Advertisement

                                                                 38

     மித்ரனின் வீட்டில் தினம் தோறும் சந்தோஷம் கூடிக் கொண்டே இருக்க அந்த ஒரு மனதில் மட்டும் சந்தோஷத்தையும் மீறி அத்தனைக் கலக்கம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது!

     மித்ரன் அவளை எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியுமோ, அவ்வளவு அன்பையும், காதலையும், சந்தோஷத்தையும் மையுவிற்கு அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் வீட்டினரும் அவளை மருமகளாய் அல்லாது மகளாகவே பார்த்து கொண்டனர்.

     அவள் கர்ப்பம் உறுதியானதில் இருந்து அவள் கடந்து வந்த அந்த நாற்பது நாட்கள் அவள் வாழ்வின் எல்லையற்ற ஆனந்தம் நிறைந்த நாட்களாய் அவள் வாழ்விலும் மனத்திலும் பதிந்தன… ஆனால் சில வரங்கள் எல்லோர் வாழ்விலும் நிலையாய் இருப்பதில்லையே! அதுபோல் தான் அவர்கள் வாழ்விலும் அந்தச் சோதனைக் காலம் ஆரம்பமானது அவர்கள் வரமாய் நினைத்தத் தங்கள் குழந்தையின் உருவிலேயே.

     அன்று அவளுக்கு செக்கப் செய்வதற்காக, மருத்துவமனைக்கு மையுவும், மித்ரனும் கிளம்பிக் கொண்டிருக்க,

     “தம்பி நானும் கூட வரட்டுமா டா!” என்றார் தங்கமலர்.

     எதையோ யோசித்துக் கொண்டே நடந்து வந்த மித்ரன்,

     “ஹான் என்னமா?” என அவர் சொன்னது சரியாகக் கேட்காததால் திரும்பக் கேட்க,

     “என்னப்பா நீ இப்படி யோசிச்கிட்டே நடத்து வர, காரை ஒழுங்கா கவனமா ஓட்டு! மாசமா இருக்கப் பிள்ளைய கூட வச்சுட்டு இப்படியா கவனக் குறைவா இருப்ப?!” என்று மலர் கடிய,

     “ம்மா! அதெல்லாம் நான் அவளை பத்திரமா பார்த்துப்பேன் மா!” என்றவனுள் ஏதோ ஒரு தடுமாற்றம்.

     ‘இன்னிக்கு வெறும் ஸ்கேன் எடுக்கப் போறோம்னு தான் மானு நினைச்சுட்டு இருப்பா! ஆனா கண்டிப்பா டெஸ்ட் எடுக்கும் போது அவளுக்குத் தெரிஞ்சுதான் ஆகும்!’ என்று மீண்டும் அவன் யோசனையில் மூழ்க,

     “மித்ரா மித்ரா?!” என்று தங்கமலர் விளிக்க,

     “ஹா ஹான் ம்மா!” என்றவனைப் பார்த்து,

     “என்னப்பா ஏதாவது பிரச்சனையா?!” என்றார் அவன் மனதைப் படித்தவராய்.

     “நல்லா கேளுங்க அம்மா! நானும் காலையில இருந்து பார்க்கறேன். எதையோ யோசிச்சிக்கிட்டே இருக்காரு! கேட்டா ஒண்ணுமில்லைன்னு சொல்றாரு!” என்று மையுவும் சேர்ந்து கொள்ள,

     “ஒண்ணும் இல்லை ம்மா! எனக்கு வேற ஒரு டென்ஷன் அதான்!” என்றவனை தாய், மனைவி இருவருமே முறைத்துவிட்டு,

     “மத்த டென்ஷனை எல்லாம் என் பொண்ணு முன்னாடி கொண்டு வராத மித்ரா! அவ மாசமா இருக்க நேரத்துல அவ முன்னாடி நீயும் எப்போவும் சந்தோஷமா இருந்தாத்தான் அவளும் சந்தோஷமா இருப்பா” என்றார் மலர் கட்ட்டளையாய்.

