Advertisement

அபிராமி ஏற்றிய தீபம் – 7

அத்தியாயம் 7

“நில்லுங்க ரகு! நா சொல்லிட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு போறீங்க?”

கீர்த்தனா குரல் கீச்சிட சொல்லிக் கொண்டிருக்க, ரகு எதையும் சட்டை செய்யாமல்  அலமாரியைத் திறந்து முடித்திருந்தான்.

“ரகு! ரகு! ர..கு! அந்த மரப் பெட்டிய மட்டும் தொடத்தீங்க.”

இவள் கோபமாய் சொன்னபடி, அவனை நெருங்கினாள்.

உதட்டில் புன்னகை அரும்ப, ரகு அதையே முதலில் எடுத்தான். மெல்லப் பெட்டியைத் திறந்தவன், அதன் உள்ளே பச்சை நிற வெல்வட் துணியில் சுருண்டு கிடந்த அந்த வெள்ளி அரைஞாண்கொடியை எடுத்துக் கையில் தொங்கவிட்டுப் பார்த்தான். சின்ன சின்ன மணிகளுடன் அந்தக் கொடிப் பார்க்கவே பிரமாதமாய் இருந்தது. கீர்த்தனா அதே வேளை அதை அவனது கையிலிருந்து பிடுங்க முயன்றாள். மூக்கு விடைக்க, அவனிடம்,

“கொண்டாங்க ரகு! நல்லா இருக்கே! வடக்க வானா தெக்க வரீங்க? தெக்கே வானா வடக்க போறீங்க? எது சொன்னாலும் கேக்கறது இல்ல.”

என்று கேட்டாள்.

கீர்த்தனாவால் அதை வாங்க முடியவில்லை. ரகு கைகளைப் பின் பக்கம் போட்டு, அதை மறைத்தான்.

“இப்போ நா பாத்தா என்ன கீர்த்தனா?”

“ஒண்ணும் வேணாம்.”

சொன்னபோதே கீர்த்தனாவின் முகத்தில் கூச்சம் படர்ந்தது. அவன் சிவந்திருந்த அவளது முகத்தையே அந்த நேரம் ரசித்துப் பார்த்தான்.

“உன் இடுப்பில் இருந்ததா? அதானே விசயம்?”

“நா அப்ப குழந்தை.”

“எனக்கு ஞாபகம் இருக்கு.”

கீர்த்தனா அவனது முகத்தை வியப்பாய் பார்த்தாள்.

“நீ  குழந்தையா இருந்தப்ப  நானும் எங்க அம்மாவும் உங்க பெரியம்மா வீட்டு விசேஷம் ஒண்ணுக்கு டெல்லில இருந்து வந்தோம். அப்ப எனக்கு ஆறு வயசு இருக்கும்னு நினைக்கறேன். உன்னைத் தூக்கி விளையாடி இருக்கேன்.”

ரகு சிரித்த முகமாய் சொன்னான்.

“என்ன அப்படிப் பாக்கற?”

பட்டென்று கீர்த்தனா முகத்தை வேறு புறமாய் திருப்பிக் கொண்டாள்.

“என்ன? வாயே ஓயாம பேசுவ? சத்தத்த காணோம்.”

அவன் சொன்னபடியே ஏமாந்துபோய் கைகளை முன்னுக்குக் கொண்டு வர, இவள் பட்டென்று திரும்பிக் கொடியைப் பற்றினாள். அவன் விட்டுவிட்டான்.

“வாங்கிட்டேன் பாத்தீங்களா? நா கெட்டிக்காரினு அம்மா சொல்லிட்டே இருப்பாங்க.”

“வச்சுக்கோ.. போ!”

“மொதல காபிய சாப்பிடுங்க. இந்நேரம் ஆறியே போயிருக்கும்.”

“நா பல் தேய்க்க வேணாமா?”

“சரி போய் தேய்சுட்டு வாங்க. நா அதுக்குள்ள மறுபடியும் சூடு பண்ணிட்டு வரேன்.”

