அத்தியாயம் -34

வீட்டின் வெளியே சாமியான பந்தல் போடப்பட்டிருக்க, உள்ளே புது மணப்பெண், மணமாப்பிள்ளைக்கான கவனிப்பு நடந்து கொண்டிருந்தது.

காரில் அமர்ந்து தங்களுக்குள் பேசி கொண்டிருந்த ஹர்ஷா, ஹாசி இருவரும் டிரைவரின் குரலில் அவரை பார்க்க “மேடம் நீங்க சொன்ன லோகேசன் ரீச் ஆகிட்டோம்” என்றார்.

உடனே ஹாசி வேகமாக திரும்பி பார்க்க அவர்கள் வீட்டு வாசலில்தான் நின்றனர்.

‘ம்ம்…. இப்போ வீட்டுக்குள்ள போனோம். இந்த அம்மா கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. பேசாம அண்ணன வெளிய வர சொல்லி மைக்க அனுப்ப வேண்டியதுதான்’ என்று தனக்குள் பேசி கொண்டவள் தன் போனை எடுக்க,

“அடேய் என் போனு……” என்று மீண்டும் மைக் மேல் பாய போனவன் கையை பிடித்த ஹாசி “நான் உனக்கு புது போன் வாங்கி தரேன் ஹர்ஷா. ப்ளீஸ் அவன் தெரியாமதானே பண்ணினான்” என்க,

ஹர்ஷா மைக்கை உக்கிரமாக பார்க்க, அவனோ பாவமாக முகத்தை வைத்து கொண்டு அமர்ந்திருந்தான்.

“டேய் தயவு செஞ்சு மூஞ்ச இப்படி வைக்காத பார்க்க சகிக்கல. பண்றதையும் பண்ணிட்டு இந்த பூனையும் பீர் அடிக்குமாங்கற மாதிரியே பார்க்க வேண்டியது” என்க,

ஹாசி அதற்குள் ரஞ்சனுக்கு போனை போட்டு வெளியே வர சொல்ல, அவனும் வெளியில் வந்தான்.

ரஞ்சன் வந்தவுடன் மைக் “மச்சா…..” என்று கத்தி கொண்டே ஓடி போக,

இந்த முறையும் இருவருக்கும் இடையில் ஓடி வந்த ஹர்ஷா ரஞ்சனை அணைத்து கொண்டு “மச்சான்….” என்று கத்த,

ஹாசி, ரஞ்சன் இருவரும் பே வென்று விழிக்க, மைக்கோ ‘ஏன் ப்ரோ….’என்பது போல் பார்த்து கொண்டிருந்தான்.

ரஞ்சனை அணைத்து விலகிய ஹர்ஷா அவன் தோளில் கை போட்டு “மச்சான்டா….” என்க,

அவனை முறைத்த ரஞ்சன் “என்னடா பண்ற. முதல்ல கைய எடுடா” என்று கோபமாக சொல்ல,
அவன் பேச்சை எல்லாம் காதில் வாங்காத ஹர்ஷா “ஒலி வாங்கி இவன் என்னோட மச்சான். இனி நீ மச்சான்னு கூப்பிடாத”

“எதே….. கூப்பிட கூடாதா. டேய் அவனுக்கு மச்சான்னு சொல்லி குடுத்ததே நான்தான்டா. ஏன் கூப்பிட கூடாது” என்ற ரஞ்சனை திரும்பி பார்த்த ஹர்ஷா “இனிமே எல்லாம் அப்படிதான் மச்சான். ஆமா வீட்டு மாப்பிள்ளை நான் வெளியவே நின்னுட்டு இருக்கேன்.

வீட்டுக்குள்ள கூப்பிட மாட்டியா. எனக்கென்னன்னு மானா வாரியா வளர்ந்தா மட்டும் போதாது. மாமியார் என்ன பையனை வளர்த்து வச்சிருக்காங்க. மாமியார்….. மாமியார்……” என்று கத்தியவன் வாயை ஓடி வந்து மூடிய ஹாசி “கொஞ்சம் அமைதியா இருக்கியா” என்று வார்த்தைகளை கடித்து துப்பியவள்,

ரஞ்சனிடம் “ப்ளீஸ் அண்ணா நீ மைக்க உள்ள கூட்டிட்டு போ. அம்மா என்னை பார்த்தா ஆயிரம் கேள்வி கேட்பாங்க” என்று சொன்னவள் ஹர்ஷாவை இழுத்து கொண்டு மீண்டும் காரில் அமர்ந்து தங்கள் வீடு இருக்கும் அட்ரஸை டிரைவரிடம் சொல்லிவிட்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்தாள்.

