Advertisement

  27

     “நலம் நலம்தானே

     நீ இருந்தால்,

     சுகம் சுகம்தானே

     நினைவிருந்தால்,

     நலம் நலம்தானே

     நீ இருந்தால்,

     சுகம் சுகம்தானே

     நினைவிருந்தால்,

     இடை மெலிந்தது

     இயற்கை அல்லவா,

     நடை தளர்ந்தது

     நாணம் அல்லவா,

     வண்ணப் பூங்கொடி

     பெண்மை அல்லவா,

     வாட வைத்ததும்

     உண்மை அல்லவா!

     அன்புள்ள மன்னவனே

     ஆசையில் ஓர் கடிதம்

     அதைக் கைகளில்

     எழுதவில்லை,

     இரு கண்களில் எழுதி வந்தேன்…

     அவனது உறுதி தெரிந்த மலர் தன் கணவர் ராஜசேகரிடம் திருமணத்திற்கு சம்மதம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தாரே தவிர, திருமணத்திற்குப் பின் அவர்களைத் தனியே இருக்கும்படி சொன்னதை அவரும் சொல்லவில்லை அவனும் சொல்லவில்லை!

     ஆனால், மையு வீட்டினரை அங்கு அழைத்துச் செல்லப் போவதை ஏற்கனவே மித்ரன் தந்தையிடம் சொல்லி இருந்ததனால், ராஜசேகர் மனைவிக்குப் போன் போட்டு விருந்தினர் மாளிகையை சுத்தம் செய்து வைக்கச் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார்.

     மலருக்கு மையுவைப் பிடிக்காமல் இல்லை! ஆனால் மகனின் வாழ்வைப் பணயம் வைப்பதைத்தான் அவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை! ஆனாலும் அவனது பிடிவாதத்தையும் குணத்தையும் அறிந்தவராய் மையுவிற்கும் அவள் வீட்டினருக்கும் எந்தவிதக் குறையும் வரக் கூடாது என்று நினைத்து எல்லா ஏற்பாடுகளையும் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தார் மலரும்.

     அவன் அவர்கள் வீட்டின் முன் வண்டியை நிறுத்தியதும், மையு அந்த வீட்டின் அழகை அசந்து போய் பார்த்திருந்தாள் என்றால், அவர்கள் வீட்டினரோ தங்கள் வீட்டுப் பெண் இத்தனை பிரம்மாண்டமான வீட்டிலா இல்லை இல்லை மாளிகையிலா வந்து வாழப் போகிறாள் என்று வாய்பிளந்து நின்றனர்.

     “என்ன அத்தை அப்படிப் பார்க்குறீங்க?! நகருங்க மையு வெளிய வரணும்ல?!” என மித்ரன் குரல் கொடுக்க,

     “இ இல்லை தம்பி. நாங்க எங்க வீட்டுக்கே போயிடறோம்” என்றார் சாந்தி கலவரத்துடன்.

     அவரது கலக்கத்தைக் கண்டு சிரித்தவன், “வீட்டைப் பார்த்தே பயந்துட்டீங்களா? இன்னும் எவ்ளோ பார்க்க வேண்டி இருக்கு?!” என்றான் அவரை மேலும் கலவரப்படுத்தும் விதமாய்.

     “எ என்ன தம்பி சொல்றீங்க?!” என்று சாந்தி பயந்த குரலில் கேட்க, மையு அவனை முறைத்தாள்.

     அவரது கேள்வியால் மேலும் சிரித்தவன், வீடு மட்டும்தான் வித்தியாசம். மத்தபடி உங்களை மாதிரி தான் எங்க வீட்டு மனுஷங்ககளும். பயப்படாம உள்ள போங்க” என்றவன், காரின் டிக்கியில் இருந்த போல்டிங் வில் சேரை எடுத்து வந்து நிறுத்திப் பின் மையுவிற்காய் கை கொடுக்க, அவள் தயக்கத்துடன் தந்தையைப் பார்த்தாள்.

     அவர், “ம்!” என்று தலையசைத்து அனுமதி கொடுத்ததும், அவள் அவனைப் பார்க்க,

     ‘பயபுள்ள அன்னிக்கு வீட்டுல கீழ விழுந்தப்போ உடனே தூக்கி விடலன்னதுக்கு ஏன்னா பேச்சு பேசுச்சு! இப்போ என்னமா சீனப் போடுது பாரு?!’ என்று யோசித்தபடி அவளை முறைத்தவன்,

     “நீங்களே தூக்கிவிடுங்க மாமா. உங்க பொண்ணுக்கு என்மேல நம்பிக்கை இல்லை போல!” என்றான் வேண்டுமென்றே சீண்டுதலாய்.

