Advertisement

                                                                      17
     “ம்மா! எவ்ளோ நேரமா குளிக்க வைப்பீங்க?! எனக்கு நேரம் ஆச்சு. சீக்கிரம் சீக்கிரம்!” என்று காயத்ரி அவசரப்படுத்த,
     “அடியே அவங்க குளிப்பாட்டுறதே ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா! இதுல நீ வேற குதிக்கிற சீக்கிரம் வா வான்னுட்டு!” என்று மையு உள்ளிருந்தபடியே குரல் கொடுக்க,
     “டி குளிக்கும் போது கூட வாயை மூடிட்டு பேசாம இருக்க மாட்டியா?! வாய்க்குள்ள சோப்பெல்லாம் போகுது பாரு!” என்று சாந்தி அவள் தலையில் தட்ட,
     “ஹா அம்மா!” என்று தலையைத் தேய்த்துக் கொண்டவள்,
     “அடியே உன்னால எனக்குதான் அடி விழுது!” என்று கத்தினாள் தங்கையிடம்.
     “ம்மா! என்னம்மா?!” என்று காயு குளியலறைக்குள் எட்டிப் பார்க்க,
     “அடியே இங்க என்ன பொருட்காட்சியா நடக்குது! வந்து எட்டிப் பார்க்குற?!” என்றாள் அப்போதும் மையு வாயை மூடாமல்.
     “யம்மா! யம்மா! இவ கொஞ்ச நேரமாச்சும் வாயை மூடுறாளா?!” என்றபடியே சாந்தி நீரை மோர்ந்து ஊற்றி தலையை அலசி முடித்து, உடம்பிற்கும் தேய்த்து நீரை ஊற்றி முடிக்க, அவள் தலைக்குக் கட்டவும், துடைக்கவும் துண்டைக் கொண்டு வந்து கொடுத்த காயத்ரி, தன் பின்னே ஒளித்து வைத்திருந்த ஸ்கர்ட் டாப்ஸை எடுத்து அக்காவின் முன் ஆட்டினாள் அப்படியும் இப்படியுமாய்.
     “ஐ! ஸ்கர்ட் டாப்பா?! எப்போடி எடுத்த?! ஏதுடி காசு?!” என்று மையு ஆச்சர்யமாய் கேட்க,
     “இந்த மாசம் இன்க்ரிமென்ட் போட்டாங்கக்கா! அம்மாக்கிட்ட சொல்லாம சுட்டு வச்சிட்டேன்!” என்று ஆர்வத்தில் அக்காவிடம் சொல்லிவிட்டவள் அம்மாவும் அங்கேதான் இருக்கிறார் என்பதை மறந்து போனாள்.
      “பார்த்தியா இவளை?!” என்ற சாந்தி என்றுமில்லாத அதிசமாய் மையுவிற்கு அவ்வளவு செலவு செய்து புதுத்துணி எடுத்து வந்ததைப் பற்றி எதுவும் சொல்லாமல்,
     “நல்லாதான் இருக்குடி! ஆனா இவளால இதைப் போட்டுக்க முடியுமா?!” என,
     “அதெல்லாம் போட்டுக்குவேன் போட்டுக்குவேன்!” என்ற மையு ஆசையுடன் அந்தத் துணியைக் கையில் வாங்கித் தடவிப் பார்க்க,
     “போட்டுக் காமிக்கா! ஆசையா இருக்கு பார்க்க, வேலைக்கு நேரம் ஆகுது அதுக்குதான் அவசரப் படுத்தினேன்” என்றாள் காயத்ரி.
     “ம் ம்!” என்ற மையு இருவரின் உதவியுடன் அந்த உடையை அணிந்து கொள்ள, மெரூன் கலர் டாப்சிலும், ராபின் ப்ளு கலர் ஸ்கர்டிலும் மையு நீண்ட வருடங்களுக்குப் பின் வெகு அழகாய்த் தெரிந்தாள் அவள் கண்களுக்கே!
     மையு கருமை நிறம் கொண்டவள் என்றாலும் அவளின் முக வடிவு அத்தனை லட்சணமாகவும், கலையாகவும் இருக்கும்! அதிலும் அவளின் அந்தக் கண்கள், மருளும் உருண்ட மான்விழிகள் போன்ற அந்தக் கண்களை பார்த்தவுடன் அதன் அழகில் மயங்காது போனால்தான் அதிசயம்! என்ன, நடக்காமல் இருந்து இருந்தே சற்று உடல் எடை கூடிவிட்டாள். ஆனாலும் அவள் புசுபுசுவென கவர்ந்திழுக்கும் கலைமான் போன்ற அழகியே!
