Advertisement

“உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா, என் அக்காவையும் சித்தப்பாவையும் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்னு சொல்லி இருப்ப?!” என்று கேட்டபடி அப்படியே அவனைப் பின்னே தள்ளிச் சென்று மொட்டை மாடிக் கைபிடிச் சுவரின் அருகே சென்று குப்புறச் சாய்க்க, உயிர் பயத்தில் முழுதாய் தெளிந்த சரத்,
     “ஐயோ! மாடி மாடி மித்ரா! என்னை விட்டுடாதா!” என்று கத்தினான் அலறலாய்.
     “மாடிதான். கீழ போகணுமா சொல்லு அனுப்பவா!” என்று மித்ரன் மேலும் அவனைக் கீழே இறக்க,
      “அ ஐயோ! தப்புதான்! உன் அக்காவையும் சித்தப்பாவையும் அப்படிப் பேசினது தப்புதான்! அந்தச் சின்னத் தப்புக்காக என்னைக் கொல்லுற அளவுக்கா போவ?!” என்று கத்த,
     “என்ன தைரியம் உனக்கு இந்த நிலைமையிலயும் நீ செய்த சின்னத் தப்புன்னு என்கிட்டே சொல்லுவா?!” என்று கோபத்தில் சீறியவன்,
     “நான் கீழ விட்டதும், விழுந்த நொடியில போகப் போற உன் உயிருக்கு இவ்வளவு பயப்படுறியே! அவளை எத்தனை நாள் இப்படிப் பேசிப் பேசியே கொன்னிருப்ப?! சாரு அக்காவாச்சும் தைரியமானவ! அவளை நீ என்ன பேசி இருந்தாலும் அவளே உனக்கு பதிலடி கொடுத்திடுவா! ஆனா ப்ரியாக்கா!” என்று நிறுத்தியவன்,
     “அநியாயமா அவ வாழ்க்கையையே திசை திருப்பிட்டியே! என்னமோ உன் அப்பன் வீட்டு சொத்தை தூக்கிக் கொடுக்குற மாதிரி என்னென்ன பேசி இருக்க நீ?! அவ இதுவரைக்கும் வாய்திறந்து எனக்கு இது வேணும் அது வேணும் ஒருவார்த்தைக்  கேட்டதில்லைடா எங்க யார்கிட்டயும்! நாங்களா செய்தா கூட அதிக செலவில்லாததாதான் செலெக்ட் பண்ணி வாங்குவா! அவளைப் போய் எப்படி எல்லாம் பேசி இருக்க நீ!” என்று ஆவேசத்தில் ஆரம்பித்து அக்காவின் மேல் இருந்த பாசத்தில் மனமுடைந்து முடித்தவன்,
     “இனி உனக்கும் எங்க குடும்பத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை! உன்னை உயிரோடு விட்டுட்டுப் போறதுக் காரணம் கூட, என் அக்கா குழந்தைகளுக்காக மட்டும்தான்! ஏன்னா பெருக்காச்சும் அப்பன் இருக்கணுமே!” என்றவன்,
     “ஆனா இந்த நிமிஷத்துல இருந்து அந்தக் குழந்தைகளுக்கும் உனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை! உன்னை மாதிரி ஒரு கேவலமான மனுஷன்கிட்ட இனியும் அவங்க வளருறதை நான் அனுமதிக்க மாட்டேன்! பிள்ளைங்க, பொண்டாட்டின்னு எங்க வீட்டுப் பக்கம் வந்துடாத!” என்றவன், அவனை இழுத்து நிமிர்த்தி அவன் அமர்ந்திருந்த நாற்காலியிலேயே மீண்டும் தள்ளிவிட்டுவிட்டு குழந்தைகளையும் கையோடு அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்!
