Advertisement

அபிராமி ஏற்றிய தீபம் – 5
அத்தியாயம் 5
“அப்புறம் என்ன?”
என்று ரகு கேட்டுக் கீர்த்தனாவையே பார்த்தான். 
அது சமயம் கூட்டம் சற்று ஒதுங்க, கீர்த்தனா அதைக் கவனித்து அவசரமாய் மரத்தடிக் கல்லை நோக்கியபடிக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள். 
“சொல்றேன் சொல்றேன் ரகு! முதல வண்டிய எடுக்கலாம்.”
என்று கூறி, அவள் வேகமாய் வண்டியை நோக்கி நடந்தாள். அவனும்  ஓட்டமும் நடையுமாகப் பின் தொடர்ந்து ஏறி, வண்டிக் கதவை அறைந்து சாற்றினான். வண்டி நகர்ந்தது.
“கீர்த்தனா! அந்தக் கதைய இப்ப சொல்லு. நானும் வந்ததுல இருந்த எந்த படமும் பாக்கல.”
என்ற சொன்னவனின் குரலில் கேலி வழிந்தது.
அதைக் கீர்த்தனா சட்டை செய்யவில்லை.           
“இன்னும் ரெண்டு வாக்கு தந்து இருக்கார். ஒண்ணு இப்படி செய்யற ஒவ்வொரு பௌர்ணமி நாள்ல  மழை வரும். அவர் சொன்ன மாதிரியே இதுவரைக்கும் ஒரு தடவ தவறாம மழை வந்திருக்கு.”
“இன்னிக்கும் வருமா?”
“வரும். அதில் என்ன சந்தேகம்?”
“அப்ப மழைய கட்டுப்படுத்தறது காத்து கிடையாது? வாக்குதான் இல்லையா?”
கீர்த்தனா அவனை முறைத்தாள்.
“நம்பிக்கைக்குச் சக்தி உண்டு. மழையும் கட்டுப்படும்.”
அவள் அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.
“ஓகோ! அப்ப வாக்கும் இல்ல. நம்பிக்கை தான் மழைய வர வழைக்கும்?”
“ரெண்டும் தான் ரகு!”
“சரி பாக்கலாம். மழை வருதானு?”
“மழை வந்தா நா சொன்னது உண்மைனு நம்புவீங்களா ரகு?”
என்றவள் கண்களில் ஆர்வம் மின்ன கேட்டாள்.
அவன் திரும்பி அவளைப் பார்த்தபடி,
“பாக்கலாம் பாக்கலாம். இன்னொரு வாக்கு என்ன?”
என்று கேட்டான்.
“அதுவா? இன்னிக்கு அந்தக் கிறுக்கு சித்தர் யாராவது ஒருத்தர் கண்ணுக்குக் காட்சி தருவார்.”
என்று சொன்ன கீர்த்தனாவின் உடல் சிலிர்த்தது.
அந்த நேரம் அவன் வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினான்.
“இப்போ எதுக்கு சிரிக்கறீங்க? நா என்ன வேடிக்கையா சொன்னேன்? உம்?” 
என்று கேட்டவளின் குரலில் கோபம் பொங்கியது.
“கீர்த்தனா! என்னைத் தப்பா நினைக்காத. இந்தக் காலத்துல போய் இதலாம் நம்பறயே உனக்கு என்ன பைத்தியமா? உலகம் எங்கேயோ போயிட்டு இருக்கு. நீ இந்த ஊர்லையே பிறந்து வளர்ந்ததால இங்க இருக்கவங்க சொன்னது எல்லாம் உன் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு. அதான் எல்லாத்தையும் ஒரு வட்டத்துக்குள்ளே நின்னு யோசிக்கற. நீ ஒரு தடவ டெல்லிக்கு வா. எல்லாம் தெளிஞ்சிடும்.”
என்று அக்கறையும் அன்பும் கலந்த தொனியில் பேசினான்.
அவள் வாயை இறுக்கமாய் மூடிக் கொண்டாள்.
“என்ன கோபமா?”
“ப்ச் ப்ச்! அதெல்லாம் ஒண்ணும் இல்ல ரகு! ஒரு முடிவெடுத்துட்டு பதில் கேக்கறவங்களுக்கு விளக்கம் செல்லுபடியாகாதுனு தெரிஞ்சுட்டேன். ஆராயற மனசு இருக்கவங்களுக்குத் தான் விளக்கம் தேவை. நா யார் சொல்றதையும் அப்படியே நம்பல. என் மனசு அதெல்லாம் உண்மைனு உணருது.”
