Advertisement

      ‘எல்லாம் என் தலையெழுத்து! இந்த மித்ரன் பையன் ஒருத்தன் மட்டும் இந்த வீட்ல இல்லைனா இவங்க எல்லோரையும் என் சுண்டு விரல்ல ஆட்டிப் படச்சிடுவேன்! ஆனா எங்க?!’ என்று நொந்து கொண்டவன்,

     ‘டேரர் பீசா இருந்த என்னை இப்படிக் காமெடி பீஸ் மாதிரி ஆக்கிட்டீங்களே டா! இந்தப் பாவம் உங்களை எல்லாம் சும்மா விடாது!’ என்று தன் நிலையை நொந்து புலம்பிக் கொண்டான் சரத்.

     இங்கு இவன் நிலை இப்படி இருக்க, இவனிடம் வம்பு இழுத்தது போதாதென்று, ப்ரியாவின் அறையில் கால்மேல் கால் போட்டபடி படுத்திருந்த பிரேம், தங்களது துவைத்த துணிகளை மடித்துக் வைத்துக் கொண்டிருந்த ப்ரியாவிடமும் வாய் சும்மா இராமல்,

     “ம்! இன்னிக்கு வந்தவங்க எல்லாம் இந்த வீட்ல சகல சம்பத்தையும் அனுபவிக்குறாங்க! ஆனா நான் வாங்கிட்டு வந்த வரம், எனக்கு கால்பவுன் மோதிரத்துக்குக் கூட வக்கில்லாம போயிடுச்சு! பேருக்குதான் பணக்கார வீட்டு மருமகன்!” என்று நக்கலடிக்க,

     “ஏன் அந்தக் கால் பவுன் மோதிரம் இல்லைன்னா உங்க விரல் கையில இருந்து கழண்டு விழுந்துடுவேன்னு சொல்லுதா என்ன?!” என்றாள் ப்ரியாவும் முன்பு போல் வாயில்லாப் பூச்சியாய் இராமல்.

     “நேரம்டி நேரம்! என் விரல் கழண்டு விழுந்தா கூட நீ சந்தோஷம்தான் படுவ போலயே! ம், உன்னை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணதுக்கு, எங்க வீட்ல பார்க்குற சாதாரணப் பொண்ணை கட்டி இருந்தாலே கொஞ்ச நஞ்சம் காசு பணமாச்சும் பார்த்திருக்கலாம்!” என்று சத்தமாய்ச் சொன்னவன், தன் குரலைத் தாழ்த்தி,

     ‘இதுக்குப் போய் ப்ளானெல்லாம் பண்ணி உன்னைக் கீழ எல்லாம் தள்ளி விட்டு உன் மனச மாத்தப் பார்த்தேனே!’ என்று மெதுவாய்ப் புலம்பியபடி கண்களை மூடிப் படுத்திருக்க, ப்ரியா சரியாக இந்த வார்த்தைகளை அவன் சொன்ன சமயம் பார்த்து மடித்த துணிகளை வார்ட்ரோபில் அடுக்கி விட்டு அவனருகே வர, அவன் சொன்னது அவள் காதுகளிலும் விழுந்து விட்டது!

     “எ என்ன சொன்னீங்க?!” என்றாள் அதிர்ச்சியாய்.

     அவள் பக்கத்தில் வந்துவிட்டது தெரியாமல் உளறி இருந்த பிரேம், கண்திறந்து அவளை அருகே கண்டதும் திடுக்கிட்டுப் போனான்.

     “ஒ! ஒ ஒ! ஒண்ணும் இல்லையே! ந நான் எ என்ன சொன்னேன்?!” என்று தந்தியடித்தான் பயத்தில்.

     “அ அப்போ நி நீங்கதான் என்னை மாடியில இருந்தப் பிடிச்சுத் தள்ளி விட்டீங்களா?!” என்றாள் ப்ரியா அழுகையும் கோபமும் போட்டியிட.

     “ஐயோ! அப்படி எல்லாம் இல்லைம்மா. நா நான் போய் அப்படிப் பண்ணுவேனா?! நீ மாசமா இருக்க இந்த நேரத்துல போய் இப்படி அழலாமா?!” என்று பிரேம் பதறிப் போய் அவளைச் சமாதானப் படுத்த, அவன் கையைப் பட்டெனத் தட்டிவிட்டவள்,

     “சீ தொடாத!” என்று சீறினாள்.

