Advertisement

                                                                      12
     தான் பெற்ற பிள்ளைகளை விட அதிகமாய் பாசத்தைக் கொட்டி வளர்த்தவள், இதோ தாங்கள் பார்த்து வைத்து ஏற்பாடு செய்திருந்த திருமணம் நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருக்கையில் மாலையும் கழுத்துமாய் வேறொருவனோடு வாசலில் வந்து நிற்கையில் தங்கமலருக்கு உடல் வெலவெலத்துப் போய் தலை சுற்றியது என்று சொன்னால் மிகையாகாது.
     டைனிங் ஹாலில் இருந்த டேபிளில் மாலை சிற்றுண்டியை வந்திருந்த விருந்தினருக்குப் பரிமாறிக் கொண்டிருந்தவர், மகள் அந்தக் கோலத்தில் வாசலில் வந்து நின்றதும், தடுமாற்றத்துடன், அங்கிருந்த நாற்காலியைப் பற்றிக் கொள்ள,
     “மலரு! மலரு!” என்று உறவுப் பெண்மணி ஒருவர் அவரைப் பற்றி அமர வைத்தார்.
     “அம்மா!” என்று ப்ரியா உள்ளே வர எத்தனிக்க,
     “உள்ள வராதே!” என்பது போல் சைகையால் அவளைத் தடுத்து நிறுத்தியவர்,
     “இன்னொரு முறை அப்படிக் கூப்பிடாத! அதான் செயல்லையே காட்டிட்டியே என்னை நீ உன் அம்மாவா நினைக்கலைன்னு!” என்று மனம் வெறுத்துச் சொல்ல,
     “ஐயோ அம்மா!! அப்படி ஒருநாளும் நான் நினைச்சதில்லைம்மா!” என்று ப்ரியா மீண்டும் அவரை நோக்கி செல்ல,
     “என்கிட்ட வராதன்னு சொன்னேன்!” என்று குரல் உயர்த்தினார் எப்போதும் இல்லாத வகையில்.
     அவர் சொன்ன துவனியில் சாருவே பயந்து தாயின் அருகே இருந்து பின் வாங்கிவிட, ப்ரியா வாசலிலேயே சிலையாய் நின்றாள்.
     ராஜசேகர் மனைவியின் அருகே சென்று, “என்னம்மா இது?! நம்ம பொண்ணுமா” என்று முடிப்பதற்குள்,
     “இல்லைங்க! அவ நம்ம பொண்ணு இல்ல!” என்றார் அழுத்தம் திருத்தமாய்.
      அவர் குரலில் தெரிந்த ஏமாற்றம், வருத்தம், அனைத்தும் ப்ரியாவைக் வெகுவாய்க் கலங்கடிக்க,
     “அம்மா! நான்” என்று அவள் சொல்ல வருவதைக் காது கொடுத்துக் கூட கேட்க விரும்பாதவராய் சட்டென எழுந்தவர்,
     “சாரு அவளுக்காக என்ன சீர் வாங்கி வச்சிருந்தோமோ அதெல்லாத்தையும் அவகிட்ட கொடுத்து அனுப்பிடு! இனி அவ என் கண்ணுல படவே கூடாது!” என்றவர், விறுவிறுவென தங்கள் அறை நோக்கி சென்று, கதவைச் சாற்றும் முன், ராஜசேகர் உட்பட, அங்கிருந்த அனைவருக்கும் பொதுவாய்,
     “என் வார்த்தையை மீறி யாராவது அவளை உள்ள கூப்பிடனும்னு நினைச்சா தாராளமா கூப்பிட்டுக்கலாம்! ஆனா அடுத்த நொடி நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்” என்றுவிட்டு கதவைச் சாற்றிக் கொள்ள, ப்ரியா கதிகலங்கிப் போனாள்.
     ‘ஐயோ! நான் ஒன்னு நினைச்சு செய்ய, கடைசியில என் அம்மாவையே பிரியற மாதிரி ஆகிடுச்சே!’ என்று கண்கள் கலங்க பிரேமைப் பார்க்க, அவனுக்கும் தங்கமலரின் இந்த முடிவு இடியாய்தான் இறங்கியது. ஏனெனில் அவனுக்கும்தான் தெரியுமே தங்கமலர் அவள் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்று. அதனாலேயே அவர்கள் வீட்டினர் இந்தத் திருமணத்தில் கோபம் கொண்டாலும் ஏற்றுக் கொள்வார் என்று நினைத்துவிட்டான்.
     மனோகருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை! அண்ணியின் வார்த்தையை மீறி மகளை உள்ளே அழைக்கவும் முடியாமல், வெளியே போ என்று சொல்லவும் முடியாமல் தவிப்புடன் அண்ணனைப் பார்க்க,
     “அவ கோபத்துல பேசிட்டுப் போறா மனோ! நீ வா நம்ம பொண்ணைப் போய் அழைச்சிட்டு வரலாம்!” என்றவர்,
     மகளின் அருகே சென்று எந்தக் கேள்வியும் கேட்காமல் அவள் கைப்பற்றி அழைக்க, அவள்,
     “அப்பா…!” என்று விளித்தபடி அவர் மீது சாய்ந்து கதறினாள்.
     “அழாத! அழாதடா!” என்று மகளின் முதுகைத் தட்டிக் கொடுத்தவர்,
     “இதுதான் உன் விருப்பம்ன்னு சொல்லி இருந்தா நாங்க மறுத்திருப்போமாடா! இப்படி ஒரு முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி என்னை இல்லை உங்க அம்மாவையாவது நீ நினைச்சுப் பார்த்திருக்கணும் இல்ல?!” என்று ராஜசேகர் கேட்க,
     “அப்பா நான் ஏன் இப்படி ஒரு முடிவு” என்று அவள் சொல்ல வருவதற்குள்,
     “சார்! எங்க நீங்க எல்லோரும் சம்மதிக்க மாட்டீங்களோங்கிற பயத்துல இப்படி செய்துட்டோம் எங்களை மன்னிச்சிடுங்க சார்!” என்று ப்ரேம், ப்ரியாவையும் இழுத்துக் கொண்டு அவரின் கால்களில் விழ, அவருக்கு மனம் கேட்கவில்லை!
     “எழுந்திருங்க! எழுந்திருங்க முதல்ல!”
என்று  இருவரையும் தூக்கி விட்டவர்,
     “நடந்தது நடந்து போச்சு! இனி எதை மாத்த முடியும்?!”
     “வாங்க உள்ள வாங்க!” என்று அவர் இருவரையும் உள்ளே அழைத்த நேரம் சரியாய் மித்ரனின் கார் அவர்களின் போர்டிகோவில் நுழைந்தது.
     காரை நிறுத்திய கையோடு, கோபமும், வருத்தமும், போட்டியிட அவர்களை நோக்கி வந்தவன், யாருமே எதிர்பாராத வண்ணம் ப்ரேமின் சட்டையைக் கொத்தாய்ப் பிடித்து அடிக்கத துவங்க, நொடிகளில் ப்ரேம் சரமாரியாய் அவனிடம் அடிகள் வாங்கி இருந்தான் அனைவரும் சேர்ந்து மித்ரனை அவனிடமிருந்து பிரிப்பதற்குள்.
     ப்ரியாவிற்கு என்ன நடக்கிறதென்றே சில நொடிகள் புரியவில்லை! மித்ரனா மித்ரனா இவ்வளவு கோபப்படுவது என்று ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தாள் பயமும் கலக்கமும் போட்டியிட.
     அடிபட்ட வலியில் ப்ரேம் மித்ரனை மிரட்சியாய் பார்த்திருக்க, கோபத்தின் உச்சத்தில் வெறியோடு அவனைப் பார்த்திருந்தான் மித்திரன்.
     “மித்ரா?!” என்று ப்ரியா அவனருகே நெருங்க, சட்டெனப் பின்வாங்கியவன், அனைவரையும் உதறிக் கொண்டு அவனது அம்மா எங்கே இருக்கிறார் என்று தேடிச் சென்றான் வீட்டினுள்ளே.