“பரவாலையே நல்லா பளிச்னு பேசறயே!”
என்றவனின் புருவங்கள் உயர்ந்தன.
“ஆமா நா நல்லா பேசுவேன். அதுகென்ன?”
என்று கேட்டுச் சிரித்தாள்.
“சரி நான் ஆராய்ச்சி பண்ணனுமா?”
“அது உங்க பிரியம்.”
“அவர் எப்படி இருப்பார்?”
“எனக்கென்ன தெரியும்? நா இதுவரைக்கும் பாத்தது இல்ல.”
“நிறைய கேள்விப்பட்டு இருப்பயே கீர்த்தனா?”
என்றவன் உதடுகளில் புன்னகை தவழக் கேட்டான்.
லேசாக முகத்தைத் திருப்பி வெட்டியவள்,
“பட்டிருக்கேன் பட்டிருக்கேன்!”
என்றாள்.
“அப்ப சொல்லு.”
“இது என்னடா வம்பா போச்சு. உங்ககிட்ட நல்லா மாட்டிட்டேன்.”
அவன் குபீரெனச் சிரித்தபடி,
“இப்ப சொல்றீயா இல்லையா? நா வண்டிய அந்த எடத்துக்கே திருப்பறேன். அங்க யாராவது சொல்லுவாங்க.”
 என்று குறும்பாகச் சொன்னான்.
“அப்ப நா அபிராமிய பாக்க வேணாமா?”
“அபிராமிய தான? நல்லா பாக்கலாம். முதல எனக்குப் பதில் சொல்லு.”
“நல்லா நெடுநெடுனு உயரமா இருப்பார். தேகம் மெல்லிசா இருக்கும். தலை மயிர் தாடி எல்லாம் நீளமா தொங்கும். எந்த ஆடையும் தரித்திருக்க மாட்டார். உடம்பு எல்லாம் செம்மண் பூசின மாதிரி தகதகக்கும். ஏன்னா அவர் மண்ணுல தான் உக்காருவார் படுப்பார். தானா சிரிப்பார். அவருக்கே தோணுச்சுனா   பேசுவார். அதுவும் அவருக்குப் பிடிச்சவங்கக்கிட்ட மட்டும் தான்! அப்படினு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்.” 
“சரி! அந்தச் சித்தர் யாரு கண்ணுக்குத் தெரிவார்?”
“என்னைக் கேட்டா? மழை வரத கண்ணால பாக்க முடியும். சித்தர் விசயம் அப்படி கிடையாது. அதுக்கு பாக்கியம் வேணும். இந்த ஊருல லட்சக் கணக்கான மக்கள் இருக்காங்க. யாரு கண்ணுல படணும்னு அவர் தான் தீர்மானிப்பார். சில பேருக்கு அவர் சித்தர்னு கூடத் தெரியாதாம். நம்மில் ஒருத்தர் மாதிரி சாதாரண ஆளா வரலாம். இல்லாட்டி அவர் எப்பவும் இருக்கற உருவத்துல வரலாம். எந்த ரூபம் வேணா அவரால தரிக்க முடியும். அதனால..”
என்றவள் நிறுத்தினாள்.
“அதனால?”
“மழைக்குச் சாட்சியா நம்ம எல்லாரோட கண்களும் இருக்க முடியும்! அவர் தரிசனத்துக்குச் சாட்சி வேணும்னா. அது நம்ம கண்களா இருந்தா மட்டும் தான் முடியும். ஏனா நாம எல்லார்கிட்டேயும் கேக்கவும் முடியாது. அப்படியே அவங்க சொன்னாலும் நம்மால நம்ப முடியாது. நமக்கே நடக்கற வரை சந்தேகம் பிறாண்டும். மனித மனசு அப்படிப்பட்டது.”
“உம்! உம்! ஆனா கீர்த்தனா! எனக்கு நீ சொல்றதலாம் கேட்டா அம்புலி மாமா கதை கேக்கற மாதிரியே இருக்கு.”
“இருக்கும் இருக்கும். அப்ப நிச்சயமா உங்க கண்ணுக்குத் தெரிய மாட்டார் ரகு!”
“ஏன்? ஏன் அப்படி சொல்ற?”
“பின்ன இப்படிக் கிண்டல் பண்ணா. அவங்க எல்லாம் கோபக்காரங்க. தெரியுமா?”