     “ம் சரிம்மா நாங்க கிளம்பறோம்.” என்றவன், மனைவியுடன் சில நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்தான்.

     அங்கு ரோசி அவர்களுக்காய் காத்திருக்க, “என்ன மேன் இவ்ளோ லேட்டாவா வரது?!” என்று கடிந்து கொண்டாள்.   

     “ஏன் ஸ்கேன்தானே எடுக்கப் போறோம். அது எப்போ வேணாலும் எடுக்கலாம் தானே?!” என்றாள் மையு அவள் கேள்வி புரியாமல்.

     ரோசி, மித்ரனைப் பார்க்க, ‘எதுவும் சொல்லலை!’ என்பது போல் தலையசைத்தவனை,

     ‘நான்தான் சமாளிக்கணுமா?!’ என்று அவனை முறைத்துவிட்டு,

     “இல்லை இது வேற டெஸ்ட். பாப்பா ஹெல்தியா இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்க எடுக்க வேண்டிய டெஸ்ட்.” என்று சொல்ல,

     “அது என்ன டெஸ்ட் புதுசா?!” என்றாள் மையு புரியாமல்.

     “அது கருவோட டிஷ்யு எடுத்து டெஸ்ட் பண்ணனும்!” என்றதும்,

     “என்ன பாப்பாவோட டிஷ்யுவா?! அய்யய்யோ குழந்தைக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா?!” என்று மையு பதற, ரோசி, மித்ரன் இருவருமே ஒருவரை ஒருவர் கலக்கத்தோடு பார்த்துக் கொண்டனர்.

     “என்னங்க இது? எதுக்குங்க இந்த டெஸ்ட் எல்லாம்?! எல்லாருக்கும் இந்த டெஸ்ட் எல்லாமா எடுப்பாங்க” என்று மையு அவன்புறம் திரும்பி, கோபமும், கவலையுமாய் கேட்க,

     “மானும்மா இது ஒண்ணும் பயப்படுற மாதிரி டெஸ்ட் எல்லாம் இல்லை. ஜஸ்ட் இன்ஜெக்ஷன் போடுற மாதிரி தான்” என்றதும், அவள் கண்களில் நீர் துளிர்த்துவிட,

     “என்னங்க இது?! வயத்துக்குள்ள இருக்க பாப்பாக்கு இன்ஜெக்ஷன் போடுற மாதிரி வலிக்குமா?!” என்றவளுக்கு கண்களே கலங்கிவிட, ரோசிக்கே இப்போது மித்ரனின் கவலை புரிந்தது.

     ‘ஓ மை காட்! என்ன இவங்க இவ்ளோ சென்சிடிவா இருக்காங்க!’ என்று எண்ணிக் கொண்டவள்,

     “ஓ பேபி! இதுக்கெல்லாம் பயந்து கண்கலங்கினா எப்படி?! இது ஜஸ்ட் டெஸ்ட்தான்! பாப்பாவுக்கு இதனால எந்தக் கஷ்டமும் வராது. சொல்லப் போனா இந்த டெஸ்ட் ரிசல்ட்ஸ்ல ஏதாவது பிரச்சனை இருந்தா இன்னும் ஹெல்தியான மெடிசென்ஸ் எல்லாம் உங்க மூலமாவே பாப்பாக்கு கொடுத்து அவங்களை ஆரோக்கியமா ஆக்கிடலாம்!” என்று ஏதேதோ வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிச் சமாளித்த ரோசி, ஒருவழியாய் போராடி அவளைப் பரிசோதனைக்கு சம்மதிக்க வைத்தாள்.

