Advertisement

                                                                                     25

     அப்பெண் அவளை மரியாதையுடன் அழைத்துச் சென்று, அவன் சொன்னது போல் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்க, அவளுக்கு உடை மாற்றி முடிக்கும் வரை அறையின் வெளியே காத்திருந்தவன், தன் அம்மாவிற்குப் போன் செய்தான்.

     அவன் அழைப்பை ஏற்றதுமே, “என்னப்பா! போன வேலை நல்லபடியா முடிஞ்சதா?!” என்று தங்கமலர் கேட்க,

     ‘எதைப்பத்தி கேட்குறாங்க அம்மா?!’ என்று யோசித்தவன்,

     அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், “ம்மா! நீங்க உடனே கிளம்பி நம்ம ஹாஸ்ப்பிட்டலுக்கு வாங்க” என்றான்.

     “ஐயோ! என்ன? என்ன ஆச்சுப்பா?!” என்று மலர் பதற,

     “ம்மா! ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல! பதட்டப் படாதீங்க!” என்று அவரைச் சமாதானப் படுத்தியவன், சற்று இடைவெளி விட்டு,

      “இத்தனை நாளா நீங்க கேட்ட கேள்விக்கான பதிலை உங்களுக்குக் காண்பிக்கணும்னு நினைக்கிறேன் ம்மா!” என, மலருக்கு ஏதோ புரிவது போலும் இருந்தது புரியாதது போலும் இருந்தது.

     “என்னம்மா அமைதியா இருக்கீங்க?!” என்று அவன் கேட்க,

     “இதோ கிளம்பறேன் ப்பா!” என்றவர், போனை வைத்துவிட்டு அவர்கள் வீட்டு டிரைவரை அழைத்து வண்டியை எடுக்கச் சொன்னார்.

     “ராதா, சாரு.. நான் நம்ம ஹாஸ்ப்பிட்டல் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்.” என்று விட்டு அவர் கிளம்ப, என்னவாக இருக்கும் என்று புரியாமல் இருவரும் மலரைப் பார்க்க,

     “வந்து சொல்றேன்!” என்றவர், காரில் ஏறினார்.

     அவன் பேசிவிட்டு கைபேசியை வைக்க, அதற்குள், வேறொரு பணியாளார் அவன் கேட்டது போல் பாலும், ரொட்டியும் வாங்கி வந்திருக்க, அவன் கதவைத் தட்டி,

     “டிரேசிங் முடிந்ததா?” என்றான்.

     “ஹான் இதோ வந்துட்டேன் சார்” என்ற அப்பெண்மணி அவன் கையில் பால் ரொட்டியுடன் நின்றிருப்பதைக் கண்டு,

     “நான் அவங்களுக்கு கொடுக்கவா சார்” என,

     “இல்லை நீங்க போங்க. நான் பார்த்துக்கறேன்” என்றான்.

     ஊசி போட்டதில் காய்ச்சல் தற்போது விட்டிருக்க, சோர்வு மட்டுமே இருந்தது அவளுக்கு.

     அவன் கையில் இருந்த ரொட்டியைப் பார்த்து முகம் சுழித்தவள்,

     “எனக்கு வேண்டாம்!” என,

     “நான் உன்கிட்ட பெர்மிஷன் கேட்கலையே!” என்றவன், பிளாஸ்கின் மூடியில் பாலை ஊற்றி, அதில் ரொட்டியை லேசாய் நனைத்து அவள் வாயருகே கொண்டு செல்ல,

     “எனக்கு ப்ரெட் புடிக்காது!” என்றாள்.

     அவன் அப்போதும் ரொட்டியை நீட்டியபடியே இருக்க,

     “எனக்கு காரமா ஏதாச்சும் சாப்பிடனும் போல இருக்கு!” என்றாள் மீண்டும்.

     “இப்போதான ஜூரம் விட்டிருக்கு! இன்னிக்கு ஒருநாள் லைட்டா சாப்பிடு! நாளைக்கு அம்மா செய்து கொண்டு வருவாங்க” என, அவள் பயத்தில் விழி விரித்தாள்.