“நா சொல்றத என்ன அவருக்குக் கேக்குமான? சரி நீ தான் இவ்வளவு நம்பறயே கீர்த்தனா! அப்ப உன் கண்ணுக்குத் தெரிவார்.”
என்று கூறிச் சிரித்தான்.
“அச்சச்சோ வேணாம் சாமி! ஏற்கனவே பாத்ததுக்கே விடை தெரியல.”
என்று சொன்னவள், நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“ஏய்! என்ன பாத்த? ஆமா! நீ மருத்துவமனையில என்னவோ பாத்தீங்களானு கேட்டயே? அது என்ன? அத கேக்க தான் இப்போ நா உன்னைக் கூட்டிட்டு வந்தேன். இந்தப் பேச்சுல அதைச் சுத்தமா மறந்துட்டேன் கீர்த்தனா!”
“நானே வாய விட்டு மாட்டிட்டேனா?”
என்று மனதுள் நினைத்தவள், 
“ஒண்ணுமில்ல ரகு!” என்று சன்னமாய் சொன்னாள்.
“இல்ல ஏதோ இருக்கு.”
“அம்பாளே! என்னைக் காப்பாத்து. அதான் ஒண்ணும் இல்லைங்கறேன். கொஞ்சம் ஆளை விடுங்க.”
என்று கீர்த்தனா படபடத்தாள்.
“எல்லா கேள்விக்கும் விடை எங்க கிடைக்கும்? எப்படிக் கண்டுபிடிக்கிறது?”
என்றவன் சாலையைப் பார்த்தபடிச் சொன்னான்.
“நீங்க எதையோ கண்டுபிடிங்க. எனக்கென்ன? அதோ அந்தப் பக்கம் திருப்புங்க. அங்க தான் அபிராமி வீடு இருக்கு.”
என்று விரலை நீட்டிச் சுட்டிக் காட்டினாள்.
அவன் வண்டியை அந்தக் கிளை சாலையில் ஒடித்துத் திருப்பினான்.
“அந்தப் பச்சை கேட்! வாசலில பவழ மல்லி கொட்டிக் கிடக்கே. அது தான்.”
கீர்த்தனாவின் குரலில் உற்சாகம் அருவி மாதிரி ஊற்றியது.
அவன் வண்டியை அங்கே நிறுத்த, இருவரும் இறங்கினர். அந்த நொடி வானத்தில் கருமேகங்கள் கூடியது. திடீரென எதிர்பாராத வகையில் சொட்சொட்டென மழைக் கொட்டியது. ரகு வானத்தை அன்னார்ந்து பார்த்தான். ‘இது என்ன திடுதிப்புனு மழை வந்துருச்சு!’ என்று யோசித்தவன் கண்களில் துளிகள் விழுந்தன.
திகைத்தபடியே ரகு கீர்த்தனாவை ஆச்சரியத்துடன் நோக்கினான்.
அவள் புருவத்தை உயர்த்திப் பெருமையாய் சிரித்தாள்.
சத்தம் கேட்டு உள்ளிருந்து வெளியே ஓடி வந்த துர்கா இருவரையும் வரவேற்றாள்.
“வாங்க வாங்க! என்ன வேளை வந்தீங்களோ அமோகமா மழை கொட்டுதே.”
துர்காவின் பின்னே அபிராமி வந்து நின்றாள்.
“கீர்த்தனா! வாடி!” என்று விட்டு, ரகுவைப் பார்த்தாள்.
“வாங்க!” என்று விருந்தோம்பல் செய்தாள்.
“எப்படி இருக்கடி அபிராமி?”
“எனக்கென்ன? நா நல்லா இருக்கேன். பாத்தா எப்படி தெரியறேன்.”
“நல்லா தான் தெரியறடி! காலையில உன்னைக் கொத்தின பாம்பு என்ன நீளம் தெரியுமா? பாத்து நா வெடவெடத்துப் போயிட்டேன். ரகு மட்டும் இல்லைனா! அம்பாளே!”
என்றவள் கண்களை மூடித் திறந்து ரகுவைப் பார்த்தாள்.
அபிராமி அவனை நோக்கி,
“ரொம்ப நன்றி!”
என்று கூறினாள்.
“பரவால. நா எதுவும் செய்யல. இப்போ உடம்பு நல்லா இருக்கா?”
“நா நல்லா இருக்கேன்.”
அபிராமி கீர்த்தனாவிம் திரும்பி,
“ஏன்டி என்னவோ நா நல்லாயிட்டேனு டாக்டருக்கே நீ தான் கண்டுபிடிச்சு சொன்னியாம். அம்மா சொல்லிச் சொல்லி மாய்ஞ்சாங்கடி!”