    அவள் குளித்து தயாராகி முடித்த சிறிது நேரத்தில், சாந்தி சமைத்து வைத்திருந்த உணவுகளை எடுத்து வந்து கூடத்தில் வைக்க, அதை உலக அதிசயமாய் பார்த்தவள்,
     “யம்மா! இங்க நடக்குறதெல்லாம் நிஜம்தானா?! கனவு கினவு இல்லையே?!” என்று சாந்தி அவளுக்காய் தட்டில் வைத்து எடுத்து வந்து நீட்டிய பூரி, கிழங்கு, வடை, சர்க்கரைப் பொங்கல் இதையெல்லாம் பார்த்து மையுவிற்கு மயக்கமே வரும் போலிருக்க, வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் கேட்டு வைக்க,
     “உனக்கு பிடிக்குமேன்னு செய்தேன் பாருடி! எனக்கு நல்லா வேணும்!” என்று சாந்தி கோபித்துக் கொள்ள,
     “யம்மா யம்மா சாரி! சாரி! இத்தனை வருஷத்துல நீ ஒரு நாளும் இப்படி செய்தது இல்லையா? அதான் அப்படிக் கேட்டுட்டேன்! அம்மாயி இருக்கும் போது சரக்கரைப் பொங்கல் செய்து கொடுத்திருக்கு வீட்ல அதோடு இப்போதான் செய்யுற நீ?!” என்று மையு சொல்லவும், சாந்திக்கு ஏதோ போல் ஆகிவிட்டது!
     ‘வீடு வேலைன்னு ஓடி ஓடி புள்ளைய ஒரேயடியா விட்டுட்டோமோ?!’ என்ற எண்ணம் தோன்ற, பல வருடங்களுக்குப் பிறகு மையுவின் அழுகை நேற்று அவரை அசைத்துப் பார்த்திருக்க, தான் செய்த தவறை உணர ஆரம்பித்திருந்தார் சாந்தி. ஆனால் என்ன செய்ய வீடு வீடு என்று யோசித்து அவர்கள் செய்த தவறுதான் மையுவை இந்நிலைக்கு தள்ளி இருந்தது. அதனாலேயே அவள் குணமடைவது பெரிதும் சவாலான விஷயமாகிப் போயிற்று! ஏனெனில் தசைச் சிதைவு நோய் வாய்பட்டவர்களை எப்போதும் நல்லமுறையில் பாதுகாத்து நோயின் தாக்கம் அதிகரிக்காமல் இருக்க தவறாமல் பயிற்சி கொடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும். அது மட்டும் தான் அந்த நோய்க்கான தீர்வு.  மீறி பின்னடைவு ஏற்பட்டு விட்டால் முன்னேற்றம் அடைவது மிகக் கடினமே! ஆனால்?!
 
                         *****
     அன்றைய பிறந்தநாள் வெகு வருடங்களுக்குப் பின் உண்மையாகவே அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருந்தது. அந்த மகிழ்ச்சியோடு சேர்ந்து இன்னொரு ஆச்சர்யமாய், சாந்தி, கடைக்குக் கிளம்பும் சமயம் மித்ரன் அங்கு வர,
     “வாங்க தம்பி கல்யாணம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா?! ப்ரியா எப்படி இருக்காங்க?!” என்று சாந்தி அவனை நலம் விசாரிக்க,
      “ஹான் எல்லோரும் நல்லா இருக்கோம்” என்றவன் கண்கள் சாந்தியைத் தாண்டி ஜன்னல் வழியே மையுவைத் தேடியது.
     அதை கவனிக்காத சாந்தி, “சரி தம்பி நீங்க பார்த்துக்கறீங்களா?! நான் கடைக்குக் கிளம்பிட்டேன்.” என,
     “ம்!” என்றான்.
