Advertisement

        35

     மித்ரன் கொடுத்த அளவிலாக் காதலும், அன்பும் மையுவைப் புதுப்பிறவி எடுத்தவளைப் போல் அத்தனை உற்சாகமாய் இயங்கச் செய்ய, அவளின் முயற்சியும் சேர்ந்து மையுவின் உடல்நிலையில் மிகுந்த முன்னேற்றத்தைக் கொடுத்தது.

     நாளடைவில், அவன் ஆசைப்படியே அவள் கொஞ்சம் கொஞ்சமாய் தானே தனியாய் சில அடிகள் தூரம் எடுத்து வைத்து நடக்கும் அளவிற்கு தேறி இருந்தாள். அவன் வீட்டில் இல்லாத சமயங்களில் அவளே எழுந்து வீல் சேரில் அமர்ந்து வீட்டின் கூடத்திற்கும், சமையலறைக்கும் செல்லும் அளவிற்கு வந்திருந்தாள் என்றால் பாருங்களேன்.

     அதோடு மித்ரன் சேர்த்து விட்ட ஆன்லைன் கிளாஸ் மூலம், மையு போட்டோஷாப் வோர்கிலும் நன்கு கற்றுத் தேறி இருக்க, இப்போது சின்ன சின்ன எடிட்டிங் வேலைகளும் செய்து கொடுக்க ஆரம்பித்திருந்தாள். அது வாடிக்கையாளர்களிடையே நல்ல பாராட்டையும் அவளுக்குப் பெற்றுத் தர, மித்ரனின் நண்பன் அவளிடமே மற்ற எடிட்டிங் வேலைகளையும் கொடுத்து அவளுக்கு அதற்குரிய பணத்தையும் அவளது வங்கிக் கணக்கில் செலுத்திவிட, அந்த மாதம் முழுக்க அவள் செய்த வேலைக்காய் கிடைத்த முதல் சம்பளம் பத்தாயிரம் ரூபாயைத் தாண்டியிருந்தது.

     பத்தாயிரம் ரூபாய் என்பது இந்தக் காலத்திற்குப் பெரிய தொகை இல்லை என்றாலும், தான் எப்போதும் வெட்டியாய்ப் பொழுதைக் கழித்துக் கொண்டு எதுவுமே செய்ய இயலாமல் எல்லாவற்றிற்கும் மற்றவர்கள் கையை எதிர்பார்த்து நின்றிருந்த காலம் மிகக் கொடுமையான காலமல்லவா அவளுக்கு.

     எப்போதடா தனது அக்கவுண்டில் இருக்கும் தனது முதல் சம்பாத்தியத்தின் தொகையைக் கணவனிடம் காண்பிப்போம் என்றுக் காத்திருந்த மையுவிற்கு, அவன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வரை காத்திருக்கப் பொறுமையின்றி போக,

     “என்னங்க எவ்ளோ நேரம்ங்க?! இன்னிக்கு பார்த்து இவ்ளோ லேட் பண்றீங்க?!” என்று போனைப் போட்டு நச்சரிக்க ஆரம்பித்து விட்டிருந்தாள்.

     “வந்துடறேன்ம்மா. இன்னும் அரைமணி நேரத்துல அங்க இருப்பேன். சரியா?” என்று மித்ரன் அவளை சமாதானப் படுத்தியும், அவள் நொடிக்கொரு முறை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் பொறுமையில்லாமல்.

     “என்னாச்சு என் மானும்மாவுக்கு?! இவ்ளோ அவசரம்?!” என்று கேட்டபடியே உள்ளே வந்தவனை,

      “வாங்க வாங்க சீக்கிரம்!” என்று சிறுபிள்ளையின் ஆர்வத்தோடு புன்சிரிப்புடன் வரவேற்றவள் அருகே செல்ல,

      “டன்ட்டடைன்!” என்று அவளின் கைப்பேசியில் வந்திருந்த அவளது முதல் சம்பாத்தியத்தின் தொகையை குறுஞ்செய்தி மூலம் அவள் காண்பிக்க,

     “வாவ்!! மானும்மா!!” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டவன்,

     “என் மானும்மாவோட முதல் மாச சம்பளமே டென் கெ தாண்டிடுச்சே! போற போக்கைப் பார்த்தா இன்னும் ஆறு மாசத்துல என் சம்பளத்தையே பீட் பண்ணிடுவா போலேயே?!” என்றான் பெருமிதமாய்.

