “அடியே நீ எங்கடி இங்க?! சொல்லிட்டு வரக் கூடாது?!” என்று ஏடாகுடமாய்க் கேட்டு வைக்க, மித்ரன் மேலும் கடுப்பானான்.

     அம்மாவின் கேள்வியில் முதலில் அவள் மித்ரனையே நிமிர்ந்து பார்க்க, அவன் முகத்தில் இருந்து கோபம் தெரிந்து,

     “ப்ளீஸ்ங்க!” என்று அவள் கண்களால் கெஞ்ச,

     “என்னடா எப்படி இருக்க?!” என்று கேட்டபடியே வந்த முருகேசனின் அன்பான வார்த்தைகள் இருவரையும் சற்றே ஆசுவாசப் படுத்தியது.

     “நல்லா இருக்கோம் ப்பா!” என்று புன்னகையுடன் கூறிய மையு,

     “ப்பா! நான் என்னோட முதல் சம்பாதியத்துல உனக்கும், அம்மா, காயத்ரிக்கும் ட்ரெஸ் எடுத்துட்டு வந்தேன். இங்க பாருங்க!” என்று அவள் ஆசையாய் தந்தையிடம் நீட்ட,

     “இது என்னடி அதிசயம்?! நீ சம்பாதிச்சியா?! எப்படி?!” என்று சாந்தி நம்பாமல் கேட்க, மையு நடந்ததைச் சொல்ல, காயு சந்தோஷமும் ஆச்சர்யமுமாய் அக்காவைப் பார்க்க,

     “பார்த்தீங்களாங்க! இங்க இருக்க வரைக்கும் தெண்டமா இருந்துட்டு, புருஷன் வீட்டுக்குப் போனதும் சம்பாதிச்சுக் குடுக்குறதை?!” என்று சாந்தி அதற்கும் மனம் நோகப் பேச, மித்ரன் ஏகத்திற்கும் எரிச்சலுற்றான்.

     “கிளம்பலாமா மானு!” என்று அவன் கேட்ட தோரணையிலேயே அவன் கோபம் புரிய,

     “ஹான் சரிங்க!” என்றவள்,

     “ம்மா! ப்பா! காயு ட்ரெஸ் புடிச்சிருக்கா?!” என்றாள் ஆசையாய்.

     “ரொம்ப புடிச்சிருக்குக்கா!” என்று காயு அக்காவைக் கட்டிக் கொண்டு முத்தம் பதிக்க,

     “ம் நல்லாதான் இருக்குடி!” என்ற சாந்தி,

     “உன் தம்பிக் குடும்பத்துக்கும் எடுத்திருக்கலாம்ல!” என,

     “எடுத்திருக்கேன்ம்மா” என்று அதையும் மையு எடுத்துக் கொடுக்க, அதற்குள் காயு காபியும், பக்கத்துக் கடையில் வாங்கி வந்திருந்த சமோசாவையும் அவர்களிடம் நீட்ட,

    “ஐ ரவி அண்ணா கடை சமோசாவா? ரொம்ப நாள் ஆச்சுடி சாப்பிட்டு” என்று மையு ஆசை ஆசையாய் எடுத்துச் சாப்பிட ஒரு சமோசாவை உள்ளே தள்ளியதும் அவளுக்கு வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வர, அவள் வாந்தி எடுப்பதைப் போல் வருவதைப் பார்த்த மித்ரன், சட்டென அதைத் தன் கைகளில் ஏந்த, அங்கிருந்தவர்களுக்கு அவனது அன்பைக் கண்டு சந்தோஷம் எழுந்தாலும், சாந்தி வெடுக்கென,

     “இன்னும் கண்டதையும் தின்னுட்டு தின்னுட்டு வாந்தி எடுக்குற பழக்கம் போகலையாடி உனக்கு! இங்க என் உசிரை எடுத்த மாதிரி அங்க இவரு உசிரை எடுத்துட்டு இருக்கியா?!” என, மையுவிற்கு ஏதோ போல் ஆகிவிட்டது.

