Advertisement

                                        

    திருமண வைபவம் அவர்கள் வீட்டுத் தோட்டத்திலேயே நடக்கவிருந்ததால், ஏற்கனவே பசுமையாய் இருந்த அழகிய தோட்டத்திற்கு நடுவே பூக்களால் ஆன மணப்பந்தல் அமைக்கப் பட்டிருந்தது. பச்சைப் பசேலென இருந்த புல்வெளியில் விருந்தினர் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. ஓங்கி வளர்ந்திருந்த மரங்களே நிழலைக் கொடுத்திருக்க தனியாய்ப் பந்தல் எதுவும் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டான் மித்ரன் இயற்கையும் அவர்கள் திருமணத்தைக் கண்டு ஆசிர்வதிக்கட்டும் என்று! விருந்துக்கு மட்டும் மாடியில் பந்தல் போட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மணமேடையில், மையுவும் மித்ரனும் அமர்ந்து சம்பிரதாயங்களைச் செய்ய, இருவர் அமரக்கூடிய அழகிய திவான் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.

     மிக நெருங்கிய உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் மட்டுமே விழாவிற்கு அழைக்கப் பட்டிருந்தனர். வந்தவர்கள் எல்லோருக்குமே என்ன இப்படி எதிர்பாராத திருமணம் என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. மித்ரன் பட்டு வெட்டி சட்டையில் கம்பீரமாய் நடந்து வருவதைப் பார்க்க மலருக்கு கண்கள் மீண்டும் கலங்கியது.

     “ம்மா! அழாதீங்கம்மா! நல்லதே நடக்கும்னு நம்புங்கம்மா” என்று ப்ரியா மலரின் தோள்கள் தொட்டு ஆறுதல் உரைக்க,

     “ம்!” என்று மெல்ல தலையசைத்தார் மலர் தன் மனதைத் தேற்றிக் கொண்டு.

     அங்கு மித்ரன் வீட்டு விருந்தினர் மாளிகையில் இருந்த ஓர் அறையில் மையுவின் அந்த அழகிய விழிகளுக்கு அஞ்சனத்தைச் சூட்டி மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தாள் அழகு நிலையத்தில் இருந்து வரவழைக்கபட்டிருந்த அந்த பியுடிஷியன். சற்றே கருத்த தேகமாய் இருந்தாலும், அந்த நீல வர்ண பட்டுபுடவை மையுவின் அழகைப் பன்மடங்கு கூட்டியே காண்பித்தது.

     அவளின் குட்டையாய் இருந்த தலைமுடியில் ஜவுரி வைத்துப் பின்னி, மல்லிகைப்பூ ஜடையைச் சூட்டி இருந்தாள் அந்தப் பெண். நடுவகிட்டில் பழைய காலத்து நெற்றிச் சுட்டியைப் போல் இருந்த அந்தப் பெரிய நெற்றிச் சுட்டியைச்  சூட்டி, வகிட்டின் இருபுறமும் சூரிய, சந்திர பில்லைகளை வைத்து இருந்தாள். பெரிய கல்டாலர் வைத்த தங்கச் சங்கிலியும் அதற்க்கு ஏற்றார் போல் இருந்த அன்னப்பறவை டாலர் கொண்ட கல்அட்டிகையையும் சூட்டி இருந்தாள். வட்டியானம், வங்கி, கண்ணாடி வளையல்களுக்கு இருபுறமும் வைத்துப் போடப்பட்டிருந்த வளையல் என்று எல்லாமே பழைய காலத்து நகைகளைப் போன்ற வடிவில்தான் இருந்தன.