     சில மணிநேரத்தில் அனைத்து டெஸ்ட்களும் முடித்து வீடு திரும்பிய பின்னும்,

     “என்னங்க எங்க இப்படிப் பண்ணீங்க? என்கிட்டே ஒருவார்த்தைக் கூட சொல்லாம எல்லா டெஸ்ட்டுக்கும் அரேஞ் பண்ணி இருக்கீங்க!” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவனைப் படுத்தி எடுத்து விட்டாள் மையு.

     “டெஸ்ட்தானே மானும்மா நம்ம பாப்பா நல்லா இருக்கத்தானே எல்லாம் செய்தேன்!” என்று அவனும் மீண்டும் மீண்டும் சொல்லி சமாதானப் படுத்தியும், அவள்,

     “இருந்தாலும், என் பட்டுக் குட்டிக்கு இந்த அம்மா எந்தக் கஷ்டமும் வரக் கூடாதுன்னு நினைப்பால்ல!” என்று அவள் சொல்லும் போது, அவன் கண்கள் கலங்கியே விட்டது தன்னை மீறி.

     ‘டெஸ்ட் எடுத்ததுக்கே இவ இப்படிக் கலங்குறாளே, அந்த டெஸ்ட் எதுக்காக எடுத்தோம்னு தெரிஞ்சா?! கடவுளே, என் குழந்தைக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கக் கூடாது! எந்தப் பிரச்சனையும் இருக்கக் கூடாது!!’ என்று ஒவ்வொரு நொடியும் அடித்துக் கொண்டது அவன் மனம்.

     வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு அவனின் மாற்றம் தெரியவில்லை என்றாலும், பெற்ற தாய்க்கும், கட்டிய மனைவிக்கும் அவனின் மாற்றம் ஏதோ ஒரு பூகம்பத்திற்கான அறிகுறியாகவே தோன்ற, ஒரு பக்கம் மலரும், ஒருபக்கம் மையுவும் அவனைக் கேள்விமேல் கேள்வி கேட்டுப் பாடாய்ப் படுத்தி எடுத்து விட்டனர்.

     அவனும் எவ்வளவோ முயன்று கலகலப்பாய் இருப்பது போல் காட்டிக் கொண்டான்தான்! ஆனாலும் மனதின் கலக்கம் அவனை மீறி அவனது முகத்தில் தெரியத்தான் செய்தது.

     ‘நாளைக்கு பத்து மணிக்குல்லாம் ரிசல்ட் வந்துவிடும்’ என்று ரோசி சொல்லியிருக்க,

     ‘இந்த நாள் இப்படியே முடியாமலே இருந்துடக் கூடாதா!’ என்று எண்ணினான் பிள்ளைக்குத் தந்தையாய் மட்டுமே!

     “ப்ச்! என்னங்க நீங்க இப்போவெல்லாம் என்கிட்டே சரியாவே பேசுறது இல்லை! எப்போ பாரு எதையோ யோசிச்சிகிட்டு, இல்லாட்டி போனைக் கையில வச்சுட்டு பார்த்துட்டே இருக்கீங்க!” என்று மையு குறைபட,

     “அதெல்லாம் ஒண்ணும் இல்லடா மானும்மா! சொல்லுங்க, என் மானும்மாக்கு என்கிட்டே என்ன சொல்லணும்! சொல்லுங்க நான் கேட்கறேன்” என்று அவன் அவள் அருகே வந்து அமர, அவள் எப்போதும் போல் அவள் கருவுற்றது முதல் அவள் பிள்ளையைப் பற்றிக் கண்டு கொண்டிருக்கும் கனவுகளையே சொல்ல, அவன் மேலும் சோர்ந்து போனான்.

