Advertisement

                       11
     கீர்த்தியும், ப்ரியாவும் கோவிலில் சுவாமி கும்பிட்டுவிட்டு, சற்று நேரம் அமர்ந்துவிட்டுப் போகலாம் என்று அமர, அவன் அங்கு அவர்கள் அறியா வண்ணம் சற்று தூரத்தில் அமர்ந்து அவர்களைப் பார்த்திருந்தான்.
     “ஏன் ப்ரியாக்கா? ஏதோ போல இருக்கீங்க?! கல்யாணப் பொண்ணுக்கு உரிய சந்தோஷம் உங்க முகத்துல துளி கூட இல்லை!” என்ற கீர்த்தி, சற்றே சந்தேகத்துடன்,
     “அக்கா.. ஒருவேளை நீங்க யாரையாச்சும் விரும்பி வீட்டுல சொல்ல பயந்துட்டு இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சிங்களா?!” என்று நிச்சயத்தன்று, நகுலனின் அம்மா கேட்ட அதே கேள்வியை இப்போது கீர்த்தி கலக்கத்தோடு கேட்க,
     “ப்ச்! என்னடி நீயும் நகுலன் அம்மா மாதிரியே கேட்குற?! அப்படி எல்லாம் எதுவும் இல்லை!” என்றாள் ப்ரியா.
     அப்போது கீர்த்தியின் கைபேசி சிணுங்க, “என்ன? கவி போன் பண்றா?! அவ இந்நேரத்துக்குப் பண்ண மாட்டாளே?” என்று கேள்வியாய் அவள் போனை அட்டென்ட் செய்ய,
     “கீர்த்தி கீர்த்தி! அம்மாக்கு திடீர்னு நெஞ்சுவலிடி! உங்க ஹாஸ்பிட்டலுக்குதான் கூட்டிட்டுப் போயிட்டு இருக்கோம். உங்க வீட்ல இருந்து ஹாஸ்பிட்டல் பக்கம்தானே நீ கொஞ்சம் வாடி. அண்ணாவும், அப்பாவும் கூட வீட்ல இல்ல! ஆபீஸ்ல இருந்து இப்போதான் நான் போன் பண்ண பிறகு கிளம்பி இருக்காங்க! நான் இங்க பக்கத்து வீட்ல இருக்கிற அக்காவைத்தான் துணைக்கு அழைச்சிட்டு போய்க்கிட்டு இருக்கேன். நீ வந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும். ரொம்ப பயமா இருக்குடி!” என்று அழுதபடியே பதட்டமாய் கவிதா பேச,
     “ஏய் அழாத அழாத கவி. அம்மாக்கு ஒன்னும் ஆகாது! நான் இதோ பத்து நிமிஷத்துல அங்க வந்துடறேன்.” என்றவள்,
     “அக்கா கவியோட அம்மாக்கு நெஞ்சு வலியாம்! ஏற்கனவே வேற ஒரு அட்டாக் வந்திருக்கு! நம்ம ஹாஸ்பிட்டலுக்கு தான் கூட்டிட்டுப் போயிட்டு இருக்கா! அவ அப்பாவும், அண்ணாவும் கூட ஆபீஸ்ல இருந்து இப்போதான் கிளம்பி இருக்காங்களாம்! நான் போயிட்டு வரவா அக்கா? நீ வீட்டுக்கு தனியா போயிடுவ இல்லை?!” என்றாள் பதட்டமாய்.
     “அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் நீ முதல்ல கிளம்பு!” என்ற ப்ரியா, தானும் அவளோடு எழ, கால் மரத்துப் போய் சட்டென எழ முடியாமல் போக,
     “ஐயோ அக்கா?! என்னாச்சு?” என்று கீர்த்தி அவளைப் பற்ற,
     “ஒண்ணுமில்லடி கால் மரத்துப் போய்டுச்சு! சரி நீ கிளம்பு நான் வேணா கொஞ்ச நேரம் இருந்துட்டுக் கிளம்பறேன்” என்றவள் மீண்டும் அமர, எங்கு ப்ரியாவும் சென்று விடுவாளோ என்று சில நொடிகள் பதறியவனுக்கு  அப்பாடா என்றானது.  