     எல்லாம் சில நிமிடங்களில் நடந்து முடிந்திருக்க, சரத்திற்கு தலை சுற்றியது!
     ‘அந்த அமுக்குணி மாதிரி இருந்த ப்ரியாவா எல்லாத்தையும் சொல்லி இருப்பா! இல்லையே! அவ சொல்லி இருக்க வாய்ப்பே இல்லையே! இந்த மனோகர் கிழவன் சொல்லி இருப்பானோ?! ம் அவனாதான் இருக்கும்! அதான் நான் கட்டிட்டு வந்தேனே ஒரு ஒரு காளியாத்தா! அவதான் அங்கக் கிளம்பிப் போனதுமே எனக்கு வேட்டு வச்சிருப்பா!’ என்று தலையில் அடித்துக் கொண்டவன்,
     ‘ச்சே! இந்த பணப் பிரச்சனையால நானே வாயைக் குடுத்து மாட்டிகிட்டேனே! இதை பொறுமையா ஹேண்டில் பண்ணி இருக்கணும்! முட்டாள் முட்டாள் தவளைத் தன் வாயால் கெடுங்கிற மாதிரி உன் பொண்டாட்டியை பத்தி நல்லா தெரிஞ்சும் அவகிட்ட சமதானமா கேட்காம, அதிகாரமா கேட்டு இப்படி மொத்தமா ஆப்பு வச்சுக்கிட்டியே!’ என்று தனக்கு தானே புலம்பித் தள்ளிக் கொண்டான் என்ன செய்வது என்று புரியாமல்.
                          *****
     அங்கு மித்ரன் வீட்டில் அனைவரும், இவன் என்ன பிரச்சனை செய்துவிட்டு வரப் போகிறானோ என்று எதிர்பார்த்தது போலவே, அவன் பிள்ளைகளுடன் வருவதைப் பார்த்துப் பதறிப் போக,
     “பசங்களா கீர்த்தி சித்தி ரூம்ல போய் விளையாடுங்க” என்று வந்ததும் வராததுமாக அவர்களை அங்கிருந்து கிளப்பிவிட்டு,
     “அக்கா! இனி நீ அந்த ஆளோட வாழ வேண்டாம். அப்படி ஒரு கேவலமான ஜென்மத்தோட நீ வாழுறதை விட நீ இங்கயே நிம்மதியா வாழலாம்!” என்றான் அவள் வாழ்க்கைக்கு இவனே முடிவெடுத்து விட்டவனாய்.
     “என்ன பேசுறடா நீ?! இது ஒண்ணும் உன் வாழ்க்கை இல்ல நீ முடிவெடுக்க!” என்று ராஜசேகர் கண்டிக்க,
     “மித்ரா இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு எந்த முடிவையும் எடுத்துட முடியாது. அது மட்டும் இல்லை. சரத், ப்ரியாவை அப்படி பேசினது பெரிய தப்புதான்! ஆனா அவர் இதுவரைக்கும் நம்ம சாருவையும் பிள்ளைங்களையும் நல்லாதானே பார்த்துக்கறார்?!” என்று தங்கமலரும் கேட்க,
      “ஆமாம் மித்ரா! இதுக்குத்தான் நான் இத்தனை நாள் எதுவும் சொல்லாம இருந்தேன். இன்னிக்கு சாருவே அவ்வளவு வற்புறுத்தவும்தான் சொல்ல வேண்டியதாகிப் போச்சு!” என்றார் மனோகரும்.
     மூவரின் பேச்சிலும் சிறிது நியாயம் இருந்தாலும், மித்ரனின் கோபம் அதைச் சிந்திக்க விடாமல் செய்ய,
     “அக்கா! நம்ம ப்ரியாக்காவை அவ்வளவு கஷ்டப் படுத்தி பார்த்த ஒருத்தனோட நீ வாழனுமா?!” என்றான் சாருவைப் பார்த்து.