     மையு தன்னாலேயே தன் கண்களை நம்ப முடியாமல் கண்ணாடியைப் பார்த்துப் பார்த்துத்  தன்னை ரசித்தபடி அமர்ந்திருந்தாள். பல காலங்களுக்குப் பின் புடவைக் கட்டி இருப்பதே அவள் அழகை பன்மடங்குக் கூட்டிக் காண்பித்தது. இதில், நகைகள், பூக்கள், அஞ்சனம் என எல்லாம் சேர்ந்து அவள் அழகை மேலும் மேலும் எடுத்துக் காண்பிக்க அவளே அசந்து போய் அமர்ந்திருந்தாள் தன் அழகில் சொக்கிப் போய். அதிலும் அவள் எப்போதும் ரசிக்கும் அந்த ஒற்றைக் கல் பதித்த தங்க மூக்குத்தி அவளைப் பேரழகியாக்கி இருந்தது!

     “வாவ்! அண்ணி.. நேத்து வரைக்கும் அப்படி இருந்தவங்களா நீங்க?! என் கண்ணையே என்னால நம்ப முடியலை!” என்றபடியே கீர்த்தி உள்ளே வர, மையு வெட்கப் புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.

     “அட நீங்க வேற அவளே அவளை அவதானான்னு நம்பாம பார்த்துக்கிட்டு இருக்கா!” என்று காயு அக்காவை வார,

     “ஏன் ஏன்டி?! என் பொண்ணுக்கு என்ன? அவ எப்போவுமே அழகுதான்” என்றபடியே வந்த சாந்தி,

     “இன்னும் கொஞ்ச நேரத்துல பொண்ணை மணமேடைக்குக் கூப்பிட்டிடுவாங்க. தயாராகியாச்சுல்ல?!” என்றார்.

     “பார்றா பாசத்தை!” என்று காயு சீண்ட,

     “எப்போவும் அவமேல பாசம்தாண்டி! என்ன இப்படி இருக்காளேன்ற வருத்தத்துல புலம்புவேன்” என்று தாயாய் தனது மனக் குறையை வெளிபடுத்த,

     “டோன்ட் வொரிங்க ஆன்ட்டி! அதான் அண்ணி எங்க வீட்டுக்கு வந்துட்டாங்கல்ல. இனி அவங்களை எப்போவும் சந்தோஷமா பார்த்துக்கறது எங்க பொறுப்பு. அண்ணா கூடிய சீக்கிரமே அண்ணியை நார்மல் ஆக்கிடுவார் பாருங்க” என்ற கீர்த்தி, ஆசையாய் தன் அண்ணியின் கன்னத்தில் முத்தம் வைக்க, எல்லோரும் அகமகிழ்ந்து போயினர். 

     சாந்தி மகளை எண்ணிக் கண்கள் கலங்கி நிற்க, அவரை திசை திருப்பும் பொருட்டு,

     “கீர்த்தி இந்த நகை செட் எல்லாம் எங்க வாங்கினீங்க? எல்லாமே ரொம்ப அழகா பழைய கால டிசைன்ல இருக்கு! இந்தக் காலத்துல கூட இப்படிப்பட்ட டிசைன்ஸ் கிடைக்குதா” என்றாள் காயத்ரி கீர்த்தியிடம்.

     “அட! இது இப்போ வாங்கலை! பெரிய பாட்டி காலத்துல இருந்தே இருக்கு! இதெல்லாம் எங்க கொள்ளு பாட்டி வச்சிருந்தது போல. எங்க வீட்ல எல்லோர் கல்யாணத்துக்கும் இந்த நகையைப் போட்டு அலங்காரம் பண்ணித்தான் கல்யாணம் பண்ணுவாங்க! அதான் அம்மா இதையே போடச் சொல்லிக் கொடுத்துவிட்டாங்க!” என்று சொல்ல,

     “அப்போ இதெல்லாம் தங்கமா?!” என்று காயத்ரி வாய்பிளக்க, மையுவோ சங்கடமாய்ப் பார்த்தாள். உண்மையாகவே அவர்களுக்கு இதெல்லாம் தங்கம் என்று தெரிந்திருக்கவில்லை! இவ்வளவு பெரிய பெரிய நகைகள் அதிலும் முழுக்க முழுக்க கற்கள் வேறு வைத்திருந்ததால் தங்கமாக இருக்கும் என்று அவர்கள் யூகிக்கவில்லை!

