அத்தியாயம் 22 

மதிய உணவின் போது…. , 

மது தன் தம்பிப் படையோடு சாப்பிட உட்கார , ஜீவா அவர்களைக் கேலி செய்தபடி உணவு பரிமாறினான் . 

உணவு இடைவேளைக்குப் பின் , எந்த நிகழ்ச்சி நிரல்கள் இல்லாமல் , ரிலாக்ஸாகப் பேசிக் கொண்டிருக்கலாம் என்று முடிவு செய்யபட்டிருந்தது .

 நன்றாக பாடக்கூடியவர்கள் மேடையில் பாடினர் ,  பழைய சினிமா வசனங்கள் பேசினர் , சிலர் பழைய நினைவுகளைச்  சிலாகித்தனர் , ஊர் மாறிய விதத்தைப் பகிர்ந்தனர்  , 

தாமஸ் மேடை ஏறி , மற்றவர்கள் செய்த குறும்புகள் , ஆசிரியரிடம் மாட்டிய அனுபவங்கள் , பேனா மை கடன் கொடுத்த கதைகள் என்று பகிர , மண்டபமே சிரிப்பலையில் குலுங்கியது .

அவரைத் தொடர்ந்து , மேலும் சில நண்பர்கள்  , பிரம்படி அனுபவங்கள்  , வாய்ப்பாடு சரியாகச் சொல்லாமல் மாறி மாறி கொட்டிக்கொண்ட தருணங்கள் , பள்ளிக்குப் போகாமால் ஏமாற்றி கோவில் தெப்பக்குளத்தில் உட்கார்ந்த நாட்கள்  என்று பகிர, 

கேலியும் , கிண்டலுமாக, ஒரே கொண்டாட்டமாகிப் போனது .

மொத்தத்தில் கவலையில்லாது துள்ளித் திரிந்த , தங்கள் இளமைக் காலத்திற்குச் சென்றிருந்தனர் .

எந்த ஒரு நன்நாளும் முடிவுக்கு வரத்தானே செய்யும் , நன்றியுரை ஆற்றிய  சுரேந்தர்…. , 

ஆனந்தன் , ராஜனின் முயற்சியை வெகுவாகப்  பாராட்டினர் . எடுத்த காரியத்தை முடிக்க , ஓயாது அலைந்து , பேசி , நேரம் செலவிட்டு , அட்டகாசமாகச் செய்து அசத்தி விட்டீர்கள் , மிக்க நன்றி….” என்றார் .  

“மேலும் உங்களுக்கு ஒத்துழைத்து , ஊக்குவித்து , அவர்களுக்கான நேரத்தை விட்டுக் கொடுத்த,  உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு , எங்கள் மனமார்ந்த நன்றிகள்  . முக்கியமாக ஜீவா மற்றும் அவர்களது நண்பர்களின் உதவிக்கு , எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் . இன்றைய மகிழ்ச்சி , உங்களால் தான் சாத்தியமானது , இந்நாள் என்றென்றும் மனதில் பொக்கிஷமாக இருக்கும்…” என்று நெகிழ்ந்தார் .

ராஜனை மேடை ஏறச் சொன்ன ஆனந்தனிடம் , “நீ  பேசு வாத்தியாரே…” என்று அவருக்கு வழிவிட, 

மேடை ஏறிய ஆனந்தன் , “உங்கள் பாராட்டிற்கு மிகவும் நன்றி , இச்சங்கமதிற்கான விதையை மட்டும் தான் நாங்கள் போட்டோம் , இன்று அது பூத்துக் குலுங்குவதற்கு,  உங்கள் அனைவரின் ஆர்வமும் , ஆலோசனையும் , ஊக்கமுமே காரணம் . இதில் நாங்கள் கருவி மட்டும் தான் , எங்கள் கூட இருந்த அனைத்து நண்பர்களுக்கும்  எங்கள் நன்றி….” என்று முடித்தார் .

