Advertisement

                                  *****
     ப்ரேம் வீட்டின் மொட்டை மாடிக்கு அவனை அழைத்துச் சென்ற மித்ரன்,
     “எதுக்காக என் அக்காவை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?!” என்றான் சுற்றி வளைக்காமல்.
     “எ என்ன ந நான் ஏமாத்தினேனா?! எ அப்படி எல்லாம் இல்ல! நான் அவளை” என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் போதே மித்ரனின் முகம் கடுமையை ஏந்த,
     “நான் உ உங்க அக்காவை உண்மையாவே காதலிச்சேன்! அ அதான்! அவங்ககிட்ட சொல்லி அவங்களை”என்று அவன் முடிப்பதற்குள்,
     “அவளை தினம் தினம் இந்த நகை பிரச்சனையைச் சொல்லி சொல்லி ப்ரெயின் வாஷ் பண்ணி உன் பக்கம் இழுத்துகிட்ட!” என்றான் கடுமையாய்.
     “அ அப்படி எல்லாம் இல்லை சார்! அந்த நகுலனை அவங்க கல்யாணம் பண்ணி இருந்தா நிச்சயம் அவங்க சந்தோஷமா இருந்திருக்க மாட்டாங்க! ஆனா நான் அவங்களை ரொம்ப நல்லா பார்த்துப்பேன். அதான் நான்” என்று அவன் என்ன சொல்ல என்று தெரியாமல் விழிக்க,
      “அவளை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?!” என்று நக்கலாய்ச் சொன்னவன், பார்வையால் அவனை எரித்தபடியே,
      “உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என் அக்கா சந்தோஷமா இருப்பான்னு எங்களுக்கு தோணனும்! அதை நீயே சொல்லிக்கூடாது!” என்றுவிட்டு, தன் அக்கா செய்த முட்டாள் தனத்திற்காய் தன் உள்ளங்கைகளை இறுக மூடி, கோபத்தை கட்டுப்படுத்த சில நொடிகள் கண்மூடி நின்றான்.
     முஷ்டிகள் இறுக கண்மூடி நின்றிருந்தவனைப் பார்க்க, ப்ரேமுக்கு உள்ளுக்குள் குளிரெடுக்க, பயத்தில் எச்சில் விழுங்க அவனையே பார்த்தபடி நின்றிருந்தான்.
     சில நொடிகள் கழித்து சிறு பெருமூச்சுடன் கண் திறந்தவன், சரி, நடந்தது நடந்து போச்சு! ஆனா இனி என் அக்காவுக்கு உன்னால சின்னக் கஷ்டம் கூட வரக் கூடாது! அவளை மகாராணி மாதிரி பார்த்துக்கணும் நீ! இன்னிக்கு நான் வரும்போது அவ துணி துவைச்சுகிட்டு இருக்கா! அதுவும் அவளுக்கு இப்போதான் உடம்பு சரியாச்சு! எங்க வீட்ல அவ எப்படி இருந்தா தெரியுமா?! ஆனா இங்க வந்து,” என்று பாதியில் நிறுத்தியவன்,
     “இத்தனை வருஷமா சம்பாதிக்கிறியே ஒரு வாஷிங்மெஷின் கூடவா வாங்கி போட முடியலை உனக்கு?!” என்றான் பிரேமைப் பார்த்து.
      ‘வாஷிங் மெஷின் வாங்கினா போர் மோட்டார்லாம் யாரு வாங்கிக் கொடுப்பா?! நீயா?!’ என்று மனதிற்குள் நக்கலடித்த பிரேம்,
     ‘துணி துவைச்சது ஒரு குத்தமாடா?!’ என்ற ரீதியில் பார்த்து வைக்க,
     “என்ன அங்க மைன்ட் வாய்ஸ்?!” என்று மித்ரன் அதற்கும் மிரட்ட,
      “நான் எதுவுமே நினைக்கலை சார்! நீங்க சொல்றதை பார்த்துகிட்டு இல்லை கேட்டுகிட்டு இருக்கேன்!’ என்றுவிட்டு மீண்டும்,
     ‘துணி துவைச்சதுக்கே இப்படி சொல்றானே?! இவன் அன்னிக்கு எங்களை அடிச்சு விரட்டின விரட்டலுக்கு இவன் இனி அவ அக்கா பக்கம் வரவே மாட்டான்னு நினைச்சு, நான் அவளைத் திட்டித் துவைச்சது தெரிஞ்சா என்ன ஆகும்?!’ என்று நினைக்க, அதற்கு பதிலாய், அவன் மானசாட்சியே,
