Advertisement

                                                                    13
      ப்ரியா அவர்கள் கொடுத்த சீரை வேண்டாம் என்று மறுத்ததோடு அல்லாமல் கண்களில் கண்ணீர் வழிய விசும்பலோடு தங்கமலரையும், தம்பி மித்ரனையும் பார்த்தவாரே அங்கிருந்து சென்றது தங்கமலரின் மனதை வெகுவாய் நிலைகுலையச் செய்தது.
     ‘தப்பு பண்றேனோ?! நான் தப்பு பண்றேனோ?! அவளை இப்படி ஒரே நொடியில நிராதரவா விட்டுடேனோ?!’ என்று மனம் அடித்துக் கொள்ள, எப்போதும் அவருக்கு இருக்கும் ரத்தக்கொதிப்பு இப்போது இன்னும் கூடுதலாகி அவரைக் கீழே தள்ளியது.
     ப்ரேமும், ப்ரியாவும், புக் செய்து வந்திருந்த காரிலேயே கிளம்பிச் சென்றிருக்க, இங்கே வீடு மொத்தமும், தங்கமலரின் நிலையால் ப்ரியாவை மறந்து போனது.
     நொடிகளில் தங்கமலருக்கு அவசரசிகிச்சை அளித்த கிருஷ்ணன், அவர் ஓரளவு தெளிந்து எழுந்ததும், “எதுக்கும் அம்மாவை ஒரு டூ டேஸ் ஹாஸ்பிட்டல் அப்செர்வஷன்ல வச்சுப் பார்க்கிறது நல்லதுப்பா” என்றான் தந்தையிடம்.
      உடனே சின்ன மகனைப் பார்த்து, “மித்ரா கார் எடு” என்ற ராஜசேகர், நொடியும் தாமதிக்காமல் மனைவியைக் கைத்தாங்கலாய்  அழைத்துக் கொண்டு காரின் பின் சீட்டில் அமர, கிருஷ்ணன் முன் சீட்டில் ஏறிக் கொண்டான். மித்ரனின் கவனம் வண்டி ஓட்டுவதிலும் தாயிடமும் மாறி மாறி நிலைதிருந்தது.
     அவர்கள் வண்டி கிளம்பியதும், சாருவும் பதட்டத்துடன் சரத்தை வண்டி எடுக்கச் சொல்லி அவர்கள் காரைப் பின் தொடர, மனோகரும், கிருஷ்ணனின் மனைவி ராதாவும், திருமணத்திற்காய் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களும் மட்டுமே அங்கு எஞ்சி இருந்தனர்.
     பெண்ணின் திருமணம் எதிர்பாராத விதமாய் நடந்தேறியதே மனோகருக்கு பேரதிர்ச்சியாய் இருக்க, அண்ணி அப்படி நடந்து கொண்டதும் அவருக்கு உடல் நிலை சரியில்லாது போனதும் மனோகரை பெரிதாய் பாதித்திருந்தது.
     அழக் கூட முடியாது சிலையாய் நின்றிருந்த சின்ன மாமனாரை, “மாமா! மாமா!” என்று குரல் கொடுத்து, நிஜ உலகிற்கு இட்டு வந்த ராதா,
     “வந்து உட்காருங்க மாமா! அத்தைக்கு ஒன்னும் ஆகாது! ப்ரியா அவ விரும்பினவரைத் தானே திருமணம் முடிச்சிருக்கா அவ கண்டிப்பா நல்லா இருப்பா. அதோடு அத்தையோட கோபமெல்லாம் ஒரு கோபமா? கொஞ்சா நாள்ல அவங்களே ப்ரியாவை வீட்டுக்குக் கூப்பிடுவாங்க பாருங்க” என்று சமாதானப் படுத்தும் விதமாய் பேச, மனோகருக்கும் அண்ணி அப்படி ஒரேயடியாக மகளை விட்டு விட மாட்டார் என்ற நம்பிக்கை இருந்ததன் பெயரில் மெல்ல நடந்து அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தார்.
     அவர் அமர்ந்ததும், “வள்ளி மாமாவுக்கு ஏதாவது குடிக்கக் கொண்டு வா!” என்றாள் ராதா தங்கள் வீட்டு உதவிப் பெண்மணியிடம்.