பின் பேசிய ஜீவா  , “ராமனுக்கு உதவிய அணில் போல் இந்த நல்ல காரியத்தில் நாங்கள்  பங்கு கொள்ள முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி .  மேலும் உங்களைப் பார்க்கும் பொழுது , உங்கள் வாழ்க்கைப் பயணத்தைக் கேட்ட பொழுது ,  எங்களுக்கு எதிர்காலம் மீது பெரும் நம்பிக்கை வந்துள்ளது . வாழ்க்கை குறித்த பார்வை மாறியுள்ளது , ஊக்கமும் , உத்வேகமும் கூடியுள்ளது . அதற்கு எங்களது நன்றிகள்…”  என்றான் .

ஜீவாவைத் தொடர்ந்து , மேலும் சில இளைஞர்கள் ,  இந்த விழாவைச் சிலாகித்துப் பேசினர் .

பின் மேடை ஏறிய மது , “எத்தனையோ பேச்சாளர்கள் , புத்தகங்கள்  கற்றுத் தரக் கூடிய  விசயங்களை , இந்த ஒரு நாள் எங்களுக்கு ( இளைய தலைமுறைக்கு) கற்றுத் தந்துள்ளது . அதற்காக எங்களது நன்றிகள் . அடுத்ததாக என் அம்மாவின் தோழிகள் சந்திப்பை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்…” என்று பேசினாள்.

இறுதியாக மேடை ஏறிய சுரேந்தர் மனைவி , “நிச்சயம் மது… , பெண்களும் இந்த மாதிரி முன்னெடுப்புகளைச் செய்து , தங்களை இளமையாகவும் , புத்துணர்வாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் , அதற்கு அவர்கள் குடும்பத்தினரும் துணை நிற்க வேண்டும்….” என்று கேட்டுக்கொண்டு , “இந்த அருமையான நாளுக்கு நன்றி…” என்று விடை பெற்றார் .

பின் பலர் தங்கள் பள்ளியைப் பார்த்து விட்டுக் கிளம்புவதாக விடைபெற்றனர் .

மொத்தத்தில் இந்நாள், நினைவு பெட்டகத்தில் பத்திரமாகப் பாதுகாக்கக் கூடிய நாளாக , விரும்பி அசை போடக் கூடிய நாளாக அமைந்தது என்னவோ உண்மை……

அத்தியாயம் 23

விமலா வீட்டுக்குக் கிளம்பும் முன்  சுபாவை அழைக்க , அப்போது அங்கு வந்த ராஜன் , “இன்னொரு நாள் கட்டாயமாக வருகிறோம் , ரொம்ப நேரமாகிவிட்டது , மேலும் கொஞ்சம் அசதியாகவும் உள்ளது  .” என்றார்.

விமலாவிற்கு அதிருப்தி உண்டாகி விடும் என்பதை உணர்ந்த ஆனந்தன் , “இவ்வளவு தூரம் வந்து விட்டு , வீட்டுக்கு வராமல் எப்படி?” என்று இழுத்தார் .

“இல்லை ஆனந்தா , ஏற்கனவே உனக்கும் , ஜீவாவிற்கும்  வேலை ஜாஸ்தி , ஓய்வு எடுங்கள் , எனக்கும் ஓய்வு தேவைப்படுகிறது…” என்று வலியுறுத்தினார் .

மேலும்,”குமாரும் நன்மங்கலம் வரவேண்டும் என்றான் , நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒருநாள் கட்டாயமாக உன் வீட்டுக்கு வருகிறோம் . அவசரமாகக் கிளம்பாமல் நிதானமாக இருந்து  போகிறோம்…” என்று முடித்தார் .

சூழ்நிலையை சகஜமாக ஆக்கும் பொருட்டு , “அப்ப சாப்பிடுகிற மாதிரி வரவேண்டும் மாமா….” என்று ரம்யா அன்புக் கட்டளையிட , 

“கட்டாயமாக ரம்யா…” என்று உறுதி கொடுத்து விட்டு , “ஜீவா, அவன் நண்பர்களுடன் இருக்கிறான் என்று நினைக்கிறேன் , அவனிடம் சொல்லி விடு ஆனந்தா….” என்று அனைவரிடம் விடைபெற்றார். 