      “ம் ம்! சீக்கிரம் பீட் பண்றேன்! அப்புறம் என் மித்து பையன் எனக்கு பஸ் வாங்கிக் கொடுத்த மாதிரி எல்லாம் எதுவும் வாங்கி கொடுத்து காசை வேஸ்ட் பண்ணாம, உபயோகமா ஏதாச்சும் பண்ணுவேன்” என்று அவள் சொல்ல,

     “அடி! நீ கம்பார்டபிலா ட்ராவல் பண்ணனுமேன்னு வாங்கினா, வேஸ்ட் பண்ணேன்னா சொல்ற?!” என்று அவள் கன்னத்தில் தட்டியவன்,

     “இதைவிட வசதியா இருந்திருந்தா என் மானும்மாக்காக ப்ளைட்டே கூட வாங்கிருப்பேன்! பட் இப்போதைக்கு நம்ம ரேஞ்சுக்கு முடிஞ்சுது இவ்ளோதான்” என்றான்.

      அதைக் கேட்டதும்தான் அவளுக்கு அவன் எப்படி அந்த பஸ்ஸை வாங்கிருப்பான் என்று தான் அடிக்கடி கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்வி நெஞ்சில் எழ,

     “ஆமாம்! நானும் கேட்கணும் கேட்கணும்னு நினைச்சேன், எப்படிங்க அவ்ளோ பணம் ஏற்பாடு பண்ணீங்க?! ஏது உங்ககிட்ட அவ்ளோ பணம்?! மாமாகிட்ட வாங்கினீங்கள?! கண்டிப்பா லட்சக்கணக்குல ஆகி இருக்குமே?!” என்று அவள் கேள்வி மேல் கேள்விகளாய் அடுக்கிக் கொண்டே போக,

     “அதெல்லாம் இப்போ எதுக்கு?! சரி சரி உன் பர்ஸ்ட் மந்த் இன்கம்ல உன் புருஷனுக்கு என்ன வாங்கித் தரப் போற?!” என்றான் பேச்சை மாற்றி.

     “ப்ச் இந்தப் பேச்சை மாத்துற வேலையெல்லாம் வேண்டாம். முதல்ல பணத்துக்கு என்ன பண்ணீங்கன்னு சொல்லுங்க” என்றாள் விடாப்பிடியாய்.

     “அதான் வாங்கியாச்சே மானும்மா! இப்போத் எதுக்கு அதெல்லாம்?!” என்று அவன் எழ,

      “இப்போ நீங்க சொல்லைலைன்னா உங்க கூட பேச மாட்டேன் நீங்க சொல்லுற வரைக்கும்” என்றாள் அடமாய்.

     “ப்ச்! என்ன அடம் மானும்மா இது” என்றவன், அவள் அருகே சென்று அமர்ந்து,

      “என்னோட சம்பளத்துல சேர்த்து வச்சதை முன்பணமா கொடுத்துட்டு மீதிக்கு லோன் போட்டு எடுத்தேன்.” என்றதும்,

     “பையித்தியமா உங்களுக்கு?!” என்று திட்டிய மையு,

     “எவ்ளோ லோன் போட்டிருக்கீங்க?! யாரைக் கேட்டு இதெல்லாம் பண்ணீங்க?! லட்சகணக்குல கடன் வாங்கி இப்படி ஒரு சொகுசுப் பேருந்து அவசியமா நமக்கு?!” என்று அவள் டென்ஷனாகித் திட்டிக் கொண்டே போக,

     “போதும் போதும் போதும்! கொஞ்சம் மூச்சு விட்டு பேசு மானும்மா!” என்று அவன் அவளை நிதானப் படுத்த முயன்றான்.

