Advertisement

                                33

     நெடுந்தூரப் பயணம். ஆனால் களைப்பே தெரியவில்லை அனைவருக்கும். ஆட்டம், பாட்டம், பேச்சு, சிரிப்பு, கேலி, ஓய்வு என்று பயணம் மிக இனிமையாக நிறைவடைந்ததில் அனைவருக்குமே அத்தனை மகிழ்ச்சி.

     நடக்கவே முடியாது என்று நினைத்த இனிய நிகழ்வெல்லாம் தன் மகளின் வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டு சாந்தி, முருகேசனின் மனம் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிக் கொண்டிருந்தது.

     கிராமத்தில் இருக்கும் ராஜசேகரனது பாட்டன் காலத்து வீடு, பழமை வாய்ந்த கட்டடமாக இருந்தாலும் அங்கு இருக்கும் ஆட்களை வைத்து நன்றாகப் பராமரிக்கப்பட்டு வந்ததில், அந்தப் பெரியத் தென்னந் தோப்புக்கு நடுவில் மிக ரம்மியமாகவே இருந்தது காலங்கள் கடந்த பின்பும்.

     “ஐய்! எவ்ளோ அழகா இருக்கு இந்த இடம்?!” என்று பஸ்சிலிருந்து இறங்கும் போதே காயத்ரி உற்சாகமாய் குரல் கொடுக்க,

     “ஆமாம் காயு! ரொம்ப அழகா இருக்கும் எங்க ஊரும் வீடும். ஆனா என்ன வருஷத்துக்கு ஒருமுறை மட்டும்தான் இங்க வருவோம். எல்லோரும் எப்போ பாரு வேலை வேலைன்னு ஓடுறதுனால!” என்று சலித்துக் கொண்டாள் கீர்த்தி.

     “கவலையை விடு கீர்த்திம்மா. நம்ம ஊர்லையே நல்ல விவசாயி மாப்பிள்ளையைப் பார்த்துக் கட்டி வச்சுடறோம். அப்போ நீ காலத்துக்கும் இங்கயே இருந்துக்கலாம்” என்று ராதா சொல்ல,

     “ஓ எஸ்! கண்டிப்பா அண்ணி…!” என்று கீர்த்தி சொல்ல,

     “அதான் மாமம்மவன் நான் இருக்கேன்ல பொறவு எதுக்கு யாரோ ஒரு விவசாயி?!” என்று குரல் கொடுத்தபடி அங்கு வந்து சேர்ந்தான், வீரதீரன்.

     “இது என்னங்க புது ட்ராக்?!” என்று மையு கணவனிடம் கேட்க,

     “நம்ம ஒண்ணுவிட்ட சொந்தம்தான். கீர்த்திக்கு முறை வரும். எப்பவும் அவனுக்கு விளையாட்டு தான்.” என்றான் மித்ரன்.

     ஆனால் கீர்த்தியின் முகத்தைப் பார்க்க வேண்டுமே! ‘வந்துட்டான் மோமன்மவன்! இவனை யார் இங்க கூப்பிட்டா ஊருக்கு வரும்போதெல்லாம் ஓடி வந்து முன்னாடி நிக்க வேண்டியது!’ என்று கீர்த்தி மனதிற்குள் வசை பாட ஆரம்பித்திருக்க,

     “வாப்பா வீரா…! வீட்ல எல்லோரும் சௌக்கியமா?!” என்று வரவேற்றனர் ராஜசேகரும், தங்கமலரும்.

     “எல்லோரும் சௌக்கியந்தேன் அத்தை!  கல்யாணத்தைதான் திடுதிப்புன்னு வச்சதுல நாங்க எல்லோரும் வர முடியாது போச்சு!” என்றான் வருத்ததுடன்.

     “ஆமாம்ப்பா! திடீர்னு முடிவானதுல முன்கூட்டியே சொல்ல முடியலை!” என்று தங்கமலர், தயக்கத்துடன் சொல்ல,

     “சரி சரி போவட்டும்! எங்க?! எங்க புது அக்காவை ஆளையே காணாம்!” என்று அவன் திரும்பி மையுவைத் தேட,

    “இங்க இருக்கா உன் அக்கா.” என்று மித்ரன் அவளை பஸ்சிலிருந்து தூக்கிக் கொண்டு கீழே இறங்க,

     “அதுச்சரி! என்ன மாமா அக்காவைத் தரையிலேயே விடுறதில்ல போலயே!” என்று கேட்ட வீரன், பின்னே காயு வில் சேரை இறக்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும், நொடியில் விஷயம் புரிந்து கொண்டவனாய்.

