Advertisement

                                                                           18
      ”என்ன மலர் இது?! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே உன் பொண்ணு போட்டோவை மட்டுமே பார்த்து மனசை தேத்திக்குவ?! சின்னப் பொண்ணு ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டா. மன்னிச்சு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாமே” என்று ராஜசேகர், மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்க, மாலை மருத்துவமனையில் இருந்து அப்போதே வீடு திரும்பியிருந்த மித்ரன், தந்தையின் பேச்சைக் கேட்டு அப்படியே நின்றான் அம்மாவிடமிருந்து என்ன பதில் வரப் போகிறதோ என்று எதிர்பார்த்து.
     ஆனால் தங்கமலரோ இருவருக்கும் சாதகமான பதிலை அளிக்காமல்,
     “இல்லைங்க! அதுமட்டும் என்னால நிச்சயமா முடியாது! அவ, அவமேல நான் எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தேன்னு உங்களுக்குத் தெரியாத?! நான் பெத்த பிள்ளைங்களை விட அவளைப்  பெருசா நினைச்சு வளர்த்தேனே? அவ காதலிக்கறேன்னு ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருந்தா நானே அவளுக்கு சீரும் சிறப்புமா கல்யாணம் செய்து வச்சிருப்பேனே? அதைவிட்டுட்டு கடைசி நேரத்துல இப்படி எல்லோர் முன்னாடியும் அவமானப்பட்டு நிக்குற மாதிரி செய்துட்டுப் போயிட்டாளே! நாம என்ன அவ்வளவு நம்பிக்கை இல்லாத அளவுக்கா அவகிட்ட நடந்துகிட்டோம்?!” என்று தங்கமலர், ராஜசேகரின் முகம் பார்த்துக் கேட்க, மனைவியின் கலங்கிய கண்களைப் பார்த்து, கலங்கிப் போனார் ராஜசேகர்.
     “என்னம்மா இது?! சின்னப் பிள்ளை மாதிரி கண்கலங்கிகிட்டு?!” என்று மனைவியின் கண்ணீரைத் துடைத்தவர்,
      “அப்படி எல்லாம் இருக்காதும்மா! ஏதோ ஒரு சூழ்நிலை! அவசரத்தனமா யோசிக்காம இப்படி ஒரு முடிவெடுத்துட்டா. அதுக்காக உன்மேல நம்பிக்கை இல்லாம எல்லாம் இல்லை! ஒருவேளை பயத்துல கூட இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கலாம்!” என்று ராஜசேகர் சொல்லிக் கொண்டிருந்த நேரம், அவர்கள் அறையின் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்ற மித்ரன்,
     “ம்மா! என்னம்மா இது? தினம் தினம் இப்படி அழுதுகிட்டே இருந்தா உடம்பு என்ன ஆகும்?!” என்று தாயின் அருகே சென்று அவர் தோள் சேர்த்தபடி அணைத்து அமர்ந்து கொண்டவன்,
     “ம்மா! ஒன்னு கேட்பேன்! உங்க மனசுக்கு என்ன தோணுதோ அதை மறைக்காம அப்படியே சொல்லணும்!” என்றவன்,
     “உணமையாவே அக்கா ஒருத்தரை லவ் பண்ணி இருப்பான்னு உங்க மனசுக்குத் தோணுதா?!” என, அவனை விசித்திரமாய் பார்த்த அவனின் தாயும், தந்தையும்,
     “காதலிக்காமலா வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்கத் துணிஞ்சா?!” என்று தங்கமலர் பதில் கேள்வி எழுப்ப,
     “ப்ச்! நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்கம்மா!” என்றான் மீண்டும்.
