Advertisement

                                                                          

     “அடப்பாவி புருஷா!” என்று அவனை முறைத்த மையு,

     “மானும்மா மானும்மன்னு கொஞ்ச வருவயில்ல! அப்ப இருக்குடா உனக்கு!” என்றுவிட்டு,

     “என் செல்ல அம்மா இல்லை! நீ அந்தக் கரண்டியைக் குடுத்துட்டுப் போய் அமைதியா உட்காருவியாம். நான் முதல் போண்டாவை உனக்குக் கொடுப்பேனாம்!” என்று மையு ஐ வைக்க,

     “ஏன்? உன் பரிசோதனைக்கு நான்தான் எலியா?!” என்று இப்போது சாந்தி வார, ப்ரியா உட்பட அனைவருமே வாய்விட்டுச் சிரித்துவிட்டனர் அவர் முகம் போன போக்கில்.

     “ப்ரியுக்கா! என்ன நீ எப்பப்பாரு உம்முனாமூஞ்சி மாதிரி உட்கார்ந்திருக்க?  வாங்க இங்க எழுந்து. அண்ணி, சாருக்கா  நீங்களும் வாங்க. வந்து எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க” என்று கீர்த்தி அனைவரையும் துணைக்கு அழைக்க, ஒருவழியாய் மைசூர் போண்டா நினைத்ததை விட நல்ல ருசியாகவே வந்ததில் மையு,

     “பார்த்தீங்களா நம்ம கைப்பக்குவத்தை!” என்று தன்னைத் தானே மெச்சிக் கொண்டாள்.  

     மாலை நேரம் முழுவதும் நொறுக்குத் தீனியும், பேச்சும், விளையாட்டும் என்று மொட்டை மடியிலேயே பொழுது ஜோராய்ப் பறந்தது.

     “நைட் சமையலும் இங்கயே நிலா வெளிச்சத்திலேயே பண்ணிடலாமே! நானே பண்றேன். என்ன வேணும் சொல்லுங்க” என்றாள் மையு ஆர்வமாய்.

     “அம்மா தாயே ஒரு போண்டா போடவே எங்களை அத்தனை முறை ஏறி இறங்க வச்சக் கீழயும், மேலயும். இப்போ சமையலுக்க்கும்னா? நாங்க தாங்க மாட்டோம்மா” என்று சாந்தி வேண்டாம் என்று மறுக்க,

     “அவ ஆசைப் படுறா இல்லை செய்யட்டும் விடுங்க நாம அவளுக்கு உதவுவோம்” என்றார் தங்கமலர்.

     ‘பார்றா! என் செல்ல அத்தையை?! கோபமா இருக்க மாதிரியே பாசம் காட்டுறது!’ என்று நினைத்துக் கொண்டவள், கணவனைப் பார்க்க, அவன் கட்டை விரல் உயர்த்திக் காட்ட,

     “ம்!” என்று சிரித்தாள் மையு.

     ஒரு மணி நேரத்தில் கேழ்வரகு மாவில் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் நறுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றிப் பிசைந்து, கடலை எண்ணெய் ஊற்றி அனைவருக்கும் அடை சுட்டு எடுக்க, அதன் வாசம் அனைவரின் பசியையும் தூண்டியது. அதற்குத் தொட்டுக் கொள்ள, சாருவும், ராதாவும், கீழே சென்று தேங்காய்ச் சட்டினியும் அரைத்து எடுத்து வர, இரவு உணவும் கலகலப்பாக இனிதே முடிந்தது.

     வெயில் காலமென்பதால், “எல்லாரும் இங்க மொட்ட மாடியிலேயே படுத்துக்கலாமா?!” என்றாள் மையு கீழே செல்ல மனமே இல்லாமல்.

     “இல்ல இல்ல மானும்மா. உனக்குத் தரையில படுக்கக் கஷ்டமா இருக்கும்” என்று மித்ரன் சட்டென மறுப்புத் தெரிவிக்க, சிறுசுகள் வேறு எதற்கோ மறுக்கிறான் என்று சிரித்து வைக்க,

     “என்ன என்ன சிரிப்பு எல்லோருக்கும். எல்லோரும் போய்ப் படுங்க.” என்று மலர் அதட்டலாய்ச் சொல்ல,