     “நான் ஒரு மடையன்! சும்மா வம்பு பண்ணுறேன்னு விளையாண்டுகிட்டு, நீ தூக்கிட்டு வாமாமா நம்ம வீட்டுப் புது மாகாராணியை!” என்று சட்டென சகஜமாக்கினான் சூழ்நிலையை.

     மையுவின் நிலையை நொடியில் புரிந்து கொண்டு சமாளித்தும் அல்லாமல் அவளை மகாராணி என்று அழைத்ததில், மையுவிற்கு அவனை உடனே பிடித்துப் போக,

     “என்ன தம்பி?! வரவேப்பு பலமா இருக்கு அக்காக்கு! உங்க வீட்டு புது மகாராணிக்கு என்ன கொடுக்கப் போறீங்க?!” என்று மையுவும் சகஜமாக வாயடிக்கத் துவங்க,

     “ஏம்மா!! இந்தப் பொண்ணு இருக்காளே! யாரப் பார்த்தாலும் பேச ஆரம்பிச்சுடுறாடி சாரு” என்று புலம்பினான் சரத்.

     “உங்களுக்கு இல்லாததா அக்கா… வாங்க ஊரையே விலை பேசிடுவோம்!” என்று சிரித்தான் வீரனும்.

     எல்லோரும் பஸ்சிலிருந்து இறங்கியதும், சிலுசிலுவென்ற காற்றுக்கும் குளுமைக்கும் சிறிது நேரம் வெளியே திண்ணையிலேயே அமர்ந்து பேசத் துவங்கிவிட்டனர்.

     அங்குத்  தானும் அவர்களுடன் ஓய்வாய் அமர்ந்து விடாமல், பொறுப்பாய் வீட்டின் சமையலறைக்குள் சென்ற வீரன், அனைவருக்கும் சூடாகப் பசும்பாலைக் காய்ச்சிக் கொண்டு வந்து நீட்டி,

     “இந்தாங்க. வந்த களைப்புக்கு சூடா இந்தப் பாலைக் குடிங்க! தோப்புல இருந்து ஒரு தார் கற்பூர வாழையும் வெட்டியாந்து வச்சிருக்கேன். போய் எடுத்துட்டு வரேன்.” என்று மீண்டும் உள்ளே செல்ல,

     “என்னடி ஊருக்கு வந்தா கறி விருந்து, கிருந்து வைப்பாங்கன்னு பார்த்த பாலும், பழமும் குடுத்து கழட்டி விடுறாங்க” என்று சரத் முனக,

     “ராத்திரி பதினொரு மணிக்கு மேல பேய் பிசாசுதான் கறிவிருந்துக்கு போகும்! அப்போ நீங்க மனுஷனில்லையா?!” என்று கேட்டு அவன் வாயை மூட வைத்தாள் சாரு.

    இதெல்லாம் காதில் விழுந்த போதும் மனதிற்குள் பொங்கிய சிரிப்பை வெளியே உதிர்க்க முடியாமல், மௌனச் சாமியாராய் அமர்ந்திருந்தான் பிரேம், எங்கே தான் சிரித்து வைத்தால் ப்ரியா காண்டாகி தன் குட்டை உடைத்துவிட்டால் என்று!

     ‘இருந்தாலும் இந்த வீட்டு மனுஷங்களுக்கு ரொம்ப குசும்பும், கொழுப்பும் ஜாஸ்திதான். பெருசு என்னன்னா புருஷனை இப்படி வாருது! சின்னது என்னன்னா கல்லுளி மங்கிமாதிரி விஷயம் தெரிஞ்சதுல இருந்து கமுக்கமா இருந்தே சாவடிக்குது! இதுக்கு வாயைத் திறந்து நாலு வார்த்தைத் திட்டிட்டா கூட என் பயம் போய்டும்! இப்படி வாயைத் தொறக்காமயே இருந்தா வயத்துக்குள்ள பட்டாம்பூச்சி எல்லாம் பறக்குது பயத்துல!’ என்று வாய்விட்டுப் புலம்ப முடியாமல் மனதிற்குள் புலம்பித் தள்ளிக் கொண்டிருந்தான் பிரேம்.

