Advertisement

அபிராமி ஏற்றிய தீபம் – 6
அத்தியாயம் 6
“என்ன விளையாடறீங்களா ரகு? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.”
“நா போவேன்.”
“அம்பாளே! நா இதெல்லாம் சொல்லித் தான் நீங்க இப்படிலாம் பண்ணறீங்கனு தெரிஞ்சா எங்க அம்மா என்னைக் கொன்னுடுவா ரகு!”
என்றவள் சிணுங்கினாள்.
“அப்ப நீ என் மேல உள்ள அக்கறையில சொல்லுல. உன்னை யாரும் திட்டக் கூடாது. அதானே?”
என்றன் கிண்டலாய் கேட்டான்.
“ரெண்டும்தான் ரகு! உங்களுக்கு எதாச்சுனா என..க்குப் பயமா இருக்கு.”
என்று கண்களை மூடிப் படபடத்தாள். அவன் திரும்பி அவளைப் பார்த்தான்.
“சரி நா போகல போதுமா கீர்த்தனா?”
“அப்பாடா! எனக்கு மூச்சு வந்துச்சு.”
நிம்மதியடைந்த கீர்த்தனா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அதற்குள்ளே வீடும் வந்து விட்டது. 
இரவு ஒன்பதே கால் மணி தாண்டியது. மாடியறையில் ரகு மட்டுமே தனியாக இருந்தான். மதுராவும் அவள் கணவனும் விருந்துக்குப் போன இடத்திலேயே அன்பு பிடியால் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். நாளைதான் வரக் கூடும்.  ரகு கட்டிலில் படுத்துப் புரண்டபடியே இருந்தான். படுத்ததும் தூங்கிவிடும் பழக்கம் கொண்டவனுக்கு அன்று தூக்கம் வரவில்லை. மனம் கீர்த்தனா சொன்ன செய்திகளைப் பற்றியே சுற்றி வந்தது. வேகமாய் படுக்கையிலிருந்து எழுந்து கொண்டான்.
எந்த அரவமும் ஏற்படாத வகையில் மெல்ல படி இறங்கி கீழேப் போனான். வீட்டினுள்ளே விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. அது அவனுக்குச் சற்று நிம்மதியைத் தந்தது. ஏதோ யோசித்தவன் கேட்டைத் திறக்காமல் சுவர் மீது ஏறி, அந்தப் பக்கம் குதித்தான். 
நேரே நடந்தான். கொஞ்சம் கால் கடுகடுத்தன. வழியில் வந்த ஆட்டோவில் ஏறிக் கொண்டான்.
“எங்க போகணும் தம்பி?” ஆட்டோக்காரர் விசாரித்தார்.
“சித்தர் கல் உள்ள இடத்துக்கு   போங்க.”
ஆட்டோக்காரர் திரும்பி அவனைப் பார்த்துவிட்டு வண்டியை நகர்த்தினார்.
“தம்பி ஊருக்குப் புதுசா?”
“அப்படினு சொல்ல முடியாது. இது தான் எங்க பூர்வீகம். ஆனா டெல்லிக்குப் போயிட்டோம். இப்ப தான் வர நேரம் அமைஞ்சது. ஏன் கேக்கறீங்க?”
“சித்தர் கல்லுக்கு பூஜை முடிஞ்சுது. நீங்க ஒருவேள அத பாக்கலாம்னு நினைச்சீங்களோனு தகவல்  சொல்ல கேட்டேன் தம்பி!”
“தெரியும் அண்ணா! நா வேற விசயமா போறேன்.”
ஆட்டோக்காரர் மேலே எதுவும் கேட்கவில்லை. ‘சித்தர் கல்’ என்ற பெயர் பலகை போடப்பட்டிருந்த இடத்தில் நிறுத்தினார்.
“உங்கள மறுபடியும் கூப்பிடலாமா?”
ரகு விசாரித்தான்.
“ஓ! என் எண் சொல்றேன் கூப்பிட்டுங்க. ராத்திரி பதினொறு மணி வரை இருப்பேன். அதுக்கு மேல வீட்டுக்குக்  கிளம்பிடுவேன்.”
அவர் சொன்ன எண்களை ரகு அலைபேசியில் சேமித்தான்.
