Advertisement

 அதைப் பார்த்தவனுக்கு சட்டென மனம் கலங்க, “இவ்ளோ பாசம் வச்சிருக்க நீ, ஏன் க்கா எங்க எல்லோர் கிட்டயும் மறைச்சு இப்படி ஒரு துரோகத்தை செய்யத் துணிஞ்ச?!” என்றான் வாய்விட்டு.
     அந்தப் பக்கம் லைனில் காத்திருந்த மையு, ‘என்ன சொல்றார் இவர்?! ப்ரியாக்கா என்ன பண்ணாங்க?! ஏன் இவர் இப்படி சொல்றார்?!’ என்று பயந்து போனவள்,
     ”ஹெலோ ஹெலோ!” என்று கத்த, அவளது குரல் கேட்டு,
     ‘ஐயோ! இவ இன்னும் லைன்ல தான் இருக்காளா?!’ என்று எண்ணியபடியே,
     “ஹெலோ! நான் அப்புறம் பேசறேன்” என்று போனை வைத்துவிட, மையுவிற்கு ஏதோ போல் ஆனது.
     ‘ஐயோ! ப்ரியா அக்காவுக்கு என்ன ஆச்சு?! இவரு வேற எதையுமே சொல்லாம போனை வச்சுட்டாரே!’ என்று வேதனை கொண்டவள், மீண்டும் மனம் தாளாமல் அவனுக்கு அழைக்க,
     “ஒருமுறை சொன்னாப் புரியாதா உனக்கு!” என்றான் கடும் கோபத்துடன்.
     “இ இல்லை! நீங்க ஏதோ ப்ரியாக்கவா பத்தி சொல்லிட்டு இருந்தீங்களே! அதான் பயந்து போயிட்டேன்! ப்ரியாக்கா ப்ரியாக்காக்கு ஒன்னும் ஆகலை இல்ல! அ அவங்க நல்ல இருக்காங்க தானே?!” என்றாள் கலவரத்துடன்.
     “அவளுக்கு என்ன?! நாங்க யாரும் வேணாம்னு அவ வாழ்க்கையை தானே தேடிப்போய் அமைச்சுக்கத் தெரிஞ்சவளாச்சே! ரொம்பவே நல்லாதான் இருப்பா! இங்க அவளால நாங்கதான் எங்க அம்மாவையே இழக்க இருந்தோம்!” என்று அவன் மனதில் தோன்றியதை ஏதோ ஒரு வேகத்தில் சொல்லிவிட,
      “அம்மா?! தங்கமலர் அம்மாக்கு என்ன ஆச்சு?! ப்ரியாக்கா என்ன செஞ்சாங்க?!” என்றாள் மையு இப்போது மேலும் பதட்டத்துடன்.
     அவள் பதறியதைக் கேட்டு, ‘இந்தப் பொண்ணு எதுக்கு இப்படி ஓவர் ரியாக்ட் பண்றா?!’ என்று சலித்துக் கொண்டவன்,
     “ஏய்! நீ எதுக்கு எல்லாத்துக்கும் இப்படி ஷாக் ஆகுற? இது எங்க குடும்பம்! எங்க விஷயம்! நீ தேவையில்லாம சும்மா சும்மா போன் பண்ணி என்னைத் தொல்லை பண்ணாத!” என்று அவன் மீண்டும் போனை வைத்துவிட, அவளுக்கு ஏதோ போல் ஆனது.
     ‘அவங்க குடும்பம்! ம் ஆமாம்ல! நான் ஏன் அவங்க குடும்பத்துல இருக்கவங்களுக்காக இவ்ளோ பதறுறேன்!’ என்று எண்ணியவளால், அப்போதும் தங்கமலரையும் ப்ரியாவையும் பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை!
     ‘என்னதான் ஆச்சுன்னு தெரியலையே! யார்கிட்டன்னு நான் போய் கேட்பேன்! ஜென்சிம்மாவுக்கும் அவங்களைப் பத்தி அவ்வளவா தெரியாதே!’ என்று குழம்பிப் போனாள்.
      நீண்ட நேரம் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் சொல்லிய ஓரிரு விஷயங்களில் இருந்து ஓரளவு அங்கு நடந்ததை யுகித்துப் பார்க்க முடிந்திருந்தது.
      விஷயம் புரியத் துவங்கியதும், அவளால் ஒன்றை மட்டும் நிச்சயம் உணர முடிந்தது. நிச்சயம் ஏதோ தவறு நடந்திருக்கிறது. ப்ரியா அக்கா அப்படி எல்லாம் செய்யக் கூடிய ஆளே இல்லை! ஆனா அப்படிச் செய்திருக்காங்கன்னா ஏதோ ஒன்னு இருக்கு! என்று அவள் உறுதியாய் நம்பினாள்.
     ‘இல்லை! அக்காவைப் பத்தி இவர் இப்படி நினைக்கிறது கொஞ்சம் கூட சரியில்லை!’ என்று எண்ணியவள்,
