Advertisement

“என் உடம்பு தான் அங்க இருக்கும் … என் மனசு உன்கிட்டதான் இருக்கும் … உங்க அப்பாவ நல்லா தெரிஞ்சுப் போச்சு .. நித்யாவ கன்வின்ஸ் பண்ணி அழைச்சிட்டு வந்தாலும் உடனே வாழ விடமாட்டார்… வந்தாலும் இன்னைக்கு நடந்த சம்பவங்கள் எல்லாருடைய மனசுல இருந்தும் போக நாளாகும் …அதுவரை என்னைய தனிச்சு விடு சாக்கி … எங்க அப்பா வீட்டு உதவியும் வேண்டாம் … உங்க அப்பா வீட்டு உதவியும் நான் கேட்காம எனக்கு செய்யாத … என்னால தனியா நிக்க முடியும் … நித்யாவுக்கும் தைரியம் கொடுக்க முடியும் … கொஞ்ச நாள் எங்கள சுயமா சிந்திக்கவோ செயல்படவோ அண்ணனும் தம்பியும் விடுங்க ப்ளீஸ்… “தன் தலையில் கை வைத்துக் கொண்ட பரிதி …

” எப்படியும் இளா அவங்க போற இடத்தை ட்ராக் பண்ணியிருப்பான் .. ஈஷ்வர் அவங்க பின்னே போனான் … அவன கேட்டுட்டு அங்க போய் உன்னைய விட்டுட்டு வாறேன்…” மெல்லிய புன்னகையோடு தன் மொபைலைக் காட்டியவள் ,

“பதற்றத்துலயும் நீ நித்யாவையும் கவனிக்க தவறலனு தான் பார்த்துட்டுத் தானேடா இருந்தேன். நீ என்னைய அதிகம் கவனிப்பியா தெரியாது .. நான் படிக்கும் போது கூட பிரேக்ல உன்னைய சைட் அடிச்சுட்டுத் தான் அடுத்து படிப்பேன் … உன் மேல கொஞ்சம் இல்லடா நிறையவே காதல்… அவங்க ரெண்டு பேரும் அவங்க காதல அப்படி வெளிப்படுத்துறாங்கனா… என் காதல எனக்கு இப்படி உன்னைய நிம்மதியா வச்சுக்கிறதுல தான் காட்ட முடியும் … சரி நித்தி எங்கனு நியூஸ் வந்துடுச்சி நான் உடனே கிளம்புறேன்…”

தெய்வானை அழுதுக் கொண்டு வர , லதா அவரைத் தேற்றிக் கொண்டே பின்னால் வருவதைக் காரிலிருந்து பார்த்தவர்கள் ,

“சாக்கி … அண்ணி எதுவும் சொல்லிட்டாங்க போல .. அவங்களப் பாரு .. சாக்கி ஐ மிஸ் யூ டா… இப்படி உன் கூட இருந்தா நான் செய்ய நினைக்கிறத எல்லாம் மறந்துடுவேன் .. நான் வாறேன்.. முன்ன சொன்னது தான் … நீயா வந்து என்னை பார்க்காத, பேசாத … போன்ல டிஸ்டர்ப் பண்ணாத …. ஆனா நானா இதெல்லாம் செய்தா கண்டுக்காத… ” என்றாலும் எழ மனமில்லாமல் அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் … ” படக்கென்று இறங்கிச் சென்று விட்டாள்.

என்னவோ இத்தனை நாட்களாக திருமணம் செய்தோம் .. கணவன் மனைவியாக வாழ்ந்தோம் என்பது போல இருந்த பரிதிக்கு தமிழை பிடித்தம் என்பதை தாண்டிய உணர்வு அதிகமாகியது.