     இரவு மணி பன்னிரெண்டை நெருங்க, “சரி சரி இப்படியே பேசிகிட்டு இருந்தா விடிஞ்சிரும். நேரமாவுது எல்லோரும் போய் படுத்து ஓய்வெடுங்க. நானும் ஊட்டுக்குக் கெளம்புறேன். காலையில வெள்ளென வேற எந்திக்கணும். கோவில்ல ஏழு மணிக்கெல்லாம் பூசை ஆரம்பிச்சுடும். அதுக்கு முன்ன நாம அங்க போய் பொங்க வைக்கணும்ல” என்று வீரன் கிளம்ப,

     “ஏன் நீங்களும் இங்கயே இருக்கலாம்ல!” என்று தெரியாமல் சொல்லிவிட்டாள் காயத்ரி.

     “இருக்கறதுக்கு என்னங்க? ஆனா என் வுட்ல இருக்க பசங்க எல்லாம் நான் இல்லாம ராவெல்லாம் கத்திக்கிட்டே கிடப்பானுங்க! நான் கூடப் போய் படுத்தாதான் சத்தம் போடாம தூங்குவானுங்க” என்றுவிட்டு வீரன் கிளம்பியே விட்டான்.

     “காயு! என்ன இது நாங்களே அந்த காட்டுப் பயலை இருக்கச் சொல்லலை! உனக்கு என்ன அவ்ளோ அக்கறை?!” என்று கீர்த்தி காயுவின் காதைக் கடிக்க,

     “ஐயோ சும்மாதான் கீர்த்தி. அவரு நல்ல தமாஷா பேசுறார்ல அதான் சட்டுன்னு மனசுல ஒட்டிகிட்டார்.” என்று காயு வெள்ளேந்தியாய்ச் சொல்ல,

     “ம்! ம்! ஒட்டிக்கிட்டாச்சா!” என்று கீர்த்தி கண்ணடிக்க,

     “அடப் போ கீர்த்தி. இதுக்கெல்லாம் போய் கேலி பண்ணிக்கிட்டு?!” என்றுவிட்டு தன் அம்மா அப்பா சென்ற அறை நோக்கிச் சென்றாள் காயத்ரி.

     அனைவரும் தங்களுக்கென ஒதுக்கப் பட்டிருந்த அறைகளுக்குள் செல்ல, ப்ரியாவைத் தொடர்ந்து அவர்கள் அறைக்குச் சென்ற பிரேம்,

     “ப் ப்ரியா!” என்றான் குரலே வெளியே வராத வண்ணம்.

     அவள் காதிலேயே விழாதது போல் தான் எடுத்து வந்த தனது உடமைகள் வைக்கப் பட்டிருந்த பையை அந்தப் பழைய காலத்து மர பீரோவில் வைத்து விட்டு வந்து அப்படியே கட்டிலில் விழுந்தாள்.

     “ப்ரியா…” என்றான் பிரேம் மீண்டும்.

     அவள் அப்போதும் கண்டு கொள்ளவில்லை!

     பயத்தில் தொண்டைக் குழி உலர, ப்ரியா என்றான் அவள் அருகே கட்டிலில் சென்று அமர்ந்து அவள் தோளைத் தொட்டு.

     வெடுக்கெனத் திரும்பியவள், முறைத்த முறைப்பில் அவன் சட்டென கட்டிலில் இருந்து எழுந்தே விட, கட்டிலில் இருந்த தலையணையில் ஒன்றைத் தூக்கித் தரையில் போட்டு,

     “போய் கீழப் படுடா!” என்று சொல்லாமல் சொல்ல, பிரேமின் முகம் செத்துப் போய் விட்டது.

     அதன்பின் ஒரு வார்த்தையும் பேசாமல் அவன் வேகமாய்ச் சென்று படுத்துவிட, அவன் கோபத்திலும், கலக்கத்திலும், பயத்திலும் இவள் கோபத்திலும், ஏமாற்றத்திலும், அழுகையிலும் உறக்கத்தைத் தொலைத்து நிம்மதி இழந்தனர் தாங்கள் முற்காலத்தில் செய்த முட்டாள்தனத்தினால்…

     “என்னங்க…!”

     “ம்!”

