Advertisement

                                                                  10
     “அப்பா…! கொஞ்சமாச்சும் தண்ணி குடிங்க. பாருங்க எப்படி மூச்சு வாங்குதுன்னு!” என்றவள், தானே தந்தைக்கு நீர் புகட்டிவிட, அவள் கைகளில் கண்ணீர் துளி சிதறியது.
     “அப்பா! என்னப்பா இது?! அவர் பேசினதுக்காகவெல்லாம் நீங்க கண்கலங்கிகிட்டு!” என்று அவள் வருந்த,
     “அவர் பேசின விதம் வேணா தப்பா இருக்கலாம்மா. ஆனா அவர் கேட்ட கேள்விகள் சரிதானே! நான்தானே, உன்னை பெத்த பாவி நான்தானே உனக்கு எல்லாம் செய்து இருக்கணும்! அண்ணன், அண்ணி பார்த்துக்குறாங்ககிறதுக்காக இப்படி எல்லாத்தையும் அவங்களே பார்த்துக்கணும்னு விட்டது என் தப்புதானே! கட்டின பொண்டாட்டி போயிட்டான்னு பெத்த பிள்ளையைப் பத்தி கவலைப் படாம, என் சோகம் பெருசுன்னு ஊர்விட்டு ஊர் போய் என் சோகத்தை மறக்க இன்னொரு வாழ்க்கையைத் தேடிக்கிட்டதும் என் தப்புதானே! அதுமட்டும் இல்லாம பெத்தவன் நான் உயிரோடு இருந்தும் இப்படி உன்னை நிற்கதியா விட்டது எவ்ளோ பெரிய பாவம்! இதுக்கு நான் உயிரோடு இல்லாம போயிருந்தா கூட உனக்கு இந்த அவப்பெயர் வந்திருக்காது இல்லைம்மா?!” என்று அவர் குலுங்கி அழ,
     “ஐயோ அப்பா! என்னப்பா இது? ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க! அவர் பேசினதை எல்லாம் மனசுல வச்சுக்காதீங்க! பெரியம்மாவும், பெரியப்பாவும், ஒரு நாள் கூட என்னை உங்க பிள்ளையா நினைச்சது இல்லை! அவங்க பெற்ற பிள்ளை மாதிரிதான் நடத்துறாங்க! ஆனா, ஆனா இந்த மாமா மாதிரி ஆளுங்கதான்” என்றவளுக்கும் அழுகை பெருக்கெடுக்க, தன்னை மீறிக் கேவினாள் வார்த்தைகளற்று.
     அழும் மகளைத் தேற்ற முடியாமல், தானும் சரத் பேசிய பேச்சிலிருந்து வெளிவரமுடியாமல், மகளைத் தோள் மீது சாய்த்துக் கொண்டு கண்ணீர் சிந்தினார் மனோகர் காலம் கடந்த ஞானம் பெற்றவராய். ஆனால் இனி செய்ய அவரே நினைத்தாலும் இப்போது அவரிடம் ஒன்றும் இல்லை! சம்பாதித்த ஒட்டு மொத்த பணத்தையும் மனைவியிடம் தானே கொடுத்து விட்டிருந்தார். இனி அவளிடம் இருந்து வாங்குவது சாதாரணமாக நடக்காத ஒன்று!
     அனைவரும் தத்தம் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, இங்கு நடந்த எதுவும் தங்கமலருக்கும், சாருவுக்கும் தெரியாமற் போயிற்று. மாலை நேரம் வீடு மீண்டும் கல்யாணக் கொண்டாட்டத்தை தத்தெடுத்துக் கொள்ள அதில் ஆனந்தமாய் பங்கேற்க வேண்டியவளோ, சரத்தின் குறுகுறு பார்வையில் குனிக் குறுகிப் போனாள். சற்று நேரம் அங்கிருந்து வெளியே சென்று வந்தால் தேவலாம் என்றிருக்க, தங்கமலரிடம் சென்று,
     “அம்மா! நான் பக்கத்துல இருக்க கோவிலுக்குப் போயிட்டு வரட்டுமா?” என்றாள் மெதுவாய்.