     ‘ஹென்! துணிக்கு பதில் நீ கந்தலாவ!’ என்று குரல் கொடுக்க, 
     ‘ஞே!’ என்ற ரியாக்ஷனோடு, பவ்யமாய் அவனைப் பார்த்திருந்தான் ப்ரேம்.
      “மறுபடியும் என்ன யோசிக்கிற?!” என்று மித்ரன் புருவம் உயர்த்தி மிரட்டலாய் கேட்க,
     ‘டேய் உன்னை எதிர்த்துதான் பேச முடியாது! யோசிக்க கூடவா கூடாது!’ என்று மூளைக்குள்ளேயே முனகியவன்,
     “ஒ ஒண்ணுமில்லை சார்! இனி நானே துணி துவைக்கிறது, பாத்திரம் தேய்க்கிறது, கூட்டுறது, சமைக்கிறதுன்னு எல்லா, எல்லா வேலையையும் நானே பார்த்துடறேன் சார்” என்றான் பதட்டத்தோடு.
     அவன் பதிலில் கேவலமாய் ஒரு லுக் விட்டவன், “அப்போ வேலைக்குப் போய் சம்பாதிக்கிறது யாரு?! அவளா?!” என்று நக்கலாய் கேட்க,
     ‘ஐயோ என்ன சொன்னாலும் மடக்குறானே?!’ என்று இவன் முழிக்க,
     “அதுக்கெல்லாம் என்ன செய்யணுமோ அதை நான் பார்த்துக்கறேன்! நீ அவகிட்ட இனி ஏதாச்சும் தப்பு தப்பா சொல்லி ப்ரெயின் வாஷ் பண்ணி ஏமாத்த நினைச்ச?” என்று அவன் மிரட்டலாய் நிறுத்த,
     “ம்ஹும் சார்! இனி நான் வாயே திறக்க மாட்டேன்!” என்றான்.
     “ம்!” என்றவன்,
     “சரி வா கீழ போகலாம்” என்று படிகளில் இறங்க, ப்ரேமும் எதையோ யோசித்தபடியே மித்ரனைப் பின் தொடர்ந்தான்.
      “அப்படி என்ன தனியா பேசிட்டு இருந்தீங்க இவ்ளோ நேரமா?!” என்று ப்ரியா புன்னகையும், ஆச்சர்யமுமாய் கேட்க,
     அவள் சிரிப்பைப் பார்த்த பிரேமுக்கு, ‘நீ ஏன் சிரிக்க மாட்ட?! என்னை அவன்கிட்ட தனியா கோர்த்துவிட்டுட்டுல்ல?!’ என்று மனைவியை முறைக்க,
     “ஹெலோ! அங்க என்ன முறைப்பு?!” என்றான் மித்ரன் சொடுக்குப் போட்டு,
     ‘ஐயோ! இவனை மறந்து முறைச்சிட்டேனே?!’ என்று தன்னையே திட்டிக் கொண்டவன்,
     “முறைக்கல்லாம் இல்லை சார்! பார்த்தேன்! ஜஸ்ட் பார்த்தேன் சார்!” என்றான் மழுப்பலாய்.
     எனினும் அவனை நம்பாத பாவனையில் பார்த்தவன், “சரிக்கா நீ வா கிளம்பலாம்” என்றான் பிரியாவைப் பார்த்து.
     “எ எங்க?!” என்று அவள் கேட்பதற்குள்ளேயே இவன் முந்திக் கொண்டு கேட்க, அவனை முறைத்தவாறே,
     “கடைக்குப் போய் வீட்டுக்கு வேண்டிய பொருள் எல்லாம் பார்த்து வாங்கிட்டு வரலாம்” என்ற மித்ரனைப் பார்த்து பிரேமின் வீட்டினர் மனம் மகிழ, மகிழ வேண்டியவளின், முகமோ வாடிப் போய்விட்டது நொடியில்.
     “என்னக்கா அமைதியா நிக்குற? வா கிளம்பு” என்று மித்ரன் மீண்டும் அழைக்க,
     “இல்லை மித்து! எனக்கு எதுவும் வேண்டாம்” என்றாள்.
     “ஏன்?! அம்மா பேசலைன்னா?!” என்று மித்ரன் அவள் மனமறிந்துக் கேட்க,
     “ம் அதுக்காகவும்தான்!” என்றாள்..
      “ப்ச்! அம்மாவோட கோபமெல்லாம் பெருசா அக்கா! இன்னிக்கு நான் உன்னைப் புரிஞ்சிகிட்ட மாதிரி அம்மாவும் சீக்கிரமே புரிஞ்சிக்குவாங்க! ஆனா என்ன நீ சில விஷயங்களை என்கிட்டயாவது மனம் விட்டு பேசி இருக்கலாம்! அதைவிட்டுட்டு இப்படி ஒரு முடிவு எடுத்தது ரொம்பத் தப்பு!” என்றான் மனதில் இருந்த கோபத்தை மறையாமல்.
