Advertisement

                                                                16 
     தம்பி புன்னகையுடன் கிளம்பிச் செல்வதைப் பார்த்து ப்ரியாவிற்கும் மகிழ்ச்சி பிறந்தாலும், ஏதோ ஒன்று வித்தியாசமாய் தோன்ற, ப்ரேம் வேலைக்குக் கிளம்பிய சில நிமிடங்களுக்குப் பின் தனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் சென்றாள்.
     மையு அத்தனை முறை தனக்கு அழைத்திருப்பதைப் பார்த்ததும் குற்ற உணர்ச்சியில் தவித்துப் போனவள்,
     ‘ச்சே நம்ம பிரச்சனையில அவளைப் பத்தி சுத்தமா மறந்துட்டேனே?! அவ எத்தனை முறை அழைச்சிருக்கா?!’ என்று எண்ணியபடியே மையுவிற்கு அழைக்க,
     ப்ரியாவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்ததும், அத்தனை நேரம் தாயின் மீதிருந்த கோபம் மறந்து அழைப்பை ஏற்ற மையு,
     “ப்ரியக்கா?! எப்படி இருக்கீங்க?!” என்றாள் ஆசையாய்.
     “நான் நல்லா இருக்கேன்டா. சாரி சாரி டா! இருந்த பிரச்சனையில நான் உன்னை” என்று ப்ரியா முடிப்பதற்குள்,
     “என்னை மறந்துட்டீங்களா அக்கா?!” என்றாள் மையு வருத்தமாய்.
     “அ அது வந்துடா! இங்க எல்லாமே தலைகீழா நடந்து முடிஞ்சிடுச்சு!” என்று ப்ரியா நடந்த அத்தனையையும் கூற,
     “முட்டாளா அக்கா நீங்க?! உங்க தம்பி உங்கமேல கோபப்பட்டதுல தப்பே இல்லை! உங்களுக்காக அவர்கிட்ட வேற கோபமா பேசிட்டேன்!” என்ற மையு,
     “படிச்சவங்க தானே நீங்க?! இப்படியா யோசிக்காம யார் யாருக்கோ பயந்து முடிவெடுப்பீங்க?! இப்போ உங்களால எத்தனை பேருக்குக் கஷ்டம்?! தங்கமலர் அம்மாவுக்கு எவ்வளவு வேதனையா இருந்திருக்கும்?! அதோடு உங்க தம்பி, அப்பான்னு உங்க குடும்பமே எவ்வளவு நம்பிக்கையும் அன்பும் வச்சிருந்தாங்க உங்கமேல, இத்தனைக்கும் இதெல்லாம் நீங்க அவங்களைப் பத்தி சொன்னதுல இருந்து நானா புரிஞ்சிகிட்டது! இன்னும் நேர்ல அவங்களோட பழகினது கூட இல்லை நான்! ஆனா எனக்கே நீங்க அவங்க மனசை நோகடிக்கிற மாதிரி இப்படி ஒரு காரியத்தைப் பண்ணது அவ்வளவு கோபம் வருது! தெரியுமா?!” என்று மையு ஏதோ தன் உடன்பிறந்தவளான காயத்திரியிடம் பேசுவது போல் அத்தனை உரிமையுடன் அவளைத் திட்ட, ப்ரியாவிற்கு ஏதோ போல் ஆனது! ஆனால் மையுவின் மீது எந்த கோபமும் வரவில்லை இவள் யார் தன்னைக் கேள்வி கேட்பது என்று. மாறாய், தன்னைவிட தன் குடும்பத்தினரைப் பற்றி இவ்வளவு யோசிக்கிறாளே என்று ப்ரியாவிற்கு ஆச்சரியம் தான் ஏற்பட்டது.
     “தப்புதான் மையு!” என்று உண்மையை ஒப்புக் கொண்டவளிடம் மையுவால் அதற்கு மேல் கோபத்தைக் கடை பிடிக்க முடியாமல் போக,
     “என்ன தப்புதான்! தப்புன்னு நீங்க ஒத்துக்கிட்டா எல்லாம் சரியாகிடுமா?!” என்றாள் தங்கமலர் அவளைக் கண்டிப்பது போல்.