     “இப்போ எதுக்குடா எல்லோரும் வந்திருக்க நேரத்துல?”
     “இல்லம்மா கோவிலுக்குப் போகணும்னு தோணுது! மனசுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்” என்றவளை யோசனையுடன் பார்த்தவர்,
     “கோவிலுக்கு போறது நல்லதுதான். ஆனா,” என்று தயங்கியவர்,
     “சரி, போயிட்டு கொஞ்ச நேரத்துல வந்துடனும் சரியா. கீர்த்தியையும் கூட்டிட்டுப் போ தனியா போகக் கூடாது!” என்று கீர்த்தியைக் கூப்பிட்டு அவளுடன் அனுப்பி வைத்தார்.    
     கிளம்புமுன் தாயின் கையைப் பற்றியவள், “ம்மா!” என்று அவரைக் கட்டிக் கொள்ள,
     “அட என்ன ப்ரியாக்கா! இன்னும் அஞ்சு நாள் இருக்கு நீ மாமா வீட்டுக்குப் போக அதுக்குள்ள அம்மாவை இப்படி கட்டிப் பிடிச்சுக்குற என்னமோ இப்போவே பிரியப் போற மாதிரி!” என்று கீர்த்தி கேலி செய்ய,
     “ம்மா! இவ வாயிலயே ரெண்டு போடுங்க! எப்போ பாரு ஏடாகுடமா பேசிக்கிட்டு!” என்றவள்,
     “வா பேசாம” என்று தங்கையை இழுத்துக் கொண்டு சென்றாள் வெளியே.
                                 *****
     இங்கு இவர்கள் வீட்டில் ஒரே கொண்டாட்டமாய் இருக்க, அங்கு அவளோ, தங்கை எப்போது வருவாள் என்று பசியோடும், சோர்வோடும் தன் இயற்கை உபாதையை அடக்க முடியாமல் படுக்கையை நனைத்துவிட்டு நரகத்தில் உழன்று கொண்டிருந்தாள் மைத்ரேயி.
     மாலை வீடு திரும்பிய காயத்ரி, அக்கா இருந்த நிலையைப் பார்த்து,
     “ஐயோ என்னக்கா இது? இப்படி ஈரத்துலயே இருக்க?!” என்று பதறியபடி தனது ஹென்ட்பேகைத் தூக்கிப் போட்டுவிட்டு, தமக்கையின் அருகே ஓடி வந்தவள், அவளைத் தூக்கி நிறுத்தி, உடை நீக்கி உடம்பைத் துடைத்து, நைட்டி மாற்றி சேரில் அமர வைத்தாள். பின் தமக்கை படுத்திருந்த இரும்புக் கட்டிலில் இருந்த நனைந்த போர்வையை எடுத்து போட்டுவிட்டு அதை டெட்டால் கொண்டு துடைத்து வேறு போர்வையை விரித்து மையுவை மீண்டும் தூக்கி அமரவைத்தவள்,
     “என்னக்கா ஆச்சு?! மங்கை எங்க?! ஏன் அவ அறைக் கதவு சாத்தி இருக்கு இந்நேரத்தில? அம்மா உன் பக்கத்துல ஜக் எடுத்து வச்சிட்டு போகலையா?!” என்று காயத்ரி கேட்க கேட்க, பதிலேதும் சொல்லாமல், தங்கையின் வயிற்றைக் கட்டிக் கொண்டு கேவி அழுதவள்,
     “ஏன்டி அந்தக் கடவுள் இன்னும் என்னை உயிரோடு வச்சிருக்கார்! நான் எதுக்கு வாழறேன்! ஏன் வாழறேன்! செத்துப் போகணும்னு நினைச்சா கூட என்னால சுயமா எதுவும் செய்துக்க முடியலைடி!” என்றவளை, என்ன சொல்லித் தேற்றுவது என்ற வழி தெரியாமல் திணறிப் போனாள் தங்கை.
