பூஜை அறைக்கு மனைவியைத் தூக்கிக் கொண்டு சென்றவன், சற்று உயர்ந்த மேடையில் வைக்கபட்டிருந்த காமாட்சி விளக்கின் அருகே சென்று, மெல்ல அவளைக் கீழே இறக்கிவிட்டு அவள் தடுமாறாமல் இருக்க கெட்டியாய் அவளைத் தாங்கிப் பிடித்தபடி நின்றான்.
எப்போதும் கீழே வைக்கபட்டிருக்கும் விளக்கு இன்று மேலே மாற்றி வைக்கப் பட்டிருப்பதைக் கண்டு, அன்னையைத் திரும்பிப் பார்க்க, மலர் வேறு புறம் முகத்தைத் திருப்பிக் கொள்ள அவன் இதழோரம் புன்னகை மலர்ந்தது.
“விளக்கேத்தும்மா” என்று சாரு சொல்ல, மையு,
“கடவுளே என்னால இந்தக் குடும்பத்துக்கும், அவருக்கும் சந்தோஷம் மட்டும்தான் கிடைக்கணும். எந்தவிதத்துலயும் நான் யார் மனசையும் கஷ்டப் படுத்திடக் கூடாது!” என்று வேண்டியபடி விளக்கை ஏற்றினாள் தன்னை நேசித்தவனையே தான் பாடாய்ப் படுத்தப் போகிறோம் என்பதை அறியாமல்.
விளக்கேற்றி வந்த பின் சமையல் அறையில் இருக்கும் உப்பு, அரிசி, பருப்பு, புளி, மிளகாய் இவை அனைத்தையும் சிறு சிறு கிண்ணங்களில் கொண்டு வந்து அவள் முன்னே வைத்து அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் அவள் கையால் எடுத்து ஒரு தட்டில் வைக்கச் சொன்னாள் ராதா.
“இ இதெல்லாம் எதுக்கு?!” என்று மையு புரியாமல் கேட்க,
“வீட்டுக்கு வந்த மருமக மகாலட்சுமி இல்லையா, அவ கையால் சமையல் அறையில் உள்ள முக்கியமான உணவுப் பொருட்களை தொட்டு வைக்கணும்ங்கிறது சம்பிரதாயம்.” என்றார் விளக்கமாக.
“ஓ! நல்லாயிருக்கே!” என்றவள், ஆசையாய் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு பிடி எடுத்து தட்டில் வைக்க,
“இதை இன்னிக்கு சமையலுக்கு பயன்படுத்தணும் ராதா. தனியாக எடுத்து வை” என்றார் மலர்.
“ம் சரிங்க அத்தை” என,
“சாரு பாலும் பழமும் தயார்தானே” என்று மலர் கேட்க,
“ம் ம்மா!” என்ற சாரு, ஓடோடிப் போய் எடுத்து வர, மையு அத்தையை நிமிர்ந்து பார்த்தாள். மருமகள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும், சட்டென பார்வையை வேறுபுறம் திருப்பிய மலரைப் பார்த்தபடியே,
“எங்க வீட்லயும் ஒரு சம்பிரதாயம் இருக்கு அக்கா. அது என்னன்னா வீட்டுக்கு வந்த மருமக, முதன் முதல்ல, மாமியார் கையாலதான் பாலும் பழமும் ஊட்டிக்கணுமாம்” என்றாள் மாமியாரைச் செல்லமாய் வம்பிழுத்து.
“இது என்ன புது சம்பிரதாயம்?! அப்படி எல்லாம் எதுவும் இல்லையேடி!” என்று சாந்தி காயத்ரியிடம் முணுமுணுக்க,
“ம்மா! அவ மாமாவோட அம்மா அவகிட்ட பேச மாட்டேங்குறாங்குறாங்கன்னு வம்பு பண்றா! நீங்க பேசாம இருங்க. என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்” என்றாள் காயு.