     “நிச்சயமா அவ காதலிச்சிருப்பான்னு என்னால அவ கழுத்துல மாலையோடு என் முன்னாடி வந்து நின்ன நிமிஷம் வரைக்கும் தோணினது இல்லைடா!” என்று தங்கமலர் தன் மனதில் இருந்ததைச் சொல்ல,
     “அப்போ அதுதான் உண்மை!” என்றவன், நேற்று நடந்த அத்தனையையும் சொல்ல, தங்கமலருக்கும் ராஜசேகருக்கும் ஐயோ என்றானது.
     “அடக் கடவுளே! போயும் போயும் நகை விஷயத்துக்காகவா இப்படி ஒரு முடிவை எடுத்தா இந்தப் பொண்ணு?!” என்று தங்கமலர் தவிப்புடன் கேட்க,
     “அதுமட்டுமே காரணம் இல்லைம்மா! இன்னும் எதுவோ இருக்கு. ஆனா அதுதான் எல்லாத்துக்கும் மூல காரணம்” என்றவன்,
      “அதுமட்டும் இல்லை! அவளை நம்ம வீட்ல இருக்கிறவங்க, அதாவது நம்ம சொந்தகாரங்க சில பேர் எல்லாம் பேசின பேச்சுனாலதான் ரொம்ப மனசு நொந்து போயிருக்கா! அதனாலயும் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கலாம்” என்று அவன் சொல்லி முடிக்க,
     “எடுத்திருக்கலாம் இல்லை! அதனாலதான் எடுத்தா” என்றபடியே அவர்கள் அறைக்குள் நுழைந்த சாரு,
      “மித்து நீ போய் சித்தப்பாவ கூட்டிட்டு வா” என்று சொல்லி அவனை அங்கிருந்து அனுப்பி விட்டு,
     “இது எல்லாத்துக்கும் காரணம் என் அருமைப் புருஷன்தான்” என்றவாறே தாயின் அருகே சென்று அமர்ந்தவள்,
     “அந்த மனுஷன் ப்ரியாவையும், சித்தப்பாவையும் அவர் ஊர்ல இருந்த வந்த அன்னிக்கு ஏதோ தவறாகப் பேசி இருக்கார்ம்மா! அதனால்தான் ப்ரியா இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கா!” என்று கூற, தங்கமலருக்கும், ராஜசேகருக்கும் மருமகன் என்றும் நினைக்கத் தோன்றாமல் அத்தனைக் கோபம் எழுந்தது.
     ‘ச்சே! என்ன மனுஷன் இவர்!’ என்று தங்கமலர் மனம் உடைய,
     “உனக்கு எப்படிம்மா தெரியும்?!” என்றார் ராஜசேகர்.
     “இன்னிக்குதான் தெரிஞ்சதுப்பா! ஏற்கனவே எனக்கு அந்த மனுஷன் மேல சந்தேகம் இருந்தது! ஆனா நானா  கேட்டப்போ எல்லாம் பிடி கொடுக்கவே இல்லை! இன்னிக்கு ஒரு பிரச்சனையில அவரா கோபத்துல உளறிக் கொட்டி மாட்டிகிட்டார்!” என்றவள்,
     “அவர் நம்ம ப்ரியாவையும் சித்தப்பாவையும் ரொம்ப மோசமா பேசி இருக்கார்ப்பா! கோபத்துல என்கிட்டேயே,
     ‘உன் தங்கச்சி ரொம்ப ரோஷக்காரி! அதான் அவளையும், அவ அப்பனையும் நான் பேசின பேச்சுத் தாங்க முடியாம ஒரேநாள்ல வேற முடிவெடுத்துப் போயிட்டான்னு’ சொல்றார் ம்மா!”