     மையுவிற்கு அவர்கள் மருத்துவமனையையும், வீட்டையும் பார்க்கும் வரை அவர்கள் இவ்வளவு வசதி படைத்தவர்கள் என்று தெரியாது. ஏற்கனவே அவன்  ஓரளவு வசதி படைத்தவன் என்ற தயக்கமே அவளைப் பல நாள் அவன்புறம் செல்லாமல் இருக்கத் தடைபோட்டுக் கொண்டு இருந்தது. ஆனாலும் அவன்மேல் கொண்ட காதல் ஒருகட்டத்தில் அவளின் எல்லாத் தயக்கத்தையும் துடைத்தெறிந்து காதலைச் சொல்ல வைத்தது. இப்போது அவனின் வீட்டினரையும் அவர்களின் வசதியையும் பார்க்கப் பார்க்க, அவர்கள் தன்னையும் தன் வீட்டினரையும் எப்படி நடத்துவார்களோ, என்ற பயம் சூழ்ந்து கொண்டிருந்தது புதிதாய். அதிலும் தங்கமலர் அவளை வந்து பார்த்துவிட்டுச் சென்றாலும், அவளிடம் ஆசையாய் பரிவாய் ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் சென்றதில் அவள் வெகுவாய் கலங்கித்தான் போயிருந்தாள். இருந்தாலும் மனதிற்குள் காதலால் வந்த ஒரு உறுதி அவளை முன்னேற வைத்தது.

     ‘நானும் அவரும் வாழப்போற வாழ்க்கையைப் பார்த்து உங்க எல்லோரையும் சந்தோஷத்துல திளைக்க வைக்கிறேன் பாருங்க!’ என்று சொல்லிக் கொண்டாள் மணமேடைக்குக் கிளம்பும்போது. காயத்ரி அவளை வில் சேரில் அமர வைத்துத் தள்ளிக் கொண்டு வெளியே செல்ல, வந்திருந்த அனைவரது பார்வையும் அவள் புறம் திரும்பியது. மலர், மித்ரன் உட்பட.

     மித்ரன் அழகு ஓவியமாய் வந்த தனது மான்விழியைக் கண்டு மயங்கிப் போனான் என்றால், மலருமே அவளை இந்தக் கோலத்தில் பார்த்ததும் உருகித்தான் போனார்.

     ஒருசிலர் மித்ரனின் இந்த முடிவைப் பெருமையாய் நினைக்க, பலர், என்ன வாழ்க்கை இது? இந்தப் பையனுக்கு பையித்தியம் புடிச்சுப் போச்சா?! என்று தங்களுக்குள் நினைத்தும் அருகில் இருப்பவர்களிடம் குறையாய் சொல்லிக் கொண்டும் இருந்தனர். கூட்டத்தில் எழுந்த சலலப்பு மற்றவர்கள் மனதை வேண்டுமானால் திசை திருப்பி இருக்கலாம்! ஆனால் மித்ரனின் விழிகளும் அவனின் மான்விழியின் விழிகளும் அன்போடும், காதலோடும் தழுவியபடி மகிழ்ச்சியில் திளைத்திருந்தன…

        “கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்று அய்யர் முழங்க, மாங்கல்யத்தைக் கையில் எடுத்தவனை விழிகள் எடுக்க இயலாமல் பார்த்திருந்தாள் மையு.

