Advertisement

        14
     ப்ரியாவின் திருமணம் நடந்து மித்ரனின் திருமணம் நின்று இன்றோடு பதினைந்து நாட்கள் கடந்திருந்தன.
     திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் எல்லாம் ஓரிரு நாட்களில் கிளம்பி இருக்க, தங்கமலரும் இப்போது ஓரளவு உடல்நிலை தேறி இருந்தார். ஆனால் மனநிலை மட்டும் கொஞ்சமும் மாறாமல் அப்படியேதான் இருந்தது அவருக்கும், மித்ரனுக்கும். ராஜசேகரும், கிருஷ்ணனும் கூட ஓரளவு மனதைத் தேற்றிக் கொண்டு வேலைக்குக் கிளம்பி இருந்தனர். ஆனால், மித்ரனோ தாயைப் போலவே மிகவும் உடைந்து போயிருந்தான் அக்காவின் இந்த எதிர்பாராத முடிவால்.
     “டேய் மித்ரா! என்னடா இது இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டு இருக்க? நீ அம்மாவுக்கு எடுத்து சொல்லி அவங்களைத் தேற்றுவன்னு பார்த்தா, உன்னை நாங்க தேற்ற வேண்டியதா இருக்கு!” என்று கிருஷ்ணன் அவனருகே வந்து அமர்ந்து சொல்ல,
     “ப்ச்! இப்போ என்ன அண்ணா?” என்றான் விட்டேத்தியாய்.
     “இப்படியே உட்கார்ந்துட்டு இருந்தா எப்படிடா?! அந்தப் பொண்ணு ரஞ்சனியை விட அருமையான பொண்ணு உன் வாழ்க்கையில வரணும்னு எழுதி இருக்கும் போல! அதான் இந்தக் கல்யாணம் நின்னு போயிருக்கு” என்று கிருஷ்ணன் அவன் ஏதோ தனது திருமணம் நின்று போன சோகத்தில் இப்படி இருப்பதாய் எண்ணிப் பேச, மித்திரன் அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தான்.
      “இப்போ எதுக்கு முறைக்கிற?! என்ன அந்தப் பொண்ணுதான் உனக்கு வேணுமா?! சரி சொல்லு நானே அவங்க வீட்ல போய் பேசறேன் மறுபடியும்” என,
      “ப்ச்! என்னைக் கொஞ்சம் தனியா விடுறியா அண்ணா!” என்றான் மித்திரன் சலிப்பாய்.
     “இப்படியே இருந்தா எப்படிடா?! அங்க ஹாஸ்பிடல்ல ஒரே சமயத்துல, எல்லா பிஷியோதேரபிஸ்ட்டும் வராம போனதுல புதுசா ஒருத்தர் அப்பாயின்ட் பண்ணி பார்த்துட்டு இருக்கோம்! இருந்தாலும், நீயும், ப்ரியாவும் பார்க்கிற மாதிரி வராதுல்ல!” என,
     “தயவு செஞ்சி அவ பேரை என் முன்னாடி சொல்லாத!” என்றான் மித்ரன் கோபத்தைக் கட்டுப் படுத்தி.
     “ஏய்! என்னடா நீ, இப்படிப் பேசுற?! அவ அப்படி என்ன தப்பு செய்துட்டா?! அவ மனசுக்கு பிடிச்சவனை அவ கல்யாணம் செய்துகிட்டா! அவ வாழ்கையை தீர்மானிக்கிற உரிமை அவளுக்கு இல்லையா?!” என்றான் இப்போது கிருஷ்ணனும் கோபமாய்.
     “ஏன்? அது இந்த சம்மந்தம் பேசுறதுக்கு முன்னாடியே அவளுக்குத் தீர்மானிக்கத் தெரியாத?! இல்லை வீட்ல சொல்லணும்னுதான் தெரியாத? அவளை என்ன அவ்ளோ பாராபட்சம் காட்டியா அம்மா வளர்த்தாங்க! நம்மளை விட அதிகமா அவமேல பாசம் வச்சிருந்தாங்களே!” என்று ஆதங்கம் தாளாமல் மித்ரன் கேட்க, அந்நேரம் பார்த்து மனோகர் அங்கு வந்தார்.
     “ஏய்! சித்தப்பா வரார்! அமைதியா இரு!” என்று கிருஷ்ணன் அவனை அடக்க முற்பட,
     “வரட்டும் எல்லாம் அவராலதான்! அவர் ஒழுங்கா இருந்திருந்தா இன்னிக்கு அவ இப்படி பண்ணிட்டு போயிருக்க மாட்டா! அம்மா இவ்ளோ கஷ்டபட்டு உட்கார்ந்திருக்க மாட்டாங்க!” என்றவன், அதோடு விடாமல்,
     “இன்னும் ஏன் சித்தப்பா ஊருக்கு கிளம்பலை! பாவம் உங்க பொண்டாட்டியும், பிள்ளையும் அங்க உங்களுக்காக காத்துகிட்டு இருப்பாங்களே!” என்றான் நக்கலாய்.