     ‘ஐயோ! என்ன இவன்?! இவன் வந்து அம்மாவைச் சமாதானப்படுத்தி, அவங்களை வீட்டுக்குள்ள அழைச்சிட்டு வருவான்னு பார்த்த, இவன் இப்படி ஏறுக்கு மாறா நடந்துக்குறானே?!’ என்று சாரு கலங்கிப் போய், அருகே நின்றிருந்த கணவனிடம்,
     “என்னங்க நீங்க கல்லு மாதிரி எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு நிக்குறீங்க?! ப்ரியா எப்படி அழறா பாருங்க! அவங்க ரெண்டு பேரையும் உள்ள கூட்டிட்டு வரலாம் வாங்க” என்று முன்னே சென்றவள்,
     “நீ உள்ள வாடி! நீங்களும் வாங்க!” என்றவள், ப்ரியாவைப் கைபிடித்து உள்ளே அழைக்க, ப்ரியா தயங்கியபடியே உள்ளே வர ஒரு அடி எடுத்து வைத்த நேரம், மித்ரன் தடுக்கத் தடுக்க தங்கமலர் தன் அறையில் இருந்து வெளியே வந்தார் கையில் ஒரு பையுடன்.
     “மலர்! என்னம்மா இது?!” என்று ராஜசேகர் பதறிப் போய் அவரருகே செல்ல,
     “எனக்குத் தெரியும்ங்க! நீங்க இந்த முடிவைத்தான் எடுப்பீங்கன்னு எனக்குத் தெரியும். ஏன்னா என் அளவுக்கு நீங்களும் அவளை உயிரா நினைச்சீங்களே!” என்று கண்கள் கலங்கக் கூறியவர்,
     “ஆனா என்னால அவ்ளோ சீக்கிரம் அவ செஞ்ச தப்பை மன்னிக்க முடியும்னு தோணலை! என்னிக்கு என்னால மன்னிக்க முடியும்னு தோணுதோ அன்னிக்கு தான் அவளை என்னால நேருக்கு நேர் சந்திக்க முடியும்! அதுவரைக்கும் என்னை தயவு செஞ்சி தனியா இருக்க விடுங்க! நான் என் தம்பி வீட்டுக்கு போறேன்!” என்று அவர் வெளியேற முனைய, உள்ளே அடியெடுத்து வைக்க நினைத்த ப்ரியா அப்படியே பின்வாங்கி, சாருவின் கையைத் தன்னிலிருந்து மெல்ல பிரித்தாள்.
     “என்னால அம்மா கஷ்டப் படக்கூடாதுக்கா! என்னால அம்மா கஷ்டப்படக் கூடாது!” என்று ப்ரியா தங்கமலரையே பார்த்தபடி மெல்ல முணுமுணுக்க,
     ‘இதுக்கு மேல நீ என்னடி என்னைக் கஷ்டப் படுத்தணும்?!’ என்ற ரீதியில் அவளைப் பார்த்திருந்தார் தங்கமலர்.
     அவள் கண்களில் இருந்து தாரை தாரையாய் வழியும் கண்ணீரைத் துடைக்க மலரின் கைகள் பரபரத்தாலும் மனம் பாறையாய் இறுகிப் போயிருந்ததில் அதைச் செய்யாமல் மனம் வெறுத்து நின்றிருந்தார் அவர்.
     மித்ரனுக்கும் அக்காவின் மேல் இருந்த அளவு கடந்த அன்பு இப்போது பெரும் கோபமாய் உருமாறி இருந்தது அவள் இப்படி ஒரு காரியத்தைச் செய்ததில். அதோடு தாயின் கோபமும் நியமானதாகவே பட்டது அவனுக்கு இந்நொடி. அதனால் அக்காவை உள்ளே அழைக்கவோ அல்லது சமாதானப் படுத்தவோ அவனால் இயலவில்லை! அதிலும் கூட இருந்தே குழி பறித்ததைப் போல் இருந்த அக்காவின் செயலும் ப்ரேமின் செயலும் அவனை வெகுவாய் கோபம் கொள்ளச் செய்திருந்தது.