     ‘போன் பண்ணாதான கட் பண்ணி கட் பண்ணி விடுறாரு! பேசாம வாட்சப்ல மெசேஜ் போட்டு விடுவோம்! இப்போ இல்லாட்டியும் பொறுமையாவாச்சும் படிக்கட்டும்!’ என்று சொல்லிக் கொண்டவள், தன் மனதில் உள்ளதை கொட்டத் துவங்கினாள் வாய்ஸ் மெசேஜ் வடிவில்…
     அவளது அழைப்பைத் துண்டித்தவனும் அங்கு மனச்சுமையோடு அவனது அக்காவையும் தாயையும் நினைத்தபடியே தான் அமர்ந்திருந்தான் ப்ரியாவின் கைப்பேசியைக் கையில் வைத்துப் பார்த்தபடியே…
                                 ******
     “என்ன ப்ரியா நீ?! உங்க ஹாஸ்பிட்டல்ல வேலைக்குத்தான் போக முடியாது. அட்லீஸ்ட் எனக்கு வர வேண்டிய சம்பளப் பணத்தையாவது நான் போய் வாங்கிட்டு வரேன்னு சொன்ன அதுவும் வேணாங்குற! இப்போ வொர்க் பண்ற ஹாஸ்பிட்டல்ல அடுத்த மாசம்தான் சம்பளம் கொடுப்பாங்க! அதுவரைக்கும் வீட்டுச் செலவுக்கு என்ன பண்றது?!” என்று அவளிடம் சீறிக் கொண்டிருந்தான் சில நாள் முன்பு வரை, மேம் மேம் என்று அவளை பவ்யமாய் அழைத்துக் கொண்டிருந்தவன்.
     “சொன்னா புரிஞ்சிக்க மாட்டீங்களா ப்ரேம்! அவங்களே உங்க சாலரி அக்கவுண்ட்ல போட்டுவிடுவாங்க! அப்படி இல்லைனா நான் இந்த மாசச் செலவைப் பார்த்துக்கறேன் போதுமா!” என்று ப்ரியாவும் பதிலுக்குப் பேச,
     “நீ பார்த்துக்குறியா? எப்படி?!” என்று பிரேம் புருவம் உயர்த்த,
     “நான் ஹாஸ்பிட்டல்ல வொர்க் பண்ணதுக்கு எனக்கும் சாலரி உண்டு. இத்தனை வருஷமா வொர்க் பண்ண சாலரி அமவுண்ட் அப்படியே என் அக்கவுண்ட்லதான் இருக்கு” என்றாள்.
     “பணம் எடுக்க கார்ட் வேணுமே நீதான் உன் மொபைலை கூட வீட்லயே வச்சுட்டு வந்திருக்கியே?!” என்று அவன் நக்கலாய் சொல்ல,
     “இல்லை அன்னிக்கு கோவிலுக்கு பர்ஸ் எடுத்துட்டு தான் வந்திருந்தேன் அர்ச்சனை தட்டு வாங்க. அதுலதான் என்னோட கார்டும் இருக்கு” என்றவளை,
     “அப்பா இந்த ஒரு விஷயமாவது உருப்படியா செய்தியே?!” என்றான் கேலியாய்.
      ப்ரியாவிற்கு இப்போதெல்லாம் சரத் என்ற தேளிடமிருந்து தப்பித்து ப்ரேம் என்ற பாம்பிடம் மாட்டிக் கொண்டது போல் இருந்தது. ஆம்! திருமணம் ஆனா அடுத்த நாளிலிருந்தே ப்ரேமின் குணம் கொஞ்சம் கொஞ்சமாய் தெரியத் துவங்கியது ப்ரியாவிற்கு. சரத் என்ற தேளிடமிருந்துதாவது ஒரு வார்த்தை சொன்னால் போதும் காப்பாற்ற ஒரு குடும்பமே இருந்தது. ஆனால் தான் எடுத்த முட்டாள்தனமான முடிவால், இன்று இந்தப் பாம்பிடம் சிக்கிக் கொண்டு தவிப்பதை யாரிடமும் சொல்லக் கூட முடியாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தாள் ப்ரியா.
    நகுலனைப் பற்றி என்னென்ன குறை சொல்லி தன் மனதை மாற்றினானோ அத்தனை குணமும் இவனிடம்தான் அதிகமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்தது ப்ரியாவிற்கு! ஆனாலும் பாசமாகத்தான் நடந்து கொள்கிறான் என்ற குழப்பமும் சேர்ந்து அவளை அவனைப்பற்றி எந்த முடிவுக்கும் வரவிடாமல் தடுத்தது அவள் மனது!
