Advertisement

அபிராமி ஏற்றிய தீபம் – 3
-ஸ்ரீ கங்கைபிரியா
அத்தியாயம் 3
கதவைத் திறந்து கொண்டு உள்ளே போய் அவளை மிரட்ட வேண்டும் போலத் தோன்றியது. ஆனால் உள்ளே போனால் மருத்துவர்கள் திட்டுவார்களே என்று யோசித்தவள், திரும்பிப் பார்த்தாள். எல்லோரும் விரக்தியோடு நிற்க, ரகு மட்டுமே சாந்தமாக இருப்பதாகத் தெரிந்தது. அவனை நோக்கி சைகைக் காட்டினாள். அவன் என்ன  என்பது போலப் பார்த்தான். வா என்பது போல கையாட்டினாள். அவன் அவளருகே யோசனையோடு நடந்தான்.
“என்ன கீர்த்தனா?”
“கொஞ்சம் உள்ளே பாருங்க ரகு!” அவன் பார்த்தான்.
“பாவம் அந்தப் பெண்ணின் அப்பா அம்மா. இவள் நல்லா படியாகப் பிழைக்க வேண்டும்.”
அவன் ஆழ்ந்த குரலில் சொன்னான். அவள் அவனை ஒரு தினுசில் பார்த்துவிட்டு,
“கொஞ்சம் தள்ளுங்க. அந்த ஜானகிப் போயிட்டாளா?”
என்று கடைசி வரியை முணுமுணுத்துவிட்டு, மீண்டும்  பார்த்தாள். அதோ குத்துக்கல் மாதிரி அங்கேயே தான் நிற்கிறாள். இவர் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லையா? என்று மனதுள் நினைத்தபடி,
“உங்களால அவள பாக்க முடியலையா?”
“ஏன் முடில? அபிராமி அசையாம படுத்து இருக்காளே கீர்த்தனா!”
“அச்சோ நா அவள சொல்லுல.”
அவளை விசித்திரமாய் பார்த்தபடி,
“வேற யார சொல்ற?”
என்று ஒருமாதிரி குரலில் கேட்டான்.
லேசாகச் சுதாரித்தவள்,
“இல்ல அங்க யாரோ நிக்கற மாதிரி தோணுச்சு.” என்று சமாளித்தாள்.
“உன் தோழிக்கு இப்படி ஆனதுல இருந்த உனக்கு நிறையா பிரமை வருது போல கீர்த்தனா!”
என்றவன் கரிசனப்பட்டு விட்டு அகன்றான்.
“பிரமையா?” என்றவள் மண்டையைச் சொறிந்தபடி, மீண்டும் உள்ளே பார்த்தாள். திட்டவட்டமாய் அவள் நிற்பது இவளது கண்களுக்குத் தெரிந்தன. ரகுவிற்கு ஏன் தெரியவில்லை? புதிருக்கு விடைத் தெரியவில்லை. வேறு யாரையாவது கூப்பிட்டு சோதிக்கலாமா? என்று அவள் நினைத்த நேரம், அந்த ஜானகி மென்மையாக அபிராமியின் தலையைக் கோதினாள். பின்பு அவளது கழுத்து பகுதியை வருடி விட்டாள். அபிராமியின் கொஞ்சம் கொஞ்சமாகச் சீராகச் சுவாசிக்கத் தொடங்கினாள். சில நொடிகளில் அபிராமியின் முகம் இழந்த சோபையை மீண்டும் பெற்ற புதியதாய் அரைத்த மஞ்சள் மாதிரி பொலிவானது. எல்லாவற்றையும் வாயைப் பிளந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தனாவிற்குக் கண்களில் சரக்கென நீர் கொட்டியது. அந்த ஜானகியின் மீது இருந்த கோபம் பஞ்சாய் காற்றில் கரைந்தது. இந்த ஜானகி சாதாரணமானவள் இல்லை போல என்ற எண்ணம் மனதில் ஓடியது.
கீர்த்தனா அழுவதைக் கவனித்த மற்றவர்கள் ஏதோ விபரீதம் என்று அஞ்சி ஓடி வந்தனர்.
“என்னம்மா ஆச்சு?” என்று துர்கா கிறீச்சிட்டாள்.
துர்காவின் கைகளைப் பற்றிக் கொண்ட கீர்த்தனா,
“அத்தை! அபிராமி பிழைச்சுட்டா! இனி அவளுக்கு எதுவும் வராது.”
என்று குரல் தழுதழுக்கப் பேசினாள்.
“உண்மையாவா சொல்ற? என் வயித்துல பாலை வாத்தடி குழந்தை!”
விசாலம் முந்திக் கொண்டு வந்து,
“கீர்த்தனா! நீ என்ன பெரிய மருத்துவரா? அவர் இப்ப தானே சொல்லிவிட்டுப் போனார். நீ பாட்டுக்கு என்னவோ சொல்ற?”
