Advertisement

                                                                 22

     மருத்துவமனைக்கு வந்துவிட்டால், மதியஉணவு நேரம் மட்டும்தான் தந்தை ஓய்வாக இருப்பார் என்று அந்நேரம் வரை அவரைச் சென்று பார்க்காமல் தவிர்த்தவன், ஒருமணிக்கு மேல் தந்தையைப் பார்க்கச் செல்ல, அங்கு அதிசமாய் தங்கமலரும் அமர்ந்திருந்ததைக் கண்டு,

     “என்னம்மா நீங்க இங்க வந்திருக்கீங்க?!” என்று ஆச்சர்யத்துடன் கேட்டபடியே மித்ரனும் அங்கே இருந்த மற்றொரு சேரில் அமர்ந்தான். 

     “சரத் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்திருக்கார்டா சாருவையும் பிள்ளைங்களையும் அழைச்சிட்டுப் போகணும்னு! பாவம் ரொம்ப டல்லாகிட்டார் டா சாரு அவர் கூட இல்லாம! போன் பண்ணாலும் உங்க அப்பா சட்டுன்னு கிளம்பி வர மாட்டார். அதான் நேர்லயே வந்து உங்க அப்பாவைப் பார்த்துக் கையோடு அழைச்சுட்டுப் போலாம்னு வந்துட்டேன். அப்படியே உங்களுக்கும் சாப்பாடு கொண்டு வந்தேன்” என்றார் முகமலர்ச்சியுடன்.

     ஓ! சாருக்கு வயறு காஞ்சதும்தான் பொண்டாட்டி பிள்ளை ஞாபகமே வந்திருக்கு!என்று எண்ணிக் கொண்டவன்,

     “அதெல்லாம் அவளை அனுப்ப முடியாதும்மா!” என்றான் எடுத்த எடுப்பிலேயே.

     “என்னடா பேசற நீ?!” என்று கோபம் கொண்ட மலர்,

     “நானே இத்தனை நாளா மாப்பிள்ளை வரலேன்னு பயந்துகிட்டு இருந்தேன். இப்போ அவரே தேடி வந்த பிறகும் அனுப்பலைன்னா எப்படி?!” என்று பொரிய,

     “ம்மா! அவர் வந்திருக்கார் அவ்ளோதான்! ஆனா திருந்தி வந்திருக்கார்னு உங்களுக்குத் தெரியுமா?!” என்றான் அவன்.

     அதற்கு  தங்கமலரால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை!

     “அவன் சொல்றதும் சரிதானேமா! முதல்ல அவர்கிட்ட பேசுவோம். அப்புறம் என்ன ஏதுன்னு முடிவெடுப்போம்.” என்று மனைவிடம் முடித்தவர்,

      “சரி மித்ரா உனக்கு என்ன ஆச்சு?! ஏன் இப்போ எல்லாம் ஒருமாதிரி இருக்க?!” என்றார் மித்ரனைப் பார்வையால் துளைத்தபடியே.

     “எ எனக்கு என்னப்பா ஆச்சு? நான் நல்லாதானே இருக்கேன்?!” என்று மித்ரன் புரியாமல் கேட்க,

     “ஓ!” என்றவர்,

     “காலையில நானும் உன் அண்ணனும் ரவுண்ட்ஸ் போகும் போது எங்களைப் பார்த்தியா?!” என்றார்.

     “ஓ பார்த்தேனே” என்றவனை,

     “எங்க பார்த்த?!” என்று புருவம் உயர்த்திக் கேட்க,

     “ப ஃபர்ஸ்ட் ப்ளோர்ல தானே ப்பா” என்றவனை கூர்மையாய் நோக்கியவர்,

      “என்ன பிரச்சனை உனக்கு?!” என்றார் சுற்றி வளைக்காமல்.