     “ம் இங்க பாருங்க!” என்று தன்னருகே படுத்திருந்தவனின் முகத்தைத் தன்புறம் திருப்பியவள்,

     “எப்படி உங்களுக்கு என் எஃபி அக்கவுன்ட் தெரியும்?!” என்றாள் அதிமுக்கிய கேள்வியாய்.

    “ஆமாம்! பெரிய சிதம்பர ரகிசியம்! உன் மொபைல் நம்பரை என் மொபைல்ல சேவ் பண்ணி வச்சதுமே பீப்பிள் யூ மே நோன்னு காமிச்சுக் கொடுத்துடு எல்லா சோஷியல் மீடியாக்கள்லயும்!”

     “ஆமாம்ல! அதை நான் மறந்தே போயிட்டேன்!” என்றவள்,

     “அதுல என்னோட அந்தப் பயணம் கவிதையைப் படிச்சிட்டுத்தான் இப்படி ஒரு சர்ப்ரைஸா?!” என்றாள் ஆசையாய்.

     “அதனாலன்னு இல்லடா! அதுக்கு முன்னாடியே இப்படி எல்லாம் தோணி இருக்கு!” என்று அவன் உளறிவிட,

     “அ அப்போ முன்னாடியே நீங்க என்ன லவ் பண்ணீங்களா?!” என்றாள் ஆச்சர்யமாய்.

     “பேசாம தூங்கு மானும்மா! காலையில கோவிலுக்குக் கிளம்பணும்.” என்றான் பேச்சை மாற்றி.

     “ம்! இல்லை இல்லை! சொல்லுங்க சொல்லுங்க நீங்க எப்போ என்னை லவ் பண்ண ஆரம்பிச்சீங்க?!” என்றாள் ஆர்வமாய்.

     “ப்ச் விடமாட்டியே!” என்றவன், சொன்னா கோபப் படக் கூடாது!” என்றான்.

     “என்ன?!” என்று அவள் முறைக்க,

     “பார்த்தியா பார்த்தியா முறைக்கிற?!”

     “சரி சரி முறைக்க மாட்டேன் சொல்லுங்க”

     “உண்மையா சொல்லணும்னா நீ எப்போ எனக்குள்ள வந்தன்னு எல்லாம் எனக்கு நிஜமாவே தெரியலை மானும்மா!”

     “அன்னிக்கு நான் முதன்முதல்ல உங்க வீட்டுக்கு வந்த போது நீ கத்தியைத் தூக்கிக் காட்டி என்னை மிரட்டுனியே அந்த செகண்டா?! நான் உன்கிட்ட வந்தப்போவெல்லாம் சில்லிட்டு போன உன்னோட கைகளைப் பற்றின அந்த செகண்டா?! கலைஞ்சு போன ஓவியமா இருந்த உன்னை, உங்க அம்மா நீ ட்ரெஸ் மாத்தக் கேட்டப்போ பேசின வார்த்தைகள்ல நீ கலங்கி தவிச்சியே அந்த செகண்டா! ஒவ்வொரு முறையும் நீ பயிற்சி பண்ணாம ஏமாத்திட்டு என்கிட்டே திட்டு வாங்கும் போது பாவமா முகத்தைத் தூக்கி வச்சுக்குவியே அந்த செகண்டா, அன்னிக்கு ஒருநாள் ரொம்ப கோபமா உன் மனசுக்குள்ள இருக்க கோபத்தையெல்லாம் வெளிப்படுத்தினியே அந்த செகண்டா, உன்னோட முகநூல் பக்கத்துல நீ என்னைப்பத்தி கேலியாகவும், காதலாகவும், ஏக்கமாகவும் கவிதைகளை எழுதி இருந்தியே அதையெல்லாம் படிச்ச அந்த செகண்டா, இல்லை என் கல்யாணத்துக்கு விஷ் பண்ணாம அக்கா கல்யாணத்துக்கு மட்டும் விஷ் பண்ண உன்னோட பொசசிவ்னஸ் புரிஞ்ச அந்த செகண்டா, இல்லை அக்காவுக்காக என்கிட்டே கோபப்பட்டு பேசி எனக்கு அவளைப் பத்தி உணர்த்தினியே அந்த செகண்டா, ஒரு கட்டத்துக்கு மேல, உன் கண்களால உன் காதலை என்கிட்டே சொல்லத் தவிச்சியே அந்த நொடிகளா, எல்லாத்தையும்விட அன்னிக்கு, இந்த மடையனுக்கு எப்படி வெளிபடுத்தினாலும் நம்ம காதல் புரியப் போறதில்லை, அதனால வாய்விட்டே சொல்லிடுவோம்னு சொன்னியே அந்த நொடிகளான்னு எனக்கு சத்தியமா தெரியலை மானும்மா!

