அகலாதே அணுகாதே

அத்தியாயம் 2

காதல் என்பது இரண்டு உடல்களில் வசிக்கும்

ஒற்றை ஆத்மாவால் ஆனது. –அரிஸ்டாட்டில்.

கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தபடி, சற்று முன் கிடைத்த திருத்தணி முருகனின் தரிசனத்தை மனதில் நினைத்த கதிரவனுக்கு மனம் அத்தணை லேசாகி இருந்தது.

மனிதமனம் தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் போட்டு குழப்பிக் கொண்டு, அந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது, இந்த சிக்கலை எப்படித் தீர்ப்பது, இந்த இலக்கை எப்படி அடைவது, எதிர்வரும் தடையை எப்படி உடைப்பது என தீவிரமாக சிந்திக்கும் வேளையில், செல்ல வேண்டிய பாதையை மறைத்து படர்ந்து இருக்கும் பனி, சூரியனைக் கண்டதும், பளிச்சென விலகி பாதையைக் காட்டுவது போல, முருகனின் முகத்தை, அவன் கண்களைக் கண்டதும், அவன் கண்களின் உயிர்ப்பு, ஆத்மாவின் அடி ஆழம் வரை சென்று அமைதிப் படுத்துகிறது.

”நானிருக்க நீ ஏன் கவலை கொள்கிறாய்…?” என்ற முருகனின் பார்வை. கதிரவனுக்கு மட்டும் தான் புரிந்தது போலும். தன்னைப் போலவே அவளும் உணர்ந்திருப்பாளா… என்று காருண்யாவின் முகம் பார்க்க, அவளோ “சென்னைல புதுப்பொண்ட்டிய கூட்டிட்டு போக வேற இடமே கிடைக்கலையா உங்களுக்கு..? எப்பப்பாரு கோயில், சாமி , பஜனைன்னு சரியான பண்டாரமா நீங்க…?”

“என்ன சொன்ன..?”

“ம்ம்.. சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னே…” உச்சஸ்ததியில் கூறியவளை கடந்து சென்ற சிலர் திரும்பி பார்த்துக்கொண்டே செல்ல, கதிரவனின் கோபம் தலைக்கேறியது.

முருகனின் அருளால் கனிந்திருந்த முகம், மீண்டும் இறுகிப்போக, அவளுடன் இணையாக நடந்து வந்து கொண்டிருந்தவன், விடுவிடுவென நடந்து சென்று விட்டான்.

எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காருண்யா, இவனை கவனிக்கவில்லை. அவள் திரும்பிப் பார்க்கும் போது அவனில்லாது போகவே “கொஞ்சம் ஓவராத் தான் போறோமே… போவமே என்ன இப்ப…?” என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டே எப்படியும் காரில் தனக்காக காத்திருப்பானென எண்ணிச் சென்றாள்.

கண்களை மூடி தன்னை சமநிலைக்கு கொண்டு வந்திருந்தான் கதிரவன். எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சாவதானமாய் வந்து உடன் அமர்ந்தவளை திரும்பியும் பாராமல் காரை கிளப்பியிருந்தான்.

’அவனை எப்படியாச்சும் டென்சன் பண்ணி நீ வேணாம் போடின்னு சொல்ல வைக்கனும்… சண்டை போட்டு ஒரு அமௌண்ட்ட வாங்கீட்டோம்னா போதும்… ஜாலியா லைப்லசெட்டில் ஆயிடலாம்… ‘ என்று எண்ணங்களில் சுழன்று கொண்டிருந்தவள் அந்த பிரபலமான வணிக வளாகத்தைப் பார்த்ததும்,

“நிறுத்துங்க நிறுத்துங்க… எனக்கு அந்த மாலுக்குள்ள போகனும், கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும்..” என்றாள்.

“கோவிலுக்குப் போயிட்டு வரோம் முதல்ல வீட்டுக்குப் போகலாம், நான் உன்ன திரும்ப கூட்டீடு வரேன்…”

“ஹூக்கும்… அப்படியே வந்துட்டாலும்…”

”. . . . . .. .”

