கேத்தஸ்ஸின் கோபத்தையும் அதற்குப் பின் வந்த மென்மையையும் கண்டு கொள்ளாமல் அவர் போக்கில்,“என் வெட்டிங் டேக்கு நான் வீட்லேயே ஸ்வீட் செய்வேன்..என் மாமியார் வாங்கிக் கொடுக்கற புடவையைக் கட்டிக்கிட்டு அவங்ககிட்டே ஆசிர்வாதம் வாங்குவேன்..எனக்குப் புடவையைத் தவிர வேற ஏதுவும் பரிசாக் கிடைச்சதில்லை…இப்போ குரு கல்யாணத்துக்கும் என் மாமியார் தான் எனக்குப் புடவை வாங்கிக் கொடுத்தாங்க..என்கிட்டே இருக்கற எல்லாப் புடவையும் ஒரே போல தான் இருக்கும்.” என்றார் ராஜி.
அவர் சொன்னது முற்றிலும் உண்மையென்று ஹேமாவிற்குத் தோன்றியது. அன்றைக்கு அவள் அதே புடவையில் இருந்ததால் தான் ராஜி அவளைச் சுலபமாக அடையாளம் கண்டு கொண்டார். இன்று ராஜியும் அன்று அவர் உடுத்தியிருந்த அதே போன்றதொரு புடவையை தான் உடுத்தி இருந்தார்.
அவரின் திருமண நாள் கொண்டாடங்களைப் பற்றி ராஜி பேசியது ஹேமாவிற்கு அவள் பெற்றோரின் திருமண நாள் கொண்டாடங்களை நினைவுப்படுத்தியது. ஒவ்வொரு வருடமும் புதுப் பட்டுப்புடவையும், நகை ஒன்றும் திருமண நாள் பரிசாக லீலாவதிக்கு சேஷாத்ரி கொடுப்பது வழக்கம். அன்றைய தினத்தில் அவர்கள் வீட்டில் நெருங்கிய நண்பர்களுக்கும், ஆபிஸில் உடன் வேலை செய்பவர்களுக்கும் கண்டிப்பாக பார்ட்டி இருக்கும். அது போல் ஒரு திருமண நாளின் பரிசுதான் அவள் இப்போது அணிந்திருக்கும் வைர மூக்குத்தி. அவள் தாய்க்குக் கிடைத்த மற்ற பரிசுகளும், தாய் வீட்டு சீதனமாக அவர் கொண்டு வந்த நகைகளும் மியாப்பூர் ஃபிளாட்டை வாங்க, ஆர்யனின் கல்லூரி செலவுகளைச் சமாளிக்க விற்கப்பட்டன.
லீலாவதியின் நகைகளை விற்க ஒருமுறை சேஷாத்ரியுடன் கடைக்குப் போன போது இந்த வைர மூக்குத்தியை மட்டும் தனியே எடுத்து வைத்தவள், மற்ற நகைகளை விற்ற பின் அதே கடையில் அப்பொழுதே மூக்கைக் குத்தி உடனே இதைப் போட்டுக் கொண்டுவிட்டாள். அன்றிலிருந்து அவள் அம்மாவின் அந்த ஒரு பொட்டு அடையாளம் அவளுடையதானது.
இதுவரை அவளுக்கென்று யாரும் புடவை வாங்கிக் கொடுத்தில்லை, அவள் சம்பாதிக்க ஆரம்பித்த பின் அவளாக ஆசைப்பட்டு வாங்கிக் கொண்டதில்லை. அவள் உடுத்தும் அத்தனை புடவைகளும் லீலாவதியினுடையது. பதினெழு வயது வரை புடவையோ, தாவணியோ உடுத்தியிராதவள், சேஷாத்ரிக்குத் துணையாக தொழிலில் சேர்ந்த போது தோற்றதிலும், வயதிலும் அவள் சின்ன பெண்ணாக தெரிந்ததால் அதைச் சரி செய்ய சில சமயம் புடவை உடுத்த ஆரம்பித்தாள். அவளுக்குப் புடவை உடுத்தச் சொல்லிக் கொடுத்து, அவள் அம்மாவின் புடைவகளுக்கு ஏற்ற ப்ளவுஸ் தயார் செய்து கொடுத்தது ஷைலஜா அக்காதான். அவள் அம்மாவின் கலெக்ஷனிலிருந்து ஐந்து புடவைகளை வெகு நாள்களாக விலைக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறாள், அந்த ஐந்தும் அவள் கலெக்ஷனில் சேரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று சிந்தித்து கொண்டிருந்தவளைக் கலைத்தது கேத்தஸின் பதில்.