உன் நெனப்பு

நெஞ்சுக்குழி வர இருக்கு

என்  உலகம் முழுசும்

உன்ன சுத்தி சுத்தி கெடக்கு…

நித்யா ஆட்டோவில் ஏறியதும் ஓட்டுனர் எங்கு செல்ல என கேட்கவும் , தன் நிலை அறிந்தவள் , பொது இடத்தில் அழுவது கேள்விகளை கொடுக்கும் என உணர்ந்து ,

” ரயில்வே ஸ்டேஷன் போங்க…” என்றாள். மதுரை இரயில் நிலையம் வந்து இறங்கியவளுக்கு எங்கு செல்வது என குழப்பம். கைப்பேசி ஒலிக்க எடுத்துப் பார்த்தவள் சாந்தா எண்ணும் விநாயகம் எண்ணும் மாறி மாறி வந்திருந்ததைப் பார்த்தவள் அதனை அணைத்து வைத்து விட்டு பெங்களுர் செல்வது என முடிவு செய்துக் கொண்டு, தன் கைப்பேசியில் ஆராய்ந்து இரவில் கிடைத்த ரயிலில் பதிவு செய்துக்கொண்டாள்.

உள்ளே வந்து ஒரு தூண் அருகே இருந்த கல் பெஞ்சில் அமரவும் …நடந்ததை எல்லாம் நினைத்து அழுகை வர ஆரம்பிக்க , வேகமாக கண்களை துடைத்துக் கொண்டாள்.

விழியிலே என் விழியிலே

கனவுகள் கலைந்ததே

உயிரிலே நினைவுகள் தழும்புதே .

கன்னங்களில் கண்ணீர் வந்து

 உன் பெயரை எழுதுதே

முத்தமிட்ட உதடுகள் உளருதே …

” நித்ய.ஸ்ரீஈஈஈ ” என்ற அழைப்பில் திடுக்கிட்டு பார்த்தவள் முன் ஒரு டீ கப்பையும் பிஸ்கட்டையும் நீட்டிக் கொண்டிருந்தாள் தமிழ் .

“அக்கா” என்றவளிடம்,

“அதே நொக்கா தான் … முழிச்சுட்டே தூங்குற …இந்தா முதல்ல இது ரெண்டையும் சாப்பிடு … ” என அவள் கைகளில் திணிக்க ,

வாங்கினாலும் சாப்பிடாமல் வைத்துக் கொண்டிருந்தவளிடம் ,

“உனக்கு பசிக்குதோ இல்லையோ நம்ம பிள்ளைங்களுக்கு பசிக்குமே … ” எனவும் நித்யா மறுபடியும் அக்கா என ஆச்சரியப்பட ,

“எஸ் எஸ்… நானும் அம்மாவாக போறேன்… சாப்பிட்டுட்டு கிளம்பு நாம அப்பத்தா வீட்டுக்குப் போகலாம்….”

“இல்லக்கா நான் யாருக்கும் தொந்திரவு தர விரும்பல …நைட் பெங்களூர் ட்ரைன்ல கிளம்புறேன்.”

“ஓகே பெங்களுர்தான … நாம கிளம்பலாம்… இன்னைக்கு அப்பத்தா வீட்ல தங்கிட்டு நாளைக்கு நாம போகலாம் சரியா…” அதற்குள் ஈஷ்வர் வந்து நின்றவன்…

“அக்கா வீட்டுக்கு வா.. அம்மா ரொம்ப ஃபீல் பண்றாங்க … “

” தம்பி ப்ளீஸ்டா என்னைய கொஞ்ச நாள் தனியா விடுங்க .. “

” மாமாவும் அதே தான் சொல்றார் … ” எனவும் தமிழ் ,

“ஈஷ்வர் கவலைப்படாத நான் பார்த்துக்கிறேன்” என அவனிடம் கண்களை காட்டி செய்தி சொல்லி அனுப்ப , மேகலா பேராட்சி, முகுந்தனோடு சாந்தாவும் விநாயகமும் கூட அவர்களருகே வந்துக் கொண்டிருந்தனர்.