     “கோ கோல்ட் பிளவர் ஆன்ட்டிக்கு தெரியுமா?!” என்று அவள் ஆச்சர்யம் கொள்ள,

     “என்ன தெரியுமா?!” என்றான். 

     “அ அதான் நான் உங்க உட்பின்னு!” என்று அவள் சட்டெனக் கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக் கொள்ள,

     “அது சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றதை எல்லாம் நம்பிடுவியா நீ?!” என்று அவன் குண்டைத் தூக்கிப் போட,

     “ஹான்?!” என்று விழித்தவளின் கண்களில் அப்படியே அழுந்த முத்தமிட வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு! ‘தனக்கானவள் என்று தீர்மானித்து விட்டதாலோ?!’ என்று எண்ணிச் சிரித்துக் கொண்டவன், மீண்டும் ரொட்டியை நீட்ட,

     “எனக்கு ஒண்ணும் வேணாம்! போங்க!” என்றாள் சிறுபிள்ளை போல் கோபித்துக் கொண்டு.

     அதற்கு மேல் அவளிடம் அனுமதி எதிர்பார்ப்பது வேலைக்கு ஆகாது என்று, அவன் குழந்தைகளுக்கு ஊட்டுவது போல் வற்புறுத்தி ஊட்ட, வேறு வழியின்றி வாங்கிக் கொண்டாள் முகத்தை உம்மென்று வைத்தபடியே.

     இரண்டு ரொட்டி சாப்பிட்டதும், “போதும்! என்று அவள் மறுக்க,

     “இன்னும் ஒன்னு சாப்பிடு” என்று கட்டாயமாய் ஊட்டி முடித்தவன்,

     “கொஞ்ச நேரம் படுத்துரெஸ்ட் எடு. சிடி ஸ்கேன் எடுக்கப் போகணும்” என, அப்போதுதான் ஏதோ ஞாபகம் வந்தவளாய்,

     “அம்மாக்கு ஒரு போன் பண்ணிக்கட்டுமா?! உங்க போன் குடுங்களேன்!” என்றாள்.

     அவளை முறைத்தவன், “அவங்க நேர்ல வரட்டும். அப்போ பேசிக்கோ” என்றுவிட்டு அந்த அறையின் ஒரு மூலையில் இருந்த வாஷ்பேசினில் கைகளைக் கழுவச் சென்றான்.

     “இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலை! இத்தனை நாள் இவரா பார்த்துகிட்டார்! எங்க அம்மாதானா பார்த்துகிச்சு?! ரொம்பத்தான் அக்கறை திடீர்னு!” என்று அவள் முணுமுணுக்க,

     “என்ன முணுமுணுப்பு அங்க? பேசாம கண்ணை மூடிப் படு!” என்று அவன் அதட்ட,

      “ம்க்கும்! இதுல அதிகாரம் வேற!” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள் இறுக.

     நடப்பதெல்லாம் கனவா நனவா என்று இப்போதும் கூட அவளால் நம்பமுடியவில்லை! ஆனால் நிஜமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் ஏங்கியது! ஒவ்வொரு நொடியும் அவனது அருகாமை அவளைச் சிலிர்க்கவும் சந்தோஷிக்கவும் வைத்தது.

     எந்த அளவு அவன்மேல் நம்பிக்கையும் தைரியமும் இருந்தால், இந்த நிலையில் தாய், தந்தை துணை இல்லாமல் அவனோடு வந்திருப்பாள்.

     ‘ஆனா அம்மாவும் அப்பாவும் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?!’ என்று எண்ணம் போக,

     ‘ஐயோ அம்மாவுக்கு நான் இப்படி எல்லாம் அவரை நினைக்கிறேன்னு தெரிஞ்சா என்னை எப்படியெல்லாம் திட்டுமோ!’ என்று பயமும் தொற்றிக் கொண்டது. எதை எதையோ நினைத்து உள்ளம் கலங்கிய போதும், தற்சமயம் அவன் அருகே இருப்பதே அவளுக்கு பெரும் நிம்மதியைத் தர, ஊசி மருந்துகளின் தாக்கத்தாலும், சோர்வாலும் உறங்கிப் போனாள் எல்லாம் மறந்து.

