Advertisement

23

     இரவு உணவிற்காய் தங்கமலர் அவனை வருமாறு குரல் கொடுக்க, எழுந்து வெளியே வந்தவன், அவர்கள் வீட்டின் உணவுக் கூடத்தில் சரத்தும் தன் பிள்ளைகளுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான்.

     ஆனாலும் அன்று காலை மையு செய்த செயலில் அவள் நினைவுகளிலேயே உழன்று கொண்டிருந்ததால், சரத் அங்கிருப்பதை கவனித்தும் பெரிதாய் எதுவும் கண்டு கொள்ளாமல் அவர்களோடு சேர்ந்து அமைதியாய் உணவருந்திவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட, சரத் அதிசயமாய் பார்த்திருந்தான்.

     ‘என்னடா ஆச்சு இவனுக்கு?! இவன் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்ததுல இருந்து நான் ரூமை விட்டு வெளியவே வராம பயந்துகிட்டு இருந்தா,  இவன் என்னவோ நல்ல பையன் மாதிரி நம்மளை முறைக்காம கூட போறான்!’ என்று நினைத்தவன், சாருவிடம் ஏதோ கேட்க நினைத்துப் பின் எதுக்கு வம்பு என்று அமைதியாய் இருந்து விட்டான்.

     அங்கு அவள் வீட்டில், அவளைச் சாப்பிடச் சொல்லியும் சோற்றைக் கிளறிக் கொண்டே அமர்ந்திருந்தவளைப் பார்த்து,

     “அடியே எவ்ளோ நேரமா சோறைக் கிளறிட்டே இருப்ப?! சீக்கிரம் தின்னுட்டு தட்டைக் குடு! அப்போதானே உன் தங்கச்சி பாத்திரத்தை எல்லாம் கழுவி வச்சிட்டுத் தூங்குவா!” என்று சாந்தி சத்தம் போட,

     “எனக்குப் போதும்மா!” என்று மையு தட்டை நீட்டினாள்.

     “அதை சோறு போடுறதுக்கு முன்னமே சொல்றது இல்லையா?! இப்போ எவ்ளோ சோறு வீணாப் போகுது! நாங்களும் சாப்பிட்டு முடிச்சிட்டோம்!” என்று கத்த,

     “அய்யோ இப்போ என்ன சாப்பிடணும் அவ்ளோதான! குடு சாப்ட்டுத் தொலைக்கிறேன்!” என்று தட்டை வேகமாய்ப் பிடுங்கியவளின் கை சுளீரென்று வலி ஏற்படுத்த, அவள் கை தவறி தட்டைத் தவற விட்டாள்.

     “மாடு மாதிரி இருந்துக்கிட்டு ஒரு தட்டை ஒழுங்கா புடிக்க முடியாது பாரு!” என்று சாந்தி அதற்கும் வைய, அவள் வலியில் முகம் சுருக்கி கையைப் பிடித்துக் கொண்டு இருப்பது கண்டு காயத்ரி அவள் அருகே எழுந்து சென்றாள்,

    “என்னக்கா ஆச்சு?!” என்று பதட்டமாய் விசாரித்தபடியே.

     அவள் கேட்டபிறகே மையு கையைப் பிடித்துக் கொண்டு இருப்பதைக் கவனித்த சாந்தி,

     “ஐயோ என்னடி ஆச்சு?! அந்த புதுப் பொண்ணு வந்து என்ன பண்ணிட்டுப் போச்சுன்னே தெரியலையே இவ கையை!” என்று சாந்தி கூச்சல் போட,

     “அய்யோ யம்மா! கத்தாத! அதெல்லாம் ஒண்ணும் இல்லை! அப்பப்போதான் வலி இருக்கு! சரியாப் போயிடும்!” என்று சமாதானப் படுத்தினாள்.

     “என்னவோ நாங்களும் நீ இப்போ நடப்ப அப்போ நடப்பன்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து நாங்களே போய்ச் சேர்ந்துடுவோம் போல, என்று சாந்தி புலம்பிக் கொண்டே செல்ல, மையு அதையெல்லாம் காதில் வாங்காமல் தனது போனைக் கையில் எடுத்து நோண்ட ஆரம்பிக்க, காயத்ரி அக்காவை ஆச்சர்யமாய் பார்த்தாள் அவள் எதிர்த்துப் பேசாது போனைக் கையில் வைத்துக் கொண்டு எதையோ யோசித்தபடி இருப்பதைக் கண்டு.