     அவளும்தான் என்ன சொல்லித் தேற்றுவாள்! இத்தனை வருடங்களாய் அக்கா அனுபவித்து வரும் பாடுகளை கண்டு தனக்கு இப்படி நேர்ந்திருந்தால் நிச்சயம் இவ்வளவு திடமாய் இருந்திருக்க மாட்டோம் என்று எண்ணி எண்ணி அக்காவிற்காய் அழுதிருக்கிறாளே தனக்குள்ளேயே. இன்று அப்படிப்பட்ட தைரியசாலி அக்காவே இப்படி மனமுடைந்து அழும்போது அவளால் என்ன சொல்லித் தேற்ற முடியும்!
     ‘ஐயோ கடவுளே உனக்கு ஏன் இவ்வளவு கல்மனசு! என் அக்கா அப்படி என்ன பாவம் செய்தான்னு அவளுக்கு இப்படி ஒரு வியாதியைக் கொடுத்த?!’ என்று அழுதாள் ஊமையாய்.
     தான் அழுவதை பார்த்து தங்கையும் அழுகிறாள் என்பதை உணர்ந்த மைத்ரேயி, அழுகையைக் கட்டுக்குள் கொண்டு வந்து தங்கையை விட்டு விலகி,
     “ப்ச்! நான் அழுதேன்னா நீ என்னைத் தேற்றனும்! அதைவிட்டுட்டு நீயும் கூட சேர்ந்து இப்படி அழறியே! கண்ணைத் துடைடி” என்று தங்கையிடம் கோபிப்பது போல் அவளைச் சமாதானப் படுத்தித் தன்னையும் தேற்றிக் கொண்டவள்,
     “சரி ஓடிபோய் எனக்கு சாப்பாடு போட்டு எடுத்துட்டு வரியா?!” என்றாள் காயத்ரியிடம்.
     “என்னக்கா இது?! இன்னுமா சாப்பிடலை! மங்கைதான் வீட்ல இருக்கால்ல! சாப்பாடு போட்டுக் கொடுக்கலையா?!” என்று ஆச்சர்யமும் குழப்பமுமாய் கேட்க,
     “இப்போ பதில் சொல்லலைன்னா கொண்டு வர மாட்டியா?!” என்று மைத்து முறைக்க,
     “சரி சரி, கொண்டு வரேன்” என்றவள் அக்காவிற்காய் உணவைக் கொண்டு வந்து கொடுக்க, அதைக் கையில் வாங்கிக் கொண்ட மையு,
     “நீ போய் முகம் கழுவி ட்ரெஸ் மாத்திக்கோ. நான் சாப்பிடுறேன்” என்று தங்கையை அனுப்பி வைத்தாள்.
     சிறிது நேரத்தில் வீட்டில் உள்ள அனைவரும் ஒவ்வொருவராய் வரத் துவங்க, அனைவரும் வந்தவுடன், மைத்ரேயி ஜீவாவைப் பார்த்து,
     “ஜீவா, நீயும் உன் மனைவியும் தனிக்குடித்தனம் போயிடுங்கடா” என்றாள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு.
     “அக்கா?!” என்று ஜீவா அதிர, மற்றவர்களும் கூட அதிர்ச்சியுடன் தான் அவளைப் பார்த்திருந்தனர்.
     “சொன்னதைச் செய்!” என்று மைத்ரேயி முடிவாய்ச் சொல்ல, அங்கிருந்தவர்களுக்கும் மங்கையின் போக்கு கடைசியில் இப்படித்தான் முடியும் என்று தெரிந்திருந்ததால், எதுவும் பேச இயலவில்லை!
