Advertisement

      ‘ச்சே! அவர் ஜஸ்ட் பிசியோ தெரபிஸ்ட்! எனக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வந்திருக்கார்! நான் ஓரளவுக்கு நடக்க ஆரம்பிச்சதும் அவர் வேலையைப் பார்த்துட்டுப் போயிடுவார்! அதுக்கு போய் இந்த மனசு எதை எதையெல்லாமோ யோசிக்குதே!’ என்று தன் மனதையே அவள் திட்டிக் கொள்ள,
     ‘ஆனாலும் அந்த குலோப்ஜாமூன் வந்துட்டுப் போகும்போதெல்லாம் உன் மனசுக்கும் உடம்புக்கும் ஒரு புது எனர்ஜி அதான் சார்ஜ் ஏறத்தானே செய்யுது!’ என்று மீண்டும் மனம் வம்பிழுக்க,
     ‘இதென்னடா வம்பா போச்சு! நான் இருக்க இருப்புக்கு இது ஒண்ணுதான் குறைச்சல்! இருக்குற வரைக்கும் தின்னோமா தூங்குனோமா ஓரளவுக்கு நடந்தோமான்னு போய்க்கிட்டே இரு அதைவிட்டுட்டு கண்டதையும் கிளறிவிட்ட பிச்சுப்புடுவேன் பிச்சு!’ என்று மனத்தைக் கடிவாளம் இட்டு அடக்கியவள், வீட்டில் நீண்ட காலங்களுக்குப் பின் கிடைத்த சந்தோஷத்தை அனுபவிக்க ஆரம்பித்தாள்…
                            *****
     பிரேம் கடைக்குச் சென்று திரும்பியதும், “இருங்கம்மா போய் தட்டுங்க கொண்டு வரேன் வச்சுக் கொடுக்க” என்று பிரியா எழ,
     “ஒரு நிமிஷம் இரும்மா!” என்று அவள் கையைப் பிடித்தவர்,
     “மாப்ளை ப்ரியா பக்கத்துல வந்து நில்லுங்க. ரெண்டு பேரும் சேர்ந்து இதை வாங்கிக்கோங்க!” என்று  ப்ரியாவிற்காய் பார்த்து பார்த்து வாங்கி வைத்திருந்த நகைகள் மற்றும் பட்டுப்புடவைகளோடு, கிளம்பும் சமயம் ப்ரேமிற்காய் வாங்கி வந்திருந்த செயின், பிரேஸ்லெட், வாட்ச், மோதிரம் விலை உயர்ந்த உடைகள் என்று அனைத்தையும் தாம்பூலத்தட்டில் வைத்து அவர் நீட்ட, பிரேம் முகம் முழுக்கப் பிரகாசத்துடன் சீரை வாங்கலாம் என்ற எண்ணத்தோடு ப்ரியாவைப் பார்க்க, ப்ரியாவோ தட்டை வாங்குவதற்காய் கையை நீட்டாமல் அமைதியாய் நின்றாள்.
     அவளின் செயலில் அனைவரும் என்னவோ ஏதோவென்று புரியாமல் பார்க்க, பிரேமிற்கு வயிற்றைக் கலக்கியது!
     ‘அய்யய்யோ! ஏதோ ஆப்பு வைக்கப் போறா! வர ஸ்ரீதேவியை வேணாம்னு சொல்லிடுவா போல இருக்கே!’ என்று கலக்கத்துடன் பார்க்க,
      “இல்லைம்மா! எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம்! தம்பி சொல்லி இருப்பானே ம்மா, என்ன காரணத்துக்காக நான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்னு! அப்படி இருக்கும் போது அதையே நீங்க திரும்ப கொண்டு வந்து கொடுத்தா எப்படிம்மா?!” என்றாள் ப்ரியா.
