Advertisement

  “நிச்சயமா மேம்!” என்று அவன் ஆமோதிக்க,
     “இப்போ நான் என்னதான் பண்றது?!” என்றாள் குழப்பமாய்.
     “இதுக்கு ஒரே வழி நீங்களும், நானும் கல்யாணம் பண்ணிட்டு அவங்க முன்னாடி போய் நிக்கிறதுதான்” என்று அவன் சொல்ல அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
     “என்ன?! கல்யாணமா?! அதுவும் வீட்டுக்குத் தெரியாமயா?!” என்று அவள் திகிலாய் கேட்க,
     “இது தவிர வேற வழியே இல்லை மேம்! உங்க மனசுக்கு நான் உங்களை நல்லா பார்த்துப்பேன்னு தோணினா மட்டும் நீங்க இதுக்கு சம்மதிங்க! இல்லைன்னா,” என்றவனால், நீங்க நகுலனையே கல்யணம் செய்துக்கோங்க என்று மட்டும் சொல்ல மனம் வரவில்லை! அவனுக்கு எப்படியாவது அவளைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே!
     ‘பிரேம் சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. இந்தக் கல்யாணத்தோடு அவங்க கேட்குற சீர் முடியப் போறது இல்லை! நிச்சயமா நகுலன் அம்மா அப்படிப்பட்டவங்கதான். அப்படி நடந்தா இந்த சரத் மாமாவும், சொந்தகாரங்களும் பேசி பேசியே என்னையும் அப்பாவையும் கொன்னுடுவாங்க! பெரியம்மாவும் பெரியப்பாவும் எனக்காக என்ன வேணா செய்வாங்க தான்! அதுக்காக அவங்களை இப்படி ஒரேயடியா எனக்காக கஷ்டப் படுத்தக் கூடாது! நாளைக்கு கீர்த்திக்கும் செய்யணும்ல!’ என்று யோசித்தவள் மனம் வெகுவாய் தத்தளித்தது.
     ஒருபுறம் பெரிதாய் வசதி ஏதும் இல்லை என்றாலும், தன்னைத் தனக்காகவே எதையும் எதிர்பார்க்காமல் மணமுடிக்கத் துடிக்கும் ஒருவன், ஒருபுறம் அத்தனை வசதி படைத்தவர்களாக இருந்தாலும் பணம் நகை என்று வரதட்சணைக்கு ஆசைப்படும் குடும்பம் என்று யோசிக்க, யோசிக்க, ப்ரேமின் அன்பு தான் அந்நேரத்திற்கு அவளுக்குப் பெரிதாகப் பட்டது. ஆனாலும் தம்பியின் வாழ்க்கை தனது இந்த முடிவால் பாதித்துவிடுமே என்று அவள் கலக்கத்துடன்,
     “ஆனா ப்ரேம்! ஒருவேளை நான் உங்களைத் திருமணம் செய்துகிட்டாலும் மித்ரனோட கல்யாணம் பாதிக்குமே! என் வாழ்க்கைக்காகப் பார்த்து, அவன் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கிடக் கூடாதுல்ல!” என்று அவள் பெரும் கவலையுடன் மொழிய,
     “அதெல்லாம் நிச்சயமா ஆகாது மேம்! மித்ரன் சார் மாதிரி ஒருத்தரை விட்டுக் கொடுக்க யாருக்குதான் மனசு வரும்! அவரோட கல்யாணம் நிச்சயமா நல்லபடியா நடக்கும்” என்றவன், மேலும் தொடர்ந்து,
     “நீங்க என்னை நம்புங்க மேம்! நானே அவர் கல்யாணத்தை முன் நின்னு நடத்தறேன். அவரோட மாமா ஸ்தானத்தில் இருந்து!” என்று அவள் முடிவு சொல்லும் முன்னே அவன் உரிமையுடன் சொல்ல, அவள் மனம் நெகிழ்ந்துதான் போனாள்.