     “ஐயோ நிஜம்மா நான் அப்படிப் பண்ணலைம்மா!” என்று பிரேம் சத்தியம் போல் சொல்ல,

     “என்மேல சத்தியமா சொல்லு,” என்றவள்,

     “இல்லை இல்லை என்னை மாடியில இருந்து உருட்டிவிட்ட நீ சத்தியம் பண்ண மாட்டியா என்ன?!” என்று சந்தேகமாய்ச் சொல்லிவிட்டு,

     “நம்மக் குழந்தை, இல்லை நீ அதைப் பத்திக் கூடக் கவலைப் பட மாட்ட” என்று அவனை முறைத்தவள்,

     “உன் உன்மேல சத்தியம் பண்ணு!” என்றாள் அவன் கையை எடுத்து அவன் தலையிலேயே வைத்து.

     ‘அடிப் பாவி! கடைசியில என் மேலயே என்னைப் பொய் சத்தியம் பண்ண வச்சு கொல்லப் பார்க்குறியே?!’ என்று எண்ணிக் கொண்டவன் அமைதியாய் இருக்க,

     “அ அப்போ! நீதான் என்னைத் தள்ளி விட்டிருக்க?!” என்று அழுத ப்ரியா, அவனை ஒரே தள்ளில் கட்டிலில் இருந்து ஆவேசமாய் பிடித்துத் தள்ளி,

     “இ இனி என் பக்கத்துல கூட வந்துடாத! கொலைகாரா!” என்று சாடினாள் மனம் வெறுத்துப் போய்.

     “மேடம் மேடம்னு கூப்பிட்டே என்னை மேல அனுப்பப் பார்த்திருக்கியே?! இது தெரியாம நான் உன்னைப் போய் நம்பி, என் வாழ்க்கையை நாசமாக்கிக்கிட்டேனே!” என்று தலையில் அடித்துக் கொள்ள,

     “அய்யோ! ப்ரியாம்மா! ஏம்மா இப்படி அடிச்சுக்குற?!” என்று பிரேம் அவளைத் தடுக்க,

     “ஹென் உன்னை அடிக்க முடியலையே அதான்!” என்றவள்,

     “கையை எடு! கையை எடுன்னு சொல்றேன்!” என்று அதட்ட, அவன் அப்போதும்,

     “அது நீ எனக்கு கிடைக்கணும்ன்னுதான் அப்படிப் பண்ணிட்டேன்டா!” என்று பிரேம் சரணடைய,

      “இப்போ நீ கையை எடுக்கப் போறியா இல்லை மித்ரன் கிட்ட நடந்ததைச் சொல்லவா?!” என்றாள் ருத்ராதேவியாய் அவனை முறைத்தபடி.

     அந்த வார்த்தையில் அவன் பட்டென அவளை விட்டு விலக, “இப்போ கூட உன் உயிர் மேலதான் உனக்கு அக்கறை?!” என்று அதற்கும் திட்டினாள் ப்ரியா.

     ‘ஐயோ இதென்னடா வம்பா போச்சு! இந்த கல்கி படத்துல ஆரம்பத்துல வர்ற ஹீரோயின் சுருதி மாதிரி அமைதியா இருந்தவ, க்ளைமாக்ஸ்ல பிரகாஷ்ராஜ பாடாபடுத்துற வில்லி சுருதி மாதிரி மாத்தி மாத்திப் பேசுறாளே இவ?!’ என்று மனதிற்குள் தலையில் அடித்துக் கொண்டான் வெளியில் அடித்துக் கொள்ள முடியாமல்.

     இங்கு இவர்கள் வாழ்க்கைத் துவங்கவிருக்கும் நன்னாளில் ப்ரேம் ப்ரியாவின் வாழ்க்கை கேள்விக் குறியாகிப்போனது…

                           *****

     “ப்ச்! என்ன இவரை இவ்ளோ நேரமா காணோம்! யோவ்! என் பொறுமையா ரொம்ப சோதிக்காதய்யா குலோப்ஜாமூனு!” என்று அவள் வாய்விட்டுப் புலம்ப ஆரம்பித்த நேரம் அவன் உள்ளே நுழைய, அவள் நாணிக் கோணி அமர்ந்திருக்காமல், நிமிர்ந்து அவன் வரவை பார்த்து,

     “ம்! எவ்ளோ நேரம்ப்பா? டயர்டா இருக்குல்ல! சீக்கிரம் தூங்க வேணாமா?!” என்றாள் கொஞ்சலும் சலிப்புமாக.

     சிரித்தபடி அவளருகே வந்து அமர்ந்தவன், அவள் சொன்னதையே பிடித்துக் கொண்டு,

     “சரி, நீ படுத்துத் தூங்கு மானுமா. காலையில பேசிக்கலாம்” என்றான்.