     “ம்?! என்று அவன் கண்களாலேயே வினவ,

     ம்ஹும்!என்று கலங்கிய கண்களோடு அவள் தலையசைக்க, முதலில் அவளின் கண்ணீரை விழி தாண்டாமல் தடுத்து நிறுத்தியவன்,

      ம்ஹும்!என்று அவள் கண்ணீருக்குத் தடையிட்டு விட்டு, பொன்மஞ்சள் தாலியை அவளது கழுத்தில் சூட்டி முதல் முடிச்சைப் போட, சாருவும், ப்ரியாவும், மற்ற முடிச்சுகளைப் போட்டு அவளைத் தங்கள் வீட்டு மருமகளாய் ஏற்றுக் கொண்டதை உணர்த்தினர்.

     மாங்கல்ய தாரணம் நிகழ்ந்ததும், அய்யர் மாலைகளை மாற்றிக் கொள்ளச் சொல்ல, மற்ற சம்பிரதாயங்களும் இனிதே நடைபெறத் துவங்கின. மையுவின் தாயும் தந்தையும் மனதில் இருந்த பெரும் கவலை நீங்க ஆனந்தக் கண்ணீருடன் அவர்களை வாழ்த்தியபடி நெகிழ்வுடன் நின்றிருக்க, மலரும், ராஜசேகரும் கூட ஒருவாரு மனதைத் தேற்றிக் கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு எல்லாம் நல்லபடியாய் நடக்க வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டிக் கொண்டு வாழ்த்தினர்.

     தாலி கட்டி முடிந்தவுடனேயே வந்திருந்த விருந்தினர்களில் பலர் சாப்பிடச் சென்று விட்டிருந்தனர். ராஜசேகர் மலரைத் தனியாக விடவே இல்லை! எங்கே யாராவது வந்து மனைவியிடம் பேச்சுக் கொடுத்து அவர் மனதை நோகடித்து விடுவாரோ என்று! ஆனால் சாந்தியும், முருகேசனும் அவர்கள் அருகே வந்து நின்று இருவரையும் பார்த்துக் கைகூப்பி நிற்க, இருவருமே பதறிப் போய் எழுந்து,

     “எ என்னங்க சம்மந்தி இதெல்லாம்!” என்றனர் ஒற்றுமையாய்.

     அவர்கள் மகளை மட்டுமல்ல, தங்களையும் சம்மந்தியாக ஏற்றுக் கொண்டது அவர்களின் வார்த்தையிலும் செயலிலுமே உணர்த்திவிட, முருகேசன் கேவி விட்டார்.

     தந்தையாய் அவரது மனம் உணர்ந்த ராஜசேகர், அவரை ஆரத் தழுவிக் கொண்டு தட்டிக் கொடுக்க,

     “என்ன கைம்மாறு செய்து எங்க நன்றியைத் தீர்க்கப் போறோம் சம்மந்தி” என்றார் விசும்பலுடன்.

     அதான் ஏற்கனவே கொடுத்துட்டீங்களே மகாலட்சுமி மாதிரி ஒரு மருமகளைஎன்று ராஜசேகர் மனதாரக் கூற,

     கடவுள் மனிதர்கள் ரூபத்துல வாழ்வார்ன்னு  கேள்விப் பட்டு இருக்கேன் சம்மந்தி. இன்னிக்கு உங்க ரூபத்துல பார்த்துட்டேன்!என்றார் முருகேசன் நெகிழ்வோடு.

     சிறிது நேரத்திற்குப் பின் அவர்கள் அவ்விடம் விட்டு நகர்ந்ததும்,

     எ என்னங்க?!” என்று மலர் தயக்கமும் கவலையும் சேர கணவரை அழைக்க,

     “அ அவங்க நம்மளைக் கடவுள் ஸ்தானத்துலவச்சுப் பேசிட்டுப் போறாங்க! அ ஆனா, ந நான் நம்ம மித்துகிட்ட சொன்ன முடிவு இவங்களுக்குத் தெரிஞ்சா என்ன நினைப்பாங்க?! என்றார் தடுமாற்றமாய்.