அவ்வளவு நேரமும் மைக்கிடம் வம்பிழுத்து கொண்டிருந்த ஹர்ஷாவும் அமைதியாக வர, ஹாசியும் அமைதியாக இருந்தாள். ஆனால் மனதில் பல கேள்விகள், குழப்பங்கள் ‘ஏன்? ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? என்ன காரணமாக இருக்கும்’ என்று யோசித்து கொண்டிருந்தவள் அப்படியே உறங்கி போனாள்.

ஹர்ஷா வெளியே பார்ப்பது போல் அவளைதான் கவனித்து கொண்டு இருந்தான்.’சாரி ஹாசி. இதை தவிர என்னால வேற எதுவும் சொல்ல முடியாது. இனி இது நம்ம வாழ்க்கை அதை சேர்ந்தே வாழ்வோம். அதற்கான முயற்சியில்தான் இப்போ நான் இறங்கி இருக்கேன். என்னைவிட்டு இனி உனக்கொரு வாழ்க்கை இல்லை. நீயும் உன் மனதில் இதை பதிய வை. இன்னொரு வாழ்க்கை உனக்கு இல்லை’ என்று தனக்குள் பேசி கொண்டவன் அவர்கள் வீடு வரவும் திரும்பி ஹாசியை பார்க்க,

அவளோ நல்ல தூக்கத்தில் இருந்தாள். அவளையும் அவள் உடையையும் பார்த்தவன்’ம்கூம் இதை மட்டும் என் ஆத்தா பாத்துச்சு அதுக்கு நெஞ்சு வலியே வந்துடும்’ என்று முணகி கீழே இறங்கியவன்.

டிரைவர் புறம் வந்து “ப்ரோ ஒரு பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க வந்திடறேன்” என்று சொல்லி உள்ளே செல்ல,

அவன் நேரத்திற்கு தேவகி பாட்டி மட்டும் ஹாலில் அமர்ந்து சீரியல் பார்த்து கொண்டிருந்தார். மற்ற உறவுகள் அனைத்தும் ஓய்வெடுக்க சென்றிருக்க, நிம்மதி மூச்சுவிட்டவன் மீண்டும் வெளியே சென்று டிரைவரிடம் அவருக்கான பணத்தை குடுத்துவிட்டு, ஹாசியை தூக்க,

அந்த தொடு உணர்வில் கண் விழித்தவள்ஹர்ஷா தன்னை தூக்கி இருப்பதை கண்டு கனவு என்று நினைத்தவள் அவனை பார்த்து மென்மையாக சிரித்து நன்றாக அவன் தோள்களில் சாய்ந்து கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்.

‘என்ன ஒன்னும் சொல்லாம சிரிச்சுட்டு தூங்கறா. கனவு எதுவும் கண்ணுறாளோ. என்னவோ போ கத்தாம அமைதியா இருக்காளே அது வரைக்கும் சந்தோஷம்’ என்று நினைத்தவன் வீட்டின் உள்ளே தூக்கி சென்றான்.

திருமண பேச்சு துவங்கியதில் இருந்து குழப்பத்திலும், யோசனையிலும் இருந்தவள் சரியாக தூங்கி இராததால் இன்று ஏனோ மனதில் நிம்மதி உணர்வு தோன்றியதோ என்னவோ நன்றாக தூங்கி போனாள்.

பேரன் ஹாசியை தூக்கி வருவதை கண்டு பயந்து போன பாட்டி “அய்யயோ….. அர்ஷா என்னடா ஆச்சு?” என்று பயந்து போய் கத்த,

அந்த சத்தத்தில் கண் விழித்த ஹாசி ஹர்ஷாவையும், பாட்டியையும் மாறி மாறி பார்த்துவிட்டு துள்ளி கீழே இறங்கி அவனை முறைக்க, அவனோ அவளை கண்டுகொள்ளாமல் பாட்டியை முறைத்து கொண்டிருந்தான்.