“சரி சரி லன்ச் முடிச்சிட்டு வீட்டுக்குப் போகலாம்.. நல்ல ரெஸ்டாரண்ட்டா பார்த்து நிறுத்துங்க…”

“. . . . . . . . . “

“என்ன நான் சொல்லிட்டே இருக்கேன்… நீங்க பாட்டுக்கு வீட்டுக்கு போனா என்ன அர்த்தம்…”

“. . . . . . . . .”

காருண்யாவின் பேச்சுக்கள் எதுவும் கதிரவனின் காதுகளை எட்டவில்லை வீடு சென்று சேரும் வரை. வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக பூஜையறையில் அர்ச்சனை செய்த விபூதியை அதனிடத்தில் சேர்ப்பித்து, கண்களை மூடி முருகனின் அழகு முகத்தை மனதில் தியானித்து வணங்கி விட்டு நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து வணங்கினான்.

குளிர்ந்த நீரை தொண்டையில் சரித்தபடி, காருண்யாவைத் தேட, அவள் மும்மரமாக, கைப்பேசியில் மூழ்கியிருக்க, “இவள் பேசாம இருந்தாலே போதும் “ என்று மனதினுள் எண்ணினான்.

எண்ணம் முழுமை பெறும்முன், அழைப்புமணி சத்தம் செவியை நிறைத்திருந்தது. கதிரவன் சென்று கதவைத் திறக்க,

“சார் யுவர் ஃபுட் ஆர்டர்… “ என்று ஒரு பார்சலை நீட்டியவன் புன்சிரிப்போடு நின்றிருக்க,

”சாரி நான் எதுவும் ஆர்டர் பண்ணல, நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டீங்க போல…”

“இல்ல சார், இந்த அட்ரஸ் தான் …”

விநியோகிப்பவன் இத்தணை திடமாய் சொல்லவும், யோசனை வந்தவனாய், காருண்யாவைப் பார்க்க, அவளோ தோளை குலுக்கியபடி,

”தௌசண்ட் ஃபைவ் ஹண்ரட் பே பண்ணிடுங்க…” என்றபடி பார்சலை பெற்று சென்றுவிட, கதிரவனின் பற்கள் கடிபடும் ஓசை கேட்டு வந்தவன் மின்னலென மறைந்திருந்தான் பணத்தை பெற்றுக்கொண்டு.

அந்த நேரம் பார்த்து கதிரவனின் தாய் காமாட்சி அழைக்கவே, எடுத்தவன் “ அம்மா, சொல்லுங்கம்மா…”

“நல்லாயிருக்கியா கண்ணு…?”

“என்னமா திடீர்னு, எனக்கென்ன, நான் நல்லாதான் இருக்கேன்…”

“அது ஒண்ணுமில்ல கண்ணு, சும்மா தான்…”

தாயின் பேச்சில் எதோ வித்தியாசத்தை உணர்ந்தவன்,

“எதுவா இருந்தாலும் சொல்லுங்கம்மா…” என்றான்.

“அது அது … வந்து ஒரு விசயம் கேள்விப்பட்டேன், அத உன்கிட்ட சொல்லாமா வேணாமான்னு தெரியல கண்ணு…”

“என்னமா என்கிட்ட சொல்ல என்ன யோசனை எதுவா இருந்தாலும் சொல்லுங்க…”

“அது… மருமக நல்லாருக்காளா…?”

“அவளுக்கென்ன நல்லாயிருக்கா… நீங்க என்ன விசயம்னு இப்ப சொல்றீங்களா, இல்லையா…?” என்றபடி காருண்யா என்ன செய்கிறாள் என்று பார்க்க, அவளோ பார்சலில் வந்திருந்த பிரியாணியையும், இன்னபிற அசைவ இத்தியாதிகளையும் ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது கதிரவனுக்கு, அவன் குணத்திற்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தமாய் இருந்தது.

கதிரவன் அசைவம் சாப்பிடுவான் தான் அதற்கும் சில நாட்கள் இருந்தன, முக்கியமாக பிரதோஷம், திங்கட்கிழமை, பௌர்ணமி அன்று சாப்பிடமாட்டான்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அதுவும் காலை மதியம் இரண்டு வேளை மட்டும் தான், அதுவும் மறுநாள் திங்களன்று பிரதோஷமோ, பௌர்ணமியோ வந்துவிட்டால், அந்த ஞாயிறு சாப்பிடமாட்டான்.