     “என்ன இருந்தாலும் நீங்க என்னை ஒரு வார்த்தை கேட்டு இதை செய்திருக்கணும்ங்க! இதெல்லாம் தேவையில்லாத செலவுதான! அப்படி என்ன ஊரைச் சுத்திப் பார்க்கணும்னு எனக்கு! அதான் போன் டிவின்னு இருக்கே அதுல வர்ற இடங்களைப் பார்த்துக்கிட்டாப் போச்சு!” என்று அவள் தன்னால் அவன் கடன்பட்டுவிட்டானே என்று ஆதங்கம் தாளாமல் பேசிக்கொண்டே போக, அவளின் புலம்பலை அடக்க வழியின்றி, சட்டென தன் உதடுகள் கொண்டு அவள் இதழ்களைப் பூட்டியவன்,

    “இதோப் பாருங்க இது இதெல்லாம் வேண்டாம், ஆமாம்!” என்று அவள் அப்போதும் விடாமல் கோபத்தில் பேசப் பேச, அவனின் முத்தம் ஆங்கில முத்தமாய் நீள, அவள் பேச்சு மூச்சின்றி அவன் முத்தத்தில் கரைய சில நொடிகளுக்குப் பின்பே அவளின் இதழ்களை விடுவித்தவன்,

     “என் மானும்மாவோட ஆசைக்காகவும், சந்தோஷத்துக்காகவும் இந்த சின்ன விஷயம் கூட என்னால செய்ய முடியலைன்னா அப்புறம் நான் எதுக்கு?!” என்று கேட்டவன், இதழ்களை தன் விரல் கொண்டு மூடியவள்,

     “ம்ஹும்ங்க! இதெல்லாம் நீங்க செய்துதான் நீங்க என்மேல அன்பு வச்சிருக்கீங்ககிறதை நான் உணரவேண்டியது இல்லைங்க! அம்மா, அப்பா இருந்தும், அவங்க அன்புக் கிடைக்காம ஏங்கி ஏங்கித் தவிச்ச எனக்கு தாயோட அன்புன்னா இப்படித்தான் இருக்கும்னு உணரவச்சது நீங்கதாங்க! நமக்கு கல்யாணம் ஆன மறுநாள் நீங்க என்னைத் தூக்கிட்டுப் போய் வெதுவெதுப்பா தண்ணி நிரப்பி பொறுமையா குளிப்பாட்டினீங்களே, அப்போதான் எனக்குத் தெரியும் இவ்ளோ அன்பா கூட ஒருத்தரால இன்னொருத்தரைப் பார்த்துக்க முடியுமான்னு!”

     “பல நாள் என் அம்மா, என்னை பாத்ரூம்குள்ள குளிக்கக் கூட்டிட்டுப் போய் விட்டுட்டு, ரெண்டுமூணு மணிநேரம் கழிச்சு அது வேலைய எல்லாம் முடிச்சிட்டுத்தான் என்னைக் குளிப்பாட்ட வருமே! அதுவரைக்கும் ஈரத்துலயே கெடந்து குளிரே எடுத்துக்கும் தெரியுமா?! அப்படியே கண்ணுல தண்ணியா வரும்! ஆத்திரமும் வரும்! ஆனா என்னால எதுவும் செய்ய முடியாது! ஏதாவது கேட்டா அப்படிப் பேசும் வாய்க்கு வந்ததை எல்லாம் அசிங்கம் அசிங்கமா!” என்று அவள் நெஞ்சம் விம்ம தனை மறந்து கடந்த காலத்தைச் சொல்ல, அவன் நரம்புகள் புடைக்க கோபம் தலைக்கேற அமர்ந்திருந்தான். அவள் அதைக் கவனியாது தன் கடந்த காலங்களில் உழன்றபடியே,

     “சில சமயம் என் பிரெண்ட்ஸ் நிறைய பேர் என் அம்மா எனக்கு இந்தப் பலகாரம் செய்து கொடுத்தாங்க அந்தப் பலகாரம் செய்து கொடுத்தாங்க, இந்த ட்ரெஸ் வாங்கிக் கொடுத்தாங்க. இங்க கூட்டிட்டுப் போனாங்க, என்னைக் கேட்டுத்தான் எல்லா முடிவும் எடுப்பாங்கன்னு எல்லாம் சொல்லும் போது எனக்கு தோணும்! என் அம்மா மட்டும் ஏன் எனக்கு நல்லதா சோறு கூட பொங்கித் தரமமாட்டேங்குதுன்னு! ஆனா என் தம்பி வீட்டை விட்டுத் தனிக் குடித்தனம் போன பிறகும் கூட அவனும், அவன் பொண்டாட்டியும் வராங்கன்னாதான் எங்க அம்மா நல்ல சோறே பொங்கும்ங்க! அதுவும் அவங்ககிட்ட மெனு கேட்டு!”