     “மானும்மா ப்ளீஸ்! வேற எதுவுமே பேச இல்லையா உனக்கு?!” என்று அவன் இருந்த மனவருத்தத்தில் வாய்திறந்தே சொல்லிவிட,

     “எ என்னங்க?! நம்ம பாப்பாவப் பத்திப் பேசுனா இப்படிக் கோபப் படுறீங்க!” என்று அவள் முகம் மாறிவிட, அவன் தான் செய்த முட்டாள்தனத்தை எண்ணி நொந்து போனான். அவன் முகம் பார்த்த மையு,

     “ஏன் என் குழந்தையும், நானும் உங்களுக்கு அதுக்குள்ள சலிச்சிட்டோமா?!” என்று வெடுக்கென என்ன கேட்கிறோம் என்று யோசிக்காமல் ஒரு வேகத்தில் கேட்டவளைப் பார்த்துக் கோபம் கூட வரவில்லை அவனுக்கு! மாறாய், மனைவியை தன்னோடு இறுகக் கட்டிக் கொண்டவன், எதுவுமே பேசாமல் அமைதியாய் அவள் முதுகை வருடிக் கொடுக்க, அப்போது தான் அவளுக்கு ஏதோ மனதில் நெருடியது.

     ‘இ இவர் நான் கன்சீவ் ஆனதுல இருந்தே சந்தோஷமா இருக்குற மாதிரி இருந்தாலும், அப்பப்போ எதையோ யோசிச்சிட்டே இருந்தாருல்ல?! அதுவும் அ அன்னிக்கு அந்த டெஸ்ட்! அது, அந்த டெஸ்ட் எதுக்காக எடுத்தாங்க?!’ என்று யோசித்தவளுக்கு ஏதோ புரிய ஆரம்பிக்க,

     “எ எதுக்கு அந்த டெஸ்ட் எடுத்தீங்க?” என்றாள் உள்ளே போன குரலில்.

     அவனிடம் பதில் இல்லாது போக, அவனை மெல்ல தன்னிலிருந்து விலக்கியவள்,

     ‘எதுக்கு அந்த டெஸ்ட் எடுத்தீங்க?!” என்றாள் சற்றே குரல் உயர்த்தி.

     அப்போதும் அவனிடம் மௌனமே குடி கொள்ள, “அ அப்போ, எ என் குழந்தையும் என்ன மாதிரியே இருக்கும்னு நினைச்சீங்களா?!” என்றாள் உணர்வுகள் தொலைத்த குரலில்.

     “இ இல்லை மானும்மா! அப்படியில்லை! அ ஆனா” என்று அவன் திணற,

     “ஆனா ஆனா என்ன?!” என்று அவள் அவன் முகத்தையே உற்று நோக்க, அவன் பதில் சொல்ல இயலாது தலைகுனிந்தான்.

     “ஆனா என்னன்னு கேட்கறேன் இல்ல?!” என்று அவள் அவனைப் பிடித்து உலுக்க, அதற்கு மேல் அவளிடம் மறைப்பது முடியாத காரியம் என்று உணர்ந்தவன்,

     அவர்களுக்குத் திருமணமான மறுநாள் அவளை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர் கூறியதைச் சொல்லத் துவங்கினான்.

     “ந நமக்கு குழந்தைப் பிறக்குறதுக்கு வாய்ப்புகள் கம்மின்னும் அப்படியே பிறந்தாலும், அது மஸ்குளார் டிஸ்ட்ராபி நோயினால பாதிக்கப்பட அதிகபட்சம் வாய்ப்பிருக்கும்னும் டாக்டர் சொன்னார். அ அதை, நீ கன்சீவ் ஆன பிறகு ரோ ரோசிகிட்ட சொன்னேன்! அ அவதான், அதுக்கு சில டெஸ்ட் இருக்கு அதை எடுத்துப் பார்த்தா குழந்தைக்கு அந்த நோய் வர வாய்ப்பிருக்கா இல்லையான்னு தெரிஞ்சிடும்னு சொன்னா. அ அதான் அன்னிக்கு டெஸ்ட்” என்று அவன் முழுதாய்ச் சொல்ல முடியாமல் நிறுத்த,

     “ஓ!?!” என்றவள் இதயம் இத்தனை நாள் இன்பமாய் துடித்த துடிப்பை எல்லாம் ஒருநொடியில் நிறுத்திக் கொண்டு தாளம் தப்பித் துடித்தது போல் ஆயிற்று!