என்று அதட்டினாள்.
“நா சத்தியமாகத் தான் சொல்றேன்மா!”
என்றவளின் குரலில் அத்தனை உறுதி. சுற்றி இருந்த மற்றவர்களுக்கும் கீர்த்தனா சொல்வது எதுவும் விளங்கவில்லை. ஒருவர் மாற்றி ஒருவர் உள்ளே எட்டிப் பார்த்தனர். கீர்த்தனா கடைசியாக எட்டிப் பார்த்தாள். ஜானகி சிரித்தபடியே கதவை நோக்கி வந்தாள். கீர்த்தனாவிற்கு ஒன்று நிச்சயமானது. அவள் தன் கண்களைத் தவிர யார் கண்களுக்கும் தெரியவில்லை என்பதுவே. கதவைத் தாண்டி ஜானகி எங்கே சென்றாள் என்று தெரியவில்லை.
அதற்குள்ளே அந்த வழியே வந்த செவிலி இவர்கள் கூட்டமாக நிற்பதைக் கவனித்து,
“என்னாச்சு? ஏன் எல்லோரும் வந்து நிக்கறீங்க?”
என்று விசாரித்தாள்.
அவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ இப்படிலாம் நிக்க கூடாதுங்க. போய் அமைதியா உக்காருங்க.”
என்று செவிலி கூறி விட்டு நடக்கப் பார்த்தாள்.
“ஒரு நிமிசம் நில்லுங்க சிஸ்டர்!”
என்று கீர்த்தனா கூற, செவிலி என்ன என்பது போலப் பார்த்தாள்.
“கொஞ்சம் டாக்டர வர சொல்றீங்களா?”
“எதுக்கு?”
“இப்ப தானே பாத்துட்டுப் போனார்.”
“கீர்த்தனா! சும்மா இரு.” மாதவன் மகளை அடக்கினார்.
“அது ஒண்ணும் இல்ல சிஸ்டர்! அவ தோழி மேல உள்ள பிரியத்துல பேசற. நீங்க போங்க.”
என்று சமாளித்தார். செவிலி புரிந்த மாதிரி லேசாய் தலையசைத்தபடி நடந்தாள்.
“சிஸ்டர்! அப்படிலாம் ஒண்ணும் இல்ல. நா காரணமா தான் சொல்றேன். அபிராமி உடல்நிலை சரியாகிடுச்சு. நீங்க உடனே வர சொல்லுங்க. இல்ல நானே போய் கூப்பிடுவேன்.”
என்று அழுத்தமான தொனியில்  பேசினாள். விசாலத்திற்கு மகளின் போக்கு ஒன்றும் புரிப்படவில்லை.
“கீர்த்தனா தான் அவ்வளவு தூரம் சொல்றாளே! சிஸ்டர் எதுக்கும் கொஞ்சம் தயவு பண்ணி டாக்டர வர சொல்லுங்க.”
என்று வர்மா அவளுக்கு ஆதரவாகப் பேசினார்.
செவிலி தலையாட்டியபடி நடந்து சென்று மருத்துவரை அழைத்து வந்தாள். செவிலி மூலம் எல்லாம அறிந்து கொண்டு வந்த மருத்துவர்,
“ஏன்மா? நீ தான் அடம்பிடிக்கறீயா? இன்னும் ஒரு மணி நேரமான தான எதுவும் சொல்ல முடியும்னு சொன்னேன்.  உனக்கு உன் தோழி மேல பாசம் தான். ஏத்துக்கறேன். ஆனா என்ன நம்பி எத்தனை உயிர் இருக்காங்க தெரியுமா? அவங்களையும் நா கவனிக்கணுமே.”
என்று கேட்டார்.
“ஒரே ஒரு முறை அபிராமி எப்படி இருக்கானு பாத்து சொல்லுங்க டாக்டர்!”
கீர்த்தனா விடவில்லை.
“உம். ஆகட்டும்.”
என்றவர் மேற்கொண்டு எதுவும் வாதம் செய்ய விரும்பாமல் உள்ளே நடந்தார்.
அபிராமியைப் பரிசோதித்துவிட்டுத் திரும்பியவர் முகத்தில் விவரிக்க முடியாத மாற்றம். எல்லோரும் அவர் முகத்தையே ஏதோ கோவில் தேரில் வரும் சாமியைப் பார்ப்பது போலப் பார்த்தனர். அவரோ கீர்த்தனாவையே கண்கொட்டாமல் ஆச்சரியமாய் பார்த்தார்.
“ஏம்மா! பொண்ணு உன் பேரு என்ன?”
“கீ..ர்த்தனா!”
“கீர்த்தனா! உனக்கு எதனாச்சும் மந்திரம் தந்திரம் தெரியுமா?”
“அதெல்லாம் ஒண்ணும் தெரியாது.”