முக்கியமாக ஹோட்டல் சாப்பாடு என்றாலே அலர்ஜி அவனுக்கு.

“ஹலோ ஹலோ கண்ணு கேக்குதா, லைன்ல இருக்கியா…?” என்று அவன் தாய் அழைத்தது உரைக்கவே “சொல்லுங்கம்மா…” என்று தலைகோதிக் கொண்டான்.

“அம்மாவை மன்னிச்சிடுப்பா…”

“அம்மா என்னம்மா எதுக்கு இப்ப பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க…”

“நீ எவ்வளவோ வேணாம்னு சொல்லியும், நான் தான் உனக்கு இந்த பொண்ண கட்டிவச்சேன், அது இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்ல கண்ணு…”

“ம்மா விசயத்தை சொல்லாம இப்படி பேசீட்டு இருந்தா நான் என்னன்னு நினைக்குறது… இப்ப சொல்றீங்களா, இல்ல போனை வைக்கவா…?” என்று எரிச்சலாகி இருந்தான் கதிரவன், ஏற்கனவே காருண்யா வேண்டும் மட்டும் அவன் மூளையை சூடக்கிக் கொண்டிருக்க அவன் அன்னையிடம் காட்டிவிட்டான்.

”சொல்றேன் கண்ணு… அந்த பொண்ணு உன்ன இஷ்டப்பட்டு கட்டிக்கலையாம்… “

“அதான் தெரியுமே…” என்று அவன் அன்னைக்கு அதிர்ச்சி அளித்திருந்தான்.

“தெரியுமா… உனக்கு முன்னாடியே தெரியுமா… கண்ணு…”

“ஒரு கல்யாணத்துக்கு ரெண்டு கல்யாணம் பண்ணவனுக்கு இதுகூட தெரியலைன்னா எப்படிம்மா…”

“இந்த கல்யாணமாச்சும் உனக்கு சந்தோஷத்தை கொடுக்கும்னு நெனச்சனே… ஊர்ல இருக்கவங்க பேச்சை கேட்டுகிட்டு விவாகரத்து வாங்கத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு தெரியாம போச்சே…”

“அம்மா, முதல்ல புலம்புறத நிறுத்துங்க… “

“எப்படி கண்ணு புலம்பாம இருப்பேன்… நான் இப்பவே கிளம்பி வரேன், அவள நாக்க புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்கணும்…”

“கேட்டுட்டு அப்படியே அவ வீட்டுக்கு அனுப்பிடலாமா…?”

“அனுப்புறதா… உன்கூட சந்தோஷமா வாழவைக்கிறேன் கண்ணு..”

“ம்மா, உங்களுக்கு தெரிஞ்ச இந்த விசயத்தை உங்களோடவே வச்சுக்கோங்க, இல்ல முடிஞ்சா மறந்துடுங்க… இது கடவுள் எனக்கு வச்சிருக்க சவால், இத நான் பார்த்துக்கிறேன், என்னால முடிஞ்ச வரை அவ மனச மாத்தி என் கூட வாழ வைக்க முயற்சி செய்வேன், அதுக்கும் மீறி போறவளை என்னால ஒண்ணும் பண்ணமுடியாது. அப்புறம்  உங்ககிட்ட காருண்யாவைப் பத்தி சொன்னவங்க மேல நீங்க வச்சிருக்க நம்பிக்கையை விட, நான் கடவுள் மேல வச்சிருக்க நம்பிக்கை ஆயிரம் மடங்கு அதிகம், அவர் காரணம் இல்லாம , என் வாழ்க்கையில காருய்ணயாவை கொண்டு வந்திருக்க மாட்டார், சோ நீங்க கவலைப்படாம நிம்மதியா இருங்கம்மா… நான் பாத்துக்குறேன்…”

“அந்த அண்ணாமலையாரே எல்லாத்தையும் பாத்துக்கட்டும் கண்ணு…”

“அதே தான் மா, எல்லாம் அவர் பாத்துப்பார் நீங்க நிம்மதியா இருங்க….”

