Advertisement

அபிராமி ஏற்றிய தீபம் 4
அத்தியாயம் 4
ரகுவுடன் கீர்த்தனாவின் அம்மாவும் சேர்ந்து கொண்டாள். மாதவனுக்கு ஏதோ அலுவல் இருந்ததால், அவர் தனது வண்டியில் புறப்பட்டார். வீட்டிற்கு வந்து அடைந்ததும் குளித்து விட்டு, விசாலம் சாப்பாடு தயாரிக்கத் தொடங்கினாள்.
“கீர்த்தனா! கொஞ்சம் உதவி பண்ணுடி. காலையில போட்டுட்டு போன வேலை எல்லாம் அப்படியே போட்டது போட்டப்படி கிடக்கு. எனக்குத் தலை சுத்துற மாறி இருக்கு.”
“ஏன்மா! நா போய் அபிராமிய பாக்க வேணாமா?”
என்று மூக்கு விடைக்கக் கேட்டாள்.
“நாளைக்குப் போயேன்டி! அவ தான் தேறிட்டாளே.”
என்று விசாலம் சிணுங்கினாள்.
“நாளைக்கெல்லாம் ஆகாதும்மா! இன்னிககே போய் பாக்கணும். உனக்கு என்ன வேலைப் பணண்னும்னு சொல்லு. பண்ணிட்டுப் போறேன்.”
என்று உறுதியாய் சொன்னாள்.
“என் சமர்த்துக் குட்டி. ஓடிப் போய் முக்கு கடையில நா சொல்ற சாமான் எல்லாம் வாங்கிட்டு வா!”
என்று கூறி, காகிதத்தில் வேண்டியதை எழுதித் தந்தாள்.
“சரிம்மா!”
“பணம் அஞ்சறைப் பெட்டிக்கு அடியில இருக்குடி. நல்லா எண்ணி பாத்து சில்லறை வாங்கிட்டு வாடி! சின்னப் பெண்ணுனு நினைச்சு ஏமாத்திடப் போற.”
“நா பாத்துக்கறேன்மா! நீ முகத்துல மஞ்சள கொஞ்சம் கம்மியா பூசும்மா!”
“ஏன்டி?”
“நெத்தியில எச்சா தெரியுது.”
“இல்லடி! இது பார்வதி பூஜா சாமான் கடையில வாங்கல. புது கடையில வாங்கினது. அது தான் பல்லைக் காட்டுது. இனி பழைய கடையிலேயே வாங்கிக்கணும்.”
“எந்த கடையோ மாத்து. இல்லானா பெயின்ட்காரன் பாத்தான உன் முகத்துல இருந்து கொஞ்சம் சொறண்டி எடுத்துப்பான். பாத்துக்கோ!”
“உதை வைக்கறேன் பாரு! வாய் ரொம்ப நீளுது.”
என்றவள் கையை ஓங்கினாள்.
“இப்படிச் சிரிச்சுட்டு நீ எங்க என்னை அடிக்கப் போறம்மா!”
என்று பரிகாசம் செய்து கொள்ளெனச் சிரித்துவிட்டுக் கூடையைத் தூக்கிக் கொண்டு ஓடினாள். 
கூடையை லேசாக விசிறியபடி, அவள் வாசலை எட்டியபோது, ரகு அவள் பின்னே வந்தான். என்ன? என்பது போல அவள் அவனைப் பார்த்தாள்.
“எங்க கடைக்கா?”
“உம். உங்களுக்கு எதாச்சும் வேணுமா?”
“வேண்டியது இல்ல.”
“அப்ப சரி!”
என்றவள் திரும்பி நடந்தாள்.
“கீர்த்தனா!”
என்றவன் அழைத்தான்.
“உம்?”
“நானும் உன் கூட வரட்டா?”
“வேணாம் வேணாம். நீங்க போய் ஓய்வு எடுங்க. காலைல இருந்து உங்களுக்குத் தான் அலைச்சல். நான் கொஞ்சம் வேலைய முடிச்சுட்டு மறுபடியும் ஆஸ்பத்திரிக்குப் போகணும்.”
“சரி! மறுபடியும் போறப்ப. நானும் வரேன்.”
கீர்த்தனா அவனது கண்களைப் பார்த்தாள்.
“என்ன சொல்லு?”
“சரி வாங்க.”
என்றவள் நடையைக் கட்டினாள்.
விசாலம் மதிய உணவைச் சற்று எளிமையாகத் தயாரித்தாள். எலுமிச்சை சாதம் மற்றும் கிழங்கு பொரியலோடு முடித்துக் கொண்டாள். தயிரைத் தாளித்து விட்டாள். மதுராவும் அவள் கணவனும் அவர்களின் சித்தியின் இரண்டாம் மகன் வீட்டிற்கு அன்று விருந்திற்காக அழைக்கப்பட்டு இருந்தனர். அதனால் அவர்கள் அங்குச் சென்று விட்டனர். 