     அவன் எந்த நம்பிக்கையில் அவளுக்காய் காத்திருக்கிறான் என்று அவனுக்குத் தெரியவில்லை! ஆனால் அவளை எப்படியாவது மணம் முடித்துவிட வேண்டும் என்று சரியான சந்தர்ப்பம் பார்த்து கழுகாய் அவளை வட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
     கீர்த்தி வெளியேறிய சில நொடிகளிலேயே அவன், அவள் முன்னே வந்து அமர, அவள் சட்டென எழப் போக,
     “மேம் ப்ளீஸ்” என்று அவளது கையைப் பிடித்து அவன் அமர வைத்ததோடு அல்லாமல்,
     “இது பொது இடம். சாதரணமா பேசினா யாரும் தவறா நினைக்க மாட்டாங்க! நீங்க இப்படி வெடுக்குனு எழுந்து போய், நான் பின்தொடர்ந்து வந்தாதான் எல்லோரும் தப்பா நினைக்க வாய்ப்பிருக்கு! ப்ளீஸ் ப்ளீஸ் மேம்! ஒரு தடவை ஒரே ஒரு தடவை நான் சொல்றதைக் காது குடுத்துக் கேளுங்க!” என்று அவன் கெஞ்ச, அவள் அமைதியாய் அமர்ந்தாள்.
     “மேம்! நீங்க எடுத்திருக்க இந்த முடிவு உங்களை எந்த அளவு காயப்படுத்தும்னு உங்களுக்குத் தெரியுமா?! அதுவும் பணம் நகைன்னு ஆசைப்படுற ஒரு குடும்பத்துல போய் நீங்க மாட்டிக்கிட்டு காலத்துக்கும் கஷ்டப்பட வேண்டி இருக்கும் மேம்! இவங்க கேட்குற சீர் கல்யாணத்தோடு முடிஞ்சிடாதுன்னு உங்களுக்கே தெரியும்! மறுபடியும் மறுபடியும் நீங்க உங்க பெரியப்பா பெரியம்மாவைதான் கஷ்டப்படுத்துற மாதிரி இருக்கும்! உண்மையா உங்களுக்கு ஒரு நல்ல வரன் அமைஞ்சிருந்தா கூட, நான் என் மனசோடு என்னோட காதலைப் புதைச்சிக்கிட்டு இருந்திருப்பேன்! ஆனா, இப்படி பணம் நகைன்னு அலையிற குடும்பத்துல நீங்க போய் மாட்டிகிட்டு, காலம் பூரா கஷ்டப்படுறதை என்னால நிச்சயமா சகிச்சிக்க முடியாது மேம்! நான் உங்களை உங்களுக்காக மட்டுமே நேசிக்கிறேன்! நீங்க நீங்க மட்டும் என் வாழ்கையில வந்தா போதும் மேம்! நான் ரொம்ப வசதி இல்லாதவன்தான். ஆனா உங்களை ஓரளவு நல்லபடியா பார்த்துக்குற அளவுக்கு நான் சம்பாதிக்கிறேன்னு உங்களுக்கே தெரியும்! தயவு செய்து இப்போ கூட நேரம் இருக்கு. யோசிச்சு முடிவெடுங்க மேம்!” என்றான் பிரேம் பொறுமையாய்.
     அவன் சொல்வது முற்றிலும் உண்மை என்று அவள் மனதிற்குப் புரிந்தது. அதிலும் காலை சரத் பேசிய பேச்சு,
     ‘இப்படி பாசங்கிற பேர்ல ஏமாத்திப் பிழைக்கிறதுக்கு பதில் பிச்சை எடுக்கலாம் அப்பாவும் பொண்ணும்’ என்று சொல்லியதும் நினைவு வந்து அவளை வெகுவாய் குழப்பியது.
     ‘பேசாம வீட்ல சொல்லி நகுலனோடு எனக்கு கல்யாணம் வேண்டாம்னு நிறுத்திடலாமா?’ என்று அவள் யோசித்தாளே ஒழிய அப்போதும் ப்ரேமைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை! காரணம் ப்ரேமைக் காதல் என்ற கண்ணோட்டத்தில் இதுவரை அவளால் பார்க்க முடியவில்லை!
     “நான் நான் என்னதான் பண்றது ப்ரேம்?! வீட்ல நகையைக் காரணமா வச்சு கல்யாணம் வேண்டாம்னு சொன்னா அம்மா, அப்பா எல்லோரும் என்னைத்தான் திட்டுவாங்க! ஆனா அதை காரணமா வச்சு மத்தவங்க பேசுற பேச்சு! சத்தியமா என்னால தாங்க முடியலை பிரேம்!” என்று அவள் தடுமாற்றமாய் சொல்ல,
     “இப்போ கூட நீங்க என்னைப் பத்தி யோசிக்கவே இல்லைல்ல மேம்?! நகுலனைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு நினைக்கிறீங்களே தவிர, என்னை என்னோட காதலை ஏத்துக்க உங்க மனசு மறுக்குது இல்லை! நான் உங்க அளவுக்கு வசதி இல்லாதவன்னுதானே?!” என்று அவன் கேட்க, அவள் மனதில் சுருக்கென்று முள் தைத்ததைப் போன்றொரு உணர்வு.