‘இதென்னா புதுசா இருக்கு?!’ என்று மலர் மையுவை முறைக்க,
“வாங்க அத்தை வந்து ஊட்டிவிடுங்க! இல்லேன்னா நீங்க ஊட்டி விடுற வரைக்கும் நான் பட்டினிதான்” என்றாள் பாவமாய் முகத்தை வைத்து.
மலர் மகனை முறைக்க, “எனக்குத் தெரியாதும்மா! நீங்களாச்சு உங்க மருமகளாச்சு!” என்று மித்ரன் கழண்டு கொள்ள, அப்போதும் மலர் தயங்கியபடியே நின்றிருந்தார்.
“என்னங்க ஏற்கனவே காலையில இருந்து சாப்பிடலைல்ல! லேசா தலை சுத்துற மாதிரி வேற இருக்குங்க! இனி என்னைக்கு அத்தை ஊட்டிவிட்டு என்னைக்கு நான் சாப்பிட?!” என்று கண்கள் செருகுவது போல் மையு சேட்டை செய்ய, மலர் வேகவேகமாகச் சென்று அவளுக்கு பாலையும் பழத்தையும் ஊட்டிவிட,
“பரவாயில்லை மாமா. நாங்க அப்பப்போ வந்து அக்காவைப் பார்த்துக்கறோம். நீங்க இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை!” என்றாள் கண்ணீரைத் துடைத்தபடி.
மையுவிற்கும் அவர்கள் செல்வதைக் கண்டுக் கண்கள் கலங்கத்தான் செய்தது. ஆனாலும் அவன் வருந்தக் கூடாது என்பதற்காக கண்ணீர் சிந்தாமல் கட்டுப் படுத்திக் கொண்டாள்.
*****
இரவு, என்னவென்று புரியாத மனநிலையில் அவன் மொட்டை மாடியில் நடைபோட்டுக் கொண்டிருந்தான்.
‘அவளை எப்படிச் சமாளிக்கிறது?! இப்போதைக்கு டாக்டரைக் கன்சல்ட் பண்ணாம உடலளவில் எந்த உறவும் நமக்குள்ள வேண்டாம்னு அவகிட்ட எப்படி சொல்றது?! அவ எப்படி ரியாக்ட் பண்ணுவா?!” என்று ஏதேதோ யோசித்தபடி அவன் நடைபோட்டுக் கொண்டிருக்க, கிருஷ்ணன் அங்கு வந்தான்,
“என்னடா அந்தப் பொண்ணை அங்கத் தனியா விட்டுட்டு வந்து இங்க நடந்துகிட்டு இருக்க?!” குரல் கொடுத்தபடி.
“ஹான்! ஒண்ணுமில்லை அண்ணா! இதோ போகணும்” என்றவனை,
“எனக்குப் புரியுதுடா நீ என்ன யோசிச்சிருப்பன்னு! ம்!” என்று பெருமூச்சுவிட்டவன்,
“பிடிவாதமா இருந்து கல்யாணம் செய்துகிட்டது பெருசில்லை! அந்தப் பொண்ணையும் கஷ்டப்படுத்தாம, நீயும் கஷ்டப்படாம சந்தோஷமா வாழ்ந்து காட்டுறதுலதான் உங்க சந்தோஷம் மட்டுமில்ல எங்க சந்தோஷமும் அடங்கி இருக்கு” என்று தம்பியின் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றான் ஆறுதலாய்.
*****
அங்கு தோட்டத்தில் சரத் வயிற்றெரிச்சலுடன் வாக்கிங் சென்று கொண்டிருக்க, அவனை மேலும் வெறுப்பேற்ற பிரேம் அவனை நோக்கிச் சென்றான்.
“என்ன சகலை… வயறு எரியுது போல?!” என்று எடுத்த எடுப்பிலேயே பிரேம் தீமூட்ட, சரத் அவனை ஒரு முறை முறைத்துவிட்டு, நடந்து கொண்டே இருந்தான்.