     ‘அடப் பாவி மனுஷா ஒரு மரியாதைக்கு அப்பா, அம்மா இருக்காங்களேன்னு பவ்யமா நடந்தா, இப்படி கழட்டி விடுறியே?!’ என்று மைன்ட் வாய்சில் அவனைத் திட்டியவளைப் பார்த்தும் பார்க்காதது போல் அவன் நகர்ந்து கொள்ள,

     “அட என்ன மாமா நீங்க?! எங்க அக்கா எங்களை விட உங்களை அதிகமா நம்பினதுனாலதான் இந்த நிலையிலும் அவ உங்களை நேசிச்சிருக்கா! இதுல இங்க இருந்து தூக்கி உட்கார வைக்க அவ உங்களை நம்ப மாட்டாளா?!” என்று இதுவரை வாய் திறவாதிருந்த காயத்ரி துடுக்காய்ச் சொல்ல,

     ‘அப்படி சொல்றீ என் செல்லக்குட்டி!’ என்று தங்கையைப் பார்த்து மையு கண்ணடித்துச் சிரிக்க, மித்ரன்,

     “அக்காவுக்கு தங்கை தப்பாம பிறந்திருக்கா!” என்ற முனகியபடியே மீண்டும் மையுவின் அருகில் செல்ல, அவள் வேண்டுமென்றே முகத்தைத் திருப்பிக் கொண்டு,

     “அப்பா நீயே வந்து என்னைத் தூக்கி விடுப்பா! அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் அவர் செய்யட்டும்” என்றாள் அவனை வெறுப்பேற்றும் விதமாய்.

     “அட என்னடி இது அக்கப்போரு உன்னோட? யாரோ ஒருத்தரைப் பிடிச்சிட்டு இறங்கித் தொலை” என்று சாந்தி கடுப்பாக,

     ‘இதுக்கு மேல சீன் போட்ட தாங்காது!’ என்று மையு நினைப்பதற்குள் அவன் சட்டென அவள் பின்னே கைகளைக் கொடுத்து அவளைச் சிறுபிள்ளையைப் போல் தூக்கிக் கொண்டே நடந்து உள்ளே சென்று விட்டான் வழியே இருந்த வீல் சேரை நகர்த்தி விட்டு,

    அவனின் இச்செயலில் மையு வெட்கத்திலும் பயத்திலும் கண்களை மூடிக் கொள்ள, அவளைப் பெற்றவர்கள் ஆச்சர்யத்திலும், நெகிழ்விலும் உள்ளம் மகிழ, காயத்ரி, ‘அப்படிப் போடுங்க மாமா!’ என்று மனதிற்குள் விசிலடிக்க, அவன் வீட்டுப் பெண்கள் நம்ம மித்துவா இப்படி ஒரு காதல் மன்னனா மாறிட்டான் என்று வாய்பிளந்து அவர்கள் உள்ளே வருவதைப் பார்த்திருக்க, தங்கமலர் மட்டும் மகன், மருமகளைப் பற்றிய கவலையோடும், வருத்தத்தோடும் கண்கள் கலங்க அவர்களை வெறித்திருந்தார் சிலையாய்.

                       *****

     “என்ன என்ன நடக்குது இந்த வீட்ல?! இந்த வீட்ல இருக்க எல்லோருக்குமே பையித்தியம் புடிச்சிடுச்சா?! இப்படி ஒரு பொண்ணை மித்ரனுக்கு கட்டி வைக்கப் போறாங்க?! அதுவும் இந்த வெள்ளிகிழமையே?!” என்று எகிறக் கொண்டிருந்தான் சரத் தன் மனைவியிடம்,

     “எங்களுக்கும் இந்தக் கல்யாணத்துல உடன்பாடு இல்லைதான். ஆனா என்ன பண்றது? மித்துவோட குணம் பத்தி உங்களுக்குத் தெரியாதாதா?!” என்ற சாரு,

     “ஆனா ஒன்னு மட்டும் எனக்கு நம்பிக்கை இருக்கு! என் தம்பி எந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாலும் அதை அவன் சந்தோஷமா தான் வாழ்வான். அவன் சந்தோஷம்தானே எங்களுக்கும் முக்கியம். அதனால என்கிட்ட பேசின மாதிரி வீட்ல இருக்க மத்தவங்ககிட்ட போய் பேசி வைக்காதீங்க?! அப்புறம் உங்களுக்குத்தான் பிரச்சனை” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டாள் சாரு.

     அங்கு கிருஷ்ணனோ, ராதாவிடம் புலம்பிக் கொண்டிருந்தான் சரத்தைப் போலவே.