     “இன்னிக்கு எங்க ரெண்டு பேருக்கும் நடந்த வாக்குவாதத்துல தெரியாம வார்த்தையை விட்டவர், அதுக்கப்புறம் நான் எவ்வளவோ கேட்டும் முழுசா விஷயத்தைச் சொல்லலை! ஆனா அவர் ரொம்ப மோசமா பேசி இருக்கார்! அதனாலதான் அன்னிக்குக் காலையில வரைக்கும் கூட நல்லா இருந்த ப்ரியா மதியத்துல இருந்தே ஏதோ போல ஆகிட்டா! மதியம் அவ ரூமுக்கு போயி, ஏன்டி ஒருமாதிரி இருக்கன்னு கேட்டப்போ கூட, என்னைக் கட்டிப்பிடிச்சு அழ ஆரம்பிச்சுட்டா! நான் பதறிப் போய் என்னன்னு கேட்டா! ஒன்னும் இல்லைக்கா! அம்மாவை விட்டு எப்படி இருப்பேன்னு நினைச்சாலே அழுகையா வருதுன்னு சொல்லி சமாளிச்சுட்டா” என்று சாரு சொல்லி முடிக்க,
     “என்ன அண்ணா கூப்டீகளாமே!” என்றபடி வந்தார் மனோகர்.
     அவரது முகமும், கூட ஊருக்கு வந்த அன்று காலை இருந்த சந்தோஷத்தோடு சரி! ப்ரியா கோவிலுக்குச் செல்வதற்கு முன்பிருந்தே அவரது முகமும் கூட வாடிப் போயிருந்ததை தங்கமலர் இப்போதே நினைவு கூர்ந்து,
     “சாரு வீட்டுக்காரர் என்ன சொன்னார்னு மறைக்காம சொல்லுங்க தம்பி” என்றார்.
     ‘என்ன நடந்ததோ?!’ என்று அவர் சாருவைத் தயக்கமாய்ப் பார்த்தார்.
     “எல்லாம் எனக்குத் தெரியும் சித்தப்பா! அவர் உங்களையும் ப்ரியாவையும் ஏதோ தப்பா பேசி இருக்கார். அதானலதான் ப்ரியா ஒரே நாள்ல இப்படி ஒரு கல்யாணத்தை செய்யத் துணிஞ்சிருக்கா! அவர் என்ன சொன்னார்னு சொல்லுங்க சித்தப்பா!” என்று சாரு கேட்க, அவர் அப்போதும் அமைதியாய்தான் நின்றார்.
     ‘ஒரு மகளோட வாழ்க்கைலதான் நடக்கக் கூடாத திருப்பங்கள் நடந்து போச்சு! இப்போ சரத் பேசினதை வெளிய சொன்னா சாருவுக்கும் மனக்கஷ்டம் குடும்பத்துல இருக்க மத்தவங்களுக்கும் சங்கடம்!’ என்று நினைத்தவர், உள்ளே வந்த மித்ரனைப் பார்த்து,
     ‘மித்ரன் வேற இங்க வரானே! இவனுக்கு வர கோபத்துக்கு ஏதாச்சும் எடாகுடாம பண்ணி வச்சா சாரு வாழ்க்கைதான் பாதிக்கும்!’ என்று யோசித்துக் கொண்டிருக்க, அவர் அமைதியைப் பொறுக்க முடியாமல்,     
     “சொல்லுடா! என்ன சொன்னார்னு?!” என்றார் இப்போது ராஜசேகர் சற்றுக் குரல் உயர்த்தி.
     “அ அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணா!” என்று சமாளித்த மனோகரின் அருகே சென்ற சாரு,
     “என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னா உண்மைய சொல்லுங்க சித்தப்பா! நீங்க சொன்னாதானே அவரோட உண்மையான குணம் என்னன்னு எங்களுக்கும் தெரியும்?! இல்லாட்டி காலம் பூரா ஒரு போலியான மனுஷனோடுதான் வாழுற மாதிரி இருக்கும்!” என்று கேட்க, அதற்கு மேல் மறுக்க முடியாமல் மனோகர், சரத் பேசியதைச் சொல்ல, மித்ரன் உடல் சினத்தில் இறுகியது.