     “டேய் மித்ரா!” என்று கிருஷ்ணன், அவனை அமைதிப்படுத்த முயல,
     “அவன் பேசட்டும் கிருஷ்ணா. அவன் பேசுறதுல எந்தத் தப்பும் இல்லை” என்ற மனோகர்,
     “இன்னிக்கு எல்லோரும் கஷ்டப்படுறதுக்கு நான்தான் முக்கிய காரணம்!” என்று மனோகர் மனம் நொந்து சொல்ல,   
     “காலம் கடந்த ஞானம் வந்துருக்கு உங்களுக்கு?!” என்றான் மித்ரன் இப்போதும்.
     “ஹேய் சும்மா இருடா!” என்று அவனை அடக்கிய கிருஷ்ணன்,
     “ஏதாவது பேசணும்னு வந்தீங்களா சித்தப்பா. வாங்க வெளில போய் பேசலாம்” என்ற கிருஷ்ணன், எழுந்து வெளியே சென்றுவிட, மித்ரன் இருவரையும் முறைத்தபடி மனதிற்குள் தனது அக்காவை எண்ணி கோபம் கொண்டான்.
     ‘அவ என்கிட்ட மட்டுமாச்சும் சொல்லி இருந்தா கூட இந்த அளவுக்கு அம்மா உடைஞ்சு போயிருக்க மாட்டாங்க! நீ இப்படி பண்ணி இருக்கக் கூடாதுக்கா இப்படிப் பண்ணி இருக்கக் கூடாது!’ என்று அவன் மனதிற்குள் சொல்லிக் கொண்டிருக்க, அவனது கைப்பேசி அழைத்தது.
     “ப்ச் இதுவேற?!” என்று சலிப்புடன் அதனை எடுத்து அழைப்பைத் துண்டித்தவன், தனிமையை விரும்பி எழுந்து சென்று தன் கதவைச் சாற்றி விட்டுவர, மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு!
     “ப்ச் யார் இது? கட் பண்றோம்னு தெரிஞ்சும் திரும்பத் திரும்ப கூப்பிட்டுகிட்டே இருக்கிறது?!” என்று சலிப்புடன் போனை அட்டென்ட் செய்தவன்,
     “ஹெலோ! அதான் கட் பண்றேன்னு தெரியுது இல்ல?! திரும்பத் திரும்ப எதுக்கு கால் பண்ணிட்டே இருக்கீங்க?” என்றான் மறுமுனையில் யார் என்னவென்றே தெரியாமல்.
     “என்ன குலோப்ஜாமூன் இந்த எகிறு எகிறுது?!” என்று மெல்ல முனகியவள்,
     “என்ன சார் நீங்க? போன்ல கூட அமைதியா பேச மாட்டீங்களா?!” என்றாள்.
     ‘யார் குரல் இது?! ஏதோ சின்னக் குழந்தை குரல் மாதிரி இருக்கே?!’ என்று யோசித்தவன்,
     “யார் பேசுறது?!” என்றான்.
     “நான்தான் உங்க மைத்து ஞாபகம் இல்லையா?! பதினஞ்சு நாள்ல என்னை மொத்தமா மறந்துட்டீங்களா?!” என்றாள் அவள் குரலில் சோகம் சேர்த்து.
     ‘உங்க மைத்துவா?!’ என்று குழம்பியவன்,
     “மைத்து?! யார் மைத்து?!” என்றான் இப்போதும் புரியாமல்.
     “சுத்தம்!” என்றவள்,
     “நான் மைத்ரேயி. ப்ரியா அக்காவோட பிரெண்ட். உங்களுக்கும் பிரெண்ட் மாதிரி.” என்று அவள் நினைவு படுத்த,
     “ஓ! நீயா?!” என்று அவன் சப்பென முடித்துவிட, அவள் முகம் மாறிவிட்டது.
     “சாரி! நீங்க ஹனிமூன் எங்கயாச்சும் போயிருக்கீங்களோ?! அதான் நான் போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணதுல கோபம் வந்துடுச்சா! சாரி சாரி சார்!” என்று அவள் அவன் எதுவும் சொல்வதற்கு முன்பே ஏதேதோ கற்பனை செய்து கொண்டு பேச,
     “கல்யாணமே நின்னு போச்சு இதுல ஹனிமூன் யார்கூட போக?!” என்றான் அவனும் இருந்த கடுப்பில்.