     ‘தப்புதான் பெரிய தப்புதான்!’ என்று மனதோடு வேதனை கொண்டவள்,
     “என்னை மன்னிச்சுடுடா மித்து! எ என்னால உன்னோட கல்யாணமும்” என்றவளுக்கு கண்கள் கலங்க,
     “ப்ச்! என்னக்கா இது?!” என்று அவள் கண்களைத் துடைத்துவிட்டவன்,
     “அதைப் பத்தி எல்லாம் எனக்கு எந்த வருத்தமும் இல்லக்கா! ஆனா உன் வாழ்க்கை?! உனக்கு” என்று சொல்ல வந்தவன், ப்ரேமின் பெற்றோர் அங்கு இருப்பது உணர்ந்து பாதியில் நிறுத்திக் கொண்டான்.
     ‘எங்க முன்னாடியே இவன் இப்படி பேசுறானே?! விட்டா இப்போவே பிரிசுக் கூட்டிட்டுப் போய்டுவான் போலிருக்கே!’ என்று பிரேம் கலக்கத்துடன் பார்க்க,
     “எ எனக்கென்ன மித்து?! அவர் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கறார்!” என்று ப்ரேமின் நெஞ்சில் ஐஸ்க்ரீம் ஊற்றினாள் ப்ரியா.
      ‘அட என் செல்லக்குட்டி வெல்லக்கட்டி பொண்டாட்டியே!’ என்று அவன் முகம் கொள்ளா சிரிப்புடன் ப்ரியாவைப் பார்க்க, மித்ரனோ, நம்பாமல் இருவரையும் பார்த்திருந்தான்.
     அவனது நம்பாத பார்வையை புரிந்து கொண்ட பிரேம், “நிஜம்மா நிஜம்மா நான் அவளை, அவங்களை நல்லா பார்த்துக்குவேன் சார்!” என்றான் வாக்குறுதி போல்.
     “ம்!” என்று தலையாட்டிய மித்ரன்,
     “சரிக்கா வா போகலாம்” என்று மீண்டும் அழைக்க,
     “இல்ல மித்து! அம்மா என்னை மன்னிக்கிற வரைக்கும் நான் நம்ம வீட்ல இருந்து எதையும் வாங்கிக்க மாட்டேன்!” என்றாள் ப்ரியா பிடிவாதமாய்.
     ‘பையித்திகாரி! பைத்தியக்காரி! தானே தேடி வர லக்ஷ்மியை வேண்டாம்னு சொல்றாளே! இவளை!’ என்று மனதிற்குள் மனைவியை திட்டித் தீர்த்தவன், தன் தந்தையைப் பார்த்து ஏதோ சைகை செய்ய, அவரும் மகனுக்கு தோதாய்,
     “ஏம்மா! வேண்டாம்னு சொல்ற?! இதெல்லாம் பிறந்த வீட்ல செய்ய வேண்டியது முறைதானே? போய் என்னென்ன தேவையோ வாங்கிக்கோம்மா!” என்று எடுத்துக் கொடுக்க, அவள் பிரேமைப் பார்த்தபடியே,
      “எல்லாம் முறைதான் மாமா. ஆனா எங்க கல்யாணத்துல எல்லாம் முறையாகவா நடந்தது?! அதுவும் உங்க மகனுக்கு இந்த வரதட்சணை, சீர் எல்லாம் சுத்தமா பிடிக்காது! அவர் என்னை எனக்காக மட்டுமே கல்யாணம் செய்துகிட்டார்! எங்க வீட்ல எனக்குக் கொடுக்கப் போற சீருக்காக இல்லை! இல்லைங்க பிரேம்?!” என்று அவள் தன் மாமனாரிடம் கூற ஆரம்பித்துக் கணவனிடம் வந்து நிற்க,
      “அ ஆமாம் ப்ரியா! நீ நீங்க மட்டும் போ போதுமே எனக்கு!” என்று வெளியில் சிரித்துக் கொண்டே, உள்ளுக்குள்,
     ‘அடிப்பாவி அன்னிக்கு நான் உன்னை என் பக்கம் இழுக்க யூஸ் பண்ண வார்த்தைகளை வச்சே இன்னிக்கு எனக்கு நீ ஆப்பு வைக்கிறியே?!’ என்று உள்ளுக்குள்ளேயே புலம்பிக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை ப்ரேமுக்கு.
     “ஆனா அக்கா நீ இங்க இவ்ளோ வேலையெல்லாம் செய்து கஷ்டப்படுறியே?!” என்றவன், சில நொடி யோசனைக்குப் பின்,
     “சரி விடு! நாளையில் இருந்து நம்ம வீட்ல வேலை பார்க்குற வள்ளி அக்காவை இங்க அனுப்பி வைக்கிறேன் அவங்க வீட்டு வேலையெல்லாம் பார்த்துக்குவாங்க!” என்றான் அக்கா எந்த சிரமும் படக் கூடாது என்று.