     ‘அன்னிக்கு நிச்சயம் போது கூட இவளுக்காக நகுலன் அம்மாவைத் திட்டினேனே! ஆனா இன்னிக்கு அவங்க சொன்னது உண்மைன்னு இல்ல நிரூபிச்சிட்டா! ஒரு வார்த்தை ஒருவார்த்தை எங்கிட்டயாச்சும் இப்படி நான் அவனை விரும்பறேன்னு சொல்லி இருக்கலாமே! இப்படி ஒட்டு மொத்தமா எல்லோரையும் ஏமாத்திட்டு இப்படி ஒரு காரியத்தை செய்திருக்காளே!’ என்று அவளை முறைத்தபடி நின்றிருந்தான் மித்ரன்.
      அந்த நேரம் பார்த்து யார் மூலமோ விவரம் அறிந்த நகுலன், ரஞ்சனி குடும்பத்தினர், அனைவரும் அங்கே வர, நகுலன் பேரதிர்ச்சியுடன் ப்ரியாவையும் அவனருகே நின்றிருந்தவனையும் பார்த்தான்.
     “ச்சே! என்னக் குடும்பம்டா இது?! நான் அன்னிக்கே சொன்னேன்ல! இந்தப் பொண்ணு மூஞ்சியே சரியில்லை! எவனையோ லவ் பண்ணுறாளோன்னு! அன்னிக்கு கேட்டதுக்கு அப்படி கோபப்பட்டீங்க?! இப்போ உங்க முகத்தை எங்க கொண்டு போய் வச்சுக்குவீங்க?!” என்றார் வந்ததும் வராததுமாய் நகுலனின் அம்மா பட்டாசு வெடிப்பது போல் படபடவென!
     ஆனால் நகுலனோ, அமைதியாய் ப்ரியாவை ஒரு பார்வை பார்த்து, “இதை முன்னாடியே சொல்லி இருக்கலாமே ப்ரியா! எதுக்கு எல்லோருக்கும் இவ்வளவு மனக்கஷ்டம்?!” என்றான் பொறுமையாய்.
     “அ அது வந்து! நகுலன்! நான் உங்க அம்மா” என்று சொல்ல வந்தவளை, கைபிடித்து நிறுத்திய ப்ரேம்,
     “சொல்லி இருந்தா மட்டும் எங்களை உடனே சேர்த்து வச்சிருப்பீங்களா சார்?! இதோ இப்போ கல்யணம் ஆனா பிறகே என்னை இப்படி போட்டு அடிச்சிருக்கார். இதுல கல்யணம் ஆகறதுக்கு முன்னாடி சொல்லி இருந்தா என்னைக் கொன்னு போட்டிருந்தாலும் ஆச்சர்யமில்லை!” என்று ப்ரேம் சந்தர்ப்பத்தை உபயோகித்து ப்ரியாவும் தானும் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டோம் என்பதைப் போலவே ஆரம்பத்திலிருந்து ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். ஆனால் ப்ரியாவல் அந்தச் சூழ்நிலையில் எதையும் கிரகிக்க முடியவில்லை!  
     நகுலன், ‘என்ன மித்ரன் இதெல்லாம்?!’ என்பது போல் பார்க்க, மித்ரனுக்கோ ப்ரேமை தனது அக்காவின் கணவர் என்று ஏற்றுக் கொள்ளத் தோன்றவே இல்லை. அதற்க்கு மாறாய் அவனை அடித்து துவம்சம் செய்து விடவேண்டும் என்றே மனம் சொல்ல,
     ‘இவன் ப்ரியா மேம்! ப்ரியா மேம்!னு ஒன்னும் தெரியாதவன் மாதிரி சுத்திக்கிட்டு இருந்தானே! அப்போவே இவனை கவனிச்சு இருக்கணும்! நான்தான் தப்பு  பண்ணிட்டேன்!’ என்று பல்லை கடித்தபடி அவனை முறைக்க, பிரேம் சட்டென பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.