     இங்கு இருந்தவரை ஒருவருக்கு பாரமாய் இருக்கிறோம் என்று நச்சரித்துக் கொண்டே இருந்த மனம் அங்கு அவனது கவனிப்பில் அதெல்லாம் மொத்தமாய் மறந்து போயிருக்க,

     ‘ஆமால்ல! நான் எங்க இருந்தாலும் யாருக்காச்சும் பாரமாத்தான் வழுறேன்ல!’ என்று நினைத்த மையுவிற்குச் சட்டென கண்கள் கலங்கி கண்ணீர் வந்துவிட,

    அவள் எடுத்த வாந்தியைக் கொட்டிவிட்டு வந்து மனைவியைச் சுத்தம் செய்தவன், அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு,

     “கூட்டிட்டுப் போ கூட்டிட்டுப் போ ன்னு தினமும் நச்சரிச்சியே, ஏன் உன்னை இங்க கூட்டிட்டு வரலைன்னு இப்போ புரியுதா?!” என்றவன்,

     “என் பொண்டாட்டி என்னிக்குமே எனக்கு பாரமா இருந்ததில்லை! என் வாழ்க்கையோட வரமாத்தான் அவ எனக்குத் தெரியுறா?! ஏன்?! என் குடும்பத்துக்கே அவ வரமாத்தான் இருக்கா! உங்களுக்கு பாரமா தெரிஞ்சிருக்கான்னா, அது உங்களோட கேவலமான எண்ணத்தோட பிரதிபலிப்பு!” என்றவன், மனைவியை அழைத்துக் கொண்டு வேகமாய் வெளியேற, முருகேசன் மனைவியின் பேச்சால் அவரை முறைத்தபடி நிற்க,

     “உனக்கு எல்லாம் எப்போவுமே அறிவே வராதாம்மா! கல்யாணமாகி முதமுதல்ல இப்போதான் வீட்டுக்கு வந்தா! அவளை இப்படிப் பேசி அழ வச்சு அனுப்பறியே! ச்சே!” என்று சொல்லிவிட்டு அக்காவை வழியனுப்ப வெளியே ஓடினாள் காயு.

     “மாமா! மாமா!” என்று மனைவியை காருக்குள் அமர்த்திக் கொண்டிருந்த மித்ரனை காயத்ரி சமாதானப் படுத்தும் எண்ணத்தில் அழைக்க, அவனோ பதிலே பேசாமல் மையுவை வாகாய் அமர வைத்துவிட்டு, கதவை மூடிவிட்டு டிரைவிங் சீட்டை நோக்கிச் சென்றான்.

     “மையுக்கா! ப்ளீஸ் மாமாவைக் கொஞ்சம் நிக்கச் சொல்லேன்!” என்று அக்காவிடம் கெஞ்ச,

     “என்னங்க, ப்ளீஸ்! ஒரு நிமிஷம்!” என்ற மையு,

     “காயும்மா! நான் எவ்ளோ ஆசை ஆசையா இங்க வந்தேன் தெரியுமா?! அவர் என்னை இங்க அழைச்சிட்டே வரமாட்டேன்னு சொன்னார் அம்மா குணம் தெரிஞ்சுதான்! ஆனா அம்மா இப்படிப் பேசி எப்போவுமே என்னை இங்க வர முடியாதபடி செஞ்சுடுச்சு!” என்று கண்கள் கலங்கக் கூறிய மையு,

    “நீ நீயாச்சும் என்னை மறக்காம இருப்பியாடி?!” என்று தங்கையின் கைகளைப் பற்றிக் கொண்டு அழ, காயத்ரிக்கும் அழுகை பொங்கியது.