     “ஆனா தம்பி நீங்க வருவீங்கன்னு தெரியாம அவ சாப்பிட்டுட்டாளே! எப்படி பயிற்சி கொடுப்பீங்க?!” என்று சாந்தி சந்தேகம் கொள்ள,
     “ஓ! அப்போ நாளையில இருந்து பயற்சி பண்ணிக்கலாம்!” என்று அவன் வேறு வழியின்றி கிளம்பப் பார்க்க,
     “அட என்ன தம்பி வந்தது வந்துட்டீங்க! அந்தப் பொண்ணை ஒரு எட்டு பார்த்துட்டு நல்லா சத்தம் போட்டுட்டு போங்க! நீங்க வராம போனதுல இருந்து மறுபடியும் பழைய மாதிரி ஆரம்பிச்சிட்டா! சரியா பயிற்சி பண்ணுறதே இல்லை! கொஞ்சம் மிரட்டி வச்சுட்டு போங்க!” என்றவர்,
     “சரி தம்பி பார்த்துக்கோங்க நான் கிளம்பறேன்” என்று சொல்லிக் கிளம்பி விட, தனது ஷூவ வெளியே கழட்டி வைத்துவிட்டு உள்ளே சென்றவன், அவள் இருந்த ரசனையின் நிலையைக் கலைக்கத் தோன்றாமல், அப்படியே வாயிலின் அருகே கைகளைக் கட்டிக் கொண்டு சாய்ந்தபடி நின்று கொண்டான்.
     ஏழு பூரி, ஆறு வடை, சர்க்கரைப்பொங்கல் என காலை உணவை ஒருபிடிபிடித்து, முழு கட்டு கட்டி இருந்தவள், தனதருகே இருந்த டேபிள் பேன் காற்றின் உபயத்தில், தலைமுடியை விரித்துப் போட்டுக் காய வைத்தபடியே, கைப்பேசியில் ஏற்றி வைத்திருந்த தனக்கு பிடித்த பாடல்களை ஓட விட்டு ஹெட் போன் மூலம் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள் கண்மூடி.
     என்றுமில்லாத அதிசயமாய் இன்று அவள் முகத்தில் இருந்த புதிய சந்தோஷம் கண்டு அவன் முகமும் தானாய் புன்னகை பூத்தது.
     அவள் விழிகளுக்குத் திரையிட்டிருந்த அவள் இமைகளைக் கண்டு மெலிதாய்ச் சிரித்தவன், இசைக்கேற்ப இமைகளுக்குள்ளே உருளும் அவள் விழிகளின் அசைவையும், தலையின் அசைவையும் தன்னை மீறி ரசித்துக் கொண்டிருக்க, ஏதேச்சையாய் கண்களைத் திறந்தவள், வாயில் அருகே நிற்பவனைப் பார்த்து ஒரு நொடி அதிர்ந்து போய் பின் ஆச்சர்யம் கொண்டு, ஆனந்தமும் கொண்டாள்.
     “எ எப்போ வந்தீங்க நீங்க?!” என்று ஆச்சர்யமாய் அவள் விழிவிரித்துக் கேட்க, இதுவரை அவன் பார்த்திராத அவளின் மையிட்ட கண்கள் அவனை முதன் முறையாய் ஏதோ செய்தன.
     “ம்! இப்போதான்!” என்றவன் அவள் விழிகளில் இருந்து தன் பார்வையை எடுக்க இயலாமல் தவிக்க,
     “எ என்ன அப்படி பார்க்கறீங்க?!” என்றாள் மையு புரியாது.
     “நந்திங்!” என்றவன்,
     “இன்னிக்கு என்ன விசேஷம்?!” என்றபடி உள்ளே வந்து அங்கிருந்த ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அவள் அருகே அமர, அவளுக்கு இத்தனை நாட்களில் இல்லாத ஒரு சிறு தவிப்பும் தயக்கமும் வந்து ஒட்டிக் கொண்டது!    
     “ஓ! நான் புது ட்ரெஸ் போட்டிருக்கேன்னு கேட்குறீங்களா?! அது என் பர்த்டே இன்னிக்கு! ரொம்ப வருஷம் கழிச்சு புது ட்ரெஸ் பிறந்தநாள் அன்னிக்கு கிடைச்சிருக்கு! காயு எடுத்துக் கொடுத்தா?! அதுமட்டும் இல்லை தெரியுமா? இன்னிக்கு என் அம்மா செமையா கவனிச்சாங்க என்னை! மார்னிங்ல இருந்து ஒரே ஸ்பெஷல் கவனிப்புதான்! மையு சோ ஹேப்பி!” என்றவள்,
     “தாங்க்ஸ்!” என்றாள் அவன் கண்களைப் பார்த்து.