     ஜீவாவிற்கும் திருமணமான புதிதிலிருந்தே மங்கையின் எண்ணம் அதுவாகவே இருக்க அக்கா அதைப் புரிந்துதான் இப்படிச் சொல்கிறாள் என்று தெரிந்து அமைதியாகி விட்டான். ஆனால் சாந்திக்குதான் மனம் ஆறவில்லை! தன் அண்ணன் மகள் என்று ஆசை ஆசையாய் திருமணம் செய்து வைத்தாமோ! இரண்டு மாதம் கூட முழுதாய் முடியவில்லை! அதற்குள் எல்லாம் நினைத்ததற்கு மாறாய் நடக்கிறதே என்று வருத்தம் கொண்டார்.
     எனினும், மைத்து எடுத்திருக்கும் முடிவும் சரிதான். சில நாட்களாகவே பிரச்சனை பெரிதாகி ஒட்டு உறவேயில்லாமல் போவதை விட, சற்றுத் தள்ளி இருந்தாலும் உறவோடு இருக்கலாமே என்றுத் தோன்ற ஆரம்பித்திருந்ததில், மகன் சற்றுத் தொலைவே இருந்தாலும் நிம்மதியாய் இருந்தால் போதும் நினைத்துக் கொண்டார் மனதைத் தேற்றி கொண்டு.
                                  *****
     “ஹெலோ! என்ன பண்றீங்க? வீட்டுக்கு வந்துட்டீங்களா?” என்றாள் அவள்.
     “இல்ல ரஞ்சனி இப்போதான் கிளம்பறேன்.” என்றபடியே மித்ரன் தன் மேஜையின் மீதிருந்த கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேற,
     “ஓ! நாளையில இருந்து போக மாட்டீங்க இல்ல?” என்றாள் மீண்டும்.
     “ஏன்? கல்யாணத்துக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கே!” என்று அவன் கேட்க,
     “இல்ல! பந்தக்கால் வச்சுட்டா வீட்டை விட்டுப் போகக் கூடாதுன்னு சொல்வாங்க!” என்றாள் தயங்கத்துடன்.
     “இந்த காலத்துல இதெல்லாம் பாலோ பண்ண முடியுமா ரஞ்சனி?! ரிஷப்ஷன் அன்னிக்கு லீவ் எடுத்தா போதும். அதுக்கப்புறம் வேற ஒரு டூ, த்ரீ டேஸ் லீவ் எடுக்க சொல்வாங்க. இப்போவே எடுத்தா யார் பேஷண்ட்சை கவனிப்பா?” என்றபடியே காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
     “ஓ! ம்!” என்று ஆமோதித்தவள்,
     “நா நான் உங்களுக்கு எதுக்கு கால் பண்ணேன்னா,” என்று அவள் தயங்க,
     “சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லு ரஞ்சனி. நான் டிரைவிங்ல இருக்கேன்” என்றான்.
     “ஹான்! வந்து இல்ல, என்னோட பிரெண்ட்ஸ் உங்களைப் பார்த்து உங்களோட பேசணும்னு சொன்னாங்க. இப்போ உங்களால காபிடேக்கு வர முடியுமா?!” என்றாள் சொல்ல வந்ததை ஒருவழியாய் சொல்லி முடித்து.
     “வரதைப் பத்தி ஒண்ணுமில்லை! பட் எனக்கு இன்னும் சில அவுட்பெஷன்ட்சை பார்க்க வேண்டி இருக்கு! பார்த்துட்டு வர லேட் ஆகிடும்!” என்று யோசித்தவன்,
     “நைட் டின்னர்க்கு வேணா தாஜ்ல மீட் பண்ணலாமா?!” என,
     “அச்சோ ஈவினிங் வெளில போகணும்னு சொன்னாலே அம்மா என்ன சொல்வாங்களோன்னு பயமா இருக்கு! வீட்ல சொந்தகாரங்க எல்லாம் வேற வந்திருக்காங்க. நானே கோவிலுக்குப் போறேன்னு சொல்லிட்டுதான் வர நினைச்சேன்!” என்றாள் ரஞ்சனி.