என்று கேட்டு அவளது கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
“எல்லாம் அம்பாள் அருள்டி! நீ மாலை ஒண்ணு தொடுத்து அவளுக்குச் சாத்தணும். வேண்டிட்டேன்டி.”
“அவ மேல கோபமா இருக்கேனு தெரியும் இல்ல? நீ என்ன எனக்கும் அவளுக்கும் தூதா?”
மகள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த துர்கா,
“அபிராமி! அப்படி  எல்லாம் சொல்லாதேமா! நீ அன்னிக்குக் கோவிலுக்குப் போகாதால தான் அம்பாள் கோவிச்சுட்டு தண்டனை தந்துட்டாளோனோ பயந்துட்டேன். நீ மறுபடியும் அதே பண்ணாத.”
என்று கோபமும் கவலையும் பொங்கப் பேசினாள்.
“சரி சரிம்மா! நீங்க மூஞ்சிய தொங்க விடாதீங்க. நாளைக்கே முதல் காரியமா அத பண்ணிடறேன்.”
துர்காவின் முகம் மலர்ந்தது.
அபிராமியும் கீர்த்தனாவும் என்னவோ பேசி பேசி சிரித்துக் கொண்டிருக்க, துர்கா ரகுவிடம் பேச்சுக் கொடுத்தாள்.
“நீங்க என்ன படிச்சிருக்கீங்க ரகு?”
“பி.ஏ வரலாறு முடிச்சுட்டு அரசாங்க வேலைக்கு முயற்சி பண்ணி படிச்சேன். நல்ல மதிப்பெண் வாங்கிட்டேன். எப்படியும் கொஞ்ச மாசத்துல வேலைக் கிடைச்சுடும். எங்க போடறாங்கனு தெரியல.”
“நல்லது தம்பி!”
“டெல்லில இருந்துட்டு இங்க எல்லாம் சௌகரியப்படுதா ரகு?”
“கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு. ஆனா அம்மா அப்பாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி. அவங்க இருந்துட்டு வரட்டும். நா அடுத்த வாரம் ஊருக்குப் போலாம்னு பாக்கறேன்.”
“அப்படியா! அடுத்த வாரம்னா நீங்க இந்தப் பக்கம்  ஒரு தடவ அப்பா அம்மாவ அழைச்சுட்டு வாங்க விருந்துக்கு. நாங்களும் ஒரு வகையில் உங்களுக்கு உறவு தான். எனக்கு விளக்கமா தெரியல. விசாலத்துக்குத் தெரியும்.”
“ஓ! கண்டிப்பாம்மா!”
என்றவன் அங்கே அபிராமியின் வீட்டில் ஒரு படத்தைக் கவனித்தான்.
அதில் ஒரு நங்கை தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறாள். அது சமயம் வானிலிருந்து நீண்ட கயிறு அவளை வெளியே மீட்கிறது. வண்ணங்களில் உயிரோட்டமாய் இருந்த அந்தப் படம் அவன் மனதில் அப்பிக் கொண்டது.
“இது யார் வரைஞ்சது?”
என்று விரல் நீட்டிக் கேட்டான்.
“இதுவா ரகு? அபிராமியோட தாத்தா வரைஞ்சது. அவர் ரொம்ப ஞானம் படைச்சவர். லலித கலைகள் பலதும் சிறப்பா வரும். அதில் ஓவியமும் ஒண்ணு. அவர் நினைவா இத இங்க வச்சிருக்கோம். இன்னும் நிறையா படங்கள் இருக்கு.”
என்று துர்கா பெருமையாய் கூறினாள்.
“ஓ..!”
சிறிது நேரம் கழித்துக் கீர்த்தனாவும் ரகுவும் அங்கிருந்து புறப்பட்டனர். ரகு எதுவும் வாய் திறக்கவில்லை.
“என்னாச்சு ரகு?”
“உம்?”
“இல்ல! ஒரே மௌனம்.”
“கீர்த்தனா! மணி என்னாச்சு?”
“ஏழே முக்கால் ஆகுது.”
“அப்ப எட்டு மணிக்கு வீட்டுக்குப் போயிடலாம்.”
“ஆமா! அதுக்கு என்ன?”
“உன்னை விட்டுட்டு நா மறுபடியும் அந்தக் கல் இருந்த எடத்துக்கு வரலாம்னு பாக்கறேன்.”
ரகு சொல்ல கீர்த்தனாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது.
 

Advertisement