Advertisement

      21

     தங்கமலர் எவ்வளவோ பெண் பார்த்தும், எந்த ஜாதகமும் மித்ரனின் ஜாதகத்தோடு பொருந்தாததால், அவனது திருமணம் கைகூடி வராமலே இருந்தது. அதோடு சாருவும் பிள்ளைகளோடு அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்து பத்து நாட்கள் ஆகி இருந்ததில் தங்கமலருக்கு சற்றே பயம் பிடித்துக் கொண்டது.

     அன்று இரவு, “என்னங்க, எனக்கு மனசே சரியில்லைங்க! நம்ம மூணு பிள்ளைங்க வாழ்க்கையும் ஏங்க இப்படி இருக்குது?! அப்படி என்ன நம்ம பாவம் பண்ணிட்டோம்னு அந்த ஆண்டவன் நம்மளை இப்படி சோதிக்குறான்?! ஒரு பக்கம் சாருவோட வீட்டுக்காரர் என்னன்னு கூட எட்டிப் பார்க்கலை! அங்க ப்ரியாவும்  கஷ்டப் படுறா! மித்ரனுக்கும் நல்ல பெண் அமைய மாட்டேங்குது!” என்று தங்கமலர் மிகுந்த கவலையோடு ராஜசேகரிடம் சொல்ல,

      “ப்ச் என்ன மலர் இது?! இதுக்கு போய் பாவம் அதுஇதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு? எத்தனையோ பேர் வாழ்க்கைல எவ்ளோ பிரச்சனைகள் இருக்கு தெரியுமா? நீ வீட்டுக்குள்ளயே இருந்து இருந்து சின்னச் சின்னப் பிரச்சனைகளைக் கூட பெருசா நினைச்சு மனசை வருத்திக்குற!”

     “ஒரு விஷயம் யோசிச்சுப் பாரு! இப்போவாவது நம்ம சரத் மாப்பிள்ளையைப் பத்தின விஷயம் தெரிஞ்சுதே! அப்படி இல்லைன்னா இன்னும் இன்னும் நம்மக் குடும்பத்துல எவ்ளோ பிரச்சனைகள் வந்திருக்குமோ? அவரோட விஷயத்தை மித்ரன் பார்த்துட்டுதான் இருக்கான். கூடிய சீக்கிரமே அவரே மனசு மாறி வந்து சாருவையும் பிள்ளைங்களையும் அழைச்சிட்டுப் போவார் பாரு. அதோடு ப்ரியாவோட வாழ்க்கையும் அப்படி ஒண்ணும் மோசமானதா அமைஞ்சிடலை! பிரேம் நம்ம ஹாஸ்பிட்டல்ல வேலை பார்த்தவங்கிறதுனால அவனைப் பத்தி எனக்கும் ஓரளவு தெரியும்! நீ பயப்படுற அளவுக்கு அவன் மோசமானவன் இல்லை! அவன் ப்ரியாவ நல்லா பாத்துப்பான். அவங்க வீட்டு ஆளுங்களும் கூட நல்ல மாதிரிதான் இருக்காங்க! அப்புறம் நம்ம மித்ரன். முதல்ல அவனுக்காக ஏற்பாடு பண்ண கல்யாணம் நின்னு போனதுல எனக்கும் வருத்தம்தான். ஆனா ஒரு மாசத்துக்குள்ளயே வேற நல்ல ஜாதகம் அமையலைன்னு எல்லாம் இப்படி வருத்தப்படுறது நியாயமா சொல்லு?!” என,

     “என்னவோ என்னை சமாதானப் படுத்தணும்னு இப்படி எல்லாம் பேசுறீங்க!” என்ற தங்கமலர்,

     “நீங்க சொல்லுற மாதிரியே என் மூணு பிள்ளைங்க வாழ்க்கையும் பழையபடி சந்தோஷமா மாறினா சரிதான்!” என்று மனதைத் தேற்றிக் கொள்ள,

     “கண்டிப்பா நல்லா அமையும்! உன் மனசு போலவே நம்ம மித்ரனுக்கு வரப் போற பொண்ணோட மனசும் தங்கமா அமையும் பாரு!” என்று மனைவியின் மனதை இலகுவாக்கி ராஜசேகர் சிரிக்க,

     “அப்படியே அமையட்டும்ங்க!” என்று உடன் புன்னகைத்தார் அவரின் ஆருயிர் மனைவியும்!