     ‘நிச்சயமா பிரேம், சரத் மாமா மாதிரி இருக்க மாட்டார்!’ என்று அவளுக்கு நம்பிக்கை எழுந்தாலும்,
     “அ ஆனா ப்ரேம்! நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறது நிச்சயமா இப்போதைக்கு இந்தக் கல்யாணத்துல இருந்து தப்பிக்கதான்! அதுக்காக உங்களைப் பிடிக்காமயும் நான் சம்மதிக்கலை! இப்போதைக்கு உங்க மேல எனக்கு காதல்னு எதுவும் இல்லைனாலும், திருமணத்துக்கு அப்புறம் நிச்சயமா உங்களை காதலிப்பேன்னு நம்பறேன்!” என்று அவள் சொல்ல, சட்டென அவள் கைகளைப் பற்றியவன்,
     “இது இது போதும் மேம்! என் அன்பை என் காதலை நீங்க கூடிய சீக்கிரமே உணருவீங்க!” என்று உணர்ச்சிவயப்பட்டு மொழிந்ததோடு,
     “இதோ ஒரே நிமிஷம் நான் போய் மஞ்சள் கயறு வாங்கிட்டு வந்திடறேன்!” என்று எழ,
     “என்ன இப்போவேவே?!” என்று அதிர்ந்தாள் ப்ரியா.
     “இப்போவிட்டா நிச்சயமா நம்ம கல்யாணம் நடக்கிறது கஷ்டம் மேம்! ஏன்னா நாளைக்கு உங்க வீட்ல நலங்கு ஏற்பாடு பண்ணி இருக்காங்க! நலங்கு வச்சிட்டா, கல்யாணப் பெண்ணை வீட்டை விட்டு வெளியே அனுப்பவே மாட்டாங்க!” என,
     “ஆமாம்!” என்று யோசித்தவள்,
     “நான் போய் வாங்கிட்டு வந்திடவா?” என்று அவன் கேட்டதற்கு,
     “ம்!” என்று இசைந்தும், இசையாமலும் தலையசைத்தாள் தான் குழப்பத்தில் எடுக்கும் இந்த முடிவு யார் யார் வாழ்வை எப்படியெப்படி எல்லாம் புரட்டிப் போடப் போகிறது என்று புரியாமல். எத்தனை படித்திருந்தும், எத்தனை அறிவிருந்தும் என்ன?! குழப்பமான சூழ்நிலையில் நாம் எடுக்கும் நிலையில்லா முடிவுகள் நம் வாழ்க்கையில் மிகக் கடுமையான பாடங்களைக் கற்றுத் தரக் கூடியவையாகவே அமைந்து விடுகின்றன.
                          *******
     “சார், சார் நீங்க வீட்டுகுக் கிளம்புறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?!” என்றாள் மைத்து கெஞ்சும் வகையில் முகத்தை வைத்துக் கொண்டு.
     “என்ன?!” என்பது போல் அவன் பார்க்க,
     “நான் ஒரு கிரீட்டிங் கார்ட் கொடுக்கறேன். அதுல நான் சொல்றதை எழுதித் தர முடியுமா?!” என்று அவள் கேட்க,
     “எனக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சிட்டியா நீ?!” என்றான் அவன் முறைப்புடன்.
     “ப்ச் உங்களுக்கு வேலை வெட்டி இல்லைன்னு நான் சொன்னேனா? எனக்கு எழுத பழகி ரொம்பநாள் ஆச்சு. அதனால அழகா எழுத வராது! என் தங்கச்சிய எழுத சொல்லலாம்னு பார்த்தா அவ கையெழுத்து என்னோடதை விட கேவலமா இருக்கும். எப்படியும் நீங்க இப்போ வீட்டுக்கு தானே கிளம்பப் போறீங்க? உங்க வீட்ல இருக்க என் அக்காவுக்குதான் லெட்டர் எழுத சொல்றேன். அது கூட எழுதி தர மாட்டேங்குறீங்க?!” என்று கெஞ்சலில் ஆரம்பித்தவள், சற்றே உரிமையாய் குரல் உயர்த்த,
     “வாழ்த்து மடலா? ப்ரியா அக்காவுக்கா?” என்றான் அவன்.
