Advertisement

                                     20
 
     மைத்ரேயியின் பிறந்தநாள் முடிந்து ஒரு வாரம் கடந்திருக்க, மீண்டும் அவனது வருகையால் மையுவின் பயிற்சி நன்றாய் சென்று கொண்டிருந்தது. இப்போது அவளாகவே ஓரளவிற்கு கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்து தனியாக நிற்க ஆரம்பித்திருந்தாள். இன்னும் கால்களை ஊன்றி நடக்கத்தான் மிகவும் சிரமமாக இருந்தது.
     அவனது அக்கறையும் கண்டிப்புமான பயிற்சியில் அவளது உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறிக் கொண்டிருக்க, அவளது மனமும் அவள் பேச்சைக் கொஞ்சமும் கேட்காமல் அவனின் பால் சாய ஆரம்பித்திருந்தது தனது நிலையை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு. அன்பும், காதலும், ஈர்ப்பும் நேரம் காலம் பார்த்துக் கொண்டும், தகுதி பார்த்துக் கொண்டும் வருவதில்லையே!
     மித்ரனுமே மற்றவர்களிடம் போல் அல்லாமல் சற்று உரிமையும், அக்கறையும் எடுத்துதான் அவளிடம் பழகிக் கொண்டு இருந்தான். அது அவனது குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு அவள் காரணமாக இருந்ததாலா, இல்லை அக்காவின் தோழி என்பதாலா, இல்லை வேறு எதனாலோ என்றெல்லாம் அவனுக்கும் தெரியவில்லை! காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
     இதனிடையே சில நாட்களாய் அக்காவின் மாற்றம் எதையோ உணர்த்த, காயத்ரி வாய்திறந்து கேட்டேவிட்டாள் அன்று மாலை அவர்கள் அம்மா  வீட்டில் இல்லாத நேரம்.
     “என்னக்கா? இப்போல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்க! என்ன காரணம்?!” என்று கண்சிமிட்டிக் கேட்க,
     “தெரியலைடி! ஆனா ஏதோ சந்தோஷமா இருக்கு!” என்றாள் மையு.
     “இல்லை! ஏதோ இருக்கு!” என்ற காயத்ரி,
     “நான் நினைக்கிறன் உன்னோட இந்த சந்தோஷத்துக்கு எல்லாம் காரணம் அந்த டாக்டரா இருப்பாரோன்னு!” என்று அவள் சரியாய் கணித்துக் கேட்க,
     “ஹான்! டாக்டரா?! எந்த டாக்டர்?!” என்று மாட்டிக் கொண்டவளாய் விழித்தாள் மையு.
     “ஹான்! என்கிட்டயே நடிக்காதக்கா!” என்றவளைப் பார்த்து, சட்டெனக் கோபம் கொண்டவளாய்,
     “சீ என்னடி பேசுற?! என் உடல்நிலை இருக்குற இருப்புக்கு இதெல்லாம் தான் குறைச்சல்!” என்று திட்டிவிட காயத்ரியின் முகம் வாடிப் போனது. ஆனாலும் அக்காவின் மாற்றம் அவளுக்குத் தெரியாமல் இல்லை!
     இதெல்லாம் எங்கு போய் முடியுமோ என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், இந்த டாக்டர் அவ வாழ்கையில வந்த பிறகுதான் அக்கா முகத்துல தெளிவே வந்திருக்கு! அவர் மட்டும் காலம் பூரா என் அக்காவுக்குத் துணையா வந்துட்டா அவ வாழ்க்கை எவ்ளோ நல்லா இருக்கும் என்று தங்கையின் மனம் பேராசை கொள்ள, அங்கு தங்கமலரோ மகனுக்குத் தீவீரமாய் பெண் தேடும் படலத்தில் இறங்கி இருந்தார்.
     “இங்க பாருடா மித்ரா! அம்மா உனக்குத் தங்கசிலை மாதிரி ஒருத்தியை கொண்டு வந்து நிறுத்தறேன் பாரு! என் பொண்ணு கல்யாணத்தைத்தான் நான் ஆசைப் பட்ட மாதிரி நடத்த முடியலை! என் பையன் கல்யாணத்தை எப்படி ஜாம்ஜாம்னு நடத்திக் காட்டுறேன் பாரு” என்று தங்கமலர் சொல்லிக் கொண்டிருக்க, அவனோ,
     ‘சாயந்திரம் செய்ய வேண்டிய பயிற்சியை அவ ஒழுங்கா செய்திருப்பாளா?!’ என்று எண்ணியபடியே மெசேஜில் நினைத்ததைக் கேட்டும் வைத்தான்.