பேராட்சி நித்யாவை அணைத்துக் கொண்டு சின்னதுரையை திட்டி திட்டி அழுதவர் ,

“உனக்கு நாங்க இருக்கோம்  வா.. என் கூட என்னைய மீறி என்ன செய்றான் பார்க்கிறேன்…. ” என்பது போல் அவர் மேகலா எல்லாம் எவ்வளவு சொல்லியும் நகர மறுக்க , விநாயகமும் சாந்தாவும் கூட அவளிடம் கெஞ்சிப் பார்க்க ,

” பெரியம்மா உங்க மேல , அமுதாக்கா மேல எல்லாம் நான் கோபப்பட்டு என்ன ஆகப் போகுது …நடந்தது எதுவுமே மாற்ற முடியாதது தானே… ஆனா பெரியம்மா நீங்க எந்தக் காரணங்களுக்காக எனக்கு வழுதி மாமாவோட கல்யாணம் பண்ணி வச்சீங்களோ தெரியாது… அவங்க எனக்கு கடவுள் கொடுத்த வரம்… இவ்வளவு  அசிங்கப்பட்ட பிறகுக் கூட நான் வாழ ஆசைப்படுறேன்னா அது அவங்களுக்காக மட்டும் தான்.… எனக்கு ஒன்னுனா அவங்களால தாங்க முடியாது… நான்னா அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் … என் உயிர் அவங்க… அவங்க உயிர பொக்கிஷமா பாதுகாத்து நான் இந்த உலகத்துக்கு கொண்டு வரணும்னு நினைக்கிறேன் அதுவரை என்னைய தனியா விடுங்களேன் …” என கதறி அழுத வளை தமிழ் நொஞ்சோடு சாய்த்துக் கொண்டாள்.

ஏன் இந்த சாபங்கள்

நான் பாவம் இல்லையா

விதி கண்ணாமூச்சி விளையாட்டு

நாம் காதல் பொம்மையா.

விழியிலே என் விழியிலே

கனவுகள் கலைந்ததே

உயிரிலே நினைவுகள் தழும்போதே…

அவளை உணர்ந்து ,

“அப்பத்தா அவளை கொஞ்ச நாள் தனியா விடுவோம்… உன் பேத்தி உன்னை மாதிரி தானே இருப்பேன் … தனியா விவசாயத்தை இந்த வயசிலயும் பார்க்குற … அது போல நான் அவளைப் பார்த்துக்குவேன் …” நித்யா உட்பட அனைவரும் தமிழைப் பார்க்க ,

 தமிழும் தன்னுடன் வருகிறாள் என்றதும் நித்யா ,

 “அக்கா உங்களையும் சேர்த்து தான் சொல்றேன்.. நானே என்னைய பார்த்துக்குவேன் …

” நீயே உன்னையப் பார்த்துக்குவ தான் … இல்லனு சொல்லல… உன் கூட கொஞ்ச நாள் இருக்கிறேன்னு தானே சொல்றேன்.. ஈஷ்வர் எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து நேரா பெங்களுருக்கு ஃபிளைட் டிக்கட் போடு… ” என்றவள், இல்லை வேண்டாம் என்று மறுத்தவளையும் அழைத்துக் கொண்டு விமான நிலையம் சென்றாள்.

தகவலறிந்த கிருஷ்ணனும் லதாவும் மேகலாவையும் முகுந்தனையும் மருமகளுக்கு துணைக்கு விட்டு விமான நிலையம் வர , தமிழ் லதாவிடம் பேசவே இல்லை. சரியாக உள்ளே செல்லும் நேரத்தில் , 

“அப்பத்தா… மசக்கையில இருக்கிறவங்க என்ன செய்யணும் … எப்படி இருக்கணும்னு ஃபோன்ல உன்கிட்டதான் கேட்பேன்… சொல்லு சரியா… ஏன்னா நானும் அம்மாவாகப் போறேன் …” என்பதை தெரிவிக்க , கிருஷ்ணன் மகிழ்ந்து ,

“அம்மு” என்றவாறு மகளின் நெற்றியில் முத்தமிட , பேராட்சி கடவுள்கள் அத்தனை பேரின் பேரைச் சொல்லி வாழ்த்த , லதா மகளின் மீதுள்ள பாசத்தில் , பேராட்சியிடம் ..