      அமைதியாய் அவனை நிமிர்ந்து பார்த்த சாரு, “நீ கேட்குறதுக்கு முன்னாடியே நான் அந்த முடிவை எடுத்துட்டேன்டா!” என்று சாரு சொல்ல அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர்!
     “என்ன சாரு பேசுற நீ? அவன்தான் ஏதோ கோபத்துல இப்படி பேசுறான்னா, நீயும் இப்படி பேசுறது சரியா?!” என்றார் தங்கமலர் கண்டிப்புடன்.
     “இல்லைம்மா! மித்து கோபத்துல சொன்னாலும் அவன் சொல்றது சரிதான்! அதோட அவர் இந்த விசயத்துலன்னு மட்டும் இல்லை இன்னும் நிறைய விஷயத்துல மாறணும். அவர் திருந்தணும்னா அதுக்கு ஒரே வழி கொஞ்ச நாளைக்கு நானும் பிள்ளைகளும் அவரை விட்டுப் பிரிஞ்சு இருந்துதான் ஆகணும்! அப்போதான் அவருக்கு எங்க அருமை புரியும்!” என,
     “என்ன சாரும்மா சொல்ற?! மாப்பிள்ளை உன்னையும் கஷ்டப் படுத்தறாரா?!” என்று ராஜசேகர் கவலையுடன்  கேட்க,
     “கஷ்டப்படுத்தலைன்னு சொல்ல முடியலைப்பா! கொஞ்ச நாளாவே அவருக்கு பணப்பித்து பிடிச்சு போச்சு! பிசினசை விரிவு படுத்தணும்னு என்கிட்டே பணம் கேட்டுகிட்டே இருந்தாரு! என்னோட நகைகளை கொஞ்சம் கொடுத்தேன். ஆனா இன்வெஸ்ட் பண்ணது எல்லாம் வேற ஏதோ புது பிசினஸ்ல அது எல்லாமே லாஸ்ல போய்டுச்சு! சரி போனது போச்சு அதோடு விட்டுடுங்கன்னு சொன்னாலும் கேட்கலை! மறுபடியும் கொஞ்ச நாளா பணம் பணம் ஒரே தொல்லை பண்றாரு!” என்று சாரு சொல்ல, இது என்ன புதுப் பிரச்சனை என்று பெண்ணைப் பெற்றவர்களுக்கு கவலை சூழ்ந்து கொண்டது. 
     “பணம்தான் பிரச்சனைன்னா கொடுத்துடலாமே ம்மா” என்று ராஜசேகர் சொல்ல,
     “என்னப்பா பேசுறீங்க?! அவர் சரியான முறையில பிசினஸ் பண்ணா பணம் ஏன் வீணாகப் போகுது! முன்ன மாதிரி நிதானமா யோசிக்கிறது இல்லை! பணம் நிறைய சம்பாதிக்கணும்ங்கிற ஆசையில எல்லா இடத்துலயும் இன்வெஸ்ட் பண்றாரு ப்பா! உழைக்காமலே காசு வர மாதிரி பிசினஸா பார்க்குறார்! அதெல்லாம் சரியா வருமா சொல்லுங்க! ஏற்கனவே இருக்குற ஐஸ்க்ரீம் கம்பனிய ஒழுங்கா ரன் பண்ணாலே நல்லா சம்பாதிக்கலாம்! அதை விட்டுட்டு கண்டதுலயும் பணத்தைப் போடுறாரு!” என்றவள்,
     “இப்போதைக்கு நான் அங்கப் போகப் போறதில்லை ப்பா. நான் அங்க போகலைன்னா பணம் கிடைக்காதுன்னு தெரிஞ்சிடும்! அப்புறம் கொஞ்ச நாளைக்கு அப்புறம் அவரே திருந்தி வருவாரு! நான் அங்க இருந்தா மறுபடியும் பணம் பணம்ன்னு ஆரம்பிச்சுடுவாரு! இன்னிக்கு கூட அந்தப் பிரச்சனையில்தான் ப்ரியாவைப் பத்தி சொல்லி மாட்டிகிட்டாரு” என்றாள்.
