Advertisement

     “சார் நான் சொல்ல வர்றதைக் கொஞ்சம் கேளுங்க! சார்!” என்று அவள் சொல்ல வந்ததைக் கேட்கக் கூட பொறுமை இல்லாமல்,

     “ச்சே! நீங்கல்லாம் என்ன படிச்சி, பயிற்சி எடுத்துட்டு வரீங்க?! எத்தனை முறை சொல்லி அனுப்பினேன் உங்ககிட்ட?! கொஞ்சம் கூட பொறுப்பில்லை! அப்படி என்ன கவனக்குறைவு?! அவ, அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்? இனி நீங்க யாருக்குமே பயிற்சியே குடுக்க முடியாதபடி செஞ்சிடுவேன்!” என்று சகட்டுமேனிக்கு சத்தம்போட்டு அந்த அப்பாவிப் பெண்ணை கதிகலங்க வைத்தவனை முகத்தில் அப்பாவித்தனத்தோடும் மனதில் குதூகலத்தோடும் ரசித்துக் கொண்டிருந்தாள் மையு.

     அந்தப் பெண், ‘ஐயோ! இதென்னடா வம்பா போச்சு! இவர்சொல்ற மாதிரி ஏதாச்சும் பண்ணிட்டா?! ஐயோ நான் இத்தனை வருஷம் படிச்ச படிப்பு, பட்ட கஷ்டம் எல்லாமே வீணாப் போயிடுமே!’ என்று கண்களில் நீர் கோர்க்க மையுவைப் பார்க்க, மையுவோ மித்ரன் மீது பதித்திருந்த பார்வையில் அவள் எதையோ கண்டு கொண்டாள்.

     ‘அடக்கடவுளே! என்ன நடக்குது இங்க?! இந்த இந்தப் பொண்ணு அவரை வரவைக்கத்தான் இப்படிப் பண்ணுச்சா?!’ என்று உணர, மையுவைக் கொலைவெறியுடன் நோக்கினாள்.

     அதைக் கண்டு கொண்ட மையு,  “ஹா! ஐயோ அம்மா! இன்னிக்கும் நீ என்னைத் தனியா விட்டுட்டுக் கடைக்குப் போயிட்டியேம்மா! இந்த புது டாக்டர் பொண்ணு என் கையை உடைச்சிட்டாளே!” என்று அலறி அழுதுக் கூச்சல் போட, அவள் அலறலைத் தாங்க முடியாதவன், பதட்டமாய் அவளருகே விரைந்து,

     “நா நான் இருக்கேம்மா! உனக்கு ஒண்ணும் ஆகாது ஆக விடமாட்டேன்! தப்புதான் நான் வராம வேற ஒருத்தரைப் உன்னைப் பார்த்துக்க வரச் சொன்னது தப்புதான்!” என்று உணர்ச்சிவயப்பட்டு மனதில் தோன்றியதை அப்படியே மொழிந்தவன், மனம் கலங்க அவள் வலியால் இறுகப் பிடித்திருந்த அவளின் கையை மெல்ல வருடி விட, அந்தப் பெண்ணுக்குக் கோபம் தலைகேறியது. அதே சமயம் அவன் பெரிய இடம் என்பதால் அவனைப் பகைத்துக் கொள்ளவும் முடியாது போக,

     ‘ச்சே! இவங்களோட காதல் விளையாட்டு நான்தான் பலிகடாவா?!’ என்று கொந்தளிப்புடன் மையுவைப் பார்க்க,

     ‘அதான் ஜோலி முடிஞ்சதுல்ல! கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்!’ என்று தனது கண்களைச் சுழட்டி வீட்டின் வாசற்புறம் அவளுக்கு வழி காட்ட, கோபத்திலும் அவமானத்திலும் அவளை முறைத்த அந்தப் பெண்,

     “சார்! அவங்க” என்று ஏதோ சொல்ல முனைய,

     “ஹான் அம்மா! வலிக்குதே!” என்று உதட்டை  அழுந்தக் கடித்து கண்களைக் கலங்கச் செய்து வராத அழுகையை வந்தது போல் பில்டப் கொடுக்க, அந்தப் பெண்ணை மறுவார்த்தை சொல்ல விடாமல்,

     “ஜஸ்ட் கெட் அவுட் ஆப மை சைட்!” என்று எரிச்சலுடன் இரைந்தான் மித்ரன்.