“எங்க ஊர் திருவாஞ்சியத்திலே தான் என்னோட அறுபதாம் கல்யாணம் நடந்திச்சு..என் மாமியாருக்கு அந்தக் கொடுப்பிணை இல்லைன்னு ஊர்க்காரங்க, உறவுக்காரங்கன்னு எல்லாரையும் கூப்பிட்டு எங்களோடதை நல்லபடியா நடத்தினாங்க..கேத்தஸ் தான் வரமுடியாம வெளி நாட்லே மாட்டிக்கிட்டான்..எரிமலை பொங்கி வானம் முழுக்க புகையானதாலே அவன் வர வேண்டிய விமானம் கேன்ஸல் ஆயிடுச்சு..குரு இங்கேதான் இருந்தான்.. அப்போ அவனுக்கு கல்யாணம் ஆகலை..என் அறுபதாம் கல்யாணத்துக்கும் என் மாமியார் தான் புடவை வாங்கிட்டு வந்தாங்க.” என்று அவர் மன வருதத்தை வெளியிட்டார் ராஜி.
உடனே அவன் வீட்டின் பழக்க, வழக்கங்களிற்குச் சென்றது கேத்தஸ்ஸின் சிந்தனை.
அவர்கள் வீட்டில் சுலோ பாட்டியைத் தவிர யாரும் யாருக்கும் எந்தப் பரிசும் கொடுத்ததில்லை. பள்ளிப் பருவத்தில் பரீட்சையில் வெற்றி பெற்று அடுத்த வகுப்பிற்குச் சென்றதைக் கொண்டாட அவனுக்குப் பிடித்தது, குருவிற்குப் பிடித்தது என்று அவன் அம்மா செய்து கொடுத்த இனிப்புதான் பெரிய டிரீட். அதோடு சுலோ பாட்டியும் சிறு தொகையைப் பரிசாகக் கொடுப்பார். அவர்களின் பிறந்த நாள்கள், அவன் பெற்றோரின் திருமண நாள் என்று அனைத்தும் இதே முறையில் தான் கொண்டாடப்பட்டன. அவன் கல்லூரியில் சேர்ந்த பின் சுலோ பாட்டியைச் சரிக் கட்டி அவரிடம் பணம் வாங்கிச் சென்று சிநேகிதர்களுடன் சினிமாவிற்கு, ஹோட்டலுக்குச் சென்றதுண்டு. மற்றபடி வீட்டில் யாருக்கும் எதற்கும் அவன் பரிசு வாங்கிக் கொடுத்ததில்லை. குருவின் கல்யாணத்திற்குக் கூட அவன் தனிப்பட்ட முறையில் பரிசளிக்கவில்லை.
இந்தமுறை தான் அவன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஃபோன் பரிசளித்திருந்தான். அதுவும் அவன் வெளி நாட்டிலிருந்த போது அவர்களின் மூன்றாவது திருமண நாளிற்கு குருவிற்குப் பரிசளிக்க ஃபோன் வாங்கி வரும்படி கேத்தஸ்ஸிடம் மாதங்கி கோரிக்கை வைக்க, அவன் அண்ணனிற்கு அவனே வாங்கிக் கொடுப்பதாக கேத்தஸ் வாக்களிக்க உடனே அவளுக்கும் அதே போல் ஒன்று வாங்கி வரும்படி அவள் கட்டளையிட அதை மறுக்க முடியாமல் ஒரே போல் இரண்டு ஃபோன்கள் வாங்கி வந்து அவன் சார்பாக அவர்கள் இருவருக்கும் பரிசளித்திருந்தான்.
ராஜி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த கேத்தஸுக்கு எப்படி அவன் அம்மாவின் இந்த வருத்தமெல்லாம் அவனுக்கு இதுவரை தெரியாமல் போனது என்று எண்ணிக் கொண்டிருந்தான். கல்லூரிக் காலம் வரை பெரிதாக வீட்டு விஷயங்களில் அவன் தலையிட்டதில்லை. அவன் விஷயமாக இருந்தால் தான் அடம் பிடிப்பான் அதனால் வைத்திய நாதன் அவர் அம்மாவின் மூலம் தான் கேத்தஸைக் கையாள்வார். அதேபோல் குருவும் அவனுக்குத் தேவையான போது சுலோ பாட்டி மூலம் கேத்தஸைச் சரி கட்டுவான். பாட்டியை இவன் அதட்டுவது இவனைப் பாட்டி அதட்டுவது என்று இருவரும் முட்டிக் கொண்டாலும் அடிப்படையில் ஒரு புரிதல் இருந்ததால் இருவரும் எந்த விஷய்த்திலும் விட்டுக் கொடுக்க, வளைந்து கொடுக்கத் தயங்கியதில்லை.
