Advertisement

    புன்னகை ஏந்தி நின்றவனின் தயம் இசைத்த கானத்தில் அவள் கண்மூடி உலகம் மறக்க, அவனுமே அந்த நிசப்தமான சூழ்நிலையில் அவனது நெஞ்சோடு ஒட்டியிருந்த அம்மான்விழியின் இதய மொழிகளை உணரலானான்.

     இருவரின் இதயத்துடிப்பும் ஒருவரை ஒருவர் மாயக்கயற்றில் கட்டிபோட, அவனுமே அவளைக் கட்டிலில் கிடத்த மறந்து கைகளில் ஏந்தியபடியே நின்றான் அவள் இதயம் உரைத்த மொழி கேட்டு.

     அவன் தீண்டலின் ஸ்பரிசத்தையும் இதயத்தின் ஓசையையும் அணுஅணுவாய் ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு அவள் வாழ்வின் சாபமெல்லாம் நீங்கியதைப் போன்றதொரு பிரம்மை உண்டாக, கண்களைத் திறக்க மனமின்றி அந்த ஏகாந்த நொடிகளை தன் மனதின் ஏடுகளில் கவிதையாய் வடிக்கலானாள் கன்னியவள்.

     அவள் தன்னை நேசிக்கிறாள் என்று கவிதையில் எழுதியதற்கே அத்தனைக் கோபம் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தவன், இப்போது தான் மட்டும் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று புரிந்து கொள்ள இயலாமல் அவளை அணுஅணுவாய் ரசித்தபடி தன்வசமிழந்து நின்றான் அவளைத் தன் கைகளிலிருந்து கட்டிலில் கிடத்த மனமின்றி.

     இருவருமே அந்த சொர்க்க நொடிகளை இழக்க மனமின்றி மாயலோகத்தில் சஞ்சரித்திருக்க, அவள் வீட்டின் வெளியே எப்போதும் சுற்றித் திரியும் பூனைக்குட்டி ஒன்று திறந்திருந்த வீட்டினுள் நுழைந்து, ‘மியாவ்’ என்று குரல் கொடுக்க, இருவருமே தத்தம் நிலைக்கு திரும்பினர் பதற்றமாய்.

  ‘ஐயோ! என்ன பண்ணி இருக்கேன் நான்?!’ என்று தன்னைத் தானே வசைபாடிய படியே அவன் அவளைச் சட்டெனக் கட்டிலில் கிடத்திவிட்டு நகர,

      ‘கடவுளே! கடவுளே! என்ன பொண்ணு நான்?! கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இப்படி அவர் தொட்டவுடனே உருகிப் போய் அவர்மேல’ என்றவளால் அதற்கு மேல் தான் செய்த தவறை சொல்லிப் பார்க்கக் கூட மனம் ஒப்பாது அவனைப் பார்க்கவும் இயலாது வேறுபுறம் முகம் திருப்பிக் கொள்ள, அவனும் அவளை நேருக்கு நேர் சந்திக்க இயலாமல், எங்கோ பார்த்தபடி,

     “ம மன்னிச்சிடும்மா!” என,

     “ம மன்னிச்சிடுங்க!” என்றாள் ஒருசேர.

     அதன்பின்னும் சில நொடிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அவன் தன் வலது கையை இறுக மூடி தான் செய்த செயலை எண்ணி நூறு முறைக்கும் மேல் தன்னையே திட்டிக் கொண்டிருக்க, அவள் இந்நொடிவரை தன் முகத்தை அவன் புறம் திருப்பவே இல்லை!

     தான் ஏன் இப்படி செய்தோம், செய்கிறோம், என்று தன் மனதையே அலசியபடி குழப்பமாய் தவிப்புடன் நின்றிருந்தவன்,

     ‘ம்ஹும்! இனியும் இங்கயே இருந்தேன்னா அது சரியில்லை!’ என்று முடிவெடுத்து,

      “நா நான் வரேன்!” என்று சொல்லிவிட்டு வேகமாய் அங்கிருந்து வெளியேற, அவன் வாசல் விட்டு மறையும் நொடிக்குள் அவள் சட்டெனத் திரும்பி அவனைக் கண்களுக்குள் வாங்கிக் கொண்டாள் பேராசையுடன்.

     அவளிடமிருந்து வேகமாய் தொலைவே செல்ல வேண்டும் என்று காரை வெகுவேகமாய் செலுத்திக் கொண்டு மருத்துவமனைக்குத் திரும்பி இருந்தான் அவன்.