     “இந்தப் பையனை என்னதான் சொல்றதுன்னு புரியலை ராதா?! இதுவரைக்கும் அம்மா பேச்சுக்கு மறுபேச்சு பேசாத பையன் இன்னிக்கு அவங்ககிட்டயே அவ்ளோ உறுதியா நிக்குறான். அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க நீங்க சம்மதிக்கலைன்னா நான் பண்ணிக்கலை. ஆனா அவளுக்கு காதலனா தூரமா இருந்தே  கடைசி வரை அவளைப் பார்த்துப்பேன்னு மறைமுகமா அவங்களை மிரட்டுறான். என்ன பண்றதுன்னே புரியலைம்மா எனக்கு! இவன்தான் சொல்றான்னா அந்தப் பொண்ணும் அவங்க வீட்டு ஆளுங்களுமாவது யோசிக்கணும்ல!” என்று வேதனையும் ஆதங்கமும் சேர பேசிக் கொண்டிருந்த கணவனின் கைகளை ஆறுதலாய்ப் பற்றிய ராதா,

     “மித்ரனைப் பத்தி நல்லா தெரிஞ்சா நீங்களே இப்படி பேசலாமா?! அவன் ஒரு முடிவு எடுத்தா அதை யாரால மாத்த முடியும்?! வீணா நீங்களும் டென்ஷனாகி அத்தையையும் டென்ஷன் ஆக்காதீங்க” என,

     “என்னால இதை ஏத்துக்கவே முடியலை ராதா” என்று அவன் மீண்டும் வருந்த,

     “எனக்கும்தான்ங்க கஷ்டமா இருக்கு! ஆனா என்ன செய்யிறது இது அவனோட வாழ்க்கை நாம அதை தீர்மானிக்க முடியுமா? எல்லாம் நல்ல படியா நடக்கும்னு நம்புங்க பார்ப்போம்” என்றாள் ஆறுதலாய்.

     அங்கு ப்ரியாவும், கவலையும், சந்தோஷமும் பயமும் கலந்த ஒரு பதட்டமான நிலையில் தான் அமர்ந்திருந்தாள் தம்பியையும் மையுவையும் நினைத்தபடி.

     ஒருபுறம் மையுவைத் தம்பி விரும்புவது பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தாலும், ஒருபுறம் தம்பியின் வாழ்வின் பல சந்தோஷங்கள் தடைபடும் என்பதை நினைக்கும் போது பெரும் வேதனையும் எழுந்தது. அதிலும்,

     ‘மையு, மையு எவ்வளவு காலம் இருப்பாள், அப்படியே இருந்தாலும், எவ்வளவு காலம் இதே நிலையில் இருப்பாள் இந்த நிலை மேலும் மோசமாகவும் ஆகலாம்!” என்று நினைக்கும் போதே ப்ரியாவிற்குத் தொண்டை அடைத்துக் கொண்டுக் கண்ணீர் வந்தது.

     அதனாலேயே விஷயம் தெரிந்த பின்னும் கூட மையுவிடம் அழைத்துப் பேசத் துடித்தத் தன் மனத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள் எங்கே அவளிடம் பேசப் போய்த் தன் கண்ணீர் மூலம் தன் மனம் வெளிப்பட்டுவிடுமோ என்று.

                     *****

     இரவு ஒரு மணி இருக்கும். நல்ல உறக்கத்தில் இருந்த ராஜசேகருக்கு, திடீரென விழிப்பு தட்ட, அருகே படுத்திருந்த மனைவி இல்லாதது கண்டு, எங்கே சென்றாள் என்று சுற்றும் முற்றும் பார்க்க, தங்கமலர், தங்கள் அறையின் ஜன்னல் வழியே தெரிந்த அவர்கள் வீட்டு விருந்தினர் மாளிகையை வெறுமையாய் பார்த்தபடி நின்றிருப்பது தெரிந்தது.

     ‘எப்படியெல்லாம் என் மருமகளை வரவேற்கணும்னு ஆசைபட்டிருப்பேன்?! இன்னிக்கு என் மகன், அவன் கையாலயே அந்தப் பொண்ணைத் தூக்கிட்டு வரும்போது, மனசு துடிச்சாலும், என் கால் நின்ன இடத்தை விட்டு அசையவே இல்லையே! ஏன் ஏன் கடவுளே என் மனசு இப்படி மாறிப் போச்சு?!’ என்று தன்னையே நிந்தித்துக் கொண்டு இருந்தார் தங்கமலர்.

     மனைவியைக் கண்டு மெல்லப் போர்வையை விலக்கி விட்டு எழுந்து வந்தவர், மலரின் தோள் மீது கைவைத்து ஆறுதலாய் தட்டிக் கொடுத்து,

     “நல்லதே நடக்கும்னு நம்பும்மா” என்றார் நம்பிக்கையான குரலில்.