     “டேய் நகுலா! அதான் போன்ல எவனோ சொன்னது எல்லாம் உண்மைன்னு தெரிஞ்சு போச்சு இல்லை! இன்னும் எதுக்குடா இங்க நின்னுகிட்டு! சீ இது போல மானங்கெட்ட குடும்பத்துல பொண்ணு எடுத்துப் பொண்ணு கொடுக்க இருந்தோம்னு நினைச்சா எனக்கே அவமானமா இருக்கு! நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னாடி இழுத்துட்டு ஓடி வந்தா! கல்யாணத்துக்கு அப்புறம் போயிருந்தா நம்ம குடும்பத்துக்கு இல்லை அசிங்கமாகி இருக்கும்! ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு! வாடி ரஞ்சனி. நல்லவேளை உன் வாழ்க்கையும் தப்பிச்சு உன் அண்ணன் வாழ்க்கையும் தப்பிச்சுது!” என்று நகுலனின் அம்மா ஏகத்திற்கும் பேச,
     “போதும்!” என்று கத்திய மித்ரன்,
     “கெட் அவுட்!” என்றான் வாசலைக் காட்டி.
     “என்ன என்ன எங்களைப் பார்த்தா வெளில போக சொல்ற?!” என்று அவர் சண்டைக்கு வருவது போல் கேட்க,
     “ஷ்!” என்றபடி அவரைப் பார்த்து விரல் நீட்டி எச்சரித்தவன் பாவனையில் ‘வாயைத் திறக்கக் கூடாது!’ என்ற மிரட்டல் இருக்க,
     “என்ன மித்ரன் எங்க அம்மாவையே” என்று ரஞ்சனியும் கோபம் கொண்டாள் இப்போது.
     “உங்க அம்மாவோட வார்த்தைகள் ஒழுங்கா வந்திருந்தா நானும் ஒழுங்கா பேசி இருப்பேன்! அவங்க பேசினதுக்கு நான் இவ்வளவு பொறுமையா போறது உங்க அண்ணனுக்காகத்தான்!” என்றவன் நகுலனைப் பார்த்து,
     “சாரி நகுலன்! அவ செய்தது மன்னிக்க முடியாத தப்புதான் ஆனா?!” என்று நிறுத்தியவன்,
     “உங்களால முடிஞ்சா அவளை மன்னிச்சிடுங்க!” என்றுவிட்டு, ரஞ்சனியைப் பார்த்து,
     “இவ்ளோ பிரச்சனைக்கு அப்புறம் உங்க அம்மா சொன்ன மாதிரி நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் சம்மந்தம் பண்றது சரி வராது! சோ” என்று அவன் நிறுத்திய விதமே இனி எக்காலமும் இந்த சம்மந்தம் நடக்காது என்று ரஞ்சனிக்குப் புரிந்து போனது! ரஞ்சனிக்கு அவனை விட்டுக் கொடுப்பது பெரும் ஏமாற்றமாய் இருந்தாலும், அவனிடம் ஒரு சிலமுறை பேசியதில் இருந்தே அவனது குணத்தை நன்றாய் அறிந்து வைத்திருந்தாள். அவன் எவ்வளவுக்கு எவ்வளவு அன்பானவனோ அவ்வளவுக்கு அவ்வளவு பிடிவாதக்காரன் என்று!
     கண்கள் கலங்க, “வாம்மா!” என்று ரஞ்சனி தாயின் கையை பற்றி அழைத்துக் கொண்டு வெளியேற,
     “ரொம்பவே நல்ல மரியாதை செய்துட்டீங்க ராஜசேகர் உங்க குடும்பத்தை நம்பி சம்மந்தம் பேச வந்ததுக்கு!” என்று நகுலனின் தந்தையும் தன் பங்கிற்கு மனதின் ஆதங்கத்தை கொட்டிவிட்டுச்  சென்றார் இறுதியாய்.
     ஆத்திரம் தாளாமல் புசுபுசுவென்று மூச்சு வாங்கியபடியே வெளியேறிய நகுலனின் அம்மா, “எவ்ளோ திமிரு பாருடி அவனுக்கு?! என்னையே விரல் நீட்டி மிரட்டுறான்! டாக்டரா அவன் சரியான ரவுடிப் பையனா இருப்பான் போல இருக்கு! நல்ல வேலை கடைசி நேரத்துல யாவது தப்பிச்சோம்!” என்று ஏதேதோ புலம்பியபடியே சென்றார் வழியெங்கும்.