     ஆனால், அவளை விட்டுப் பல கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்த பின்னும் அவளின் இதயத்தின் ஓசையையும் அவளின் மான்விழி உரைத்த அன்பின் மொழிகளையும் அவனால் ஒரு நொடி கூட மறக்க முடியவில்லை!

     ‘ச்சே! இது என்ன இம்சை!’ என்று எண்ணியவன், சட்டென தனது அறையிலிருந்து வெளியேறி, தனது நோயாளிகளையாவது அட்டென்ட் செய்யலாம் என்று நோயாளிகள் அட்மிஷன் செய்யப் பட்டிருக்கும் முதல் தளத்திற்குச் செல்ல, அங்கு ராஜசேகரும், கிருஷ்ணனும் ரவுண்ட்ஸ் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்ததைக் கூட கவனியாமல் தந்தையை விஷ் செய்ய மறந்து அவர்களை கடந்து செல்ல,

     “என்ன ஆச்சு இவனுக்கு?!” என்பது போல் ராஜசேகர் கிருஷ்ணனைப் பார்க்க,

     “தெரியலைப்பா!” என்றான் புரியாமல்.

     “அவன் பேஷண்ட்ஸ் அட்டென்ட் பண்ணிட்டுக் கீழே வந்ததும் என்னை வந்துப் பார்க்கச் சொல்லு, என்றபடியே ராஜசேகர் செல்ல,

     “ஓகே ப்பா!” என்ற கிருஷ்ணனும்,

     ‘ஏன்னா ஆச்சு இந்தப் பையனுக்கு கொஞ்ச நாளாவே ஏதோபோல இருக்கான். திடீர்னு சந்தோஷமா இருக்கான் எல்லோரோடையும் நல்லா பேசிட்டு இருக்கான். திடீர்னு முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு ரூம்லேயே அடைஞ்சு கிடக்குறான்! இந்தக் கல்யாணம் நின்னு போனதுல இருந்தே இந்தப் பையன் சரியில்லை! சாயந்திரம் வீட்டுக்குப்போனதும் அவன்கிட்ட பேசியே ஆகணும்!’ என்று  எண்ணிக் கொண்டான்.

                          *******

     “என்ன மேடம் இப்போவெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல?!” என்று நக்கலாக கேட்ட பிரேமைப் பார்த்து, ப்ரியாவுமே,

     “இருக்காதா பின்னே! என் குடும்பமே என்னைப் புரிஞ்சு திரும்ப ஏத்துகிட்டாங்கல்ல! இனி என்கிட்டே யாரும் வாலாட்டா முடியாது இல்ல” என்றாள் சிரித்தபடியே அவனுக்கு வார்னிங் கொடுப்பது போல்.

     “அ! ஆமாம் ஆமாம்! அதான் வீட்லயே அடியாள் வச்சிருக்கீங்களே! எதுக்கெடுத்தாலும், முறைக்கவும், கைநீட்டவும்!” என்று பிரேம் மீண்டும் குத்தலாகச் சொல்ல,

     “தப்பு செய்யிறவங்கதானேங்க அடியாளைக் கண்டு பயப்படணும், நீங்க ஏன் அடியாளை எல்லாம் நினைச்சுக் கவலைப் படுறீங்க?!” என்று புரியாதது போல் கேட்க,

     “அ ஆமாம்! நான் ஏன் கவலைப் படணும்!” என்ற பிரேம்,

     “சரி சரி! எனக்கு ஹாஸ்பிடலுக்கு டைம் ஆகுது. லஞ்ச் கட்டியாச்சா?!” என்று பேச்சை திசை மாற்ற.

     “ஓ! எப்போவே ரெடி” என்ற ப்ரியா கூடவே,

     “இன்னிக்கு எனக்கு ஈவினிங் ஷிஃப்ட். நான் நைட் வர லேட் ஆகும். நைட் வந்து என்னைப் பிக்கப் பண்ணிக்கோங்க!” என்றாள்.

      “ஆமாம்! உன்னைக் கல்யாணம் கட்டியதுக்கு பைக்லேயே டிரைவர் வேலையும் சேர்த்து பார்க்கிறதுதான் மிச்சம்!” என்று சலித்துக் கொள்ள, ப்ரியாவிற்கு சட்டென ஏதோ போல் ஆனாலும், கொஞ்சமே நம்பிக்கைக் கொண்டவளாய்,

     ‘இப்போ இப்படிப் பேசினாலும் நைட் கண்டிப்பா வந்து கூட்டிடு வருவார்!’ என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.