      “ஓ! ஆனா வெளில கடன் எதுவும் வாங்கினா என்ன செய்யிறது சாரு?!” என்று தங்கமலர் மகளைக் கவலையாய் பார்க்க,
     “அதெல்லாம் வாங்க மாட்டார் ம்மா! ஓசியில கிடைச்சா மட்டும்தான் வாங்கிக்குவார்! கடன் வாங்கி கஷ்டப்படுற அளவுக்கு எல்லாம் அவர் முட்டாள் இல்லை!” என்றாள் கணவனை நன்கு புரிந்து வைத்தவளாய்.
     தாய், தந்தையரைப் போலவே இதையெல்லாம் கேட்டிருந்த மித்ரனுக்கும் பெரும் கவலையாகிப் போனது தனது இரண்டு அக்காவின் வாழ்க்கையும் இப்படி சிக்கலாகி விட்டதே என்று.
     ‘அந்தாளுக்கு ஏதாவது நல்ல படம் புகட்டணும்!’ என்று எண்ணிக் கொண்டவன்,
     “ம்மா! இப்போவாவது ப்ரியா அக்காவைப் பத்தி புரிஞ்சிகிட்டீங்களா?!” என்றான் சின்னவளை விட்டுக் கொடுக்காமல்.
     “ம் டா! என் பொண்ணு எப்போவுமே தங்கம்தான்! நான்தான் அவளைப் புரிஞ்சிக்கலை! ஆனா மத்தவங்க பேசினாங்கங்கிறதுக்காக தன் வாழ்க்கையவா பணயம் வைப்பா! நீ சொன்னதை வச்சுப் பார்த்தா அந்த ப்ரேமும் நல்லவன் மாதிரி தெரியலையேடா!” என்று இப்போது சின்ன மகளைப் பற்றி வருத்தம் கொள்ள,
     “அப்படின்னு சொல்லிட முடியாதும்மா! உன் ரெண்டு மருமகனுங்களுமே கொஞ்சம் பணத்தாசையில மாட்டிகிட்டு இருக்காங்க! அதுல இருந்து தெளிஞ்சுட்டாங்கன்னா எல்லாம் சரியாகிடும்! தெளிய வச்சுடுவோம்!” என, சாரு தம்பியின் மேல் இருந்த நம்பிக்கையில் புன்னகை பூத்தபடியே,
     “அதான் மித்துவே சொல்லிட்டான்ல ம்மா சீக்கிரம் தெளிய வச்சுடுவான் உங்க மாப்பிளைங்களை! இனி  அவங்களைப் பத்தின கவலையை விடுங்க! இப்போ உங்க சின்னப் பொண்ணைப் பார்க்கப் போகலாமா?!” என,
     “இதோ இதோ கிளம்பிட்டேன்!” என்று தங்கமலர் அப்படியே கிளம்ப,
     “பாரேன் சின்னப் பொண்ணைப் பார்க்கப் போலாம்னதும் என்ன அவசரம்?!” என எல்லோரும் கவலை மறந்து சிரிக்க,
      “போடி!” என்று தங்கமலரும் சிரிக்க,
      “ம்மா! போய் வேற புடவை மாத்திகிட்டு வாம்மா!” என்று சாரு சொல்லியும்,
     “இதுவே நல்லாதான் இருக்கு!!” என்றவர்,
     “போய் உன் அண்ணி தங்கச்சி, எல்லோரையும் கிளம்பச் சொல்லு சாரு! அப்படியே பெரியவனுக்கும் போன் பண்ணி ஹாஸ்பிட்டல்ல இருந்து வரச் சொல்லு! அதுக்குள்ள நான் என் பொண்ணுக்காக வாங்கி வச்ச சீரை எல்லாம் எடுத்து வைக்கிறேன்! ரோஷக்காரி நான் பேசலைன்னதும் சீரைக் கூட வாங்காம போயிட்டா!” என்றபடியே மகளுக்கு ஆசை ஆசையாய் பார்த்து வாங்கிய நகை, புடவையை எல்லாம் எடுத்து வைக்கலானார் தங்கமலர்.
                         -மான்விழி வருவாள்…
 
    
    
 
 
 
 
 
 
 
 
 
 

Advertisement