கூட்டம் மிகவும் வற்றி இருந்தது. அங்கே ஒரு சிலர் மட்டுமே தென்பட்டனர். கல்லைச் சுற்றிக் கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியைப் பின்பற்றி ரகுவும் சுற்றினான்.
பின்பு இங்கும் அங்கும் கண்களில் விளக்கெண்ணெய்யை ஊற்றாத குறையாகத் தேடினான். எங்கும் கிறுக்கு சித்தர் தெரியவில்லை. அவ்வப்போது மணியைப் பார்த்தான். கொஞ்சம் நேரம் காரை திட்டு ஒன்றில் அமர்ந்து கொண்டான். மழை பெய்ததில் ஆங்காங்கே மண்சாலையில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் மனிதர்களின் கால் தடங்கள் பதிந்ததால் கொலகொலவென கோதுமை அல்வா மாதிரி மாறி இருந்தது. நேரம் ஓடியது.
அவனைக் கவனித்த பூஜாரி ஒருவர்,
“தம்பி! மணி பத்தரை ஆச்சு. இன்னும் என்னப் பண்றீங்க? வீட்டுக்குக் கிளம்புங்க.”
என்று கூறினார்.
அவன் வேற வழியில்லாமல் எழுந்து கொண்டான்.
அவன் நடப்பதைக் கவனித்து,
“ வண்டி இல்லையா?” என்று கூவிக் கேட்டார்.
“இல்ல சாமி! ஆட்டோல வந்தேன். மறுபடியும் அவர தான் கூப்பிடணும்.”
“அவர கூப்பிட்டு.. அவர் வந்து.. ரொம்ப இருட்டிடும். இளம்வயசா தெரியறீங்க. சாமத்துல இப்படி சுத்தாதீங்க.”
அவன் தலையாட்டினான்.
“வீடு எங்க?”
“மேற்கு வீதி தெப்பக்குளம் பக்கத்துல.”
“மேற்கு வீதியா? நா அந்த வழியா தான் போகணும். இதோ கிளம்பறேன். என் வண்டியில ஏறிக்கோங்க விட்டுடுறேன்.”
என்று கூறியபடி பதிலை எதிர்பார்க்காமல் பூஜாரி தனது வண்டியை உதைத்தார்.
ரகு பேசாமல் அவர் பின்னே ஏறிக் கொண்டான்.
அவரின் மீது மஞ்சள் நெடி வந்தது. 
“சாமி! இங்க தினம் வருவீங்களா?”
அவர் சிரித்தார்.
“தினம் எல்லாம் வர மாட்டேன் தம்பி! பௌர்ணமி அமாவாசை தவறாம வருவேன். அது போக ஒரு சில நாள் வருவேன்.”
“ஒரு சில நாள்னா?”
அவர் திரும்பி அவனைப் பார்த்தார்.
“வருணும்னு பட்டா”
“ஓ!”
“அந்தச் சித்..தர் பத்தி உங்களுக்கு எதாவது தெரியுமா?”
“இதலாம் பெரிய விவகாரம். இது பேசற எடமும் இல்லை. சூழலும் இல்லை.”
அவர் அவனது வாயிற்குப் பூட்டுப் போடப் பார்த்தார். அவன் விடவில்லை.
“எங்க பேசணும்? நீங்க சொன்னா நா வரேன்.”
அவர் எதுவும் பேசவில்லை.
“இதோ மேற்கு வீதி வந்துடுச்சு. இறங்கிக்கோங்க தம்பி!”
ரகு இறங்கிக் கொண்டான்.
“நீங்க ஒண்ணும் சொல்லல.”
“கணபதி வீதயில நாலாவது வீடு எங்களுது. எதாவது தேவைப்பட்டா வாங்க.”
“ரொம்ப நன்றி சாமி!”
அவர் அவன் சொன்ன நன்றியைக் காதுகளில சரியாக வாங்காமல் வண்டியைக் கிளப்பி விட்டார்.
சிலுசிலுவெனக் காற்று முகத்தில் அறைந்தது. தெப்பக்குளத்தைப் பார்த்தபடியே ரகு நடந்தான். பௌர்ணமி நிலவின் பிம்பம் குளத்தில் தெரிந்தது. வானவில் மாதிரி தெரு வளைந்து ஓடியது. எல்லா வீடுகளும் யோகிகள் போல மௌனத்தைப் பூண்டு இருந்தன. 