     வள்ளி நொடியில் ஓடிச்சென்று குளிர்பெட்டியில் வைக்கப் பட்டிருந்த ஜீஸை டம்ப்ளரில் ஊற்றிக் கொண்டு வந்து,
     “எடுத்துக்கோங்க அய்யா!” என்று அவரிடம் கொடுக்க,
     “மத்தவங்களுக்கும் கொண்டு வந்து கொடு வள்ளி” என்றாள் ராதா உறவினர்களுக்கும் சேர்த்து.
     “நான் போய் இந்தக் கீர்த்தி பொண்ணு எங்கதான் இருக்கா என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன். முதல்ல போன் பண்ணப்போவே எடுக்கல” என்றபடியே கீர்த்திக்கு டயல் செய்தபடி தங்கள் அறைக்குச் சென்றாள் ராதா.
     அங்கு கவி அம்மாவின் நிலை தற்போது ஓரளவு சீராகி இருக்க, போன் ரிங் அடிப்பது கேட்டு வெளியே வந்தவள்,
     “சொல்லுங்க அண்ணி அக்கா வீட்டுக்கு வந்துட்டாளா?” என்றாள் கீர்த்தி அங்கு நடந்தது எதுவும் அறியாமல்.
     “நல்லா கேட்டடி! உன்னை நம்பி அவளை உன் கூட அனுப்பினோம் பாரு எங்களைச் சொல்லணும்! எங்கடி போன நீ?!” என்றாள் கடுமையாய்.
     “என்ன அண்ணி ஏன் இவ்ளோ கோபமா பேசுறீங்க?! என்ன ஆச்சு?!” என்று கீர்த்தி கலக்கத்துடன் கேட்க,
     “நீ முதல்ல வீட்டுக்கு வா!” என்றவரிடம்,
     “நா நான் இங்க நம்ம ஹாஸ்பிட்டல்ல இருக்கேன் அண்ணி. கவியோட அம்மாவுக்கு திடீர்னு செகண்ட் அட்டாக் வந்துடுச்சு! அதான் அக்காவை ஆட்டோ பிடிச்சு போக சொல்லிட்டு இங்க வந்தேன்” என,
     “ஓ!” என்று யோசனையுடன் கேட்ட ராதா,
     “நம்ம ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கியா?! அப்போ ஒன்னு செய்! நீ அங்கேயே இரு. அம்மாக்கு பிபி அதிகமாகிடுச்சுன்னு அங்கதான் அண்ணாவும், மித்ரனும் மாமாவும் அவங்களை அழைச்சிட்டு வந்துட்டு இருக்காங்க! அவங்க வந்ததும் அத்தைக்கு எப்படி இருக்குன்னு பார்த்துட்டு அவங்க கொஞ்சம் நார்மல் ஆனதும் நீ கிளம்பி வா” என்றவர் அவளிடம் மற்ற எதையும் அப்போது சொல்ல வேண்டாம் என்று நினைத்து வைத்துவிட, வந்திருந்த உறவினர் பாட்டி ஒருவர்,
      “என்னடியம்மா இந்தப் பொண்ணு ஊமைக் கொட்டானாட்டம் இருந்துகிட்டு இப்படி ஒரு காரியத்தை செய்துட்டு குடும்பத்தையே நிலைகுலைய வச்சுட்டாளே!” என்று பேச மனோகருக்கு மனம் நொந்து போனது.
     “ஐயோ பாட்டி! அப்படி எல்லாம் பேசாதீங்க! பாருங்க மாமா எவ்ளோ வருத்தப்படுறார்! அவ ரொம்ப நல்லப் பொண்ணுதான் ஆனா என்னவோ இந்த விஷயத்துல வீட்டுல சொல்ல பயந்துகிட்டு இப்படி ஒரு முடிவை எடுத்துட்டா! நமக்கு தெரிஞ்சுதோ இல்லையோ அவ அவளோட மனசுக்குப் பிடிச்சவரோடதானே வாழ்க்கையை அமைச்சிட்டு இருக்கா! பெரியவங்க நீங்க மனம் நொந்து எதுவும் சொல்லாம அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்னு வாழ்த்துங்க” என்றாள் ராதா ப்ரியாவின் நற்குணம் அறிந்தவராய்…