     ‘நானும் ஒருநாளாச்சும் அந்த டாக்டர் சார் இங்க வரும்போது பார்க்கனும்னு நினைக்கிறேன். மிஸ் ஆகிட்டே இருக்கு! லீவ் எடுத்தாச்சும் ஒருநாள் அவரைப் பார்த்தே ஆகணும்! அப்போதான் அவர் எப்படி என்னன்னு நமக்குத் தெரியும்!’ என்று எண்ணிக் கொண்டே அவள் பாத்திரங்களை விலக்க எடுத்துக் கொண்டு செல்ல, மையு போனை பார்த்து சிரித்தபடி எதையோ நொண்டிக் கொண்டிருப்பது காய்த்ரியைத்தவிர அவளின் தாய் தந்தைக்குப்  பெரிதாகத் தெரியவில்லை! ஏனென்றால் எப்போதும் அவள் போனும் கையுமாக இப்படிதான் இருப்பாள் என்பதால்.

      இரவு எல்லா வேலைகளும் முடித்து மற்றவர்கள் உறங்கி விட்ட பின்பும் கூட, அவள் உறங்காமல் தான் இருந்தாள். ஆனால் எல்லா நாட்களையும் போல் தன் கவலைகளினால் அல்ல கனவுகளினால் மிதந்தபடியே.   

     ‘மானு என்ற ஒற்றை அழைப்பில்

     என் உயிர் தொட்டுச் சென்றவனே,

     உன் மனதோடு மட்டும்

     எனை ஏன் ஏற்க மறுக்கிறாய்?

     என் தசைகளைப் போல

     என் இதயமும்

     இயங்கத் தகுதியற்றது

     என்று எண்ணிவிட்டாயோ?!’ அவனுக்காய் அச்சடித்து வைத்தக் கவிதையை வருடிக் கொடுத்தபடி படுத்துக் கிடந்தவள்,

     ‘என் அறிவுக்குப் புரியுது. நான் உங்களுக்குத் தகுதியானவ இல்லைன்னு! ஆனா இந்தப் பாழாப் போன மனசு கேட்காதானே?! நான் ஒவ்வொரு நிமிஷமும் உங்களைப் பத்தி நினைக்கக் கூடாது நினைக்கக்கூடாதுன்னே நினைச்சிக்கிட்டே இருக்கேன் ப்பா! அதுவும் இன்னிக்கு காலையில நான் பண்ணது?! நெஜமா ஏன் அப்படி பண்ணேன்? எந்த தைரியத்துல, என்ன எண்ணத்துல நான் உன்கிட்ட அப்படி பேசினேன் நடந்துகிட்டேன்னு எனக்கு சத்தியமா புரியலை?! எனக்குத் தெரியும், என்னோட  இந்த ஆசை ரொம்பவே அதிகப்படியானதுதான்! நான் நல்லாவே இருந்திருந்தா கூட நான் உங்களுக்குப் பொருத்தமானவளா இருந்திருக்க முடியாது! ஏன்னா உங்க குடும்பத்தோட அந்தஸ்துக்கும் எங்க குடும்பத்தோட அந்ததஸ்துக்கும் நினைச்சுக் கூட பார்க்க முடியாது! அதுவும் நீங்க இருக்க அழகுக்கும், உங்க படிப்புக்கும் நான் எந்த விதத்துலயும் பொருத்தமே இல்லாதவதான்! அதிலும் நான் இருக்க நிலைமையில உங்களை பத்தின்னு இல்லை, காதல் கல்யாணம்னு யோசிக்கிறதே தப்பு! அப்படி இருக்க இன்னிக்கு உங்க கிட்ட அப்படிக் கேட்டு வச்சது?!’ என்று எண்ணியவளின் கண்ணோரம் கண்ணீர் கசிந்தது.

     ‘ஒருவேளை நான் நல்லா ஆரோக்கியமானவளா இருந்திருந்தா கூட என்னோட ஆசை கொஞ்சமாவது நியாயமானதா இருக்கலாம்! ஆனா, ஆனா நான் இருக்க இந்த நிலமையில எனக்கு ஏன் இப்படிபட்ட ஆசைங்க வந்தது?! உங்களைப் பார்க்கிற வரைக்கும் எனக்கு இப்படி எல்லாம் தோணினதே இல்லை தெரியுமா?! இருக்குற வரைக்கும் இருந்துட்டு சீக்கிரமே செத்துப் போயிடணும்னு தான் ஒவ்வொரு நாளும் நினைச்சிக்கிட்டு இருப்பேன். ஆனா உங்களைப் பார்த்த பிறகு, நீங்க எனக்குக் கொடுத்த நம்பிக்கைக்குப் பிறகு எனக்கு வாழணும்னு ஆசையா இருக்குப்பா! யாருக்கும் பாரமில்லாம நானே என்னோட எல்லா வேலைகளையும் பார்த்துக்கிட்டு, என்னோட சுய சம்பாத்தியத்துல வாழணுன்னு ஆசையா இருக்கு! அதுவும் உங்களுக்கு உரியவளா உங்களோடவே என் காலம் முழுக்க வாழணும்னு ஆசையா இருக்கு!’ என்று அவனுடன் மானசீகமாக உரையாடியவள்,

     இறுதியாக, ‘இது ரொம்ப பேராசைதான்! இருந்தாலும் அந்தக் கடவுள் எனக்கு இத்தனை வருஷம் கொடுத்த கஷ்டத்துக்கு பதிலா உங்களை எனக்குக் கொடுக்கலாம். ஒண்ணும் தப்பில்லை!’ என்று ஏதேதோ எண்ணியபடியே அவனது வாட்சப் ப்ரோபைல் பிக்கிலிருந்து அவள் சுட்டு வைத்திருந்த அவனது புகைப்படத்தை ஆசை ஆசையாய் வருடிக் கொடுத்துக் கொண்டே உறங்கிப் போனாள் கண்களில் கனவோடு.