கார் ஏறியவுடன் மதுவும் , அருணும் கண்ணசந்து விட,  

“ஒரு எட்டு உங்கள் நண்பர் வீட்டுக்குப் போய் வந்திருக்கலாம் , விமலாவின் முகமே சரியில்லை….” என்றார் சுபா .

“நீ சொல்வது சரி தான் , ஆனால் எனக்கு ரொம்ப அசதியாக இருக்கு ,மேலும் இன்றைய நிகழ்வுகளை , நின்று நிதானமாக அசை போட வேண்டும் , அதை அனுபவிக்க வேண்டும் என்கிறது மனது….” என்றார் ராஜன் . 

அவருடைய உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொண்ட சுபா , “சரி , ஜீவாவிற்கு போன் செய்து கிளம்புகிறேன் என்று தெரிவியுங்கள் .”

“ஏன் சுபா ? அதான் ஆனந்தனிடம் சொல்லி விட்டோமே….” என இழுக்க , 

“உங்களுக்கு இருக்கும் மனநிறைவு உங்கள் நண்பருக்கு வேண்டாமா… ? “ 

“புரியவில்லை சுபா , விமலாவை ஜீவாவால் தான் சமாளிக்க முடியும் , சரியாகக் கையாள முடியும்….” என்று  தன் அவதானிப்பைப்  பகிர்ந்தார் .

ராஜனும் ,”நீ சொல்வது சரி தான் , ஆனந்தன் குடும்பத்தில் , பிள்ளைகள்  பேச்சு எடுபடும் தான், எப்படி சுபா?, நானாவது ஆனந்தனிடம் பழகியதில்  புரிந்து கொண்டேன்…”  என்று ஆச்சரியப்பட ,

“அதான் பெண்களின் சாமர்த்தியம்….” என்று இல்லாத காலரைத்  தூக்கி , 

“நீங்கள் ஆனந்தன் விசயத்தில் மிகுந்த கவனத்துடன் இருப்பது , இன்று அவரைக் கட்டாயப்படுத்தி மேடை ஏற்றியது என்று எல்லாவற்றையும் கூட்டிக் கழித்தேன் , கணக்கு சரியாக வந்துவிட்டது….” என்று நகைத்தார் .

“ஆமாம் சுபா ,  விமலாவிற்குப் பெரிதாக விருப்பம் இல்லை , இதனால் எந்தத் தர்ம சங்கடமும் ஆனந்தனுக்கு வந்து விடக்கூடாது” என்று கவனமாக இருந்தேன்.

“எல்லோருக்கும் என் சுபா மாதிரி பொண்டாட்டி கிடைக்குமா ? “என்று பெருமை பேச , 

“இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல் இருக்கிறதே , என்ன? மனதிற்குள் எனக்கு வாய்த்த அடிமை மிகவும் நல்லவள் என்று ஓடுகிறதோ…? , என்று சுபா கலகலக்க,

“சத்தியமாகச் சொல்கிறேன் சுபா , நான் கொடுத்து வைத்தவன்…” என்று நெகிழ்ந்தார் .

சுபாவும்,” நானும் தான்….” என்று குழைந்தபடி ,கியரில் இருந்த அவர் கையை பிடித்தார் .

 பின் ராஜன், தன்னைச் சமன் செய்து கொண்டு ,  ஜீவாவை அழைத்து தான் உடனே கிளம்புவதாகவும் , அதற்கான காரணத்தை விளக்க , 

“சரிங்க மாமா , பிளான் பண்ணிவிட்டுச் சொல்லுங்கள், கலக்கி விடலாம்…” என்று முடித்தான்.

அத்தியாயம் 24

வீட்டில் ரம்யா கிளம்பியபடி , “அப்பா சூப்பராகப் பேசினீர்கள்….” என்று பாராட்ட , 

ராமும்,” நச்சென்று திருக்குறள் மாதிரி பேசிவிட்டீர்கள் மாமா…” என்று புகழ்ந்தான் .