     அந்தப் பெண் மையுவைப் பார்த்து நன்கு முறைத்துவிட்டுப் பற்களை நறநறவென்று கடித்தபடி எதுவும் செய்ய முடியாது விடுவிடுவென அங்கிருந்து வெளியேறினாள் ஆதங்கத்துடன்.

     அவர்கள் இருவரின் முகபாவங்களை யெல்லாம் கவனிக்காத மித்ரன் அவள் வலியென இறுகப் பிடித்திருந்த கைகளை மட்டுமே வருடிக் கொடுத்துக் கொண்டிருக்க,

     “ப பரவாயில்லை விடுங்க! நான் நானே பார்த்துக்கறேன்!” என்று மையு வேண்டுமென்றே அவனது கையை எடுத்துவிட, அவளை முறைத்தவன்,

     “அந்தப் பொண்ணுதான் புதுசு! உனக்கு எங்க போச்சு அறிவு! அதான் இத்தனை மாசமா பயிற்சி கொடுத்திருக்கேன்ல! ஒழுங்கா கவனமா செய்ய வேண்டியதுதானே!” என்றான் கடுமையாய்.

     ‘நான் கவனமா தான் செஞ்சேன். நீங்க வரணும்னு வேணும்னே கவனமா தப்பா செய்துதான் இப்படி வலியை வரவச்சுகிட்டேன்!’ என்று அவள் மனதிற்குள் பதில் சொல்ல,

     “கேட்குறது காதுல விழலையா?! காலத்துக்கும் இப்படியே உட்கார்ந்து மத்தவங்களை ஏமாத்திக்கிட்டு இருக்கலாம்னு பார்க்குறியா?” என்றான் இப்போது அவள் மீது தன் கோபத்தைத் திருப்பி.

     அவன் கேள்வியில் அவளுக்குமே கோபம் எழ, “என்ன?!” என்று சீறியபடி அவனை முறைத்தவள்,

   “நான் நடந்தா உங்களுக்கு என்ன? நடக்காட்டி உங்களுக்கு என்ன?! நான் என்ன உங்களையா ஏமாத்திகிட்டு இருக்கேன்? ரொம்பதான் அக்கறை என்மேல! அதனாலதான் நேத்து நான் கீழ விழுந்தபோது அப்படியே ஓடி வந்து தாங்கிப் பிடிச்சு விழாம தடுத்து நிறுத்துனீங்களாக்கும்?! அப்புறம், அப்புறம் கீழ விழுந்து கிடக்கும் போது கூட தூக்குற மாதிரி வந்துட்டு பொத்துன்னு அப்படியே விட்டுட்டுப் போனவர்தான?! இப்போ மட்டும் என்ன புதுசா அக்கறை?!” என்று பொரிந்து தள்ளியதோடு,

     “அது மட்டுமா நான் எழுந்துக்க முடியாம கஷ்டப் படுறதைப் பார்த்த பிறகும், ‘எழுந்திரு எழுந்திருன்னு’ சொல்லிட்டு கமுக்கமா நின்னுகிட்டு தானே இருந்தீங்க?!” என்றாள் ஏதோ அவன் அவளுக்கே உரியவனாய் எழுதிக் கொடுத்து விட்டது போல்!

     அவள் கேட்ட வார்த்தையெல்லாம் மனதின் ஓரம் ஜில்லென்ற உணர்வைக் கொடுத்தாலும், ‘ச்சே ச்சே என்னடா இதெல்லாம்?! நீ நினைக்கிறது என்ன நடந்துகுறது என்ன?! அவ பாட்டுக்கு என்னமோ நீ அவ புருஷன் மாதிரி கேள்வி கேட்டுகிட்டு இருக்கா?! நீயும் கல்லு மாதிரி நின்னுக்கிட்டு இருக்க?!’ என்று மூளை உசுப்பி விட,

     “இங்க பாரு! ஓவரா பேசுற நீ?!” என்றான் சட்டென கோபத்தை வரவழைத்து.