“என் பேரப்புள்ளய கண்ணுல பாக்குற வரைக்கும் எனக்கு நிம்மதி இல்லை கண்ணு…”

குழந்தை பிறந்துவிட்டால் தம்பதிகளுக்குள் இணக்கம் வந்து அன்பால் நிறைத்திடும் என்று நம்பும் அந்த பெரியமனுஷியின் நம்பிக்கையை நினைத்தவனுக்கு கசந்த முறுவலே வந்தது.

“ஆகட்டும் மா… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் அப்புறம் பேசுறேன் என்று இணைப்பைத் துண்டிருந்தான்.

காருண்யாவின் நினைவு வர, திரும்பிப் பார்த்தால், அவளோ அவள் தோழியுடன் காணொளி அழைப்பில் இருந்தாள்.

நேரம் மதிய சாப்பாட்டு வேளையைக் கடந்திருக்க, வயிறு சத்தமிட்டது.

டைனிங்ஹாலைக் கடந்து, கிச்சனுக்குள் நுழைந்தவன் தனக்குத்தேவையான உணவை சமைத்துக் கொண்டான். நான்கு தீ எரியும் அடுப்பதாலால், ஒன்றில் குக்கரில் அரிசியைக் கழுவியை தேவையான நீர் சேர்த்து அதற்கு நடுவே சிறு நீள்வடிவ பாத்திரத்தில் பாசிப்பருப்போடு பூண்டு தக்காளி சேர்த்து சிறு மூடி போட்டு மூடி, குக்கரை மூடியவன், அடுத்த அடுப்பில் இரண்டு உருளைக்கிழங்குகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, காய்ந்த எண்ணையில் கடுகு உளுந்து சேர்த்து பொரிந்ததும், நசுக்கிய பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கருகாமல் வறுத்து, நறுக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து கொஞ்சம் தாராளமாக எண்ணை விட்டு வறுத்து முடித்தான்.

சமையலறையில் நுழைந்த அரைமணிநேரத்தில் பருப்பு மசியல் உருளை வறுவல் என சாப்பாட்டுடன் அமர்ந்தவனை சற்றே வியப்பாகப் பார்த்திருந்தாள் காருண்யா.

“ஹ்ம்ம்..” என தோள்களை குலுக்கிவிட்டு, அறையில் சென்று அடைந்துகொண்டாள்.

சாப்பிட்டு முடித்தவன், அலைப்பேசியில் காதில் வைத்தபடி, வீட்டைப்பூட்டி வெளியே சென்றுவிட்டான்.

ஒருமணினேரம் கடந்த நிலையில் விடாது ஒலித்த அழைப்புமணியில் சலிப்பாக எழுதாள் காருண்யா,

“அதா சாவி இருக்குல்ல, திறந்து வரவேண்டியது தான, எதுக்கு இப்படி டார்ச்சர் பண்றானோ…” என்று வாய்விட்டு புலம்பியபடி சென்று கதவைத்திறந்தாள்.

படாரென்று கதவைத் திறந்து வந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி,

“ஏண்டியம்மா… நீயெல்லா ஒரு பொம்மனாட்டியா… வீடா இது கோயில் மாதிரி இருந்த வீட்டை, இப்படி கண்றாவியா வச்சிருக்க..? உன்னப் போய் இஎத கதிரவன் தம்பி எப்படித்தான் கல்யாணம் கட்டுச்சோ…?

“வேணுனா வீடியோ இருக்கு பாக்குறீகளா..?

“என்னது வீடியோவா…?”

“எப்படி கல்யாணம் நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கத்தான்…”

“எல்லா அந்த தம்பிடோட போதாத காலம், அவர நெனச்சே பாக்க முடியாத நீயெல்லா, இன்னிக்கு அவர் பொண்டாட்டியா உக்காந்து ராஜ்ஜியம் பண்ற..”

“ஏ கெழவி, சுத்தம் பண்ண வந்தோமா, கழுவினோமா, மிச்சம் மீதிய எடுத்துட்டு போனோமான்னு இருக்கணும்… புரியுதா முக்கியமா, உன் வாய் அதை முடிஞ்சா வீட்டிலயே கழட்டி வச்சிட்டு வந்திடனும் புரியுதா பே…பே..”