     ஆனா உங்க அம்மா உன்னை சாதரணமாத் திட்டினாக் கூட எனக்கு அவ்வளவு கோவம் வரும். அதிலும் அன்னிக்கு நீ அந்த நிலைமையில இருக்கும் போது உன்னைத் தனியா விட்டுட்டு போயிருந்ததைப் பார்த்ததும், இனி ஒரு நிமிஷம் கூட யாரை நம்பியும் உன்னை விடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். உன்னை ஹாஸ்பிட்டல்ல சேர்த்த கொஞ்ச நேரத்துலேயே அம்மாவையும், அப்பாவையும் அழைச்சு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்னும் சொல்லிட்டேன்.” என்று அவன் நிறுத்த, கண்கள் கலங்க, அவன் மார்பில் சாய்ந்து கொண்டவள், அவன் நெஞ்சத்தைத் தன் இனிய முத்தங்களால் திணறடிக்க, அவனுமே அவளை முத்தக் குளியலில் மூழ்கடித்து முன்னேறலானான் தம்பதியத்தின் சுகத்தை அவளுக்குக் கற்றுக் கொடுத்தும், தான் பெற்றுக் கொண்டும்…

     மறுநாள் காலை அவர்களின் குலதெய்வக் கோவிலில் வெகு சிறப்பாக பொங்கல் வைத்துப் படையலிட்டுப் பூஜை எல்லாம் நிறைவடைந்து அனைவரும் ஊரில் இருந்த மாந்தோப்பிற்கு நடுவே கறிவிருந்தைச் சமைக்க ஆரம்பிக்க, சிறுசுகள் எல்லாம் சேர்ந்து ஒரே பேச்சும் கும்மாளமுமாய் அரட்டை அடித்துக் கொண்டிருந்தது.

     மையுவின் கண்கள் நேற்றைய இன்ப நிகழ்வில், அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல், தவிர்த்தபடி எங்கோ வளம் வர, மெல்ல அவளருகே வந்தவன்,

     “மாந்தோப்பை ஒருமுறை சுற்றிப் பாத்துட்டு வரலாமா?!” என்று அவளைத் தூக்கப் போக,

     “ம் வேணாம்!” என்று மறுத்தாள் உடனே.

     “ஏன் ஏன் வேணாம்?!” என்றவன், இம்முறை அவள் அனுமதிக்காய் காத்திராமல்,

     “ம்மா! நாங்க ரெண்டு பேரும் மாந்தோப்பை சுற்றிப் பார்த்துட்டு வரோம்” என்றபடி அவளைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

     “ஐயோ! என்னங்க நீங்க எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து பேசிட்டு இருக்கும் போது தனியா என்னைத் தூக்கிட்டு வந்தா எப்படி?!” என்று முகம் சிவக்க,

     “ம்! என் மானும்மாவை எல்லோர் முன்னாடியும் கொஞ்ச முடியாதே அதுக்குத்தான்.” என்றான்.

     “ப்ச் போங்க!” என்ற சிணுங்கலுடன், அவள் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொள்ள, 

     “என்ன? காலையில இருந்து என் மானும்மா என் பக்கம் திரும்பக் கூட மாட்டேங்குறா?!” என்றான் அவள் காதருகே வந்து கிசுகிசுப்பாய்.

     “அ அதெல்லாம் ஒண்ணுமில்லை!” என்று அவள் திணற,

     “அப்போ என் மானுக்கு என்மேல கோபமா?!” என்றான் சீண்டலாய்.

     “ம் அதெல்லாம் இல்லை!” என்று அவள் செல்லம் கொஞ்ச,

     “அப்போ இன்னிக்கு பஃர்ஸ்ட் டே கொண்டாடிலாம்” என்று கண்ணடிக்க,

     “அடிவிழும்!” என்றாள் இப்போது மிரட்டலுக்குத் தாவி.