     “அப்போவும் மனசு பொறுக்காம நான் கேட்பேன். நீதானே என்னையும் பெத்தன்னு! அதுக்கு, நீ என்ன தெண்டத்துக்கு தானே இருக்க! உனக்கு என்ன வக்கனையா வேணும்னு கேட்கும்! எனக்கு ஒரு சில நாள் ஆசை ஆசையா ஏதேதோ சாப்பிடணும்னு தோணும். ஆனா எது கேட்டாலும் செஞ்சே தராது! காயு லீவுல இருந்தா எப்போவாச்சும் செய்து கொடுப்பா! இல்லாட்டி அதுவா நெனச்சுகிட்டா செய்யும். ஆனா அதைச் சாப்பிடும் போது எனக்கு ஆசையா இருக்காது! அழுகைதான் வரும். ஒருநாளும், என்னையப் பாசாம பார்த்துக்கிட்டதே இல்லைங்க! ஏன் ஒரு மனுஷியா கூட மதிச்சதில்லைங்க நீங்க என் வாழ்கையில வந்த அந்தப் பிறந்த நாள் வரைக்கும்!” என்று அவள் ஏதோ ஆரம்பித்து எங்கோ நிறுத்த, அவன் கண்கள் சிவந்து போய் இருந்தன தன் மனைவி அனுபவித்த கொடுமைகளை எல்லாம் கேட்டு.

     சொல்லி முடித்த பின்பே அவனின் கோபம் மிகுந்த கண்களைக் கண்டவள், ‘ஐயோ! என்ன முட்டாள்தனம் செஞ்சுட்டேன்! ஏற்கனவே அவருக்கு அம்மாவைப் பிடிக்காது! ஏதோ இப்போ ஊர்லதான் கொஞ்சமே பேச ஆரம்பிச்சார்! இப்போ நானே முட்டாள்தனமா இப்படிச் சொல்லி அவர் கோபத்தைத் தூண்டி விட்டுட்டேனே!’ என்று நொந்து கொண்டாள் மனதோடு.

     ஆனால் சட்டென்று பேச்சை மாற்றி அவன் கோபத்தைக் குறைக்க எண்ணி, “சரி சரி வாங்க என்னோட முதல் சம்பளத்துல என் தீரனுக்கு என்ன வேணும் சொல்லுங்க சொல்லுங்க!” என்று அவன் கன்னம் பிடித்துக் கொஞ்ச, அவன் அமைதியாய் எழுந்து குளிக்கச் சென்றுவிட்டான்.

     “மித்து பையனுக்கு கோபம் வந்துடுச்சு! எல்லாம் உன்னாலதான்டி! எவ்ளோ ஆசையா அவரைக் கூட்டிட்டுப் போய் அவருக்கும் எல்லோருக்கும் கிப்ட் வாங்கிக் கொடுக்கணும்னு ப்ளான் பண்ண! இப்போ நீயே மூட் வுட் பண்ணிட்டியேடி!” என்று தன்னையே திட்டிக் கொண்டவள்,

     “இப்போ எப்படி என் புருஷனை சமாதானப் படுத்துறது?!” என்று யோசிக்க,

    “ஆமாம்! அவரை சமாதானப் படுத்துறது ரொம்ப கஷ்டம் பாரு உனக்கு! ஒரேயொரு கவிதை சொல்லி கொஞ்சம் முத்தங்கள் பரிசா கொடுத்தாலே போதுமே உன் தீரனுக்கு!” என்று தானே வழியையும் சொல்லிக் கொண்டவள்,

     “என்ன கவிதை சொல்லலாம் என் மித்து பையனுக்கு?!” என்று யோசிக்க,

     “ஹான்!” என்று சடுதியில் அவனுக்காய் ஒரு குட்டிக் கவிதை மனதுள் வடித்துவிட்டுக் காத்திருக்க, அவன் குளித்து விட்டு வெளியே வந்ததும்,

     “என்னங்க!” என்றாள் கொஞ்சலாய்.

     “என்ன?!” என்றான் குரலில் இளக்கம் கொடுக்காமல்.