விமலாவும் ,” நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நன்றாகச் செய்திருந்தீர்கள்  , அங்கிருந்த எல்லோருக்கும் மிகவும் திருப்தி , நிறையப் பேர் உங்களைப் பெருமையாகப் பேசினார்கள்…”  என்றார் பெருமிதமாக.

விமலாவிடம் இருந்து வந்த பாராட்டைக் கேட்டு பூரிப்பாகி , நேரம் காலம் தெரியாமல் ,

“நம்ம ராஜா தான் வற்புறுத்தி மேடை ஏற்றினான்…” என்று புகழ் பாட , 

ஏற்கனவே கடுப்பில் இருந்த விமலா ,  “நீங்கள் தான் உங்கள் நண்பரை மெச்சிக் கொள்ள வேண்டும் , அவ்வளவு வற்புறுத்தி அழைத்தும் , எப்படி மறுத்து விட்டுப் போனார்…” என்று ஆரம்பிக்க , 

ஆனந்தன் ரம்யாவைப் பாவமாகப் பார்த்தார் .

“ஏன் ரம்யா?  உன் அப்பா தானாகப் போய்  தலையைக் கொடுக்கிறார்…” என்று  ராம் முணங்கினான் ,

 “அம்மா ஆரம்பிக்காதீர்கள் , இந்த நாளோடு சந்தோஷத்தைக் கெடுத்து விடாதீர்கள்…”  என்று கறாராக பேசினாள் ரம்யா . 

“உண்மையைச் சொன்னால் , யாருக்கும் பிடிக்காது ,  புருஷன் , பொண்டாட்டி கூட இப்படிப் பேசமாட்டார்கள் ,  நாங்கள் தான் நட்பிற்கு இலக்கணம் என்பது போல் எல்லா நேரமும் போன் தான் , பேச்சு தான்… , 

இப்போது பாரு காரியம் முடிந்தவுடன் மூக்கறுத்து விட்டுப் போய் விட்டார்…” என்று  அர்ச்சனையைத் தொடர , 

சரியாக உள்ளே நுழைந்த ஜீவா , சூழ்நிலையைக் கையில் எடுத்தான் .

“அம்மா பயங்கரமான தலைவலி , உங்கள் ஸ்பெஷல் , ஸ்டராங்  காபிம்மா…”என்று கேட்க , 

“இருக்கிற எல்லா வேலையையும் தலையில் போட்டுத் கொண்டால்….” என்று நொடித்துக் கொண்டே ,

“ரம்யா இதை எடுத்து வை , அவனுக்குக் காபி எடுத்து வருகிறேன்…” என்று உள்ளே போனார் .

ரம்யாவை பார்த்து  ஜீவா கண்ணடித்துச் சிரிக்க ,   ஆசுவசமானார் ஆனந்தன் .

காபியோடு விமலா வர , காபியை ஒரு வாய் அருந்திவிட்டு ,” பேஷ்… பேஷ்…, காபினா, நம்ம , விமலா காபி தான்  , ரொம்ப நன்னா இருக்கு…” என்று  கலகலப்பாக்கினான் .

 ஆனந்தன் , ராமிடம்,”சாப்பிட்டுப் போகலாமே…” 

“இல்லை மாமா , இப்போது கிளம்பினாலே ஒன்பதாகிவிடும் , சாப்பிட்டுப் போவது என்றால் இன்னும் நேரமாகிவிடும், நாளைக்கு வேலைக்குப் போக வேண்டும் , சரி வராது…”  என்று முடித்தான் 

“அத்தையும் ரெஸ்ட் எடுக்கட்டும் , நாங்கள் இருந்தால்  அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று வேலையை  இழுத்து கொள்வார்கள் . அம்மா உணவு ரெடி செய்து விடுவார்கள் , அங்கு சாப்பிட்டுக் கொள்கிறோம் . நாங்கள் கிளம்புகிறோம் .”