 “அத்தை இந்த நிலமையில உங்க பேத்திய எப்படி தனியா அனுப்ப…” என்றது தான் தமிழுக்கு சுள்ளென்று கோபம் பொங்க ,

“அப்ப நித்தி ..நித்யாவ …இந்த நிலமையில அனுப்பலாமா .. அவ மனுஷி இல்லையா… அத்தனையும் நேர்ல பார்த்தும் உனக்கு இரக்கம் வரலயா … அவ அக்கா அக்காணு சொல்லும் போது கிண்டல் பண்ணினாலும் நிஜமா அவளோட பாசத்தை நினைச்சு சந்தோஷமா தான் இருக்கும்.

என் கூடப் பிறந்தவளா இருந்தா நான் அவளுக்கு துணைக்கு நிற்க மாட்டேனா… .”, கிருஷ்ணன் ,

“அப்பா இருக்கேன்மா உனக்கு நீ அழைச்சிட்டு நம்ம வீட்டுக்கு வாம்மா…. அவ உலக யதார்த்தத்த சொல்லிட்டா  உங்க அம்மாவ உனக்குத் தெரியாதா … பேராட்சியும் , லதாவும் அவளிடம் விளக்கமளிக்க முற்பட ,

தனக்காகப் போராடும் தமிழைக் கண்டு நித்யாவிற்கு அழுகை வந்துவிட்டது.

“யாதார்த்தமாம் யதார்த்தம் .. அவளுக்கு பெத்தவங்க இருந்தா பரவாயில்லையே .. இருக்கட்டும் பா… நான் முதல்ல நித்யாவ கன்வின்ஸ் பண்ணி அப்பத்தா வீட்டுக்கு அழைச்சிட்டு வரலாம்னுதான் நினைச்சேன் .. ஆனா இப்ப சொல்றேன் சுயநலம் பிடிச்சவங்க இருக்கிற இடத்துல இனி நானும் இருக்க மாட்டேன்… அப்பா நீங்க சொல்லுவீங்களே படிப்புதான் நான் உங்களுக்கு தர பெரிய சொத்துனு… எனக்கு அது போதும்பா…” லதா குறுக்கே வர , அவரைக் காணாமலே ,

“இந்த உலகத்துல பெண்கள் யாரையும் 

நம்பி வாழக்கூடாது… தன் கால்ல நிற்கப் பார்க்கணும்னு சொல்லுவீங்க தானே… என்னாலயும் முடியும் நித்யாவாலயும் முடியும் … நாங்க எங்கள பார்த்துக்கிறோம்…தயவுசெய்து சொல்றேன் நானா உங்கள எல்லாம் தேடி வர வரைக்கும் யாரும் என்னையவோ நித்யாவையோ தொந்திரவுப் பண்ணாதீங்க … ” அனைவருக்கும் அதிர்ச்சி … குழந்தையாக , விளையாட்டுப் பெண்ணாக பார்க்கப்பட்ட தமிழ் மலர் … அன்று பாரதியும் ..பாரதிதாசனும் சொன்ன பெண்ணாக தான் கிருஷ்ணனுக்கு தன் மகள் தோன்றினாள். 

ஆண் உயர் வென்பதும் பெண் உயர் வென்பதும்

நீணிலத் தெங்கணும் இல்லை

வாணிகம் செய்யலாம் பெண்கள்

வானூர்தி ஒட்டலாம் பெண்கள் நல்

ஏணை அசைத்தலும்   கூடும்:-   அதை

யார் அசைத் தாலுமே  ஆடும்!

வீணை மிழற்றலும்   கூடும்;-    அது

மெல்லியின் விரலுக்கா    வாடும்?

                             புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்

( உங்கள் மேலான கருத்துக்களை எதிர்நோக்கி … இறுதிப் பதிவுகளுடன் சந்திப்போம் வாசகர்களே நன்றி … “

Advertisement