     அதைக் கேட்டு மெல்லச் சிரித்தவர், “அது நடக்கும்போது பார்த்துக்கலாம்மா!என்றார் அமைதியாய்.

      எல்லாச் சம்பிரதாயங்களும் முடிவடைந்து, மருமகளை வீட்டிற்குள் அழைத்துச் செல்லும் நேரம் வர, மித்ரன் மையுவை வீல் சேரில் வைத்துத் தள்ளிக் கொண்டு அவர்கள் வீட்டுத் தலைவாசற் படியில் சென்று நின்றான்.

     உள்ளே இருந்து கிருஷ்ணனின் மனைவி ஆரத்தித் தட்டைக் கொண்டு வர, அதைப் பார்த்த மித்ரனின் முகம் மாறியது.

     அவனது முக மாற்றத்திலேயே புரிந்து கொண்ட ராதா, “அ அம்மா பூஜை அறையில் ரெடி பண்ணிட்டு இருக்காங்க தம்பி என்று பதில் உரைக்க,

     “ம்மா! ம்மா!என்று கத்தினான் மித்ரன்.

     அவன் குரல் கேட்டு வெளியே வர துடித்தாலும் வீம்புக்கு கடவுளை வணங்கியபடி நின்றிருந்தார் மலர்.

     “ம்மா! இப்போ நீங்க வரப் போறீங்களா இல்லையா?!” என்றவன்,

     “நீங்க வந்து ஆரத்தி எடுக்காம, நாங்க உள்ள வரமாட்டோம்என்றான் உறுதியான குரலில்.

     என்ன என்ன வீம்பு இந்தப் பையனுக்கு யாரோ ஒருத்தர் எடுத்தா உள்ள வரவேண்டியதுதானே!என்று திட்டிக் கொண்ட மலர், வந்திருந்த உறவினர்களின் வாய்க்குத் தீனி போட விரும்பாமல் வேக வேகமாய் வந்து ஆரத்தியை எடுத்தார் மகனுக்கும் மருமகளுக்கும்.

     அவனின் பிடிவாதத்தையும், மாமியாரின் முறைப்பையும் கண்டு மையுவிற்கு இப்போது பயம் அல்ல சிரிப்பே எழ, வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள பெரும் பாடு பட்டாள்.

     இதில் வீல் சேர் வாசற்படியில் தடுக்கும் என்பதால், மித்ரன் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மையுவைத் தூக்கிக் கொண்டதோடு அல்லாமல்,

     மானும்மா! இந்த நொடியில இருந்து, இனி நம்ம காலம் முழுக்க, ரொம்ப ரொம்ப சந்தோஷமா வாழப் போற வீடு இதுன்னு நினைச்சுக்கிட்டு என்னோட உள்ள வாஎன்றவன், தான் சொன்னதைக் கேட்டு முறைத்தபடி நின்றிருந்த தனது அம்மாவைப் பார்த்து,

     “நான் சொல்றது சரிதானேம்மா? நாங்க சந்தோஷமா வாழ்வோம்தானே?!” என்று கேட்டபடியே மருமகளைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்த மகனை ஆசையும், பாசமும், பொய் கோபமும் கலந்த கலவையாய் பார்த்தபடி தலையசைத்தார் தங்கமலர்.

     ‘அதானே பார்த்தேன்! என் மகனாவது நம்ம வீட்டைப் போறதாவது! இது தெரிஞ்சுதான் நான் அவ சொன்னதை ஒரு பொருட்டாவே எடுத்துக்கலை! என்று எண்ணிக் கொண்ட ராஜசேகர், மனைவியைப் பார்த்து மெலிதாய்ப் புன்னகைக்க,

     ‘அப்பாவுக்குப் பிள்ளைத் தப்பாம பிறந்திருக்கான்!’ என்று முனகினார் மெல்ல.

                        -மான்விழி மனம் கொய்வாள்…

        

     

 

     

 

 

         

    

     

    

     

 

     

Advertisement