என்று கூறியவளின் பெரிய விழிகள் மயில் தோகை மாதிரி விரிந்தன.
மருத்துவர் இப்போது எல்லோரையும் பொதுவாகப் பார்த்து,
“இந்தப் பொண்ணு சொன்ன மாதிரியே அபிராமி பிழைச்சுட்டாள். பிழைச்சுட்டாள்னா பரிபூரணமானா பாத்துக்கோங்களே. என்னாலையே நம்ப முடில. மூச்சு சீராகிடுச்சு. கொஞ்ச நேரத்துக்குள்ள நிலைமை எப்படி மாறிடுச்சு. எனக்கே புரியல. இது ஒரு அதிசயம் தான்.”
மருத்துவரின் முகத்தில் ஆச்சரியம் கங்கை நதி மாதிரி பாய்ந்து ஓடியது. அந்த ஆச்சரிய நதி, இப்போது எல்லோர் முகத்திலும் பரவிப் பாய்ந்தது. துர்கா மகிழ்ச்சியான குரலில்,
“அம்பாளே! என் பொண்ண காப்பாத்திட்ட. காப்பாத்திட்டம்மா. இது போதும் எனக்கு! ரொம்ப நன்றி டாக்டர்!”
என்று கரகரத்தாள்.
“நன்றிய அவள கூட்டிட்டு வந்து சேத்த அந்தப் பையனுக்கும் ஜோசியம் சொல்றாப்பல பிழைச்சுட்டாள்னு கணிச்சு சொன்ன இந்தப் பொண்ணுக்கும் சேத்து சொல்லுங்க.”
மருத்துவர் சொல்ல, எல்லோரும் சிரித்தனர்.
“நாங்க அபிராமிய போய் பார்க்கலாமா?”
வர்மா ஆவலோடு கேட்டார்.
“அவங்களே கொஞ்ச நேரத்துல எழுந்துடுவாங்க. கொஞ்சம் ஓய்வு எடுத்தா தேவலை.”
என்றவர் கீர்த்தனாவை இன்னொரு முறை உற்றுப் பார்த்து விட்டு நடந்தார்.
வாயைப் பிளந்தபடி நின்ற விசாலம், மகளைப் பார்த்து,
“உனக்கு எப்படிடி தெரியும்? சரியா சொல்லிட்ட!”
என்று கேட்டாள். அது அவள் கேள்வி மட்டுமில்லை. அங்கிருந்த எல்லோரின் கேள்விகளும். ஆக அனைவரும் அவள் வாயையே பார்த்தனர்.
இவங்கிட்ட ஜானகி வந்த கதையைச் சொன்னால் பயந்து போயிடுவாங்க. ஏற்கனவே அபிராமியிடம் அந்தக் கதையைச் சொன்ன வரைக்கும் போதும். கீர்த்தனா மனதுள் நினைத்தபடியே,
“அதுவாமா! அம்பாள் திடீர்னு மனசுல வந்தாம்மா! உடனே எனக்கு அபிராமிக்கு நல்லா போயிடும்னு மனசு உறுதியா சொல்லிச்சு. அதைத் உங்க எல்லார்கிட்டேயும் சொன்னேன்.”
என்று கூறினாள். துர்கா அவளை ஆசையாக அணைத்துக் கொண்டாள்.
“அபிராமிக்குக் கூடப் பொறந்த பொறப்பு இல்லாத குறைய தீர்த்து வச்சுட்ட கீர்த்தனா!”
என்றவள் உருகினாள்.  
ஆனால் ரகு மட்டும் அவள் சொல்வதை நம்ப முடியாத பாவனையில் முகத்தை வைத்தபடி அவளையே குறுகுறுவெனப் பார்த்தான்.
எல்லோரும் அகல, ரகு அவளருகே வந்து பேசினான்.
“நீ எதையோ மறைக்கற மாதிரி எனக்குத் தோணுது கீர்த்தனா!”
என்றவன் கேட்க, அவள் கண்கள் பட்டாம்பூச்சிகளைப் படபடக்க அவனைப் பார்த்தாள்.
“என்ன கேக்க வரீங்க?”
“நா என்ன கேக்க வரேனு உனக்குத் தான் தெரிஞ்சு இருக்கணும். அதை நீ தான் சொல்லணும்.”
“நா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. காத்தால இருந்து இப்படியே நின்னதுல கால் கடுகடுக்குது.  பசி வயித்த பிறாண்டி எடுக்குது. காலையில அழைச்சுட்டு வந்த மாதிரியே. கொண்டு போய் விட்டிங்கனா நா கொஞ்சம் தயாராகி வந்து அபிராமிய பாத்துப்பேன். அவளும் கண்ண முழிச்சு இருப்பா.”
என்றவள் கூற, அவன் அவளை முறைத்தான்.
****

Advertisement