‘வில்லி கிழவி கத்தி அவளை எழுப்பி விட்ருச்சே. இவ வேற இப்படி பாக்குறாளே என்ன சொல்லி சமாளிக்கறது’ என்று யோசித்தவன்,

“ஹாசி……அது……நீ….. தூங்கிட்டு….” என்று மேலும் ஏதோ பேச வந்தவன் முன் தன் கைகளை நீட்டி பேச விடாமல் தடுத்தவள் பாட்டியையும் பேரனையும் அழுத்தமாக பார்த்துவிட்டு விறு விறுவென அங்கு இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவளுக்குமே மனதில் ஒரு சங்கடம்’ச்ச….. அவன் தூக்கற அளவுக்கா தூங்கி போனேன். என்னைபத்தி என்ன நினைச்சிருப்பான். லூசு…. லூசு’ என்று தன்னையே திட்டி கொண்டவள் அங்கிருந்த படுக்கையில் படுத்து தூங்க முயற்சிக்க அது வருவேணா என்று அழிச்சாட்டியம் செய்ய, போனை எடுத்து நோண்ட ஆரம்பித்துவிட்டாள்.

வெளியே தேவகி பாட்டியோ பேரனின் உக்கிர பார்வையை கண்டு ’அச்சச்சோ…இந்த பைய பார்வையே சரியில்லையே.இந்த முறை முறைக்கறான். பேசாம இருந்திருக்கலாமோ. அவன் எதுவும் சொல்றதுக்குள்ள ரூமுக்குள்ள போயிடலாம்’ என்று நழுவ நினைக்க,

அவர் எண்ணத்தை புரிந்தார் போல் “கிழவி வர வர உன் போக்கு பேச்சு எதுவும் சரியில்ல. ஆமா…. இப்போ எதுக்கு அப்படி கத்துன “

“ஹிஹிஹி……இல்ல அர்ஷா ஆசிய தூக்கிட்டு வந்தியா…. அதான் அவளுக்கு அடி ஏதும் பட்ருச்சோன்னு……” என்று இழுத்தவரை, திட்டி என்ன ஆக போகிறது என்று நினைத்தவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து “பாட்டி எனக்கு காபி வேணும்” என்க,

“ம்ம்ம்….. கொண்டு வரேன் ராசா” என்று சொன்னவர் ஹர்ஷாவின் சோர்ந்த முகத்தை கண்டு யோசனையாக மாறியது.

பின் அவர் கொண்டு வந்து கொடுத்த காபியை குடித்தவன் “பாட்டி நான் ரூமுக்கு போறேன். ஹாசி வெளிய எங்கயும் போனா என்கிட்ட சொல்லுங்க. முதல்ல மாதிரி இருக்காதீங்க” என்ற பேரனை அவர் அதிர்ச்சியாக பார்க்க,

“எனக்கு தெரியும். அவ உனக்கு தெரியாம வெளிய போக வாய்ப்பில்லைன்னு. ப்ளீஸ் பாட்டி” என்றுவிட்டு தன் அறை நோக்கி சென்றுவிட்டான்.

ஹர்ஷா செல்வதை பார்த்த பாட்டியின் முகம் யோசனையாக மாறியது.

நேரம் அதன் பின் வேகமாக செல்ல, அனைவரும் இரவு உணவிற்கு வந்திருந்தனர். நெருங்கிய உறவுகள் அங்குதான் இருந்தனர். பத்மா நிற்க நேரம் இல்லாமல் ஓடி கொண்டிருந்தார்.

ஹாசி வெளியே வரவும் “வாம்மா ஹாசி” என்ற தாயின் குரலில் பதறி திரும்பி பார்த்தவன் அவள் சேரி கட்டியிருக்கவும் நிம்மதி மூச்சிவிட்டு ’நல்ல வேலை சேரி கட்டியிருக்கா. கொஞ்ச நேரத்துல பதறி போயிட்டேன்’ என்று நினைத்தவன் அவளையே பார்க்க,

அதை கவனித்த அத்தை முறை உள்ள பெண் ஒருவர் “டேய் ஹர்ஷா என்னடா இப்படி பாக்குற. உன் பொண்டாட்டிதான்டா. அதுக்குன்னு இப்படியா பார்க்கறது. முதல்ல சாப்பிடு. அப்புறம் பார்ப்ப” என்று சொல்ல,

ஹாசி அப்போதுதான் அவனை கவனித்தவள் மற்றவர் முன் எதுவும் பேச விரும்பாததால் சாப்பிட அமர,

“ஹர்ஷா பக்கத்துல உட்காரு ஹாசி” என்று பத்மா சொல்ல,

“ம்ம்ம்ம்…..” என்றவள் அவன் அருகில் அமர்ந்து சாப்பிட துவங்கினாள்.