சில நொடிகளில் தெப்பக்குளத்தின் மேல் படியில் ஒரு உருவம் தெரிந்த மாதிரி ரகுவிற்குத் தோன்றியது. அவன் கால்களின் வேகம் குறைந்து, மனதில் கேள்விகளின் வேகம் கூடியது. கூடவே அச்சம் சுரந்தது.
இன்னும் நெருங்க நெருங்க கண்கள் அந்த ஒடிசலான ரூபத்தைப் துள்ளியமாய் படம்  எடுத்தன. தலை மயிர் காற்றில் கலைந்து ஒரு பக்கமாய் பறந்தது. பௌர்ணமி நிலவு சிந்திய வெளிச்சத்தில்  தேகம் முழுவதுமாக அப்பி இருந்த செம்மண் தகதகத்தது. உதடுகளில் ஒரு பெரிய சிரிப்பு தவழ்ந்தது! கீர்த்தனா சொன்ன அத்தனை அம்சங்களும் சரியாய் பொருந்தி இருந்தன. அப்படியானால் இவர் கிறுக்குச் சித்தரா? அவரே தான்! 
அவர் அவனுக்காகவே காத்திருந்த தோரணையில் அமர்ந்திருந்தார்.
ரகுவின் கால்கள் உறைந்தன. மூளை செயலற்றுப் போனது.
“என்னைத் தெரியுதா?”
அவனுக்கு மயக்கம் வராத குறை.
“என்ன பேசாம திருதிருனு முழிக்கற?”
ரகு பின்னால் நகர்ந்தான்.
அவர் வாய்விட்டுச் சிரித்தார்.
“நீ இவ்வளவு நேரம் என்னைத் தானே தேடிட்டு இருந்த ரகு? அப்புறம் எதுக்குப் பின்னாடி போற?”
எல்லாவற்றையும் சொல்கிறாரே! ரகு மேலும் அரண்டான்.
“சா..மி! நா தப்பா பேசி இருந்தா மன்னிச்சுக்கோங்க.”
“தெரியாம தப்பா பேசறவனுக்கு மன்னிப்பு உண்டு. தெரிஞ்சுட்டே தப்பா பேசறவனுக்கு மன்னிப்பு இல்லை.”
“சாமி! என்னால எ..தையும் நம்ப முடியல…”
ரகு தடுமாறினான்.
“உன்னை நா நம்பச் சொன்னேனா?”
“இ..ல்ல சாமி! எதலாம் நா பொய்னு நினைச்சேனோ அதெல்லாம் இப்ப உண்மையா தெரியுது சாமி!”
“தேடல் இருக்கவனுக்குத் தான் விடை தேடி வரும்.”
“எனக்கு விடை தெரியுது. விடை வந்த வழி புரியலையே.”
“ஹா ஹா ஹா.. புரியும் புரியும். கொஞ்ச கொஞ்சமா.”
“சா..மி! நீங்க எப்ப வந்தீங்க? நா போறப்ப பாக்கலையே.”
“நா உங்கூடவே தான் வந்தேன். ஆட்டோல இப்ப வண்டியில. நீ தான் என்னைப் பாக்கல ச்சு..”
ரகு வெடவெடத்துப் போனான். முதலில் இந்த ஊரை விட்டுப் போக வேண்டும். அவன் மனதில் நினைத்தான்.
“என்ன? இங்க இருந்து பொட்டிக் கட்டணும்னு நினைக்கறீயா ரகு?”
ரகு வாயடைத்துப் போனான்.
“இன்னும் ஒரு வாரத்துல டெல்லி கிளம்பிடுவேன்.”
என்றவனின் வாய் தந்தி அடித்தது.
“போ.. ஆனா நீ இந்தப் பக்கம் திரும்பி வருவ.”
அவர் சன்னமாய் தன் இடதுபக்க தோளைத் தட்டியபடிச் சொன்னார்.
“என்னது? நடக்கப் போறது தெ..ரியுமா?”
“தெரியும்.”
“ஒரு சந்தேகம்?”
“கேளு. நடக்கப்போறது தெரியும்னா எல்லாமே ஏற்கனவே எங்கேயோ நடந்துடுச்சா சாமி? இங்க வெறும் பிரதிபலிப்பு தான் நடக்குதா?”