“என்னால உனக்கு ரொம்ப சிரமம். நா அடுத்த வாரம் போயிடுவேன்.  நீ நிம்மதியா இருக்கலாம்.”

ரகு சொன்ன செய்தி கீர்த்தனாவிற்குப் பிடிக்கவில்லை. அவள் பதில் எதுவும் சொல்லாமல் கீழே நடந்தாள். சில நிமிடங்களில் அவள் காபியோடு திரும்பி மேலே வந்தாள். 

ரகு காபியை எடுத்துக் கொண்டான். அதை உறிந்தபடிப் பேச்சு கொடுத்தான்.

“கீர்த்தனா! நா இந்த ஊருக்கு மூணு தடவ வந்த ஞாபகம். அப்பலாம் என் வாழ்க்கையில எதாச்சு நடந்துச்சானு கேட்டா எதுவும் நடக்கல. ஆனா இப்ப நடந்தத என் வாழ்க்கையில சாகற வரைக்கும் மறக்க முடியாது.”

கீர்த்தனா விழிகள் விரிய,

“என்ன நடந்துச்சு ரகு?”

என்று விசாரித்தாள்.

அவளையே குறுகுறுவெனப் பார்த்தவன்,

“அப்ப அன்னிக்கு ஆஸ்பத்திரில என்ன பாத்தனு சொல்லு. நானும் சொல்றேன்.”

என்று மடக்கினான்.

“அதை ஏன் கேக்கறீங்க ரகு? நானே இப்ப தான் எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியா இருக்கலாம்னு முடிவுக்கு வந்தேன்.”

“பரவால சொல்லு கீர்த்தனா! நா யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்.”

“உம். ரகு! அது வந்து..”

என்று ஆரம்பித்தவள் எல்லா கதையையும் சொல்லி முடித்தாள்.

“என்ன கீர்த்தனா சொல்ற? யாரு அந்த ஜானகி?”

“எனக்கும் அதான் தெரியல. அபிராமிக்கும் தெரியல.”

“இந்த ஊர்ல என்னென்னமோ நடக்குது. ஏதோ ரகசியம் ஒழிஞ்சிருக்கு கீர்த்தனா!”

“ரகு! நானே சின்ன குழந்தை. இந்தக் கடவுள் என்னைத் தான் சோதிச்சு பாக்கணுமா?”

கீர்த்தனா புலம்பிய விதத்தில் ரகு வாய்விட்டுச் சிரித்தான்.

“யாரு நீ குழந்தையா?”

சந்தன நிற சுடிதாரிலிருந்தவளை மேலும் கீழும் பார்த்தான்.

“போங்க ரகு!”

“சரி சரி! நீங்க என்னவோ சொல்ல வந்தீங்க?”

“அதுவா கீர்த்தனா?” என்று அவன் ஆரம்பித்த நேரம், ரகுவைப் பெற்றவர்கள் அந்த இடம் வந்து சேர்ந்தனர். அந்தப் பேச்சு நிற்க, ரகுவின் முகம் அவர்களின் வருகையை ஒட்டிப் பிரகாசமானது.

“இங்க பாரு மதுரா! என்னவோ என் பையன் குழந்தை.  என்ன பண்ணுவானோ? ஏது பண்ணுவானோனு புலம்பிட்டு இருந்த? இங்க  பார்த்தையா கீர்த்தனா ரகுவுக்கு எத்தன உபகாரம் பண்றானு?”

“அதானே கீர்த்தனாவே நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லா இருக்குமே. நல்ல குணமான பெண் தான்.”

மதுரா சிறியவர்கள் முன் யோசிக்காமல் சொல்ல, கீர்த்தனாவிற்குக் கூச்சம் தாழ முடியவில்லை. அந்த நொடியிலிருந்து ரகு அவளைப் பார்த்த விதத்தில் சாதாரண அன்போடு மேலும் எதுவோ கூடி இருந்தது.