                                ******
     அங்கு மருத்துவமனையில், அம்மாவிற்கு உடம்பு சரியில்லை, அவரை மருத்துவமனைக்குக் அழைத்து வருகிறார்கள் என்று அறிந்ததிலிருந்து கீர்த்தி என்னவோ ஏதோ என்று பதறிப் போய் மருத்துவமனை வாசலுக்கே வந்து நின்றுக் காத்திருக்க ஆரம்பித்தாள். அவளை மிகவும் சோதிக்காமல் அவர்களது வீட்டின் கார் வந்து நிற்க, ஓடிச் சென்று கார் கதவைத் திறந்தவளை முறைத்தபடியே கீழே இறங்கிய தங்கமலர்,
     “அவளை வீட்டுக்குப் போக சொல்லு மித்ரா!” என்றார் கடுமையாய்.
     “ஏன்மா?! என்னம்மா ஆச்சு?!!” என்று கீர்த்தி புரியாமல் விழிக்க,
     “போக சொல்லு மித்ரா” என்று அவர் மீண்டும் அழுத்தமாய்ச் சொல்லவும்,
     “கிளம்பு!” என்றான் மித்ரனும்.
     “ம்மா!” என்று அவள் அப்போதும் தயங்கி நிற்க,
     “ம்மா! முதல்ல நீங்க உள்ள வாங்க” என்று அவரைக் கைத்தாங்கலாய் மித்ரன் அழைத்துச் செல்ல, கீர்த்தியின் உள்ளம் என்னவாயிற்றோ என்றுப் பதறியது.
     அப்பா, பெரிய அண்ணன், சின்ன அண்ணன் மூவரும் அம்மாவுடன் உள்ளே சென்றதும் அவர்களைப் பின்தொடர்ந்து செல்லப் போனவள், சாருவும், சரத்தும் வருவது கண்டு, அவர்களை நோக்கி ஓடினாள்.
     “அக்கா? அம்மாக்கு என்ன ஆச்சுக்கா? நாங்க கோவிலுக்குக் கிளம்பும் போது கூட நல்லா தானே இருந்தாங்க?!” என்று பதட்டமாய் வினவ,
     “எல்லாம் உன்னால வந்ததுதான்டி! உன்னை நம்பிதானே அம்மா ப்ரியாவ உன்கூட கோவிலுக்கு அனுப்பி வச்சாங்க! ஆனா?” என்று சாரு அங்கு நடந்ததை விவரிக்க, கீர்த்திக்கே தலை சுற்றுவது போல் இருந்தது.
     “என்னக்கா இது? அப்போ ப்ரியா அக்கா ப்ளான் பண்ணிதான் கோவிலுக்குப் போனாளா?!” என்றவள்,
     “ஆனா என்னையும்தானே கூட்டிட்டுப் போனா?! நான் இங்க வந்தது கூட எதேச்சையா நடந்தது தானே?! அப்படி ஏதாவது அவ யோசிச்சு இருந்தா என்னையும் கூட கூட்டிப் போயிருக்க மாட்டாளே?! எனக்கு ஒரே குழப்பமா இருக்குக்கா! என்னால நம்பவே முடியலை!” என்று கீர்த்தி கவலையும் குழப்பமும் ஒருசேர சொல்ல,
     “என்னவோ ஒண்ணுமே புரியலைடி?! அவ கடைசியா வீட்ல இருந்து கிளம்பும் போது அவளுக்காக எடுத்த நகையை அவ கையில கொடுத்த போது கூட ஏதோ சொன்னா?!” என்ற சாரு,
     “எது வேண்டாம்னு நான் இப்படி ஒரு முடிவை எடுத்தேனோ, அதையே கொடுத்து அனுப்ப நினைக்கிறீங்களேன்னு!” என்று அவள் சொன்னதை நினைவு படுத்தி மொழிந்தவள், சரத்தை ப்ரியா பார்த்த பார்வையையும் நினைவில் கொண்டு வந்து,