     “எஸ் சார்!” என்று ஒரு குழந்தை சல்யூட் அடிப்பது போன்ற பொம்மையை அவள் பதிலாய் அனுப்பி இருக்க, அதைப் பார்த்து மெல்லச் சிரித்துக் கொண்டே,
     “குட்” என்று அனுப்பி வைத்தான்.
     “டேய் மித்ரா நான் இங்க என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன போன்ல ஏதையோ நோண்டிட்டே இருக்க?!” என்று தங்கமலர் அவன் அருகே வந்து அமர,
     “ஒண்ணுமில்லைம்மா. அந்தப் பொண்ணு ஒழுங்கா எக்சர்சைஸ் பண்ணாளா இல்லையான்னு கேட்டு மெசேஜ் அனுப்பி இருந்தேன். அவளும் பதில் அனுப்பி இருந்தா அதான் பார்த்துட்டு இருந்தேன்!” என்றான்.
     “யார்றா?! நம்ம ப்ரியாவோட பிரெண்டுன்னு சொன்னியே அந்தப் பொண்ணா?” என தங்கமலர் கேட்க,
     “ஆமாம்மா! முன்னவிட இப்போ எவ்வளவோ பரவாயில்லை ம்மா! சொன்ன பேச்சை ஒழுங்கா கேட்குறா? ஆரம்பத்துல என்னமா ஏமாத்துவா தெரியுமா?” என்று அவன் மெல்லிய புன்னகையுடன் சொல்ல,
     “சரியான குறும்புக்காரியா இருப்பா போல!” என்றவர்,
     “சீக்கிரம் அந்தப் பொண்ணை நடக்க வச்சுடுடா! பாவம் வயசுப் பிள்ளை! அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டாம?!” என,
     “ம் ம்மா!” என்றான்.
     அன்று இரவு உறங்கும் சமயம், அவள் சில நாட்களாய் அனுப்புவது போல் அவனுக்கு குட் நைட் மெசேஜ் அனுப்பி இருக்க, இவனும் பதிலுக்கு குட்நைட் சொல்லிவிட்டு வாட்ஸ்அப்பிலிருந்து வெளியேறி, எப்போதும் போல் தனது தனிமையை இனிமையாக்க, அவனது கைப்பேசியில் ஏற்றியிருந்த பழைய பாடல்களில்,
     ‘நிலவும் மலரும் பாடுது
     என் நினைவில் தென்றல் வீசுது
     நிலை மயங்கி மயங்கி
     காதலினால் கானம் பாடுது…’ என்ற பாடலைத் தேர்ந்தேடுத்து ஓடவிட்டு அதனோடு சேர்ந்தே பாடியவன், இசையின் இனிமையில் மயங்க, அடுத்ததாய் வந்த அன்புள்ள மான்விழியே பாடல், அவனின் எண்ணத்தில் அவளைக் கொண்டு வந்து நிறுத்தியது என்றுமில்லாது புதிதாய்.
     ‘அன்புள்ள மான்விழியே…
     ஆசையில் ஓர் கடிதம்
     நான் எழுதுவதென்னவென்றால்
     உயிர் காதலில் ஓர் கவிதை’ என்று வரிகள் ஒலிக்க ஒலிக்க அவனின் நினைவடுக்களில் அவளின், மான்விழியும், பேச்சும், சிரிப்பும், கோபமும், வெட்கமும், அந்தக் கண்களில் எப்போதும் தேங்கி இருக்கும் ஏதோ ஒரு சோகம், ஏக்கம் என்று ஒவ்வொரு செய்கையும் வந்து போனது.