                          *****

     அடுத்த வந்த இரண்டு நாட்கள் அவன் நேரில் அவளுக்குப் பயிற்சி அளிக்கச் செல்லாமல்,

     “என்னால இரண்டு நாளைக்கு வர முடியாது! நீ ஒழுங்கா கால்களுக்கும் இடுப்புக்கும் நான் கொடுத்த பயிற்சியை செய்து பழகு. மூணாவது நாள் நடைபயிற்சி ஆரம்பிக்கணும். எப்போவும் போல இந்த ரெண்டு நாளும் நீ ஏமாத்தப் பார்த்தா, நஷ்டம் எனக்கில்லை!” என்று அவன் குறுஞ்செய்தியாய் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி இருக்க அவள் நொந்து போனாள்.

     ‘திடீர்னு என்னதான் ஆச்சு இந்த மனுஷனுக்கு?! நல்லாதானே இருந்தார்? ம்! நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா பொறுக்காதே இந்த ஆண்டவனுக்கு! வச்சுட்டான் ஆப்பு!’ என்று எண்ணிக் கொண்டவள், எப்போதும் போல் ஏமாற்ற நினைக்காமல், எங்கு இரண்டு நாட்கள் கழித்து அவன் வந்து அர்ச்சனை செய்ய ஆரம்பித்துவிடுவானோ என்ற பயத்திலேயே அவன் சொல்லிக் கொடுத்த பயிற்சிகளை அடிக்கடி செய்து பழக ஆரம்பித்தாள். அவளுக்கும் எப்போதடா தனியாக எழுந்து நடப்போம் என்று இருக்க, அவனது கண்டிப்பும் சேர்ந்து அவளை நன்றாகவே இயக்கியது.

     இரண்டு நாட்கள் கழித்து வந்தவன், அப்போதும் வீட்டில், அவளின் அம்மா, தங்கை, அப்பா, என்று யாருமே இல்லாதது கண்டு மேலும் எரிச்சலுற்றான்!

     ‘வயசுப் பொண்ணை எப்படித்தான் மத்தவங்களை நம்பி தனியா விட்டுட்டுப் போகுறாங்க! இவங்க எல்லோரும் இப்படி நடந்துக்கறதுனால தான்  அவ மனசு கண்டதை யோசிச்சு அலையுது!’ என்று புலம்பிக் கொண்டவன், மனதோடு வைக்காமல்,

     “உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு அறிவே இல்லையா? எப்போ பாரு உன்னைத் தனியா விட்டுட்டுக் கிளம்பிடறாங்க!” என்று வாய்விட்டே கேட்டுவிட,

     “என்ன சார் பண்றது? நாங்க உங்களை மாதிரி ஒண்ணும் பணக்காரங்க இல்லையே! என்னை மாதிரி ஒருத்திக்காக அவங்களும் வீட்லயே உட்கார்ந்துட்டா அப்புறம் சாப்பாட்டுக்கு என்ன பண்றது?!” என்று அவளும் அவன் மேல் இருந்த கடுப்பில் வெடுக்கென பதில் கொடுக்க அவள் உரைத்ததில் இருந்த உண்மை அவனைச் சுட்டது!

     “ம் சரி சரி! ரெண்டு நாளா ஒழுங்கா எக்சர்சைஸ் பண்ணியா? எழுந்து நில்லு நடக்க ஆரம்பிக்கணும்!” என்று அவன் அவள் முகத்தை ஏறெடுத்தும் பாராமல் கடமையே என்று சொல்ல, அவளுக்கு ஏனென்று தெரியவில்லை அழுகை வந்துவிடும் போல் இருந்தது!

     ‘திடீர்னு என்னதான் ஆச்சு இவருக்கு?! எதுக்கு என்கிட்டே இப்படி எரிஞ்சு விழணும்?! நான் என்ன தப்பு பண்ணேன்!’ என்று உள்ளுக்குள்ளேயே முனகியபடி ஆதங்கத்துடன் வேகமாய் எழுந்து நிற்க, பாலன்ஸ் இன்றி தடுமாறி இமைக்கும் நொடிக்குள் சட்டென சரிய, சற்று தள்ளி நின்றிருந்த அவன் சுதாரித்து வந்து அவளைத் தாங்குவதற்குள் அவள் தொப்பென கீழே விழுந்திருந்தாள் “அம்மா…!” என்ற அலறல் சத்தத்தோடு.