     “எப்படிங்க?!” என்றபடி திரும்பிய மனைவியின் கண்கள் கலங்கி இருப்பதைக் கண்டு,

     “நீயே இப்படி இருந்தா வீட்ல இருக்க மத்தவங்க அந்தப் பொண்ணை எப்படி நடந்துவாங்க சொல்லு?” என்று அவர் கேள்வி எழுப்ப,

     “எனக்கு, எனக்கு அந்தப் பொண்ணைப் பிடிக்காம இல்லைங்க! ஆனா நம்ம கிருஷ்ணன் சொல்றதைப் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு! போகப் போக அந்தப் பெண்ணோட நிலைமை இன்னமும் மோசமாகிட்டா, அப்போ, அப்போ நம்ம மித்துவோட வாழ்க்கை?!” என்று கலவரமான விழிகளுடன் கணவரைப் பார்க்க,

     “அப்படி எல்லாம் எதுவும் ஆகாதுன்னு நம்பும்மா!” என்று ராஜசேகர் அவரைச் சமாதானப் படுத்த முனைய,

     “இ இல்லைங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு!” என்றார் மீண்டும்.

      “இங்க பாரு, இங்க பாரு மலர்!” என்று ஜன்னல் புறமே பார்வையைச் செலுத்தி இருந்த மனைவியின் முகத்தைத் தன் புறம் திருப்பியவர்,

     “ஒருவேளை அந்தப் பொண்ணு மாதிரி நம்ம பொண்ண இருந்திருந்தா, அப்பவும் நீ இப்படித்தான் நினைப்பியா?!” என்றார் மனைவியைக் கையாளும் வித்தைத் தெரிந்தவராய்.

     அவரையே சிறிது நேரம் பார்த்தவர், “அப்பாவும் மகனும் ஒரே மாதிரிக் கேள்வியைக் கேட்டு என்னை உங்க வழிக்குக் கொண்டு வரப் பார்க்குறீங்க! ஆனா நான் சொல்றதை மட்டும் கேட்க மாட்டேங்குறீங்க” என்று மலர் கோபித்துக் கொள்ள,

     ‘ஓ! அவனும் இப்படிக் கேட்டுத்தான் அம்மாவை வழிக்குக் கொண்டு வந்தானோ?!’ என்று சிரித்துக் கொண்டவர்,

     “அப்பாவை மாதிரிதானே பிள்ளையும் இருப்பான்” என்று மெச்சிக் கொண்டு,

     “இங்க பாரு மலர், நம்ம வாழ்க்கையில எல்லா விஷயமும் நாம நினைக்குற மாதிரியே நடக்குதா என்ன? ஆனா நடக்குற விஷயத்தை நல்லபடியா மாத்திக்குற திறமையும் மனப் பக்குவமும் நமக்கு இருந்தா போதும்தானே! மத்தபடி வாழ்க்கையை அதன் போக்குல ஏத்துக்கிட்டு போயிக்கிட்டே இருக்கணும். எல்லாம் நல்ல படியா நடக்கும்னுகிற நம்பிக்கையில” என்று கணவர் தைரியம் சொல்ல, அப்போதும் மலருக்குள் ஏதோ தயக்கம்.

     “அ ஆனா நான் மித்துகிட்ட அவனோட கல்யாணத்துக்கு அப்புறம் என் கண்முன்னாடி இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டேன். எ ஏன்னா என் பிள்ளை என் பிள்ளை சந்தோஷமா வாழுறதைத் தான் நான் பார்க்கணும்னு ஆசைப் பட்டேன்” என்று மலர் விஷயத்தைப் போட்டு உடைக்க, சற்றே அதிர்ந்தவர், நொடியில் தன்னைச் சமாளித்துக் கொண்டு,

     “சரி அது கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ எதையும் யோசிக்காம வந்துப் படுத்துத் தூங்கு”  என்று மனைவியின் முடிவை ஏற்கவும் இல்லாமல் மறுக்கவும் இல்லாமல் அமைதியாய் அவரை அழைத்துச் சென்று படுக்க வைத்தார். என்னதான் மனைவியைச் சமாதானப் படுத்தி விட்டாலும், மகனின் ஆசைக்குத் தடை விதிக்காவிட்டாலும், ராஜசேகருக்குள்ளும் தன் மகனின் வாழ்வைப் பற்றிய பயம் ஆட்கொண்டுதான் இருந்தது. எல்லாவற்றையும் காலத்தின் கையில் ஒப்படைத்துவிட்டு உறக்கத்தைத் தழுவினார் பிள்ளையைப் பற்றிய நினைவுகளோடே…

     வீட்டில் இருக்கும் எல்லோருமே இந்தத் திருமணத்தில் கவலைக் கொண்டிருந்தாலும், மித்ரனின் செல்லத் தங்கை கீர்த்தி மட்டும் அண்ணனின் காதலைப் பெருமையுடன் ஏற்றுக் கொண்டிருந்தாள் மனதார.

                          *****

 

Advertisement