அனைவரும் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றுவிட, பத்மா ஹாசியை தயார் செய்து கொண்டிருந்தார்.

“ஹாசி உனக்கு தெரியாதது இல்ல. என் பையன் சரியான வாலுதான். ஆனா ரொம்ப நல்லவன். யாரும் கெட்டு போகணும்னு மனசால கூட நினைக்க மாட்டான். வாய் கொஞ்சம் அதிகம்தான். எதாவது குரங்கு சேட்டை செஞ்சுட்டேதான் இருப்பான்.

அவன் ஒரு நாள் வீட்ல இல்லைனாலும் வீடு ரொம்ப அமைதியா…. என்னவோ போல இருக்கும். அவன் சந்தோஷம் சிரிப்பு எப்போவும் எங்களையும் தொத்திக்கும்.

ரொம்ப பரபரப்பா இருப்பான். ஆனா இப்போ கல்யாண பேச்சு ஆரம்பிச்சதுல இருந்து ரொம்ப அமைதியா ஆகிட்டான். ஏன்னுதான் தெரியல”

“ஹர்ஷா வேற பொண்ண லவ் பண்ணியிருக்கலாம்……”.

“இல்லம்மா……நாங்க அவனை உன்னைதான் கல்யாணம் செய்துக்கணும்னு கம்பல் பண்ணவே இல்ல. இன்னும் சொல்லனும்னா. யாரையாவது லவ் பண்ணுனா கூட பரவால்ல சொல்லு.

அந்த பொண்ணு வீட்ல நாங்க போய் பேசறோம்னு சொன்னோம். யோசிச்சு சொல்றேன்னு போனவன்…அப்புறம் இந்த கல்யாணத்துக்கு சம்மதம்னு சொன்னான்.

எனக்கு என்னவோ அவன் குழப்பத்துல இருக்கான்னு தோணுது. நீ அவன்கிட்ட பேசு. நீ அவனோட பிரண்ட் அப்புறம்தான் மனைவி.

நல்ல நண்பர்களா இருக்க நீங்க ஒன்னு சேர்ந்தா வாழ்க்கை நல்லா இருக்கும்னுதான் உங்க கல்யாண பேச்சை எடுத்தோம்.

அதனால ஒருத்தர ஒருத்தர் பேசி நல்லா புரிஞ்சுக்கோங்க. உனக்கு என்ன கேட்கணுமோ அவன்கிட்ட கேளு. அவன் மனசுல இருக்க குழப்பத்தை நீ தெரிஞ்சுக்கிட்டு அதை சரிப்பண்ண பாரு. ஆல் த பெஸ்ட்” என்று அவள் கன்னத்தை வலித்து நெட்டி முறித்தவர் அவள் கையில் பால் சொம்பை கொடுத்து ஹர்ஷா அறைக்கு போக சொல்ல,

ஹாசியோ’ம்கூம்….. நீங்க சொன்னா போதுமா. அந்த பொண்ணு ஒத்துக்கணுமே. அவ வேண்டான்னு சொன்னதுனாலதான் உங்க மகன் தேவதாசா சுத்துறான்.

இதெல்லாம் சொன்னா இவங்க நம்பவா போறாங்க. என் பையன் வெகுளி, குழந்தை அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கே தெரியாதுனு அந்த கிழவி மாதிரியே எதாவது ரீல் ஓட்டுவாங்க.

நமக்கு என்ன தலையெழுத்தா கேட்ட டையலாகயே திரும்ப திரும்ப கேட்க.இந்த பைத்தியக்கார பயலுககிட்ட மாட்டிக்கிட்டு நான் படுற பாடு……’ என்று மனதில் நினைத்தவள் மேலும் :அவன் மனசுல என்ன குழப்பம் இருக்க போகுது.