     “ம்! ம்! ம்!” என்று அவள் ஆசையுடன் தலையசைக்க,
     “ஷப்பா! உங்கத் தொல்லை தாங்க முடியலை! அதான் போன், வாட்ஸ்அப் இதெல்லாம் இருக்கே, அதுல டைப் பண்ணி அனுப்ப வேண்டியதுதானே! எந்நேரமும் போனை கைல வச்சிக்கிட்டேதான  இருக்க?!” என்று அவன் சலித்துக் கொள்ள,
     “ப்ச்! அது எல்லாம் டெலீட் ஆக வாய்ப்பிருக்கு. இந்த மாதிரி சார்ட்ல எழுதி கொடுத்தா தூக்கிப் போட மனசு வராம எப்போவும் அவங்க கூடவே வச்சுக்குவாங்க! அடிக்கடி படிச்சும் பார்த்துக்குவாங்க! ப்ளீஸ் ப்ளீஸ் எழுதி கொடுங்களேன்!” என்றபடி,
     சார்ட் பேப்பர் கொண்டு தானே அழகாய் இதய வடிவில் கத்தரித்து ப்ரியாவிற்காய் தயாரித்திருந்த வாழ்த்து அட்டையை அவனிடம் நீட்டினாள்.
     அவளின் கெஞ்சலில் ரஞ்சனி வரச் சொன்னதை மறந்து போனவன், வேறு வழியின்றி அவளுக்காய் எழுத அமர, அவள் சொல்ல ஆரம்பித்தாள்.
     “அன்புள்ள ப்ரியா அக்காவுக்கு…
     நாம பழகினது கொஞ்ச காலமாகவே இருந்தாலும், இதுவரைக்கும் என் தங்கையைத் தவிர வேறு யாரும் உங்களைப் போல என் மனசுக்கு நெருக்கமா உணரமுடியலை! அப்படிப்பட்ட உங்களுக்கு இன்னும் நாலு நாள்ல கல்யாணம்! ஆனா உங்க கல்யாணத்தை பக்கத்துல இருந்து பார்க்கிறதுக்கு கூட எனக்கு முடியாது! என் நிலைமையும், என் குடும்ப நிலைமையும் பத்திதான் உங்களுக்குத் தெரியுமே! ஆனா அக்கா, நீங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு ஒருநாள் கண்டிப்பா உங்க கணவரை என்கிட்ட கூட்டிட்டு வந்து காண்பிக்கணும்! சரியா?! இப்போதைக்கு இந்த அன்புத் தங்கையோட லவ் மட்டும் உங்களுக்கு அனுப்பறேன். விஷ் யூ எ வெரி வெரி வெரி ஹேப்பி மேரீட் லைப்! உம்மா! லவ் யூ லவ் யூ சோ மச்!” என்று அவள் சொல்லி முடிக்க,
     விலுக்கென அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஒரு நொடி அவள் விழிகளில் எதையோ கண்டான்.
     அவள் சொன்ன லவ் யூ தனது அக்காவிற்காய் மட்டுமானதாய் அந்த நொடி அவனுக்குத் தோன்றவில்லை!
     அவன் சந்தேகமாய் பார்த்த பார்வையில் அவள் சுதாரித்துக் கொள்ள,
     “என்ன உங்களையா லவ் யூ சோ மச்னு சொன்னேன்! அப்படிப் பார்க்குறீங்க! அக்கா, தங்கச்சிங்க நடுவில் இதெல்லாம் சகஜமப்பா!” என்று அவள் எதையோ மறைக்க நினைத்து படபடவென உளற,
     “ம்!” என்று அவனும் எழுந்து கொண்டான். அவன் அவள் வீட்டில் இருந்து வெளியேறிய நொடி, அவளின் கண்களில் இருந்து மெலிதாய் கோடு போல் கண்ணீர் வழிந்தது…
     அவன் காரில் அமர்ந்த கணம், சாரு அவனின் கைப்பேசிக்கு அழைப்பு விடுக்க, அதற்கு செவிமடுத்தவன், அவள் சொன்னதைக் கேட்டுப் பதட்டத்துடன்,
     “எ என்ன என்னக்கா சொல்ற?! எப்படி?! ப்ரியாக்காவா?!” என்று அவன் வார்த்தைகள் ஏகத்திற்கும் தடுமாறின.
     “என்னடா நீ இப்போ போய் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்க?! இங்க அம்மா அவங்களை வீட்டுக்குள்ளவே வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க! நீ உடனே வாடா!” என்று போனை வைத்துவிட, குழப்பமும், கவலையும், பயமும் ஒருசேர காரை சீறிக் கிளப்பினான்…
                            -மான்விழி வருவாள்…   
             
      
    
 
 

Advertisement