உடனே ஜீவா , “ராஜன் மாமா அடுத்த முறை வருகிறேன் என்று போனில் விடைபெற்றார் அப்பா , என்னடா? வீட்டுக்கு வராமல் போகிறார் என்று நினைத்தேன் , இப்போ யோசிக்கும் போது , எனக்கும் தலை வலி , அம்மாவிற்கு இரவுச் சாப்பாட்டு வேலை  வந்திருக்கும் , அவர்கள் இருக்கும் பொழுது ரம்யாவும் கிளம்ப முடியாது , ராஜன் மாமா வராதது  நல்லது தான்….”  என்று இயல்பாகப் பேசுவது போல் ,  அப் பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தான் ஜீவா .

ராஜன் பேசியதை அறிந்து ஆனந்தனும் நிம்மதியானார்

ரம்யா காதில் ராம்  , “உன் அண்ணன்  சிக்ஸ்ர் அடிக்கிறான்…” என்று கேலி செய்ய ,

உஷ்…. ,சும்மா இருங்கள்….” என்று அடக்கினாள் .

ரம்யா கிளம்ப , “அம்மா , நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் , மதியம் சாப்பிட்டதே ஹெவியாக இருக்கு,  இட்லி வாங்கி வருகிறேன் , சாப்பிட்டுப் படுத்துவிடலாம்…” என்று நகர்ந்தான் .

அத்தியாயம் 25

 மாதங்கள் ஓட , ஏதாவது ஒரு தடை வந்து நன்மங்கலப் பயணம் தள்ளிப் போய் கொண்டே இருந்தது . ஆனந்தனும் இதனால் சில நேரங்களில் விமலாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தார் .

வழக்கம் போல் மது திங்களன்று தாமதமாக எழுந்து , அரக்கப் பறக்கச் செல்ல , அதற்குள் அலுவலகப் பேருந்து போய்விட்டது .

“என்னடாமா , சின்னப் பிள்ளை போல் , பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு…” என்று ராஜன் அங்கலாய்க்க, 

டாக்ஸி புக் செய்தபடி , “கண்ணை திறக்க முடியவில்லையே அப்பா….” என்று சிணுங்கினாள் . பின் , “அப்பா ஒரு உடன்படிக்கை…” என்று பிட்டைப் போட ,

“என்னடாமா மது ?”

“ அம்மாவிடம் ….”  என்று ஆரம்பிக்க , 

“வாய்ப்பில்லை ராஜா , வாய்ப்பு இல்லை…” என்று சீமான்  ஸ்டைலில் ராஜன் பேச , 

“இந்த ஹரிச்சந்திரன்  தொல்லை தாங்கவில்லை…” என்று சலிக்க , டாக்ஸி வர , பாய் சொல்லிக் கிளம்பினாள் 

டிராப்பிக்கில் சிக்கி , அலுவலகம் அடைய நன்றாகத் தாமாதமாகி விட , பரபரப்பாகச் சாலையைக் கடக்க முயன்றாள் .

 திடீரென வேகமாக வந்த பைக் அவள் மீது மோத , நிலை தடுமாறி கீழே விழ , தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே மயங்கினாள் .

அலுவலக வாசலில் நடந்தது என்பதாலும் , அவர் ஐடி கார்டைப் பார்த்துப் புரிந்து கொண்ட விசால்  , அங்கிருந்த மக்கள் , அவளை ஆட்டோவில் ஏற்றுவதைக் கண்டு  , தனியாகப் போவது நல்லதல்ல என்று தானும் உடன் ஏறினான் .

ஆட்டோ , செங்கல்பட்டு மருத்துவமனை நோக்கிச் செல்ல , மதுவின் டிபார்ட்மென்டிற்கும் , அப்படியே தன்னுடய டிபார்ட்மென்டிற்கும் தகவல் தெரிவித்தான் விசால் .

மருத்துவமனையில் உடனே , மதுவிற்கு முதலுதவி ஆரம்பிக்கப்பட்டது .