     ‘என்ன இவ?! நான் அவளுக்குத் தேங்க்ஸ் சொல்ல வந்தா இவ எனக்குத் தேங்க்ஸ் சொல்றா?!’ என்று ஆச்சர்யமாய் பார்க்க,
     “நேத்து அக்காவைப் போய் பார்த்தீங்களாமே போன் பண்ணி இருந்தாங்க எனக்கு!” என்றாள்.
     “ம்!” என்று இமையசைத்தவன்,
     “சாரி” என்று சொல்ல வர, அவன் சொல்வதற்கு முன்பே அவள்,
     “சாரி!” என்றாள்.
     “ம்?!” என்று கேள்வியாய் அவன் விழிவிரிக்க,
     “நான் நேத்து உங்களை அப்படிப் பேசி இருக்கக் கூடாது! அக்கா செய்தது பெரிய தப்பு! ஆனா எனக்குத் தெரியாதுல்ல?!” என்றவள்,
     “பாவம் தங்கமலர் அம்மா! உங்க எல்லோரையும் விட அவங்கதான் ரொம்ப உடைஞ்சு போயிருப்பாங்க!” என்றாள் வருத்ததோடு.
     “ஆமாம்! ரொம்ப உடைஞ்சி போயிட்டாங்க! ஆனா இனி அவங்க தேறிடுவாங்க! அதுக்கு நீதான் காரணம் தேங்க்ஸ்” என,
     “என்ன நானா? எப்படி?” என்று மையு புரியாது பார்க்க,
     “நேத்து நீ அக்காவைப் பத்தி அவ்வளவு உறுதியா சொல்லலைன்னா நான் அவங்க போனை எடுத்துப் பார்த்திருக்க மாட்டேன்! அவங்களைப் பத்தி எதுவும் தெரிஞ்சும் இருக்காது!” என்றவன், இப்போது அவன் முறையாய்,
     “சாரி!” என்றான்.
     “நீங்க எதுக்கு சாரி?!” என்று அவள் பார்க்க,
     “உன்கிட்ட ரொம்பக் கடுமையா பேசிட்டேனே அதுக்கு” என்றவன்,
     “ப்ச்! பேசிட்டே இருந்ததுல மறந்துட்டேன். பர்த்டே பேபிக்கு விஷ் பண்ணவே இல்லை பாரு! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! சீக்கிரமே தனியா எழுந்து நடக்க ஆரம்பிச்சிடணும்! அடுத்த வருஷம் பிறந்தநாள்  ரொம்பவே இனிமையானதாக அமைய வாழ்த்துக்கள்” என்று மனதார வாழ்த்த,
     ‘என்னமோ தெரியலை! எனக்கு இந்த வருஷ பிறந்தநாளே ரொம்ப இனிமையானதாதான் இருக்கு! ஒருவேளை நீங்க என் வாழ்கையில வந்ததுனாலயா?! இல்லை என் அம்மா இன்னிக்கு என்னை நல்லபடியா பார்த்துக்கிட்டதுனாலயா? தெரியலை!’ என்று யோசித்தபடியே அவள் அவனைப் பார்த்திருக்க,
     “ஹெலோ! என்னாச்சு?!” என்றான் அவள் கண்முன்னே கையசைத்து.
     “ம்! ஒண்ணுமில்ல!” என்றவள்,
     “தேங்க் யூ!” என்றாள்.
     “சரி அப்போ நான் கிளம்பறேன்” என்று அவன் எழுந்து கொள்ள,
     “வெறும் தேங்க்ஸ் சொல்லத்தான் வந்தீங்களா?!” என்றாள் சட்டென வாட்டம் கொண்டவளாய்.
     “ஹான் வேறன்ன இருக்கு நமக்குள்ள?!” என்று அவன் வேண்டுமென்றே கேட்க,
     “ஹான் ஆமாம்! இல்லை!” என்று தடுமாறியவள், சட்டென சமாளிக்கும் விதமாகவும், அவன் எப்படியாவது தனக்கு  பயிற்சி அளிக்கவாவது தினம் தினம் இங்கே வரமாட்டானா என்ற ஏக்கத்துடனும்.
     “நமக்குள்ள ஒன்னு இருக்கு சார்!” என்றாள் அவன் கண்களைப் பார்த்தபடியே.
     “வாட்?!” என்று அவன் பார்க்க,
     “அ அது நீங்க டாக்டர். நான் பேஷன்ட்!” என்றாள் பட்டென.
     “ஓ!” என்றவன், மீண்டும்,
     “ஓகே பை” என்று திரும்ப,
     “ச சார்!” என்றாள் தயக்கமான அழைப்புடன்.
     “ப்ச் என்னதான் வேணும் உனக்கு?!” என்று அவன் சலித்துக் கொள்வது போல் திரும்ப,
     “அ அக்கா ப்ரியாக்கா வெளி ஹாஸ்பிட்டல்ல ஜாயின் பண்ணப் போறாங்களாம்! அதனால, எனக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க இனி வர முடியாதுன்னு சொன்னாங்க! நீ நீங்களும்?” என்று அவள் தயங்க,
     “நானும்?!” என்று அவன் கேள்வியாய் நிறுத்த,
     “கெ கேட்கறேன்னு தப்பா எடுத்துக்கக் கூடாது! நான் எங்களால பீஸ் கொடுக்க முடியாதுதான். அதனால எனக்கு கேட்கவும் உரிமை இல்லைதான்!” என்று அவள் சொல்லச் சொல்ல அவன் முகம் மாறியது.
     “அ ஆனாலும் கேட்கறேன். நி நீங்களும் இ இனிமே எனக்கு பயிற்சி கொடுக்க வர மாட்டீங்களா?!” என்றாள் தயக்கமும், தடுமாற்றமுமாய்.
     அவளது சூழ்நிலையில் இருந்து அவள் அப்படி கேட்டது தப்பில்லை என்றாலும், ஏனோ அவளின் இந்த வார்த்தைகள் அவனுக்கு கோபத்தைத்தான் வரவழைத்தது.
     “இப்போ நீ என்ன சொல்ல வர?! எங்களைப் பார்த்தா காசுக்கு அலையுற கூட்டம் மாதிரி தெரியுதா?” என்றான் இறுக்கமான முகத்துடன்.
     “அ ஐயோ! இல்லை சார்! ஆனா?! தப்புதான் நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது” என்று சட்டென மன்னிப்புக் கோரியவள்,
     “தெரியாம கேட்டுட்டேன்! ச சாரி!” என,
     “நான் ஒண்ணும் உனக்காக உனக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வரலை! என் அக்கா, அவ சொன்னங்கிறதுக்காகதான் வந்தேன்! என் கடமையை  பாதியில விட்டுட்டுப் போற பழக்கம் எனக்கு இல்லை! ஒழுங்கா தினமும் பயிற்சி செய்ய ஆரம்பி. நடுவில நான் வரலைன்னோ, இல்லை ஏதாவது சாக்கு போக்கு வச்சிக்கிட்டோ நீ தினமும் பயிற்சி பண்ணாம இருந்து பாரு! அப்புறம் இருக்கு உனக்கு” என்றுவிட்டு அவன் கோபமாய் அங்கிருந்துக் கிளம்பிவிட, இவளுக்கு ஐயோ என்றானது.
      ‘ச்சே முட்டாள் முட்டாள்! இப்படியா லூசுத்தனமா பேசி வைப்ப அவர்கிட்ட?!’ என்று தன்னையே நொந்து கொண்டவளுக்கு அவன் தன்னிடம் கோபமாய் பேசியது எல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை! அதை விடுத்து, அவன் தினமும் பயிற்சி அளிக்க வருவான் என்பதில் மனம் ஆனந்தக் கூத்தாட, மனதோடு முகமும் எல்லையில்லா பூரிப்பில் மலர்ந்தது…
    ஆனால் அவளது வார்த்தைகளில் நேற்று முதல் அவன் அவள்மேல் வைத்திருந்த மரியாதை தவிடு பொடியாக,
     ‘ச்சே! எவ்ளோ சீப்பா நினைச்சிட்டா என்னைப் பத்தி?! பீஸீக்காகவா நானும் அக்காவும் இவளுக்காக இத்தனை நாள் பார்த்துக்கிட்டோம்! முதல்ல இவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தோமா இவளை விட்டு விலகினோமான்னு இருக்கணும்!’ என்று நினைத்தபடியே தனது காரைக் கிளப்பிக் கொண்டு விரைந்தான் தங்கள் மருத்துவமனைக்கு.
                                                –மான்விழி மருகுவாள்
         
        
    
     

Advertisement