     “ஓ! சரி பார்க்கறேன்! சீக்கிரம் வர முடிஞ்சா கால் பண்றேன். இல்லைன்னா ரிஷப்ஷன்லயே பார்த்துக்கலாமே எல்லோரையும்” என்று அவன் சொல்ல,
     “ஓ! பார்த்துக்கலாமே!” என்றாள் அவளும்.
     “லூசு லூசு!” என்று அருகே நின்றுக் கேட்டிருந்த அவள் தோழிகள் அவளைத் திட்ட,
     “போங்கடி!” என்றாள் அவளும்.
     “என்ன பக்கத்துல உன் பிரெண்ட்ஸ் இருக்காங்களா?!” என்றவன்,
     “ஸ்பீக்கரை ஆன் பண்ணு” என, அவள் ஸ்பீக்கரை ஆன் செய்ததும்,
     “எங்கேஜ்மென்ட்ல தான் எல்லோரும் பார்த்தீங்களே. அப்போவே பேசி இருக்கலாமே!” என்றான் மித்ரன்.
     “அ அது வந்து சார்!” என்று அவள் தோழிகள் திணற,
     “உங்க பிரெண்ட் மேல ரொம்ப அக்கறை இருந்திருந்தா எங்கேஜ்மென்ட் நடக்குறதுக்கு முன்னாடியே நீங்க எல்லோரும் என்னை மீட் பண்ணி பேசி இருக்கணும்! அதை விட்டுட்டு இப்போ பேசினா, நான் நல்லவனா கெட்டவனான்னு தெரிஞ்சு என்ன பண்ண முடியும்?!” என்று அவன் குதர்க்கமாய் கேட்க, இவளுக்கு ஐயோ என்றானது.
     “அச்சோ அதுக்காகவெல்லாம் இல்லை மித்ரன்” என்று ரஞ்சனி சட்டென பதறி மறுக்க,
     “வேற எதுக்காக?!” என்று இவனும் விடாமல் அவளை வெறுப்பேற்ற,
     “ப்ச் ரிஷப்ஷன் அன்னிக்கே அவங்களைப் பார்த்துக்கலாம். போ போனை வச்சிடறேன்” என்றவள், பட்டென கைபேசி இணைப்பைத் துண்டித்தும் விட்டாள்.
     அவளது பதட்டத்தில் அவன் சின்னதாய் சிரித்தபடி, ப்ளூடூத்தை ஆப் செய்துவிட்டு டிரைவிங்கில் கவனம் செலுத்தலானான்.
                                 *****
     “என்னடி! அவரு இப்படிப் பேசுறாரு?!” என்று ரஞ்சனியின் தோழிகள் அவளைக் கேட்க,
     “எல்லாம் உங்களால்தான்!” என்றவள்,
     “இப்போ அவர் என்னதான் தப்பா நினைப்பார்” என்று புலம்பினாள்.
     “காபி டேக்கு வந்துடுங்க. ஒரு ஒன் ஹார்ல அங்க வர பார்க்கிறேன்” என்று அவன் மெசேஜ் அனுப்ப இருக்க, அதைப் பார்த்தவள்,
     “அய்!” என்றுத் துள்ளிக் குதிக்க,
     “என்ன என்னடி?!” என்றார்கள் அவள் தோழிகள்.
     “இன்னும் ஒன் ஹார்ல வரேன்னு சொல்லி இருக்கார்டி. நாம கிளம்புவோம்!” என்றாள் ரஞ்சனி உற்சாகமாய்.