     “இல்லைப் பரவாயில்லைங்க! ஒருநாள்தானே என்னால அட்ஜஸ்ட் பண்ணிப் படுத்துக்க முடியும்! இங்கயே படுத்துக்கலாம். ப்ளீஸ்! ஊருக்குப் போய்ட்டா இப்படி எல்லோரும் சேர்ந்து ஒண்ணா வெட்ட வெளியில நிலா வெளிச்சத்துல, கிராமத்து சுத்தமான காற்றைச் சுவாசிச்சிட்டு இப்படி ஒண்ணா தூங்க முடியுமா? அங்க போனதும் எல்லோரும் அவங்க அவங்க வீட்டுக்குப் போய்டுவாங்கல்ல?! ” என்று மையு, கணவனிடமும், அத்தையிடமும் சேர்ந்து கேட்க, அவள் இதுவரை இது போன்ற சந்தோஷங்களை எல்லாம் அனுபவித்ததே இல்லை என்பது புரிந்ததால், மித்ரன், தாயைப் பார்க்க,  

     “சரி சரி. கீழப் போய் எல்லோரும் பாய், தலையனை, போர்வை எல்லாம் எடுத்துட்டு வாங்க” என்றவர்,

     “பெண்கள் எல்லாம் ஒருபக்கமும் ஆண்கள் எல்லாம் ஒரு பக்கமும் படுத்துக்கோங்க” என்றார் திருமணம் ஆகாத பெண்களும் அங்கு இருப்பதால், தம்பதியராய்ப் படுத்தால், அவர்கள் மனதில் ஏதும் வேறு எண்ணங்கள் பிறக்க கூடாது என்று.

     மையுவை மெல்ல வீல் சேரிலிருந்து தூக்கிக் கீழே போர்வையில் அமர வைத்தவன்,

     “வலிக்கலை இல்லை மானும்மா இல்லை பெட் கொண்டு வந்து போடட்டுமா?” என,

     “இல்லைங்க தரையில படுக்க ஆசையா இருக்குன்னுதான் இங்க படுக்கக் கேட்டேனே! இங்கயும் பெட் போட்டுப் படுத்தா ஒரே மாதிரி தான் இருக்கும்! வேணாம்” என்று மறுத்துவிட,

     “யப்பா இவனுக்குள்ள இப்படி ஒரு காதல் மன்னன் இருப்பான்னு நான் சத்தியமா நினைச்சுப் பார்க்கலை! எப்போ பாரு உர்றுன்னு மூஞ்சியை வச்சிக்கிட்டு சும்மா விறைப்பா சுத்துக்கிட்டு இருப்பான்! இப்போ என்னன்னா இப்படி உருகுறான்” என்று முணுமுணுத்துக் கொண்டு அவர்களையே பார்த்திருந்த சரத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்ட அவனின் செல்லப் பிள்ளைகள்,

     “அப்பா வாங்க நாம எல்லோரும் அங்க படுத்துக்கலாம்!” என்று அவனை அழைக்க,

     “ம் சரி” என்றபடி பிள்ளைகள் அழைத்த இடத்தில் சென்று படுத்துக் கொள்ள,

     “அப்பா அப்பா நீ எவ்ளோ நாள் ஆச்சு எங்களுக்கு சூப்பர் மென் கதை சொல்லி இப்போ சொல்லுப்பா” என,

     அவனும் கதை சொல்ல ஆரம்பிக்க, அவர்களைப் பார்த்திருந்த சாருவோ,

     “அவர் பிள்ளைங்ககிட்ட மட்டும்தான் இந்த மனுஷன் உண்மையான பாசத்தோட நடந்துக்கறார். என்னிக்குதான் எங்க எல்லோர் மனசையும் காயப்படுத்தாம நல்ல மனுஷனா வாழப் போறாரோ?! கடவுளே சீக்கிரம் இந்த மனுஷனுக்கு நல்ல புத்தியைக் கொடு” என்று வேண்டிக் கொண்டாள் இறைவனிடம்.

     சரத் தன் பிள்ளைகளுடன் படுத்திருக்க, ராஜசேகர், கிருஷ்ணன் இருவரும் ஏதோ பேசிக் கொண்டே படுத்திருக்க, மித்ரன் சற்றுத் தொலைவே கீர்த்தியிடமும், காயத்ரியிடமும், வாயடித்துக் கொண்ட தன் மனைவியை ரசித்தபடியே படுத்திருக்க, பிரேம் மட்டும் இவர்களிடமும் பேச முடியாமல் மனைவியிடமும் பேச முடியாமல் தவிப்புடன் படுத்திருந்தான். தான் செய்த முட்டாள் தனத்தின் பலனை இப்போதுதான் அவன் கொஞ்சம் கொஞ்சமாய் உணர ஆரம்பித்திருந்தான்.