அப்போதும் பிரேம் விடாமல், “போற போக்க பார்த்தா உங்களுக்கு கூடிய சீக்கிரமே சுகர் வந்துடும் போல” என்று வம்பிழுக்க,
“எனக்கு சுகர் வரட்டும் பாவக்காய் வரட்டும். உனக்கென்னய்யா வந்தது. கல்யாணத்துக்கு வந்தியா, மொக்கினியா பேசாம உன் வேலையைப் பார்த்துக்கிட்டு கிளம்பு.” என்றான் சரத் சிடுசிடுப்பாய்.
“அது சரி!” என்றவன்,
“அன்னிக்கு இந்த வீட்டுப் பொண்ணுக்கு நகைப் போட்டு கல்யாணம் செய்ஞ்சு வைக்கிறாங்கன்னே அப்படி அலைஞ்சியே! இன்னிக்கு பார்த்தியா யாரோ வீட்டுப் பொண்ணு எவ்ளோ சீரும் சிறப்புமா உன் மாமனார் வீட்டு பணத்துலயும், நகையிலயுமே கல்யாணம் செய்துகிட்டு சொத்துக்கும் உரிமையா வந்து உட்கார்ந்திருக்கா!” என்றான் விடாமல்.
‘இ இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சுது?!’ என்று சரத் பார்க்க,
“என் பொண்டாட்டி எல்லாம் சொல்லிட்டான்னு பார்க்குறியா! ப்ச்! அந்த அளவுக்கு எல்லாம் என் பொண்டாட்டி கிடையாது. அவளை இந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணி இருந்தாலும் அவ உன்னையும் உன் வீட்டு ஆளுங்களைப் பத்தியும் ஒருநாளும் குறைவா பேசினது இல்லை! ஆனா நீதான் அவளை என்னென்னமோ பேசி கஷ்டப் படுத்தி இருக்க! கல்யாணம் ஆகி இன்னை வரைக்கும் உன் மாமியார் வீட்ல இருந்து ஒரு சீரைக் கூட அவ வாங்கிக்கலை! அவ ரோஷக்காரி! சிலவங்க மாதிரி மானமில்லாதவ இல்லை!” என்று பிரேம் தன் வஞ்சத்தை வார்த்தைகளால் தீர்த்துக் கொள்ள,
“ஏய்! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின மரியாதை கெட்டுப் போயிடும்! ஒழுங்கா இங்க இருந்து ஓடிப் போயிடு!” என்றான் சரத் எச்சரிக்கையாய்.
“ஹப்ப ஹப்பா! ரொம்ப பயந்துட்டேன் ப்பா! போயா! நீயும் உன் வெட்டி ஜம்பமும்! என் மச்சான் ஒரு முறை முறைச்சாலே நீ ஆடிப் போயிடுவ! இதுல என்னை நீ மிரட்டுறியா?!” என்று நக்கலடித்த பிரேம்.
“ஒழுங்கா நீ மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு உன் வீட்டுக்குப் போற வழியப் பாரு! இல்லைன்னா புதுசா வந்த பொண்ணுக்கிட்டயும் அசிங்கப் பட வேண்டி இருக்கும்!” என்று விட்டு நகர,
“ச்சே!” என்று கையை இறுக மூடி அருகே இருந்த மரத்தில் குத்தியவன், வலி தாளாமல்,
“ஹா!” என்று அலறியபடி பின்னே இழுத்துக் கொண்டான்.
“இதுக்குத்தான் தாக்குற இடத்தை கவனிச்சு தாக்கணும்! இல்லைனா இப்படித்தான் தனக்குத் தானே ஆப்பு வரும்!” என்று அவனைக் காணாமல் தேடி வந்த மனைவியும் கவுண்டர் கொடுக்க,
“உன் வேலையைப் பார்த்துகிட்டு போடி!” என்று சரத் சீற,
“ம்?!” என்று சாரு முறைக்க,
“இ இல்லைம்மா நேரமாச்சே உன் வேலையைப் பார்த்துட்டுப் போய்ப் படுன்னு சொன்னேன்!” என்று சரத் டோனை மாற்றித், தன்மையாய் சொல்ல,
“அந்த பயம் இருந்தா சரி” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தாள் சாரு.