     “மானு!” என்று கதறலும், பதற்றமும் ஒருசேர அவள் அருகே ஓடிவந்து அவளைத் தாங்கியவன்,

     “ஏன்?! ஏம்மா இப்படிப் பண்ற?! கவனமா இருக்க மாட்டியா?!” என்ற வார்த்தைகளில் அவன் உள்ளத்தில் அவளுக்காய் அவனையறியாமல் அவள் பிடித்திருந்த இடத்தை தனக்கும் அவளுக்கும் ஒரேநேரத்தில் வெளிப்படுத்திவிட, ஒருத்தி விழுந்த வலி கூட தெரியாமல் மாயலோகத்தில் மிதக்கலானாள். ஆனால் அவனோ, ‘ஐயோ நான் ஏன் இப்படிப் பேசினேன்?!’ என்று குழப்பத்தில் தவிக்கலானான்.

     அவள் பார்வை அசைவின்றி அவனையே பார்த்தபடி,

     ‘இப்போ நீங்க கூப்பிட்ட வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?!’ என்று கேள்வியால் துளைப்பது போல் இருக்க, அவள் விழிகள் பார்க்க இயலாமல்,

     “எ எழுந்திரு” என்றான் தன்னை ஓரளவு சமாளித்துக் கொண்டு அவளில் இருந்து தன் கைகளை விலக்கி.

     அவன் செயலில் மீண்டும் மனம் நொந்து போனவள்,

     “ம்!” என்று சொல்லி அவனைப் பார்வையால் தொடர்ந்தபடியே, அந்த இரும்புக் கட்டிலின் ஓரத்தைப் பற்றிக் கொண்டு எழ முயன்றாள். ஆனால் அவளது பலவீனத்தினாலும் உடல் எடையினாலும் அவளால்  அசையக் கூட முடியவில்லை! எப்போதாவது அவள் இப்படி எழுந்து நடக்க முயற்சி செய்யும் போதெல்லாம் தவறி விழுவது உண்டு என்றாலும், வீட்டில் யாரேனும் இருந்தால் உடனே தூக்கி அமர்த்திவிடுவார்கள். ஒருவேளை வீட்டில் யாரும் இல்லாத சமயம் விழுந்து விட்டால் மிகவும் கடினம்தான். அவர்கள் வரும்வரை தரையிலேயே தான் கிடப்பாள் கதியற்ற பாவையாய்.

     ஆனால் இப்போது, தனக்கு மிகவும் பிடித்த ஒருவன் அருகில் இருந்தும் அவள் இப்படி சிரமப்பட்டு எழ முயற்சித்துக் கொண்டு இருப்பது எண்ணி, தகுதியை மீறி ஆசைப்பட்ட தன் மனதை நொந்து கொள்வதைத் தவிர அவளால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை!

      மைதீட்டப்பட்டிருந்த அவளின் கவர்ந்திழுக்கும் கண்கள் இப்பொழுது கண்ணீரில் கலங்கி அவனையும் கலங்கடித்தது. அவனுமே அவளை எழுந்து நிற்கச் சொல்லி விட்டாலும், அவள் இயலாமையைக் கண்டு சகிக்க முடியாது, தவித்துத்தான் போனான் நொடிகளில்.

     அவளின் முயற்சிகள் அவளுக்கு மேலும் மேலும் உடல் வலியை ஏற்படுத்தும் என்று உணர்ந்தவன், ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல், அவள்,

     ‘என்ன செய்கிறான் இவன்?!’ என்று யுகிப்பதற்குள் அவளின் இருகால் முட்டிகளின் பின்னே கைகொடுத்தவன், இடுப்பையும் கெட்டியாய்ப் பிடித்து சுற்றி வளைத்து அவளைத் தூக்க, அவள் படபடப்புடன் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

     அவன் தூக்கிய பதட்டத்தில் அவளின் மயிற்கால்கள் சிலிர்த்து இதயம் வேகமாய் துடிக்க ஆரம்பிக்க, பயத்திலும் பதட்டத்திலும் மேலும் அவன் மார்போடு அவள் ஒட்டிக் கொள்ள, அவனின் இதயத் துடிப்பு அவளுக்குத் துல்லியமாய்க் கேட்டது.

     பயத்தில் படபடக்கும் பட்டாம்பூச்சியாய் அவளின் இமைகள் துடிப்பதையும், கண்ணீரால் அவள் தீட்டியிருந்த அஞ்சனம் இஷிக்கொண்டு இருந்ததையும் பார்த்தவனுக்கு ஏதோ சிறு குழந்தையின் பாவனை அவள் முகத்தில் தோன்ற அவன் உதடுகள் தனையறியாமல் புன்னகை ஏந்திக் கொண்டது.

Advertisement