     ‘ச்சே! நான் ப்ரியாவை உண்மையா காதலிச்சிருந்த அவகிட்ட சொல்லி புரிய வச்சு இந்தக் கல்யாணத்தைப் பண்ணி இருக்கணும்! அதை விட்டுட்டு,’ என்று அவன் இதயம் திட்ட,

     “ம்! நீ அவளை உண்மையா தான் காதலிச்சியா?! பணத்துக்காகதானே கல்யாணம் செய்துக்க நினைச்ச?!’ என்றது மூளை.

     ‘இல்ல இல்ல! நான் அவளைக் காதலிச்சது உண்மை!’

     ‘அப்போ எதுக்கு பணம் பணம்ன்னு அவங்க வீட்டு சீர்வரிசைக்கும், அவளோட சம்பளத்துக்கும் ஆசைப் படுற?!’

     ‘அ அது எல்லாரும் நினைக்கிறதுதானே!’

     ‘ம் உண்மையா காதலிக்கிறவன் மனைவியோட அன்பை மட்டும்தான் எதிர்பார்ப்பான்’ என்று மனசாட்சிக் குத்த, அவனுக்கு இத்தனை நாள் இருந்த பயம் பன்மடங்குக் கூடிப் போனது…

     இனிமையான கிராமத்துப் பயணமும், உறவுகளின் அருகாமையும், மித்ரனின் அன்பும் மையுவிற்கு இத்தனை காலங்களாய் இல்லாத தெம்பையும், உற்சாகத்தையும் அள்ளிக் கொடுத்திருக்க, இதே மனநிலையில் இருக்கும் போதே அவளைத் தானாய் இயங்கும்படி செய்து, அவளுக்குள் இருக்கும் திறமைகளையும் வெளிக்கொண்டு வந்துவிட வேண்டும் முடிவெடுத்துவிட்ட மித்ரன், ஊரிலிருந்து திரும்பிய மறுநாள் அதைச் செயல்படுத்தவும் ஆரம்பித்தான்.

     “எழுந்திருங்க எழுந்திருங்க என் பட்டு மானும்மால்ல!” என்று அவளை அதிகாலை ஐந்து மணிக்கே தட்டி எழுப்ப,

     “ம்ம்!!! என்னங்க இன்னும் விடியவே இல்லை! அதுக்குள்ள எழுப்பிக்கிட்டு” என்று சிணுங்கியபடி கண்திறந்து பார்த்து முனகிவிட்டு மையு திரும்பப் கண்மூடிக் கொள்ள,

      “மானும்மா! இப்போ நீ எந்திரிக்கப் போறியா இல்லை தண்ணி கொண்டு வந்து முகத்துல அடிக்கட்டுமா?” என்றான் இப்போது கொஞ்சலை விடுத்து.

      “ம்ஹும்! ம்ஹும்! என்னய்யா ஆச்சு உனக்கு?!” என்று மையு சலிப்புடன் கண்திறக்க,

      “சென்னைக்கு வந்த மறுநாள் பயிற்சி ஆரம்பிக்கணும்னு சொன்னேன்ல!” என்று அவன் நினைவு படுத்த,

     ‘அடக்கடவுளே மறுபடியும் பயிற்சியா?!’ என்று மொத்தத் தூக்கமும் களைந்து மைன்ட் வாய்சில் திகைத்தவள்,

     ‘எல்லா விஷயத்திலயும் அப்பாவி புருஷா, இந்த மையு சொல்ற பேச்சைக் கேட்டு நடக்குற நீ, இந்த எக்சர்சைஸ் விஷயத்துல மட்டும் அடப்பாவி புருஷனா இப்படி இம்சை பண்றியேய்யா?!’ என்று மனதிற்குள் புலம்பித் தள்ளிவிட்டு, சட்டென்று சமாளிக்கும் விதமாய்,

      “ம்! என்னங்க நீங்க இப்படி பண்றீங்க?! நாம இன்னும் ஊர்லதானே இருக்கோம்?! தூக்கத்துல என்னை ஏமாத்தப் பாக்குறீங்க?!” என்று அவள் நடிக்கத் துவங்க,

      “அடி வாங்குவ மானும்மா! இப்போ ஒழுங்கா எழ போறியா? இல்லை!” என்றவன்,

      “போங்க சும்மா சும்மா தொல்லைப் பண்ணிக்கிட்டு?!” என்று தலையணையை எடுத்து முகத்தில் மூடிக் கொண்டு படுத்துக் கொள்வதைப் பார்த்ததும், வெதுவெதுப்பாய் ஹீட்டர் போட்டு எடுத்து வந்திருந்த வெந்நீரை அவள் வைத்திருந்த தலையணைப் பிடுங்கிவிட்டு அவள் மீது கொட்ட,