     “நான் ஒண்ணும் ஓவரா பேசலை! நீங்க தான் ஓவரா பண்றீங்க?! என்ன என்ன இப்போ? எனக்கு உங்களைப் பிடிச்சிருக்க மாதிரி உங்களுக்கும் என்னைப் பிடிச்சிருக்குதானே?! அப்புறம் எதுக்கு இவ்ளோ சீனப் போடுறீங்க?!” என்று அவள் ஒரு வேகத்தில் பட்டென எதையுமே யோசிக்காமல் அந்நொடி தன் மனதை உடைத்துக் கேட்டுவிட, அவனோ அசையாது நின்று விட்டான்.

     கேட்டு முடித்த பின்பே தான் என்ன கேட்டிருக்கிறோம் என்று தெளிந்தவள், ‘ஐயோ!’ என்று பாவனையில் முழி பிதுங்க அவனை எதிர்கொள்ள முடியாமல் திணற, அவனுக்கு தான் இத்தனை நாள் கடைபிடித்து வந்த கெத்தை மீறிச் சிரிப்பு எட்டிப் பார்க்க நினைத்த வேலையில்,

     “அடியே என்னடி ஆச்சு?! அந்த புது டாக்டர் பொண்ணு! ஏதேதோ சொல்லிட்டுப் போகுது?!” என்றபடியே அங்கு வந்து சேர்ந்தார் சாந்தி.

   அடிப்பாவி ஏடாககுடமா எதுவும் போட்டு கொடுத்திருப்பாளோ?!’ என்று பதறியவள், நொடியில் சமாளிக்கும் வித்தை தெரிந்தவளாய்,  “அ அது வந்தும்மா! ஐயோ ரெம்ப வலிக்குதே! அந்த டாக்டர் பொண்ணு ஏடாகுடமா என் கையைத் திருப்பி என் கையை உடைச்சிடுச்சே! என்னால முடியலியே!” என்று கையைப் பிடித்துக் கொண்டு அவள் அம்மாவிடம் முறையிட, அவளின் நடிப்பில் அசந்து போனவனுக்கு இத்தனை நேரம் அவள் மேல் இருந்த அக்கறை போய் கோபமே எழுந்தது.

     ‘அடிப்பாவி அப்போ இவ்ளோ நேரம் நடிச்சியா?!’ என்ற ரீதியில் அவன் முறைக்க,

     “அய்யய்யோ! என்ன தம்பி இது இப்படி ஆகிப்போச்சு?! காலுதான் நடக்க முடியாட்டியும் கையை வச்சாவது ஏதாவது ஒன்னு செய்துகிட்டு இருக்கும் இந்தப் புள்ளை! இப்போ கைக்கும் இப்படி ஆகிப் போச்சே?!” என்று சாந்தி பதறியபடி மகளின் கையைத் தொட்டுப் பார்க்க,

     “அ அம்மா!” என்று அவள் கத்த இவனுக்கு உண்மையாகவே இப்போது அந்த பிசியோதெரபிஸ்ட் பெண்ணை நினைத்துப் பாவமாய் இருந்தது.

     “அதெல்லாம் ஒண்ணும் ஆகாதும்மா. இதோ இப்போ நான் மறுபடியும் பயிற்சி கொடுத்தா எல்லாம் சரியா போகும் பயப்படாதீங்க! நான் கொடுக்கப் போற ட்ரீட்மென்ட்ல உங்க பொண்ணு என்ன ஆகுறான்னு பாருங்க!” என்றவன்,

     “கையை நீட்டு!” என்றான் கட்டளையாய்.

     “இல்லை வலிக்குது நாளைக்கு பண்றேன்!” என்றவளை முறைத்து,

     “கையை நீட்டுன்னு சொன்னேன்!” என்று குரலை உயர்த்தியவன், அவள் உண்மையாகவே வலியில் முகம் சுருக்கியபடி கையை நீட்டவும், மெல்ல அதனை நீட்டி மடக்கியபடியே,

     “எல்லோரையும் ஏமாத்துற மாதிரி என்னையும் ஏமாத்த நினைக்காத! சீக்கிரம் சரியாகணும்னா ஒழுங்கா எக்சர்சைஸ் பண்ணு!” என்றவன் இப்போது அவள் கண்களில் நீர் துளிர்ப்பதைப் பார்த்ததும்,