     “சொன்னான்! அதுக்கும் சேர்த்து உன்னை திட்டிட்டும் போலாம்னுதான் வந்தேன்! இப்போ நீயே ஆரம்பிச்சு வைச்சுட்ட!” என்ற தங்கமலர்,
     “ஏன்டி நாங்க உனக்கு சீர் செய்யிறதுல அப்படி என்னடி கஷ்டம் உனக்கு?! அப்போ நீ எங்களை உன் அப்பா அம்மாவா நினைக்கவே இல்லை?! அப்படிதானே?!” என்று தங்கமலர் கோபமாய் கேட்க,
     “ஐயோ அம்மா! அது அப்படியில்லம்மா” என்ற ப்ரியாவை பேசவே விடாமல்,
     “போதும்டி! இதுதான், இதுதான் உன்கிட்ட எனக்குப் பிடிக்காத விஷயம். கீர்த்தியைப் பாரு. அவளுக்கு என்ன வேணுமோ அவளே கேட்டு கேட்டு வாங்கிக்குவா. ஆனா ஒருநாளாச்சும் நீ அப்படிக் கேட்டு வாங்கி இருக்கியா?! நாங்களா வாங்கிக் கொடுத்தாதான் உண்டு. அப்படி என்ன தயக்கம் உனக்கு எங்ககிட்ட? ம்?” என்று தங்கமலர் கோபமும் உரிமையும் போட்டியிடக் கேட்டதில், சில நொடிகள் ப்ரியாவிற்குமே என்ன சொல்வதேன்றுத் தெரியவில்லை! ஏனெனில் ஒருநாளும் அவர்கள் அவளை இன்னொருவரின் பிள்ளையாய் அவளை நடத்தவில்லையே!
     “ம்மா!” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரை நேருக்குநேர் சந்தித்தவள்,
     “ம்மா! நானும் சரி நீங்களும் சரி! என்னிக்குமே நமக்குள்ள இருக்க பந்தத்தை பிரிச்சுப் பார்த்ததே இல்லை! ஆனா மத்தவங்க, மத்தவங்க என்னிக்காச்சும் அப்படி சொல்லி இருக்கங்களாம்மா?! அவங்க எல்லோரும் நான் சின்ன வயசுல இருக்கும் போது அப்படி சொன்னது எனக்கு பெருசா தெரியலை! ஆனா வளர வளர அதனாலயே எனக்குள்ளயே என்னையும் அறியாம ஒரு தயக்கம் வந்துடுச்சு! தப்புதான்! அதுக்காக நீங்க செய்த எதையும் நான் ஏத்துக்கலயா என்ன? சொல்லுங்க! ஆனா இந்தக் கல்யாண விசயத்துல ஏதோ ஒரு குறை அன்னிக்கு நிச்ச்யதார்த்துல அந்த நகை விஷயம் தெரிஞ்சதுல இருந்தே! நகைக்காக பேரம் பேசுற ஒரு வீட்ல போய் நான் நல்லா வாழ முயடியும்னு எனக்குத் தோணலை! அந்த நினைப்பே என்னை இப்படி ஒரு முடிவை எடுக்க வச்சுடுச்சு! ஆனா இப்போ மறுபடியும் நீங்க நகையைக் கொண்டு வந்துக் கொடுக்கறீங்க! பிரேம் அம்மா நகுலன் அம்மா மாதிரி கிடையாதும்மா! அத்தை என் குணத்தைதான் பெருசா மதிக்கிறாங்க! அதேபோலதான் அவரும் மாமாவும்!” என்று பிரேமை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அவனது முகம் போன போக்கினை ரசித்துக் கொண்டே சொன்னவள்,