வெளியே சென்ற கணவர் திரும்பி விட, அவருக்கும் ரகுவிற்கும் சேர்த்து மகளை உணவுப் பரிமாறச் சொல்லிவிட்டு சற்று அயற்சியாய் இருந்ததால் படுத்துக் கொண்டாள். அவளுக்கு மருத்துவமனை நெடி சேராது.
“எங்கே அம்மா?” மாதவன் மகளைக் கேட்டார்.
“அசதியா இருக்குனு படுத்துட்டாப்பா!”
“உங்க அம்மாவுக்கு மருந்து வாசம் ஒத்துக்காது. அங்கேயே காத்தால வெகு நேரம் நின்னா இல்ல! அதான். நீ ஒரு ரெண்டு நாள் ஒத்தாசை பண்ணு கீர்த்து!”
“சரிப்பா!”
“நீ இலைய அறுத்து வை. தண்ணீ தெளி. நா ரகுவை அழைச்சுட்டு வந்துடறேன்.”
“சரிப்பா!”
மாடி அறையின் அருகே சென்று அவனை வரவேற்க, அவன் வந்து இணைந்து கொண்டான்.
இலையின் நடுவே மஞ்சள் பூக்கள் மாதிரி அன்னம் உதிர, எலுமிச்சை சாதத்தைப் போட்டாள். கடித்துக் கொள்ளக் கிழங்கு கறியும், சுட்ட அப்பளமும் வைத்தாள். ஓரமாய் வடுமாங்காய் ஊறுகாய்  வைத்தாள். அடுத்த கையாகத் தயிர் சாதம் பரிமாறினாள். 
ஐந்தாறு வகை உணவுப் போட்டிருந்தால் கூட இவ்வளவு பிரமாதமாக இருந்திருக்காது. ரகுவிற்கு அதுவே தேவாமிர்தம் போல இருந்தது. அவன் நிறைவாய் சாப்பிட்டு எழுந்தான். கீர்த்தனாவும் சாப்பிட்டு முடித்தாள்.
நேரம் மாலை வேலையை நெருங்கி இருந்தது.
“அப்பா! நா போய் சட்டுனு அபிராமிய பாத்துட்டு வந்துடறேன்.”
“அவளைப் பாக்காட்டி உனக்கு மண்டை வெடிச்சுடும்.” என்று மாதவன் சொல்லிச் சிரிக்க, கீர்த்தனாவும் சிரித்தாள்.
“சரி சரி! போய்ட்டு வா! நானும் கூட வரட்டா?”
“வேணாம் மாமா! நா கூட்டிட்டுப் போறேன்.” ரகு இடைவெட்டினான்.
“ஓ! சரி பத்தரமா போய்ட்டு வாங்க.”
வாசலை நெருங்கிய போது, ரகு,
“எதுக்கும் அபிராமி முழிச்சுட்டாலானு துர்கா அத்தைட்ட ஒரு வார்த்தை கேளு கீர்த்தனா!”
என்று சொன்னான்.
அவளுக்கும் அது சரியாகப்பட, அவள் துர்காவை அழைத்தாள்.
“அத்தை! நாங்க அபிராமிய பாக்க மருத்துவமனைக்கு வரோம். அவ எழுந்துட்டாளா?”
“அங்கே எதுக்குப் போறீங்க?”
“பின்னே?” என்று கேட்ட கீர்த்தனா வாயைப் பிளந்தாள்.
“அவ என்னவோ மலைய தூக்கினவ மாதிரி கண்ணைத் திறந்த உடனேயே எழுந்து நின்னா கீர்த்தனா! டாக்டர் பாத்துட்டு கையோட வீட்டுக்கு அழைச்சுட்டுப் போகச் சொல்லிட்டார்.”
துர்கா சொல்லச் சொல்ல, கீர்த்தனா குபீரெனச் சிரித்தாள்.
“அப்ப வீட்டுக்கே வந்துடறோம் அத்தை!”
“கேப்பானேன். வாயேன் கீர்த்தனா!”
ரகுவிடம் செய்தியைச் சொன்னாள். அவன் வண்டியைத் திசை மாற்றி இயக்கினான்.  போகும் வழியில் ஒரு இடத்தில் கூட்டம் தெருவை அடைத்தது. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, இருவரும் இறங்கினர்.