     “ம்ஹும் இவ கவுந்துட்டாடி. மொத்தமா கவுந்துட்டா!” என்று கேலி செய்தனர் அவள் தோழிகள் அவளது வெட்கப் புன்னகையை மேலும் கூட்டும் வகையில்…
                                 *****
     ஒரு மணி நேரம் அல்ல, ஒரு நிமிடம் கூட போதுமானதல்லவா வாழ்வின் சில அசாதாரமாண திருப்பங்கள் நிகழ! அந்த ஒரு மணி நேரத்திற்குள் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் யார் யார் வாழ்வில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரப் போகிறது என்று பார்ப்போம்!
                           *****
     “சார்! நாளைக்கு ப்ரியாக்காக்கும் உங்களுக்கும் நலங்கு விழா இல்ல?” என்றாள் மைத்து உற்சாகமாய்.
     “ம்! அக்கா சொன்னாளா?” என்றான் மெல்லிய புன்னகையுடன்.
     “ம் ம்! போட்டோஸ் எடுத்து அனுப்ப சொல்லி இருக்கேன்! நான் தான் வர முடியாதுல்ல!” என்று அவள் சொல்ல,
     “ஏன் வர முடியாது? நான் வீட்ல இருந்து வண்டி அனுப்பறேன் நீங்க எல்லோரும் வாங்க.” என்று அவன் சொல்ல,
     “அட போங்க சார் சும்மா விளையாடாதீங்க!” என்றாள் மைத்து.
     “இதுல விளையாட என்ன இருக்கு?! நாளைக்கே உங்க ஃபாமிலியோட கிளம்பி வந்துடுங்க! அங்க எங்க வீட்லயே ஸ்டே பண்ணிக்கலாம் மேரேஜ் முடியுற வரைக்கும்!” என்றான் இவன் சற்றும் யோசிக்காமல்.
     “அட போங்க சார்! கூடப் பிறந்த தம்பி கல்யாணத்துக்கே என்னை யாரும் கூட்டிட்டுப் போகலை! ஏன் ஒரு புதுத்துணி கூட அட்லீஸ்ட் ஒரு புது நைட்டி கூட எடுத்துக் கொடுக்கலை! இதுல உங்க கல்யாணத்துக்கு என்னைக் கூட்டிட்டு வந்துட்டாலும்” என்று அவள் சலிப்புடன் சொல்ல, அவனுக்கு ஏதோ போல் ஆனது.
     அவன் அமைதியாய் அவளுக்குப் பயற்சிகள் செய்ய,
“ஏன் சார் ஒரு மாதிரி ஆகிட்டீங்க?! அது சிலரோட தலையெழுத்து அப்படித்தான் அதையெல்லாம் மாத்த முடியாது. ஆனா உங்களையும் ப்ரியக்காவயும் பார்த்தா லைட்டா பொறாமையா இருக்கு! ஏன்னா கோல்ட்பிளவர் ஆன்ட்டி மாதிரி ஒரு அம்மா கிடைச்சிருக்காங்களே உங்களுக்கு! எனக்குத்தான்,
என்றவள், தானே தொடர்ந்து,
     “எங்க அம்மாவும் கொஞ்சூண்டு நல்லவங்கதான்! சில விஷயமெல்லாம் முகம் சுளிக்காம செய்யும்! ஆனா என்ன எப்போ பாரு இப்படிப் படுத்துக் கிடந்து உசிர வாங்குறேன்னு புலம்பும்!” என்றாள் தன் தாயை நினைத்தபடி.
     அவள் வேதனை அவனை ஏதோ செய்தது. எல்லா நோயாளிகளிடமும் இல்லாத ஒரு நெருக்கம் அவள் மனதோடு அவனுக்கு ஏற்பட்டிருந்தது அவன் அறியாமலே! அது ப்ரியாவின் நட்பு என்பதால? இல்லை அவள் மீது இருக்கும் பரிதாபத்தாலா? இல்லை வேறு எதனாலா என்று அவனும் அறியவில்லை! அவளும் அறியவில்லை! 
                                – மான்விழி வருவாள்…
 
    
   
    
       
 
          
    
   
 

Advertisement