     அவள் உறங்கிவிட்டிருப்பதை உணர்ந்து அவன் மெல்ல எழ, அவர்கள் இருந்த அறைக்கதவைப் பட்டெனத் திறந்து கொண்டு வந்தான் அவன் அண்ணன் கிருஷ்ணன். அந்த சத்தத்தில் அவளிடம் லேசாய் அசைவு தென்பட, அண்ணனைப் பார்த்து கண்ணசைவில்  அமைதியாய் இருக்கும்படி சொன்னவன், வெளியே போய் பேசலாம் என்று என்றான் மெல்லிய குரலில். கிருஷ்ணன் அவனை முறைத்தபடியே வெளியே வர,

     “என்ன என்னடா பண்ணி வச்சிருக்க நீ?! ஹாஸ்ப்பிட்டல்ல எல்லோரும் என்னென்னமோ பேசிக்கிறாங்க! யார் அந்தப் பொண்ணு?! அவளுக்கு என்ன ஆச்சு?! எதுக்காக அவளை நம்ம ஹாஸ்ப்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்த?! அதுவும் நீயே தூக்கிட்டு வேற வந்திருக்க?!” என்று எப்போதுமே அவனிடம்  கோபம் கொண்டிராத கிருஷ்ணன் பொரிந்து தள்ள,

     “அண்ணா! ப்ளீஸ் கூல்டவுன்!” என்று அவனை அமைதிப் படுத்தியவன்,

     “முதல்ல நீ நம்ம ரூமுக்கு வா! அங்க போய் பேசலாம். அம்மாவும் இந்நேரம் வந்திருப்பாங்க” என,

     ‘அ அம்மாவை வர சொல்லி இருக்கியா?! என்ன என்னடா நடக்குது இங்க?!” என்று கிருஷ்ணன் புரியாமல் திணற,

     சற்று நேரத்திற்கு முன் அவளை கவனித்துக் கொண்ட அந்தப் பெண்மணியை அழைத்து அவங்க தூங்கிட்டு இருக்காங்க. அவங்க கூட துணைக்கு இருந்து கவனிச்சுக்கோங்க! நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன்” என்றுவிட்டு தங்களின் அறை நோக்கி நடக்க, கிருஷ்ணன் வேறு வழியின்றி குழப்பத்துடன் அவனைப் பின் தொடர்ந்தான்.

     சரியாக அவர்கள் தங்கள் அறையை நெருங்கிய நேரம், தங்கமலரும் அங்கு வந்து சேர,

     “வாங்கம்மா உள்ளே போய் உட்காருங்க! அண்ணா நீ போய் அப்பாவை அழைச்சிட்டு வரியா?!” என்று அண்ணிடம் கேட்க,

     “அவர் பேஷண்ட்ஸ் பார்த்துட்டு இருக்கார். இப்போ கூப்பிட்டா திட்டுவார்!” என்றான் கிருஷ்ணன்.

     “டியூட்டி டாக்டரை அட்டென்ட் பண்ணச் சொல்லிட்டு  கூட்டிட்டு வா! ரொம்ப எமர்ஜென்சினா அப்பா போய் பார்க்கட்டும்” என்று தானே முடிவை எடுத்துச் சொல்ல,

     ‘இவன் சொல்லிடுவான்! யார் அவர்ட்ட திட்டு வாங்குறது!’ என்று எண்ணி அவனை முறைத்தபடியே சென்ற கிருஷ்ணன், சில நிமிடங்களில், தந்தையுடன் வந்தான்.

     அவர்கள் வரும்வரை தங்கமலரும் எதுவும் பேசாமல் அமைதியாய்த்தான் இருந்தார் அவனாக சொல்லட்டும் என்று.