     ‘இதென்ன இப்போவெல்லாம் எப்போவும் அவ ஞாபகம் வருது?!’ என்று எண்ணியவன், பாடலை அணைத்துவிட்டு கண்மூட, மீண்டும் அதே பாடலும் அவளின் பிம்பமும் மனதில் தோன்ற,
     ‘இதென்னடா வம்பா போச்சு?!’ என்று சலித்துக் கொண்டவன், அவளின் எண்ணவோட்டத்தைத் தடுக்க எண்ணி, சமூக வலைத்தளங்களில் மனதைத் திருப்ப முகநூலுக்குள் செல்ல, அங்கு ஆரம்பமே பீப்பிள் யூ மே என்று முதலில் வந்து நின்றது அவளின் கண்கள் படத்தை டிபியாய் கொண்டிருந்த அந்த ஐடியே!
     ‘இதென்ன எங்க பார்த்தாலும் அவ கண்ணு மாதிரியே இருக்கு?!’ என்று சலித்துக் கொண்டவன்,
     ஒருவேளை அவ ஐடியா இருக்குமோ, என்ற உந்துதலில், அந்த ஐடியை கிளிக் செய்து அதன் டைம் லைனிற்குள் செல்ல அவள் போட்டிருந்த போஸ்ட்களைப் பார்த்ததும் கண்டு கொண்டான் அவளேதான் என்று.
     ‘பேரு வைச்சிருக்கா பாரு மைடப்பா மைதிலின்னு!’ என்று சொல்லியபடியே அவள் சில நாட்களாய் போட்டிருந்த லவ் ஸ்டேட்ஸ் பாடல்கள், காமெடி கிளிப்ஸ், மீம்ஸ், தாடி வைத்த அழகிய பையன்களின் டிக்டாக் வீடியோஸ் என்று அவளது ரசனைகளை சிரித்தபடியே பார்த்துக் கொண்டு வந்தவன்,  அடுத்ததாய் அவள் பதிவிட்டிருந்த அவளின் அழகான ஏக்கம் தோய்ந்த காதல் கவிதைகளையும் படிக்க நேர,
     ‘உன் பிம்பம் காணா நாட்களெல்லாம்
     என் கனவுகள் கூட சித்திரை மாத சூரியனாய்
     எனை சுட்டெரிக்கிறதடா!
     கனவிலேனும் வந்து
     கவிதை சொல்லிவிட்டுப் போயேன்
     என் கோடைக்காலங்கள்
     குளிர்காலமாய் மாறட்டும்! – மைடப்பா மைதிலி.
     என்ற கவிதையைத் தொடர்ந்து பல கவிதைகள் அவள் ஆழ்மனதின் ஏக்கத்தை உடைத்துக் கூறியிருக்க, அவன் நெஞ்சம் கனத்துப் போனது.
     ‘என் ஒருசிலரோட வாழ்க்கை மட்டும் இப்படி அமைஞ்சுடுது?!’ என்று வருந்தியபடியே அடுத்த கவிதையை வாசிக்கத் துவங்க,
     ‘உன் பெயரை எழுதும் போதெல்லாம்
     உன் பெயரோடு சேர்த்து பேனாவையும்
     இறுக அணைத்துக் கொள்கிறேன்
     என் நெஞ்சோடு!
     பெயரிலேனும் நீயும் நானும்
     சங்கமிப்போமே சங்கமித்ரனே!’ என்று அவள் அடுத்ததாய் எழுதி இருந்த கவிதையின் வரிகள் அவன் புத்திக்கு ஏதையோ உணர்த்த,
     ‘ஏதோ தவறாய் இருக்கிறதே?!’ என்று எண்ணியபடியே மேலும் ஸ்க்ரோல் செய்து கொண்டு வந்தவன் கண்ணில், ஆரம்பத்தில் அவன் பயிற்சி அளிக்கச் சென்ற புதிதில் அவள் அவனைக் கலாய்த்து போட்டிருந்த பதிவுகளும் கண்ணில் பட,
     ‘எவ்ளோ கொழுப்பு இவளுக்கு?! இவளுக்காக காலையிலேயே எல்லா வேலையையும் விட்டுட்டு பயிற்சி கொடுக்க ஓடினா, என்னமா காலாய்ச்சு போஸ்ட் போட்டிருக்கா?! இதுல அவ பிரெண்டுங்க வேற எப்படி கமென்ட் பண்ணி இருக்காங்க?!’ என்று கடுப்பானவன்,
     “இருபத்திநாலு மணிநேரமும் இங்கதான் குடித்தனம் பண்ணுறா போல! அதான் இன்னமும் எழுந்து நடக்க முடியலை! இங்க வெட்டியா சுத்துறதுக்கு பதில் ஒழுங்கா பயிற்சி பண்ணி இருந்தா இந்நேரத்துக்கு எழுந்து நடந்திருக்கலாம்!” என்று சொல்லிக் கொண்டவன்,
     “நாளையில இருந்து இருக்கு அவளுக்கு!” என்றபடியே போனை வைத்துவிட்டு படுத்தான். ஆனால் ஒருவிஷயம் மட்டும் அவனுக்கு விளங்கவில்லை!
     ‘இதென்ன? தினம்தினம் எவ்ளோவோ பேஷண்ட்ஸ் பார்க்கிறோம்! ஆனா அவங்ககிட்ட எல்லாம் இப்படியா கோபப்படுறோம்! இப்படியா தினமும் மெசேஜ் அனுப்பி கேட்டுக்கிட்டு இருக்கோம்!’ என்ற எண்ணமும் தோன்ற,
     ‘அவளும் இவங்களும் ஒன்னாடா மித்ரா?!’ என்று உள்ளம் கேள்வி கேட்க,
     “ஆமாம்!” என்றான் சட்டென.
     “இல்லவே இல்லை!” என்று மனம் உடனே மறுக்க,
     “ம்ஹும்! எல்லோரையும் போலதான் இவளும்! அவ என்னிக்கு எழுந்து நல்லா நடக்க ஆரம்பிக்கிறாளோ, அன்னிக்கே அவளுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை!” என்று தீர்த்து சொல்லிவிட்டு படுத்தவனால் ஏனோ மீண்டும் மீண்டும் மனக்கண்ணில் அவள் பிம்பம் மட்டுமே எழுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை எவ்வளவு முயற்சி செய்தும்! வெகு நேரம் புரண்டு புரண்டு படுத்தவன் நடுநிசி கடந்தும் நீண்ட நேரம் கழித்தே உறக்கத்தைத் தழுவினான் அவளின் மருண்ட மான்விழிகள் அவனுள் விழித்துக் கொண்டே இருந்ததனால்.
                        *****
     மறுநாள் எப்போதும் போல் அவள் அவனது வருகையை எதிர்பார்த்து ஆவலாய்க் காத்திருக்க, வந்தவனோ கடுகடுவென முகத்தை வைத்திருந்ததில் அவளால் சகஜமாய் பேச முடியவில்லை!
     “எ என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?!” என்று ஆரம்பித்தாள் மெதுவாய்.
     அவளது சார் கொஞ்ச நாட்களாய் காணாமல் போயிருந்ததன் காரணம் அவளது மனதில் தன்னைப் பற்றிய எண்ணம் வேறு போக்கில் போயிருப்பதே என்று அவனுக்கு அந்தக் கவிதையைப் படித்த பிறகே உரைத்திருக்க,
     “கால் மீ சார்!” என்றான் கடுமையாய்.
     “எ ஏன் என்ன ஆச்சு?!” என்று புரியாமல் கேட்க,
     “ஐ சைட் டு கால் மீ சார்!” என்றான் அழுத்தமும் கடுமையும் கூடிய குரலில்.
     “ஓ ஓகே! ஆனா ஏன் திடீர்னு?!” என்று அவள் கேட்டு முடிப்பதற்குள்,
     “ஷட்அப் அண்ட் டு யுவர் எக்சர்சைஸ் ப்ராபர்லி!” என்றான் அப்போதும் கடுமையாகவே.
     ‘இதோடா! இங்க்லீஷ்ல பேசினா பயந்துடுவோமா?!’ என்று சொல்லிக் கொண்டவள், சில நொடிகள் அமைதியாக பயிற்சி செய்துவிட்டு மீண்டும்,
     “இன்னிக்கு தங்கமலர் அம்மா என்ன டிஃபன் செய்தாங்க?!” என்றாள் அவனிடம் வேறு என்னப் பேச்சுக் கொடுப்பது என்று தெரியாமல்.
     “வாயை மூடிட்டு எக்சர்சைஸ் மட்டும் பண்றியா?!” என்றான் இப்போது கொஞ்சம் அமைதியாய்.
     “ம்! இன்னிக்கு என்னதான் ஆச்சு மிஸ்டர். குலோப்ஜாமூனுக்கு?!” என்று அவள் சிணுங்கலாய் உளறிவிட,
     “ஏய்! இன்னொரு முறை குலோப்ஜாமுன் அது இதுன்னு சொன்ன?! அவ்ளோதான். என்னை நினைச்சுக்கிட்டு இருக்க என்னைப் பத்தி?! நான் உனக்கு பிசியோதெரபிஸ்ட் மட்டும்தான்! கீப் தட் இன் யுவர் மைன்ட்! அண்ட் டோன்ட் ட்ரை டு க்ராஸ் யுவர் லிமிட் எனிமோர்!” என்றான் கண்டிப்பும், எரிச்சலுமாய்.
     அவனது இத்தனை எரிச்சலான வார்த்தைகள் இதுவரை அவன் பேசுவதை சாதரணமாக எடுத்துக் கொண்டிருந்த மையுவின் நெஞ்சையும் காயப்படுத்த, அவள் முகம் சுணங்கிப் போனது. கண்களில் லேசாய்த் துளிர்த்த கண்ணீரோடு,
     “ம்!” என்று தலையசைக்க, அவனுக்கு ஏதோ போல் ஆனது.
     ஏனோ அவளின் கண்ணீரைப் பார்க்கப் பிடிக்காதவனாய்,
     “சரி எனக்கு நேரமாகுது! நான் கிளம்பறேன். நீ உட்கார்ந்தபடியே இன்னும் மூணு நாளைக்கு கால்களுக்கு நல்லா பயிற்சி செய். அதுக்கு அப்புறம் நடக்குற பயிற்சியை ஆரம்பிக்கணும்!” என்றவன், சட்டென அங்கிருந்து வெளியேற, அவளுக்கு கண்ணீர் பொங்கியது.
     ‘ஏன் இவ்ளோ கோபமா பேசிட்டு போறார்? நான் என்ன பண்ணேன்?!’ என்று எண்ணியவளுக்கு, அவன் சற்று முன்பு,
     ‘நான் உனக்கு பிசியோதெரபிஸ்ட் மட்டும்தான்! கீப் தட் இன் யுவர் மைன்ட்! அன்ட் டோன்ட் ட்ரை டு க்ராஸ் யுவர் லிமிட் எனிமோர்!’ என்று சொன்னது நினைவு வர, தன் நிலை விளங்கியது.
     ‘ஆமாம்ல! அவர் எனக்கு பிசியோதெரப்ஸ்ட் மட்டும் தானே! நான் ஏன் அவர்மேல இவ்ளோ உரிமை எடுத்துக்கறேன்?!’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவளுக்கு நேற்று தங்கை சொல்லியதும் அந்நேரத்திற்கு நினைவு வர,
     ‘ம் அதுக்குள்ள அவ என்னவெல்லாம் யோசிச்சிட்டா?!’ என்று சொல்லிக் கொண்டவள்,
     ‘அவ மட்டுமா யோசிச்சா நீ யோசிக்கலை?!’ என்று மனம் கேள்வி எழுப்ப, அவளுக்கு தேள் கொட்டியது போன்றொரு உணர்வு!
                        *****
     “ஏன்டி கோவிலுக்கு வர சொன்ன?! வீட்டுக்கே வந்து பார்த்திருப்பேனே உன்னை” என்று கேட்டபடியே தங்கமலர் அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தை ப்ரியாவின்  நெற்றியில் இட,
     “அங்க வந்த ப்ரீயா பேச முடியாதும்மா! அதான் கோவிலுக்கு வர சொன்னேன்” என்றாள் பிரியா.
     “என்னடா ஏதாவது பிரச்சனையா என்ன?” என்று தங்கமலர் சற்றே பதற,
     “அச்சோ பயப்படுற அளவுக்கு எல்லாம் ஒண்ணும் இல்லைம்மா” என்றவள்,
     “எதுக்கு நீங்க கொடுத்த சீரை எல்லாம் வேண்டாம்னு சொன்னேன்னு கேட்டுக்கிட்டே இருந்தீங்களே அதுக்கு பதில் சொல்லத்தான் வரச் சொன்னேன்! அங்க வீட்ல போன்ல கூட ப்ரீயா பேச முடியலை!” என்றவள்,
     “பிரேம் என்னை மட்டும் விரும்பலைம்மா என்னோட சேர்த்து நம்ம வசதிக்கும் ஆசைப்பட்டிருக்கார்! எதுக்காக நகுலன் வேண்டாம்னு முடிவெடுத்தேனோ கடைசியில இந்த வீட்லயும் அதுதான் நடக்குது! ஆனா என்ன வித்தியாசம் இவர் என்னையும் விரும்பறார்!” என்று மகள் நிறுத்த,
     “என்னடி சொல்ற?! அப்புறம் எதுக்குடி சீர் வேண்டாம்னு சொன்ன?!” என்றார் தங்கமலர் கவலையுடன்.
     “இல்லைம்மா இப்போ நான் அந்த சீரை எல்லாம் வாங்கிக்கிட்டா மேலும் மேலும் அவர் எதிர்பார்த்துட்டேதான் இருப்பார்! அதனாலதான் வேண்டாம்னு சொன்னேன்! என்னிக்கு அவர் நான் மட்டும் போதும் என்னால வர பணம் வேண்டாம்னு நினைக்கிறாரோ அன்னிக்கு பார்த்துக்கலாம் ம்மா! அதுக்கு முன்னாடி நீங்க இதை செய்யறேன் அதை  செய்யிறேன்னு எதுவும் கொண்டு வராதீங்க!” என்று ப்ரியா கண்டிப்பாய் சொல்ல,
     “ஏன்டி சீருங்கிறது பிறந்த வீட்ல இருந்து எல்லா பொண்ணுக்கும் செய்யிறதுதானே?! அதை கூட ஏன் மறுக்குற?!” என்று தங்கமலர் சற்றே கோபமாய் கேட்க,
     “ம்மா! புரிஞ்சிக்கோங்க ம்மா! அவர் எனக்காக மட்டுமே என்னை நேசிக்கனும்னு நினைக்கறேன்!” என்று ப்ரியா புரிய வைக்க முனைய,
     “அடி போடி! இந்தக் காலத்துப் பிள்ளைங்க நீங்களா என்னென்னவோ நினைச்சுக்கிட்டு நீங்களா ஒரு முடிவெடுத்து நீங்களா வாழ்க்கையையும் அமைச்சுக்கிறீங்க!”
     “என்னவோ இந்த மித்ரன் பையனாவது என் பேச்சைக் கேட்டு நான் பார்க்குற பார்த்து வைக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிப்பானா இல்லை அவனும் இந்த மாதிரி எடாகுடமா யோசிச்சு முடிவேடுப்பானான்னு தெரியலை!” என்றார் சலிப்புடன்.
     “ம்மா! என்னம்மா?!” என்று ப்ரியா வருந்த,
     “வேற என்னடி?! எவ்ளோ ஆசை ஆசையா உங்க ரெண்டு பேர் கல்யாணத்தையும் பார்க்கணும்னு காத்துட்டு இருந்தேன்! ஆனா, நீ இப்படி பண்ணிட்ட! அவன் கல்யாணத்தையாவது கண்ணார ரசிக்கணும்னு நினைக்கிறேன்! ம் கடவுள் என்ன வச்சிருக்கானோ?!” என்று தங்கமலர் பெருமூச்சு விட,
     “என்னம்மா நீங்க இப்படி எல்லாம் யோசிக்கறீங்க?! தம்பி என்ன மாதிரி இல்லை! அவன் எதுவா இருந்தாலும் வெளிப்படையா உங்ககிட்ட சொல்லித்தான் முடிவெடுப்பான்! உங்க விருப்பத்தை மீறி அவன் எதுவும் செய்ய மாட்டான்! அதுல உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்!” என்று ப்ரியா சொல்ல, அந்நேரம் ஒரு குட்டிப் பெண் கோவில் மணியை எட்டி அடிக்க அந்த கணீரென்ற கோவில் மணியோசை மகனுக்கு நல்ல மருமகளே அமைவாள் என்ற நம்பிக்கையை தங்கமலருள் விதைத்தது…
                            -மான்விழி வருவாள்…
      
 
     
            
            

Advertisement