அந்த பன்னாட நாயல நான்தான் மண்டைய பிச்சுட்டு இருக்கேன். கொஞ்ச நாளா உங்க மகன் பார்வை பேச்சு எதுவும் சரியில்ல. என்ன ட்ரை பண்றான்னு எனக்கு தெரியல.

ஆனா நீங்க சொன்ன ஒரு விஷயம் மட்டும் நடக்கும். அது நான் அவன்கிட்ட பேசறது. அவன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இப்படி எல்லாம் பண்றான்னு கண்டிப்பா நான் கேட்டு தெரிஞ்சுக்கதான் போறேன்’என்று தனக்குள் முடிவெடுத்தவள் ஹர்ஷா அறை நோக்கி சென்றாள்.

அங்கு ரஞ்சன் வீட்டில் மித்ரா போனை நோண்டி கொண்டிருந்தவள் “ஆண்ட்டி……” என்ற சத்தத்தில் பயந்து போய் நெஞ்சில் கை வைத்தவாறு விழி விரித்து பார்க்க,

ஓடி வந்த மைக் ரேவதியை அணைத்து கொள்ள, அங்கு வந்த ராஜ் “அடேய்……அவ என் பொண்டாட்டிடா. விடுடா அவளை…. இவனோட என்னால முடியலையே. அங்க இவன் தொல்லை தாங்கல்லன்னு இங்க வந்தா இங்கயும் வந்துட்டானே” என்று புலம்ப,

மைக் அவர் பேச்சை கண்டுகொள்ளாமல் “ரதி பேபி ஐ மிஸ் யூ….. ஐ மிஸ் யுவர் ஸ்பைசி பிரியாணி……” என்று சொல்ல,

அவனை முறைத்த ரஞ்சன் “ டேய் அப்போ நீ எங்க கல்யாணத்துக்கு வரல. பிரியாணிக்காகதான் வந்துருக்க. அப்படிதானே” என்று கேட்க,

மைக்கோ வலிசலாக சிரித்தவன் “சோறு முக்கியம் மச்சி” என்க,

ராஜ் சத்தம் போட்டு சிரிக்க,மைக் காதை பிடித்து திருகியா ரேவதி “படவா அப்போ என் மேல பாசத்துல வந்து கட்டி பிடிக்கல, பிரியாணிக்காகதான் வந்திருக்க” என்று கோபம் போல் கேட்க,

“ஹிஹிஹி….. என்ன பேபி. தெரியாத மாதிரி கேட்குற பிரியாணி இஸ் அ எமோஷன். யூ நோ….” என்று பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு சொல்ல,

ரேவதியுமே சிரித்துவிட்டார். “சரி சரி உன் அரட்டைய நிப்பாட்டிட்டு போய் குளிச்சு ப்ரஷ் ஆகிட்டு வா. சாப்பிடலாம்” என்று கூற,

“ஓகே……” என்று ஓட போனவன் டீ ஷர்ட்டை பின்னால் இருந்து இழுத்த ரஞ்சன் “டேய் மனுஷனாடா நீ. சோறுன்ன சொன்ன உடனே எதுக்கு வந்தோம்ங்கறதயே மறந்துட்டு போற” என்று சொல்ல,

தலையில் அடித்து கொண்டவன் “ஹிஹிஹி……சாரி மச்சி என்று அவனை அணைத்து திருமண வாழ்த்தை சொன்னவன் மித்ரா அருகில் செல்ல, அவளோ “ஆனாலும் நீங்க இவ்ளோ பரபரப்பா இருக்க கூடாதுண்ணா” என்று சொல்ல,

வாய்விட்டு சிரித்தவன் “வரும்போதே சும்மா அதுறுதுல்ல” என்க,

அவளும் மென்மையாக சிரித்தாள். “ஹாப்பி மேரிட் லைப் சிஸ்டர். கிப்ட் பேக்ல இருக்கு அப்புறம் எடுத்து தரேன்”

“நோ பிராப்லம் அண்ணா”

“அண்ணா…… என்ன ஒரு அழகான வார்த்தை. ஏன் மச்சி ஹாசி உன்னை இது மாதிரி பாசமா கூப்பிட்டு நான் பார்த்ததே இல்லையே”

ரஞ்சன், “நானே எப்போவாச்சும்தான் ரேரா கேட்டிருக்கேன். நீ அவ்ளோ சீக்கிரம் கேட்டிருவியா என்ன. போடா போ போய் கிளம்பி வா”

“அது சரி. அவதான் சரியான ரவுடி ஆச்சே. எப்படி மரியாதை குடுப்பா”.