     “எவ்ளோ கொழுப்பிருந்தா அவன் என் அக்காவைப் பிச்சை எடுத்து பிழைக்கலாம்னு சொல்லி இருப்பான்!” என்று கர்ஜித்தவன்,
     “இதோட நீ அந்தாளோட வாழணும்ங்கிறதை மறந்துடுக்கா!” என்று சாருவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாய் வெளியேற,
      “டேய் மித்ரா… நில்லு!” என்று தங்கமலரும், ராஜசேகரும் தடுக்கத் தடுக்கக் கேட்காமல் புயலாய் அவ்விடத்தைக் கடந்து சென்றிருந்தான் சங்கமித்ரன்.
                           *****
     சாரு தன்னிடம் சண்டை போட்டுவிட்டுப் போனக் கோபத்தில் வீட்டின் மொட்டை மாடியிலேயே மதுவும் கையுமாக அமர்ந்திருந்தான் சரத்.
     தனது தொழில் முன்னேற்றதிற்காக ராஜசேகரிடம் பணம் வாங்கித் தரும்படி சாருவிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவள் முடியாது என்று மறுத்துவிட்டக் காரணத்தினால் இருவருக்குள்ளும் இன்று பெரிய வாக்குவாதம் உருவானது. அதன் தொடர்ச்சியாகவே அவன்,
     “உனக்கு உன் தங்கச்சி எவ்வளவோ பரவாயில்லை! அவ ரொம்ப ரோஷக்காரி! அதான் அவளையும், அவ அப்பனையும் நான் பேசின பேச்சுத் தாங்க முடியாம உடனே வேற முடிவெடுத்துப் போயிட்டா! நீயும் இருக்கியே எவ்வளவு பேசினாலும் நீ பிடிச்ச பிடியிலேயே தான் நிக்குற!” என்று வார்த்தையை விட்டுவிட அதில் வசமாய் மாட்டிக் கொண்டான். ஆனால் அதன் பின் சாரு எவ்வளவு கோபப்பட்டு பேசியும் கேட்டும் கூட அவனிடமிருந்து ஒரு வார்த்தை வரவில்லை!
     ‘ஐயோ இப்படி மடத்தனமா நானே வாயை விட்டுட்டேனே!’ என்று தன்னையே நொந்து கொள்வதைத் தவிர அவனால் எதுவும் செய்ய முடியவில்லை! அதோடு சாரு அவளது அம்மா வீட்டுக்குக் கிளம்பியது முதல் மித்ரன் பற்றிய பயம் வேறு சேர்ந்து கொள்ள, பயத்தைப் போக்கத் தண்ணியும் கையுமாய் மொட்டை மாடிக்கு வந்துவிட்டான்.
     முட்ட முட்ட குடித்தவனுக்கு எதிரே மித்ரன் வருவது போல் இருக்க,
      ‘ச்சே! இவன் வேற அப்பப்போ லவ்வரு மாதிரி கண்ணுல வந்துட்டுப் போறான்!’ என்று நினைத்தவன், மீண்டும் பாட்டிலை எடுக்க, இப்போது மித்ரன் அவன் அருகிலேயே வந்துவிட,
     “டேய் குடிக்கும் போது கூட நிம்மதியா விடமாட்டியா டா! உன்னை நினைச்சா பயம் வருதுன்னுதான் குடிக்கவே வந்தேன்! இங்க வந்தும் என் கண்ணு முன்னாடி வந்து வந்து தொல்லை பண்ற?!” என்று சரத் போதையில் உளற, மித்ரன் வெடுக்கென அவன் கையிலிருந்த பாட்டிலைப் பிடுங்கித் தரையில் எரிய அது சிலீரென்று சப்தத்துடன் உடைந்து அவனின் போதையைச் சற்றுத் தெளிய வைத்தது.
     “அ ஐயோ! மி மித்ரா நி நீயா?!” என்று அவன் சட்டென எழுந்து கொள்ள,
     “ஆள் அடையாளம் தெரியாத அளவுக்குக் குடிச்சிருக்க?!” என்று அவன் சட்டையை கொத்தாய்ப் பிடித்தவன்,
    

Advertisement