     “அ அப்போ டெஸ்ட்ல என் நோய் என் குழந்தைக்கும் இருந்தா?! அதைக் கொன்னுடுவீங்களா?!” என்றாள் வெறுமையான குரலில்.

     “அ அப்படி எல்லாம் சொல்லாத மானும்மா!” என்று அவளை மீண்டும் தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டவன்,

     “ந நம்மக் குழந்தை, நம்மக் குழந்தை, நல்ல, நல்ல ஆரோக்கியமா பிறப்பா” என்றான் தனக்குத் தானே சமாதானப் படுத்திக் கொண்டு மனைவியையும் சமாதானப் படுத்தும் விதமாய்.

     அவனது தடுமாற்றம் அவளுள் சொல்லொணா கலக்கத்தைத் தோற்றுவிக்க,

     “ஒ ஒருவேளை ஆரோக்கியமா இல்லைன்னா?!” என்று அவள் மீண்டும் தொண்டைக் கமறக் கேட்க,

     “அப்படி எல்லாம் இருக்காதும்மா! அவ அவ ரொம்ப நல்லா இருப்பா! ரொம்ப ஆரோக்கியமா இருப்பா!” என்றான் இப்போது உறுதியாய்.

     அவனின் உறுதி, அவளுள் சிறு நம்பிக்கையை விதைத்தாலும்,

     “நிஜம்மா நல்லா இருப்பா இல்லைங்க?!” என்றாள் சந்தேகமும் நம்பிக்கையும் ஒருசேர.

     “கண்டிப்பா, கண்டிப்பா நல்லா இருப்பாடா!” என்றவன், மனைவியை மெல்லத் தன் தோள் மீது சாய்த்துக் கொண்டு, அவள் தலையை ஆதரவாய் வருடி விட, அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

     இதுவரை கணவனின் மீதிருந்த கோபம் போய், மனதில் பயம் கவ்வ,

     “ஈஸ்வரா! போதும் போதும் நீ இதுவரைக்கும் கொடுத்த கஷ்டமெல்லாம்! இனி இனியும் என்னால எந்தக் கஷ்டத்தையும் ஏத்துக்க முடியாது! என், என் குழந்தை என்னை மாதிரிப் பிறக்கக் கூடாது என்னை மாதிரி பிறக்கவே கூடாது!” என்று கண்களில் கண்ணீரோடு அவள் இறைவனிடம் மன்றாட, அவளின் வேண்டுதலை இறைவன் ஏற்பானோ?!

      அவளின் முனகல் அவனுக்கும் கேட்க, தாய்பறவை தன் குஞ்சுகளைத் தன் சிறகிற்குள் வைத்துக் காப்பது போல், தன் கைகள் எனும் சிறகுகளால் அவளை மேலும் இறுகப் பற்றிக் கொண்டான் வார்த்தைகளால் அவளுக்கு ஆறுதல் கூறவியலாமல்…

     “மித்ரா, மையு எண்ணப் பண்றீங்க ரெண்டு பேரும் சாப்பிடக் கூட வராம?!” என்று மலர் அவர்கள் அறைக் கதவைத் தட்டி அழைத்த போதுதான் இருவருமே தங்கள் கலக்கத்தில் இருந்து மீண்டனர். சட்டென சுதாரித்த மித்ரன்,

     “ஹான் இதோ வரோம் ம்மா” என்று உள்ளிருந்தே குரல் கொடுத்துவிட்டு,

     “முகம் கழுவிட்டுப் போலாம் மானும்மா! அம்மா நம்ம முகத்தைப் பார்த்தாலே ஏதோ சரியில்லைன்னு கண்டுபிடிச்சிடுவாங்க!” என்று சொல்லி, தான் முகம் கழுவிக் கொண்டு வந்ததோடு அல்லாமல், மனைவிக்கும் முகம் கழுவித் துடைத்துவிட, அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்த மையு,