      “அடிச்சுக்கோ!” என்று அவன் குனிந்து அவன் கன்னத்தைக் காட்ட, அவள் செல்லமாய் ஒரு அடி வைக்க, அந்த அடிக்கு மாற்றாய் சில முத்தங்களையும் பெற்றுக் கொண்டே நிமிர்ந்தான்.

     அவளுடன் பேசிக் கொண்டே அந்த மாந்தோப்பின் பின்புறம் இருந்த சூரியகாந்தி மற்றும் சோளத் தோட்டத்தை அடைய,

     “வாவ்!!” என்று அந்தத் தோட்டத்தின் அழகில் விழிவிரித்து ஆச்சர்யம் கொண்டாள் மையு.

      மெல்ல அவளை கீழே இறக்கி சற்று உயரமாய் இருந்த வரப்பின் மீது அமர வைத்தவன்,

     “ஒருநிமிஷம் டா!” என்று சொல்லிச் சில சோளங்களைப் பறித்துக் கொண்டு வர,

     “ஐ! சோளம்!” என்று கையில் வாங்கப் போன மையுவை,

     “இரு மானும்மா சுட்டுத் தரேன் இன்னும் ருசியா இருக்கும்!” என,

     “நீங்க சுடுங்க அதுவரைக்கும் கொஞ்சூண்டு அப்படியே சாப்பிடறேன்” என்று ஒன்றை மட்டும் அவன் கையில் இருந்து வாங்கிக் கொண்ட மையு, அவன் காய்ந்து போயிருந்த சருகுகளை வைத்து கையோடு எடுத்து வந்திருந்த தீப்பெட்டி வைத்துத் தீ மூட்டி, சோளத்தைச் சுடத் துவங்க,

     “இந்த இடத்தைப் பார்க்கும் போதும் அந்த சாங்க்தான் நியாபகம் வருது” என்றபடி, மையு,

     “அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே…

     முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே” என்று பாடத் துவங்க, அவன் கலீரெனச் சிரித்து விட்டான்.

     “என்ன? என்னா அப்படி சிரிக்கிறீங்க?! நியாயமா நீங்க என்னைப் பார்த்துப் பாடணும். ஆனா காலக்கொடுமை எனக்கு நானே படிக்கிறேன்” என்று மையு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு கொள்ள,

     “ஓ! உங்களுக்கு அந்த நெனைப்பெல்லாம் வேற இருக்கா?!” என்று அவன் வேண்டுமென்றே வெறுப்பேற்ற,

     “என்ன என்ன எனக்காக பாட்டெல்லாம் பாடக் கூடாதா?! என்ன கலர் கொஞ்சம் கம்மிதான் ஆனாலும் நாங்களும் அழகிதான்!” என்றவள்,

     “என் கண்ணைப் பார்த்துட்டு எத்தனைப் பேர் எனக்கு ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்க தெரியுமா?!” என்றாள் பெருமிதமாய்.

     “ஓ!” என்று அவன் சிரிக்க,

     “சத்தியமா டாக்ட்ரே!” என்றாள் அவன் தலையில் அடித்து.

     “அடிப்பாவி புருஷன் தலையில அடிச்சு சத்தியம் பண்ற! எனக்கு எதுனா ஆகிடுச்சுனா?!” என்று அவன் பயமுறுத்த,

     “ம்! இல்லை இல்லை! சத்தியத்தை வாபஸ் வாங்கிக்கிறேன்!” என்று பயந்த விழிகளோடு சொன்னவள், அருகே சென்றவன்,

     “உன் கண்ணை பார்த்து எத்தனைப் பேர் வேணாலும் ரசிச்சு இருக்கலாம் மானும்மா! ஆனா அந்தக் கண்களோட மொழிகளை கனவுகளை என்னைத் தவிர இந்த உலகத்துல வேறு யாராலுமே புரிஞ்சுக்க முடியாது மானும்மா!” என்று அவன் அவள் கண்களில் முத்தம் பதிக்க, அந்த அன்பின் மயக்கத்தில் இப்பிறவியின் பலனை எல்லாம் ஒருசேர அனுபவிப்பதைப் போல் உணர்ந்தாள் அவனின் அழகிய மான்விழியாள்…    

                                  -மான்விழி மயங்குவாள்…

 

 

 

    

         

                    

         

 

    

    

 

             

Advertisement