     அவன் அப்படிச் சொன்னதுதான் தாமதம், “யோவ்! கல்யாணத்துக்கு முன்னாடி தான் ரொமான்ஸ் பண்ணலை! சரி ஏதோ நல்ல புள்ளை போலன்னு விட்டா, முதல்ராத்திரி அன்னிக்கு லட்டு மாதிரி பொண்டாட்டி பக்கத்துல இருந்தும் தூங்கச் சொல்றியே! நீ என்னய்யா டிசைன்?!” என்று அவள் பொங்கிவிட, அவன் வாய்விட்டுச் சிரித்துவிட்டான்.

     அவள் சிரிப்பதைப் பார்த்து அவள் கடுப்புடன் முறைக்க,

     “மானும்மா இன்னிக்கு காலையில இருந்து நீ கொஞ்ச நேரம் கூட தூங்கலை! பாரு உன் கண்ணு எப்படி சோர்ந்து போயிருக்கு” என்று அவள் இமைகளை நீவிவிட்டவனுக்கு எப்போதும் போல் அவள் கண்களில் அழுந்த முத்தமிட வேண்டும் என்ற ஆசை எழ,

     ‘ம்ஹும்! இத்தனை நாள் பொறுமையா இருந்துட்டோம். இன்னும் ஒருநாள்தானே!’ என்று தேற்றிக் கொண்டு, கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டு இருந்த அவளைத் தன் புறம் திருப்பினான்.

     அவன் செய்கையில் அவளின் அழகிய மான்விழிகள், அவனைச் செல்லக் கோபத்துடன் முறைக்க,

     “சொன்னா கேட்கணும்! படு!” என்றான் மீண்டும்.

     முதலில் அவன் உறங்கச் சொன்ன போது அவள் உணராவிட்டாலும், அவன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தவும் அவள் புரிந்து கொண்டாள்.

     “நமக்குள்ள ஏதாவது நடந்தா என் ஹெல்த்துக்கு ஏதாவது பிரச்சனை வரும்னு பயப்படறீங்களாப்பா?” என்றாள் மெதுவாக.

     “அப்படி எல்லாம் இல்லைடா! நீ தூங்கு! நாம நாளைக்கு டாக்டரைப் போய் பார்த்துட்டு அப்புறம் மத்ததெல்லாம் யோசிக்கலாம்!” என்றான் பொறுமையாய்.

    அவன் தன்மேல் கொண்டிருக்கும், அக்கறையும் அன்பும் உணர்ந்த நொடி, அவள் அவன் நெஞ்சோடு சாய்ந்து கொள்ள, அவன் மென்மையாய் அவளை அணைத்தபடி, மெல்ல அவள் தலையை வருடி விட்டான்.

     அவனது வருடலில் கரைந்தபடியே, “ந நான் உங்களை விரும்பறேன்னு தெரிஞ்சப்போவே என்னோட நோய் பத்தின எல்லா விவரத்தையும் தேடிப் படிச்சேன்.” என்றாள் மெல்லிய குரலில்.

     அவள் சொன்னதைக் கேட்டு அவன் கவலையுடன் அவள் முகம் பார்க்க,

     “நான் எவ்ளோ வருஷம் வாழ்வேன்னு வேணா எனக்குத் தெரியாம இருக்கலாம், ஆனா இனி நான் வாழப் போற ஒவ்வொரு நொடியும் உங்களுக்கும் நம்ம குடும்பத்துக்கும் சந்தோஷத்தை அள்ளி அள்ளிக் கொடுப்பேன்!” என்று ஆசையோடு சொன்னவளை இறுக அணைத்துக் கொண்டவன்,

     “என் மானும்மா என்னோட என் காலம் முழுக்க வாழ்வா. நான் வாழவைப்பேன்!” என்றான் உறுதியான குரலில்.

     சில நொடிகள் இருவரிடமும் எந்தப் பிரதிபலிப்பும் இல்லை! இருவரும் அவரவர் எண்ணங்களில் தங்களைத் தொலைத்தபடி நெகிழ்ந்திருக்க, அவளே அந்த அமைதியைக் கலைத்தாள்.

     “அ அதோட இன்னொன்னும் தெரிஞ்சுக்கிட்டேன்! எ என்னால உங்க, உங்களுக்கு எல்லா சந்தோஷத்தையும் தர முடியும்! இ இன்னும் ஒரே வருஷத்துல உங்களுக்கு ஒரு குட்டி மானும்மாவைக் குடுப்பேன்!” என்றாள் வெட்கமும், சந்தோஷமும் கலந்த குரலில்.

     அதைக் கேட்டவனுக்கும் அவளின் சந்தோஷம் தொற்றிக் கொண்டாலும் இனம் புரியாத கவலையும் உடன் எழுந்தது… 

                    – மான்விழி மனம் கொய்வாள்…

     

          

         

 

 

    

 

Advertisement