     “ஆமா?! உங்களுக்கு ஏதாவது தெரியுமா?! ப்ரியா ஏன் உங்களை அப்படி பார்த்தா?! நீங்க அவளை என்ன சொன்னீங்க?! அதுவும் இல்லாம, அவ அழுதுக்கிட்டே உங்களைப் பார்க்கும் போதும், வீட்ல அத்தனைப் பேரும் கலங்கிப் போய் நின்னுட்டு இருக்க நீங்க என்னன்னா, அப்படி ஒரு நக்கல் சிரிப்பு சிரிக்கிறீங்க?!” என்று மருத்துவமனை என்றும் பாராமல் சாரு சரத்தை நிற்க வைத்துக் கேள்வி கேட்க,
    “என்ன சாரு?! உன் தங்கச்சி பண்ணிட்டுப் போன வேலைக்கு என்னை என்னமோ குற்றவாளி மாதிரி நிற்க வச்சுக் கேள்வி கேட்குற?!” என்று சீற,
     “இல்லை நீங்கதான் எப்போபாரு அவளை ஏதாச்சும் சொல்லிகிட்டே இருப்பீங்க? அதிலும் இந்தக் கல்யாணம் நிச்சயம் ஆனதுல இருந்து அவளை சும்மா எதாச்சும் சொல்லி சீண்டிட்டே இருந்தது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சீங்களா?!
என்று சாரு கோபம் கொள்ள,
     “போதும் நிறுத்து சாரு! விட்டா உன் தங்கச்சி ஓடிப்போய் கல்யாணம் பண்ணதுக்கு நான்தான் காரணம்ன்னு சொல்லுவ போல!” என்று சரத்தும் வாக்குவாதம் செய்ய,
     “அய்யோ! இது ஹாஸ்பிட்டல் இங்க வச்சு இப்படி குரல் உயர்த்திப் பேசாதீங்க! நம்ம ஹாஸ்பிட்டல் வேற! வேலை செய்யுற எல்லா ஸ்டாப்ஸ்க்கும் நம்ம எல்லாரையும் தெரியும்!” என்று கீர்த்தி இடைபுகுந்து அவர்கள் வாக்குவாதத்தை தடை செய்ய,
     “எனக்கு என்னமோ உங்கமேல ஏதோ தப்பு இருக்க மாதிரியே தோணுது! எங்க ப்ரியா இப்படி யார்கிட்டயும் சொல்லாம கல்யாணம் செய்துகிட்டதுக்கு காரணம் நீங்கதான்னு தெரியட்டும் அப்போ இருக்கு உங்களுக்கு!” என்று மிரட்டலாகவே சொல்லிவிட்டுச் சென்ற சாரு, கீர்த்தியையும் இழுத்துக் கொண்டு வார்டுகள் இருக்கும் மேல்தளம் நோக்கி நடந்தாள்…
                                  *****
     காரில் ப்ரியா அழுதபடியே வரவும், மனம் தாங்காது பிரேம், “மேம்! நீங்க இப்படி அழுறது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு மேம்! ப்ளீஸ் கொஞ்சம் கண்ணை மூடி அப்படியே ஓய்வெடுங்க! வீடு வந்ததும் எழுப்பறேன்” என, அவனை நிமர்ந்து பார்த்தவள்,
     “நீங்க சொன்ன மாதிரி எதுவுமே நடக்கலையே பிரேம்! எல்லாமே தப்பு தப்பா இல்ல நடந்திருக்கு! எதுக்காக நான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேனோ கடைசியில அதுக்கு அர்த்தமே இல்லாம போச்சே!” என, அவன் மௌனமாய் தலைகுனிந்தான்.
     “காசு பணத்துக்காக என் பெரியம்மா கஷ்டப்படக் கூடாதுன்னு நினைச்சு கடைசியில அவங்க மனசை மொத்தமா நோகடிச்சிட்டேனோன்னு தோணுது இப்போ!” என்றாள் விசும்பலுடன்.
     “அப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது அவ்வளவு பெரிய குத்தம்னு நீங்க நினைக்கிறீங்களா மேம்?! நான் அந்த அளவுக்கு மோசமானவனா?!” என்று பிரேம் சம்மந்தமே இல்லாமல் கேட்க, அவளுக்கு ஐயோ என்றானது.
     “நான் என்ன சொல்ல வரேன் நீங்க புரிஞ்சிக்கறீங்க ப்ரேம்?!” என்று ப்ரியா கேட்க,
     “அப்போ நீங்க நகுலனைக் கல்யாணம் செய்திருந்தா சந்தோஷமா இருந்திருப்பீங்கன்னு உங்களுக்குத் தோணுதா?!” என்று பிரேம் குதர்க்கமாய் கேள்வி எழுப்ப,
     ஏற்கனவே ப்ரேம் பேச்சைக் கேட்டு முட்டாள்தனமாய் யாருக்கும் சொல்லாமல் திடீரென்று திருமணம் செய்து கொண்டதால், அம்மா, தம்பி, குடும்பம் என்று எல்லோரையும் பிரியும் நிலைக்கு ஆளாகி நிற்பதோடு, தம்பியின் கல்யாணமும் நின்று போனது என பயங்கர கோபத்திலும் வருத்தத்திலும் இருந்தவள் இப்போது அவனது கேள்வியால் சட்டென கோபம் கொண்டாள் அவன் எதிர்பாராத விதமாய்.
     “இப்போ எதுக்கு அந்தப் பேச்சு? அது வேண்டாம்னு நினைக்கப் போய்தானே உங்களை கல்யாணம் செய்துகிட்டேன்! அப்புறம் நீங்களே இப்படிக் கேட்டா என்ன அர்த்தம் ப்ரேம்?!” என்று ப்ரியா கோபமாய்க் கேட்க, சட்டெனப் பணிந்து போனவன்,
     “கோபப்படாதீங்க மேம்! ஏதோ ஒரு வேகத்துல கேட்டுட்டேன்!” என்று அமைதியாகி விட,
    ‘ஐயோ! நாமலே வாயைக் குடுத்து ஆப்பு வச்சுக்கக் கூடாது! கொஞ்ச நாளைக்கு பேசாமதான் இருந்தாகணும்!’ என்று பிரேம் அதோடு வாயை மூடிக் கொண்டான்.
     சிறிது நேரத்தில் ப்ரேமின் வீடு வந்துவிட, அவனது தங்கைக்கு போன் செய்து ஏற்கனவே விவரம் கூறி இருந்ததால், அவர்களது வீட்டில் எல்லோரும் வாசலிலேயே காத்திருந்தனர் ஆரத்தியோடு.
                                 *****
     ‘என்ன? இந்தப் ப்ரியாக்கா நான் கொடுத்து அனுப்பின கிரீட்டிங் கார்டைப் பார்த்துட்டு ஒரு மெசேஜ் கூட அனுப்பலை! இந்த குலோப்ஜாமுன் அவங்ககிட்ட கொடுத்துச்சா இல்லையா?’ என்று எண்ணியவள்,
     ‘பேசாம குலோப்ஜாமூனுக்கு மெசேஜ் அனுப்பிக் கேட்டுப் பார்க்கலாமா?!’ என்று யோசித்து, பின் அவளே,
     ‘இல்ல வேணாம் வேணாம்! சார் ரொம்ப பிசியா இருப்பார்! அவருக்கும் அதே நாள்லதானே கல்யாணம்!’ என்று நினைவுக்கு வர,
     ‘ச்சே! அக்காவுக்கு வாழ்த்து மடல்லாம் எழுத சொன்னேனே அவர்கிட்ட, அவருக்கு ஒரு விஷ் பண்ண மறந்துட்டேனே?!’ என்று நொந்து கொண்டாள் தன்னையே.
     ‘ஆனா என்னமோ தெரியலை! இந்த குலோப்ஜாமூனுக்கு கல்யாணம்கிறது என் மனசுக்கு சந்தோஷமாவே இல்லை! ஏன்னா குலோப்ஜாமூன் பேரு மித்ரன்! மித்ரன்! அந்தப் பேரு கூட என்னைத் தவிர யாருக்கும் சொந்தமாகுறதை எனக்குப் பிடிக்கலை! சுத்தமா பிடிக்கலை!’ என்று சொல்லிக் கொண்டவள் கண்கள், அந்தச் சிறுவயதில், விவரம் அறியா பருவத்தில் ஒருமுறை ஒரே ஒருமுறை சந்தித்த அந்த மித்ரனின் நியாபகத்தில் சிரிப்பையும் நாணத்தையும் ஏந்திக் கொண்டன மந்தகாசமாய்…    மான்விழி வருவாள்…
 
    
     
    
 
                                                                   
    
 
 
 
 
 
 
 
 
 
 
 
  

Advertisement