அவன் விருப்பத்திற்கு ஏற்றார் போல் சுலோ பாட்டியை வளைத்து கொண்டிருந்தவன் அவன் அம்மாவின் விருப்பத்திற்கும் வளைத்திருக்கலாம் ஆனால் அவன் அம்மாவின் மனத்தில் இதைப் போன்ற ஏமாற்றங்களும், வருத்தங்களும் இருந்தது என்று அவன் அறிந்தே இருக்கவில்லை. படிப்பு முடிந்து ஒரு வேலையில் சேர்ந்த பின் விடுமுறைக்கு வீட்டுக்குச் சென்றபோதெல்லாம் சுலோ பாட்டியுடன் வம்பு செய்வது, ராஜியின் விருந்துபசாரத்தை அனுபவிப்பது என்று காலம் கழித்தவனுக்கு ராஜியின் காலம் எப்படிக் கழிகிறது என்ற யோசனை எழுந்ததில்லை. எப்போதும் அமைதியாக வளைய வரும் அவன் அம்மாவின் அமைதியான சுபாவத்திற்கும் எல்லைகள் இருந்திருக்கிறது. அதை அவர் அவ்வப்போது வீட்டில் வெளிப்படுத்தியிருந்தால் இது போன்றதொரு பெரிய நிகழ்வை தடுத்து இருக்கலாமென்று இப்போது அவனுக்குத் தோன்றியது.
அவனுக்குத் தெரிந்த வரையில் ராஜி என்றுமே, எதற்குமே சண்டை, சசரவு செய்ததில்லை. அதனால் அவர் சுபாவமே அதுதான் என்று அவன் நினைத்திருந்தான். குருவின் விருப்பத்திற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் மாதங்கியை மருமகளாக ஏற்றுக் கொண்டதில் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு புறம் ஏற்கனவே பல வருடமாக அவன் பாட்டியும் புதிதாக மற்றொருபுறம் அவன் அண்ணியும் அவன் அம்மாவை நெருக்க, அவன் அப்பாவும் அண்ணாவும் எப்போதும் போல் சுய நலமாகச் சிந்திக்க, நல்ல வேளை ராஜியாகவே அவர் செயலின் மூலம் அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார் என்று எண்ணி நிம்மதியடைந்தான்.
அடுத்து அவனுக்கு கிடைக்கும் விடுமுறையில் முதல் வேலையாக ராஜியை ஒரு நல்ல கடைக்கு அழைத்துச் சென்று அவருக்குப் பிடித்த புடவையை வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்தான். அந்த நல்ல செயலுக்குப் பின் அவனுள் எழப் போகு வினாக்களுக்கு விடைகளைத் தேடி அவன் நிம்மதியற்றவன் ஆகப் போகிறானென்று அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.
அறுபதாம் கல்யாணம் நடந்து முடிந்திருந்த ராஜியை ஆச்சர்யத்துடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஹேமா. அவள் பெற்றோர் இருவரும் பதினெட்டு வருடங்கள் ஒன்றாக இருந்தனர். கடைசி மூன்று வருட திருமண நாள் கொண்டாட்டங்கள் பற்றி அவளுக்குத் தெரியாது. அவள் பத்தாம் வகுப்புக்குச் சென்ற போது சேஷாத்ரிக்கு மறுபடியும் ஹைதராபாத் மாற்றலானது. பாண்டிச்சேரி ஃபாக்ட்ரியை ஒரு பெரிய குழுமம் வாங்கி விட்டதால் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களில் சில பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர், சில பேர் அவர்களாகவே பணியை விட்டு விலகினர். சேஷாத்ரி உயர் பதவியில் இருந்ததால் அவரை மறுபடியும் ஹைதராபாத்திற்கு அனுப்பி வைத்தனர். பத்தாம் வகுப்பில் வேறு ஊருக்கு, புதுப் பள்ளிக்கு மாற ஹேமா விரும்பாததால் அவளை ஹாஸ்டலில் சேர்த்தனர்.
புதுக் கனவுகளுடன், அவர் பிறந்து, வளர்ந்த ஊரில் மறுபடியும் குடியேறிய லீலாவதி அறியவில்லை எதுவும் பழையபடி இருக்கப் போவதில்லையென்றும் அங்கு ஏற்படப் போகும் புதிய திருப்பங்களினால் அவர்கள் வாழ்க்கை தடம் புரளப் போகிறதென்றும். விடுமுறைக்கு மட்டும் ஹைதராபாத் வந்து போனதால் அவர்களுக்கென்று சொந்தமாக வீடோ, ஃபிளாட்டோ இருக்கவில்லை. அதனால் சத்யவதியின் வீடு அருகில் ஒரு தனி வீட்டில் வாடகைக்குக் குடிப் போயினர். முதல் மூன்று மாதம் லீலாவதியின் வாழ்க்கையில் பெரிதாக மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. மூன்று மாததிற்குப் பிறகு பணியிலிருந்து கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் சேஷாத்ரி. அதில் பெரிதாக பாதிப்பு அடையாமல் அவரும் வேறொரு வேலையைத் தேட ஆரம்பித்தார். ஆனால் அதுதான் கிடைக்காமல் சதி செய்ய ஆரம்பித்தது.