     “அவர் சொல்லி இருக்கார்ம்மா! அவர் என்னை எனக்காக மட்டுமே தான் நேசிக்கிறேன்னு! இப்போ நீங்க இதையெல்லாம் கொடுத்தா அவரோட மனசு எவ்ளோ கஷ்டப் படும்! அவரோட அன்புக்கு முன்னாடி இந்த நகையெல்லாம் எனக்கு பெரிய விஷயமே இல்லைம்மா! கூடிய சீக்கிரம் அவரே சம்பாதிச்சு எனக்கு கொஞ்சமா நகை வாங்கிப் போட்டாலும் அதுதான் ம்மா எனக்குப் பெரிய சந்தோஷம்! அதுக்காக நீங்க கொடுக்குற சீரை நான் ஏத்துக்கலைன்னு நீங்க வருத்தப் பட வேண்டாம்! உங்க ஆசைக்காக இதோ, இந்த ரெண்டு மோதிரத்தை மட்டும் எடுத்துக்கறேன். எனக்கும், ப்ரேமுக்கும்” என்றவள்,
     “என்னமோ போடி! ஏதேதோ சொல்லி நீ சமாளிச்சாலும் என் மனசுக்கு இதெல்லாம் சமாதானம் ஆகலை! ஆனாலும் உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாதுடி!” என்று சலித்துக் கொள்வது போல் அமைதியாகி விட்டவருக்கு மகள் சற்று நேரத்திற்கு முன்பு ப்ரேமைப் பார்த்துவிட்டு சட்டெனத் தன்னைப் பார்த்து கண்கள் மூலம் எதையோ உணர்த்த முயன்றது அந்த அம்மாவிற்குப் புரிந்து விட்டிருந்தது! அதனால் அப்போதைக்கு மகள் சொல்வதைக் கேட்போம் என்று தானும் அமைதியாகிவிட, பிரேமிற்கு ஐயோ என்றானது!
      ‘அடிப்பாவி நான் சொன்ன டயலாக்கை வச்சே எனக்கு ரிவிட் அடிக்கிறாளே ஒவ்வொரு முறையும்!’ என்று நொந்து போனான் எதுவும் சொல்ல இயலாது!
                         *****
     மகளைப் பார்த்துவிட்டுத் திரும்பி இருந்த சந்தோஷத்தில் தங்கமலரின் முகம் வெகு நாளைக்குப் பின் பளிச்சென இருக்க,
     “பார்றா தங்கமலர் முகம் இன்னிக்கு நிஜமாவே தங்கம் போல ஜொலிக்குதே!” என்று கீர்த்தி கிண்டலடிக்க,
      “அதென்ன இன்னிக்கு, என் பொண்டாட்டி முகம் என்னிக்குமே மின்னும் தங்கம் தான்! இன்னிக்கு பொண்ணைப் பார்த்த சந்தோஷத்தில் இன்னும் மின்னுது” என்று தன் பங்கிற்கு ராஜசேகர் மனைவியைப் புகழ, அவர்களின் மகிழ்வை ரசித்தவாறே அமர்ந்திருந்தான் மித்ரன்.
     “டேய்! மித்ரா இந்த சந்தோஷத்துக்கு எல்லாம் நீதான்டா காரணம்! இத்தனை நாளா ஏதோ போல இருந்த வீட்டை இன்னிக்கு மறுபடியும் கலகலன்னு ஆக்கிட்ட! ரொம்ப தாங்க்ஸ்டா!” என்றார் ராஜசேகர்.
     “அட ஏன்னப்பா நீங்க தாங்க்ஸ் அது இதுன்னு கிட்டு! உங்க எல்லோர் சந்தோஷம்தானே ப்பா எனக்கும் சந்தோஷம்!” என்றவன்,
      ‘இந்த சந்தோஷத்துக்கு எல்லாம் முக்கியமான காரணம் நான் இல்லைப்பா, அவதான்! அந்தப் பொண்ணுதான்! அவ மட்டும் எனக்கு நெத்திப்பொட்டுல அடிச்ச மாதிரி புரிய வைக்காம இருந்திருந்தா இன்னும் நமக்கு அக்காவைப் பத்தின உண்மை தெரிஞ்சிருக்காது! தாங்க் யூ தாங்க் யூ கேர்ள்!’ என்று மனதார நன்றி சொல்லிய கையோடு அவளது வாட்ஸ்அப்பிலும் அதே வாக்கியத்தை தட்டிவிட்டான்.