      “ஹான்!! ராட்சசா!?” என்று துள்ளித் துடித்து எழப் போனவளை அப்படியேத் தாங்கிப் பிடித்துக் கையோடு தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் சென்றவன், ஏற்கனவே மிதமான சூட்டில் நீர் நிரம்பி இருந்த பாத்டப்பில் அவளைப் படுக்க வைக்க,

      “ஹென்!” என்று சிறுபிள்ளை போல் கத்தியவள், அவனையும் கையோடு பாத்டப்பிற்குள் இழுத்து நனைக்க,

      “அடிப்பாவி இப்போதான்டி குளிச்சிட்டு வந்து உன்னை எழுப்பினேன்!” என்றவன், அவளை முறைத்தபடி, அவள் கன்னத்தைக் கடிக்க, பதிலுக்கு அவள் கடிக்க என்று ஆரம்பித்தது ஜலக்ரீடை!!

     ஒருவழியாய் இருவரும் குளித்து முடித்துத் தயாராகி பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது மணி ஆறு ஆகிவிட்டது.

     அப்போதும் ஆரம்பிக்கும் போது, “என்னங்க?!” என்று அவள் கொஞ்சலாய் ஆரம்பிக்க,

     “ஷ்! பேசாம பயிற்சியை செய்!” என்று அவன் அவள் பேச்சுக்குத் தடை போட,

     “நானா நடக்க ஆர்மபிச்சிட்டா நீங்க என்னை இப்படி தூக்கிட்டுப் போக மாட்டீங்கல்ல!” என்று அவள் கொஞ்சலாய் கேட்க,

     “தூக்கிட்டுப் போவேன்! நீ ஒழுங்கா இப்போதைக்கு பயிற்சியை செய்!” என்று மிரட்டிவிட்டு அவன் சற்றுத் தொலைவே இருந்த சோபாவில் அமர்ந்துவிட,

     “ம்!” என்று முகத்தைச் சுருக்கி வைத்தபடி செய்யத் துவங்கியவள், அவன் தன்னிடம் காட்டும் இந்த கோபமும் அவள் மீது கொண்ட அக்கறையால் தான் என்பதை மனதார உணர்ந்தவள், அவன் ஆசைப்படி அவளுக்காய் இல்லை என்றாலும் அவனுக்காய் சீக்கிரமே தனியாய் நடந்து விட வேண்டும் என்று பயிற்சியை ஆர்வமாய் செய்யலானாள்…

     அவள் எல்லா பயிற்சிகளையும் செய்து முடிக்கும் வரை அமைதியாய் அமர்ந்திருந்தவன், தனது வார்ட்ரோபிலிருந்து, புதிதாய் வாங்கி வைத்திருந்த அந்த மடிக்கணினியை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்.

     “எதுக்குங்க லேப்டாப்?!” என்று அவள் புரியாமல் கேட்க,

     “ம் தினம் தினம் உட்கார்ந்து வாட்சப்லயும், பேஸ்புக்லயும் அரட்டை அடிச்சிகிட்டு இருக்கல்ல! அதுக்கு ஒழுங்கா உனக்குத் தெரிஞ்ச போட்டோஷாப் எடிட்ங் வொர்க் கத்துக்கோ. பத்து மணிக்கு ஆன்லைன் கிளாஸ் ஸ்டார்ட் ஆகும்! ஜஸ்ட் ஒன் மந்த் க்ளாஸ்தான் அதுக்கு அப்புறம், என் பிரெண்டோட ஸ்டுடியோக்கு வர எல்லா ஆர்டர்ஸ்க்கும் நீதான் போட்டோஷாப் எடிட்டர்” என்றவனை, அவள் ஆச்சர்யமாய்ப் பார்க்க,

     “எனக்குத் தெரியும் மானும்மா! உனக்கு இதுல எவ்ளோ திறமையும் ஆர்வமும் இருக்குன்னு! அதான்,” என்றவன்,

     “அதோடு உன்னாலயும் சாதிக்க முடியும் சம்பாதிக்க முடியும்னு இந்த உலகத்துக்கு மட்டும் இல்லை, உங்க அம்மாவுக்கும் சேர்த்து புரிய வைக்கணும்” என்றுவிட்டு

     “ம்மா! ப்ரேக்பாஸ்ட் ரெடியா?” என்று குரல் கொடுத்தபடியே தங்கள் அறையில் இருந்து வெளியேறியவனை, வார்த்தைகள் ஏதுமின்றி மெலிதாய் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக பார்த்துக் கொண்டே இருந்தாள் தன் மான்விழிகளை அவன் மீதிருந்த விலக்கிக் கொள்ள மனமின்றி…

                           -மான்விழி மயங்குவாள்…

   

     

          

 

 

    

      

            

 

 

Advertisement