     பிரேமிற்கு அவளால் கிடைக்கும் என எதிர்பார்த்து சொத்தும் சுகமும், மரியாதையும் கிடைக்காமல் போனாலும், அவளை வார்த்தைகளால் அவ்வப்போது இப்படிக் குத்துவதைத் தவிர, அவனது மனைவியாய் அவளுக்கு பெரிதாய் எந்தக் குறையும் வைக்கவில்லை! அதுவே அவள் இவன் உண்மையாகவே விரும்பிதான் கல்யாணம் பண்ணானா என்ற அவளின் சந்தேகத்திற்கு, முற்றுப் புள்ளி வைத்திருந்தது. ஆக மொத்தம், தங்கமலர் ராஜசேகர் அவர்களின் இளைய மருமகன் பிரேம் பேராசைக்காரனாய் இருந்தாலும், மூத்த மருமகன் சரத்தைப் போல் அவள் மனதை சித்ரவதை செய்பவனாய் இருக்கவில்லை! அதிலும் மித்ரனின் எச்சரிக்கைக்குப் பின் மொத்தமாய் பயந்துதான் போயிருந்தான். ஆனால் சரத்தான் இன்னமும் அடிபணியாமல் அவளது மனைவி குழந்தைகளைப் பற்றிய எண்ணம் இருந்தாலும் வீம்பாய் தங்களது வீட்டிலேயே அமர்ந்திருந்தான் மூன்று வேலையும் வீட்டில் சமைத்துப் போட அம்மா இருப்பதால்.

     சாருவின் வாட்டமான முகத்தையும் பிள்ளைகளின், ‘அப்பா எப்போம்மா ஊர்ல இருந்து வந்து நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவார்?!’ என்ற நச்சரிப்பையும் பார்த்து, அதற்கும் மித்ரன் ஒரு வழி செய்துவிட்டு வந்திருந்தான் சரத்தின் அம்மாவிடம் பேசி.

     ஆம், கவனித்துக் கொள்ள அம்மா வீட்டில் இருப்பதால், மனைவி பிள்ளைகளின் எண்ணம் வந்தாலும் வீம்பாய் அவர்களைச் சென்றுப் பார்க்காது இருந்தவன், சில நாட்கள் முன்பு அம்மாவும் ஏதோ காசி ராமேஸ்வரம் டூர் என்று சொல்லிக் கிளம்பி இருந்ததில் பெரிதும் தனிமையை உணர ஆரம்பித்திருந்தான். அதோடு, புதிதாய் இன்வெஸ்ட் செய்த பிசினசில் ஏற்பட்டிருந்த லாசில் ஏற்கனவே பணம் கையைக் கடிக்க, இப்போது ஏற்கனவே தான் நடத்தி வந்த ஐஸ்க்ரீம் பிசினலும் பணம் போட முடியாது தவித்துப் போயிருந்தவன், இப்போது வீட்டில் சமைத்துப் போடவும் கவனிக்கவும் கூட ஆள் இல்லாது போனதில் மிகவும் நொந்து போனான். அதிலும் அவன் சாப்பிடும் வகை வகையான உணவிற்கு ஹோட்டலுக்கு இருக்கும் பணப் பற்றாக் குறையில், ஆயிரக் கணக்கில் பணம் போவது அவனுக்கு பெரும் எரிச்சலை வரவழைத்தது.

     ‘இந்த அம்மா வேற இப்போதான டூர் போகணும்?!’ என்று சலித்து கொண்டவனுக்கு, மனைவி திருமணம் ஆன இத்தனை வருடத்தில், இந்த முறை தவிர ஒருநாளும் இதுவரை அவனை இப்படி கவனிக்காமல் விட்டு விட்டு சென்றதில்லை என்பதை உணர, மனம் மனைவியின் பாலும், குழந்தைகள் பாலும் சென்றது. ஆனாலும்,

     ‘ச்சே இத்தனை நாள் வீம்பா இருந்துட்டு, இப்போ எனக்குத் தேவைன்னு வரும்போது மட்டும் அவளைக் கூட்டிட்டு வர போகுறதா?!’ என்று தோன்ற,

     ‘பொண்டாட்டி பிள்ளைங்ககிட்ட என்ன வீம்பு வேண்டி இருக்கு?! மரியாதையா போய் அழைச்சிட்டு வாடா!’ என்று மனம் இடித்துரைக்க, அன்றே சாருவின் அம்மா வீட்டிற்குக் கிளம்பினான்…

                            -மான்விழி மனம் கொய்வாள்…        

               

Advertisement