“ஹோ……. அப்படியா…. சரி. நீ பேசுனது எல்லாம் ரெக்கார்ட் பண்ணிட்டேன். அவளுக்கு அனுப்பி விடறேன்” என்று சொன்ன நொடி’பட்டென்று வெடித்தது மைக்கின் குட்டி இதயம்’

“அடேய் நண்பா…. எதா இருந்தாலும் நாம பேசி தீர்த்துக்கலாம்டா. அவகிட்ட கோத்து விட்டுறாத. உனக்கு புண்ணியமா போகும்” என்று நெஞ்சில் கை வைத்தவாறு அரண்டு போய் சொல்ல,

ரஞ்சனோ “அது…. அந்த பயம் இருக்கட்டும். போ போய் குளிச்சிட்டு வா” என்க,

மைக்கும் இடை வரை குனிந்து “எஸ் பாஸ்” என்று சொல்லி ஓட, அதை கண்டு அனைவரும் சிரித்தனர்.

மித்ரா சிரிப்பதை கண்டு குதூகலமான ரஞ்சன் “என்ன பேபி நம்ம லவ் சக்ஸஸ் ஆனதுல செம்ம ஹேப்பி போல”என்று அவளை உரசியவாறு நிற்க,

உடனே அவனிடம் இருந்து விலகி நின்றவள் முறைத்துவிட்டு அவளை தங்கி கொள்ள சொல்லி ரேவதி சொன்ன அறைக்கு சென்றுவிட,

ரஞ்சனோ அவளை பார்த்து வில்லன் சிரிப்பு சிரித்தவன்’ஹை பச்சி கோவமா இருக்கு…. எதுக்கா இருக்கும்’ என்று யோசித்தவன் அப்போதுதான் நினைவு வந்தவனாக ‘ஒரு வேலை அன்னைக்கு அவங்க அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணி முறைச்சிட்டு திரிஞ்சாளே அதுனாலையா இருக்குமோ…..

இன்னுமா அந்த கோபம் போகல. சரி கோவமாவே இருக்கட்டும் அதுதான் நமக்கு வசதி. அவன் அவன் எடுக்கற முடிவு நமக்கு சாதகமாதான் இருக்கு. இப்போ நாம என்ன வேணா பண்ணிக்கலாம். இதோ வரேண்டி என் கோவக்காரி’ என்றவாறு அவள் அறைக்கு செல்ல போக,

அவன் காதை பிடித்து இழுத்த ரேவதி “அங்க எங்க ராசா போற. உன் ரூம் மேல இருக்கு. போ”

“ஐயோ……ஆத்தா…. ஹிஹிஹி….. அது ஒன்னும் இல்லம்மா. மித்ரா பேன் ஓடலன்னு சொன்னா அதான்…..”

“அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கு தெரியும். போ உன் ரூமுக்கு”.

“ம்மா….. அது….. மித்ராதான்……”

“அடேய் நான் உனக்கு அம்மாடா. போ”

“போறேன். சும்மா சும்மா விரட்டாதீங்க. ம்கூம்….” என்றுவிட்டு செல்ல,

தாய், தந்தை இருவரும் அவன் செயலில் சிரிக்க, மித்ரா அறைக்குள் இருந்து இவர்கள் கூத்தை கேட்டு சிரித்து கொண்டாள்.

ரஞ்சனோ ‘புதையல் மாதிரி இன்னும் எவ்வளவு நேரம் அவளை காப்பாத்துவீங்கன்னு நானும் பார்க்கறேன். எப்படியும் என்கிட்ட அவ வந்துதானே ஆகணும். அப்போ பேசிக்கறேன்’ என்று தனக்குள் முணு முணுத்து கொண்டு செல்ல,

இன்று எப்படியாவது ஹர்ஷாவுடன் பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று ஹாசி நினைத்து இருந்தாள்.

இரு ஜோடிகளும் தங்களுக்கு கிடைக்க போகும் தனிமைக்கு காத்திருக்க துவங்கினர்.

யாருக்கு அடி பலமா விழ போகுதோ நமக்கென்ன நாம வழக்கம் போல ஓரமா நின்னு வேடிக்கை பார்ப்போம்……