ராஜாசேகர் வந்ததும்,  தங்கமலரும் அங்கு வந்திருப்பது கண்டு, விஷயம் முக்கியமானது என்று புரிந்து கொண்டார். “என்ன மித்ரா இத்தனை நாளா உனக்குள்ள இருந்த குழப்பம் தீர்ந்து தெளிவான முடிவு எடுத்துட்ட போல?!என்றார் மகனை நன்கு அறிந்தவராய். அவர் கேள்விக்கு மெல்ல தலையசைத்தவன், ம் ப்பாஎன்றுவிட்டு, அவர்களை நேருக்குநேர் பார்த்து,

     “அப்பா, அம்மா. நான் ஒரு பொண்ணை கல்யாணம் செய்துக்கணும்னு விரும்பறேன் உங்க அனுமதியோட” என்று பட்டென சொல்ல வந்ததைப் போட்டு உடைக்க, இத்தனை நாள் மகனின் நடவடிக்கையில் இருந்த மாற்றத்தின் காரணம் இதுதான் என்று விளங்கியது பெற்றவர்களுக்கு.

     சில நொடிகள் அங்கு யாரும் எந்த பதிலும் கொடுக்கவில்லை! மலர் கணவரின் முகம் பார்க்க, ராஜசேகர் மகனைப் பார்த்தார்.

     அவரது பார்வையிலேயே அவரது கேள்வி புரிய,

     “இதுக்கா நான் அவ்வளவு மனக்குழப்பத்துல போராடிட்டு இருந்தேன்னு நீங்க நினைக்கறீங்க?! குழப்பம் எனக்காக இல்லைப்பா, நீங்களும் அவளும் கஷ்டப்பட்டுடக் கூடாதேன்னுதான்!” என்று நிறுத்தியவனை அவர்கள் புரியாமல் பார்க்க,

     “அவ, அவ மஸ்குளார் டிஸ்டிராபி டிசீஸ்னால  பாதிக்கப்பட்டிருக்குற பேஷன்ட்!” என,

     “வாட்?!” என்று கிருஷ்ணன் அதிர, ராஜசேகர் அவனை தீர்க்கமாய் நோக்கினார்.

    ஆனால் மலருக்கு அந்த நோயைப் பற்றிய விவரம் ஏதும் தெரியாததால் அவர் ஏதும் புரியாமல் பார்த்திருந்தார் மகனை.

     “பிரியா ட்ரீட் பண்ண போனாளே அந்தப் பொண்ணா?!” என்று கிருஷ்ணன் சரியாய் கணித்துவிட,

     “ம்!” என்று தலையசைத்தான் அவன்.

     “ப்ச்! அவ வாழ்க்கையைக் கெடுத்துக்கிட்டதும் இல்லாம உன் வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்துட்டு போயிருக்கா!” என்று கிருஷ்ணன் எப்போதும் அல்லாமல் இப்போது இருவரையுமே கோபமாய் பேச,

     “அண்ணா!” என்று மித்திரனும் கோபமாய் ஏதோ சொல்ல வர, ராஜசேகர் இருவரையும் ஓர் பார்வை பார்க்க இருவருமே அடங்கிப் போயினர்.

     “சோ! அப்போ நீ உறுதியா இருக்க, அந்தப் பொண்ணுதான் உன் மனைவியா வரணும்னு?!” என்று ராஜசேகர் கேட்க,

     “ஆமாம்ப்பா” என்றான் தீர்க்கமாய்.

     “சரி! உன் முடிவுல நீ உறுதியா இருக்குற பட்சத்துல நான் உன் பக்கம்தான். ஆனா உன் அம்மாவுக்கு இதனால என்னென்ன பிரச்சனைகளை நீ உன் வாழ்க்கையில சந்திக்க வேண்டி வரும்ங்கிறதை எடுத்துச் சொல்லி புரிய வை. அவளும் உன்னைப் புரிஞ்சிக்கிட்டு சம்மதிச்சா இந்தக் கல்யாணம் கண்டிப்பா நடக்கும்!” என்றார் மனைவி மகனிடமே பொறுப்பை ஒப்படைத்து.

     “அப்பா?!” என்று கிருஷ்ணன் கலக்கத்துடன் தந்தையைப் பார்க்க,

     “இது அவன் வாழ்க்கை கிருஷ்ணா. அவன் முடிவுதான் அவனுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்” என்றுவிட்டு எழுந்து கொண்டார். ஆனால் கிருஷ்ணனுக்குத்தான் அவனின் இந்த முடிவை சுத்தமாய் ஏற்றுக் கொள்ள முடியவில்லை! தந்தை வெளியேறியதும்,

     “டேய்! இது வாழ்க்கைடா! எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவு எடுக்காதடா! காலம் பூரா நீ கஷ்டப்படுறதை பார்க்கறது எங்களுக்கும் நரக வேதனையா தான்டா இருக்கும்!” என்று இப்போது கோபத்தைக் கைவிட்டு கெஞ்சலுக்குத் தாவியிருந்தான் கிருஷ்ணன்.

     இதையெல்லாம் பார்த்திருந்த மலரின் நெஞ்சில் இனம்புரியாத கலக்கம் எழ,

     “என்ன என்னதான் நோய் அந்தப் பொண்ணுக்கு! சரியாகவே ஆகாதா?!” என்றார் ஏற்கனவே மையுவைப் பற்றி ப்ரியாவின் மூலமும், மித்ரன் மூலம் ஓரளவு அறிந்திருந்ததால்.

     மித்ரன் அவளைப் பற்றிய விவரங்களைத் தெளிவாய்ச் சொல்லி முடிக்க, மலருக்கு கண்கள் கலங்கிவிட்டது. ஒருபுறம் மையுவை நினைத்தும், ஒருபுறம் மகனின் வாழ்வை நினைத்தும்!

     அவரால் எதுவும் கூற இயலவில்லை! பார்த்து பார்த்து வளர்த்த மகனின் வாழ்வு ஒருபுறம், பார்த்தே இராவிட்டாலும், அவள் குணம் பற்றி அறிந்திருந்ததால் மையுவின் வாழ்வைப் பற்றியும் அவருக்குக் கவலை எழுந்தது.

     ஆனால் மகனின் வாழ்வை சிக்கலாக்கும் இந்த திருமணத்தையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

     “என்னம்மா?! எதுவுமே பேச மாட்றீங்க?!” என்று மித்ரன், தாயின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கேட்க,

     “ந நான் என்ன சொல்லனும்னு எதிர்பார்க்குற மித்ரா?!” என்றவர்,

     “என் மகன் வாழ்க்கை முழுக்க பெரும் மனச்சுமையோடு வாழணும்கிறதை என்னால எப்படி ஏத்துக்க முடியும்?!” என்றார் அவனைப் பார்த்து.

     “அம்மா!” என்று வருத்தத்தோடு ஏறிட்டவன்,

     “உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கலைம்மா!” என்றான் வேதனையுடன்.

    “என்ன என்ன பண்ணச் சொல்ற மித்ரா! எந்தத் தாயும் இப்படி ஒரு முடிவைத்தான் எடுப்பாங்க” என்றவர்,

     “அந்தப் பொண்ணை நினைச்சா எனக்கு கஷ்டம்தான் இருக்கு. ஆனா  அதுக்காக என் மகனோட வாழ்க்கையை அவளுக்காக நான் தியாகம் பண்ண முடியுமா?!” என்றார் உணர்ச்சிவயப்பட்டு.

     “ம்மா!” என்று மிகுந்த வேதனையைக் குரலில் தேக்கி அவரை அழைத்தவன், தாயையே சில நொடிகள் மௌனமாய் பார்த்திருந்தான். மலருக்கு அவனின் வேதனை புரிந்தாலும் அவரால் நிச்சயம் அவன் கேட்ட விஷயத்திற்கு முழுமனதாக சம்மதம் சொல்ல இயலாது என்றே தோன்றியது.