     “ம்! ம்! அங்க இருந்தே கேட்டா எப்படி?! இங்க கிட்ட வாங்க!” என்று அவள் சொன்னதுமே, புரிந்துவிட்டது அவள் தன்னைச் சமாதானப் படுத்த ஏதோ ஆயுதத்தைக் கையில் எடுத்து விட்டாள் என்று.

     “நான் வெளில கிளம்பணும்!” என்றான்.

     “அதாங்க நானும் சொல்ல வந்தேன். நாம வெளில கிளம்பணும்!” என்று அவள் பிடித்துக் கொள்ள,

     “நான் மட்டும்தான் போறேன். வேலை இருக்கு!” என்றான் அவள் எங்கே போக வேண்டும் என்று சொல்வாள் என்று முன்பே அறிந்ததால் இல்லாத வேலையைச் சொல்லி.

     “ஓ! அப்டியா?! சரி கொஞ்சம் கிட்ட வந்துட்டு எந்த வேலைக்கு வேணா போங்க!” என்று அவள் மீண்டும் அழைக்க,

     “என்ன?!” என்றான் கோபத்தை இழுத்துப் பிடித்து.

     “ப்ச்! ரொம்ப பண்ணாதீங்க! கிட்ட வாங்கன்னு சொல்றேன்ல!” என்று அவள் சற்று தூரம் நின்றிருந்தவனின் துண்டைப் பற்றி இழுக்க, அவள் செய்த குறும்பில்,

     “ஏய்! அடி வாங்குவ மானும்மா நீ” என்று துண்டைப் பற்றிக் கொண்டு முறைத்தபடியே அவள் அருகில் வந்து,

     “என்ன வேணும் உனக்கு?!” என்றான் கோபம் மாறாமல்.

     “நீங்கதான்!” என்று அவன் மார்பில் சாய்ந்து அவனது மார்பில் படர்ந்திருந்த ரோமங்களை வருடத் துவங்கியவள்,

     “உனை வர்ணிக்க வக்கற்றுப் போய்

     கவி எழுதத் தெரியாமல்

     உனைப் பற்றி எழுத எத்தனிக்கையில்

     வெள்ளைக் காகிதமாய் என் கண்முன் நீயடா!

     என் வெற்று மார்பில்

     உன் விரல் நகம் கொண்டு

     கவிகிறுக்கிக் கொள்ளடி கண்ணம்மா

     எனக்காக கவிதைகளை

     என் நெஞ்சத்திலேயே என்பது போல்!

     புதுகவி எழுதட்டுமா கண்ணாளா

     என் விரல்களாலும்

     என் உதடுகளாலும்

     நம் மெய்க்காதல் தித்திக்க?!”. என்று சொல்லி முடித்து அவன் நெஞ்சத்தில் தன் முத்த அச்சாரங்களை பதிக்க, அவள் முகத்தைத் தன் மார்போடு அழுத்திக் கொண்டு இறுகத் தழுவி அவள் உச்சந்தலையில் முத்தமிட்டவன்,

     “இப்படியே என்னை ஏமாத்து மானும்மா!” என்று பொய்யாய் சலித்து,

     “சரி சரி கிளம்பு!” என,

     “ஐ! தேங்க் யூ டா புருஷா!” என்று அவன் கன்னத்தை எச்சில் செய்தவள்,

     “ஒருமுறை ஒருயோருமுறை என்னை டி சொல்லிக் கூப்பிடுங்களேன்!” என்று எப்போதும் போல் ஆரம்பிக்க,

     “வாய்ப்பே இல்லை! கிளம்புங்க மேடம்!” என்றவன் அவள் வெளியே செல்ல உடுத்துவதற்கு ஏற்ற துணியை எடுத்து அவளிடம் நீட்ட, சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பி அவள் ஆசைப்படி சிவன் கோவிலுக்குச் சென்று அவளது முதல் சம்பளத்தை எடுத்து இறைவனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு, ஜவுளிக் கடைக்குச் சென்று முதலில் அவனுக்கும், பின் அவளின் அத்தை மாமா, அம்மா அப்பா, தங்கை, கீர்த்தி என்று துணிகளை அவள் பாட்டிற்கு எடுத்துக் குவிக்க, அதுவே பத்தாயிரம் ரூபாயைத் தாண்டி விட்டது.

   

Advertisement