     “ந நான் உங்க வாழ்கையில சந்தோசத்தை மட்டும் தான்ங்க கொடுக்கணும்னு விரும்பி உங்க வாழ்க்கையில வந்தேன்! சந்தோஷத்தை மட்டும்தான் கொடுப்பேன்ங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு!” என,

     “நிச்சயமாடா! என் மானும்மாதான் என் வாழ்க்கையோட சந்தோஷமே. நீ இருக்கும் போது என் சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல். ம்!” என்று அவள் தலை வருடி அவள் நெற்றியில் முத்தமிட்டவன், அவளை மெல்ல டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்று உணவு மேஜையின் அருகே இருந்த நாற்காலியில் அமர வைக்க,

     “என்னடா என்னடா ஆச்சு மையுவுக்கு?!” என்று அவளைப் பார்த்ததுமே கண்டுபிடித்து விட்ட மலர் அவள் அருகே வந்து நெற்றியில் தொட்டுப் பார்க்க,

     “ஒண்ணுமில்லைம்மா கொஞ்சம் டையர்டா இருக்கா! தூங்கி எழுந்தா சரியாகிடுவா!” என்று சமாளித்தான் மித்ரன்.

      “என்னடாம்மா பண்ணுது?!” என்று மலர் கவலையுடன் வினவ,

     “ஒண்ணுமில்லை ம்மா! அவர் சொன்ன மாதிரி கொஞ்சம் சோர்வு அவ்வளவுதான்” என்றாள் மையுவும்.

     “சரி சரிடா. முதல்ல சாப்பிட்டுப் போய்ப் படுத்து ரெஸ்ட் எடு! இதை முன்னாடியே சொல்லி இருந்தா ரூமுக்கே சாப்பாடு கொண்டு வந்து இருப்பேன்ல்ல!” என்று மலர் அவள் மேல் காட்டிய அக்கறையில் அவள் மனம் மேலும் கலங்கிப் போனது.

     ‘ஐயோ கடவுளே, என் மித்துவுக்கும், என் அத்தைக்கும் நான் எந்த விதத்துலயும் ஏமாற்றத்தைக் கொடுத்துத்திடக் கூடாது!’ என்று மனதோடு மறுகினாள் கவலையில்.

     சாப்பிட்டு முடித்து அறைக்குள் சென்ற பின்பும் மையு எதுவும் பேசாமல் அமைதியாகவே எதையோ யோசித்துக் கொண்டிருக்க,

     “எல்லாம் நல்லதாவே நடக்கும் மானும்மா! படுத்துத் தூங்குடா” என்று அவளைப் படுக்க வைத்தவன், மெல்ல அவள் தலையை வருடிக் கொடுத்தபடியே மார்பில் தட்டிக் கொடுக்க, அவனின் அரவணைப்பில் அவள் கண்கள் தானாச் செருகியது.

     ஆனால் மையுவின் தடுமாற்றத்தில், மித்ரனுக்கு பிள்ளையைப் பற்றியக் கவலையோடு மனைவியைப் பற்றிய கவலையும் பன்மடங்குக் கூடிவிட, அன்றைய இரவு மித்ரனுக்கு சிறிதும் உறக்கமின்றிப் பரிதவிப்போடும், பயத்தோடும் கழிந்தது மறுநாளைய விடியல் நல்விடியலாய் இருக்க வேண்டுமென்ற தவத்தோடு.

     ஆனால் காலை பத்து மணிக்கே பரிசோதனை முடிவுகள் வந்துவிடும் என்று சொன்ன ரோசியின் அழைப்பு மட்டும் அவனுக்கு வரவே இல்லை மதியம் மணி பன்னிரண்டைக் கடந்த பின்னும்…

                            -மான்விழி வருவாள்…

 

     

 

 

    

  

    

 

 

 

 

 

           

Advertisement