     இங்கு இவள் மனம் இப்படித் தத்தளித்துக் கொண்டிருக்க, அங்கு மித்ரனுமே இன்று அவள் செய்த கலாட்டாவிலும், அவள் கேட்ட கேள்வியிலும் வெகுவாய்த் திணறிக் கொண்டிருந்தான் மொட்டை மாடியில் படுத்து வானத்தை வெறித்தபடி.

     அவளது கேள்வி இத்தனை நாளாய் அவன் மனதுள் பூட்டி வைத்திருந்த ஆசைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் சாவியிட்டுத் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. ஏற்கனவே அவளது சந்திப்பிலிருந்தே அவனுள் எழுந்திருந்த மாற்றத்தை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாது திணறிக் கொண்டு இருந்தவன், அப்போது அவனுக்கென்று நிச்சயிக்கப் பட்டவள் இருந்ததால், மனதை ஒருநிலைப் படுத்தி அவளைப் பற்றிய சிந்தனையைத் தவிர்த்து வந்தான். ஆனால் என்று அவனது திருமணம் நின்று போய் மறுபடியும் அவளைச் சந்திக்க ஆரம்பித்தானோ, அன்றிலிருந்து அவனின் மனம் அவள்பால் ஈர்க்கப்படுவதை அவனால் எவ்வளவு முயன்றும் தடுக்க முடியவில்லை! அதனாலேயே அவளிடம் கண்டிப்பும் கோபமும் காட்டிப் பழகியவன், நாட்கள் செல்லச் செல்ல, தன் மனதைக் கட்டுபடுத்த முயன்றும் சில சமயங்களில் தோற்றுப் போக ஆரம்பித்திருந்தான். அதுவும் நேற்று அவள் கீழே விழுந்த போது, அவன் செய்த செயலும், அவனின் அழைப்பும் அவனுள் மிகப் பெரிய குற்ற உணர்ச்சியைக் கொடுக்க, அதனாலேயே அவன் இன்று புதிய பிஷியோதேரபிஸ்டை அமர்த்தியது. ஆனால் அவளோ, வேண்டுமென்றே மறுபடியும் அவனை அங்கு வரவழைத்திருந்தாள்.

     அவளை நினைக்க நினைக்க மனதில் காதலும், வேதனையும் சேர்ந்தே எழ,

     ‘ச்சே! எல்லாம் இந்தப் ப்ரியா அக்காவால வந்தது! இவங்களாலதான் அவளைப் பார்த்து தொலைச்சேன்!’ என்று வாய்விட்டுச் சலித்துக் கொண்டவன் மனம் ஏறுக்குமாறாய், அவள் இந்நேரம் தனக்கு எப்போதும் அனுப்பும் குறுஞ்செய்தியை அனுப்பி இருப்பாளா என்று எண்ண ஆரம்பிக்க, விரல்கள் தானாக இயங்கி, வாட்சப்பிற்குள் சென்றது. எதிர்பார்த்தபடியே அன்று இரவும் அவள் குட்நைட் மெசேஜ் அனுப்பி இருக்க அதைப் பார்த்துக் கோபமுற்றான் தன் செயலுக்கும் எண்ணத்திற்கும் மாறாய்.

     “ச்சே!  இவ என்னைப் பாடா படுத்தறா!” என்றபடி தன் போனைக் கீழே வைத்து சற்று தூரம் தள்ளிவிட்டான், நீ என் அருகில் இருந்து செல்! என்பது போல். அவன் செய்கை அவனுக்கே சின்னப்பிள்ளைத் தனமாகத் தோன்றினாலும், அவளுள் அவன் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து கொண்டிருந்தான் என்பதை உணரவும் அவன் மறுக்கவில்லை!

     ஒரு மருத்துவ துறையச் சேர்ந்தவனாக அவளது நிலைமையை அவன் முற்றிலும் அறிந்திருந்தாலும், அவள்மேல் எந்த சூழ்நிலையில், எந்த நொடியில் தனக்கு இத்தகையதொரு பிடிப்பு ஏற்பட்டது என்பதை அவனால் அறியமுடியவில்லை! ஆனால் கடந்த சில நாட்களாக அவன் அவனாக இல்லை என்பது மட்டும் அவனுக்கு நன்றாகப் புரிந்தது.

Advertisement