     இதையெல்லாம் நெஞ்சம் கலங்கப் பார்த்திருந்த ப்ரியாவிற்கு எல்லாமே நினைத்ததற்கு எதிர்மாறாய் நடந்து முடிந்திருப்பது பெரும் கலவரத்தை ஏற்படுத்தி இருந்தது!
     ‘அய்யோ! பெரியா தப்புப் பண்ணிட்டோமே!’ என்று எண்ணியவள், அழுதபடியே ப்ரேமைப் பார்க்க, ப்ரேமும் செய்வதறியாது அவளைத்தான் பார்த்திருந்தான்.
     அவர்கள் கிளம்பிய கையோடு கோபமும் வேகமுமாய் தங்கமலரும் ப்ரியாவைத் தாண்டி வெளியேறப் போக, “அம்மா!” என்று அவர் கைபிடித்துத் தடுத்து நிறுத்திய ப்ரியா, தலையை அசைத்து,
     “நீங்க எங்கயும் போகக் கூடாதும்மா! நான் இனி உங்க கண்ணுல படமாட்டேன்!” என்றவள் சட்டென அவரது காலில் விழ, தங்கமலர் பின்னே செல்ல, ப்ரியா கண்கள் கலங்க அவரை நிமிர்ந்து பார்த்து எழுந்தவள், அருகே இருந்த தந்தை, பெரியப்பா இருவரின் கால்களிலும் சென்று விழுந்து வணங்கி எழுந்து, தம்பி, கீர்த்தி, சாரு, பிள்ளைகள் என்று அனைவரையும் கண்களில் ஏந்திக் கொண்டு அங்கிருந்து வெளியேற,
     “ஒரு நிமிஷம்!” என்றார் தங்கமலர்.
     “சாரு… அவளுக்காக வாங்கி வச்சதை அவகிட்டயே கொடுத்து அனுப்பு! மகளா அவதான் சரியா நடந்துக்கலை! வளர்த்தவளா நான் என் கடமையை மறக்கக் கூடாது” என்று இதுவரை இல்லாது தான் வளர்த்தவள் என்று சொல்லிக்காட்ட ப்ரியாவின் மனம் சுக்கு நூறாய் உடைந்தது.
     ‘ஐயோ சத்தியமா நான் ஒருநொடி கூட அப்படி நினைச்சதில்லைம்மா உங்களை! ஆனா ஆனா இந்த உலகம் தான்!” என்று தங்கமலரைக் கட்டிக் கொண்டு ஓவென கதற வேண்டும் போல் இருந்தது ப்ரியாவிற்கு!
     சாரு ப்ரியாவிடம் அவளுக்காய் வாங்கி வைத்திருந்த நகைகளை அவளிடம் கொண்டு வந்துக் கொடுக்க,
     அவளைப் பார்த்து அழுது கொண்டே விரக்தியாய் புன்னகைத்த ப்ரியா, “எது வேண்டாம்னு நான் இப்படி ஒரு முடிவை எடுத்தேனோ, அதையே எனக்கு கொடுத்து அனுப்ப நினைக்கிறீங்க எல்லோரும்! நான் செய்தது தப்புதான்! எல்லாத்தையும் மனசுக்குள்ள வச்சு வச்சே இன்னிக்கு எல்லோர் முன்னாடியும் நான் குற்றவாளியா நிக்கிறேன்!” என்ற ப்ரியா திரும்பி சாருவின் கணவன் சரத்தைப் பார்த்த பார்வையில்,
     “தேள் கொட்டுற மாதிரி பேசி பேசியே என்னை இப்படி ஒரு முடிவு எடுக்க வச்சு என் குடும்பத்துக்கிட்ட இருந்து என்னைப் பிரிச்சிட்டீங்களே!” என்று வெறுமையுடன் பார்க்க, சாரு,
     ‘என்ன பேசுறா இவ?! என் அவரை இப்படி பார்க்குறா?! இவர் என்ன செய்தார் என்று குழப்பத்துடன் இருவரையும் பார்க்க, சரத்தின் கண்களில் இருந்த சிரிப்பை மனைவியாய் அவள் சட்டெனக் கண்டு கொண்டாள்…
                                              –
    
 
    
    
    
    

Advertisement