     அவள் கண்டிப்பது தங்கமலரின் செய்கையை போலவே இருக்க, ப்ரியாவிற்கு சட்டென சிரிப்பும், அதோடு சேர்ந்து கண்ணீரும் வர,
      “ச சாரிம்மா!” என்றாள் தங்கமலரிடம் கேட்பதாய் நினைத்து,
     “என்ன சாரி?! சாரி சொல்லிட்டா நீ செய்தது தப்பு இல்லைன்னு ஆகிடுமா?!” என்று மையு மீண்டும் மிரட்ட, அந்தப் பக்கம் பதில் ஏதும் இல்லை!
     பதில் இல்லாது போனதும், “ப்ரியக்கா?! ப்ரியாக்கா?!” என்று குரல் கொடுக்க, அவளிடமிருந்து,
     “ம்!” என்ற வார்த்தை மட்டுமே. அவள் குரலில் தடுமாற்றம் தெரிய,
     “அக்கா?! அழறீங்களா?! ச சாரிக்கா?! நான் ஏதோ கோபத்துல? சாரி சாரிக்கா!” என்று மையு சட்டென தன் எல்லை உணர்ந்து அவளிடம் மன்னிப்புக் கோர,
     “இ இல்லடா! நீ பேசினதுல எனக்கு எந்தக் கோபமும் இல்லை! அ அம்மாவும் உன்னைப் போலவே இப்படி திட்டிப் பேசி நாலு அறை விட்டிருந்தா கூட நான் சந்தோஷப் பட்டிருப்பேன். அ ஆனா, அம்மா என்கிட்ட ஒருவார்த்தை கூட பேசலை மையு!” என்று ப்ரியா உடைந்து போய் அழ, மையுவிற்கு அவளை எப்படிச் சமாதானப் படுத்துவது என்றே சில நொடிகள் புரியவில்லை! 
     “அக்கா ப்ளீஸ் அழாதீங்க க்கா! அம்மா சீக்கிரமே உங்ககிட்ட பேசுவாங்க! அழாதீங்கக்கா!” என்று அவளைத் தேற்ற,
     “ம்! மையு. பேசணும்! தம்பி இப்போ என்னைப் புரிஞ்சிகிட்டு பார்க்க வந்த மாதிரி அம்மாவும் சீக்கிரமே என்னைப் புரிஞ்சிக்கணும்!” என்று ப்ரியா அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு சொல்ல,
     ‘என்ன?! மிஸ்டர். குலோப்ஜாமுன் அக்காவைப் பார்க்கப் போனாரா?! நாம பேசும் போது அவ்வளவு கோபமா பேசினாரு! எப்படி அவ்ளோ சீக்கிரத்துல மனசு மாறினாரு?!’ என்று யோசித்தபடியே,
     “ஓ!” என்றாள் மையு.
     “என்ன ஓ?! சொல்லப் போனா அவன்தான் என் போனை எடுத்துட்டு வந்து கொடுத்து உனக்குக் கால் பண்ண சொன்னதே!” என்றாள் ப்ரியா.
     “ஓ?!” என்று இப்போது மையு பெரிய ஓ போட,
     “என்னடி எதுக்கெடுத்தாலும் ஓ! ஓ! ன்னு கிட்டு?!” என்று ப்ரியா எதுவும் புரியாது கேட்க,
     “ப்ச்! ஒண்ணுமில்லை க்கா!” என்ற மையு,
     “ஆமாம்! உங்க தம்பி என்ன சொன்னார்?!” என்றாள்.