“மதுரா! உஷ். குழந்தைங்க எதிர்ல என்ன பேச்சு?”

என்று அடக்கினார். மதுரா அமைதியானாள்.

“அம்மா! பாப்பாங்க. நா கீழே போறேன் அத்த! நீங்க குளிச்சுட்டு வாங்க. சாப்பிடலாம்.”

என்று கூறிவிட்டு, கீர்த்தனா சிட்டாய் பறந்து மறைத்தாள். ரகுவும் மொட்டை மாடிக்கு உடற்பயிற்சி செய்யும் நோக்கத்தோடு நழுவி அகன்றான். 

தம்பதி விட்ட பேச்சைத் தொடர்ந்தனர்.

“நமக்கு பதினாறுலையே கல்யாணம் நடந்ததேங்க. நா என்ன தப்பா சொல்லிட்டேன்?”

மதுரா அறையில் தொங்கவிட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் வழிய, தன் பொட்டை சீர் செய்தபடியே கேட்டாள்.

“அது அந்தக் காலம் மதுரா! இப்ப எல்லாம் படிச்சு வேலைக்குப் போய் மெதுவா தான் எல்லாம் பண்றாங்க.”

“வேலை காசு தான் முக்கியமா போச்சா? காய்சா பறிச்சு குழம்பு பண்ண வேணாமா?”

நீலகண்டன் பெரியதாய் சிரித்தார்.

 “என்ன தமாஸ கேட்டுட்டீங்க?”

“உனக்குத் தான் ரொம்ப அவசரம் போல. கீர்த்தனாவுக்கு இப்ப தான் பதினேழு நடக்குது. ரகுவுக்கு வெறும் இருபத்தி மூணு தான் முடிய போகுது.”

“நா என்ன உடனேவா கல்யாணம் பண்ண சொல்றேன்.”

“பின்ன என்ன தான் சொல்ல வர மதுரா?”

“கீர்த்தனாவ யாரும் பெண் கேட்டு வரக் கூடாது.”

“அத நாம எப்படி தடுக்க முடியும்? பெண் இருந்தா வரன் வந்துட்ட தான் இருக்கும்.”

“ஐயோ! உங்களுக்கு மட்டும் எதுவும் சட்டுனு விளங்காதே. பாதாம ஊற வைச்சு உரிச்சு தர மாதிரி. விளக்கமா சொல்லணும்.”

நீலகண்டன் அதற்கும் சிரித்தார்.

“அப்படித் தான் சொல்லேன் மதுரா! இருபத்தி அஞ்சு வருசமா அதானே வழக்கம்.”

இருவருமே சிரித்து விட்டனர்.

“நம்ம ரகுவுக்கும் கீர்த்தனாவுக்கும் நிச்சயம் பண்ணிடலாம்ங்கறேன்.”

“ஓகோ.”

“உம்ம்! அப்புறம் யாரும் கீர்த்தனா விசயத்துல தலைய விட மாட்டாங்க. ஆத்து தண்ணீ தான் எங்கேயாச்சு ஓடிடும். கிணத்து தண்ணீ  நம்ம கிட்டேயே இருக்கும். ரகு நல்ல வாட்டசாட்டமா இருக்கான். கீர்த்தனா பாக்க கிளி மாதிரி லட்சணமா இருக்கா. அவனுக்கு இவ தான் ஏத்தவளா எனக்கு படுது. என்ன சொல்றீங்க?”

“ஆமா. ஜோடிப் பொருத்தம் அருமையா அமையும். பெண் வீட்ல பேசணுமே.”

“சீக்கிரம் பேசிடலாம்ங்க!”

 “அதுக்கு முன்ன ரகு கிட்ட ஒரு வார்த்த எதுக்கும் கேட்டுக்கலாம். என்ன சொல்ற?”

“அவன் என்ன மாட்டேனா சொல்லப் போறான்ங்க?”

“மாட்டேனுட்டா மதுரா?”