     “எனக்கு என்னப்பா பிரச்சனை இருக்கப் போகுது?!” என்றவனைப் பார்த்து,

     “பிரச்சனை இருக்கு மித்ரா.” என்று தீர்க்கமாய் சொன்னவர்,

     “உன் அம்மா தினமும் என்கிட்ட புலம்புறா! நீ கல்யாணம் நின்னு போனதுல இருந்து ஏதோ மாதிரி இருக்கன்னு! ஆனா எனக்கு அப்படித் தோணலை! வேற ஏதோ குழப்பம் இருக்கு உன் மனசுல! அதை எங்ககிட்ட சொல்ல முடியாத பட்சத்துல, நீயே எதுவாக இருந்தாலும் மனசை போட்டுக் குழப்பிக்காம நிதானமா யோசிச்சு முடிவெடு மித்ரா! இது உன் வாழ்க்கை. யாருக்காவும் எதுக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கக் கூடாது! உனக்கு எது உண்மையான சந்தோஷத்தைக் குடுக்கும்னு தோணுதோ அதை நோக்கி நீ தராளமா செயல்படலாம்! இது நான் இப்போ உனக்கு புதுசா சொல்ற விஷயம் இல்லை! நீ படிக்கும் போதும் இதைதான் சொன்னேன்! சோ எதுவாக இருந்தாலும் மனசை போட்டுக் குழப்பிக்காம தெளிவா முடிவெடு. இனி உன்கிட்ட இந்தத் தடுமாற்றத்தை நான் பார்க்கக் கூடாது ரைட்!” என,

     “ம் ப்பா!” என்றான் மனதிற்குள் அப்பாவின் அறிவுக் கூர்மையை மெச்சியவனாய்.

     வெளியே ம் என்று தலையாட்டி விட்டானே தவிர, ‘தனக்கே தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம், ஏன் இப்படி மனம் ஒன்றாகவும் செயல் ஒன்றாகவும் இருக்கிறது என்று புரியாமல் இருக்கும் பட்சத்தில் இவர் எப்படி என்னோட இந்த ஒருநாள் தடுமாற்றதிலேயே கண்டுபிடிச்சிட்டார்?!’ என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டான்.

     “இப்போவும் என்ன யோசனை மித்ரா?! இனி உன்கிட்ட எந்தத் தடுமாற்றமும் இருக்கக் கூடாதுன்னு சொன்னேன்!” என்று மீண்டும் ராஜசேகர் சொல்ல,

     “சுவர் ப்பா!” என்றான் தெளிவு பெற்றவனாய்.

     “மலர், மாப்பிள்ளையை கொஞ்ச நாள் இங்க நம்ம வீட்லயே தங்கச் சொல்லு! அவர் உண்மையாவே திருந்திட்டாரா இல்லையான்னு அப்போ தெரிஞ்சிடும்! அதுக்கப்புறம் சாருவையும் குழந்தையையும் அவரோட அனுப்பி வைக்கலாம்” என்று மனைவிக்கும் தன் முடிவைச் சொன்னவர்,

    “சரி சாப்பாடு எடுத்து வைம்மா. இன்னும் ஒன் அவர்ல சர்ஜெரி இருக்கு!” என்று சொல்ல, கிருஷ்ணனும் அங்கு வந்து சேர்ந்தான் தன் வேலையை முடித்துக் கொண்டு.

     “இதோ பெரியவனும் வந்துட்டான்” என்ற தங்கமலர்,

     “வாடா வந்து நீயும் உட்காரு” என்று மூவருக்கும் கொண்டு வந்திருந்த உணவைப் பரிமாற, மூவரும் உண்ணத் துவங்கினர்…

     அவன் சென்று சில மணி நேரங்கள் கடந்த பின்பும் அவன் தொட்டுத் தூக்கிய ஸ்பரிசத்தின் சிலிர்ப்பும், என்றைக்கும் இல்லாத அவனின் அந்த புதிய அழைப்பும் அவளுள் எதையோ சொல்லாமல் சொல்ல,

     ‘அ அவருக்கும் என்மேல?! நான், நான் அவரை நேசிக்கிற மாதிரியே அவரும் என்னை?!’ என்று எண்ணியவளுக்கு உள்ளமெல்லாம் பூரித்துப் போய்க் கிடந்தது.

      ‘என்னை என்னையும் ஒருத்தர்?!’ என்று யோசித்தவள்,

     ‘ச்சே ச்சே அப்படி எல்லாம் இருக்காது! நான் நானே ஏன், எப்படி அவர்மேல இந்த அளவு உரிமை எடுத்துக்கறேன், ஏன் அவரை இவ்வளவு தேடுறேன், ஏன் அவர்கிட்ட எதிர்பார்க்கிறேன்னு புரியாம இருக்கும் போது, அவர் எப்படி என்னைப் போய்?!’ என்றவளுக்கு கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது.