     “அவன் என்ன சொன்னான்?! என் மொபைலைப் எடுத்து செக் பண்ணி இருக்கான்! அப்போதான் அவனுக்கு விஷயம் தெரிஞ்சிருக்கு! அதான் என்னைப் பார்க்க வந்தான். இல்லாட்டி இப்போவும் அவன் வந்திருக்க மாட்டான்!” என்ற ப்ரியா,
     “அன்னிக்கு எவ்ளோ கோபப்பட்டான் தெரியுமா மையு! ப்ரேமை அடிச்சே அடிச்சிட்டான்! அவன் அவ்ளோ கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை!” என்று ப்ரியா தம்பியின் புதிய பரிமாணத்தை மையுவிடம் சொல்லிக் கொண்டிருக்க,
     “ஓ! குலோப்ஜாமுனுக்கு அடிக்குற அளவுக்கு எல்லாம் கோபம் வருமோ?!’ என்று எண்ணிக் கொண்டே,
     “ஆனா நீங்க ரெண்டு பேரும் பண்ண வேலைக்கு அடிக்காம கொஞ்சுவாங்களாம என்ன?! என்னைக் கேட்டா உங்களையும் ரெண்டு போட்டிருக்கணும்!” என்று மையு மித்ரனுக்கு பரிந்து பேச,
     “உன்கிட்ட போய் சொன்னேன் பாரு!” என்ற ப்ரியா,
     “சரிடா நான் போனை வைக்கிறேன். வீட்ல இன்னும் நிறைய வேலை இருக்கு. நேரம் கிடைக்கும் போது கூப்பிடறேன் நீயும் கூப்பிடு! ஒழுங்கா எக்சர்சைஸ் பண்ணு. உடம்பைப் பார்த்துக்கோ. ஹான் அப்புறம், நான் புது ஹாஸ்பிட்டல்ல ஜாப்க்கு அப்ளை பண்ணி இருக்கிறதுனால், என்னால இனி உனக்கு பயிற்சி கொடுக்க வர முடியாது. ஆனா” என்று அவள் முழுதாய் சொல்ல வந்ததைச் சொல்லி முடிப்பதற்குள்,
     “அண்ணி உங்களை அப்பா கூப்பிடுறாரு” என்று தீபா வந்து அழைக்க,
     “இதோ வரேன் தீபா” என்றவள்,
     “சரி மையு. நான் அப்புறமா கூப்பிடறேன்” என்று போனை வைத்துவிட, அங்கு மையு,
     ‘என்ன சொல்ல வந்தாங்க அக்கா? வேற ஜாப் போறதுனால இனி இங்க வர மாட்டாங்களா?! ஐயோ அப்போ மறுபடியும் நான் பழைய மாதிரியே இருக்க வேண்டியதுதானா?!’ என்று எண்ணியவளுக்கு தான் இந்த நிலையில் இருந்து மீளவே முடியாதோ என்ற எண்ணம் தோன்றிவிட, அவள் மீண்டும் உடைந்து போனாள். இத்தனை நாட்களாக மித்ரன் கொடுத்த நம்பிக்கை எல்லாம் அவன் வராது போனதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாய் கரையத் துவங்கி இருக்க, இனி எப்போதுமே அவர்கள் இருவரும் வர மாட்டார்கள் என்ற எண்ணம் அவளை மொத்தமாய் நொறுக்கிப் போட்டது! ஆனால்?!
                              *****
     “ஏய் இப்போ என்னத்துக்குடி இப்படி கொரங்கு மாதிரி மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டு உட்கார்ந்து இருக்க காலையில இருந்து? 
     உன் தம்பிக்கு முட்டை சமைச்சு சோறு போட்டுட்டது ஒரு குத்தமா?!” என்று சாந்தி கடையில் இருந்து வந்ததும் வராததுமாக அவளைச் சீண்ட,
     “இப்ப எதுக்கு வந்ததும் வராததுமா என்னை வம்புக்கு இழுக்குற?! உன் வேலையை மட்டும் பார்த்துட்டுப் போ! இருக்குற டென்ஷன்ல ஏதாச்சும் திட்டிடப் போறேன்!” என்றாள் மையுவும் இருந்த மனஉளைச்சலில்.