     “அக்கா என்னக்கா நீ?! என்னைப் போய் அப்படிக் கேக்குற?! நான் என்னிக்குக்கா உன்னை மறந்திருக்கேன்! நீ எப்போவும் என் செல்ல மையுக்காவாச்சே!” என்று கண்ணீர் சிந்த மித்ரனின் மனது சற்றே இளகியது. ஆனாலும் மனைவியைக் கண்ணீர் சிந்த வைக்கும் எந்த உறவும் இனி அவளுக்கு வேண்டாம் என்று முடிவெடுத்தவன்,

     “இனி உன் அக்காவைப் பார்க்கணும்னா நீ மட்டும் அவளை வந்து பார்த்துக்கோ காயு! இந்த ஜென்மத்துல இனி இந்த வீட்டுக்கு அவளைக் கூட்டிட்டு வர மாட்டேன்” என்ற மித்ரன்,

     “போலாம் மானு!” என, சகோதரிகள் இருவரும், பிரிய மனமில்லாமல் விடை கொடுத்ததும், விடை பெற்றும் பிரிந்தனர் தாயின் துடுக்கான பேச்சுக்களால்.

     கார் கண்களை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றிருந்த காயத்ரி, வீட்டினுள் சென்றதும், சாந்தியிடம் கோபத்தைக் காண்பிக்க, அங்கே ஒரு போராட்டம் வெடித்தது. ஆண் பிள்ளைகள் என்ன தவறு செய்தாலும் உயர்த்திப் பார்க்கும் சில பெற்றோர்களின் உள்ளம் பெண் பிள்ளைகள் எவ்வளவு அன்பு வைத்தாலும் அதை பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை இந்த காலத்திலும் சில இல்லங்களில்.

     சிறிது தூரம் சென்ற பிறகும் கூட, மித்ரன் மையுவிடம் எதுவும் பேசமலேயே வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்க,

     “சாரிங்க!” என்றாள் அவளே சமதானப் படுத்தும் முயற்சியுடன்.

     அவன் பதில் ஏதும் கொடுக்காமல் அமைதியாகவே வண்டியைச் செலுத்த,

     “தப்புதான். இனி நான் கூட்டிட்டு போக சொல்லித் தொல்லை பண்ண மாட்டேன்!” என்று அவள் சரணடைய, அவன் அப்போதும் அவள் புறம் திரும்பக் கூட இல்லை!

     “ப்ச்! இப்போ என்ன? என்னைத்தானே என் அம்மா திட்டுச்சு! உங்களுக்கேன்னா அவ்ளோ கோவம் வருது?!” என்று அவள் இப்போது கெஞ்சலை விட்டு மிஞ்ச,

     “இப்போ நீ அவங்க பொண்ணு இல்லை! என் பொண்டாட்டி! என் பொண்டாட்டியை யாராவது சின்னதா காயப்படுத்தினா கூட அவங்க எனக்கு எதிரிதான்” என்று அவள் முகத்தை நேருக்கு நேர் பார்த்து, முறைத்தபடி சொல்லிவிட்டு மீண்டும் ரோட்டில் கவனத்தை வைத்து வண்டியைச் செலுத்த, மையுவிற்கு மீண்டும் வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வருவது போல் இருக்க,

     “எ என்னங்க! எனக்கு திரும்ப வாமிட் வர மாதிரி இருக்குங்க! சீக்கிரம் வண்டியை கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க!” என, அவன் சட்டென்று வண்டியை ஓரம் கட்டினான்.

     மையு திரும்பவும் வாந்தி எடுக்க, அருகில் இருந்த டீக்கடை ஒன்றில் சுடுநீர் வாங்கி வந்து அவளுக்கு வாய் துடைத்து, கொஞ்சமாய் புகட்டி வாய் கொப்பளிக்க வைத்து விட்டு, அவளைச் சாய்வாய் ஓய்வெடுக்கும் வகையில் படுக்க வைத்துவிட்டு உள்ளே வந்து வண்டியை எடுத்தவனுக்கு, மனதில் ஏதோ உந்த சட்டென திரும்பி மனைவியைப் பார்த்தான் கலக்கத்துடணும் சந்தோஷத்துடனும்…  

                            -மான்விழி மயக்குவாள்…

          

      

   

 

    

        

    

Advertisement