     ‘என்ன வேலைக்காரியை அனுப்பி வைக்கிறானா?! அவளுக்கு சம்பளம் யார் கொடுப்பா?!’ என்று பிரேம் யோசிக்க,
     “வேண்டாம் மித்து! அவங்களுக்கு சம்பளம் கொடுக்குற அளவுக்கு இப்போ இங்க சூழ்நிலை சரியில்லை! நான் வேற ஹாஸ்பிடல்ல ஜாப்க்கு அப்ளை பண்ணி இருக்கேன்! நானும் வேலைக்குப் போக ஆரம்பிச்சதும், அழைச்சுக்கறேன்!” என ப்ரியா சொல்ல,
     ‘ஓ! வேற ஜாப்க்கு அப்ளை பண்ணிட்டாளா?!; என்று யோசித்தவன்,
      ‘ம்! அம்மாவுக்கு இருக்க ரோஷம் பொண்ணுக்கும் இருக்கத்தானே செய்யும்!’ என்று நினைத்துக் கொண்டு, அவள் இப்போதைக்கு தங்கள் மருத்துவமனையில் வேலைக்கு வர மாட்டாள் என்பது புரிந்து சில நொடிகள் அமைதி காத்தான்.
     பின் அவனே,“சரி நீ போகும் போது போ! அதான் உன் வீட்டுக்காரர் வேலைக்குப் போறாரே! அவரு கொடுத்துடப் போறாரு!” என்றவன், பிரேமைப் பார்த்து,
     “என்ன பிரேம்? அக்காவுக்காக நீங்க இதைக் கூடவா செய்ய மாட்டீங்க?!” என,
     “ஹா ஹான்! இதைக் கூடவா செய்ய மாட்டேன்?!” என்று மித்ரன் சொன்னதையே சொல்லி அசடு வழிய பார்த்த பிரேம்,
     ‘அடப்பாவிங்களா நான் என்னென்னமோ நினைச்சுக் கல்யாணம் பண்ணா, ஒரே எபிசோட்ல என்னை இந்த கதிக்கு ஆளாக்கிட்டீங்களே டா?!’ என்று மனதுள் அழுது கொண்டே வெளியே சிரித்து வைத்தான் மித்ரனுக்காய்.
     “அப்போ சரிக்கா நான் கிளம்பறேன்! ஏதவாதுன்னா எனக்குக் கால் பண்ணு!” என்றவன், கையோடு எடுத்து வந்திருந்த அவளது கைபேசியை அவளிடம் எடுத்துக் கொடுக்க, அதைப் பார்த்ததுமே ப்ரியா புரிந்து கொண்டாள் இதை வைத்துதான் மித்ரன் தன்னைப் பற்றி அறிந்திருப்பான் என்று.
     அவள் மித்ரனைக் கேள்வியாய் பார்க்க, ‘ஆம்!’ என்பது போல் தலையசைத்தவன்,
     ‘அவளாலதான் அக்கா நான் உன் போனைத் தேடித் பார்த்தேன்! அவளால தான் இப்போ உண்மையைத் தெரிஞ்சு உன்னை புரிஞ்சுகிட்டதும்! அவளுக்குத்தான் நன்றி சொல்லணும்! தேங்க் யு தேங்க் யூ மைத்ரேயி! என்று மானசீகமாய் மையுவிடம் பேசியவன்,
     “அந்த அந்தப் பொண்ணுக்கு கால் பண்ணிப் பேசுக்கா” என்றான் ப்ரியாவிடம்.
     “எ எந்த பொண்ணு?!” என்று ப்ரியா புரியாமல் கேட்க,
    ‘இதென்னடா புதுக்கதை?! யார் அந்தப் பொண்ணு?!’ என்று ப்ரேம் இருவரையும் பார்க்க,
      “அதான் க்கா! அந்தப்பொண்ணு மையு! மைத்ரேயி!” என்றவனின் புன்னகை முகத்தில் இதுவரை யாரு கண்டிராத மாற்றம் தெரிய, அவனை அதிசயமாய்ப் பார்த்த ப்ரியாவிடம்,
     “நீ புது ஜாப் போகப் போற இல்லைக்கா! சோ உனக்கு அந்தப் பொண்ணுக்கு பிசியோ கொடுக்க டைமிங் செட் ஆகாது சோ நானே அவளைப் பார்த்துக்கறேன்!” என்று புதியதாய் ஒரு செய்தியையும் சொல்லிவிட்டுச் செல்ல, தம்பியின் இந்த புதிய பரிமாணத்தை அதிசமாய் பார்த்தபடி வழியனுப்பினாள் அவனின் தமக்கை…
                                  -மான்விழி மனம் கொய்வாள்…
       
    
          
 
  
    
    
          
    
    
     
     
    
    
 
   
     
 
 
     

Advertisement