     “ஹை! கல்யாணம் நின்னுடுச்சா?!” என்று அவள் இன்ப அதிர்ச்சியில் குஷியுடன் கேட்க,
     “ஹலோ!” என்றான் காட்டமாய்.
     “ஹை! யோ! கல்யாணம் நின்னுடுச்சான்னு கேட்க வந்தேன் சார்! ஒரு ஒரு வேகத்துல டங்கு! டங்கு ட்விஸ்ட் ஆகி ஹை! கல்யாணம் நின்னுடுச்சான்னு வந்துடுச்சு சார்!” என்று அவள் விளக்கம் கொடுத்தாலும் உள்ளுக்குள் நிஜமாகவே அவனது கல்யாணம் நின்று போனது அவளுக்கு ஏனோ மிக மிக சந்தோஷமாகவே இருந்தது.
     “அது சரி!” என்றவன்,
     “எதுக்கு இப்போ கால் பண்ண?!” என்றான்.
     “இல்லை ப்ரியா அக்கா?! அன்னிக்கு நீங்க வந்துட்டு போனீங்க இல்ல! அதுக்கு அப்புறம் அவங்க போன் பண்ணவே இல்லை! நான் உங்க கிட்ட கொடுத்து அனுப்பினேனே ஒருவாழ்த்துமடல், அதைப் படிச்சிட்டு கூட அட்லீஸ்ட் ஒரு மெசேஜ் கூட அவங்க அனுப்பலை தெரியுமா?!” என்றவள், சட்டென ஏதோ உணர்ந்தவளாய்,
     “ஹையோ! உங்க கல்யாணம் நின்னா மாதிரி அக்கா கல்யாணமும் நின்னுபோச்சா?!” என்றாள் பதட்டமாய்.
     அவளது பதட்டத்தில் அவளது உண்மையான அக்கறையும் அன்பும் தெரிய, “இல்ல அவளுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு!” என்றான் அவளுக்காய் பொறுமையைக் கடைபிடித்து.
     “ஓ!” என்றவள்,
     “அ அப்போ ஏன் அக்கா ஒரு போன் கூட பண்ணலை! அட்லீஸ்ட் மேசெஜாச்சும் பண்ணியிருக்கலாம்ல?!” என்றாள் வருத்தமாய்.
     “ம்! அதை அவகிட்டயே போய் கேளு” என்று அவன் போனைத் துண்டித்துவிட,
     “லூசு லூசு டாக்டர்! அவங்க போன் எடுத்தால் இவங்களுக்கு ஏன் கால் பண்ணப் போறேன்!” என்று தலையில் அடித்துக் கொண்டு புலம்பியவள், மீண்டும் அவனது கைப்பேசிக்கு அழைக்க,
     “ஹேய் உனக்கு இப்போ என்னதான் பிரச்சனை? யார்கிட்ட பேசணும்னு நினைச்சியோ அவங்ககிட்ட கால் பண்ணிப் பேச வேண்டியதுதான?! எதுக்கு என் உயிரை வாங்குற?!” என்று அவன் சிடுசிடுக்க,
     “அது, அவங்க போன் எடுக்கவே இல்லை! அதான் உங்களுக்குக் கால் பண்றேன்!” என,
     ‘ஏன் ஏன் எடுக்கலை! எதுவும்  பிரச்சினை ஆகி இருக்குமோ?!’’ என்று ஒரு நொடி பதறியவன்,
     ‘இல்லை இல்லை! அப்படி எதுவும் இருக்காது!’ என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லி கொண்டு, சட்டென ஏற்பட்ட உந்துதலின் பெயரில், மையு லைனில் இருக்கும் போதே, ப்ரியா திருமணம் முடிந்த தினத்திலிருந்து செல்லாமல் இருந்த அவளின் அறைக்குச் சென்றான் எதையோ தேடி.  
     அவன் அவள் அறைக்குச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த வீட்டில் இருந்தவர்கள், என்ன திடீர்னு அவ அறைக்குப் போறான் என்று பார்க்க, அவன் அங்கு எதிர்பார்த்தது போலவே, அவளுடைய கைப்பேசி அங்கே அவளது டிரெஸ்ஸிங் டேபிளின் மேலேயே இருந்தது. அதைக் கையில் எடுத்தப் பார்த்தவன் விரல்கள் கைபேசியை இயக்கும் பொத்தானில் பட, அவளது கைப்பேசியின் வால்பேப்பரில் இருந்த தங்களது குடும்பப் புகைப்படம் அவனைப் பார்த்துச் சிரித்தது.
   

Advertisement