சுத்தத்தைப் பற்றி தன்னால் இயன்றவரை வகுப்பெடுத்துப் பார்த்த கதிரவன், ராஜாமணி அம்மாளை வேலைக்காக நியமித்திருந்தான்,

அவர் வந்து முதல் நாளே இங்குள்ள நிலை அவருக்கு புரிந்துவிட, கதிரவனின் குணம் தெரிந்தவரால் காருண்யாவிடம் அமைதியாக செல்லமுடியவில்லை.

வேலைக்காக வருபவர் தன்னை இகழ்ந்து பேசுவதா, ஆரம்பத்தில் கோபப்பட்ட காருண்யா, பின் தன்னைப் பற்றி அவர் பேசினால் இதையே காரணமாக வைத்து பிரிந்துவிடலாம் என்று யோசித்து அவரை பேசவிட்டு, ரெக்கார்ட் செய்து கதிரவனிடம் போட்டு காண்பித்து, அதற்கு ஒரு சண்டை போட்டாள்.

அமைதியாக இருந்த கதிரவனை அவளை பேசவிட்டு தூங்கியிருந்தான். மறுநாள் காலை காருண்யா எழுந்து மணி பார்க்க, மொபலைத் தேட, அது வைத்த இடத்தில் இல்லை. வீடு முழுதும் தேடிப் பார்த்தவளுக்கு மொபலைக் காணாமல் பைத்தியம் பிடித்தது.

அதிகாலையில் கிளம்பியிருந்த கதிரவனை எப்படி தொடர்பு கொள்வது என புரியாமல் விழித்துக் கொண்டிருந்தவளுக்கு, பழைய லேண்ட்லைன் போன் அடிக்கும் சத்தம் கேட்டது.

புதிதாக முளைத்திருந்த போனை, வினோதமாக பார்த்தவள் அழைப்பை ஏற்று காதுக்குக் கொடுக்க, கதிரவனே பேசினான்.

“உனக்கு என்கிட்ட எதாவது பேசணும் இல்ல, வேணும்னா என் நம்பர் எழுதி போன்கிட்ட வச்சிருக்கேன், கால் பண்ணு…”

“ உன்கிட்ட பேச எனக்கு ஒண்ணும் இல்ல…”

“. . . .  . . . . . . .”

மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்க, எரிச்சலாய் இருந்தது காருண்யாவிற்கு.

தன் கைப்பையை துழாவி, அதிலிருந்த சிறு நோட்டை எடுத்தாள்.

அதில் நீலா என்றிருந்த எண்ணிற்கு அழைக்க, ஒரு ரிங்கிலேயே அழைப்பு எடுக்கப்பட்டிருந்தது.

“ஏண்டி நீலா, என்னடி என் போன் ல இருந்து கூப்பிட்டா, எடுக்கவே மாட்ற, இப்ப ஒரு ரிங்கில எடுக்குற, என்னடி நெனச்சுட்டு இருக்க, நீயும அத்தையும் சொன்னீங்கன்னு தான நானிதெல்லாம் செய்துட்டு இருக்க, நீங்க என்னடான்னா, என்கிட்ட பேச கூட மாட்டேன்னு இருக்கீங்க, என்னதான் கோபம் என்மேல உங்களுக்கு, என் கல்யாணம் நிச்சயம் ஆனதிலிருந்து உங்கபேச்சை தானே கேட்குறேன், ஆனா விவாகரத்து செய்திடலாம் பிரிஞ்சிடலாம்னு சொல்லவே மாட்டேங்குறார், எனக்கே நான் செய்றது பிடிக்கல, இதுக்கு மேல நான் என்ன செய்றது, நீயும் எதுவும் சொல்ல மாட்டேன்குற… பேசுடி நான் எவ்வள்வோ நேரமா பேசீட்டு இருக்கேன், ஆனா பதிலே பேசாம இருக்க, ஹலோ ஹலோ…”

”. . . . . . . . . . . .”

அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

“என்ன இந்த நீலா இவ்ளோ பேசுறோம் எதுவுமே, பேசாம போனை வச்சிட்டா…”

“எனக்கு போன் செய்திட்டு நீலா பேசலையே வருத்தப்பட்டா எப்படி காருண்யா…?” என்று வந்த கதிரவனை காருண்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை.