Advertisement

அதன்பின் மையுவை சற்று நேரம் தட்டிக் கொடுத்து அமைதிப் படுத்திவிட்டு, 
     “என்னம்மா இது? அவளை என்னம்மா சொன்ன?!” என்று அழுதபடியே காயத்ரி தாயிடம் கேட்க,
     “நான் என்னத்தடி சொல்லுவேன்?! ஏதோ இருக்குற அசதியிலயும் ஆதங்கத்துலயும் இவகிட்ட நாலு வார்த்தை கோவமா பேசிடறேன்! அதுக்குப் போய் இந்தப் பாவி இப்படி செய்வான்னு நான் நினைச்சேனே?!” என்றவர், மையுவை தன் மேல் சாய்த்துக் கொண்டு வீங்கிப் புடைத்திருந்த அவள் நெற்றியைத்  தடவிவிட்டபடியே அழ, மையுவிற்கும் அழுகைப் பொங்கியது.
     “ஏம்மா? நானும் உன் வயத்துல தானே ம்மா பொறந்தேன்! அப்புறம் ஏம்மா என்னை இப்படி வெறுக்குற?!” என்று மையு அழுதபடியே கேட்க,
      “நான் ஏன்டி உன்னை வெறுக்கறேன்?!” என்று மனம் தாளாமல் மகளை அணைத்துக் கொண்டவர்,
     “வயறு எரியுதுடி உன்னை இப்படி பார்க்கும் போதெல்லாம்! நல்லாதானே உன்னைப் பெத்தெடுதேன்! ஆனா ஓடி ஆடி உழைக்க வேண்டிய வயசுல இப்படி முடமா உட்கார்ந்திருக்கியேன்னு பார்க்க பார்க்க பெத்த வயறு எரியுதுடி! அதுதான்டி உன்னைப் பார்க்கும் போதெல்லாம் கோபமும் வெறுப்புமா வந்து இப்படியெல்லாம் பேசித் தொலைச்சிடறேன்!
     “தப்புதான்! நான் பேசுறதெல்லாம் தப்புதான்! ஆனா என்னடி செய்ய?! வீட்டுக்கு மூத்த பொண்ணு! நீ படிச்ச படிப்புக்கு நீ தலையெடுத்துட்ட, நீ வீட்டைப் பார்த்துக்குவன்னு கனவா கண்டுக்கிட்டு கிடந்த நேரம் இப்படி மொத்தமா படுத்துட்ட?! அந்த ஆதங்கமோ ஏமாற்றமோ, உன்னை பார்க்கும் போதெல்லாம் என்னை மீறி கோவமும், எரிச்சலும் வந்துடுதுடி! இவ்ளோ வளர்ந்து ஆளான புள்ளை இப்படி ஒன்னுத்துக்கும் இல்லாம போச்சேன்னு வயறு எரியுதுடி!” என்று சாந்தி பேசப் பேச, மையுவிற்கு தான் எத்தனை பாரமாக உள்ளோம் என நினைக்கத் தோன்றியது.
     “அப்போ நான் செத்துப் போயிட்டா உங்க யாருக்கும் பாரமா இருக்க மாட்டேன்லம்மா!” என்று கேட்க,
     “ஐயோ! ஏன்க்கா இப்படியெல்லாம் பேசுற?!” என்று  காயத்ரி அழுதபடியே அக்காவைக் கட்டிக் கொள்ள,
     “பாரு இப்போகூட நீதான் என்னைத் தடுக்குற! ஆனா அம்மா பேசாமதானே இருக்கு!” என்றாள் தாயையே ஏக்கமாய் பார்த்தபடி.
     “ஏன்டி மேலும் மேலும் இப்படிப் பேசி என்னை சித்திரவதை பண்ற?! ஏதோ கோவத்துல திட்டுவேன் தான்! இப்படி இருக்கிறதுக்கு போய்ச் சேர்ந்தா நிம்மதியா எடுத்துப் போட்டுடுவேன்னு! அதுக்காக மனசார அப்படி நினைப்பேனாடி?! நீயும் நான் பெத்த புள்ளைதானே!” என்று சாந்தி கண்ணீர் சிந்த, மையுவிற்கும் அழுகை கூடியது.
     ‘ச்சே! நான் எவ்ளோ கஷ்டப்படுத்தறேன் எல்லோரையும்?! எவ்ளோ பாரமா இருக்கேன்! ஒன்னு நான் குணமாகனும் இல்லை செத்துப் போகணும்! இந்த நிலை இப்படியே தொடர்ந்தா என் குடும்பத்தோட நிம்மதி மொத்தமா காணாம போயிடும்! கடவுளே ஏன் என்னை இப்படி முடமாக்கின?! அப்படி என்ன பாவம் செய்துட்டேன் நான்! என்னோட இந்த நிலை மாறவே மாறாதா?! நான் பழைய மாதிரி நடக்கவே மாட்டேனா?! என் அம்மாவுக்கு பாரமா இல்லாம, என் தங்கையோட வாழ்க்கைக்கு தடையா இல்லாம, என் அப்பாவோட கண்ணீருக்கு காரணமா இல்லாம, ஒன்னு கூடிய சீக்கிரம் நான் குணமாகனும், இல்லை செத்துப் போகணும்! தயவு செய்து இனியும் எங்களை சோதிக்காத!’ என்று மனதிற்குள் இருந்த தனது வேதனையை இறைவனிடம் முறையிடுவதைத் தவிர அந்த நேரத்திற்கு அவளால் ஏதும் செய்ய முடியவில்லை!
                       ******
     மறுநாள் விடியற்காலை சாந்தி என்ன நினைத்தாரோ, வீட்டிலிருப்பவர்கள் உறக்கம் களைந்து எழுவதற்கு முன்பு நேரமாகவே எழுந்து கோவிலுக்குச் சென்று மகளுக்காய் அர்ச்சனை செய்து அவள் அடிக்கடி கேட்கும் மல்லிகைப் பூவையும் வாங்கி வந்திருந்தார். அதோடு பல வருடங்களுக்குப் பிறகு, மகளுக்குப் பிடித்த வகையில் பூரி, உருளைக் கிழங்கு, வடை சர்க்கரைப் பொங்கல் என்று காலையிலேயே விதவிதமாய் உணவு தயாராகிக் கொண்டிருக்க, எப்போதும் தாமதமாகக் கண்விழிக்கும் மையு, அன்று சமையல் வாசனை மூக்கைத் துளைத்ததில், இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருந்த போர்வையை விலக்கி மெல்ல எட்டிப் பார்க்க,
     ‘இது நம்ம வீடுதானா?! வீடு முழுவதும் லேசான புகை எட்டிப் பார்க்க, ஊதுபத்தி, சாம்பிராணி, வடை, சர்க்கரைப்பொங்கல்  வாசனை எல்லாம் கலந்து ஏதோ சினிமாவில் வரும் சொர்க்கலோக எபெக்ட் வருது! ச்சே ச்சே ஏதோ கனவு!’ என்று எண்ணியபடியே திருதிருவென முழித்துக் கொண்டிருந்தவளை,
     “எழுந்துட்டியாடி! இந்தா இந்த பூஸ்ட்டை குடிச்சிட்டு  வா. சுடு தண்ணி போட்டு வச்சிருக்கேன். குளிப்பாட்டி விடுறேன் வா” என்று சாந்தி அவளை எழுப்ப,
     ‘ஆத்தி! சத்தியமா இது கனவுதான்! ஆஹா! எத்தனை வருஷத்துக்கு அப்புறம் இப்படி ஒரு கனவு! சும்மா சொல்லக் கூடாது கனவே சும்மா ஜோய்ங்குன்னு ராட்டினத்துல சுத்துற மாதிரி இருக்கு!’ என்று எண்ணியவள், உண்மையாகவே கனவில் பாடுவது போல நினைத்து,
     வடிவேலு பாணியில், ஸ்விங்ங்… இன் த ரைட் ஹம்மிங்கை, “சொய்ங்ங்… இன் த ரைட்! ஐயம் பிளையிங் இன் த ரைட்!” என்று பாட, காயத்ரி வாய்விட்டுச் சிரித்துவிட, 
     “சாந்தி என்னடி ஆச்சு இவளுக்கு?! எழுந்ததுமே இப்படி புரியாத பாஷையில உளறுறா?!” என்றார் காயத்ரியைப் பார்த்து.
     “யம்மா நம்ம வீடு இருக்க நிலைமையையும், நீ குடுத்த பூஸ்டையும் பார்த்து அவளுக்கு ஏதோ ஆயிடுச்சு!” என்று காயத்ரியும் மையுவைப் போல் தாயை கேலி செய்ய,