     “ஏன் திட்ட மாட்ட?! உன்னைப் பெத்ததும் இல்லாம எருமை மாட்டு வயசு வரைக்கும் உனக்கும் சேர்த்து உழைச்சுக் கொட்டுறேன் பாரு! அதுக்கு நீ திட்டத்தானே செய்வ?” என்று சாந்தி ஆரம்பிக்க,
     “ஐயோ போதும் நிறுத்தறியாம்மா! நீ தினம் தினம் போடுற பருப்பு சோறுக்கு நீ உழைச்சி உழைச்சிக் கொட்டுறதை தான் நான் பார்க்குறேனே! வீட்டைக் கட்டினதுனாலதான நீ ஓடுற! என்னமோ எனக்கு சோறு பொங்கிப் போடவே நீ சம்பாதிக்கிற மாதிரி பேசுற?! இதோ காலையில இருந்து இப்போ சாயந்திரம் வரைக்கும் பெத்த பொண்ணு எதுவும் சாப்பிடலையேன்னு ஒரு வார்த்தை பாசமா சாப்பிட சொல்லி இருப்பியா நீ? இதே உன் புள்ளை சாப்பிடாம இருந்தா விட்டிருப்பியா?! உன் வயித்துல தானே நானும் பொறந்தேன்! நான் முடமா போயிட்டேன்னு என்னை இப்படி ஒதுக்கி வைக்கிறியே! நானும் வயசுப் பிள்ளைதானே! எனக்கும் பசி, ஆசைன்னு எல்லாம் இருக்கும்தானே! எத்தனை வருஷம் இருக்கும் நீ ஒரு நல்ல துணி எடுத்துக் குடுத்து?! ஏன் தம்பி கல்யாணத்துக்குக் கூட ஒரு புதுத்துணி, அட்லீஸ்ட் ஒரு நைட்டி எடுத்துக் குடுத்தியா நீ?! ஒரு முழம் பூ வாங்கித் தர சொல்லிக் கேட்டா கூட, வீட்ல கெடக்க உனக்கு பூ எதுக்குன்னு கேட்குற?! நானும் பொண்ணுதானே ம்மா?! எனக்கும் ஆசை உணர்ச்சிகள் எல்லாம் இருக்கும்தானே!” என்று கோபத்திலும் ஆதங்கத்திலும் இதுநாள் வரை மனதில் இருந்ததைக் கொட்ட, சாந்திக்கு அவள் மனதின் ஆதங்கம் புரியவில்லை! அதற்கு மாறாய், உழைத்து உழைத்து களைத்துப் போய் வந்திருந்த எரிச்சலில்,
     “பேசுடி இன்னும் என்னென உன் மனசுல இருக்கோ எல்லாத்தையும் கொட்டு! அப்போதானே உன் மனசுல என்மேல எவ்ளோ வஞ்சம் இருக்குன்னு தெரியும்?!” என்றவர்,
     “இப்படிப் படுத்தே கெடக்குற உனக்கு, இந்த வயசுலயும் நீ போறதை எல்லாம் எடுத்துக் கொட்டுறேன் பாரு! நீ இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ?!” என, மையுவிற்கு இதுவரை இருந்த கோபம் போய் சட்டென அழுகைப் பொங்கிக் கொண்டு வந்தது.  
     ‘ச்சே இப்படி ஒரு வாழ்க்கை வாழுறதுக்கு பதில் செத்தே போகலாம்!’ என்று தோன்ற, கோபத்திலும் வேகத்திலும், அருகே ஏதேனும் பொருட்கள் கிடைக்கிறதா என்று தேடி, எதுவும் இல்லாது போனதில் சுவற்றில் முட்டிக் கொண்டால் உயிர் எல்லாம் போகாது இருக்கும் வலியோடு இன்னும்தான் அதிகம் அனுபவிக்க வேண்டி வரும் என்று யோசிக்கத் தோன்றாமல், பையித்திக்காரி போல் தன்னைத் தானே வேகமாய் சுவற்றில் முட்டிக் கொள்ள, சாந்தி பதறிப் போய் அவளருகே ஓட, அவர் தடுக்கத் தக்க கோபத்தின் வேகத்தில் அவரைத் திமிறிக் கொண்டு மையு மீண்டும் வேகமாய் முட்டிக் கொள்ள வலியில் தலை கிறுகிறுவென சுற்றியது.
     மையு தடுமாறி மயங்கி விழப் போன நேரம் பார்த்து காயத்ரி வீட்டினுள் நுழைய, அவளின் நிலையைப் பார்த்த நொடி, கையிலிருந்த ஹேண்ட்பேகை அப்படியே கீழே போட்டுவிட்டு,
     “ஐயோ அக்கா…!” என்று பதறியவாறே ஓடிச் சென்று அவளைத் தாங்கிக் கொண்டாள் இன்னொரு தாயாய்.
     

Advertisement