அங்கே வேப்பமரத்திற்கு அடியில் ஒரு நீளமான கல் இருந்தது. அதன் மீது மஞ்சள், வெட்டி வேர் மற்றும் சில மூலிகை கலந்த தண்ணீர் ஊற்றப்பட்டது. 
“என்ன பண்றாங்க கீர்த்தனா?”
“சாமிக்குத் தண்ணீர் ஊத்துறாங்க ரகு!”
“கல்லுக்குத் தானே?”
கீர்த்தனா சிரித்தபடி,
“கல்லும் கடவுளும் ஒண்ணு தான்.” என்று சொன்னாள்.
“இப்படியே நல்லா சமாளிச்சுக்கோங்க. இத்தனைக் கொடம் தண்ணீர இப்படி ஊத்துனா என்ன வருதாம்? பாரு! வழியெல்லாம் அடச்சு மக்கள் நிக்கறாங்க. நம்மள மாதிரிப் போற வரவங்களுக்குத் தான் சிரமம்.”
என்று சிறு கோபத்துடன் பேசினான்.
“அப்படி இல்லை! இது ஒரு வகை நம்பிக்கை ரகு!”
“என்ன நம்பிக்கை?”
லேசாகக் குரலை செருமியவள்,
“ரொம்ப வருசத்துக்கு முன்னாடி! ரொம்ப வருசம்னா ஒரு முன்னூறு நானூறுனு வச்சக்கோங்க. இந்த ஊர்ல ஒரு தொற்று வியாதி வந்துச்சு. மக்கள் எல்லோரும் கொத்து கொத்தா இறந்து போனாங்க. அப்போ எல்லோரும் பயந்து தவிச்சாங்களாம். ஊர் வைத்தியர்களும் என்னென்னவோ மூலிகைய காட்டுல இருந்து பிடுங்கி கொண்டு வந்து அரைச்சு தயாரிச்சு மக்களுக்குத் தந்தாங்கலாம். எதுக்கும் நோய் கட்டுப்படலையாம்.”
என்று கூறி நிறுத்தினாள்.
“அப்புறம் என்னாச்சு கீர்த்தனா?”
என்று ஆர்வம் பொங்க அவன் கேட்டான்.
“அப்போ அங்க ஒரு சித்தர் இருந்தாராம். அவர் ரோட்டு மேல குத்துக்கால் போட்டு உக்காந்திருப்பாராம். எல்லோரும் அவர் காலில போய் விழுந்தாங்களாம். அவர் நல்லா சிரிச்சாராம். அவரு கிறுக்கனு தான் தன்னையே சொல்லுவாராம். இந்தக் கிறுக்கன் என்ன பண்ணனும்னு கேட்டாராம். எல்லோரும் வியாதி போகணும்னு வழிக் கேட்டாங்களாம். நீங்க செஞ்ச பாவம்டா அதுனு சிரிச்சாராம். அவரு அதுக்கு மேல ஒண்ணும் சொல்லலையாம். அஞ்சு நாள் தெனம் போய் அவர கெஞ்சனாங்களாம். காரியமாற வரைக் நீங்க கெஞ்சுவீங்கடானு சிரிச்சாராம். அப்புறம் ஒரு வழியா மனசு இறங்கினாராம். அவரு பக்கத்துல இருந்த கல்லு ஒண்ண மண்ணுல இருந்து பேத்து எடுத்தாராம். அத இப்படியும் அப்படியும் கண்ண மூடித் தடவி ஏதோ மனசுக்குள்ள சொன்னாராம். அப்புறம் அதை ஜனங்க கையில தந்தாராம். இத மலைக்குப் போற வழியில கிழக்குப் பக்கமா பாத்து ஒரு வேப்பமரத்துக்கு அடியில நட்டுவைங்கங்கனு சொன்னாராம். இது வெறும் கல் இல்ல. இந்த ஊரே இதுல இருக்கு. ஆருத்ரா நட்சத்திரம் சேர்ந்து வரப்  பௌர்ணமி நாள் தவறாம இந்த கல்லு மேல முப்பது குடம் மூலிகை கலந்த மஞ்சள் நீர் ஊத்தணும். அப்படி செஞ்சா ஊருல இருக்க  கிருமி, கசடு எல்லாம் அழிஞ்சிடும். இந்த கல்லோட சேத்து இந்த ஊரும் குளிக்கும்னு சொன்னாராம்.”
என்று கீர்த்தனா சொல்லி முடிக்க, அவன் கிண்டல் கொப்பளிக்க அவளைப் பார்த்தான்.  
“குளிக்கும் குளிக்கும் கீர்த்தனா!”
அதை அலட்சியப்படுத்திய கீர்த்தனா,
“அது மட்டுமில்லை..”
என்று தொடர்ந்தாள்.

Advertisement