     இரவு ஒன்பது மணிக்கெல்லாம் அனைவரும் சாப்பிட்டுவிட்டுப் படுத்திருக்க, எப்போதும் போல் போனில் மூழ்கி இருந்தவள், அவனிடமிருந்தது மெசேஜ் வரவும் சட்டென ஓபன் செய்து பார்த்தாள்.
     “தாங்க் யூ தாங்க் யூ கேர்ள்!” என்று அவன் அனுப்பி இருந்ததைப் பார்த்து,
     “என்னவாம் தாங்க்ஸ்?!” என்று மெசேஜ் செய்தாள் உடனே.
     “உன்னாலதான் ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்க வீட்ல இன்னிக்கு சந்தோஷத்தைப் பார்க்கிறேன்” என்று அவன் பதில் அனுப்ப,
     “என்ன?!” என்று புரியாமல் விழிப்பது போல் இருந்த ஸ்மைலியை அவள் அனுப்பினாள்.
     “இன்னிக்கு அம்மாக்கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டேன் ப்ரியா அக்காவைப் பத்தி” என்று அவன் சொல்ல,
     “ஓ! அம்மா என்ன சொன்னாங்க?!” என்றாள் ஆர்வமாய்.
     “அம்மா உடனே பொண்ணைப் பார்க்கக் கிளம்பிட்டாங்க!” என்று அவன் சொல்ல,
     “வாவ்!” என்று லவ் ஸ்மைலியை அனுப்பிவள்,
     “தங்கமலர் அம்மாவுக்கு!” என்று முத்தம் கொடுக்கும் ஸ்மைலியையும் அள்ளி விட்டிருந்தாள்.
     அவளது சந்தோசம் கண்டு இவன் மெல்லச் சிரிக்க, “என்ன அண்ணா தன்னால சிரிக்குற?!” என்று கீர்த்தி அவன் கையில் இருந்த போனை சந்தேகமாய்ப் பார்க்க,
     “நீ இன்னும் தூங்கப் போகலையா?! போ போய் தூங்கு. நாளைக்கு எக்ஸ்சாம் இருக்குல்ல உனக்கு. காலையில சீக்கிரம் எழுந்து படிக்கணும்ல” என்று மித்ரன் அவளை விரட்ட,
      ‘ஏதோ சரியில்லையே!’ என்ற ரீதியில் கீர்த்தி அவனைப் பார்த்து வைக்க, அவள் பார்வையில் முறைத்தபடி எழுந்தவன்,
      “ம்மா! எனக்குத் தூக்கம் வருது நான் போய்ப் படுக்கறேன். நீங்களும் போய்த் தூங்குங்க மணி பத்தாகப் போகுது” என்று சொல்லி தனது அறைக்குச் செல்ல, அவளிடமிருந்து,
     “சாப்டீங்களா” என்று மெசேஜ்.
     “ம் அக்கா வீட்லயே!” என்று இவன் பதில் அனுப்ப,
     “ஓ! சுப்பர்!” என்றவள்,
     “இன்னிக்கு எங்க வீட்லயும் செம ஹேப்பி! பர்த்டேக்கு கேக் கட்டிங் எல்லாம் நடந்தது! செம ஹப்பியா போச்சு இந்த நாள் பல வருஷத்துக்கு அப்புறம்! தேங்க்ஸ்!” என்றாள்.
     “எனக்கெதுக்கு தேங்க்ஸ்?!”
     “தெரியலை! சொல்லனும்னு தோணுச்சு!” என்றவள்,
     “குட் நைட்” என்று குழந்தை பொம்மையை அனுப்ப,
     “குட் நைட்” என்று ரிப்ளை செய்தவனுக்கு காலையில் அவளிடம் கோபமாய் பேசிவிட்டு வந்ததெல்லாம் சுத்தமாய் மறந்து போயிருந்தது…
                         -மான்விழி மயக்குவாள்…
 
    
    
 
 
 
 
 
 
 
 
 
 

Advertisement