     “உங்களுக்கும் உங்களை இத்தனை நாள் அவமானப்படுத்தி பேசினவங்களுக்கும் என்ன மேம் வித்தியாசம்?! நீங்களும் பணத்தைதானே முதன்மையா நினைக்குறீங்க?!” என்றான் அவன்.
     “அ அப்படி இல்லை பிரேம்!” என்றவள் அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்கத் திராணி அற்று,
     “எ எனக்கு உங்க காதல், உங்க காதல் எந்த அளவுக்கு சரியா வரும்னு தோணலை! ஏன்னா என்னால இதுவரை உங்களை அந்தக் கண்ணோட்டத்துல பார்க்க முடியலை! ஒரு சக ஊழியரா, நல்ல மனிதனா நட்பு ரீதியா உங்களை எனக்குப் பிடிக்கும்! ஆனா காதல், அப்படின்னு வரப்போ என்னால உங்களை அந்தக் கோணத்துல இதுவரைக்கும் யோசிக்க முடியலை! ஒருவேளை இப்போ இந்தக் கல்யாணத்தை நிறுத்திட்டு உங்களைப் பத்தி வீட்ல சொன்னேன்னா உங்களுக்காகதான் கல்யாணத்தை நிறுத்தறேன்னு எல்லோரும் நினைப்பாங்க! அப்படி உங்களைக் காதலிக்கிறதா இருந்தா முன்னாடியே ஏன் சொல்லலைன்னும் கேட்பாங்க! அதோடு நான்தான் உங்களைக் காதலிக்கவே இல்லையே!” என்று அவள் சொல்ல, அவனுக்கு வெகுவாய் வலித்தது.
     “ம்! உங்களுக்கும் நகுலன் குடும்பத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை மேம்! நீங்களும் பணத்தை வசதியை வச்சுதானே என்னை எடை போடுறீங்க! இல்லைன்னா என் மனசு உங்களுக்கு எப்போவோ புரிஞ்சிருக்கும்!” என்று அவன் மனம் வருந்தி விரக்தியுடன் சொல்ல, அவள் குற்றஉணர்வுடன் அவளைப் பார்த்தாள்.
     “அ அப்படி எல்லாம் இல்லை பிரேம்! நான் பணத்துக்காக வசதிக்காக எல்லாம் பார்க்கலை! உங்களை எனக்குப் பிடிக்கும்! ஆனா காதல்ங்கிற எண்ணத்துல இதுவரைக்கும் என்னால யோசிக்க முடிஞ்சுது இல்லை!” என்று அவள் மீண்டும் மீண்டும் அதையே சொல்ல,
     “என் அன்பு உங்களுக்குப் புரியவே இல்லையா மேம்?! என்ன பண்ணா என்னை ஏத்துக்குவீங்க?!” என்று அவன் ஏக்கத்துடன் கேட்க, இவளுக்கு ஐயோ என்றானது.
     “இப்போ நான் இந்தக் கல்யாணத்துல இருந்து தப்பிக்கவா?! இல்லை உங்க காதலை ஏத்துக்க முடியாத குற்ற உணர்ச்சியில தவிக்கவா?! சொல்லுங்க ப்ரேம்?!” என்றாள் அவள் சற்றே கோபமும் குழப்பமாய்.
     “சந்தேகமே வேண்டாம்! முதல்ல நீங்க இந்தக் கல்யாணத்துல இருந்து தப்பிக்கணும் மேம்! அதுதான் உங்களுக்கு ரொம்ப முக்கியம்! நீங்க என்னை ஏத்துக்கலைன்னாலும் பரவாயில்லை! நீங்க நல்லா இருந்தா போதும்” என்றான் சிறிதும் யோசிக்காமல்.
     “அ அப்போ, நான் எனக்கு நகுலனைப் பிடிக்கலைன்னு சொல்லி இந்தக் கல்யாணத்தை நிறுத்திடவா?!” என்றவள், மீண்டும் சோர்வடைந்து,
     “ஆனா அப்படி சொன்ன மித்திரன் கல்யாணத்துலயும் பிரச்சனை வருமே! என்னால அவனோட வாழ்க்கையும் பாதிக்கும்!” என்று யோசித்தாள் அவனின் அக்காவாய்.
  

Advertisement