     ‘ச்சே! என்னை மாதிரி பொண்ணுக்கெல்லாம் இப்படிப்பட்ட ஆசைகள் வரலாமா?! நான், நான் இப்படியெல்லாம் யோசிச்சுக் கூடப் பார்க்கலாமா?! என் உயிரே இங்க நிலை இல்லாத போது, எனக்கு எதுக்கு இப்படிப்பட்ட ஆசைகள்?! என்னால என் குடும்பம் படுற கஷ்டம் போதாதா?! இன்னொருத்தரோட வாழ்க்கையையும் சேர்த்து அழிக்க எனக்கு என்ன உரிமை இருக்கு?!’ என்று ஆசை ஆசையாய் அவனைப் பற்றி எண்ண ஆரம்பித்தவள், இறுதியில் தன் மீதே முழுக் குற்றத்தையும் சுமத்தி முடிக்க,

     ‘ஆமாம்! முதல்ல அந்த மனுஷனைப் பத்தி நினைக்கிறதையும், எழுதறதையும் விடணும்! சீக்கிரம் நல்லா நடக்க ஆரம்பிச்சு அவர் இங்க வரதை தடுக்கணும்! எனக்கு எதுக்கு இந்த விபரீத ஆசையெல்லாம்?!’ என்று தன் ஆசைகளுக்கும் ஏக்கங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அணையிட்டுக் கொண்டாள் தன் இயங்க முடியா தசைகளைப் போலவே…

     இங்கு இவள் முடிவைபோலவே அங்கு அவனும்,

     ‘ச்சே! அப்பா என்னைக் கூப்பிட்டுக் கேள்வி கேட்குற அளவுக்கு நான் அந்தப் பொண்னோட நினைப்புல சுத்திக்கிட்டு இருந்திருக்கேன்! ச்சே! அந்தப் பொண்ணு என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றா!’ என்று நொந்து கொண்டவன்,

     ‘நோ! ஷி இஸ் ஜஸ்ட் மை பேஷன்ட்! அவ குணமாகனும்! அதுதான், அதுமட்டும்தான் என்னைப் பொறுத்தவரை முக்கியம்! அதைவிட்டுட்டு எதுக்காக எந்நேரமும் அவளை பத்தி யோசிச்சிகிட்டு இருக்கேன்?! அதுவும் இன்னிக்கு அவ கீழே விழுந்தப்போ நான் பண்ணது? ச்சே! என்ன முட்டாள்தனம் பண்ணி வச்சிருக்கேன்! அவ என்னைப் பத்தி என்னை நினைச்சிருப்பா?! ஏற்கனவே அவ என்னை பத்தி தேவையில்லாம கற்பனையை வளர்த்துக்கிட்டு கண்டதையும் எழுதிட்டு இருக்கா?! (என்ன கண்டதை எழுதிக்கிட்டு இருக்காளா?! கவிதை கவிதைடா அது. நீ கண்டதுன்னு நினைச்சது மட்டும் அவளுக்கு தெரியட்டும் அப்போ இருக்குடா உனக்கு!) இப்போ நான் வேற இப்படி செய்து அவ மனசோட ஆசையை இன்னமும் தூண்டி விட்டிருக்கேன்! இல்லை! இனி எக்காரணம் கொண்டும் அவளை நினைக்கக் கூடாது!’ என்று முடிவெடுத்தவன், அதைச் செயல்படுத்தக் கையில் எடுத்த ஆயுதம் அவளை இனி சந்திக்கவே கூடாது என்ற முடிவுதான்.

     ஏனெனில் அவளைச் சந்தித்தால் அவன் மனம் அவன் பேச்சைக் கொஞ்சமும் கேட்பதில்லை என்று அவனுக்கே நன்றாய்த் தெரிந்தது. அதன் விளைவாக அடுத்த நாளே அவளுக்காய் வேறொரு பெண் பிசியோ தெரபிஸ்ட்டைத் தேடித் தானே பணம் கட்டி அவளுக்குப் பயிற்சி செய்ய அனுப்பி வைத்தான் அவளை இனி பார்க்கவே கூடாது என்ற உறுதியோடு. ஆனால் அவள் அவனைப் பார்க்க என்னவெல்லாம் செய்வாள் என்று அவளுக்கேத் தெரியாதே!