     ப்ரேம் அவளைக் காதலித்தான் தான். ஆனால், அவர்கள் வீட்டினர் இப்படி அவளை நிராதரவாக விட்டதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை! அவளை மணமுடிப்பதால், அப்பெரிய வீட்டின் மாப்பிள்ளை என்ற மரியாதைக் கிடைக்கும் என்று நினைத்தவனுக்கு, அவளுக்கே அவ்வீட்டின் மகள் என்ற உரிமை பறிபோனதில் பெரும் ஏமாற்றமாய் இருந்தது. அதோடு வசதியான வீட்டு மாப்பிள்ளையாக வசதியாக வாழலாம் என்ற கனவும் பறிபோனதில் அவனுக்குப் பெருத்த ஏமாற்றமே!
                                    *****
     நெடு நேரமாய் ப்ரியாவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவன், மனதை திசைமாற்ற முயற்சித்து தனது கைப்பேசியின் வலைதள இணைப்பை ஆன் செய்ய, வாட்சபில் அவளது செய்தி வந்திருந்தது.
     சற்று நேரத்திற்கு முன்பு அவள் கால் செய்திருந்த அதே நம்பரில் இருந்தே அவள் மெசேஜ் செய்திருந்ததில்,
     “பச் இவளுக்கு என்னதான் பிரச்சனை?! சும்மா போன் போட்டு தொல்லை பண்ணது இல்லாம இப்போ மெசேஜ் வேற?!” என்று அவன் ஓபன் செய்து பார்க்க,
      “ப்ளீஸ் ப்ளீஸ் சார்! ஒரு நிமிஷம் ஒரே ஒருநிமிஷம் நான் அனுப்பின மெசேஜைக் கேளுங்க! ப்ளீஸ்” என்று அவள் ஆரம்பித்திருக்க,
      “ப்ச்!” என்ற உச்சுக்கொட்டலோடு சலிப்பாய்தான் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தான்.
     ஆனால் எடுத்த எடுப்பில் கெஞ்சலாய் ஆரம்பித்திருந்தவளோ, முதல் கேள்வியையே அவன் முகத்தில் அறைவது போல் கேட்டிருந்தாள் சுளீரென்று.
     “என்ன சார் சொன்னீங்க நீங்க?! முதல்ல நீங்க சொன்னது எனக்குப் புரியலை! நீங்க கட் பண்ண பிறகு பொறுமையா யோசிச்சதும்தான் எனக்குப் புரிஞ்சது!”
     “ப்ரியா அக்கா துரோகம் பண்ணிட்டாங்கன்னா சொன்னீங்க?!” என்று கேட்டிருந்தவள்,
     “அங்க என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது! ஆனா ஒரு வார்த்தை சொன்னீங்களே நீங்க! ப்ரியாக்கா ஏதோ துரோகம் செஞ்சுட்டாங்கன்னு! எப்படி சார் நீங்க அப்படி சொல்லலாம்! ப்ரியா அக்காவோடு நான் பழகி கொஞ்சநாட்கள் கூட ஆகலை! என்னாலேயே அவங்களைப் பத்தி ஒரு நிமிஷம் கூட தப்பா யோசிக்க முடியலை! ஆனா நீங்க எத்தனை வருஷம், எத்தனை வருஷம் அவங்களோடு ஒண்ணா வளர்ந்திருப்பீங்க! அவங்க உங்கமேலயும், தங்கமலர் அம்மா மேலயும் உங்க குடும்பத்து மேலயும் அவ்ளோ பாசம் வச்சிருக்காங்க தெரியுமா?! அவங்க போய் தங்கமலர் அம்மாவுக்கும் உங்களுக்கும் துரோகம் செய்வாங்களா?!” என்று கேட்டிருந்தாள் கோபத்தோடு.
     “அவங்க தப்பான முடிவு எடுத்திருக்கலாம். ஆனா அதுக்கு காரணம் நிச்சயம் அவங்க சுயநலமா இருந்திருக்காது! நான் சொல்றது உண்மைன்னும் நீங்க நினைக்கிறது தப்புன்னும் சீக்கிரமே உங்களுக்குத் தெரிய வரும்! அப்போ நீங்க ப்ரியாக்காவைப் பத்தி அப்படி ஒரு வார்த்தை சொன்னதுக்காக என்கிட்டே மன்னிப்புக் கேட்டே ஆகணும்!” என்று கெஞ்சலில் ஆரம்பித்து காட்டமாய் முடித்திருந்தவளின் பேச்சில் அசந்து போய் அமர்ந்திருந்தான் அவன்…
                                    -மான்விழி வருவாள்…
 
    
         
         
 
 
   
 
 
    
           

Advertisement