“அடடா! உங்க வாய தண்ணீ விட்டு கழுவுங்க. எப்ப பாரு அபசகுணமா சொல்றது.”

மதுராவின் முலாம் பழப் போன்ற பூசிய சருமம் கோபத்தில் அதிர்ந்தது.

“நீ எதுக்கு இப்ப கோபப்படற மதுரா? நா சொல்ல வரதே வேற.”

“சொல்லுங்க. கேட்டு வைக்கறேன்.”

“ரகு டெல்லில வளந்தவன். அவன் பழக்கம் யோசனை எல்லாம் ரொம்ப நவீனமா இருக்கும். கீர்த்தனா காஞ்சிபுரத்துல ஒரு சின்னக் கிராமத்துல வாழ்ந்தவ. ரகு மனசுல எதாச்சு அபிப்ராயம் இருக்கலாம்ல?”

“அதுவும் சரி தான். ஆனா அவன் நம்ம பையன். நம்ம ரத்தம் ஓடுதுங்க. அவன் வேரை மறக்க மாட்டான். அவன் பிறந்ததே காஞ்சிபுரத்துல ஒரு சின்ன குடில்ல தான? திடீர்னு அர்த்த ராத்திரியில வலி வந்ததே? என்ன பண்றதுனு புரியாம தவிச்சு அழுதோமே. அன்னிக்குனு ஊர்ல ஏதோ நோம்பினு ஊரே கோவிலுக்குப் போயிடுச்சே. ஒத்தாசைக்கு ஆள் இல்லாம வீதியில நடந்தப்ப எவ்வளவு பெரிய விசயம் நடந்தது?”

மதுரா உணர்ச்சி பெருக்கில் விவரிக்க, நீலகண்டனின் முகத்திலும் அதே அதிர்வலை.

“ஆமா ஆமா மதுரா! அந்த அதிசயத்த மறக்க முடியுமா? ஒரு வயசான கிழவர் வந்தார். பாக்கவே ரொம்ப அழுக்கா இருந்தார். நம்மல பாத்து சிரிச்சார். ‘ஈசனோட ஆணை! உனக்கு மகன் பிறப்பான். உனக்கு நல்ல படியா மகன் பிறப்பான். அழாதே’னு வாக்கு சொன்னாரே.”

“எனக்குக் கடவுளே கண்ணுக்கு தெரிஞ்ச மாதிரி பட்டது. ‘வடக்க திரும்பு ஒரு குடில் திறந்து கிடக்கும். உன் பையன் பத்திரமா பிறப்பான். போ! சீக்கிரம் போ!’னு கத்தினாரேங்க. அவர் சொன்ன மாதிரியே அதே எடத்துல ரகு பிறந்தான். யார் அவரோ? எத்தன தடவ பேசி மாய்ஞ்சாலும் அலுக்காத விசயம் இதுங்க.”

“கடவுள் மதுரா!”

இருவரும் உருகிப் பேசிக் கொண்டிருந்ததை மொட்டையில் மாடியிலிருந்து இறங்கி, வந்திருந்த ரகு எதேச்சையாகக் கேட்டு மெய் சிலிர்த்தான். 

“அப்பா! அம்மா! கேக்கவே எனக்குக் கை கால்  எல்லாம் சிலிர்த்துடச்சு. ஏன் இதலாம் என் கிட்ட சொல்லல?”

“ரகு! கேட்டீயா? காஞ்சிபுரம் மண்ணுல தான் நீ விவரத்த கேக்கணும்னு இருக்கும் போல.”

மதுரா விளையாட்டும் உண்மையுமாய் சொல்லிச் சிரித்தாள்.

“அம்மா! அன்னிக்குப் பௌர்ணமியான?”

“ஆமா ரகு!”

ரகுவின் கண்கள் மின்னின.

“அன்னிக்கு ஆருத்ரா நட்சத்திரமா?”

அடுத்த கேள்வியைத் தொடுத்து விட்டு, தாயையே ஆவல் பொங்க, ரகு பார்த்து நின்றான்.

 

Advertisement