     “கொழுப்புதான்டி உங்களுக்கு! ஏன் நீங்க சின்ன வயசுல இருக்கும் போது நான் உங்களுக்கு இதெல்லாம் செய்ததே இல்லையா?!” என,
     “அதேதான் ம்மா நாங்களும் சொல்றோம்! ஒன்ஸ் அபான் எ டைம்!” என்று காயத்ரி சிரித்த சிரிப்பில் கனவு இல்லை நிஜம் என்று உணர்ந்த மையு சொல்ல, காயத்ரிக்கு மேலும் சிரிப்பு பொங்கியது!
     “உனக்கு போய் பூஸ்ட் போட்டுட்டு வந்தேன் பாரு!” என்று சாந்தி பூஸ்டை எடுக்க, சட்டென்று அவர் கையில் இருந்து பிடுங்கிக் கொண்ட மையு, ஒரே மடக்கில் பூஸ்ட்டை குடித்துவிட, சாந்தி அவளை வெகுவாய் முறைத்தார்.
     “ஈஈஈ! நல்லா இருக்கும்மா! போன வராது பொழுது போனா கிடைக்காது! அதான் லபக்குன்னு குடிச்சிட்டேன்!” என்றவள்,
     “உனக்கு பூஸ்ட்டேல்லாம் போடத் தெரியும்னு எனக்கு இப்போதான் ம்மா தெரியும்!” என்று கலாய்க்க,
     “அக்கா இதுக்கே ஷாக் ஆனா எப்படி?! சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா!” என்ற காயுவைப் பார்த்து,
     “என்னடி என்ன சர்ப்ரைஸ்?!” என்று மையு காலண்டரைப் பார்க்க, 
     ‘அட இன்னிக்கு நம்ம பொறந்தடே!’ என்று உள்ளுக்குள் ஒரு நொடி சந்தோஷம் பொங்க, அடுத்த நொடியே.
     ‘ம்கும்! நான் இருக்க இருப்புக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்!’ என்றும் தோன்றியது!
     “ஏன்டி கூப்பிடுறது காதுல விழலையா?! வா தண்ணி நல்லா காஞ்சிடுச்சு!” என்று மகளை எழுப்பி நிற்க வைக்க, அவளது தந்தையும் தாயுமாய் சேர்ந்து அவளை மெல்ல தூக்கிச் சென்று குளியலறையில் அமர வைத்தனர்.
     சாந்தி அவள் தலையில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சிறிது நேரம் தேய்த்துவிட, அவளுக்கு ஹெட்மசாஜ் செய்வது போல் இதமாக இருக்க, தூக்கம் கண்களைச் சொக்கிக் கொண்டு வந்தது மீண்டும்.
     “அடியே என்ன உறங்குற?! எழுந்துரு!” என்று பட்டென்று சாந்தி கன்னத்தில் தட்ட,
     “யம்மா நல்லா இருக்குது இன்னும் கொஞ்ச நேரம் தேய்ச்சு விடேன்!” என்றாள் கண்களை மூடியபடியே.
     “அது சரி!” என்ற சாந்தி மகளின் ஆசையை வெகு நாட்களுக்குப் பின் புறக்கணிக்காமல், மீண்டும் சிறிது நேரம் தேய்த்து விட்டு பின் சூடாய் நீரை ஊற்றி சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் காய்ச்சி வெதுவெதுவென இருந்த சீயக்காய் எடுத்து அவள் உச்சந்தலையில் தேய்த்து,
     “என் பொண்ணைப் பிடிச்ச கஷ்டமெல்லாம் இன்னையோட விலக்கட்டும்! அவளுக்கு இனியாச்சும் நல்ல வழி காமி சாமி!” என்றபடியே நீரை மோர்ந்து ஊற்ற, இறைவனுக்கு அந்தத் தாயின் வேண்டுதல் கேட்டதோ! 
                          -மான்விழி மயக்குவாள்…
      
           
        
    
     
  
    
    
        

Advertisement