விசால் வெளியில் காத்திருந்தான் , அந்தப் பக்கம் கடந்த சென்ற ஜீவாவை ஏதோ உள்ளுணர்வு உந்த , எட்டி என்னவென்று பார்க்க , இரத்தக் காயத்தோடு மது… , ஒரு நிமிடம் ஆடிப் போனான் .

பின் விவரம் அறிந்து , சிகிச்சை முழுவதிற்கும்  உடனிருந்தான் . மயக்கம் தெளியச் சிறிது நேரம் ஆகுமென்பதை உணர்ந்து , நர்ஸைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு , மயக்கம் தெளிந்தவுடன் அழைக்கும் படி அறிவுறுத்தி விட்டு , சில வேலைகளைச்  செய்து வர நகர்ந்தான் .

வெளியே காத்திருந்த விசாலிடம் தன்னை மதுவின் குடும்ப நண்பர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, விவரங்களை கேட்டான் . பின்  விசால் சமயத்தில் செய்த உதவிக்கு  நன்றி தெரிவித்தான் .

பேசிக்கொண்டிருக்கும் பொழுதே , விசாலின் கையில் இருந்த கைப்பையில் இருந்த  போன் அடித்துக்கொண்டே இருக்க ,  அதை எடுத்தான் விசால்.

மதுவின் அலுவலகத் தோழி பூஜா , “எங்கே இருக்கிறாள்?, எப்படி இருக்கிறாள் ?  என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள அழைத்தாகவும்….  , அங்கு உடனே வருகிறேன்….” என்றாள் .

“ஒரு நிமிடம்…” என்று ஜீவாவைப் பார்க்க , இதைக் கேட்டுக் கொண்டிருந்தவன் , போனை வாங்கி , 

“நான் ஜீவா , மதுவின் குடும்ப நண்பர் , இங்கு தான் டாக்டராக இருக்கிறேன்  , நீங்கள் வர வேண்டாம்,  சின்ன அடி தான் , மதுவின் வீட்டிற்குத் தகவல் சொல்லி விடுகிறேன்…” என்றான்  .

“பராவாயில்லை டாக்டர் , நான் வருகிறேன்….” என்று பூஜா மீண்டும் வலியுறுத்த , 

“ஒன்றும் பிரச்சனையில்லை , மதுவே இன்னும் சிறிது நேரத்தில் கண் முழித்து விடுவாள்…” என்று விளக்கினான் .

நன்றி தெரிவித்த பூஜா , “மயக்கம் தெளிந்தவுடன்  மதுவை கண்டிப்பாகப்  பேசச் சொல்லுங்கள்…” என்றாள் . பின்,”  வேண்டாம் , நானே ஒரு மணி நேரம் கழித்து கூப்பிடுகிறேன்…” என்றாள் .

ஜீவா போனை விசாலிடம் கொடுக்க ,  தன் நன்றியையும், மதுவின் பாதுகாப்பையும் உறுதி செய்து வைத்தாள் . 

ஜீவா விசாலிடம் , “நான் பார்த்துக் கொள்கிறேன் , நீங்கள் வேண்டுமானால் கிளம்புங்கள்…”  என்று சொல்ல ,

“பரவாயில்லை டாக்டர் , அவங்க எழுந்தவுடன் பேசி விட்டு செல்கிறேன்…”  என்று காத்திருந்தான் .

எடுத்துக் கொண்ட பொறுப்பை முழுதாக முடிக்க நினைப்பதும் , அதில் இருந்த முன் ஜாக்கிரதை தன்மையையும் கவனித்த ஜீவா , விசாலை மனதிற்குள் மெச்சினான் .

“சரிங்க விசால் , எப்படியும் மது எழுந்து  கொள்ள குறைந்தது ஒரு மணி நேரமாவதாகும் , வாங்க உணவகத்திற்குப் போய் வருவோம்…” என்று அழைத்துச் சென்றான். 

உணவகத்தலிருந்து ஜீவா  நேராக அவன் வார்டிற்குச் சில வேலைகளைப் பார்க்கச் செல்ல , விசால் வந்து மீண்டும் காத்திருந்தான் .

தொடரும்……