ரகு குழப்பமாய் கேட்டான்.
“ஹா ஹா ஹா! ஒத்திகையும் ஒண்ணு தான். அரங்கேற்றமும் ஒண்ணு தான். ஆனா வேற வேற இடத்துல நடக்கும்.”
“சா..மி!”
“உனக்கு எதாவது வேணுமா?”
அவர் நிறுத்தி நிதானமாகக் கேட்டார்.
ரகு சில கணங்கள் யோசித்தான்.
“நா நினைக்கறப்ப நீங்க வருவீங்களா?”
“நா நினைக்கறப்ப நீ நினைச்சனா வரேன்!”
“சாமி!”
ரகு பேந்த பேந்த விழித்தான்.
“உள்ள போய் நல்லா தூங்கு. எதுவும் யோசிக்காத.”
அவர் தெப்பக்குளத்தின் படிகளில் இறங்கினார். சில படிக்கட்டுகளைக் கடந்த பின் அவர் ரகுவின் கண்களுக்குப் புலப்படவில்லை. பிடரி தெறிக்க அவன் வேகமாய் வீட்டை நோக்கி ஓடினான். சுவர் மீது தாவி, மாடி அறையை நோக்கி ஓடினான். தண்ணீரை மளமளவெனப் பருகியவன், கட்டிலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தான்.
எப்போது தூங்கினான் என்று அவனுக்குத் தெரியவில்லை.
நன்கு விடிந்து விட்டது. காலையில் கீர்த்தனா அவன் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். கையிலிருந்த டம்பளரில் நுரை பறந்தது.
“என்னது இது? தினம் ஆறு மணிக்கே எழுந்து கீழ வந்துடுவார். காப்பி சாப்பிடுவார். இன்னிக்கு எட்டாகப் போகுது.”
என்று முணுமுணுத்தாள்.
ரகு காமாடு தலைமாடு தெரியாமல் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
“அம்பாளே! இன்னும் எந்திருக்கவே இல்லையா! அச்சச்சோ!”
குரலும் வெளிச்சமும் ரகுவை சற்று அசைத்தன. லேசாகக் கண்களைச் சுருக்கியவன் , கீர்த்தனாவைக் கண்டு தூக்கி வாரிப்போட எழுந்தான்.
“ஏய்! நீ எப்ப வந்த?”
அவன் தொண்டைக்கட்டிய குரலில் கேட்டான்.
“இப்பதான்! தாழ் வைக்காம இராத்திரி எல்லாம் தூங்கினீங்களா?”
என்று கண்கள் விரிய கேட்டாள்.
“மறந்திருப்பேன்!”
அவன் அலட்சியமாகச் சொன்னான்.
“மறந்துட்டீங்களா? திருடன் கிருடன் வந்து தொலைச்சா என்ன செய்றது ரகு?”
“உள்ள எதாவது புதையல் இருக்கான? இருந்தா சொல்லு நானே டெல்லிக்கு எடுத்துட்டுப் போயிடறேன்.”
என்று அவன் குறும்பாகச் சொன்னான்.
“ஹும்! புதையலா? உள்ள என்னோட மர அலமாரி, என்னோட துணிமணி, நா சின்ன பிள்ளையா இருக்கப்ப வெச்சிருந்த பொம்மை, என் அரைஞான்கொடி, என் படமெல்லாம் இருக்கு தெரியுமா?”
என்று கேட்டவளுக்கு மூக்கு விடைத்தது.
“அதை எல்லாம் எவனும் எடுக்க மாட்டான்.”
அவன் முணுமுணுத்தான்.
“என்ன கிண்டலா? அதெல்லாம் கோடி ரூபா தந்தாலும் வராது. தெரியுமா ரகு?”
“அப்படியா? நா அதலாம் பாக்கணும்.”
என்று அவன் எழுந்து அலமாரியை நோக்கி நடந்தான்.
“ம்கூம். ஒண்ணும் பாக்க வேணாம். இந்தாங்க காபி! பல் விளக்கிட்டுக் குடிங்க. அம்மா தர சொன்னா.”
என்றவள் அருகில் கிடந்த மேசையின் மீது டம்பளரை வைத்தாள். அவன் விடாமல் நடந்தான்.

Advertisement