     மறுநாள், புதிதாய் ஒரு பெண் பிசியோதெரபிஸ்ட் அவளுக்குப் பயிற்சி அளிக்க வந்ததும்,

     “நீ யாருமா புதுசா இருக்க?!” என்று கேட்ட சாந்தியிடம்,

     “மித்ரன் சார்தான் என்னை அனுப்பி வைச்சார். அவருக்கு அவரோட ஹாஸ்பிட்டல் பேஷண்ட்ஸ் பார்க்கவே நேரம் போதலையாம்! அதனால் இனி நான்தான் இவங்களை அட்டென்ட் பண்ணுவேன்” என்றவள், அவன் சொன்னபடியே தனது போனிலிருந்து அவனுக்கு அழைப்பு விடுத்து அவளிடம் கொடுக்காமல் அவளது அம்மா சாந்தியிடம் கொடுத்தாள்.

     “சொல்லுங்க டாக்டர் தம்பி! இப்போதான் நீங்க அனுப்பின புது டாக்டர் அம்மா வந்தாங்க!” என்ற சாந்தியிடம்,

     “அம்மா! எனக்கு இங்க எங்க ஹாஸ்பிட்டல்ல ரொம்ப வேலை அதிகமா இருக்கு! அதனாலதான் அவங்களை அனுப்பி வைச்சேன் அவங்க இனி உங்க பொண்ணைப் பார்த்துப்பாங்க! உங்க பொண்ணை பயிற்சிகளை மட்டும் தவறாம பண்ணச் சொல்லுங்க சீக்கிரமே எழுந்து நடந்துடலாம்!” என்றான்.

      “சரிங்க தம்பி! ஆனா இந்தப் பொண்ணு நீங்க வந்தப்புறம்தான் உங்க கண்டிப்புக்கு பயந்துகிட்டு ஒழுங்காவே பயிற்சி பண்ண ஆரம்பிச்சா! இப்போ நீங்க வரலைன்னதும் என்ன பண்ணப் போறாளோ?!” என்று கவலையுடன் சொன்னவர்,

     “சரிங்க தம்பி உங்க வேலையும் உங்களுக்கு முக்கியமில்ல. நாங்க பார்த்துக்கறோம் தம்பி! எங்களுக்காக நீங்களும் ப்ரியா பொண்ணும் இவ்வளவு தூரம் மெனக்கெடுறதே ரொம்ப பெரிய விஷயம்! ரொம்ப நன்றி தம்பி!” என்றுவிட்டு அவர் போனை புதிதாய் வந்தப் பெண்ணிடம் கொடுக்க,

     “சரி நீங்க அவங்களைப் பார்த்துக்கோங்க! நான் ஏற்கனவே சொன்னது போல பயிற்சிகளை பொறுமையா சொல்லிக் கொடுங்க! ஏடாகுடமா எதாச்சும் பண்ணா அவங்க தசைகளுக்கு அதுவே பிரச்சனையா மாறிடலாம்!” என்று எச்சரித்துவிட்டு போனை வைத்தவன் மனதில், தன்னைமீறி ஏதோ பாரம் ஏறிக்கொண்டது!

     அங்கு நடப்பதையெல்லாம் பார்த்திருந்த அவளுக்கோ, நேற்று தான் எடுத்திருந்த முடிவுக்கு மாறாய், அவனின் இந்தச் செயலால் அவனை அன்றே அப்போதே அங்கு வரவழைக்க வேண்டும் என்ற ஆவேசம் எழுந்தது. அதன் விளைவு அடுத்த அரைமணி நேரத்தில் அவனை அங்கு வரவழைத்திருந்தாள்

     அவன் பதட்டத்துடன் உள்ளே நுழையும்போதே அவளின் மான்விழிகளில் வலியையும் தாண்டி கீற்றாய் சந்தோஷ மின்னல்!

     வலி பொறுக்க முடியாமல், பற்களைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனுக்கு, ஓடிப்போய் அவளைத் தேற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தாலும், அதனைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாய் தான் அமர்த்தியிருந்த அந்த புதிய பிசியோதெரபிஸ்ட் பெண்ணைக் கண்டபடி கத்த ஆரம்பித்தான்.

Advertisement