     சில நொடி மௌனத்திற்குப் பின், ம்மா நான் ஒன்னு கேட்பேன்! அதுக்கு உங்க மனசுல என்ன தோணுதோ அதை மறைக்காம அப்படியே நீங்க சொல்லணும்” என, மலர் என்னவென்று பார்க்க,

     “இதே மையு உங்க மகளா இருந்து அவளை என்ன மாதிரி ஒருத்தன் திருமணம் செய்துக்க விரும்பினா நீங்க என்ன முடிவெடுத்திருப்பீங்க?” என்றான் அவரை தீர்க்கமாய் பார்த்து.

     அவனது கேள்விக்கு உண்மையான பதிலைச் சொல்லி இருக்க வேண்டுமானால் நிச்சயம் அவர் சம்மதம்தான் சொல்லி இருப்பார்! ஆனால் மலரால் அவ்வாறு சொல்ல இயலவில்லை! என்னதான் நல்ல உள்ளம் படைத்தவராயினும் மகனது வாழ்வுக்கு முன் மையுவின் வாழ்வு அவருக்குப் பெரிதாய்த் தெரியவில்லை!

     “நா நான் என்ன சொல்லனும்னு நீ எதிர்பார்க்குற மித்ரா?!” என்றார் அவனிடமே.

     “இது என்னம்மா கேள்வி?! நீங்கதான் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லணும்!” என்றான் அவனும் பிடிவாதமாய்.

     “நான் என்ன சொல்றது?! என்னால எப்படி என் மகனோட வாழ்க்கையை?!” என்று சொல்ல வந்தவரை முழுதும் சொல்லாமல் தடுத்தவன்,

     “ம்மா! நான் இப்போ கேட்கிறது உங்க மக மையுவோட வாழ்கையைப் பத்தி!” என்றான் அழுத்தமாய்.

     அவனது பிடிவாதத்தில், அவருக்கும் பிடிவாதம் எழ, “அவ என் மகளா இருந்தா நிச்சயம் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருப்பேன்தான்!” என்றவர்,

     “ஆனா இப்போ என்னால சம்மதம் சொல்ல முடியலை!” என்றார் மகனின் பிடிவாதத்திற்கு சளைக்காதவராய்.

     “ஓ! சரிம்மா! இதுதான் உங்க விருப்பம்ன்னா, நான் அவளை கல்யாணம் செய்துக்கலை! ஆனா அவ கணவன்கிற உரிமையோடு அவ கூட இருந்து பார்த்துக்க முடியாததை, அவளோட காதலனா தள்ளி இருந்தே காலம் முழுக்க பார்த்துக்குவேன்!” என மலர் வாயடைத்துப் போனார்.

     “என்ன மித்ரா இது?! மிரட்டி சம்மதிக்க வைக்கப் பார்க்குறியா எங்களை?!” என்று கிருஷ்ணன் கோபம் கொள்ள,

     “வேண்டாம்!” என்று கையமர்த்திய மலர்,

     “எப்போ நீ இந்த அளவுக்கு முடிவு எடுத்துட்டியோ, அதுக்கப்புறம் உன் முடிவை மாத்திக்க மாட்டன்னு  எனக்குத் தெரியும் மித்ரா!” என்றவர்,

     “உன் விருப்பப்படியே செய்! ஆனா என்னோட என் கண்முன்னாடி நீங்க இருக்கக் கூடாது!” என்றார் அவன் சற்றும் எதிர்பார்க்காத முடிவாய்.

     “அம்மா?!” என்று அவன் அதிர,

     “என் பிள்ளை என் கண்முன்னாடியே கஷ்டப் படுறதை என்னால பார்க்க முடியாது! உன்னைப் பெத்தவங்களா உன் ஆசையை நிறைவேத்தி வைக்கிற கடமையை நான் செய்துடறேன். உன்னைப் பெத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுங்கிற கடமையை நீ நிறைவேத்திடு!” என்றுவிட்டு தங்கமலர் எழுந்து கொள்ள, அவன் மறுவார்த்தை பேச முடியாமல் திகைத்து அமர்ந்திருந்தான் அவர் செல்வதையே பார்த்தபடி. 

மான்விழி மனம் கொய்வாள்…

          

    

   

    

    

Advertisement