     “இந்த  அழுகைக்கெல்லாம் ஏமாற மாட்டோம் இனி! ஒழுங்கா பயிற்சி பண்ணு!” என, சாந்தியோ,

     “இந்தப் பொண்ணை என்னதான் பண்றதுன்னு தெரியலை தம்பி! எருமைமாடு மாதிரி வளர்ந்திருக்காளே தவிர கொஞ்சம் கூட புத்தி வளரலை! வீட்டுல இருக்க மத்த விஷயத்துல எல்லாம் நாட்டமை மாதிரி கரக்ட்டா தீர்ப்பு சொல்லுவா! ஆனா அவ விஷயத்துல மட்டும், என்னடா நாம இப்படி பெத்தவங்களுக்கும் கூடப் பொறந்தவங்களுக்கும் பாரமா இருக்கோமே, சீக்கிரம் எழுந்து நடக்கணும் அவங்க கஷ்டத்தைக் குறைக்கணும்னு இல்லை! வாய் மட்டும்தான் இருக்கு!” என்று அவனிடம் குறைபட, அதுவரை அவள் மேல் கோபம் கொண்டிருந்தவனுக்கோ, சாந்தி அவளை பாரம் என்று சொன்னதும் சங்கடமாய்ப் போனது.

    நீங்களே உங்கப் பொண்ணை பாரம்னு சொன்ன எப்படி?! அதுவும் அவங்க முன்னாடியே” என்றான் இறுக்கமான முகத்துடன்.

     “வேற என்ன தம்பி பண்றது?! எங்ககிட்ட என்ன பணமா கொட்டிக் கிடக்கு இவளுக்கு நிறைய செலவு பண்ணி வைத்தியம் பார்க்கவும், பராமரிக்கவும்?!” என, இவனுக்கு ஏன்தான் அங்கு வந்தோம் என்றானது.

    அவளது அம்மாதான் என்றாலும் அவளை அப்படிப் பேசுவதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை!

    அவரிடம் காட்ட முடியாத கோபத்தை மீண்டும் அவளிடமே திருப்பியவன்,

     “அவங்க சொல்றது காதுல விழுதுல்ல! இப்படியே கண்டதை எல்லாம் யோசிச்சிகிட்டு காலத்துக்கும் உட்கார்ந்துகிட்டே இருக்காம சீக்கிரம் எழுந்து நடக்குற வழியைப் பாரு!” என்று காந்தியவன்,

     “சீக்கிரம் உங்க பாரம் உங்களை விட்டுப் போயிடும் கவலைப் படாதீங்க!” என்றான் எரிச்சலைக் கட்டுப் படுத்தி.

     அவன் அப்படிப் பேசியதில் சாந்திக்கும் தான் பேசியது தவறு என்று புரிபட,

     “மன்னிச்சிடுங்க தம்பி! இந்தப் புள்ளை இப்படிக் கெடக்கேங்குற ஆதங்கத்துல அப்படிப் பேசிட்டேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க!” என்றார்.

     “ம்!” என்றவனிடம்,

     “நீங்களே இன்னும் கொஞ்ச நாளைக்கு வந்து பயிற்சி கொடுத்து எப்படியாச்சும் இந்தப் புள்ளைய நடக்க வச்சிட்டுப் போயிடுங்க தம்பி! உங்களுக்குப் புண்ணியமாப் போகும்!” என்று அவர் சட்டெனக் கைகளைக் கூப்பி வேண்ட,

     “ஐயோ என்னம்மா இது?! முதல்ல கையைக் கீழ இறக்குங்க! நான் நான் பார்த்துக்கறேன்!” என்றான் வாக்குறுதியாய்… அதைக் கேட்ட மையுவின் மனதோரம் மழைச்சாரல் வீசியது(சும்மா ஒரு ப்ளோக்காக எழுதினேன் யா. அவ மனசுல மழைச்சாரல்னா உடனே அவன் குடை பிடிப்பானான்னு கேட்டுட்டு வரக்கூடாது மக்காஸ்…)

           – மான்விழி மனம் கொய்வாள்…

 

 

                      

    

    

    

   

Advertisement